ஊர்பேர்

தவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது.

ஒரு துண்டு வெயில்

நம்முடைய இறந்த காலத்தின் மடிப்புகளை வெங்காயத்தோல் போல ஒவ்வொன்றாக உரித்துப் போட. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் – எல்லோரும் தத்தம் பங்கை வசூலித்துக்கொண்டு போக வருவார்கள். தாய்- தந்தை, கணவர், நண்பர்கள். எல்லா தோல்களும் அவர்களிடம். ஒரு உபயோகமும் இல்லாத, காய்ந்து போன கடைசி குச்சி உங்கள் கையில் மிஞ்சும். மரணத்திற்குப் பிறகு அதை எரிப்பார்கள் அல்லது மண்ணில் புதைப்பார்கள். மனிதன் தனியாகத்தான் இறக்கிறான் என்று எல்லாரும் சொல்கிறார்கள்.  நான் இதை ஏற்பதில்லை. அவனுக்குள்ளிருந்த, அவன் சண்டையிட்ட அல்லது அன்பு செலுத்திய அத்தனை பேரோடும் சேர்ந்து தான் அவன் இறக்கிறான்

திருவண்ணாமலை

சென்ற வாரம் ஒரு நண்பருடன் போனில் நடத்திய உரையாடல் நினைவில் வந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த நண்பருக்கு போன் செய்திருந்தேன். திருவண்ணாமலையில் இருப்பதாகச் சொன்னார். கொச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர் அவர். நிறுவனத்துக்கு என்னாயிற்று என்று கேட்டேன். வேலையாட்களிடம் ஒப்படைத்துவிட்டதாகச்  சொன்னார். அடேங்கப்பா….கிட்டத்தட்ட 25 கோடி வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் முதலாளி வேலையாட்களிடம் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறாரே என்று அவருடைய தைரியத்தை வியந்தேன். திருவண்ணாமலையில் வேறு ஏதாவது தொழில் தொடங்கியிருக்கிறாரோ! இல்லையாம்! ஓர் ஆசிரமத்திற்கருகே வீடெடுத்துத்  தங்கி ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்துவருகிறாராம்! மனைவியும் மகனும் கூட  விரைவில் அவருக்கு ஒத்தாசையாக அவர் பணி செய்யும் ஆசிரமத்துக்கே  வந்துவிடப் போகிறார்களாம்! 

சுழற்சி

மெயில் படிக்க ஆரம்பித்தான். “உங்களுடைய அனுபவமும், திறனும் எங்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. உங்களை போன்ற ஒருவரை தான் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு வேலை அளிப்பதில் நாங்கள் பேரு மகிழ்ச்சியடைகிறோம்.” அவனுக்குளிருந்து ஆனந்தம் வெளியே சிரிப்பாக பொங்கி வந்தது. மனதில் என்றும் அவன் அனுபவிக்காத மகிழ்ச்சியொன்று பரவியது. வாழ்கையில் ஜெயித்துவிட்டோம். இனி எந்த ஒரு எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து போராடலாம். நமக்கும் திறமை இருக்கிறது. நாம் யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. லேப்டாப்பை மூடி பைக்குள் வைத்தான். இனி வீட்டுக்கு கிளம்பவேண்டியது தான். இவர்கள் தேடுவார்கள். தேடட்டும்.

பிடிபடா சலனங்கள்

நிரந்தரமாக ஏதுமில்லாமல் ஒரு அரசியல்வாதிக்கு அடியாள் போல வாழ்வு குறித்து கொஞ்சம் அச்சமாக இருந்தது. தானும் வில்லியம் போல ஒரு அர்த்தமற்ற வாழ்க்கை கொண்டிருக்கிறோம் என நினைத்தான். இன்னும் சொல்லப்போனால் அவனுக்காவது தேட ஒரு அழகிய மனைவி இருக்கிறாள். நமக்கு என்ன இருக்கிறது? இருக்கும்வரை அம்மா தேடுவாள்? இல்லாதபோது? எனும் கேள்வி ராஜாங்கத்தை இம்சை செய்தது. அர்த்தமற்ற வாழ்க்கைக்கு பெயர்கூட அர்த்தமில்லாமல் இருப்பது குறித்து நீண்ட பெருமூச்சு வந்தபோது காவல் நிலையத்தை அடைந்திருந்தான்.

ரத்னா

பாரதியார் காலனி நகர்ப்புற வளர்ச்சித் துறையால் குறைந்த வருமானம் ஈட்டும் ஏழ்நிலைக் குடும்பங்களுக்காக கட்டப்பட்டது. வடக்கில் செல்வசிந்தாமணிக் குளம், மெயின் ரோட்டில் இருந்து வழி குளக்கரையோர சாலையாக நீண்டு காலனியைத் தொடும், மேற்கே கவுண்டர் தோட்டம், கிழக்கே தனிவீடுகள், தெற்கே முள்ளுக்காடு. ஆங்கில எழுத்துக்கள் ‘A’ முதல் ‘T’ வரை இருபது பிளாக்குகள், தளத்திற்கு நான்கு என்று இரண்டு மாடிகள் கொண்ட ஒவ்வொரு பிளாக்கிலும் இரண்டு பத்துக்குப்பத்து அறைகள் கொண்ட பன்னிரண்டு வீடுகள். இருநூற்றி நாற்பது வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டதும் 1980ல் குலுக்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

பப்பிக்குட்டி

நான் கூடையைப்  பார்த்தேன்.  வெள்ளைப் பஞ்சு மேகம் போல புசு புசுவென்று  ஒரு அழகான குட்டி. பிறந்து சில வாரங்கள் தான் ஆகி இருக்க வேண்டும். பொமேரேனியன்  வகை என்று நினைத்தேன்.  கூடையின் பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாள் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். “ஆமாங்க, நம்ம பேரப்  பிள்ளைங்களுக்குத் தாங்க.  போன மாசம் தான் குட்டி போட்டது. எழுபதாயிரம்  கேட்டாங்க. நாங்க  அம்பதுக்கு  பேசி முடிச்சிட்டோம்”.

