நுழைவை ஒட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களையும், அவர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்த கிறிஸ்துமஸ் தாத்தாவையும் கடந்து அந்த உணவகத்தினுள் அடியெடுத்து வைத்தார் கற்பகவேல். முற்றத்தில் பாவப்பட்டிருந்த செயற்கைப்புல் பரப்பில் அவரது கால்கள் திடமாய் ஊன்றிக்கொண்டன. பளிச்சிடும் வண்ணங்கள் எட்டுத்திக்கிலும் சூழ்ந்திருக்கக, எங்கோ புதையுண்டிருந்த ஒலிபெருக்கியிலிருந்து பாப் இசைப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. கேக்குகள், பிரெட் வகைகள் உட்பட பல மேற்கத்திய உணவு பதார்த்தங்கள் சமைக்கப்படும் மணம் சிறிய நிலைகுலைவை உண்டுபண்ணியது.
கையிலிருந்த குடையை இறுக்கமாக பற்றியபடி இடதுபக்கம் திரும்பினார்.
அங்கே மூலையில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில்தான் ஒருகாலத்தில் அவர் வளர்த்த நாயான ராஜா படுத்திருக்கும். இளித்தவாயுடன், “யூஸ் மீ” என்கிற அட்சரங்களை நெஞ்சில் ஏந்தி நிற்கும் குரங்குபொம்மை அப்போது கழநீர் தொட்டியாக இருந்தது. அன்றைய ‘ஸ்பெஷல்’ குறித்த விவரங்களுடன் நிற்கும் பலகையின் இடத்தில் ரம்மியமானதோர் கற்திண்ணை இருந்தது. இமைகளை மூடிக்கொண்டபோது அத்திண்ணையின் குளுமையையும், அதன் நினைவுகள் தரும் கதகதப்பையும் ஒருசேர உணரமுடிந்தது.
நெற்றிச் சுருக்கங்கள் ஆழம்பெற, வியர்த்திருந்த கையால் வெண்தாடியை வருடிக்கொடுத்தார் கற்பகவேல்.
சிரித்த முகத்துடன் உள்ளிருந்து வந்த இளைஞன், “சார், ப்ளீஸ் கம்மின்!” என்று அவரை வரவேற்றான்.
கற்பகவேல் அசிரத்தையுடன் குடையை கைமாற்றிக்கொண்டு நெடுமூச்செறிந்தார். அப்போது வாசல் பக்கம், “டப்!” என்று ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டது. திடுக்குற்றுத் திரும்பியபோது கிறிஸ்துமஸ் தாத்தாவைச் சுற்றி நின்ற சிறுவர்கள் எதற்கோ பலமாக கைதட்டிச் சிரித்தனர்.
கற்பகவேல் அவர்களை உற்று நோக்கினார். பின்னர் வெளிப்புறம் நின்றுகொண்டிருக்கும் தனது மனைவியை ஒருபார்வைப் பார்த்துவிட்டு தலைகுனிந்தார். பொதிகை நகரில் அவர்கள் வசிக்கும் சிறிய வாடகை வீட்டிலிருந்து இருவரும் ஒன்றாகத்தான் புறப்பட்டிருந்தார்கள். ஆனால் வழக்கம்போல் தெருக்கோடியைத் தாண்டும் முன்பே விடுவிடுவென விலகி தன்னந்தனியாக நடக்கத் துவங்கியிருந்தார் அவர். ஒரே கூரையின் கீழ் குடும்பம் நடத்தியபோதிலும் அவர்களுக்கிடையே கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தை இருக்கவில்லை.
கிறிஸ்துமஸ் தாத்தா தனது அங்கியினுள் வைத்திருந்த மற்றொரு பலூனை எடுத்து ஊதத் துவங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து அவர் முகத்தையே மறைத்துவிடும் அளவிற்கு அது வீங்கியதும், அருகே நின்ற தடித்த சிறுவன் அதைக் கிள்ளி வெடிக்கச் செய்தான்.
மீண்டும் கரகோஷம்.

இளைஞன் “சார், உள்ள இடம் இருக்கு… வரீங்களா? இல்ல இங்கேயே ஒகே தானா?” என்று அக்கறையுடன் வினவினான்.
விலகி நடந்து, கிறிஸ்துமஸ் மரத்தை ஒட்டினாற்போல் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டார் கற்பகவேல்.
இளைஞன் அவரை அணுகி, “ஆர்டர், சார்?” என்று பணிவுடன் கேட்டான்.
கற்பகவேல் தனது புறங்கையால் டேபிளில் இருந்த தூசியை அகற்றினார். அப்போது வெளியில் நின்றுகொண்டிருந்த அவரது மனைவி சாந்தி, உள்ளே வந்து அவருக்கு எதிர்த்தாற்போல் அமர்ந்துகொண்டாள்.
கையில் சிறிய காகிதத்துடன் நின்றுகொண்டிருந்த இளைஞன் ஒருகணம் திகைத்து பின் நிலைபெற்று, “சாரி மேம்… வெல்கம்!” என்றான்.
சாந்தி புன்னகை மட்டும் செய்தாள்.
மூங்கில் நாற்காலியில் சாய்ந்து, சொகுசாக அமர்ந்துகொண்ட கற்பகவேல் மேசைமேல் கிடத்தப்பட்டிருந்த வண்ணமயமான மெனுகார்டை எடுத்து, அசட்டையாக ஒரு உதறு உதறி, எழுத்துக்களின் மீது விழியோட்டினார். பிறகு குறிப்பிட்ட ஒரு உணவை விரலால் சுட்டிக்காட்டியபடி அந்த இளைஞனை வெறித்துப் பார்த்தார்.
“ராமென் சார்… இட்ஸ் அவர் பெஸ்ட் டிஷ்… ராமென் ஒகே?”
கற்பகவேல், “ம்” என்று சொல்லியபடி மெனுகார்டை எதிர்பக்கம் தள்ளினார்.
மூக்குக்கண்ணாடியை சற்று கீழிறக்கிக்கொண்டு இரண்டொரு நொடிகளுக்கு அதைப் படித்த சாந்தி, “எனக்கும் அதுவே சொல்லிடுங்க” என்று இளைஞனிடம் தெரிவித்தாள்.
மேசையில் இருந்த கண்ணாடிக் குவளையில் தனக்கு மட்டும் நீர் ஊற்றிக்கொண்டு இரண்டு மடக்கு குடித்தார் கற்பகவேல்.
