1
மிகவும் ரம்மியமான ஒரு வெள்ளிக்கிழமை காலையில் துளசிமணம் கமழும் கோபாலசாமி கோவிலின் அர்த்தமண்டபத்தில் நின்றுகொண்டு அவளைப் பற்றிய பேச்சைத் துவங்கியிருந்த தாசில்தார் சந்திரசேகரன், விபூதிப் பட்டையும் சந்தனக் கீற்றுமாய் தெளிச்சியாய் இருந்த சிதம்பரநாதனின் முகம் மாறுவதைக் கண்டதுமே தனது நோக்கத்தைக் கைவிட்டார். ஆனால் வடக்கு மாடவீதியில் இருக்கும் தனது இல்லத்தின் முன் போர்ஷனில் அமைக்கப்பட்டிருந்த மளிகைக் கடையில், கல்லாப்பெட்டி அருகே போடப்பட்டிருக்கும் மரநாற்காலிக்கு பின்புறம் தொங்கிய காலண்டரை அன்று பலமுறைப் பார்த்துக்கொண்டார் சிதம்பரநாதன். அதில் இருந்த “ஓம் முருகா” எனும் அட்சரங்களுடன் கூடிய பழனிமலைக் கோவிலின் புகைப்படம் அவரை சற்று சஞ்சலப்படுத்தியது.
ஓரத்தில் இருந்தபடி சதா ஒலித்துக்கொண்டே இருந்த ரேடியோவில் பேசுபவர்களும், பொருள்வாங்கும் சாக்கில் வந்து சற்றுநேரம் பேசிவிட்டுச் செல்லும் தெருவாசிகளும், ஏன் பின்மதிய பொழுதின் சடைவைத் துளைத்தபடி நுழையும் நினைவுகளும்கூட சொல்லிவைத்ததைப்போல் அன்று ‘பழனி’ எனும் சொல்லையே வலம்வந்து இம்சித்தது. பொதுவாக அந்திநேரத்தில் குழந்தைகளின் விளையாட்டுக் கூச்சல்களால் களைகட்டும் தெரு அன்று வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடி இருந்ததும் அவருக்கு வசதியாக இருக்கவில்லை.
ஏழு, ஏழரைப்போல் கடைக்கு வாழைப்பழம் வாங்கவரும் பின்வீட்டுத் தம்பி சுஜித்திடம் அதைச் சொன்னபோது, “பரீட்சை நேரம்லா… எல்லாம் படிக்கிபோல” என்று சம்பிரதாயமாக விளக்கமளித்துவிட்டு உடனே விடைபெற்றான். மாதம் பிறந்துவிட்டதால் வாடகை குறித்த பேச்சுக்கள் எழுந்துவிடுமோ என்று அவன் எண்ணியிருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டார் சிதம்பரநாதன். ஆனால் பணப் பரிவர்த்தனை சமாச்சாரங்களில் ஒருபோதும் அவர் அத்தனைக் கறாராக இருந்ததேயில்லை. சுஜித்தும், ஒரு மாதம் தவறினாலும், மறுமாதம் சுருக்கமானதோர் மன்னிப்புடன் பணத்தைச் செலுத்திவிடும் நாணயமிக்கவனாய் இருந்தான். ஒருசில முறை அவன் மூன்று மாதங்கள் வரை வாடகை தராமல் இருந்தபோதிலும் அவர் எதுவும் கேட்டுக்கொண்டதில்லை. இருந்தும் ஏன் இப்படி சங்கோஜப் படுகிறான் என்று புரிந்துகொள்ள அவருக்கு சிரமமாகத்தான் இருந்தது. அதிலும் அன்று அவன் சற்று நேரம் தங்கி பேசிவிட்டுச் சென்றிருக்கலாம் என்றிருந்தது அவருக்கு.
எதிர் வரிசையில் இருந்த ரேஷன் கடையை ஒட்டினாற்போல் இருந்த அடிபம்பு உபயோகிக்கப்படும் ஓசை கேட்டதும் கடையின் விளக்குகளை ஒவ்வொன்றாய் அணைத்துவிட்டு, நூறு ரூபாய் தாள் ஒன்றை மட்டும் எடுத்து உள்ளங்கையினுள் சுருட்டி வைத்துக்கொண்டார். காவியும் வெள்ளையாய் இருந்த கோவில் சுவரை வருடிக்கொண்டே வந்த தனது மகன் கைலாசத்தின் நிழல் வீட்டின் வாசற்படி பக்கம் நின்றது. மெல்லிய கமறல் ஓசையும், அதனைத் தொடர்ந்து கேட்ட, “அப்பா” எனும் அழைப்பும் தன்னை அண்டாததன் பாவனையில் நின்றுகொண்டார் சிதம்பரநாதன். வழக்கமாய் செய்வதைப்போல பணத்தை மட்டும் குடுத்துவிட்டு திரும்பி நடக்க அவருக்கு மனம் வரவில்லை. கைலாசம் கதவுடன் முகத்தை ஒட்டிவைத்து, “அப்பா” என்று மீண்டும் அழைத்தான். சிதம்பரநாதன் மறுபக்கம் திரும்பிக்கொண்டு, “சாப்பிடுதியா?” என்றார். கைலாசம் வியப்புடன் நோக்கினான். பிறகு வேண்டாம் என்று தலையசைத்தான். சொல்வதறியாமல் ஓரிரு நொடிகளுக்கு மலங்க மலங்க விழித்த சிதம்பரநாதன் லேசான உச்சுகொட்டலுடன் அந்த நூறு ரூபாயை நீட்டினார்.
கைலாசம் அதை வாங்கிக்கொள்ள தயக்கம் காட்டினான். பிறகு உணர்ச்சியற்ற குரலில், “உடம்பு ஏதும் சுகமில்லையா?” என்று விசாரித்தான்.
“இல்ல… அதெல்லாம் இல்ல”
கைலாசம், “ம்” என்றான். பிறகு ஒருவித விரைவுடன் அந்த நூறு ரூபாயை வாங்கிக்கொண்டு திரும்பிக்கொண்டான். அப்போது, “உங்கம்மா…” என்று எதையோ ஆரம்பித்த சிதம்பரநாதன் அப்படியே நிறுத்திக்கொண்டு அவனை ஏறெடுத்து நோக்கினார். கைலாசம் அவர் பக்கம் பார்த்தான். சிதம்பரநாதன் அருகில் இருந்த தூணைப் பற்றிக்கொண்டு பெருமூச்செறிந்தார். கைலாசம் “என்ன? போய் சேர்ந்துட்டாளா?” என்று வெடுக்கென கேட்டான். சிதம்பரநாதன் “தம்பி…” என்று எச்சரிப்பதைப்போல் சொல்லிவிட்டு அவனை நோக்கமுடியாமல் தலைக் கவிழ்த்திக்கொண்டார்.
“விடுய்யா… நீ போ…”
“சொல்லுங்க… என்ன விஷயம்?” கைலாசம் அழுத்திக் கேட்டான்.
“பழனியில இருக்கறதா தகவல் வந்தது…”
“ஓ…”
“தாசில்தார் சந்திரசேகரன் நேர்ல கண்டதா சொன்னாரு”
“…”
“கையில ஏதோ பூமாலையோட, வாயில அலகு குத்திட்டு மலை அடிவாரத்துல நின்னாளாம்”
மேற்கொண்டுச் சொல்வதற்கு ஏதுமில்லை என்பதைப்போல் மகனைப் பார்த்தார் சிதம்பரநாதன். வறண்டுபோயிருந்த தனது அடர்த்தியான தாடியை வருடியபடி நின்ற கைலாசம், “எங்கனயோ இருக்கால்லா? பெறவென்ன?” என்று அலட்சியமாக கேட்டுவிட்டு விலகி நடந்தான்.