மாநகரம்

இரு நிமிட அமைதி. திடீரென குடிகாரன் திமிறி முன்னால் ஒரு அடி எடுத்து வைக்க சேகரின் பிடி நழுவியது. குடிகாரனின் சட்டைக் காலரை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த காவலன் அவனைப் பின்னால் இழுத்தான். குடிகாரன் முன்னே செல்ல முடியாமல் திணற அவன் கையைப் பிடித்து முறுக்கிய சேகர் “த்தா எங்க போற?” என்று அதட்டினான். குடிகாரன், “சார் சார் சார், வலிக்குது… விடுங்க விடுங்க” என்றான்.

பூனைகளின் குருதியாறு

துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலையைத் தேடி ஒரு குழு இரு படகுகள் மூலம் நேப்பியர் பாலத்துக்கு அருகிலான கூவத்தின் சாக்கடையில் தேடிக் கொண்டிருந்தபோது, ஜீப்பில்  செம்மஞ்சள் பூனையை வைத்துக் கொண்டு, இன்ஸ்பெக்டர் பூனை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்த அந்தச் செம்மஞ்சள் பூனை எந்த விசாரணைக்கும் மறுப்பு தெரிவிக்காமல் அழைத்த இடத்துக்கெல்லாம் சென்று முழு ஒத்துழைப்பு கொடுத்தது. “என்னய்யா… உன் ஒருத்தனால, எத்தனை பேருக்குக் கஷ்டம் பாரு. உண்மையைச் சொல்லிடுய்யா.’

எச்சத்தாற்பாகம்படும்

பதினொன்றரை மணிக்கு இண்ட்ரோல் பெல் அடித்தார்கள்.  அப்போது  என் அப்பாவை நான் பார்க்கவில்லை.  பள்ளிக்கூட  ஆசிரியரோ மாணவரோ ஆண்கள்  யாருக்கும் கக்கூஸ் கிடையாது. ஹெட்மாஸ்டருக்கும் இல்லைதான்.  பேருந்து செல்லும் சாலையோரம் தான் எல்லோருக்குமே எதற்குமே. பெண்பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டிடத்திற்குப்பின்புறம்  சிமெண்ட் ஷீட் போட்டு  ஒரு மறைப்பு கட்டி வைத்திருந்தார்கள். அதனுள்ளாக என்ன வசதியிருக்குமோ யார் அறிவார்.

குற்றம் கழிதல்

வெள்ளிக்கிழமைகளில் வேலைத்தள நண்பர்கள் மதியம் சாப்பிட டவுண்ரவுணிலிருக்கும் பலவிதமான உணவகங்களுச் செல்வது வழக்கம். கவிதா வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது கிழமையே ஹலன் அவளுக்கு லன்ஞ் இன்வரேஷன் அனுப்பியிருந்தாள். எங்கு செல்வதென்றாலும் சந்திரனோடு செல்லப் பழகியிருந்த கவிதாவிற்கு உடனே என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் மனம் சந்தோசத்தில் துள்ளியது. இது ஒருவகை புதிய அனுபவம். வேற்று இனத்தவர்களுடன் ஒன்றாக ரொறொன்டோ மத்தியில் இருக்கும் நவீன உணவகத்திற்குச் சென்று மதிய உணவு உண்பதை நினைக்கும் போது த்ரில் ஆக இருந்தது. இருந்தாலும் தான் கொண்டுவந்திருக்கும் சாப்பாட்டை என்ன செய்வது, எப்படியான உணவகத்திற்கு செல்லப் போகிறார்கள், எவ்வளவு காசு முடியும் இப்படிப் பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தாலும், “ தாங்ஸ் வில் ஜொயின்” என்று பதில் போட்டாள்.

தெளிவு

“சரி… ஒங்க பெரியப்பா ஊரவிட்டு போனது தெரிஞ்சதும் ஒங்க ஆச்சிதான் போலீசுல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திட்டு வாங்கன்னு சொன்னா. அங்க போனா கம்ப்ளைன்ட வாங்க மாட்டேனுட்டாங்க. எழுபது வயசுக்கு மேலானவங்கள காணாமுன்னு கேஸ் பதிஞ்சா ஆளு கெடைக்கிற வரைக்கும் நிலுவையிலேயே இருக்கும். பல தடவ ஆளுங்க அம்படறதேயில்ல. அந்த மாதிரி பல கேஸுங்க அப்படியே கெடக்குன்னுட்டாங்க”

பொன்டெங்

“என் மகன் இப்போது தொடக்க நிலை நான்கில் படிக்கிறான். அவனுக்குத் துணைப்பாட வகுப்பு, பள்ளியில் உள்ள மாணவர் பராமரிப்பு நிலையத்துக்கு வெளியே சில நூறு மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அவன் சரியாக வகுப்புக்குப்போகிறானா என்பதைக்கண்காணிக்க இது நிச்சயம் உதவும்”
அதிர்ச்சியாக இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல், தட்டிலிருந்து உணவை மென்றேன்.

பசி

நன்றி சொல்லக்கூட நேரம் இல்லாம அந்த விளக்குகளை நோக்கி ஓடினேன். நினைத்தபடியே ஒரு மலாய்க்கார ஆடவர் சில உணவுப் பொருள்களை விற்றுக்கொண்டிருந்தார். அவசரத்துக்கு நாசி கோரேங்கும் பொறித்த கோழியும் வாங்கித் தின்றுவிட்டு…… தின்றுவிட்டுத்தான்…(சாப்பிட்டு விட்டல்ல என்று தெளிவுபடுத்திக் கொள்கிறேன்) பேருந்துக்குத் திரும்பினேன். என் ஒருவனுக்காக மட்டுமே காத்திருந்ததுபோல், நான் ஏறியதும் பேருந்து நகரத் தொடங்கியது. பசி தன் வாலைச் சுருட்டிக் கொண்டு உறங்க ஆரம்பித்தது. சாலையில் மெதுவாய் ஊரத் தொடங்கிய பேருந்து, சற்று நேரத்தில் வேகமெடுத்தது. பின்னால் திரும்பிப் பார்த்தேன். சீனக் குமரிகள் இன்னும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி

“கோவப்படாத அம்பலண்ணே! மயினி இருக்காளான்னுதான் பாத்தேன். இந்த நேரம் பாக்க வந்ததுக்கும் காரியம் உண்டு. இப்பம் நான் பேசப்பட்ட விசயம் ஒரு குருவி அறியப்பிடாது, கேட்டயா? நீ மட்டும் மனசோட வச்சுக்கிடணும்…” “அப்பிடி என்னடே அந்தரங்கம்? எங்கயாம் கூட்டத்திலே தற்கொலைப் படை தாக்குதல் நடத்த அச்சாரம் வாங்கீருக்கியா? நீ குண்டு கூட வைக்காண்டாம்… கூட்டத்திலே நிண்ணு குசு விட்டாப் போதும்… பத்துப் பேரு தலை சுத்தி விழுவான்… தேரை இழுத்துத் தெருவுலே விட்டிராதடே கொள்ளையிலே போவான்…”

தொடர்பிற்கு வெளியில்

மூத்தவன், தான் திருமணமாகாமல் இருக்கும்போது வேறு ஜாதிப் பெண்ணை கட்டிக்கொண்டான், தனக்கு அடுத்திருக்கும் தங்கைகளின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறையில்லாதவன்’ என்ற பெரிய மாமாவின் பராதியை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று அம்மா அத்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த ஒரு பிற்பகலில் நான் அத்தையின் மடியில் படுத்திருந்தேன்.நான் தூங்கிவிட்டதாக எண்ணி, “பெரியவருக்கு என் மேல வேறக் கோவம். கல்யாணத்துக்கு முந்தி நான் அறிவொளி வவுப்பு எடுக்கப் போயிட்டு இருந்தேன். ஒருநா.. இவரு பெட்டிக்கடையோரமா சிகரெட் பிடிச்சுட்டு நின்னாரு..பெரியத்தானாச்சேன்னு சிரிச்சேன். அன்னைல இருந்து கரெக்ட்டா நான் வர்ற நேரம் ஆஜர் ஆகிருவாரு.. பாவமா இருக்கும்,” என்றாள் அத்தை

அத்திம்பேர்

This entry is part 4 of 4 in the series 1950 களின் கதைகள்

குமரநாதன் வயதில் ஒரு பையன். அதற்கு ஓவியர் வரைந்த படத்தை வெகுநேரம் ரசித்தான். தலை தீபாவளிக்கு அத்திம்பேர் வரப்போகிறார். அவன் அக்காவை அவர் பறித்துக்கொண்டதாக அவர் மேல் அவனுக்குக் கோபம். அவரை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்துவர அப்பாவுடன் போகவில்லை. வீட்டிற்கு வந்ததும், ‘அவருடன் பேசமாட்டேன். அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். அவருக்குப் பிடித்த சேமியா பாயசம் எனக்கு பாய்சன்’ என்று எதிர்ப்பு காட்டுகிறான். அவர் அவன் மனநிலையைப் புரிந்துகொண்டு அவனை அன்புடன் நடத்துகிறார். அவனுடன் பரிவாகப் பேசுகிறார். கடைசியில் அவன் சமாதானமாகப் போகிறான். 

ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும்

பிரேமா மூடிய கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே அடுத்த பாடலை ஓடவிட்டாள். அவள் காதுகளில் ஒரு ரயில் மெதுவாக டுடுன் டைன்டுடுன் டுடுன் டைன்டுடுன்… என்று தீனமாக ஆரம்பித்து வேகமெடுத்து பாலத்தில் ஓடும்போது பாடலில் ஓ சாயா…(O saya) என்று ரஹ்மானின் குரல் ஆரம்பித்தது. ரயில் இன்ஜின் ஓசை, இரும்புடன் இரும்பு சேர்ந்தோடும் ஓசை, ஓடும் ரயிலில் கதவைத் திறந்து வாசலில் நின்று தலையை வெளியே நீட்டி மனம் விட்டுக் கத்தினால் வரும் ஓசை போன்ற அர்த்தம் இல்லாத ஓசைகள் அந்தப் பாடலில் இசையானது.

பிரம்ம சாமுண்டீஸ்வரி

எந்த அவசரமும் இல்லை. என் மனதிற்குள் அம்மா திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து கொண்டே இருந்தாள். இப்படி ஒரு நாளில் தானே அம்மாவும் தூக்கு போட்டுக் கொண்டாள். இதே போலத்தானே அம்மாவும் நிர்வாணமாக பிணவறையில் கிடந்தாள். அவளையும் இப்படித்தானே கட்டினேன் மனம் நினைவுகளால் அலைகழிந்தது. நீண்ட பெருமூச்சுடன் கண்களை இறுக மூடிக் கொண்டேன்.நாற்றம் ஒரு சுழல்.அதில் தான் எல்லா கசடுகளும் இருக்கிறது என்பதைப் புரிய எத்தனை காலம் ஆகித் தொலைக்கிறது ? அதை புரிந்து கொள்வதற்குள் காலத்தின் முடிவே வந்து தொலைத்து விடுகிறது. 

ஒந்தே ஒந்து

சுவாமிநாதன் குமரநாதனின் நெருங்கிய நண்பன். அவன் பெற்றோர்கள் பல மாநிலங்களில் வசித்ததால் அவர்களுக்குப் பல மொழிகள் பழக்கம். அச்சமயம் அவன் தந்தை பெங்களூர் விமானப்படை அதிகாரிகளின் பயிற்சியில் இருந்தார். கன்னடம் தமிழ் மாதிரிதான். பல வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒண்ணா இருக்கும்.ஒன்று இரண்டு மூன்று… எப்படி சொல்லணும்? 