அங்கும் இங்குமென நில்லாமல் அலைபாய்ந்த அவர் கண்களில் ஏதோ சஞ்சலம் கூடியிருப்பதை கவனித்தாள் சாந்தி. கடவாய் பற்கள் இருந்த இடத்தில் உருவாகியிருந்த வெற்றிடத்தை நாக்கினால் துழாவுவதால் அவரது கன்னத்தசை வினோதமாக அசைந்துகொண்டிருந்தது. டிசம்பர் மாதத்து குளிரும், நெற்றியை நிறைத்திருந்த திருநீறு பட்டையில் வியர்வைக்கோடுகள் செங்குத்தாக இறங்கிக்கொண்டிருந்தன. ஒருவாரகாலமாய் அவரை வாட்டியெடுத்த விஷக்காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாய் அகல்வதை அது நிரூபணம் செய்தாலும் மனக்கிடங்கினுள் ஏதோ தகிப்பதை அவளால் நுகரமுடிந்தது. உள்ளங்கையில் மோவாயை ஊன்றியவாறு கீழே நோக்கியபோது இடக்கால் செருப்பைக் கழற்றிவிட்டு, கட்டைவிரலால் தரையை நீவிக்கொண்டிருந்தார் அவர். பிளந்திருந்த அதன் நகத்தின் மீது வெண்ணிறக் களிம்பு பூசப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு முதுகுவலி பொறுக்காமல் மெத்தையில் உருண்டவண்ணம் இருந்தார் அவர். காய்ச்சலும் உச்சத்தில் இருந்தது. இரண்டு முறை வெந்நீர் வைத்துக்கொடுத்தாள். பிறகு வலிக்கென இருந்த தைலத்தை எடுத்து மெத்தையோர மேசைமேல் வைத்துவிட்டு அவரது ஒப்புதலுக்காக காத்திருந்தாள். ஆனால் மோட்டுவளையைக் குரூரமாய் பார்த்தபடி அவர் பற்களைக் கடித்ததும் விலகிச் சென்று கட்டிலின் மறு ஓரத்தில் படுத்துகொண்டாள். நள்ளிரவிற்கு மேல் லேசாய் கண்ணயர்ந்தவர், உறக்கத்தில் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்திருந்தார். உதவச் சென்றால் கடிந்துகொள்வார் என்பதை அறிந்திருந்த சாந்திக்கு, எவ்வித சலனத்தையும் வெளிக்காட்டாமல் படுத்திருக்க மிகுந்த மனோபலம் தேவைப்பட்டது. அகப்பட்ட ஒவ்வொன்றையும் பற்றி, நிமிர்ந்து மீண்டும் அவர் மெத்தையில் சரிந்தபோது வேதனையில் துடித்தார். வலி தணிந்தபிறகும் எதற்கோ உச்சுக்கொட்டிக்கொண்டே இருந்தார். பிறகு மிகவும் பலவீனமான குரலில் எதையோ முனங்கிவிட்டு அமைதியானார்.
வாசல்பக்கம் நின்றிருந்த குழந்தைகளில் சிலர் கிளம்பியிருந்ததால் அந்த இடத்தை நிரப்பிய இரைச்சல் கணிசமான அளவு குறைந்திருந்தது. கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் தரித்திருந்தவன், முகமூடியைக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு, உள்ளங்கையினுள் ரகசியமாக பொத்திவைத்திருந்த பீடியை இருமுறை இழுத்துவிட்டு மீண்டும் முகமூடியை அணிந்துகொண்டான்.
கற்பகவேல் அதைப் பார்த்தபடி எழுந்துகொண்டு கைகழுவச் சென்றார்.
அவர் திரும்பிவந்தபோது தனது மேசையின் மீது ஆவி பறக்கும் பதார்த்தங்களை வைத்துவிட்டுச் சென்றிருந்தான் இளைஞன். மஞ்சள் நீரில் மிதந்துகொண்டிருந்த அந்த நூடுல்ஸ் வகைக்கு, புளித்த தக்காளி, பச்சிலை மற்றும் பாலாடையின் மணம் இருந்தது.
சாந்திக்கும் அவ்வுணவு உவக்கவில்லை என்பதை அவளது முகபாவமே உணர்த்தியது.
மிருதுவான துணி விரிப்பின் மீது வைக்கப்பட்டிருந்த கரண்டியை எடுத்துக்கொண்டு செய்வதறியாமல் விழித்தார் கற்பகவேல். பளபளவென இருந்த அதன் வளைந்த பரப்பில் பிரதிபலித்த அவரது முகம் விகாரத்தோற்றம் பெற்றிருந்தது. ஒருநொடி அவர் முகம் வெளிறி, பார்வை மங்கியது. பிறகு அங்கே வந்தமைக்கான பொருளை புறத்தில் தேடுபவரைப்போல் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, நாற்காலியை மேசையை ஒட்டி இழுத்துக்கொண்டு உணவைநோக்கி குனிந்தார்.
மாலை நடைப்பயிற்சிக்கு கிளம்பியபோது இங்கே வந்து, இப்படி முறுக்கிக்கொண்டு அமர்ந்திருக்கவேண்டும் என்று அவர் உத்தேசித்திருக்கவில்லை. தனது மூர்க்கங்களின் சின்னமாய் மாறிவிட்டிருந்த இச்சாலையை ஏறெடுத்து நோக்குவதைக்கூட பலகாலமாக தவிர்த்தே வந்திருந்தார். ஆனால் எப்படியோ தொற்றிக்கொண்ட விஷக்காய்ச்சல் அவரின் அடிநாக்கிலும், நெஞ்சிலும் ஒருவித கசப்பை வித்திட்டிருந்தது. உடல் கொஞ்சம் தெளிந்ததும் தளைகள் அனைத்தையும் உதறிவிட்டு வெளியே கிளம்பி, இயல்பைவிட வேகமாக நடக்க முயன்றார். உடல் ஒத்துழைக்க மறுத்தபோது எதிர்ப்படும் அனைவரையும் முறைக்க ஆரம்பித்தார். மூன்றாம் குறுக்குத்தெருவைக் கடந்து பிரதான சாலையில் நுழைந்ததும் தற்போக்கில் இயங்கத் துவங்கியிருந்த கால்கள் அவரை இங்கு அழைத்து வந்திருந்தன.
மரங்கள் மற்றும் புதர்கள் செறிந்திருக்கும் சாலை தற்போது மினுமினுக்கும் கடைத்தெருவாய் அவதரித்திருந்தது அவரை ஒருகணம் திகைப்புறச் செய்திருந்தது. வழக்கமாய் அங்கே திரியும் மாடுகளும், நாய்களும் முற்றிலுமாக ஒழிந்திருந்தன. ஒருசில வருடங்களில் ஒரு பகுதி அத்தனை மாற்றம் அடையுமா என்று வியப்பாக இருந்தது. மறுநொடி இனம்புரியாத ஒரு சோர்வு அவர் எலும்புகள் அனைத்திலும் படர்ந்தது. அடியெடுத்து வைக்கவே சிரமமாக இருந்தது. ஒருவித வீம்புடன் முன்னேறி, ஒருகாலத்தில் அவர் இல்லம் நின்ற இடத்தை எட்டுவதற்குள் ஏதோ மலை ஏறியதைப்போல் அவருக்கு மூச்சுவாங்கத் தொடங்கியிருந்தது. ஈக்களைப்போல அந்த இடத்தை மொய்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைக் கண்டபோது கையிலிருந்த குடை ஒருகணம் பிடிநழுவி கீழே விழப்போனது. பதற்றத்துடன் அதைப் பிடித்து உடலோடு இறுக்கிக்கொண்டார். பிறகு ஏதோ துர்நெடியை முகர்ந்துவிட்டதைப்போல் இதழ்களைச் சுழித்துக்கொண்டு அந்த உணவகத்தை நோக்கி எட்டுவைத்தார்.
உணவின் காரத்தை பொருட்படுத்தாமல் வேகவேகமாக சாப்பிட்டுக்கொண்டிருந்த தனது கணவனை அதிர்ச்சியுடன் நோக்கிய சாந்தி, கண்ணாடிக் குவளையை பட்டென்று மேசைமேல் வைத்து அதில் நீரூற்றினாள். திடுமென கிளம்பும் ஓசை அவரை சற்று திசைமாற்றும் என்ற அவளது கணக்கு சரியாகவே இருந்தது.
சாப்பிட்டுக்கொண்டிருந்த கரண்டியை ஓரமாக வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அவரது கண்கள் கலங்கியிருந்தன. உதடுகளும், நுனிநாக்கும் சிவந்து காணப்பட்டது. ஓரிரு நொடிகளுக்கு உணவகத்தின் நுழைவை விட்டேற்றியாக பார்த்தார். காற்றில் மிதந்து வந்த பலூன் ஒன்று அவர் பாதத்தை உரசியது. அதை எட்டி உதைத்துவிட்டு தொலைவில் வாடிக்கையாளர்களை உபசரித்துக்கொண்டிருந்த இளைஞனைக் கைதட்டி அழைத்தார்.