அவன் விட்டுச்சென்ற வெறுமையை சில கணங்கள் வெறித்தபடி நின்ற சிதம்பரநாதன் குனிந்த தலை நிமிராமல் கிணற்றடிக்குச் சென்று கைகால் கழுவிக்கொண்டார். பக்கவாட்டில் இரட்டையர்களைப்போல் ஜோடியாக நின்ற வீட்டின் ஜன்னல்களில் படிந்திருந்த நூலாம்படை பௌர்ணமி நிலவொளியில் வெள்ளிக்கொடியாய் மின்னியது. சுவர்களில் சுண்ணம் உதிர்ந்து செங்கல் வெளிப்படும் இடங்கள் உலர்ந்த தீக்காயங்களை நினைவூட்டின. அழுகிக்கிடக்கும் காட்டெருதை மொய்க்கும் புழுக்களைப்போல் வீட்டின் கருங்கல் திண்ணைகளை வேப்பஞ்சருகுகள் ஆக்கிரமித்திருந்தன. மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே இங்கே தங்கும் சேல்ஸ் ரெப்பான செல்வதுரையின் பயன்படுத்தப்படாத ஷூவுக்குள் இருந்து எலி ஒன்று ஓடி ஓடையினுள் நுழைந்து மறைவதைக் கண்டார்.
சற்றுநேரம் கழித்து அவ்வோடையினுள் இருந்து உதித்த எலியின் கீச்சொலி தந்தை ஆதிகேசவனின் சிரிப்பை நினைவூட்டியதும் ஒருவித நடுக்கத்துடன் வீட்டிற்குள் சென்று படுத்துக்கொண்டார் சிதம்பரநாதன்.
2
பஞ்சவர்ணத்திற்கு பாம்புச் செவிகள்.
சமையலறையில் ஏதேனும் ஒரு பணியில் மும்முரமாய் இருப்பதைப்போல் தோற்றமளிப்பவள் தன்னைச் சுற்றி நிகழும் அனைத்தையும் நுகர்ந்தறிவது எப்படி என்று எவருக்கும் புரிந்ததேயில்லை. துவைத்த துணிகள் அடுக்கப்பட்டிருக்கும் அலமாரியில் சிதம்பரநாதன் தேடிக்கொண்டிருப்பது இந்த நிறத்து உள்ளாடையைத்தான் என்பதை புரிந்துகொண்டு அதன் இடத்தை அங்கிருந்தபடியே சரியாகச் சுட்டிக்காட்டுவதும், புழக்கடையில் கொடிக்கம்பி குலுங்கும் ஓசையைக்கொண்டு அங்கே வெயிலில் உலர்த்தபோட்டிருக்கும் வடகத்தைக் கொத்தித்தின்ன காகம் வந்துவிட்டது என்று கணிப்பதும், மேல்வீட்டு மகேஸ்வரி தனது உப்பரிகையில் வைத்திருக்கும் அலுமினிய சட்டியை மெல்ல நகர்த்துவதிலிருந்தே தெருக்கோடியில் கோலப்பொடி விற்பவன் வந்திருக்கிறான் என்று யூகிப்பதும், இரும்பு கேட்டின் தாழ்ப்பாள் திறக்கப்படும் அவசரம் அல்லது நிதானத்தைவைத்து வருவது யாரென்று கண்டுபிடித்துச் சொல்வதும் அவ்வீட்டின் அன்றாடங்காட்சிகளாய் இருந்தபோதிலும், அண்டத்தின் பேரதிசயம் ஒன்றை அருகில் நின்று பார்ப்பதைப்போல் ஒருநொடி மலைத்துப்போவார்கள் அப்பாவும் மகனும். ஒருமுறை வீட்டிற்கு விருந்துண்ண வந்த நண்பனின் தட்டில் என்னென்ன பதார்த்தங்கள் தீர்ந்துபோயிருக்கிறது என்பதை அடுப்படியில் நின்றபடியே அவள் உரைத்ததைக் கேட்டு அவன் ஆடிப்போய் விழித்தபோது கைலாசத்திற்கு பெருமையாக இருந்தது.
ஆனால் அதற்குச் சரியாக ஏழு வருடங்கள் கழித்து பின்வீட்டு சியாமளா அக்காவின் வீட்டை நோக்கி அவன் எட்டுவைத்த நொடியே, கோரமான குரலில் அவனை கத்தி அழைத்து, ஒருவித பதற்றத்துடன் அவன் கையில் சில்லறையைத் திணித்து ஊறுகாய் வாங்கிவரச் சொன்ன அவளைக் கண்டபோது அவன் ரத்தமெல்லாம் கொதித்தது. சில்லறையை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு போனவன் தனது சுட்டுவிரல் நகம் அம்மாவின் உள்ளங்கையில் கிழித்தக் கோட்டை பொருட்படுத்தவேயில்லை.
பிறிதொரு தருணத்தில், தனதென்று இருக்கும் அறையில், தான் மட்டுமே கண்டு, முகர்ந்து, தொட்டு ரசிக்க விரும்பும் பொருட்கள் சிலவற்றை ஒளித்துவைத்திருக்கும் அச்சிறு பேழையை நொடிப்பொழுதில் கண்டுபிடித்து, அதிலுள்ளவற்றை மெத்தைமேல் அலங்கோலமாய் பரப்பி, விழிகளை உருட்டியும், கைகளை அசிங்கமாய் ஆட்டியும் அவள் கேள்விகேட்டபோது அவள் ஒழியமாட்டாளா என்றிருந்தது அவனுக்கு. ஆனால் அம்மா தன்னை ஒடுக்கும்போதும், தனது உலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தபோதும், சியாமளா அக்காவுடன் தனக்கிருந்த அதிதூய உறவின்மேல் மலத்தைப் பூசுவதைபோல் அவளது வீட்டு வாசலில் நின்றுகொண்டு கூச்சலிட்டபோதும் ஒரு ஓரத்தில் சோளக்கொல்லை பொம்மையைப்போல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த அப்பாவை எண்ணும்போது ஆரம்பத்தில் ஆத்திரமாக இருந்தாலும் இறுதியில் பரிதாபத்தை ஒத்த ஓர் உணர்வே எஞ்சியது.
அவமானகரமான அந்த நாளிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் தனது குடும்ப வாழ்வு சிதைவுறுவதைக் கண்டு விரக்தியுற்று, ஓர் இரவில் வீட்டுப்படியேறி வந்து அம்மாவின் கால்களைப் பற்றி தன்னை மன்னித்துவிடும்படியும், அன்று கோபத்தில் அவள் உதிர்த்துச்சென்ற கடுஞ்சொற்கள் அனைத்தும் மிகை என்று தனது கணவனிடம் வந்து தெரிவிக்கும்படியும் சியாமளா அக்கா மன்றாடியபோது, மிகவும் குரூரமான முறையில், “குடுத்த கெடு ஆறு மாசம் போன வாரத்தோட முடிஞ்சுது…” எனச் சொல்லி அவர்களை இடம்பெயர்ந்து செல்ல வலியுறுத்தியபோது மட்டும் அடிக்குரலில், “ஏன்?” என்று முனங்கியிருந்தார் அப்பா. வாழ்விலே முதலும் கடைசியுமாக அவர் எழுப்பிய எதிர்ப்புக்குரல் அதுவே.
அம்மா அதற்கு மறுமொழி சொல்லவேயில்லை. அன்றைய இரவு முதன்முதலாய் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கைலாசம் அவரை நடுக்கூடத்திற்கு அழைத்து அந்தக் கேள்விக்கான பதிலைச் சொன்னான்.
“சம்பாதிச்ச சில்லறைய விட, கீழ கடந்து எடுத்த சில்லறையத்தான் உள்ளங்கை கெட்டியா புடிச்சுக்கும்”
கைகளைக் கட்டிக்கொண்டு சிரம் தாழ்த்தி நின்ற சிதம்பரநாதனுக்கு எதுவும் புரியவில்லை. அப்போது தடிமனான அகப்பையைத் தடாலென அடுப்பின் மேல் போட்டு வீட்டை அதிரச்செய்தாள் பஞ்சவர்ணம்.