உன் பார்வையில்

பாட்டிலைக் காண்பித்து அவர்கள் போனதும் மீதமிருக்கும் இரு மடக்கு பியரை குடித்துவிட்டுப் போகலாம் என்று விக்னேஷ் உன்னிடம் கண் ஜாடையில் சொல்கிறான். நீ வேண்டாம் என்று தலையசைத்து பாட்டிலை வீசச் சொல்லி கண் காட்டுகிறாய். விக்னேஷ் மறுத்துத் தலையசைத்துச் சிரிக்கிறான். திடீரென ஒரு சைரன் ஒலி கேட்கிறது. சாலையில் ஒரு போலீஸ் ஜீப் தலையில் சுழலும் விளக்குகளோடு வந்து நிற்கிறது. உங்களுக்கும் ஜீப்புக்கும் நடுவே நிற்கும் பாஸ்கரும் ஜெயபாலும் சல்யூட் அடிக்கின்றனர். ஜீப்பின் முன்னிருக்கையிலிருந்து திரண்ட உடல்வாகுடன் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு காவல் அதிகாரி இறங்குகிறான்.

வானம் பொழிகிறது பூமி விளைகிறது

போவதற்கு முன் தயிர் சாதம். திரும்பிவந்ததும் ஒரு தம்ளர் மோர். மறுநாள் வீட்டில் தங்கியவர்களுக்குக் கதை சொல்ல வேண்டும். கடைசி காரியம் தான் சிரமம். நடுநடுவில் நிறுத்தி சங்கரி விவரம் கேட்பாள். ‘குளிகை சாப்பிட்டதுமே ராணி கிளியா மாறிட்டாளா? அது எப்படி?’ பதில் தெரியாமல் அவன் முழிப்பான். இந்த தடவை. கவனம் சிதறாமல் திரையில் வைத்த கண் எடுக்காமல்…

காரியம்

அவனது பேச்சு செய்யும் தொழில் பற்றி தாவியது. மரியாதைக்குக் கூட அவன் என்னைப் பற்றி விசாரிக்காமல் இருப்பது எனக்கு துக்கம் தருவதாக இருந்தது. தொழிலில் அவனது சாம்ராஜ்யம் எப்படி நீண்டது என்று குறித்து விளக்கும் போது என்னிடம் இருந்த வெள்ளரி தீர்ந்து போயிருந்தது. இதை எப்படி அவன் கவனித்தான் என்று தெரியவில்லை அவனிடம் இருந்த பொறித்த சிக்கன் துண்டுகளை கொண்ட தட்டை என்னிடம் தள்ளினான். நான் மறுக்காமல் எடுத்துக்கொள்வேன் என்று நினைத்துவிடக்கூடாது என்பதால் மறுத்தேன். இதை எடுக்காவிட்டால் நம்மிருவருக்கிடையே இனி ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எழ முற்பட்டான். நான் சிக்கனை எடுத்துவிட்டேன் ஆனால் வாயில் வைக்கவில்லை. வெகுநேரம் அப்படியே இருந்ததால் மீண்டும் கோபித்துக்கொண்டான். சிக்கனை எடுத்து வாயில் வைத்ததும்தான் மீண்டும் இயல்பானான்.

கிரியை

ஒரு நிமிடத்தில் சாலை சீதோஷ்ணம் மாற ஆரம்பித்தது. ஊர்தி ஓரமாக ஒதுங்க, நடந்து போன மக்களும், ஆடிக் கொண்டிருந்தவர்களும் சாலையின் இடப்புறமாக வரிசை கட்டி ஒதுங்கிக் கொண்டார்கள். வெடி வைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. நெற்றி வழிய திருநீறு பூசி ஈர வேட்டி அணிந்து மீசை, தலை சிகை மழித்துக் காணப்பட்ட ஆள் ஆம்புலன்ஸைப் பார்த்து ‘வழி விட்டாச்சு, வேகமா ஆஸ்பத்திரி போங்க’ என்று உரக்க முழங்கினான். தடைகள் விலக சீரான வேகத்தில் ஆம்புலன்ஸ் ஜீவனுடன் ஜீவனற்ற ஊர்தியைத் தாண்டிப் போனது.
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ நொறுங்குவது போல மனம் ஊசலாட்டம் கொண்டது. உணர்வு, புத்தி, திட்டம் என்று வகுத்துப் பார்த்த யோசனை நீடிக்கவில்லை. உணர்வு மேலோங்கியது. சகலமும் துறந்தவன் பர்ஸில் சில ஆயிரம் ரூபாய் தாள்களை எண்ணிப் பார்த்தான். நான்கைந்து விஸிட்டிங் கார்டுகளை லைட்டர் துணையுடன் சாம்பலாக்கி எழுந்தவன், ஒரு கேரி பேக்கில் பர்ஸை வைத்துக் கட்டி எழுந்தான்.

பிரதிபிம்பம்

பெரும் செல்வம் படைத்தவன், ஏன் ஒரு பசுவைக் கொடுக்க மறுத்தான்? நீ என்ன நினைக்கிறாய்?’
‘அவன் நாட்டைக் கேட்டது அந்த நிமிஷத்தில் எழுந்த கோபம். தான் என்னதான் தவறு செய்திருந்தாலும், அதற்காக நான் சினம் கொள்வேன், சபையில் அந்த சினத்தை வெளியே காட்டுவேன் என்று அவனுக்கு தோன்றியே இருக்காது. நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அடித்திருந்தாலும் அது அவனுக்குத் தவறாகத் தெரிந்திருக்காது. அந்தக் கணம் வரைக்கும் அந்த உரிமை கொண்டவன் நான் ஒருவனே, ஏன் இன்றும் அந்த உரிமை கொண்டவன் நானே!’ என்று துருபதர் சொன்னார்.