அங்கிருந்தபடியே திரும்பியவன், “ஒரு நிமிடம்” என்று சைகை காண்பித்தான்.
கற்பகவேல் அத்திசையையே நோக்கிக்கொண்டிருந்தார்.
அந்த முகபாவத்தில் இருந்த ஏதோ ஒன்றை விளங்கிக்கொண்ட சாந்தி ஆழமாய் மூச்செடுத்து, கைக்குட்டையால் வாயைத் துடைத்துக்கொண்டாள்.
இளைஞன், “எஸ் சார்” என்றபடி அருகே வந்தான்.
கற்பகவேல் அவனை இளக்காரமாக பார்த்தார். நரைத்திருந்த அவரது மீசையில், இரண்டொரு இடங்களில் உணவின் துணுக்குகள் ஒட்டியிருந்தன.
இளைஞன், “வேற எதுவும் வேணுமா? இனிப்பு… அந்த மாதிரி ஏதாவது?” என்றான்.
கற்பகவேல், “ம்?” என்றார்.
தன்னையே உற்று நோக்கும் அந்த விழிகளால் கொஞ்சம் நிலையிழந்த இளைஞன் வேகமாக தன்னை இயல்பாக்கிக்கொண்டு, “டெசர்ட் சார்… கேக் வெரைட்டி எக்கச்சக்கமா இருக்கு, ட்ரை பண்றீங்களா?” என்றான்.
அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டு புறங்கழுத்தை வருடத்துவங்கியிருந்தார் அவர். பிறகு வெடுக்கென நிமிர்ந்து, “லொக்காலிட்டில புதுசா ஓபன் பண்ணியிருந்தனால ட்ரை பண்ணலாம்னு வந்தேன்… ஆனா சர்வீஸ், ஃபுட் குவாலிட்டி… தெரியல… ஐயம் ஹியுஜ்லி டிசப்பாய்ண்ட்டட்!” என்றார்.
இளைஞன் “ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி, சார்… உங்க க்ரீவன்ஸ் என்னன்னு நீங்க என்கிட்ட ஓப்பனா சொல்லலாம்… என்னால என்ன முடியுமோ அத நிச்சயமா பண்றேன்” என்றான். அவன் தொனியிலும், உடல் மொழியிலும் இதுபோன்ற சூழலை எண்ணற்றமுறை கையாண்டிருந்தவனின் நிபுணத்துவம் தெரிந்தது.
அதை அங்கீகரிக்க மறுப்பவரின் பாவனையை தனது முகமெங்கும் படரச்செய்தார் கற்பகவேல்.
சேலைத் தலைப்பை தோளைச் சுற்றி போட்டுக்கொண்ட சாந்தி, அந்த உரையாடலில் பங்குகொள்ள விரும்பாதவளைப்போல் வேறுபக்கம் பார்த்தாள்.
அங்கே நிலவிய மௌனத்தை வேண்டுமென்றே நீட்டித்தார் கற்பகவேல். பின்னர் ஒருமுறை செருமிவிட்டு, “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
“பிறந்த இடம் மதுரை. ஆனால் படித்ததெல்லாம் இங்கேதான்” என்று அவனும் ஆங்கிலத்தில் சொன்னான்.
“ஓ! எந்த கல்லூரி?”
அவன் ஒரு கல்லூரியின் பெயரைச் சொன்னான். பதிலுக்கு கற்பகவேல் அங்கே பணிபுரியும் ஒரு ஆசிரியரின் பெயரைச் சொல்லி அவரைத் தெரியுமா என்று வினவினார். அவன் தெரியாது என்றான்.
“ம்… நான் இயற்பியலில் முனைவர் பட்டம் வென்றவன்… நான் குறிப்பிட்ட அந்த ஆசிரியர் என் மாணவன்தான், மிகவும் திறமைவாய்ந்தவன்… அவனை நீ அறிந்திருக்காதது எனக்கு வியப்பை தருகிறது”
“மன்னிக்கவும்… அது மிகப்பெரிய பல்கலைக்கழகம்… மேலும் நான் பயின்ற துறை அப்போது பெரிதாய் பிரசித்தி பெற்றிருக்கவில்லை… மாணவர் சேர்க்கையும் குறைவு… அதன் காரணமாக, கல்லூரியின் மையச் செயல்பாடுகள் பலவற்றிலிருந்து நாங்கள் ஒதுங்கியிருக்கும் நிலையே பெரும்பாலும் இருந்தது…”
“…”
“உங்கள் புகாரைப் பற்றி பேசுகிறீர்களா?”
“…”
“எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்… நிவர்த்தி செய்கிறேன்… உங்கள் நிறைவு எங்களுக்கு மிகவும் முக்கியம்”
“…”
“சார்”
“உன் முதலாளியிடம் நான் பேசலாமா?”
“சார், அது…”
“பேச முடியாதா?”
“இல்லை, நீங்கள் என்னிடமே சொல்லலாம்… இதுபோன்ற சிக்கல்களை நிவர்த்திசெய்வதே எனது முதன்மை பணி…”
“நீ முதலாளியா?”
“இல்லை…”
“தரம் எனக்கு மிகவும் அவசியம்… பணிசெய்த காலத்திலும் சரி, பொது வாழ்விலும் சரி, தரத்தில் நான் சமரசம் செய்துகொண்டதேயில்லை… இங்கே நான் நடத்தப்படும் விதம் எனக்கு வேதனையை அளிக்கிறது”
“மன்னிக்கவும்”
“நான் உன் முதலாளியிடம் பேச வேண்டும்”
“நீங்கள் என்னிடம் வெளிப்படையாக பேசலாம்… முதலாளி என் நண்பன் தான்”
“என்ன? ஜெபராஜ் உன் நண்பனா?”
“இல்லை… அவர் மகன் ரூபனும் நானும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம்…”
“ஓ”
“…”
“ஜெபராஜ் எனக்கு தெரிந்தவன் தான்…” என்று அறிவித்த கற்பகவேல், அவன் முகத்தை எதிர்கொள்ளத் தயங்குபவராக தலையைத் தாழ்த்திக்கொண்டார்.
இளைஞன், “ஓ… மன்னிக்கவும்… நான் அதை அறிந்திருக்கவில்லை” என்றான். ஆனால் அத்தகவல் அவனை சற்றும் அசைக்கவில்லை என்பதை அவன் உடலின் தளர்ச்சி காட்டியது. முதலாளியைத் தெரியும் என்று சொல்லிக்கொண்டு வருபவர்களை ஐயத்துடன் எதிர்கொள்வதே அனுபவம் அவனுக்கு கற்றுக்கொடுத்திருந்த பாடம்.
கற்பகவேல் எதுவும் பேசாமல் எதிரே இருந்த உணவையே வெறித்துக்கொண்டிருந்தார். பிறகு லேசாக நிமிர்ந்து சாந்தியைப் பார்த்தார். விரல்களைக் கோர்த்து, இமைகளைத் தாழ்த்தி ஏதோ சிலைபோல் அமர்ந்திருந்த அவளிடம் எவ்வித சலனமும் தெரியவில்லை.
இளைஞன், “நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், கொஞ்சம் பொறுத்திருங்கள், நான் இதோ திரும்பி விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு பணிவுடன் கடைக்குள் சென்றான். அங்கே பில்லிங் கவுண்ட்டரில் அமர்ந்திருந்த நபரின் காதில் ஏதோ சொல்லிவிட்டு, மீண்டும் வெளியே வந்து, கடைக்குள் அக்கணம் நுழைந்த இரண்டு வாடிக்கையாளர்களை இனிமையுடன் வரவேற்று அமரச்செய்துவிட்டு மீண்டும் கற்பகவேல் பக்கம் வந்தான்.
