எங்க ஊரு பொட்டக்குளத்துக்கு மேக்க ஒரு காட்டுத்தடம் கிடக்கும். அந்தத் தடம்தான் எங்க ஆச்சி ஊருக்குப் போறதுக்கு ரொம்ப சாட்கட்டு. அந்தத் தடத்து வழியாப் போனா எங்க ஊருக்கும் ஆச்சி ஊருக்கும் ஒரு ரெண்டறக் கிலோ மீட்டர் தூரந்தான். ரோட்டு வழியாப் போனா ரொம்ப சுத்து. நாங்க சின்னப்புள்ளையா இருக்கும்போது அந்தக் காட்டு வழியாத்தான் எங்கள ஆச்சி கூட்டிட்டுப் போவா. காட்டுத்தடத்துக்கு ரெண்டு பக்கமும் பனைமரமும் கருவேலமரமும் கும்மமா வளந்துருக்கும். எனக்கு சூடம் முட்டாயும், அவனுக்கு ஆரஞ்சு முட்டாயும் வாங்கிக் கொடுப்பா. அவன் ஆரஞ்சு முட்டாய வாயில ஒதுக்கிட்டு கைய ரெண்டையும் காத்துல நீட்டிக்கிட்டு, ‘டப டப’ன்னு புல்லட் சத்தம் போட்டுக்கிட்டு எங்களுக்கு முன்னால வேகமா ஓடிப் போவான். நான் சூடம் முட்டாய சுத்திக்கிட்டு ஆச்சி ஏதாவது ஒரு கதை சொல்லுவா. அதுக்கு ‘உங்’ கொட்டிக்கிட்டு பின்னாலயேப் போவேன்.
கொஞ்சந்தள்ளிப் போயிட்டு புல்லட்ட சைடு ஸ்டாண்டு போட்டுட்டு ஒண்ணுக்குப் போயிக்கிட்டே, “ என்ன ஆச்சி நடக்க முடியலையா? வந்து நம்ம வண்டியில ஏறு. அஞ்சே நிமுசத்துல கொண்டு வீட்டுல விட்டுருதேன்” என்பான். அதுக்கு ஆச்சி, “ ஓன் வண்டியில வந்தா ஊருக்குப் போவ முடியாது. சுருவாட்டுக்குத்தான் போணும்” என்பாள். பதிலுக்கு அவன், “ எப்படியும் நடந்து சாவத்தான் போற. அதுக்கு என் வண்டியில வந்து சாவ வேண்டியதுதான” என்றதும் ஆச்சிக்கு சிரிப்பாணி தாங்க முடியாது. “பாத்தீயால ஓந் தம்பிய… இத்துனோன்டு கெடந்துக்கிட்டு என்னாப் பேச்சு பேசுறான்”னு எங்கிட்டச் சொல்வாள்.
“ யாச்சியோ! இந்தப் பேச்செல்லாம் மணிமுத்தாறு கால்வாய் வரைக்கும்தான். அப்பறம் புல்லட்டும் ஓடாது. ஒரு புண்ணாக்கும் ஓடாது. ஐயா, தானா ஒங்கிட்ட வருவாரு பாரேன். ” கால்வாய் வந்ததும் நானும் அவனும் கப்சிப்ன்னு வாய மூடிக்கிட்டு ஆச்சி கையப் புடிச்சிட்டுத்தான் நடப்போம். ஏன்னா, அந்தக் கால்வாய் பாலத்துக்கும் மேக்கக்கரைய ஒட்டுனாப்புல நிக்கும் ஒத்தப் பனைக்கும் ஒரு ‘முனிப்பாய்ச்சல்’ உண்டாம்! வெள்ளிச் செவ்வா ஆயுச்சுனா அந்த முனி முடிய விரிச்சிப் போட்டுக்கிட்டு ஒரு பனை உயரத்துக்கு ஜல்லு ஜல்லுன்னு சலங்கையக் கட்டிக்கிட்டு நடந்துப் போமாம்!
கால்வாய்க்கு அடுத்து கெப்பனக்காரி கிணறு. முப்பது வருசத்துக்கு முன்னாடி அந்தக் கெணத்துல நெறைமாத சூலியொருத்தி விழுந்து செத்துட்டாளாம்! அவளுக்கு நாலு புள்ளயளாம். நாலும் பொட்டையாப் பொறந்ததால புருசங்காரனும் மாமியாக்காரியும் சேந்து பொழுதன்னைக்கியும் அவள அடிக்கிறதும், கரிச்சிக்கொட்டுறதுமுன்னு கொடுமப்படுத்துவாங்களாம். ஒருநாளு அவ புருசங்காரன் வெளியூருக்குப் போன சமயத்துல நெறமாசமான சூலிய பச்சத்தண்ணிக் கூட குடுக்காம அரங்கு வீட்டுக்குள்ளப் போட்டு பூட்டிட்டு, பக்கத்து ஊருக்கு மருமவ வயித்துலருக்குறப் புள்ள என்ன புள்ளன்னு கண்டுபுடிக்க குறி கேக்கப்போனாளாம்.