3
இனிப்பைச் சுற்றும் ஈக்களைப்போல், சிதம்பரநாதன் எனும் பிள்ளைப்பூச்சியின் வசம் இருக்கும் சொத்துக்களை பலகாலமாய் மொய்த்தலைந்தன சந்திரசேகரின் கண்கள். இன்றைய தேதிக்கு பலகோடிகள் வரை விலைபோகும் தகுதியுடைய நிலம், இறந்துபோனவர்களின் ஆவிகளும் உதவாக்கரை வாலிபர்களும் மேய்ந்து திரியும் புதர்காடாக கிடப்பதைக் காணும்போதெல்லாம் தாளமுடியாத உளைச்சலில் வாடிப்போவார் அவர். அந்தக் காலத்திலேயே மெத்தப் படித்தவரான சிதம்பரநாதனின் தந்தை ஆதிகேசவன், அவரைப்போலவே புத்திக்கூர்மை பெற்றிருந்த மூத்த மகனிற்கும், ஒன்றை நூறாய் பெருக்குவதில் வல்லுனனான இரண்டாம் மகனிற்கும் சொற்ப வஸ்துக்களை அளித்துவிட்டு, மழுக்கத்தின் முழுவடிவமாய் நின்ற சிதம்பரநாதனின் ஆற்றலற்ற கரங்களில் இந்த பொக்கிஷத்தை ஒப்படைத்தது ஏன் என்று அவரால் புரிந்துகொள்ள முடிந்ததேயில்லை. அது மட்டுமல்லாமல், பஞ்சவர்ணத்தைப்போல் ஒரு பேரழகி சிதம்பரநாதனைப்போன்ற முட்டாளிற்கு வாய்த்தது எப்படி என்பதும், செல்வக்கடலில் நீந்தித் திளைத்த குடும்பம் அவளைப்போன்ற ஐயத்திற்குரிய நடத்தைக்கொண்ட ஒரு அனாதையை தங்களது உள்வட்டத்தினுள் அனுமதித்தது ஏன் என்பதும் பெரும் புதிராகவே இருந்தது.
அந்நாள் வரை அக்குடும்பத்தின் சல்லிவேராய் இருந்த சிதம்பரநாதன், அப்பேரழகியின் வருகையினால் ஆணிவேரைப்போன்ற தோற்றத்தைப் பெற்றுவிட்டதையும், அவர்கள் வீட்டு முற்றத்தில் கூடும் பஞ்சாயத்துகளில் கலந்துகொள்ள வரும் பெரியவர்கள், பஞ்சவர்ணத்துடன் அவன் நிற்கும் காரணத்தினாலேயே தங்களையும் அறியாமல் சிதம்பரநாதனைப் பார்த்து பேசுவதையும், பின்னர் நிலையறிந்து ஆதிகேசவன் பக்கம் திரும்புவதையும் அவர் பலமுறை கவனித்திருக்கிறார். எவ்வித முக்கியத்துவமும் அற்ற ஜீவனாய், பெரும்பாலான பொழுதுகளில் ஒரு அடிமையாய் கேலிப்பொருளாய் மட்டுமே சிதம்பரநாதனை நடத்திவந்த அண்ணன்மார்களின் பேச்சுக்களில் கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சுகலந்த கேலிகளும் குத்தல்களும் தோன்றத் துவங்கியதும் அதன் பிறகுதான்.
தோப்பில் அமர்ந்து இன்பமுறும் போதைத் தருணங்களில் அவர்கள் புலம்பியவற்றிலிருந்து அவர்கள் இருவருக்கும் பஞ்சவர்ணத்தின் பொருட்டு தனது தம்பியின் மீது ஆழ்ந்த பொறாமை இருந்துவருவதை சந்திரசேகரனால் உணரமுடிந்தது. ஆதிகேசவனின் மனைவிக்கும் பஞ்சவர்ணத்தின் மேல் அத்தனை பிடித்தம் இருந்திருக்கவில்லை. அடுக்களையில் தனித்திருக்கும் வேளைகளில், சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் அவளது வேர்களைக் கேள்விக்குட்படுத்தும் சொற்களை உதிர்க்காமல் அவள் இருப்பதில்லை என்பதை மூத்த மருமகள்களின் மூலம் அறிந்துகொள்ளமுடிந்தது. ஆனால் தனது அந்திமக் காலத்தில் ஆதிகேசவன் எடுத்த அந்த திடுக்கிடும் முடிவு சிதம்பரநாதனை நிகரற்ற ஆளுமையாக அந்த ஜில்லாவில் நிறுத்தியது. விரக்தியுற்ற சகோதரர்கள் இருவரும் மௌனமாய் சபித்துக்கொண்டு வெளியூர் நோக்கிச் சென்றனர்.
எது எப்படியோ, நடந்தவை அனைத்தும் தனக்கு வாய்த்த நல்லூழ் என்று கருதிய சந்திரசேகர் இரையை அணுகும் முதலையென இளித்தவாயுடன் சிதம்பரநாதனை நெருங்கினார். குஞ்சுப் பறவையைப்போன்ற வெள்ளந்தியான முழியுடன் அவனுடன் வாழ்க்கை நடத்தும் பஞ்சவர்ணத்தை தனது வாலைக்கொண்டு சுழற்றியடித்தாலே போதுமானது என்று கணக்கிட்டிருந்தார். அன்றாட சமாச்சாரங்களில் உதவுவதில் துவங்கி, தனது இல்லத்தின் சுபநிகழ்வுகளுக்கு அவர்களை தலைமையேற்க வைப்பதுவரை அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி அக்குடும்பத்தின் மையமுடிச்சை நெருங்குவது ஒன்றும் அவருக்கு அத்தனை சிரமமாக இருக்கவில்லை.
இரண்டொரு வருடங்கள் கழித்து நடந்த தனது மகளின் வளைகாப்பிற்கு முக்கிய விருந்தினராக வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்த சிதம்பரநாதனை மெல்லத் தொட்டு எழுப்பி உள்ளறைக்கு அழைத்துச் சென்று, வெற்றிலை மடித்துக்கொடுத்து, தனது மகளைப் பற்றியும், அவளது வருங்கால வாழ்வை செழிப்பானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைத்துச் செல்வதே ஒரு தந்தையென தனது முதன்மைக் கடமை என்றும் உணர்ச்சிபொங்க பேசினார் சந்திரசேகரன். அவளுக்கென்று ஒரு வீட்டை கட்டியெழுப்புவது தனது நெடுநாள் கனவென்று உருக்கமாகச் சொல்லிவிட்டு, சிதம்பரநாதனின் கைவசம் இருக்கும் நிலத்தைக் குறித்து அவர் மூச்சுவிட்ட நொடி எங்கிருந்தோ விடுவிடுவென ஓடிவந்த பஞ்சவர்ணம் அவர்கள் அருகே அமர்ந்துகொண்டு எதற்கோ அத்தனைப் பற்களையும் காட்டிச் சிரித்தாள். காரணம் கேட்டதற்கு ஏதோ அற்பமான நிகழ்வொன்றை விவரித்து மேலும் தீவிரமாய் சிரித்து அச்சூழலின் சாரத்தையே மாற்றியமைத்தாள்.