“நடந்தவற்றிற்காக மீண்டும் உங்களிடம் மன்னனிப்பு கோருகிறேன்… நீங்கள் ஆட்சேபிக்கவில்லை என்றால் நீங்கள் உண்டதிற்கான ரசீதை எடுத்துவரலாமா?”
சாந்தியின் உயிரற்ற முகத்தையே நோக்கிக்கொண்டிருந்த கற்பகவேல் ஒருவித சீற்றத்துடன் திரும்பி, “தம்பி, முதலாளிட்ட பேசணுமுன்னு சொன்னேனே” என்றார்.
“சாரி சார்… அவர் இப்ப இல்ல… ஊர்லயே இல்ல”
“ஓ!”
இளைஞன் ஆங்கிலத்தில் தொடர்ந்தான்.
“எங்கள் சேவை மற்றும் தரம் உங்களுக்கு உவக்கவில்லை என்பதால் இம்முறை நீங்கள் பாதி விலை மட்டும் செலுத்தினால் போதும்… மறுமுறை இதுபோன்ற பிழை நடக்காமல் இருக்க கவனம் எடுத்துக்கொள்கிறோம்”
பற்களைக் கடித்தபடிச் சிரித்த கற்பகவேல் தொடர்ச்சியாக சில முறை இருமினார். பிறகு குவளையில் இருந்த நீரை மடமடவென குடித்துவிட்டு, “தம்பி, இந்த நிலம் என்னோடது… தெரியுமா உங்களுக்கு?” என்றார்.
இளைஞன் அவரை நேராக நோக்கினான். இந்த இடம் அவருடையது என்றும், இதை மிகவும் மலிவான விலைக்கு ஜெபராஜ் வாங்கியதையும், அத்தனை மலிவாக அதை விற்கும் நிலையை அவர் எட்டியதற்கு காரணமான அவரது அசட்டையான போக்கைப் பற்றியும் கேஷியர் பார்வதிநாதன் சற்றுமுன் அவனிடம் விளக்கியிருந்தார். இறுதியாக, “கிராக்கிபுடிச்ச ஆளு… இருக்கற நெலமைல இந்த கிறுக்கன இப்படி உக்காத்திவச்சு, இந்த கதையெல்லாம் பேசவிட்டு வேடிக்க பாத்தது தெரிஞ்சாலே ஜெபா அண்ணன் டென்சன் ஆவும்… சட்டுபுட்டுன்னு பேசி அனுப்பிவிடு தம்பி!” என்று சொல்லி அனுப்பியிருந்தார் அவர்.
மீண்டும் அந்த இளைஞனிடம், “ஜெபராஜுக்கு என்ன தெரியும்… நான்தான் இந்த இடத்த அவனுக்கு வித்தேன்” என்றார் கற்பகவேல். முகத்தில் ஒருவித வறட்டுத்தனம் இருந்தாலும், குரல் மட்டும் லேசாய் கம்மியதைப்போல் இருந்தது. ஆனால் அடுத்த வினாடியே தன்னை மீட்டெடுத்துக்கொண்டவர் திடீரென உச்சக்குரல் எடுத்து உணவின் தரத்தைப் பற்றியும், இத்தனை இழிவான பதார்தத்திற்கு அவர்கள் நிர்ணயித்திருக்கும் அநியாய விலையைப் பற்றியும் புலம்ப ஆரம்பித்தார்.
இளைஞன் சற்றும் சளைக்காமல் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் பிற வாடிக்கையாளர்கள் அந்த சச்சரவின் மீது அதீத கவனம் செலுத்த ஆரம்பித்தபோது அவன் உடம்பில் கொஞ்சம் இறுக்கம் குடியேறியது. சத்தமாக உச்சுக்கொட்டிவிட்டு, “சார், ப்ளீஸ்… ஐ அம் ரியலி சாரி…” என்றான்.
கற்பகவேல் அவனை முறைத்தார். பிறகு போலியான பணிவு மற்றும் பகட்டான ஆங்கிலத்தைக் கொண்டு சாமானியர்களை மோசம் செய்வதாக அவனை நேரடியாக குற்றம் சாட்டினார்.
சாந்தி சட்டென நிமிர்ந்தாள். முகத்தில் அப்போதுவரை குடிகொண்டிருந்த அசிரத்தை லேசாய் தணிவதைபோல் இருந்தது. கைகட்டி நின்றுகொண்டிருந்த இளைஞன் அவள் பக்கம் திரும்பி இதழோரச் சிரிப்பொன்றை உகுத்தான். அதில் வெளிப்பட்ட எள்ளல் அவளைச் சுருக்கென தைத்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தாள். பிறகு தலையை மட்டும் அசைத்துவிட்டு எழுந்து கைகழுவும் இடம் நோக்கிச் சென்றாள். பின்னிருந்து தன்னை கற்பகவேல் நோக்குவதை அவளால் நுகரமுடிந்தது. அது அவளை என்னமோ செய்தது.
உணவகத்தின் பக்கவாட்டில் சின்னதாய் பாதைபோன்ற அமைப்பு விடப்பட்டிருந்தது. அதில் சிறிய அறை ஒன்றை அமைத்து, அழகாக வண்ணம்பூசி, குழாயும், தொட்டியும், சுத்தமாக துடைக்கப்பட்டிருந்த செவ்வகக் கண்ணாடியும் நிறுவியிருந்தனர். வலப்பக்கம் இருந்த கழிவறைக் கதவில் தீட்டப்பட்டிருந்த புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த ஜோடி மான்களில் ஒன்று அவளை பரிதாபமாக நோக்கிக்கொண்டிருந்தது.
சாந்தி அதன் முகத்தின் மீது உள்ளங்கையைப் பதித்து கதவைத் தள்ளினாள். ஏனோ அவள் இமைகள் இரண்டும் தன்போக்கில் மூடிக்கொண்டன.
மெல்லிய நடுக்கத்துடன் இமைகளைத் திறந்தபோது அங்கே பழைய வீட்டின் மச்சுப்படி தெரிந்தது. அதன் மூன்றாம் படியில் நிலைத்திருந்த இரு பாதங்கள், அவைச் சூடியிருந்த ஐம்பொன் கொலுசுகள், அப்பாதங்களின் இடையே சொட்டி தேங்கியிருந்த இளங்குருதி என அனைத்தும் ஒருகணம் துலக்கம் பெற்றன.
சாந்தி குழாயை வேகமாகத் திறந்துவிட்டாள். கடும் இரைச்சலுடன் சீறிப்பாய்ந்த நீர், பீங்கான் தொட்டியில் பட்டுத் தெறித்து புடவையை நனைத்தது. கைகழுவி, விரல்நுனி ஈரத்தால் இதழை ஒத்தி எடுத்தபிறகு எதிரே இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தாள். பிறகு கைப்பையில் இருந்து போனை எடுத்து மகள் ஆனந்தியின் எண்ணிற்கு அழைத்துவிட்டு, எவ்வித உணர்ச்சியுமின்றி காத்திருந்தாள். அழைப்பு மறுக்கப்பட்டதும் மீண்டும் அதே உறைந்த முகபாவத்துடன் முகப்புப்பக்கத்தில் வைத்திருந்த மகளின் சிறுவயது புகைப்படத்தை நோக்கிவிட்டு போனை மீண்டும் பையினுள் புதைத்தாள்.