குறிகாரி வயித்துலருக்குறதும் பொட்டப்புள்ளதான்னு சொன்னதும் கோவத்தோட வீட்டுக்கு வந்த மாமியாக்காரி அரங்கு வீட்டு கதவத் தொறந்துருக்கா. வயித்துப்புள்ளத்தாச்சி தண்ணியில்லாம நா வறண்டு தண்ணி தண்ணின்னு கேட்டு அரை மயக்கத்துல கெடந்தவளப் பாத்து, தண்ணித்தான இந்தான்னு வாயிலயே மோண்டாளாம்; வயித்துலயே மிதிச்சாளாம். அன்னைக்கிப்பாத்து தெருவுல சமஞ்சப் புள்ள ஒருத்திக்கி தலைக்குத் தண்ணி ஊத்துற விசேசமாம். மாமியாக்காரி மருமவள அடிச்சிப்போட்டுட்டு தண்ணி ஊத்துற வீட்டுக்குப்போயி மொய்க்குடுத்துட்டு சட்டிய நெறைய சோத்த வாங்கிட்டு வீட்டுக்கு வந்தாளாம்.
பள்ளிக்கூடத்துக்குப் போன வயித்துப் புள்ளத்தாச்சியுடைய நாலு பொட்டப் புள்ளயளும் வீட்ல அம்மாவக் காணாம வீட்டுநடையில உக்காந்து தேம்பி தேம்பி அழுதுக்கிட்டு இருந்துச்சாம். “ எழவெடுத்த நாயிவுளா! எதுக்கிப்பும் அழுதுட்டுருக்கீய? ஒங்கம்ம என்ன செத்தாப் போயிட்டா! “ என்று நாலு புள்ளயளையும் மாமியாக்காரி அடி வெளுத்தாளாம். புள்ளயளு அலறல் சத்தங்கேட்டு பக்கத்துக்கு வூட்டு ஆளுவ ஓடி வந்து புள்ளயளக் காப்பாத்தி, கெப்பனக்காரிய தெருக்காரங்க எல்லாரும் ராவுன்னு பாக்காம காடு கரையெல்லாம் தேடி அலஞ்சாங்களாம். கட்டக் கடேசியா இந்தக் கெணத்துக்கிட்ட வரும்போது கெணத்துத் திண்டுல ஏறி நின்னு நாயொன்னு கெணத்தப் பாத்து கொளச்சிக்கிட்டே இருந்துச்சாம். என்னடான்னு தெருச்சனம் எட்டிப்பாத்துட்டு “ ஏ.. பாதவத்தி இப்படி பண்ணிட்டாளே “ என்று எல்லாரும் வாயிலும் வயித்திலும் அடிச்சிக்கிட்டங்களாம்!
ராத்திரி கெணத்துல நெலா மெதக்கிறமாறி தாயும் புள்ளையும் செத்து மெதந்தாங்களாம். நூலோடு பட்டம் வானத்துலப் பறக்குறமாறி தொப்புள் கொடியோடு தன் தம்பி மெதக்கிறதப் பாத்துட்டு, நாலு பொட்டப் புள்ளயளும் ‘தம்பி தம்பி’ன்னு அழுத அழுவைய நெனச்சா ஆச்சிக்கு இப்பவும் கண்ணுலத் தண்ணி வந்துரும். அன்னையிலிருந்து இன்னயவரைக்கும் அம்மாவாசைக்கி அம்மாவாச அந்தக் கெணத்துலருந்து கொழந்த அழுற சத்தம் கேக்குமாம்! அழுறக் கொழந்தைய கெப்பனக்காரி, “ எங்கண்ணுல, எந்தங்கல்ல”ன்னு செல்லங் கொஞ்சுற சத்தமும் கேக்குமாம்.
அந்தக் கெணத்தத் தாண்டி கொஞ்சம் தூரம் போனா. ஒரு கிழட்டு ஆலமரம். அந்தக் கிழட்டு ஆலமரத்துல சாதிவிட்டு சாதி காதலிச்சி ஓடிப்போன அக்கா ஒருத்திய, ‘ஒங்க அக்காவுக்கு அடுத்த மாசம் கலியாணத் தேதி குறிச்சாச்சி. அவ கலியாணம் முடிஞ்சி, அடுத்த மாசமே ஒனக்கும் நீ விரும்புனப் பயலுக்கும் கலியாணம் செஞ்சி வைக்கிறோம். இப்பும் நீ ஓடிப்போன விசியம் மாப்பிள வூட்டுக்காரங்களுத் தெரிஞ்சதுன்னா நம்ம அக்கா கலியாணம் நின்னுப்போயிரும்; அக்கா வாழ்க்கையே பாழாப்போயிரு’முன்னு அந்த அக்காவ வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து, அவளுக்குப் புடிச்ச நல்லியெழும்பு கொழம்பு வச்சிக் குடுத்தாங்களாம். அக்காவோட அம்மக்காரி தல நெறைய அக்காவுக்கு மல்லிப்பூ வச்சிவுட்டாளாம். அக்கா சந்தோசத்துல அவுங்க அம்மாவோட மூக்கக் கிள்ளி கன்னத்துல முத்தங்குடுத்துட்டு, அப்பாவோட கெடாமீசையை திறுக்கிவிட்டு அவருக்கும் ஒரு முத்தங்குடுத்தாளாம்.