அதற்கு ஒரு மாதம் கழித்து, எதேச்சையாய் செல்வதைப்போல் அவர்கள் வீட்டுக்குச் சென்ற சந்திரசேகர், ஊரினுள் நிகழும் அற்பச் சங்கதிகள் சிலதை மிகை நகைச்சுவைக் கலந்து விவரித்துவிட்டு, மீண்டும் அந்த மையமுடிச்சைத் தீண்டிவிடும் முனைப்பில் இறங்கினார். அப்போது புறங்கழுத்தில் ஏதோ குறுகுறுப்பை உணர்ந்து பின்புறம் திரும்பியபோது, அடுக்களை வாசலில் அப்பிக்கிடந்த ஆழமான நிழலுக்குள் ஒளிரும் இரண்டு விழிகளைக் கண்டார். மறுநொடி, “வாங்க அண்ணா… காபி கொண்டு வரட்டா?” என்று கேட்டபடி அதனுள்ளிருந்து விரைந்து வந்த பஞ்சவர்ணத்தைக் கண்டபோது ஏனோ அவருக்கு நடுக்கமாக இருந்தது. தனது உள்மனக்கிடங்கில் திட்டமென ஒன்று திரளும்போதெல்லாம் அண்மையில் இருந்தபடி தன்னை உற்றுநோக்கும் அந்த இருவிழிகள், உலகறியா குஞ்சுப் பறவையுடையதா அல்லது படம்விரித்தாடும் பாம்பினுடையதா எனும் ஐயம் உருவானபிறகு அவரால் அந்த மையமுடிச்சை நெருங்கவே முடியவில்லை.
அந்த வீட்டையும், சிதம்பரநாதனுடான தாம்பத்திய வாழ்வையும் துறந்து அவள் முழுதாய் அகன்றபிறகே இழந்திருந்த துணிச்சல் மீண்டும் கைகூடியது அவருக்கு. ஒரே வாரிசாக இருந்த கைலாசம் தனது குடும்பத்துடனான உறவை முற்றாக அறுத்துக்கொண்டு மதுபோதையின் மடியில் விழுந்துகிடப்பதை தனது மூதாதையர்கள் செய்த நல்வினையின் பயனென எண்ணிக்கொண்டார். விஸ்தீரணமான அந்த வீட்டினுள், வெறுமையும் நிசப்தமும் சூழ ஒண்டிக்கட்டையாய் வாடிக்கிடந்த சிதம்பரநாதனின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பூஞ்சையைப்போல் படர்ந்து தனது நோக்கங்களை நிஜமாக்கிவிடும் வைராக்கியத்துடன் முயன்றார். பொருட்படுத்தத் தகுந்த நகர்வுகள் எதுவும் நிகழாதபோது சற்றே சலிப்புற்ற சந்திரசேகரன், பேச்சை இந்த நான்கு சுவர்களுக்குள் வைத்துக்கொள்வதே பிழையோ என எண்ணி, அவரை வெளியூர் அழைத்துச் செல்ல திட்டமிட்டார். மாயமான முறையில் அந்நிலத்துடன் அவருக்கிருக்கும் பிணைப்பை பயணமும், புதுவிதக் காட்சிகளும் சற்றுத் தளர்த்தலாம் என்றும், ஒரேவிதமான மனப்போக்கில் ஊறித் திளைத்து இறுகிக்கிடந்த அவரை இது நிச்சயமாக நெகிழ்த்தும் என்றும் அவர் ஆணித்தரமாக நம்பினார். இருமாதங்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு சாக்கைச் சொல்லி சிதம்பரநாதனை வெவ்வேறு ஊர்களுக்கு உடன் அழைத்துச் செல்வது அவரது வாடிக்கையாகியது. இறுதியாக, தஞ்சையில் நடக்கவிருந்த தெருக்காரர் ஒருவரது மகனின் திருமணத்திற்கு அவரை அழைத்துச் சென்றபோதுதான் தான் ஆற்றிவருவது அனைத்துமே வீண் என்று அவர் புத்திக்கு உறைத்தது.
இடையிராத முயற்சிகளினால் களைப்புற்றிருந்த சந்திரசேகரன் தனது தேவையென்ன என்பதை மிகவும் நேரடியாக, அழுத்தமான குரலில் சொன்னபோது அவர்கள் தஞ்சை பெரியகோவில் துவாரபாலகர் சிலை அருகே நின்றுகொண்டிருந்தார்கள். சிற்பத்தின் தடித்த விரல்களை நோக்கிக்கொண்டே, “அப்படியேதான கடக்கு… நம்ம கைக்கு மாறினா எதுக்காச்சு உதவும்லா? நல்ல வெல தாரேன், அதுல ஒரு குறை இருக்காது… நாளப்பின்ன அங்கன ஏதும் தொழில் தொடங்கினா உங்களையே, உம்ம புள்ளையையோ பார்ட்னரா கூட சேத்துக்கிடுதேன்… என்ன சொல்லுதீய?” என்று கேட்டுவிட்டுத் திரும்பியபோது, வேற்றுமொழியில் நடக்கும் ஏதோ பொருளற்ற உரையைக் கேட்பதைப்போல் பற்றற்ற விழிகளுடன் நின்ற சிதம்பரநாதனைக் கண்டு மிரண்டுபோனார் அவர்.
இவ்வகை எண்ணங்களும், பேச்சுக்களும் அவரை ஒருபோதும் அண்டாது என்றும், எளிதில் நசுக்கிவிடக்கூடிய பிள்ளைப்பூச்சி என தான் நினைத்துக்கொண்டிருந்தது நிதர்சனத்தில் ஒரு பெரும்பாறை என்றும் அவருக்கு அப்போதே புரிந்தது. அதன்முன் நின்று தான் ஆடும் ஆட்டங்களும், குவிக்கும் மன்றாட்டுகளும், எடுத்துச்சொல்லும் அறிவுரைகளும் அப்பாறைக்கு ஒரு பொருட்டேயல்ல என்றும், அந்த வீடுகளும், அவை காலூன்றி நிற்கும் நிலமும் சிதம்பரநாதன் எனும் பிணத்தின் தொண்டைக்குழியில் சிக்குண்டிருக்கும் துகள் என்று விளங்கியபோது உடம்பெல்லாம் ஒருவிதமாய் சில்லிட்டுப்போனது. கொலையோ அல்லது அதற்கிணையான கொடுங்குற்றத்தையோ செய்யத்துணியாத தன்னைப்போன்ற ஒருவனால் இந்தப் பாறையை ஒருபோதும் அசைத்திட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத கொதிநிலையில், “உம்மால எதயும் பாதுகாக்க முடியாது… உமக்கு அது தெரியும்லா? பெத்த மவன் கொலவெறியோட சங்க நெறிக்கறத கெட்டினவன் நின்னு வேடிக்க பாத்தது தாளாமத்தான் அவ ஓடினா… தெரியும்லா?” என்று சொல்லிவிட்டார்.
சிதம்பரநாதன் ஒருகணம் விதிர்த்தார். வெளிறிப்போயிருந்த அவரது முகம் ஒரே ஒருகணம் மட்டும் சிவந்ததைப்போல் இருந்தது. மறுகணமே மனமிளகிய சந்திரசேகரன், “மன்னிச்சுருங்க… வாங்க, கிளம்பலாம்” என்று முணுமுணுத்தார். அதற்குமுன் பேசிய கடுஞ்சொல்லை அறவே மறந்துவிட்டதன் பாவனையில் அவரைப் பின்தொடர்ந்தார் சிதம்பரநாதன்.
அகவை முதிர முதிர செல்வம் குவிப்பதிலிருந்த நாட்டம் கணிசமாய் வற்றியிருந்தபோதிலும், எவ்வித அலைக்கழிப்புகளுக்கும் ஆளாகாமல் நின்ற அந்தப் பாறையை ஏதேனும் ஒன்று அசைத்திராதா என்கிற அவா மட்டும் குன்றாமல் அடியாழத்தில் நீடித்து வந்தது. இரு தினங்களுக்கு முன்பு பழனிமலை அடிவாரத்தில் பஞ்சவர்ணத்தைக் கண்டபோது உள்ளுக்குள் ஒருவித உலுக்கலையும், நுணுக்கமான கிளர்ச்சியையும் உணர்ந்திருந்தவர் அந்த உள்மன அரிப்பைத் தணிக்கும் வழியொன்றை அதில் கண்டுகொண்டார். ஆனால் ஊர் திரும்பியதும் முதல் வேலையாக அத்தகவலை சிதம்பரநாதனிடம் கோவிலில் வைத்துச் சொன்னபிறகு அந்த முகத்தில் குடியேறிய வழக்கமான சவக்களையைக் கண்டபோது அவருக்கு மூச்சடைத்துப்போனது.