தம்பதிகளின் முதல் கலகம்

லலிதா! உன்னை சமர்த்திசாலி என்று நினைத்தேன். ஆனால் இப்படிப்பட்ட பைத்தியக்காரி என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. உன் முட்டாள் தனத்திற்குத் தகுந்த பிராயசித்தம் அனுபவிக்காமல் போக மாட்டாய். இப்போதைய தகராறில் தப்பெல்லாம் என் பேரனுடையது தானா? அல்லது உன் தப்பு ஏதாவது உள்ளதா? உனக்கு உன் சுதந்திரம் பற்றித் தெரிந்த அளவுக்கு உன் கடமை பற்றி தெரிந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். கடமையை உணர்ந்தவர்கள் இப்படிப் பேசவே மாட்டார்கள். அவன் எத்தகைய கோபக்காரன் ஆனாலும் நீ உன் சாந்த சுபாவத்தால் அவனுடைய தாமச குணத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும்

காட்டு மல்லி

அன்று இரவு சிவநாதத்திற்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. இந்த ஊருக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஆபீஸில் வேலை அதிகமானாலும் ஆபீஸர் திட்டினாலும் வீட்டில் சச்சரவுகளின் அழுத்தம் அதிகமானாலும் அந்த ஏரிக்கரைக்குச் சென்று மணிகணக்காக படுத்துக் கிடப்பதில் எல்லாவற்றையும் மறந்து போவான். அந்த ஏரிக்கரையை பார்த்த உடனேயே மனது அமைதியாகிவிடும். ஆனால் அவனுடைய அந்தராத்மா அவனைத் திருப்பி கேள்வி கேட்டது. “உனக்கு மனசாந்தி அளித்து கவலையை நீக்கியது குருவனின் குடும்பம். அவர்களுடைய மனப்பொருத்தமும் அவர்கள் திருப்தியோடு ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பும் உனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அல்லவா?” என்று அவனை விமரிசித்தது.

தோற்றங்கள்

உறவினரோ நண்பரோ வரும்போது அவர்களோடு அம்மா கொண்டிருந்த பிணைப்பு, அவர்களுடனான சந்திப்பு எல்லாம் ஒருகணத்தில் நினைவுக்கு வந்தது. திரைப்படத்தில் நினைவோட்டத்தைக் காட்டும்போது ஒரு வினாடியில எப்படி இத்தனையும் ஞாபகம் வரும் என்று கேலியாக கேட்டிருக்கிறான். ஆனால் இப்போது, திரைப்படத்தில் குறைவாகவும் மெதுவாகவும் காட்டுவதாகத் தோன்றியது. சந்திரனுக்கு நினைவுக்கு வருபவை அனைத்தும் வருபவருக்கும் தோன்றும்போலும். அதனால்தான் இவன் அழும்போது அவருக்கும் கண்ணீர் வருகிறது.

சப் செய் (SUP SEI)

உள்ளே, பதற்றமும், பரபரப்புமாக ஒரே களேபரமாய் இருந்தது. நான், அதையெல்லாம் ஒன்றும் சட்டையே செய்யவில்லை!. எனக்கு இதெல்லாம் சலித்துப்போனக் காட்சி!.. ஒவ்வொரு தடவையும் நான், எனது வேலையைச் செய்யும்போது, இந்தக் கண்றவியைத்தான் பார்க்கிறேன். நோயில் படுத்து இன்னும் சாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும்போது, ‘இந்த சனியன் வேற இன்னும் சாகாம உயிர வாங்குது..’ என்றோ; ‘ஒத்த கால வெச்சிக்கிட்டு இது இன்னும் என்னத்த சாதிக்கறதுக்கு இப்படி இழுத்து பறிச்சிக்கிட்டு கெடக்குது?’ என்றோ கட்டிய மனைவியே வாயிற்குள் முணுமுணுத்துக்கொள்வதை உயிரைப் பறிக்கப்போன எத்தனை இடங்களில் நான் பார்த்திருப்பேன்!.

சற்றே இனிக்கும் கரும்புகள்

பேசாமல் நிற்க நிற்க அவள் என்னை உரசி உரசி வெட்டுவது போல உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அவள் அழ ஆரம்பித்தாள். மூர்ச்சை ஆவது போல விக்கித் திணறினாள். பதற்றத்துடன் அதை பார்த்துக்கொண்டிருந்தேன். சொந்த வீட்டை அப்பாவின் குடியால் விற்றுவிட்டு பிச்சைக்காரியைப்போல இறங்கிய அம்மாவின் முகம் அழுது முடித்ததும் அவளுக்கு வந்துவிட்டிருந்தது. அல்லது அதை அவளாகவே தருவித்துக்கொண்டாள். நானாகவே அந்த பெண்ணின் அப்பாவிற்கு போன் செய்தேன். அம்மா பதறி என் கையிலிருந்து போனை பிடுங்கும் முன். அவர் எடுத்திருந்தார். 

மங்களாம்பிகை

அவரவர் உடைமைகளை எடுத்துக் கொண்டு அரிபரியாக இறங்கி கொண்டிருந்தனர். சென்னை வந்து இறங்கிய உடனே ஒரு வித பதற்றம் எல்லோருக்கும் தொற்றிக் கொள்கிறது. சென்னையின்  வேகமே அதன் பலம் பலவீனம்.எங்கு தான் எதற்கு தான் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? என்ற எண்ணம் தோன்றும். நானெல்லாம்  இத்தனை வேகமாக ஓடினால் தலை குப்புற விழுந்துவிடுவேன்.வேகம் என்றாலே எனக்கு ஒரு வித அலர்ஜி. அதற்குச் சில காரணங்கள் உண்டு.

குமிழி

“அம்மா….மணி டாகி குட்டி போட்டிருக்கு….” பள்ளி பேருந்து வருவதற்கு காத்திருந்த ஒரு சிறு பெண் என்னைப்பார்த்து கைகொட்டிச் சிரித்தாள். இந்தத் தெரு எனக்குப்பழக்கமானதில்லை. நாங்கள் முன்பு இருந்த வீட்டைக்காலிசெய்துவிட்டு இங்கே வந்திருக்கிறார்கள். மெதுவாகச்சென்று அவர்கள் இருக்கும் வீட்டைக் கண்டு பிடிக்க வேண்டும். அதற்குள் அசந்தர்ப்பமாக அந்த சிறு பெண்ணால் ஆணின் பெயர் சூடப்பட்ட என் அம்மா… அவளிடமிருந்து என்னைக்காக்க வாயில் கவ்வி எடுத்து ஓட்டம் பிடித்தது. 