அக்கா வண்ணத்துப்பூச்சியாட்டம் சந்தோசம் தாங்க முடியாம வீட்டுக்குப் பின்புறம் பறந்துப்போயி பிச்சிப்பூவுக் கொடிக்கிட்ட, “ எனக்கு ஒரு மாசங்கழிச்சி கலியாணம். அதுக்குள்ள நீ நெறயப் பூப்பூத்திரு. ஓன் கொடியிலப் பூத்த பூவத்தான் எங்கலியாணத்தன்னைக்கி நா தலையில வைக்கணும். அன்னைக்கிப் பாத்து பூக்காம ஏமாத்துன அவ்வளவு தான் பாத்துக்கோ!”ன்னு செல்லமா பிச்சிப் பூச்செடியோட எலயப் புடிச்சிக் கிள்ளுனாளாம். அதப் பாத்துட்டுருந்த அவளோட அம்மக்காரி, ‘அதெல்லாம் கூடை கூடையாய்ப் பூக்கும். இப்பும் நீ போயி வாழத்தடய எடுத்துட்டு வா. நாளானிக்கி புத்தனேரியில ஒரு கலியாணம். அதுக்கு நாப்பது வாழத்தாரு கேட்டுருக்காங்க. இன்னைக்கி ஊத்தம் போட்டாத்தான் சரியாயிருக்கு’முன்னு அம்மக்காரி சொன்னாளாம்.
எங்க ஆச்சி ஊர்லயே அந்த அக்காவோட அப்பாதான் பெரிய பழயாவாரியாம். சுத்துப்பட்டுல என்ன விசேசம் நடந்தாலும் இவுங்கக்கிட்டத்தான் வாங்கிட்டுப் போவாங்களாம். வீட்ட ஒட்டுனாப்புல பழக்கட; வீட்டுக்குப் பின்னாடி பழம் பழுக்கப் போடுற பெரிய காந்தக்குழி. அக்கா காந்தக்குழிய தூத்துப் பெருக்கிட்டு அதுக்குள்ள ஒவ்வொரு வாழத்தாரா எண்ணி அடுக்குனாளாம். அடுக்கி முடிச்சிட்டு, ‘யம்மா! ஊத்தம் போட்டுறவா’ன்னு கெட்டுருக்கா. ‘ஆங்.. போடு போடு’ன்னு சொன்னதும், அக்கா வாழத்தடயப் பத்தவச்சி காந்தக்குழிக்குள்ளப் போட்டுட்டு கதவடைக்கப்போன நேரத்துல, பின்னாடி வந்த அவ அப்பங்காரன் அக்காவோட கையையும் காலையையும் கயித்த வச்சி இறுக்கிக்கட்டி, கத்திக் கூப்பாடுப் போட்றக்கூடாதுன்னு வாயில துணிய வச்சி அமுக்கி, வாயையும் கட்டி காந்தக்குழியிலத் தள்ளி கதவச் சாத்திட்டு, ஒரு சொட்டு காத்துப் போவாதமாறி நல்ல சாணிய வச்சி மொழுவிட்டாரம்.
விடிகாலையில விடிவெள்ளி வர்றதுக்குள்ளயே காந்தக்குழியத் தொறந்து அக்காவ வெளியில இழுத்துப் போட்டுருக்காணுவ. பச்சையாப் போட்ட வாழத்தாரெல்லாம் லேசா பழுப்படிச்சிப் போயி இருந்துருக்கு; பழ நெறத்துலருக்குற அக்கா, ராத்திரிப் பூராம் பொக மூட்டத்துலக் கெடந்து கனிஞ்சப் பழம்போல வாடிப்போயிக் கெடந்தாளாம். செத்தோல தொண்டையில உயிர்க் கெடந்து துடிச்சிட்டுக் கெடந்ததப் பாத்த அவ அப்பங்காரன், ‘ ஓடுகாலி முண்ட! இன்னுமா ஓன் ஓடம்புல உசுரு இருக்கு’ன்னு ஓங்கி சங்குலயே ஒரு மிதி மிதிச்சானாம். அப்பான்னு சொல்ல வாயெடுத்தவ. ‘அ’ன்னு ஒரு எழுத்த மட்டும் சொல்லி உசுர விட்டுட்டுளாம். ஊருசனத்துக்குத் தெரியாம அவ அப்பனும் குடும்பத்துக்காரனுவளும் தூக்கிட்டு வந்து, அந்த அக்காவ இந்த ஆலமரத்துலக் கட்டித் தொங்கவிட்டுட்டு, நாண்டுக்கிட்டு செத்துட்டான்னு ஊர நம்ப வச்சிட்டாங்களாம்!

இப்பவும் வெள்ளிச் செவ்வா ஆச்சுன்னா நடுச்சாமத்துல.. இந்த மரக்கிளையில உக்காந்து ஆந்தையளு பயங்கரமா அலறுறச் சத்தம் ஊர்வரைக்கும் கேக்குமாம். அந்தச் சத்தங்கேட்டு ஓஞ்சதும், தெரு நாயெல்லாம் கொளைச்சிக்கிட்டே அக்காவோடத் தெருமுனைக்கி ஒடுமாம். தெருமுனையைத் தாண்டி அக்கா ஒரு அடியெடுத்து தெருக்குள்ள கால வச்சா..! ஊருக்குள்ளருக்குற முத்தாரம்மன் சாமி வந்து அக்காவ ஓடஒட அடிச்சி விரட்டிருமாம். தெருமுனைவரை போயிட்டு அழுதுக்கிட்டே மறுபடியும் அக்கா இந்த ஆலமரத்துக்கே திரும்பி வந்துருவாளாம். இந்தக் கதையயெல்லாம் ஒருதடவத்தான் எங்க ஆச்சி எங்கக்கிட்டச் சொன்னா. ஆனா, நாங்க ஆச்சி ஊருக்குப் போவும்போதெல்லாம் ஒவ்வொரு தடவையும் நெனைச்சுக்கிட்டுத்தான் போவோம்; கால்வாய் வந்ததுமே கதி கலங்கிப்போவோம்!