4
“நீயும் உன் அண்ணனும் பயந்து பயந்து தொட்டுப்பாத்த பொருளையெல்லாம் சிதம்பரம் விளையாட்டுத்தனமா தட்டிவிட்டு உடைக்கறத கண்டு உங்கப்பா கைதட்டி சிரிக்கறத நான் கண்கூடா பாத்திருக்கேன்…” என்று அண்ணன்மார்களிடம் அம்மா பேசிக்கொண்டிருந்தது உள்ளறையில் படுத்திருந்த சிதம்பரநாதனுக்கு துல்லியமாகவே கேட்டது.
“ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்லாதவனா இன்னிக்கு வளந்து நிக்கறான்னா, அது முழுக்க முழுக்க அவர் குடுத்த இடம்… பரண்மேல இருக்கற பிரம்பு ஒருக்கா அவன் முதுக தொட்டிருக்குமா?” இது இரண்டாவது அண்ணன்.
அம்மா நீண்ட நேரத்திற்கு எதுவும் சொல்லவில்லை. பிறகு ஆழமாய் மூச்செடுத்துவிட்டு, சன்னமான குரலில், “கடற்கரையில மணல் மாளிகை கட்டற குழந்தை மாதிரி உங்க ரெண்டு பேரையும் பாத்து பாத்து வளத்து, தள்ளி நின்னு ரசிச்சு நிம்மதி அடைஞ்சாரு… அதே குழந்தை, தான் கட்டியெழுப்பினத காலால எட்டி உதைச்சு கலைச்சுப்போட்டு சிரிக்குமே… அந்த மாதிரி சிதம்பரத்த வளத்தாரு” என்றாள்.
அறையினுள் அரையிருட்டில் படுத்திருந்த சிதம்பரநாதனுக்கு ஏனோ அப்போது சிரிப்பாக இருந்தது. ஆனால் அந்தச் சிரிப்பையும், அதற்கு முகாந்திரமாய் அமைந்திருந்த அம்மாவின் வார்த்தைகளையும் மறக்கடிக்கும் வலுவுடன் பொழிந்தன அதனை தொடர்ந்துவந்த தினங்களில் அண்ணன்மார்கள் கொடுத்த அடிகள். தந்தையின் பிழையை சரிகட்டவேண்டும், அன்பு தம்பி உருப்படாமல் போவதை எப்பாடுபட்டாவது தடுக்கவேண்டும் என்கிற உன்னத நோக்கங்கள் அவர்களது மூர்க்கங்கள் அனைத்தையும் சமன்செய்துவிடும் சாக்காக அமைந்தது. வலியும் வேதனையும் சகித்துக்கொள்ளவே முடிந்திராத அளவுகளை எட்டிய மாலைவேளை ஒன்றில் கிழிந்த உதடுகளும், வரிக்கோடுகள் விழுந்த முதுகுமாய் தந்தையிடம் சென்று முறையிட்டபோது அவனை இடக்கையால் புறந்தள்ளினார் அவர்.
இளமை நெடுக இயற்றிய கொடும்பாவங்கள் தனக்கு மிகக்குரூரமான மரணத்தை விளைவிக்குமோ என்கிற ஆழ்மன அச்சத்தைப் போக்கும்பொருட்டு ஆன்மீகக் கடலில் கழுத்துவரை மூழ்கியிருந்த அவர் இதுபோன்ற உலகியல் சச்சரவுகளை அறவே வெறுப்பவராக அப்போது மாறியிருந்தார். அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுவிட்டதை உணர்ந்துகொண்ட சிதம்பரநாதனின் இளமனம், எஞ்சியிருந்த ஒரே வாசலினுள் தன்னைச் சுருட்டிக்கொண்டு நிரந்தரமாக முடங்கியது.
துயரம், ஏக்கம், இன்பம், அச்சம், ஐயம் போன்ற வர்ணங்களை முற்றாக புறக்கணித்துவிட்டு ஒருவித வெறுமையை நிரந்தரமாகச் சூடிக்கொண்டு அலைந்த சிதம்பரநாதனின் விழிகள், ஒரு விடியல் பொழுதில், பொன்னொளிப் பிரவாகமாய் சுழித்தோடும் நதியின் கரையில், இறந்த கன்றுக்குட்டியை தனது மடிமேல் கிடத்திக்கொண்டு வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த பெண்ணைக் கண்டபோதுகூட உயிர்பெற்றிருக்கவில்லை. நீரின் ஆழங்களில் மூழ்கிக்கிடக்கும்போது மட்டுமே தான் உணரும் பேரமைதியை சற்றுநேரம் அனுபவித்துவிட்டு அப்பெண்ணைத் திரும்பிக்கூட பார்க்காமல் கரையேறி இல்லம் நோக்கிச் சென்றான் அவன்.
மறுநாள் கன்றைத் திருடிக் கொன்றவள் என்கிற அபாண்ட பழியை தலைமேல் சுமந்தபடி ஊர் மன்றில் நிறுத்தப்பட்டிருந்த அவளைக் கண்டபோதுகூட அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனால் துண்டைக்கொண்டு வாயைப் பொத்திக்கொண்டு தனது கைகளை கோரமாக ஆட்டி ஆட்டி அவள்மேல் பழிசுமத்திய செல்வம் ஒரு பொய்யன் என்று அவனுக்கு நன்றாக தெரியும்.
திருவைகுண்டத்தில் இருந்த மிகச்சிறிய முருகன் ஆலயத்தை தூய்மைப்படுத்தவதையே தனது ஒற்றைக் கடமையாகக்கொண்டு வாழ்ந்துவந்த விசாலாட்சிக் கிழவியினால் வளர்க்கப்பட்ட அனாதையான தனக்கு, கிழவியின் மரணத்திற்கு பிறகு, அக்கோவிலின் பூசாரியினால் வழங்கப்பட்ட கன்றே அது என்றும், வேலைத்தேடி இவ்வூர் வந்த இடத்தில் ஏதோ உடல் கோளாறினால் அக்கன்று அனாமத்தாய் உயிர்நீத்தது என்றும், ஒருபோதும் பிறர் பொருளின் மேல் கண்ணும் கையும் வைப்பவள் தான் அல்ல என்றும் ஒலித்த அவளது வாதத்தை எவரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இறுதியாக தனதென்று எஞ்சியிருந்த ஒரே பொருளான கிழவியின் பாம்படத்தை அபராதமாகச் செலுத்திவிட்டு கண்ணீர்விட்டபடி அவள் இடம் நீங்குவதைக் கண்டபோது லேசான ஒரு வலியை உணர்ந்திருந்தான் சிதம்பரநாதன்.
ஒருசில மாதங்கள் கழித்து அதே ஆற்றங்கரையில் ஒரு பிச்சியைப்போல் தலைவிரிகோலமாய் அமர்ந்திருந்த அவளை நோக்கியபோது அடிநெஞ்சில் துளிர்த்த இனம்புரியாத நெருடலின் விளைவாக அவளை அணுகிச் சென்று, “சாப்பிட்டயா ஏதாச்சும்?” என்று கேட்டான். தூரத்தில் ஏதோ ஒரு புள்ளியை உற்று நோக்கிக்கொண்டிருந்தவள் நறநறவென பற்களைக் கடித்தாள். உணர்வெழுச்சியில் தன் கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி அவள் முன் நீட்டி, “இந்தா, இதை எடுத்துட்டு எங்கையாச்சு போ…” என்றான் சிதம்பரநாதன்.
தொலைவில் ஒரு மரத்தடியில் தியானம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்த தந்தை ஆதிகேசவன் அக்காட்சியைக் கண்டு விடுவிடுவென விரைந்தோடி அருகே வந்தார்.
சிதம்பரநாதன் அதிர்ந்துபோனான்.
அப்பெண்ணின் முன் குந்தி அவள் விழிகளை உற்று நோக்கிய ஆதிகேசவன், “என்ன தெரியுதா?” என்று கேட்டார்.