பார்வையின் கட்டுமானம்

அம்மா சொன்னாள்: “என்னைப் பெண் பார்க்க டீச்சரையும் அப்பா அழைச்சிட்டு வந்திருந்தாங்க. கூட ஒர்க் பண்ணுறவங்க தானேன்னு நானும் சாதாரணமா எடுத்துக்கிட்டேன். டீச்சர் என்னைப் பார்த்துட்டு, அப்பாகிட்ட போய், பொண்ணு நல்லா இல்லன்னு சொன்னீங்க. ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாங்க. நான் நல்லா இருக்கேன்னு சொன்னா டீச்சர் வருத்தப்படுவாங்களோன்னு அப்பா அப்படிச் சொல்லியிருப்பாங்க போல.’’ என்றார். எனக்கு அம்மா சொன்னதைவிட பெண் பார்க்க டீச்சரையே அப்பா அழைத்து போனது ஆச்சரியமாக இருந்தது. அப்போது டீச்சரின் மனம் பறவையைப்போல துடித்துக் கொண்டிருந்திருக்குமோ என்றும் வருத்தமாக இருந்தது.

கனவுப் பலன்

கோமதியின் திருமணத்தன்று இரவில் நான் சம்பத்துடன்தான் சென்று  தங்கினேன். அவனுடைய தகப்பனார் ஓய்வுபெற்ற ராணுவ வீரர். மூச்சு விடுவதற்கு நிகராகப் புகை பிடிப்பவர். சம்பத்துக்குத் திருமணமாகிவிட்டால் தேவைப்படும் என்று மாடியில் ஒரு போர்ஷன் எழும்பிவந்த நேரம். வாசலில் குவித்த மணலில் அவர்கள் குடும்பமும் நானும் உட்கார்ந்திருந்தோம். அக்கம்பக்கம் வீடுகள் அதிகம் வந்திராத புறநகர்ப்பகுதி.  சம்பத்தின் அம்மா அவனைப் பாடச் சொன்னாள்.அவன் அவ்வளவு நன்றாகப் பாடுவான் என்பதே அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும். பேசும் குரலுக்கும் பாடும் குரலுக்கும் சம்பந்தமேயில்லை – அதைத்தான் கள்ளக்குரல் என்பார்களோ. உண்மையில், சம்பத் பேசுவதுதான் கள்ளக்குரல்; பாடுவது சொந்தக்குரல் என்று பட்டது எனக்கு.  எம்க்கேட்டி பாகவதர், நாகூர் ஹனீஃபா பாடல்களை உரத்த குரலில் பாடினான். ’என் ஜீவப்ரியே… ஸ்யாமளா’ என்று ஓங்கி எடுக்கிறான். நான் நடுங்கத் தொடங்கினேன். பொன்னு அங்க்கிள் என்னிடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டினார். நான் தயங்கினேன்.

ஊபருக்குக் காத்திருக்கிறார்கள்

பதின்பருவத்தில் பொதுவாக பெற்றோர்களின் பழக்கங்களும் அறிவுரைகளும் குழந்தைகளுக்கு எரிச்சலைத் தரும். என் விஷயத்தில் என் அப்பாவின் தினப்படி முனகல். ‘சம்பளம் பத்தவில்லை, பணக்காரர்கள் செல்வத்தைச் சுருட்டிக்கொண்டு விடுகிறார்கள். அரசியல்வாதிகள் நிர்வாகத்தினர் பக்கம்.’ இப்படி. ஒருநாள், பொறுக்கமுடியாமல் வீட்டுச் செலவுகளின் பொறுப்பை நான்  ஏற்றுக்கொண்டேன். அத்தியாவசிய செலவுகள் போக மீதிப் பணத்தை செலவழிக்குமுன் அதன் அளவுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதா? என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் பயணம் போவோம். டிஸ்னி உலகம் இல்லை லாஸ் வேகாஸ். பத்தாயிரம் டாலர் பறந்து போய்விடும். முழுநேரமும் ஓயாத மனத்தாங்கல், சிறு தடங்கலுக்கும் வருத்தம், திரும்பி வந்ததும் ஏமாற்றம். அதை ஒதுக்கினேன். அம்மாவின் சிகரெட் பழக்கத்தை நிறுத்தினேன்.

நீர்வழிப் படூஉம் புணைபோல்……

இப்போது  எழுபத்தைந்து வயதான சௌமித்ரா தன் தொழிலிருந்தும் ஓய்வு பெற்று, கல்கத்தாவின்  மேல்தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் ஆடம்பரமான,  அழகான, அமைதியான குடியிருப்புப் பகுதியில் அழகிய தோட்டத்துடன் கூடிய ஒரு பங்களாவில் ஒரு வேலைக்காரனுடன் தனியே வசித்து வருகிறார். அவருக்கு இருக்கும் சொற்பமான நண்பர்களுடன் மாலை நடைக்குப் போவது, பாட்மின்டன் விளையாடுவது, அவருடைய அற்புதமான பாடல் சேகரத்திலிருந்து ஹிந்துஸ்தானி சங்கீதம், ரபீந்த்ர சங்கீதம், மேலை இசை இவைகளைக் கேட்பது, செஸ் விளையாடுவது என்று  அவரின் நாட்கள் கழிகின்றன. அவர்கள் யாருக்கும் கூட இவர் நாற்பந்தைந்து ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சினிமாவில் நடித்திருக்கிறார் என்று தெரியாது. 