அவள் திரும்பிவந்தபோது உணவகத்தின் வாசலில் தோரணம்போல் கட்டப்பட்டிருந்த பலூன்களில் சில உதிர்ந்து முற்றம் நெடுக இறைந்துகிடந்தன. அவர்களது மேசையை ஒரு பெண்மணி துடைத்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்த கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே இருந்த நாற்காலியில் கற்பகவேல் கொண்டுவந்த குடை மட்டும் இருந்தது. அவர் இருக்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சாலை விபத்தின் விளைவாக கொஞ்ச காலத்திற்கு ஊன்றுகோல் பயன்படுத்தும் சூழல் உண்டானதுமே அவர் தெரிவுசெய்திருந்தது இந்தக் குடையைத்தான். மருத்துவமனை பரிந்துரைத்ததையும், மகள் பெற்றுத்தந்த சற்றே நவீனமான கைத்தடியையும் ஏந்துவதற்கு அவர் விரும்பவில்லை. ஊரில் பெரிய மிராசுதாராக திகழ்ந்த அவரது தாத்தா பயன்படுத்தியது என திருமணமான புதிதில் எள்ளலும், துளிச் செருக்கும் கலந்த தொனியில் கற்பகவேல் சொன்னதை அப்போது நினைவுகூர்ந்தாள் சாந்தி.
வெளியில் கேட்ட வாகனங்களின் அரவமும், சுற்றியிருந்தவர்கள் எழுப்பிய பேச்சு மற்றும் சிரிப்புச் சத்தமும் வெறுமையைக் கிளர்த்துவதாக இருந்தது. நாற்காலியில் இருந்த குடையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு அமர்ந்துகொண்டாள்.
தூரத்தில் இருந்து அதை கவனித்த இளைஞன் ஒருவித பதற்றத்துடன் அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான். பிறகு புருவத்தை விரலால் வருடியபடி திரும்பி கேஷியர் பார்வதிநாதனை நோக்கினான்.
அவன் முகபாவத்தைப் புரிந்துகொண்ட அவர் அங்கிருந்தபடியே எழுந்து நின்று சாந்தியை பார்த்துவிட்டு, “போகட்டும்” என்பதைப்போல் ஜாடை காண்பித்துவிட்டு மீண்டும் அமர்ந்துகொண்டார்.
இளைஞன் நெடுமூச்செறிந்தான். பிறகு மெதுவாய் நடந்து சாந்தியை அணுகினான்.
அவள் அவனை நோக்கியதாகவே தெரியவில்லை. “மேடம்…” என்று அவன் அழைத்தபோது ஒருகணம் நடுங்கினாள்.
இளைஞன், “ஐ அம் சாரி” என்றான், அடிக்குரலில்.
சாந்திக்கு எதுவும் புரியவில்லை. ஹீனமான குரலில், “அவர்?” என்று மட்டும் கேட்டாள்.
“அவர்… அவர் கிளம்பிட்டாரு மேடம்” என்ற இளைஞன் மீண்டும் ஒருமுறை பார்வதிநாதன் பக்கம் திரும்பினான். அவர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
சாந்திக்கு உடனடியாக வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை. கொஞ்சம் தனிமை அவசியப்பட்டது. அருகில் நெளிந்தபடி நின்றுகொண்டிருந்த இளைஞனிடம், “தம்பி, காபி, டீ எதுவும் உண்டா?” என்று வினவினாள்.
அதை எதிர்பார்த்திராத இளைஞன் இரண்டொரு நொடிகளுக்கு மலங்க மலங்க விழித்தான். பிறகு குரலை சரிசெய்துகொண்டு, “இல்ல… இல்ல மேடம்… சாரி… கோல்ட் காஃபி இருக்கு” என்றான்.
சாந்தி, “சரி, கொண்டு வாங்க” என்றாள்.
இளைஞன் வியப்புடன் அகன்றான்.
சாந்தி தீவிரமான முகபாவத்துடன் சில நொடிகள் அமர்ந்திருந்தாள். பிறகு கைப்பையில் இருந்து செல்போனை எடுத்து முகநூலைத் திறந்தாள்.
இரண்டொரு குற்றச் செய்திகள், அனுபவக் குறிப்புக்கள் மற்றும் அரசியல் கட்டுரைகளை அசிரத்தையுடன் கடந்து கீழே வந்தபோது கும்பகோணம் அத்தையின் மகள் சுனிதா பகிர்ந்திருந்த புகைப்படம் அகப்பட்டது. படாடோபமான அடுக்குமாடி குடியிருப்பின் உயர்ந்த உப்பரிகையில், சீராக அலங்கரிக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் ஒன்றின் அருகே மலர்ந்த முகத்துடன் நின்றபடி வெளியே பொழிந்த பனியைக் காட்டிக்கொண்டிருந்தாள் அவள். அதை காணும்போதே கடைக்கண் பார்வையில் தனதருகே நின்ற மரம் விழுந்தது.
சாந்தி அப்பதிவை மேல்நோக்கித் தள்ளினாள்.
வெண்குதிரைகள் பூட்டப்பட்டிருந்த தேரில் நின்று உபதேசம் செய்துகொண்டிருந்த கிருஷ்ணரின் படம் வந்தது. பின்னணியில் ஏதோ சுலோகம் ஒலித்துக்கொண்டிருந்தது. கடம்பூர் சித்தி பகிர்ந்திருந்தாள் அதை.
சாந்தி சலிப்புடன் செல்போனை மேசை மீது கவிழ்த்திவிட்டு நிமிர்ந்தாள். எதிர்புறம் இருந்த மேசையில் அமர்ந்திருந்த தம்பதியர் எதையோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் வந்திருந்த சிறுவன் பொழுது போகாமல் மெல்ல எழுந்து அங்கும் இங்கும் அலையத் தொடங்கினான். பின்னர் கையில் வைத்திருந்த பொம்மை கார் உணவகத்தின் சுவர்கள் முழுவதிலும், “டுர்ர்! டுர்ர்!” என்கிற ஓசையுடன் ஓட்டிச்சென்றான். இறுதியாக அந்தக் கார் வாசல்பக்கம் நின்ற கிறிஸ்துமஸ் தாத்தாவின் அருகே நின்றது. அங்கே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் அந்த வாகனத்தை வேடிக்கையாகப் பார்த்தனர். பெருந்தன்மையுடன் தனது உடைமையை அவர்களிடம் காண்பித்தான் சிறுவன். இருவரும் அதை விழியுருட்டி நோக்கினர். பின்பு அதை அவனிடம் திருப்பியளித்துவிட்டு அவர்கள் விளையாட்டில் மும்முரமாகினர். சிறுவன் அவர்களை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான். சிறுமிகள் இருவரும் தாங்கள் அணிந்திருந்த அகன்ற பாவாடையின் நுனியைப் பற்றிக்கொண்டு சுழன்று, அவ்வாடை பெரும் வளையமாக உருமாறுவதை உற்சாகத்துடன் கண்டனர். சிறுவன் தனது கால்சராயை பற்றிக்கொண்டு நின்ற இடத்திலேயே சுற்றி, அவர்களைப்போலவே சிரித்தும், கூச்சலிட்டும் பார்த்தான். பிறகு அவ்விளையாட்டில் முற்றாக தோற்றவனாக கிறங்கியபடி நடந்து ஓரமாக அமர்ந்துகொண்டான். அந்தச் சிறுமிகள் அவனை பொருட்படுத்தவேயில்லை.