பஞ்சாயத்தில் தனக்கெதிராக ஒலித்த தீர்ப்பைப் பரிந்துரைத்த குரலின் சொந்தக்காரரே அவர் என்பதை அறிந்திருந்த பஞ்சவர்ணம் ஒருமுறை இமைகொட்டினாள்.
நெடுநேர மௌனத்திற்குப் பிறகு, “இத பாரு பஞ்சவர்ணம், இது என் மகன்… அவன கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்டார்.
அவள் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் அடுத்த முகூர்த்தத்திலேயே சிதம்பரநாதன் அவள் கழுத்தில் மங்களச்சரடை அணிவித்திருந்தான்.
கந்தல் ஆடையும், இற்றுப்போயிருந்த உடலுமாய் இருந்த பஞ்சவர்ணத்தின் மேல் பட்டும் பொன்னும் படிந்த கணமே அவள் பேரழகியென அவதரித்துவிட்ட விந்தை ஓர் அலையென ஊரை அறைந்தது. ஈரைந்து மாதங்களுக்கு முன்னர் இதே ஊரில் பிச்சியாய் திரிந்த பெண்ணே இவள் என்பதையும், இவள்மேல் திருட்டுப்பட்டம் சுமத்திய பொய்யன் செல்வம் தான் வளர்த்த மாடொன்றாலேயே தாக்கப்பட்டு விலாமுறிந்து செத்துப்போனதையும் ஊர் தனது ஆழங்களினுள் தத்ரூபமாக புதைத்துக்கொண்டது.
அன்றுவரை அந்த ஜில்லாவில் ஏறக்குறைய ஓர் தீண்டத்தகாதவனாய் இருந்த சிதம்பரநாதனை அன்று அத்தனை கைகள் தொட்டுப் பார்த்து, கண்ணேறு கழித்தனர். மஞ்சத்தறையில் மங்களக்கோலத்தின் மிளிர்வு குன்றாமல் தனக்காக காத்து நின்ற அப்பேரழகியையும், தன்னை ஏற்புடனும், மரியாதையுடனும், பிரியத்துடனும் நோக்கும் அந்த விழிகளையும் எதிர்கொண்டபோது எடையற்றவனாய் தன்னை உணர்ந்தான் அவன். நாணம் போர்த்தி நின்றுகொண்டிருந்தவள் ஒரு நெடுமூச்சினால் அதைக் கழற்றி வீசிவிட்டு, மெல்ல அடியெடுத்து அணுகிவந்து, புடவைத் தலைப்பினால் அவனது நெற்றி வியர்வையை ஒற்றியெடுத்து, குளிர்ந்திருந்த கரத்தினால் அவன் கன்னம் ஏந்தி இதழில் முத்தமிட்டபோது ஜூரம்கண்டதைப்போல் கிடுகிடுவென அதிர்ந்த சிதம்பரநாதன் அப்படியே மடிந்து விழுந்து, மருதாணியிட்ட அவள் பாதத்தில் முகம் புதைத்து விம்மியழுதான்.
5

வழுவழுப்பான மேனியும், இடைப்பகுதியில் மிகக்கச்சிதமான வளைவும் கொண்டிருந்த அந்த மதுபுட்டியை, தாமிரபரணி நீரொழுக்கில் முக்கியெடுத்து எஞ்சியிருந்த திரவத்தை வாயிலூற்றிவிட்டு, உலர்ந்த குருதியும் கரியும் அப்பிக்கிடந்த சட்டையினால் முகத்தைத் துடைத்தபடி நிமிர்ந்தபோது மறுகரையில் இருந்த பெருமரத்தின் பின்னால் தெரிந்த உருவம் தனது அம்மா பஞ்சவர்ணமாகத்தான் இருக்கவேண்டும் என்று அக்கணம் திடமாய் நம்பினான் கைலாசம். பற்களைக் கடித்தபடி உள்ளங்கையை நகத்தைக்கொண்டு சொரிந்து கழுவிவிட்டு மீண்டும் நிமிர்ந்தபோது அனைத்தும் கனவோ எனும் ஐயமெழுந்தது. அமைதியாய் ஊர்ந்து, இமைப்பொழுதில் சீற்றம்கொண்டு, இறுதியில் மூன்று உயிர்களை காவுவாங்கிய அந்த நச்சுப் பிரவாகத்தின் ஊற்றுமுகம் அந்த இடமே என்பதை பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறான்.
விவரம்புரியத் துவங்கிய காலகட்டத்தில் சிறுதுரும்பெனவும், முற்றும் அழிந்த அந்தக் கொடிய இரவுக்குப் பின்னால் பெரும் புயலெனவும் மாறி அவனைச் சுழற்றியடித்த “ஏன்?” எனும் வினாவுக்கான விடையை நாடி, போதையின் துணையைக்கொண்டு அகவெளிகளில் மேய்ந்தலைந்தபோதெல்லாம் எங்கோ ஜனித்து, காற்றிலேறி மிதந்து வரும் ஊன் கருகும் நெடி அவனை முற்றாக செயலிழக்கச்செய்து புரட்டிப்போடும். இன்று சுஜித் இருக்கும் வீட்டில் எட்டு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த திலகவதியும், அவளது ஏழு வயது மகனான செல்லப்பாவும் அரளிவிதையை அரைத்து உண்டு, ஒருவரை ஒருவர் அணைத்தபடி செத்துக் கிடந்த காட்சியைக்கூட அந்த ஊன்கருகும் நெடி எளிதில் அழித்துவிட்டிருந்தது.
செடியும் கொடியுமாய் ஓரளவிற்கு பசுமையுடன் இருந்த நிலம், அமானுஷ்யத்தின் கூடாரமென பெயர்பெறத் துவங்கியது அந்த இரட்டை மரணத்திற்கு பிறகுதான். மேல்வீடு மகேஸ்வரி அக்கா உட்பட, சுற்றுவட்டாரத்தில் குடியிருந்த இரண்டு குடும்பங்கள் இடம்பெயர்ந்துச் செல்வதற்கு அச்சம்பவம் மிகமுக்கிய காரணமாக திகழ்ந்தது. கோர விபத்தில் கணவனை இழந்தபிறகும் துடிப்புடனும், கனவுகளுடனும் வாழ்ந்துகொண்டிருந்த திலகவதி அக்கா திடுமென அம்முடிவை எடுத்தது ஏன்? அந்த முடிவு திடுமென எடுத்ததா? அல்லது பஞ்சவர்ணம் எனும் கொடிய பேயினால் மறைமுகமாய் உந்தப்பட்டதா?
இதுவே முடிவென்றால், முதிராப் பிள்ளையை மடியில் ஏந்திக்கொண்டு விதவைக்கோலத்தில் நின்றிருந்த திலகவதியை அவள் தனது இருகரம் கொண்டு அணைத்து, அன்பு செலுத்தி, பாதுகாப்பளித்தது ஏன்? செல்லப்பாவிற்கு விஷக்காய்ச்சல் வந்தபோது தனது வீட்டின் வாசற்படியில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கேவிக் கேவி அழுதுகொண்டிருந்த திலகவதி அக்காவை ஆறுதல் படுத்தி, ஒரு சகோதரியாக தான் உடன் இருப்பதாக தைரியம் சொல்லி, இரண்டு வாரங்களுக்கு அவள் செல்லப்பாவைப் பார்த்துக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தினால்போதும் என்றும், உணவு மற்றும் பிற காரியங்களுக்கான பொறுப்புகளை தன்னிடம் விட்டுவிடும்படியும் உறுதியளித்துவிட்டு அன்று வீடு திரும்பிய அம்மாவைக் காண்பதற்கு நிறைவாகத்தான் இருந்தது.