படைத்தல்

அன்று கண்விழித்தபோது தன்னுள் ஒரு உதயம் நிகழ்வதாய் உணர்ந்தாள். இரவின் வீச்சு இன்னும் ஓயாத புலரி ஒரு பண்டிகையின் அதிகாலை நோக்கி விடிவதாய் தோன்றியது. தூக்கமின்மை களைப்பு என எல்லா சோர்வையும் மறைத்துவிடும் ஒரு மாயக்கம்பளம் என அக்காலை இப்பூமியின் மீது அவ்வூரின் மீது அவ்வில்லத்தின் மீது விரிக்கப்படுவதாய் பட்டது. முகம் விழும் சிகையைக் கோதி காதோரம் விட்டாள். அகம் முகம் மலர எழுவது அவளுக்கே ஆசையாய் இருந்தது. நீரள்ளி குளிர் உணர உணர முகத்தில் வீசிக்கொண்டாள்.மூக்கு நுனி தாடை என திரண்டு சொட்டும் நீர், ஒவ்வொரு அசைவுக்கும் ஒட்டி ஒலி எழுப்பும் வளையுடன் மெல்ல ஆடி நோக்கினாள். மகிழ்வான முகம் பூரித்திருந்தது. உதயமேதான்.

தனித்த வனம்  

கை அசைத்து வந்து நின்ற டாக்ஸியில் அமர்ந்து “கோவைப்புதூர், உறவுகள் எல்டர்ஸ் சொசைட்டி” என்றேன். ஆயிரம் ரூபாய் சார் என்றான். தலையை ஆட்டினேன். அப்பா இருந்திருந்தால் தீனமான குரலில் அவருக்கே உரிய கிண்டலுடன், “அதான் போயிட்டேனே, இனி எதுக்கு அவசரமா டாக்ஸி புடிச்சு வர்றே. உக்கடம் வந்தா நிறைய பஸ் காலியா கிடைக்கும். பழைய பஸ்ல ஏழு ரூபா டிக்கெட் எடுத்து பொறுமையா வா” என்று சொல்லி இருப்பார். 

நாகலிங்கப்பூக்கள்

முன்புறத்தே வீதி  நகர்ந்து கொண்டிருந்தது. யௌவனம் இறங்கிக் கொண்டிருந்த பருவத்தில் , திகழுக்கு எதனையும் இலகுவாக எடுத்துக் கொள்ளத் தோன்றவில்லை. மௌனத்தின் மீது திரளும் சிறிய சலனங்களால் அவன் சூழப்பட்டிருந்தான். “பூனை குறுக்காலை போனாக் கூடாதப்பா…” ஞானம்மாவின் குரல் பூனை கடந்து போன சொற்ப நிமிடங்களுக்குப் பிறகு வெளிப்பட்டது.

கல்லளை

அண்ணா! அன்று குரு என்னைத் தள்ளி விட்டு விட்டுத் தன்னையே பலி கொடுத்துக் கொண்டார். ஏதோ ஒன்று அழியும் உடல் தாண்டியும் நிரந்தரமாக உள்ளது என்று அவர் சொன்னதற்குச் சான்றாகவே அவர் செயல் அமைந்தது. அது என்னவென்று நான் அறியவேண்டாமா? அதை அறியத்தான் என் உள்ளமெல்லாம் தவிக்கிறது அண்ணா!” என்றான் பஸ்தாவா, கெஞ்சலாக.

அவள்

தலையில் ஏதோ எறும்புகள் ஊர்வதுபோல பரபரப்பு. கண்களைத் திறந்து பார்த்தார். வெயில் பாதங்களைத் தின்று கொண்டிருந்தது. மணி காலை ஒன்பது. வேலைக்காரி வருவதாக இல்லை. பால் இருக்கிறது, காப்பிப் பொடியும் இருக்கிறது. அப்படியே அவள் நேரத்திகு வந்து காப்பிப் போட்டாலும் வாயில் வைக்க சகிப்பதில்லை. மெள்ள இருகைகளையும் சாய்வு நாற்காலி கைப்பிடியில் ஊன்றி எழுந்தார். மெள்ள அடுப்படியை நோக்கி நடந்தார். 

வானோர்கள்

ஆகாயத்தில் வெங்கடேஷ் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினேன். அப்பொழுதெல்லாம் மெட்ராஸில் கூட வானில் நட்சத்திரங்கள் துல்லியமாக தெரியும். நாங்கள் இருந்ததோ கும்மிடிபூண்டியை தாண்டி ஆந்திராவை தொட்டுக் கொண்டு.  ஆரம்பாக்கத்தில் அமைந்து இருந்த ஒரு இரும்புத் தொழிற்சாலையுடைய மேலாளார்களின் குடியிருப்பில் தான் நாங்கள் வசித்து வந்தோம். இரண்டு சிறு சாலைகளும் மிகக் குறைவான விடுகளுமே அங்கு  உண்டு. இரவு ஒன்பது மணிக்கு மேல் சில தெரு நாய்களும், இங்கொன்றும் அங்கொன்றுமாக பழுப்பு ஒளி உமிழ்ந்து கொண்டிருக்கும் சாலை விளக்குகளும், அதைச் சுற்றும் பூச்சிகளும் தான் கண்ணில் படும். 

கசம்

ஏப்ரல் மாத கோடை மழையில் கவர்ச்சியாய் நனைந்திருந்தது நிலம். ஈரம் சொட்ட நனைத்திருந்தால் எதுவுமே கவர்ச்சிதான். ஈரம் சொட்ட நனைந்த ஆப்பிள். வெள்ளத் துளிகளை “பருக்களாய்” தாங்கி நிற்கும் ரோஜா. சொட்ட சொட்ட குளித்துக் கரையேறும் விடலைப் பெண், தெப்பக்குளத்தில் நனைந்திருக்கும் தாமரை. மழையில் நனைந்திருக்கும் மிதிவண்டி. என எல்லாமே கவர்ச்சிதான். ஆனால் ஜீப்புக்குள் இருந்த “இருவரும்” இம்மாதிரியான “லௌகீக ரசிப்புகளில்” ஈடுபட முடியாத அளவிற்குப் பரபரப்பாயிருந்தனர். 