கொஞ்சம் பெரிய பயலுவளா ஆனபிறகு நாங்களே எங்கப்பா சைக்கிளை எடுத்துக்கிட்டு பொழுதடையறதுக்குள்ள ஆச்சி ஊருக்குப்போயி சேர்ந்திடுவோம். ஒருநாள் வெள்ளிக்கிழமை. எங்க ஆச்சி உப்புக்கண்டம் போட்டு குழம்பு வைக்கிறேன். சீக்கிரம் வந்துருங்கன்னு சொன்னா. காலையில எந்தீரிச்சதுலருந்து சாயங்காலம் பள்ளிக்கூடம் போயிட்டு வர்ற வரைக்கும் உப்புக்கண்டத்த நெனச்சி நெனச்சி நாக்குல ஊருன எச்சிலொழுகி நீலச்சட்ட ஈரச்சட்டயா ஆகிடுச்சு! நானும் என் தம்பியும் பள்ளிக்கூடம் விட்டதும் புஸ்தகப் பையத்தூக்கி முக்குலப் போட்டுட்டு, ஆச்சி ஊருக்குப்போவ சைக்கிளயெடுத்தோம். எப்போதும் மீனுமாதிரி துள்ளுற சைக்கிளு. அன்னைக்கிப் பாத்து கருவாடுமாதிரி ஓட மாட்டேங்கு; உருள மாட்டேங்கு. என்னாச்சுன்னுப் பாத்தா! பின்வீலு பஞ்சர். வந்தக் கோவத்துக்கு சைக்கிள ஆளுக்கொரு மிதி மிதிச்சோம். சைக்கிள அங்கனையேப் போட்டுட்டு அடுத்து என்ன பண்லாமுன்னு யோசிச்சோம்!
அம்மக்கிட்ட நடந்துப்போறோமுன்னு சொன்னா, “ரெண்டுபேத்துக் காலையும் இப்பும் வெறவு வெட்டுறக் கட்டையில வச்சி துண்டுத் துண்டா தறிச்சிப்புடுவன் தறிச்சி படுக்காளிப் பயலுவளா…!” என பயங்கரமாய் திட்டுவான்னு பள்ளிக்கூடத்துச் சட்டையோடு நானும் தம்பியும் அம்மக்கிட்ட சொல்லாமல் நடக்கத் துவங்கினோம். ஊரு குளத்தாங்கரையத் தாண்டி காட்டுத் தடத்துல நடக்க ஆரம்பித்ததும், மேய்ச்சல் முடிந்து துள்ளாட்டம் போட்டு வீட்டுக்குத் திரும்பும் ஆடுமாடுகளைப்போல் பாதையில் துள்ளிக் குதித்து ஓடி, எங்க ஆச்சி ஊர் மணிமுத்தாறு கால்வாயிலிருந்து பாசனத்திற்காக எங்க ஊர் குளத்திற்குத் தண்ணீர் வரும் ஓடையில் கை நிறைய அள்ளி வயிறு நிறைய தண்ணீர்க் குடித்து தாகம் தீர்த்தோம். தாகம் தீர்க்கும்போது சிறு மீன்கள் பெரும் படையாய் ஓடும் தண்ணீரை எதிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. அதில் சில மீன்கள், ‘யாருடா நீங்க? எங்கப் பாதையில ஏண்டா குறுக்க நிக்கீங்க!’ என்று நறுக்கென்று ஆளுக்கு நான்கு கடிகள் போட்டன. கடித்த மீன்களை அடித்தே தீருவேன் என அதன் பின்னால் அலைந்தவனை, “எல இப்பும் நீ வாரியா இல்ல ஒன்ன உட்டுட்டுப் போட்டுமால” என்றதும். பயந்தடித்து கரையேறினான். என் கால்தடத்தில் தாவித்தாவி அவன் கால்களை வைத்து விளையாடியபடி என்னைப் பின்தொடர்ந்தான்.
ஒரு பத்தெட்டு தான் வச்சிருப்பான். அதுக்குள்ள, “ அண்ணே! ஒண்ணுக்கு வருது. கொஞ்சம் நில்லு” என்றான்.
“ சரி! சீக்கிரம் போயிட்டு வா. நேரமாவுது ” என்றேன்.
அவன் பாதை மணலில் பல நாள் முயற்சிக்குப் பிறகு ‘சண்முகநாதன்’ என்ற தனது பெயரினை மூத்திரத்தால் முழுதாய் எழுதிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, “என்னோவ்! இங்க வந்துப்பாரேன். ஐயா தெறமைய” என்றான்.