சாந்தியின் கவனம் முழுவதும் கீழே அனாமத்தாய் கிடந்த அந்த பொம்மை வாகனத்தின் மீதே இருந்தது. மேசைமேல் வைத்திருந்த செல்போன் திடீரென அதிர்ந்ததும் ஒருவித ஆர்வத்துடன் அதை எடுத்தாள். ஆனால் திரையில் கடம்பூர் சித்தியின் பெயரைப் பார்த்ததும் உச்சுக்கொட்டிவிட்டு அதை அப்படியே கீழே வைத்தாள்.
அப்போது பலமான ஹாரன் சத்தத்துடன் ஒரு கார் வாசலில் வந்து நின்றது. கேஷியர் பார்வதிநாதன் வேகமாக எழுந்து நின்றதும், இளைஞன் விரைவாக நடந்து அந்த வண்டியை அணுகினான். செல்போனில் யாரிடமோ சத்தமாக விவாதித்தபடி அந்தக் காரிலிருந்து இறங்கிய ஜெபராஜ், தனது சட்டையின் கழுத்துப்பட்டையைத் தூக்கிவிட்டுக்கொண்டு இடப்புறம் எதையோ முறைத்துப் பார்த்தார். பிறகு காரசாரமான தனது விவாதத்தைத் தொடர்ந்தபடி விடுவிடுவென கடைக்குள் நுழைந்து உட்புறம் இருந்த குளிரூட்டப்பட்ட அறையினுள் சென்றார்.
பார்வதிநாதன் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.
பத்து நிமிடங்கள் கழித்து அவ்வறையின் கண்ணாடிக் கதவு திறந்துகொண்டபோது அதனுள் போடப்பட்டிருந்த சொகுசான சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெபராஜ் தன்னையே நோக்கிக்கொண்டிருப்பதை கவனித்த சாந்தி ஒருகணம் திடுக்குற்றாள்.
அச்சம் மற்றும் எரிச்சல் கலந்த முகபாவத்துடன் அவள் பக்கம் வந்த பார்வதிநாதன், “சார், கூப்படறாரு மேடம்” என்றார்.
சாந்தி ஒன்றும் புரியாமல் விழித்தாள். பிறகு குரலை சரிசெய்துகொண்டு, “எனக்கு அவர் பெருசா பழக்கம் இல்லையே” என்றாள்.
“வர சொன்னாரு மேடம்… ஒன்னும் பிரச்சினையில்ல… சும்மா வாங்க”
சாந்தி கைப்பையை எடுத்துக்கொண்டு மெல்ல எழுந்து நின்றாள். மேசையில் கிடந்த செல்போனை மறுகையில் எடுத்தபோது அது தொடர்ச்சியாக அதிர்ந்துகொண்டிருப்பதை உணரமுடிந்தது. கடம்பூர் சித்தியின் அந்த அழைப்பையும் மறுத்தபடி ஜெபராஜ் இருந்த அறையின் கதவைத் தொட்டுத் தள்ளினாள்.
சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்த மேசைமேல் பரப்பி வைக்கப்பட்டிருந்த காகிதங்களை நோக்கியபடி, “வாங்கம்மா உக்காருங்க” என்று அவருக்கு எதிரே இருந்த நாற்காலியை கைகாட்டினார் ஜெபராஜ்.
சாந்திக்கு எதுவும் விளங்கவில்லை. அவள் அமர்ந்துகொண்டதும் வெளியே இருந்தபோது ஆர்டர் செய்திருந்த கோல்ட் காஃபியை அவள் முன்பு வைத்துவிட்டு வெளியேறினான் இளைஞன்.
காகிதங்களை அடுக்கி ஓரம் வைத்துவிட்டு, அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி சட்டைப்பையினுள் திணித்தபடி, “என்ன நியாபகம் இருக்குமுன்னு நினைக்கேன்” என்றார் ஜெபராஜ்.
சாந்தி தலையை மட்டும் அசைத்தாள். வீடு கைமாறிய அன்று மாநகராட்சி அலுவலகத்தில் இவரைச் சந்தித்திருந்தது நினைவில் இருந்தது.
சட்டென பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்ட ஜெபராஜ், “என் நெலமைய நீங்க புரிஞ்சுக்கிடனும்மா… படிச்ச மனுசன், கண்டவன்கிட்ட கடன வாங்கிட்டு முழிக்காரேன்னுதான் வீட வாங்க ஒத்துக்கிட்டேன்… கெரகம் புடிச்ச இந்த இடத்த வாங்கினதுல இருந்து எனக்கு செரைதான்… மவனுக்குன்னு இருக்கட்டுமுன்னு ஒரு ஹோட்டல கெட்டினது பெரிய ரோதனையா போச்சு…” என்று ஆத்திரம்பொங்கச் சொன்னார்.
சாந்தி ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
மேசையில் இருந்த கணினியின் திரையை அவள் பக்கம் திருப்பிய ஜெபராஜ் அதில் ஒரு காணொளியை ஓடச்செய்தார். வண்ணங்களும் ஓசைகளும் அற்ற அந்தக் காட்சியில் நான்கு தடியர்கள் சேர்ந்து ஒருவனை சரமாரியாக அடித்துக் கொண்டிருந்தனர். மேசைகளும், நாற்காலிகளும் சிதறிக்கிடக்க, இறக்கப்பட்டிருந்த ஷட்டரின் பக்கம் நின்றபடி அனைவருக்கும் ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தார் ஜெபராஜ்.
“இது போன வாரம் நடந்த சங்கதி… இந்தாளு வக்கீலு… கடை தொறந்து ஒன்னரை மாசத்துல ஏழெட்டு மட்டம் வந்தாச்சு… எல்லாம் ஏழரைய கூட்டத்தான்… ஜி.கே கம்பெனி இருக்குல்லா? அவனுவ கூட்டாளி இவன்…” என்றபடி அவளை நேராக நோக்கினார் ஜெபராஜ்.
சாந்தி பார்வையைத் தாழ்த்திக்கொண்டு எதிரே தனது குளிர்பானம் இருந்த குவளையை மெல்லத் தொட்டாள். அவளின் விரல்கள் லேசாய் நடுங்கின.
“பொன்னாக்குடி குமாரசாமி இருந்தவரைக்கும், நான் ஜி.கே எல்லாரும் கூட்டாளிதான்… அவரு போனதுல இருந்து ஊருக்குள்ள பல தொழில் கரைசல்லதான் ஓடுது… உங்களுக்கு குமாரசாமிய தெரியும்லா?”
சாந்தி அவரை ஏறெடுத்து நோக்காமல் லேசாய் அசைந்து அமர்ந்தாள். விபத்திற்கு பிறகு துவண்டுபோன கற்பகவேல் பின்வந்த ஆண்டுகளில் அடைந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் அவள் மனப்பரப்பில் ஓடின. திடீரென முளைத்த ஆன்மீக வேட்கை, அரசியல் ஆசை, அதன் விளைவாக அடைந்த கூடாத நட்பு, இழந்த செல்வம், உருவான கடன் என அனைத்தையும் இமைப்பொழுதில் கண்டுமுடித்தாள். எஞ்சிய பணத்தை குமாரசாமியிடம் கொடுத்து வட்டிக்கு விடச்சொல்லி, அதில் கிட்டியதை வைத்து தள்ளிய காலம், கோஷ்டி தகராறு ஒன்றில் வெட்டுப்பட்டு அவன் செத்துப்போன பிறகு ஒரேடியாக ஸ்தம்பித்துபோனது. கற்பகவேலால் அதன் பிறகு அந்தப் பணத்தை மீட்க முடியவில்லை. கடன் கழுத்தை நெரித்த காலத்தில்தான் அவர்களை அணுகியிருந்தார் ஜெபராஜ்.