பிறிதொரு பொழுதில், அரிசி மில்லில் பார்த்துக்கொண்டிருந்த பணி திடீரென பறிபோய்விட்ட காரணத்தினால் மனமுடைந்து போயிருந்த திலகவதி அக்காவின் தோள்களைத் தட்டித் தேற்றியது மட்டுமல்லாமல், தனிமை முற்றும் இரவுகளிலெல்லாம் தனது வீட்டிலேயே உறங்கிக் கழிக்க இடமளித்த அம்மா, திடீரென அவளை வெறுத்தொதுக்கத் துவங்கியது ஏன் என்பதை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அப்போது அவனிடம் இருக்கவில்லை. வழக்கமாய் விடிந்ததும், அரைத்தூக்கத்தில் இருக்கும் செல்லப்பாவைத் தூக்கிக்கொண்டு தனது வீட்டிற்கு திரும்பிவிடும் திலகவதி அக்கா, அன்றைக்கொரு நாள் அம்மாவுக்கும் முன்பாக விழித்துக்கொண்டது மட்டுமல்லாமல், அடுக்களை சென்று அனைவருக்கும் சமைத்து வைத்ததே அனைத்திற்கும் ஆரம்பப்புள்ளியோ என்று அவ்வப்போது அவன் எண்ணிக்கொள்வான். உறக்கத்திலும் பூனையைப்போன்ற புலன்கூர்மையுடன் இருக்கும் அம்மாவுக்கு அடுப்படியில் பாத்திரங்கள் அசையும் சத்தம் கேட்காமல் போனது எப்படி என்கிற வியப்பை, திலகவதி அக்காவின் அந்த அன்பான அத்துமீறலுக்கு அவள் காட்டிய எதிர்வினை மங்கச்செய்திருந்தது.
கண்திறந்த கணமே பரபரவென எழுந்து, வலதுகால் நங்கென்று கட்டில்விளிம்பில் இடித்துக்கொண்டதைக்கூட பொருட்படுத்தாமல் சமையலறை நோக்கிச் சென்ற அம்மா அங்கே வீசிய உணவின் வாசத்தை முகர்ந்து ஒருகணம் விதிர்த்தாள். அந்த நாள் முழுக்க அம்மா திலகவதி அக்காவிடம் முகம்கொடுத்தே பேசவில்லை. அதற்கு இரண்டு மாதங்கள் கழித்து அவள் வீட்டு வாசலில் நின்று அசிங்கமாக பேசும் அளவிற்கு அவளது காழ்ப்பைப் பெருக்கியது எது என்று அவனுக்கோ, ஆத்திரம்பொங்க கூச்சலிட்ட அம்மாவை பரிதாபமாக நோக்கிக்கொண்டிருந்த திலகவதி அக்காவுக்கோ தெரியவேயில்லை. அதற்கு ஒரு மாதம் கழித்து தையல் கடை ஒன்றில் புதிதாய் கிட்டியிருந்த வேலையும் பறிபோனபிறகு மகன் செல்லப்பாவைக் கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்துக்கொண்டிருந்தாள் திலகவதி அக்கா. அன்றைய பகல் முழுக்க அம்மா தனது அறையினுள்ளேயே முடங்கிக் கிடந்தாள். கிணற்றடியில் அமர்ந்திருந்த அப்பா இரண்டு பிணங்கள் விழுந்த அந்த வீட்டையே வெறித்தபடி அமர்ந்திருந்தார். அந்தி சாய்ந்ததும் அறையை விட்டு ஒருவித துடிப்புடன் வெளியேறிய அம்மா நேராக அடுப்படிக்குச் சென்று சமையலில் மும்முரமானாள். கொதித்துக் குமிழியிட்டுக்கொண்டிருந்த புளிக்குழம்பு மற்றும் சோற்றுச் சட்டியுடன் கூடத்திற்கு வந்தவள் புறவாசல் பக்கம் குரல் குடுத்த பின்னர் ஓரமாய் அமர்ந்திருந்த கைலாசத்தைப் பார்த்து, “சாப்பிட வா, தம்பி… எல்லாம் சூடா இருக்கு” என்றாள். கைலாசத்திற்கு அவளைப் பார்க்க அச்சமாக இருந்தது. குரல் கேட்டதும் ஒரு நாய்குட்டியைப்போல் உள்ளே வந்து, சோற்றின் முன் அமர்ந்துகொண்டு, கவளம் கவளமாய் உருட்டி வாயிலிட்டு, லபக் லபக் என விழுங்கிய அப்பாவைக் கண்டபோது அதனிலும் அச்சமாக இருந்தது.
இரவுகளில் பெண்ணின் அழுகுரல் கேட்பதாகவும், கீச்சொலியெழுப்பும் செருப்புகள் அணிந்த சிறுவன் அங்கும் இங்கும் லாந்துவதைப்போல் இருப்பதாகவும், வளரும் செடிகள் சில விநோதமாய் கருகிப்போவதாகவும், சுற்றுப்புறங்களில் வசிக்கும் நாய்கள் எப்பொழுதும் ஊளையிட்டவண்ணம் இருப்பதாகவும் ஊரினுள் அதன் பிறகு புழங்கத் துவங்கிய கதைகளில் ஏதேனும் ஒன்று சியாமளா அக்காவை அச்சுறுத்தியிருக்கலாம் என்று சுஜித்துடன் சேர்ந்து மது அருந்தும்போதெல்லாம் சொல்லி அழுவான் கைலாசம்.
சியாமளா அக்காவை சிடுமுகம் காட்டுபவளாகவும், ஆண்களை அறவே வெறுப்பவளாகவும், அன்பென்றால் என்னவென்றே அறியாதவளாகவும், பெண்ணிற்கான நளினங்கள் ஏதுமற்றவளாகவும், தாய்மையை முற்றாகத் துறந்தபிறகே பிறப்பெடுத்தவளாகவும், சித்தம் பிறழ்ந்தவளாகவும் எண்ணி, அதுபோன்ற ரசமற்ற சுபாவத்தின் விளைவாக தன்னை அவள் ஒதுக்குவதைப்போலவும், அப்படிமட்டும் ஒதுக்கியிருந்தால் அவள் இன்று உயிருடன் எஞ்சியிருப்பாள் என்றும் கற்பனைகள் பல செய்துகொள்வது அவனது வழக்கமாக இருந்தது.
காதல் கணவனுடன் ஊரைவிட்டு ஓடிவந்த சியாமளா அக்கா, பிழைப்பதற்கு எத்தனையோ ஊர்களிருந்தும் இவ்வூரை ஏன் தெரிவுசெய்யவேண்டும் என்றும், சிதல் புற்றைப்போல் ஊரெங்கிலும் பரவிக்கிடக்கும் வீடுகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இந்த நரகத்திற்குள் பிரவேசித்தது எதற்காக என்றும், வாலிபத்தின் வயல்வெளிகளில் விளையாடத் துவங்கியிருந்த தனக்குள் அத்தனை தூய்மையான தாய்ப்பாசத்தை ஏன் புகட்டவேண்டும் என்றும், புழுத்துப்போயிருந்த செடிகளைப் பூக்கச்செய்து, பட்டுப்போன மரங்களைக் காய்க்கச் செய்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் தன்னையும் கனியச்செய்து அவளிடம் முற்றாக சரணடையச் செய்தது ஏன் என்றும், உதிர்ந்த பூக்கள், சருகு, பறவைகளின் இறகுகள் என்பன போன்ற பொருட்களைக்கொண்டு தன் கைப்படச் செய்யும் கலைவேலைப்பாடுகளில் தன் பெயரைப் பதித்து தனக்கு அன்பளிப்பாக வழங்காமல் இருந்திருக்கலாம் என்றும், குளிர் காலங்களில் எந்நேரமும் சதா அவள் கழுத்தைச் சுற்றி இருக்கும் கம்பளித் துணியை “இந்தா உனக்கு வச்சுக்கோ” என்று ஏன் தரவேண்டும் என்றும் வழக்கம்போல் புலம்பிக்கொண்டே சென்ற கைலாசத்தை ஒருநாள் இடைமறித்த சுஜித், “தொட்டுச்சுன்னும், கூப்பிட்டு வச்சு உரசிச்சுன்னும், நடத்தை சரியில்லாதவன்னும் உங்க அம்மா கத்தி கூப்பாடு போட்டது ஒருபக்கம் இருக்கட்டும்… அத்தனை தடையையும் மீறி லவ்வுக்காக தன்ன நம்பி வந்த பிள்ளைய சந்தேகப்பட அந்தப் புருசனுக்கு எப்படி மனசு வந்துச்சு?” என்று கேட்டான்.