சில எழுத்துகள் காரச்சேவுக்காரரிடம் போடும் பழைய ஈயப்பாத்திரங்கள் போல நெளிந்தும் சில எழுத்துகள் புயலில் பாதி சரிந்த மரங்கள் போல சரிந்தும் கிடந்தன. கடைசி எழுத்தான ‘ன்’னில் மட்டும் ஒரு சொட்டு விடுவதற்குப் பதிலாக மூன்று சொட்டு மூத்திரம் விட்டிருந்தான். “என்னல ‘ன்’னுக்கு ஒரு புள்ளித்தான வைக்கணும். நீ மூணுப்புள்ளி வச்சிருக்க. அப்படி வச்சா அது ‘அக்கு’ல மக்கு” ன்னு பொடதியில ஒண்ணு வச்சேன். அவனுக்குப் பின்னந்தலையில் அடித்தால் கோவம் பயங்கரமாக வந்துடும்.
“ஆமா! இவரு பெரிய தமிழ் டீச்சர் செல்லத்தாயி. திருத்த வந்துட்டாரு திருத்த. போயம்மல கருவண்டா” என்று எனது பட்டப்பபெயரைச் சொன்னதும், எனக்கு கெட்டக் கோவம் வந்தது. அவன் ஆசையாய் எழுதியப் பெயரை அப்பளம்போல் கால்களால் நொறுக்கினேன்.
“ இன்னைக்கு நீ செத்தல” என்று நொறுங்கிய மூத்திர எழுத்துகளில் ஒரு குத்தள்ளி என் முகத்திலெறிய வந்தான். நான் அவனிடமிருந்து தப்பிக்க விண்ணில் பாயும் ஏவுகணையாய் மண்ணில் வேகமேடுத்தேன். அவன் குட்டியைத் தூக்க வந்தவனை குரைத்துக்கொண்டு கடிப்பதற்கு ஓடும் நாயைப்போல் என்னைத் துரத்தி வந்தான். எங்களின் காலடிச் சத்தம் கேட்டு பாதையோர இலந்தைச் செடியில் பம்மிருந்த கருவாலிகள் படபடவென பட்டாசு வெடித்ததுபோல் சிறகடித்தோடின. நாங்கள் அதன் சிறகடிப்புச் சத்தத்தில் பயந்து அந்த இடத்திலேயே சிலையாய் நின்றுவிட்டோம்.
“ச்சீ! இந்தக் கருவாலியளு நம்மள பயங்காட்டிப்புட்ட”யென்று ஓடுவதை நானும் துரத்துவதை அவனும் மறந்து பெருமூச்சு விட்டு நிமிர்கையில்… கோயில் கொடைக்கு ஆலமரத்திலும் வேப்பமரத்திலும் தொங்கும் சீரியல் பல்புகளைப்போல் கருவாலிகள் பறந்த இழந்தைச் செடியில் காயும் பழமும் கொத்துக் கொத்தாக தொங்கிக் கொண்டியிருந்தது. இருவரும் ஓடிப்போயி எனக்குப் பிடித்த செங்காயையும் அவனுக்குப் பிடித்த பழுத்தப் பழங்களையும் பறித்து வாயையும் பையையும் நிறைத்துக்கொண்டு மீண்டும் நடந்தோம்.
மாவுப்போன்று இருந்த செங்காய்களை நான் தின்றுவிட்டு கொட்டைகளைப் பாதையின் இருபுறமும் துப்பியபடி முன்னால் போயிக்கொண்டிருந்தேன். அவன் கொட்டையைக்கூட விடாமல் கடாப்பல்லால் ‘கடக் மொடக்’கென்று கடித்துக் கூழாக்கி, ஆடுகளைப்போல் அசைப்போட்டுக்கொண்டு பின்னால் வந்தான். வழியில் வட்டமாய் சுருண்டுப் படுத்திருந்த பாம்பைக் கண்டு, “ எல தம்பி! பாம்புல” என்றதும் எட்டூருக்கு எட்டிப்போயி நின்று, ” எங்க? ” என்றான்.
நான் அதனருகில் சென்று குனிந்து கூர்ந்து பார்த்தேன். அது மெல்ல அசைந்து என்னை தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தது. “எல பயந்தாங்கொள்ளி பக்கோடா! பயப்படாத சூவப்பாம்பு தான்.” என்று சொன்னப்பிறகே அருகில் வந்தான்.
“நான் என்னவோ நல்லப்பாம்புன்னு நெனச்சிட்டேன்ல.” என்று தம்பி பாதையில் கிடந்த சிறிய கம்பினைக் கையிலெடுத்தான்.
“ லேய் அடிச்சிராத, சூவப்பாம்பு ஒண்ணும் செய்யாது. பாவம்ல அது!”
“அடிக்கிறதுக்கு கம்ப எடுக்கலப்பா. வழியில இப்படிக் கெடந்தா. வண்டியில கிண்டியில அடிப்பட்டு வம்பா செத்துப் போயிரும்லா. அதான் தூக்கி ஓரமா விட்டுருலாம்னு எடுத்துட்டு வந்தேன்.”