பிணை

சச்சதுரமாக இடித்துக் கொண்டே வந்தான். வியர்வை ஆறாகப் பெருகியது. மதிய சூரியன் தகித்தது. அவன் கண்ணிற்குத் தெரியாத எதிரியுடன் மோதுகிறான்; அவனா, நானா பார்த்துவிடுவது என்ற எண்ணம் ஒரு புறம், அறிவிற்கு உட்பட்டுத்தான் இதைச் செய்கிறோமா என்ற எண்ணம் மறுபுறம் அவனை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. அவன் கை ஓய்ந்து கடைசி அடி அடிக்கையில் உலோகத்தின் மீது மோதும் ஒரு ஒலி கேட்டது. மண்ணுக்குள் கிடந்த நிர்வாண ஆணுருவம் வாயைக் கோணலாக்கி, கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு நின்றது. அதை எடுக்கப் பயந்தவன், அப்படியே விட்டுவிடலாமா என நினைத்தான்.

வருகை

சித்தப்பா ஒருநாள் காணாமல் போனார். எங்கெங்கெல்லாமோ தேடினார்கள். ஒரு பயனும் இல்லை. சித்தி துளி கூட கலங்கவில்லை. உறுதியாக இருந்தாள். 
‘’அவருக்கு எங்கயோ போகணும்னு தோணியிருக்கு. அதான் போயிருக்கார். நிச்சயம் திரும்ப வருவார்’’ 

ஒத்திகைக்கான இடம்

சாஹிபின் ஜின் திடீரென்று மூர்க்கத்துடன் அவனுக்குள் திரும்பி வந்தது. இம்முறை தூஷண வார்த்தைகள் பேசியது. சாஹிபை அங்குமிங்கும் தூக்கி எறிந்தது. சாஹிபை சுவற்றோடு மோதியது. தரையில் தலையை வேகமாக முட்டியது. உம்மா கதறிக் கொண்டு சாஹிபைக் கட்டியணைக்கப் பார்த்தாள். அது காற்றுப்போல அவள் கைகளுக்குள் சிக்காமல் தாப்புக் காட்டியது. இது மகாகெட்ட ஜின் என அவள் பயந்து நடுங்கினாள். “என்ட புள்ளய வுட்டுடு…” அவள் கதறிய சத்தத்தால் சனங்கள் மெல்லக் குழுமினர்.  

திருநடம்

ஒரு வழியாக ஏரி தன் நூறாண்டுத் தாகத்தை மேலெல்லாம் நீர் வழிய அருந்தி முடித்து ஓய்ந்தது. நீர் ஏரிக்கரைக்குள் அடங்கியது. எங்கும் சேறாய்க்கிடந்து பின் காய்ந்து வெடித்து மண்ணானது. ‘வீட்டுச் சமையல் ஆரம்பிக்கலாம்’ என மீத அரிசி பிரித்துக் கொடுக்கப்பட்டது. எல்லாம் தன்னிலை மீண்ட நாளில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஒரு சிறுவன் ஊருக்குள் வந்தான். சிவன் கோயிலில் பண்டாரத்துடன் ஒட்டிக்கொண்டான். பண்டாரம் அவனுக்கு இரண்டு வெள்ளத்தின் கதைகளையும் சொன்னார். திருவாசகம் பாடிக்கொண்டே அங்கு வளர்ந்தான் சின்னப் பண்டாரம்.

அன்னப்பறவை

கல்யாணம் முடிந்த அடுத்த எட்டாவது மாதம், ஆச்சியின் பெரிய மனுஷியான சடங்கு ஊரே அமர்களப்பட நடந்து முடிந்தது. அடுத்த ஆறு வருடங்களுக்கு, மாதமாதம் அடி வாங்கும் சுழற்சியாக நகர்ந்து கொண்டிருந்தது ஆச்சிக்கு. தான் அப்பா ஆக முடியவில்லை என்ற மொத்த வெறுப்பையும் கோபத்தையும் அடிகளும் உதைகளுமாக ஆச்சி மீது இறக்கி கொண்டிருந்தார் தாத்தா. ஏதோ விரக்தியை எப்படியே தீர்த்துக் கொள்கிறேனென்று சொத்து பத்திகளை அழித்து மனம் போன போக்கில் திரிந்து கொண்டிருந்தார். ஆச்சி எல்லா வெறுப்பிற்கும் பதிலாக அன்பை தவிர வேறெதையும் தரவில்லை. ஆறு வருட முடிவில் வேலப்பன் ஆச்சியின் வயிற்றைக் குளிர வைத்து, அவளை ஆசுவாச மூச்சுவிட அனுமதித்தான்.

கர்மா

முகத்தில் அசடு வழியும் புன்னகையுடன் அமர்ந்திருந்த சாராவையும் பீட்டரையும் நோக்கி, சமாதானத்துக்கான அடையாளமாக ஒரு மெல்லிய புன்னகையைத் தன் கல் முகத்தில் வரவழைக்க முயன்று கொண்டிருந்தாள் திருமதி. ப்ராடி. திரு. ப்ராடி விரைவில் குணமடைய வேண்டும் என்ற அவர்களின் வேண்டுதல்களையும், சிரப்பில் ஊறவைத்த குலாப் ஜாமூன்களையும் இருவரும் மகிழ்ச்சியுடன்  ஏற்றுக்கொண்டனர். சரியாகப் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு முழுவதும் பீட்டர் தனது இருக்கையில் அசௌகரியமாக நெளிந்தபடியே இருந்தார். 

கண்ணாடிப் பரப்பு

அடுத்தநாள் ‘மெகபூபா’ பாடலை மிக மெல்லிய சத்தத்தில் வைத்து தொட்டிக்கு மேலே பிடித்துக்கொண்டேன். வா வா என் அன்பே வாழ்வின் பேரன்பே என்று அலைபேசி அதிர்ந்தது. என்னை போலவே அதற்கும் அந்த ஒலி இனிய அதிர்வாக இருக்குமா என்று தெரியவில்லை. உடனே இந்த மீன் ஆணா பெண்ணா என்று முதன்முதலாக கேள்வி வந்தது. இத்தனை நாள் என்னைப்போலவே அதையும் பெண் என்று நினைத்திருந்தது எத்தனை மடத்தனம் என்று பாடலை நிறுத்தினேன்.