ருருவின் பிரம்மத்வாரா

“எனக்கு என்ன? ஏன் என் பிரிய ருரு என்னைவிட்டு புழுழுவாக மாறி ஓடுகின்றான். இந்த கனவின் அர்த்தம்தான் என்ன? யாரிடம் கேட்பேன்“ அவள் பயத்தால் தவித்தாள். காரணம் இன்றி கண்கள் அடிக்கடி நனைந்தது. காலையில் இருந்து அந்த கனவு அவளை அலைகழிக்கிறது. தோழிகளிடம் சொல்ல கூச்சமாக இருந்தது. “அர்த்தமில்லா கனவுக்கு அர்த்தம் தேடி. பெரும்பாலையில் அலைகிறேனோ?“ கனவை உதற முயற்சித்தாள், அவளால் முடியவில்லை. கனவு அவளை வாகனமாக்கி பயணம்போனது.

விசும்பின் துளி

மனைவியின் காது மூக்கு ஓட்டைகள் ஓட்டையாகவே இருக்க தென்னவிலக்கமாறு சீவுகள் காவல்காக்கிறது. தொண்டை ஓட்டையை மூட ஏதாவது ஒரு குச்சி இருந்தால் வயலெல்லாம் எதற்கு? தோடும் மூக்குத்தியும் அடகுவைத்து விதை வாங்கி விதைத்த விதைகால் நிலம் இது. விதை பழுதில்லை வயலும் பழிவாங்கவில்லை. பால் இல்லா மார்பை எத்தனை முறை சப்பினால் என்ன? வயல் பாலில்லா தாய்போல தவித்துக் கிடக்கிறது. குட்டிக்குட்டி பச்சப்பிள்ளைகள் தண்ணீர் இன்றி காய்ந்து சுருள்கின்றது. பாளம் பாளமாய் சூட்டில் வெடிக்கும் வயல் மார்வலியில் கேவும் தாயின் வாய்புண்போல வெடித்துக்கொண்டே போகிறது