“நல்ல புள்ள!” என்று தம்பி முதுகில் தட்டிக் கொடுத்தேன். தம்பி கம்பினால் குச்சியைக் கெம்புவதுபோல் அவன் வைத்திருந்த கம்பை வைத்து பாம்பினை ஒரு கெம்பு கெம்பினான். சூவப்பாம்பு சுழன்றுப்போய் சிறிது தூரத்திலிருந்த ஆவாரம் செடியின் மேல் விழுந்தது. விழுந்த மறுநொடி அதிலிருந்து விருட்டென்று ஒரு தாய் முயலும் மூன்று குட்டி முயல்களும் தலைத்தெறிக்க தாவிக்குதித்து ஓடின. தாய் முயலுடன் சென்ற இரண்டு முயல்குட்டிகள் வாழைத்தோப்புக்குள் புகுந்து தலைமறைவாகின. ஒற்றை முயல்குட்டி மட்டும் தாயின் பாதையிலிருந்து திசைமாறி நானும் தம்பியும் செல்லும் பாதையின் முன் குதித்தோடியும் குத்தவைத்தும் சென்றுகொண்டிருந்தது.
“ என்னோவ், முன்னாலப்பாரு…! ” என்று முயல்குட்டியைக் காட்டினான்.
“ ஆமால. நம்மக்கிட்ட மொசக்குட்டி வசமா மாட்டிக்கிட்டு. நீ அந்தப்பக்கமா வா. நான் இந்தப்பக்கமா வாரேன்.” என்று நானும் தம்பியும் அரவம் காட்டாமல் பதுங்கி பைய பைய முயல்குட்டியை நெருங்கினோம். காய்ந்த சருகுகளில் நான் கால் வைத்த சத்தம் கேட்டதும் மானைப் பிடிக்க பாயும் சிறுத்தையைப்போல் பாய்ந்தோடி அருகேயிருந்த எருக்கஞ் செடிக்குள் பதுங்கிக் கொண்டது. நான் செடியின் கிளைகளை அசைத்தேன். தம்பி ‘ச்சூ, ஸ்..ஸ், எஏ’ என கத்திக்கொண்டு கை நிறைய மண்ணையள்ளி செடியின் அடியில் வீசினான். எங்களின் தொந்தரவு தாங்காமல் பின்னங்கால்களால் மண்ணை உதைத்து முன்னங்கால்களை தரையில் வலுவாய் ஊன்றி துள்ளிக் குதித்து சரள்மேட்டில் நின்றிருந்த கள்ளிச்செடிக்குள் புகுந்து கொண்டது. அங்கிருந்து படர்ந்த பிரண்டைச்செடி, அடர்ந்த அரளிச்செடி, குவியலாயிருந்த கொளுஞ்சிச்செடி, குடைபோல் தரைவரை விரிந்திருந்த கருவேலமர மூடு, என்ன செடியென்று எண்ணமுடியாத செடிகொடிகள் நிறைந்த புதர்களிலெல்லாம் புகுந்து எங்களை ஏமாற்றிய முயல்குட்டி கடைசியில் சோற்றுக்கற்றாழை மூட்டில் சோர்ந்துபோய் ஒளிந்து கொண்டது.
கற்றாழை மூட்டின் நடுப்பகுதியில் நடுங்கியபடி இருந்த முயல்குட்டியை தம்பி தன் கழுகு கண்களால் பார்த்து, குதிகால் தரையில் படாதவாறு பைய நடந்து அதன் பின்பக்கமாய்ப் போய் ஒரே அமுக்கு!
பிடிபட்ட முயல்குட்டியை அவன் காதைப்பிடித்து தூக்கும்போது அது ‘கீர்கீர்’ என ஒலியெழுப்பி தன் கால்களால் காற்றை உதைத்து, அவன் கைகளில் சில கீறல்கள் போட்டது. இருவரும் குத்தவைத்து கொஞ்சநேரம் அதை, ‘ஒன்ன வெட்டித் தின்னலாம் மாட்டோம். வளக்கத்தான் போறோம். சும்மா வாளு வாளுன்னு கத்தாம, செத்தநேரம் அமைதியா இரு ! வீட்டுக்குப் போயிட்டு ஒனக்கு கேரட்டு முட்டக்கோசுலாம் தாரோம் சரியா! ‘ என்று தடவிக்கொடுத்தோம். முயல்குட்டி சத்தம் குறைத்து சாந்தமானது.
முயல்குட்டியைத் தூக்கிக்கொண்டு எழுகையில்… “என்னோவ்!! கொஞ்சம் பின்னாடிப் பாரு…! “ என்றான் தம்பி. “பின்னாடி என்ன பேயால இருக்கு? இப்படி திருதிருன்னு முழிக்கிற!” என்றேன். “மொதல்ல திரும்பிப்பாருல கருவண்டு நாயே!” என்று கோபமாக கத்தினான். “எதுக்கு இப்படி கத்துறான்”னு திரும்பிப் பார்த்தால் முனிப்பாய்ச்சல் கொண்ட ஒற்றை பனைமரம் எங்களுக்கு முன் நின்றுகொண்டிருந்தது. அதன் உச்சியில் தொங்கிக்கொண்டிருந்த பனையோலைகள் முனி தலைவிரிக் கோலமாய் நிற்பதுபோலிருந்தது. காற்றிலசைந்த காய்ந்த ஓலைகளின் சத்தம் எங்களுக்கு ‘ஜல் ஜல்’லெனக் கேட்டது. இருவருக்கும் கையும் காலும் உதறலெடுத்தது. இதயம் ‘பட் பட்’டென்று பயத்தில் அடித்த அடியில் மேல்சட்டைப் பையிலிருந்த இலைந்தைப்பழங்கள் எகிறி மண்ணில் விழுந்தன.