கைலாசத்திடம் அந்தக் கேள்விக்கும் பதிலிருக்கவில்லை.
அவள் அபாண்டமாக சுமத்தியப் பழிகளால் தனது மணவாழ்வில் பதிந்துவிட்ட நிரந்தர கறையை எப்படியாவது அழித்துவிடக்கோரி வீட்டுவாசலில் வந்து நின்று கதறியழுத சியாமளா அக்காவை, அம்மா காழ்ப்புடன் புறந்தள்ளிய ஐந்தாவது நாளே அவளுக்கும் அவளது காதல் கணவனுக்கும் மிகப்பெரிய சண்டை ஒன்று வெடித்தது. அந்த இரவே வீட்டில் யாருமில்லாத வேளையில் தனது உடம்பிற்கு தீயிட்டுக்கொண்டாள் சியாமளா அக்கா. மலர் மணம் வீசிக்கொண்டிருந்த அந்நிலத்துக் காற்றில் அன்று கலந்த ஊன்கருகும் நெடி அதன் பிறகு என்றுமே விலகியிருக்கவில்லை. கரிக்கட்டையாய் கிடந்த சியாமளா அக்காவின் உடலைப் பார்ப்பதற்கு கைலாசம் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் “ஓ!!!” என்ற ஓலத்துடன் அந்த வீட்டினுள்ளிருந்து வெளிவந்த அவளது காதல் கணவன், கரியும் குருதியும் படிந்திருந்த தனது உள்ளங்கையால் கைலாசத்தின் மார்பில் ஒரு அடி அடித்துவிட்டு மயங்கி விழுந்தான்.
கூடியிருந்த தெருவாசிகள் அவனை அப்புறப்படுத்த, கைலாசத்தின் கைகளை பலமாகப் பற்றியபடி அவனை தரதரவென வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் பஞ்சவர்ணம். அவன் சட்டையில் பதிந்திருந்த குருதியைத் துடைக்க முயன்றுகொண்டிருந்தவள் பிறகு அவன் உடல் கிடுகிடுவென நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு விரைந்தோடி ஒரு குவளை நிறைய நீர் எடுத்து வந்தாள். வெறிகொண்ட மிருகத்தைப்போல் வெடுக்கென பாய்ந்தெழுந்த கைலாசம் பஞ்சவர்ணத்தை ஓங்கித் தள்ளி, இருகைகளையும் அவள் தொண்டைமேல் பதித்து உக்கிரமாய் அழுத்தத் துவங்கினான். அவன் முகத்தில் வெளிப்பட்ட கொலைவெறியைக் கண்ட பஞ்சவர்ணம் ஓரவிழியால் தனது கணவனை நோக்கினாள். அஞ்சிய ஆட்டுக்குட்டியைப்போல் அசையாமல் நின்று அனைத்தையும் நோக்கிக்கொண்டிருந்தார் சிதம்பரநாதன். கன்னத்தசைகள் அவ்வப்போது துடித்தடங்க, தொண்டையின் உருண்டை ஏறி இறங்கியபடியே இருந்தது. அவர் விழியிரண்டிலும் உயிரற்ற சிற்பமொன்றின் வெறிப்புநிலை கூடியிருந்தது. அன்பும், குறுகுறுப்பும், ஐயமும், அகங்காரமும், ஆத்திரமும் மட்டுமே தோன்றும் அம்மாவின் விழிகளில் முதன்முதலாக ஒருவித மன்றாட்டுத் தெரிவதைக் கண்டான் கைலாசம். அவனையும் அறியாமல் அவன் பிடி தளர்ந்தது. இடப்புறம் திரும்பி அப்பாவைப் பார்த்தான். உடன் வாழ்ந்த பெண் மூச்சுவிட முடியாமல் தவிப்பதை, தன்னைவிட வயதில் இளையவனான ஒருவன் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொலை செய்துகொண்டிருப்பதை இமைகொட்டாமல் நோக்கிக் கொண்டிருந்த மனிதரைக் கண்டபோது ஒரே ஒருகணம் தனது கைகளினுள் அகப்பட்டுக் கிடக்கும் பெண்ணின் மேல் பெருங்கருணையும், அப்பா என்று நிற்கும் அந்தப் பிறவியின்மேல் அளவு கடந்த ஆத்திரமும் பொங்கியது.
ஆனால் மறுமூச்சில் தனது நாசியினுள் நுழைந்த சதைக் கருகும் கெடுமணம் அந்த உணர்வுநிலையை நொடிப்பொழுதில் குலைத்துப்போட்டது. அம்மாவின் கழுத்திலிருந்து கைகளை விலக்கிக்கொண்டவன் பிறழ்வுக்குள்ளானவனைப்போல் சுற்றிமுற்றி நோக்கினான். மறுமுறை சுவாசித்தபோது அனைத்தும் நினைவில் மீள தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு உச்சக்குரலில் ஓங்கரித்தபடி வீட்டைவிட்டு வெளியேறினான்.
கையிலும் கழுத்திலும் கிடந்த தங்கத்தையெல்லாம் விற்று இரண்டு நாட்களுக்குக் குடித்துத் தீர்த்துவிட்டு வீடு திரும்பியபோதுதான் அந்தச் சம்பவம் நடந்த அன்றே பஞ்சவர்ணம் இல்லம் நீங்கிவிட்டது தெரியவந்தது. கூடத்தில் நாற்காலியைப் போட்டுகொண்டு உருகுலைந்தவராய் அமர்ந்திருந்த தந்தையிடம் நடந்ததென்ன என்று விசாரித்தான் கைலாசம்.
“நீ போனதும் கொஞ்ச நேரம் அப்படியே உக்காந்திருந்தா… எதுவும் பேசல… அப்பறம் கடகடன்னு எழுந்து வாசல் பக்கம் போனா… பத்து நிமிசம் ஆகியும் சத்தமில்லையேன்னு போய் பாத்தப்ப படிகிட்ட நின்னுட்டு உள்ள, என்னையே பாத்துட்டு இருந்தா… அப்பறம் கையில இருந்த வளையலையெல்லாம் கையாலையே தட்டித் தட்டி உடைச்சு சுக்குநூறாக்கிட்டு மேற்கால நடந்து போயிட்டா” என்றார் சிதம்பரநாதன்.
கசக்கி வீசப்பட்டக் கந்தல்துணியைப்போல் கிடந்த அவரைக் கண்டபோது கைலாசத்திற்கு தொண்டைக் கவ்வியது. வேகமாய் மூச்செடுத்தபோது காற்றில் நீடித்த பிணவாடை குமட்டலெழுப்பியது. இனி ஒருகணம்கூட தன்னால் இவ்விடத்தில் வாழமுடியாது எனும் முடிவை எட்டியவன் விடுவிடுவென வாசலைப் பார்த்து நடந்தான். அங்கே தரையில் மண்ணோடு மண்ணாய் கிடந்த சிவப்புநிற வளையல் துண்டு அவனை அந்த இடத்திலேயே உறையச்செய்தது. அன்று நடுச்சாமத்தில் எதிர்கரையில் தென்பட்ட பெண் உருவம் ஒரு புகைபோல் சித்தப்பரப்பெங்கும் மிதந்து விரிவதை உணர்ந்தான். சுழலொன்றில் சிக்கியதைப்போல் உள்ளம் ஒருகணம் தவித்துப்போக, அந்த வளையல் துண்டை மண்ணோடு சேர்த்து அள்ளி எதிர்புறம் இருந்த கோவில் சுவரைநோக்கி வீசிவிட்டு நடையைக்கட்டினான்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