“வீட்ட வாங்கறதுல நான் முந்திகிட்டேன்னு ஜி.கேக்கு ஆத்திரம்… அதான் குடைச்சல் குடுக்கான்”
சாந்திக்கு வீட்டிற்குச் செல்லவேண்டும்போல் இருந்தது. மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்து பெருமூச்செறிந்தாள்.
“என்னம்மா ஒன்னும் சொல்ல மாட்டங்கீய?” என்று வினவினார் ஜெபராஜ்.
“தெரியல சார்… எனக்கு ஒன்னும் வெளங்கள…”
“ம்” என்ற ஜெபராஜ் சிறிது நேரம் கண்மூடி அமர்ந்திருந்தார். பிறகு சட்டென எழுந்துகொண்டு, “விடுங்கம்மா… எதையும் மனசுல வச்சுக்கிடாதீங்க… இங்கன நெலம சரியில்ல… ஒவ்வொரு நாளும் போராட்டமா இருக்கு… அதான்… கொஞ்சம்… விடுங்க… எதையும் மனசுல வச்சுக்கிடாதீங்க!” என்றார்.
சாந்தி நெற்றியைச் சுருக்கினாள். பிறகு வேகமாக எழுந்துகொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.
முற்றத்தை அடைந்ததும் அவள் பார்வை தரையில் முன்பு கிடந்த அந்த பொம்மை வாகனத்தை நாடியது. அது அங்கே இருக்கவில்லை. எதேச்சையாக இடதுபக்கம் திரும்பியபோது மூலையில் கூட்டிவைக்கப்பட்டிருந்த குப்பைகளோடு குப்பையாய் அது கிடந்தது.
உறைந்த முகபாவத்துடன் வாசலை நோக்கி நடந்தாள் சாந்தி. பிறகு விரல்களில் இருந்த பிசுபிசுப்பை அகற்றும் பொருட்டு மீண்டும் கழிவறைக்குச் சென்றாள். கைப்பையினுள் தனது செல்போன் தொடர்ச்சியாக அதிர்ந்து கொண்டிருப்பதையே அவள் அப்போதுதான் உணர்ந்தாள். கழுவிய கையின் ஈரத்தை சேலையில் துடைத்தபடி போனை வேகமாக வெளியே எடுத்தாள்.
சித்தி தான்.
எரிச்சலில் அவள் முகம் சிவப்பானது. அழைப்பை ஏற்று, “என்ன சித்தி உன் பிரச்சன?” என்று குரோதக் குரலில் வினவினாள்.
“எதுக்குடி இப்படி வல்லுனு விழற… ரெண்டு நாள் ஆச்சே, என்ன செஞ்ச ஏது செஞ்சன்னு கேக்க அடிச்சேன்…”
“…”
“ம், என்ன செஞ்ச? வெளிய இருக்கியா?”
“ம்”
“எங்க? இருட்டியாச்சே?”
“வாக்கிங் வந்தேன்”
“தனியாவா?”
“இல்ல”
“அவர் எங்க?”
“அவர் வீட்டுக்கு போயிருப்பாரு… நானும் போயிருவேன் இப்போ”
“ம்”
“…”
“பாட்டு சத்தமா இருக்கே”
“ஹோட்டல் வந்தேன்”
“தனியாவா?”
சாந்தி எதிரே கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை நோக்கினாள். அடிநெஞ்சில் தகிக்கும் ஏதோ ஒன்றை தணிக்க விரும்புவதைப்போல் வேகமாக எச்சில் விழுங்கினாள்.
கடம்பூர் சித்தியை அவளால் புரிந்துகொள்ள முடிந்ததேயில்லை. நெருக்கடியான தருணங்களிலெல்லாம் ஏதோ வகையில் தனக்கு அக்கறை செலுத்துபவளாக அவள் திகழ்ந்தாலும் ஏனோ அவளிடம் முழுமையாக சரணடைய அவளது உட்புலன்கள் அனுமதிப்பதில்லை. கற்பகவேலை தனது காதலனாக வீட்டில் அறிமுகப்படுத்தியபோது, பதினாறு வயது மூத்தவனை துணையென ஏற்பது பெரும் அபத்தம் என்று கூச்சலிட்ட முதல் குரல் அவளுடையதே. பின்னாட்களில் ஜோடியாக அவள் முன் தோன்றும்போது, “வீட்டுக்கு போனதும் சுத்தி போடுங்க… என் கண்ணே பட்டுரும்போல இருக்கு!” என்று பூரித்தும் இருக்கிறாள். பதின்பருவத்து மகளுடன் சேர்ந்துகொண்டு நவீன வாழ்வியலை கொஞ்சம் நுகரத் துவங்கியதுமே உறவினர்கள் மத்தியில் தன்னை, “மேனாமினுக்கி” என்று பரிகசித்ததும், அக்காலத்தில் திடீரென கட்சி அரசியல், கும்பல், ஆன்மீகத் தேடல் என வேற்றுலகில் பிரவேசிக்கத் துவங்கிய தனது கணவரை, “உதவாக்கரை கிழவன்” என்று நகையாடியதும் அதே வாய்தான்.
கடம்பூர் சித்தி உச்சக் குரலில், “என்னடி குரல காணும்… வச்சுட்டு போயிட்டியா?” என்றதும் லேசாய் விதிர்த்த சாந்தி, “இல்ல, இருக்கேன்” என்றாள்.
“ம்”
“…”
“விசயம் தெரியுமா? சுனிதா முழுகாம இருக்காளாம்”
“ஓ”
“ஆமாடி… நேத்துதான் அவ அம்மா போன் பண்ணிச்சு”
“ம்”
“உனக்கு சொன்னாளா?”
“இல்ல சித்தி, இன்னிக்கு பேசுமா இருக்கும்”
“ம்”
“…”
“அவ அம்மாவையும் அப்பாவையும் இந்த மாசம் கனடா கூட்டிட்டு போறா போல… விசாக்கு அலையுதுங்க ரெண்டும், மூசு மூசுன்னு மூச்ச விட்டுட்டு” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் சித்தி.
சாந்தி எதுவும் சொல்லவில்லை.
“ராத்திரிக்கு போய் தான் சமைக்கணுமா?”
“ம்”
“ம்?”
“இல்ல, இங்கேயே கொஞ்சம் சாப்பிட்டோம்… அதனால அப்படியே படுத்தற வேண்டிதான்”
“ம்”
“…”
“என்ன திடுதிப்புன்னு ஹோட்டல்?”
“சும்மா அப்படியே வந்தோம்”
“ஓ”
“…”
“பேஸ்புக்ல சுனிதா பிள்ள போட்டோ போட்டிருந்தாளே பாத்தியா?”
“பாத்தேன்”
“ம்”
“…”
“ஆனந்தி பேசினாளா?”
சாந்தி கழிவறைக் கதவில் இருந்த மானைப் பார்த்தாள். கடம்பூர் சித்தி தன்னிடம் அன்னோன்னியம் பாராட்டத் தொடங்கியது அந்த நிகழ்வுக்கு பிறகுதான். வெளியே கசிந்துவிடக் கூடாது என்று பொத்திப் பாதுகாத்துவந்த தனது மகளின் தற்கொலை முயற்சியை எப்படியோ முகர்ந்தறிந்தது மட்டுமில்லாமல், அதற்கு காரணமாக இருந்த காதல் விவகாரத்தையும், அவ்வுறவை கற்பகவேல் மூர்க்கமாய் எதிர்த்ததையும், பின்னர் மச்சுப்படியில் மகளை அந்த கோரமான கோலத்தில் பார்த்த கணமே அவர் தனது எதிர்ப்பை கைவிட்டதையும், திருமணத்தை முன் நின்று நடத்திவைத்த நொடியிலிருந்தே தன்னுடன் பேசுவதை அவர் நிறுத்திக்கொண்டதையும் அருகிலிருந்து கண்டதைப்போல் தெரிந்து வைத்திருந்தாள் சித்தி.