மேற்கிலிருந்த பெரிய இலைந்தைப்பழத்தினை யாரோ பறித்திருந்தனர். அடிவானம் பனம்பழத்தின் அடிப்பகுதியைப்போல் சிவந்தும், பொழுது மேல்பகுதியைப்போல் கருக்கவும் தொடங்கியிருந்தது. முயல்குட்டியைப் பிடிக்கும் ஆர்வத்தில் பொழுது போனதே தெரியவில்லை. இனியும் ஒருநொடி இங்கிருந்தால் இறப்பு நிச்சயமென்று தெரிந்தது. ஆதலால் அவனது நொட்டாங்கையை எனது சோத்தாங்கையால் பிடித்துக்கொண்டேன். அவன் சோத்தாங்கையில் முயல்குட்டியை வைத்து வயித்தோடு அணைத்துக்கொண்டு இருவரும் ‘ஒன் டூ த்ரி’ சொல்லி ஓட்டம் பிடித்தோம். கால்வாய் கடந்து கெப்பனக்காரி கிணற்றைத் தாண்டும்போது கிணற்றிலிருந்து புறாக்கள் சடசடவென சிறகடித்துப் பறந்தன. இதயம் படபடவென அடித்தது. தம்பி பயத்தில் ‘ஆ’வென அலறினான். “புறாதான் பயப்படாதல” என்று நெஞ்சை தடவிக்கொடுத்தேன். அவன் மூச்சு வாங்கியபடி முன்னால் பார்த்து அழத்தொடங்கினான்.
ஆம்! மீண்டுமொரு பேயாய் மிரட்டியது எங்கள் முன்னால் நின்ற கிழட்டு ஆலமரம். அதன் கிளையில் கட்டித் தொங்கவிட்டிருந்த நஞ்சுக்கொடி சாக்கு மூட்டைகள் வெட்டியத் தலைகள் போலவும்; யாரோ கொளுத்திவிட்ட நெருப்பு பிணமெரிவது போலவும்; பறவைகளின் கூச்சல்கள் போர்க்களத்தில் எழும் பேரிரைச்சலைப்போலவும்; கிளையில் பழுத்துக் கிடந்த ஆலம் பழங்கள் தூக்கில் தொங்கிய அக்காளின் சிவந்த கண்களைப்போலவும் பயமூட்டியது! தம்பியின் கையிலிருந்த முயல்குட்டியும் அந்த மரத்தினை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அந்த மரத்தினை ஒட்டினாற்போல் செல்லும் பாதையைத்தவிர, ஆச்சி ஊருக்குச் செல்ல வேறு பாதையும் கிடையாது. ஆலமரத்தினைப் பார்த்துக்கொண்டே கடப்பதற்கு எங்களிடம் தைரியமும் கிடையாது. இன்னும் தாமதித்தால் இருட்டிவிடுமென்று கண்களை இறுக மூடிக்கொண்டு கடந்துவிடலாமென முடிவுசெய்து இருவரும் கைகளை சிக்கென்று பிடித்துக்கொண்டு ஓடத் துவங்கினோம்.
நாய்கள் எங்கிருந்தோ இழுத்து வந்து பாதையில் போட்டிருந்த மாட்டு முட்டெழும்பில் கால்கள் மோதி என் முட்டித் தரையிலடித்து நான் கவிழ்ந்தபடி விழுந்தேன். தம்பி குட்டிக்கர்ணமடித்து எனக்கு முன்னால் போய் விழுந்தான். முயல்குட்டி எங்கு விழுந்தது. எந்தப் பக்கம் போனதென்று தெரியவில்லை. இருவரும் கண்களைத் திறந்து மெல்ல தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தோம். எங்களுக்கு முன்னால் தூக்குக் கயிற்றைப்போல் ஆலமர விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்தது. பாதி உயிர் அதைப் பார்த்தவுடனயே போய்விட்டது. மீதி உயிர் போகும்படி விழுதுகள் தொங்கும் கிளைக்கு மேலுள்ள கிளையில் வடக்குப்பார்த்து அமர்ந்திருந்த ஆந்தையொன்று தன்னுடலை துளிகூட அசைக்காமல் தலையை மட்டும் திருப்பி தென்புறமாக விழுந்த எங்களை முண்டக்கண்ணை விரித்து இமைத் தட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பார்வை எங்களின் தலையை முதுகுப் பக்கமாகத் திருகி கொண்டை முடிச்சினை முறித்துக் கொல்வது போலிருந்தது.
உயிர் போவதற்குள் ஊர்போய்விட வேண்டுமென்று கைகளை ஊன்றி எழ முடியாமல் எழுந்து நின்றோம். விழுந்த இடத்தில் சிதறி நசுங்கிய இலைந்தைப் பழத்தைப்போல் கால் கையெல்லாம் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. காயத்திற்கு எச்சிலையும் மண்ணையும் மருந்தாய் போட்டுக்கொண்டோம்.