“இல்ல சித்தி, பேசல”
“நீ கூப்பிட்டு பாத்தியா?”
“ம், கொஞ்சம் முன்னாடி”
“பதில் இல்லன்ன?”
“ம்”
“குடும்பமே நமக்கு வேண்டாமுன்னு புருசன்காரன் சொல்லிட்டான்போல”
“…”
“பேசாம நீங்க ரெண்டு பேருமா அவள ஒரு எட்டு நேர்ல போய் பாத்துட்டா என்ன?”
சாந்தி மூச்சை இழுத்துப் பிடித்தாள். ஆனால் அனைத்துக் கட்டுப்பாட்டையும் மீறி அழுகை பலமான விம்மல்களுடன் வெளியேறியது.
“எட்டி… சாந்தி… என்னடி? வெளி இடத்துல நின்னுகிட்டு…”
கண்ணாடியைக் கழற்றி ஓரம் வைத்துவிட்டு முகத்தைப் பொத்திக்கொண்டாள் சாந்தி. அவள் உடல் கிடுகிடுவென நடுங்கியது.
“சாந்தி… என் புள்ளல்லாம்மா… அழாத கண்ணு” சித்தியின் குரலும் இப்போது தழுதழுத்தது.
“எல்லாம் என் வாயச் சொல்லணும்… என்ன… என்னத்த சொல்லன்னு தெரியல…” என்று புலம்பியபடிச் சென்றாள் சித்தி.
சாந்தி கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத் தேற்றிக்கொண்டு, “நீ கண்டத யோசிக்காத… விடு” என்றாள். பிறகு அன்றைய சமையல் மற்றும் பிற சமாச்சாரங்கள் பக்கம் பேச்சைத் திசைமாற்றி சித்தியையும் தேற்றி தானும் நிலையடைந்த பிறகு அழைப்பைத் துண்டித்தாள்.
முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தபோது உணவகம் வெறிச்சோடிக் கிடந்தது. நாற்காலிகளைக் கவிழ்த்தி மேசைமேல் அடுக்கிக்கொண்டிருந்த இளைஞன் அவள் வெளியேறுவதைக் கண்டதும் குப்பைத்தொட்டியின் அருகே சாய்த்துவைத்திருந்த குடையை எடுத்துக்கொண்டு அவளை அணுகி, “சாரி மேம்… ரியலி சாரி” என்றான்.
வேதனையில் அவன் முகம் சுருங்குவதை கவனித்த சாந்தி மறுமொழி எதுவும் சொல்லாமல் குடையை வாங்கிக்கொண்டு வாசல் நோக்கிச் சென்றாள்.
நீண்ட நேரம் விரயம் செய்துவிட்டோம் என்றும், வீட்டில் ஒற்றையாக அவர் என்ன செய்துகொண்டிருப்பார், தன்னைப் பற்றி எண்ணுவாரா என்றும் யோசித்தபடி வெளியே வந்தவள் அங்கே பக்கவாட்டில் இருந்த மின்கம்பத்தைப் பிடித்தபடி கற்பகவேல் தனக்காக காத்திருப்பதைக் கண்டு திகைப்புற்றாள்.
அவள் வெளியேறுவதை கவனித்த கற்பகவேல் நிமிர்ந்து நின்று முகத்தை மட்டும் திருப்பிக்கொண்டார்.
சாந்திக்கு குளிரெடுத்தது. அவள் கால்கள் அசைய மறுத்தன. பிறகு சேலைத் தலைப்பை தோளைச் சுற்றி போட்டுகொண்டு அவரை நோக்கி நடந்தாள்.
கற்பகவேல் தனது ஆடையை சரிசெய்துகொண்டு வீடிருக்கும் திசையில் எட்டுவைத்தார். சாந்தி நீட்டிய குடையை ஏனோ அவர் வாங்கவில்லை.
அவர்களிடையே நிலவும் வழக்கமான மௌனத்திற்கு அன்று அதிக எடை இருந்தது. கற்பகவேலின் உடம்பில் வினோதமான நடுக்கம் குடிபுகுந்திருப்பதை உணர்ந்த சாந்திக்கு அதன் காரணம் குளிரா, அல்லது குடையின் துணையின்றி நடப்பதா அல்லது வேறேதுமா என்று அனுமானிக்க முடியவில்லை. வேகமாக முன்னேறிச் செல்லாமல் தன்னுடனே நடப்பதற்கு இந்த நடுக்கமே காரணமோ என்று எண்ணினாள். பிறகு மனதை திசைமாற்றும் பொருட்டு இடப்பக்கம் பார்த்தாள். ஒருகாலத்தில் புழுக்கள் மற்றும் பூச்சிகளின் வசிப்பிடமாய் இருந்த புதர்காட்டில் இப்போது புதிதாய் இரண்டு திருமண மண்டபங்கள் முளைத்திருந்தன. மங்களக்கோலம் சூடாமல் வெறிச்சோடிக் கிடந்த அக்கட்டுமானங்கள் அச்சமூட்டுபவையாக இருந்தன. முதல் மண்டபத்தின் வாசலில் அமர்ந்திருந்த முதிய காவலாளி கொசுவர்த்திச் சுருள் ஒன்றைப் பற்றவைத்து தனது பாதங்களின் அருகே வைத்துவிட்டு கண்மூடிச் சாய்ந்தார்.
அருகே அப்போது வரை சீராகக் கேட்டுக்கொண்டிருந்த காலடிச் சத்தம் திடீரென நின்றுவிட்டதை உணர்ந்து பதைப்புற்ற சாந்தி வெடுக்கென திரும்பினாள். கொஞ்சம் தொலைவில், பொதிகை நகர் நுழைவையொட்டி இருந்த வரசித்தி விநாயகர் கோவில் அருகே அப்படியே உறைந்து நின்றுகொண்டிருந்தார் கற்பகவேல்.
சாந்தி செய்வதறியாமல் விழித்தாள். பிறகு தயங்கித் தயங்கி நடந்து அவருடன் சென்று நின்றுகொண்டாள்.
கொஞ்சம் முன்சென்ற கற்பகவேல் கோவிலின் கம்பிக் கதவில் முகம் பதித்து விநாயகரை உற்று நோக்கினார். உச்சியில் இருந்த ட்யூப்லைட் அவர் முகத்தின் மீது வெளிச்சத்தை வாரியிறைத்தது.
சுருக்கம் விழுந்து, எண்ணெய் பிசுபிசுப்பினால் பளபளத்த அவரது இடது கன்னத்தில் மூன்று விரல்தடம் பதிந்திருப்பதைக் கண்ணுற்ற சாந்தி ஒருகணம் மூச்சடைத்துப்போனாள். கால்கள் இரண்டும் நடுக்குற்று தளர, கரம் தானாக பக்கவாட்டில் இருந்த கம்பியைப் பற்றிக்கொண்டது.
இரண்டொரு நிமிடங்கள் கழித்து பெருமூச்சுவிட்டபடி அசைந்த கற்பகவேல் வீட்டை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.
குனிந்த தலை நிமிராமல், விலகிச் செல்லும் காலடியோசையை மட்டும் செவி மடுத்தபடி சில கணங்கள் அப்படியே நின்றாள் சாந்தி. பின்னர் கண்களைத் துடைத்துக்கொண்டு, தடதடவென அடித்துக்கொண்டிருந்த நெஞ்சின் மீது கைவைத்தபடி விலகிச் சென்று அவருடன் இணைந்து நடந்தாள்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