அச்சத்தில் எனக்கு அடிவயிறு கலக்கியது. அவனோ! சிறுநீர் கழித்து கால்சட்டையின் கால்பகுதியை நனைத்திருந்தான். ‘ஊருக்கு வர்ற வழியில எதையாவது கண்டு பயந்தீங்கன்னா, மேக்கமாக்க இருக்குற எசக்கியையும் வடக்கமாக்க இருக்குற முத்தாரம்மன்னையும் கையெடுத்து கும்புட்டுட்டு, மூணுத்திருப்பு த்தூ த்தூன்னு நல்ல காறித் துப்பிட்டு, யாருட்டக் காட்ற ஓன் வேலைய? சில்லாட்டயப் பிச்சிப்புடுவென் பிச்சின்னு சொல்லிட்டு, பின்னாடித் திரும்பிப் பாக்காம ஒங்கப் பாட்டுக்கு நடந்து வந்துருங்க. ஒரு பேயும் ஒங்கக்கிட்ட அண்டாது.’ – ஆச்சி சொன்னது ஞாபகம் வந்தது. அதுபோலவே நாங்களும் செய்துவிட்டு, அங்கப் பிடித்த ஓட்டத்தை ஆச்சி வீட்டுத் தெருமுனையில் தான் நிறுத்தினோம்.
நானும் தம்பியும் ஓடிவந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கையில் தெருமுனையிலிருக்கும் வாதமடக்கி மரத்தின் பின்னாலிருந்து பெரும் அலறல் சத்தம் கேட்டு நடுநடுங்கிப் போனோம். சுவற்றில் பல்லியைப்போல ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டோம். “ என்னோவ்! கோட்டிபெருமாள் தாத்தாவுக்கு கோட்டி புடிச்சிட்டுப்போல. நம்ம இன்னைக்குச் செத்தோம்.” வார்த்தைகள் தந்தியடிக்க என் காதில் கிசுகிசுத்தான் தம்பி.
கோட்டிபெருமாள் தாத்தா நெட்டைப் பனைமரம்போல் நல்ல உயரம்; மொட்டைப் பனைமரம்போல் சொட்டைத்தலை; நனைந்த பனைமரம்போல் அட்டைக்கருப்பு; காட்டுப் பூனைப்போல் கண்களை உருட்டினால் கோழிகள் பயத்தில் கொக்கரித்துச் சிறகடிப்பது போன்று அவர் பார்த்தாலே குலை நடுங்கும். கோட்டிபெருமாள் தாத்தாவுக்கு கோட்டி பிடித்துவிட்டால் உடம்பில் கோமணங்கூடத் தங்காது. சிலநேரம் ஆதி மனிதனைப்போல் அம்மணமாய்த் திரிவார்; சிலநேரம் அகோரிகளைப்போல் விபூதியை உடம்பெங்கும் பூசிக்கொண்டு, “ எங் குடும்பத்த செய்வென வச்சிக் கொன்னவனுவள. கொல்லாம உடமாட்டேன். இருங்க இருங்க.. வர்ற வைகாசிக்குள்ள ஒங்க எல்லாத்தையும் வெட்டிப் பொதைக்கிறேன்.” என்று உரக்கக் கத்தி, கோபத்தில் நாக்கினைத் துருத்தி, பற்களை நரநரவென வேகமாய்க் கடிப்பார். வாயில் இரத்தம் சொட்டச்சொட்ட தெருவில் கிடக்கும் கம்பு, கட்ட, கல்லு, மண்ணாங்கட்டி, செங்காங்கட்டியை எடுத்து எறியத் தொடங்குவார்.
அன்றும் அப்படித்தான் கோட்டிப்பிடித்து கோட்டிபெருமாள் தாத்தா வெறியேறி ஆவேசமாய் கத்திக்கொண்டிருந்தார். பயத்தில் இதயத்துடிப்பு எங்களுக்கு இடிச் சத்தமாய் கேட்டது. மூச்சுக்காற்று அனல்காற்றாய் சுட்டது. கோட்டிபெருமாள் தாத்தா மீண்டும் காடதிர கடுவாப்போல் கத்தினார். தெருவில் உறங்கிக் கொண்டிருந்த நாய்கள் கூட்டமாய்க்கூடி கோட்டிபெருமாள் தாத்தாவைப் பார்த்து ஓட்டமாய் ஓடி வந்து குரைத்துக்கொண்டே கடிக்கப் பாய்ந்தன. “ எங் குடும்பத்த செய்வன வச்சிக் கொன்னமாறி என்ன நாயவுட்டு கொல்லப் பாக்குறீயளால. ஒங்கள இன்னைக்கி கொல்லாம வுடமாட்டம்ல!” -தாத்தா கையில் கருங்கல்லை எடுத்ததும், நாங்கள் பயந்து, “யாச்சோ… காப்பாத்து”ன்னு கதறியழுதோம். கருக்கலானதும் வாசல்ல சூடம் கொளுத்திட்டிருந்த ஆச்சி எங்க சத்தங்கேட்டு தெருமுனைக்கு ஓடி வந்து, “ எல தம்பி! மொதல்ல கல்ல கீழப் போடுல. சின்னப் பயலுவ பயிப்புடுதாணுவளா”ன்னு ஒரு அதட்டு; ஒரு மெரட்டு மெரட்டினாள்.
கோட்டிபெருமாள் தாத்தா கொஞ்சம் நேரம் மொறைச்சிப் பாத்துட்டு, கல்லத் தூக்கி தூர வீசிட்டு, தரையைப் பாத்து கவுந்தபடி நின்னாரு. ஆச்சி அவரு கையப்பிடிச்சி கீழக் கெடந்தத் துண்டயெடுத்துக் கொடுத்ததும். இடுப்புலக் கெட்டிக்கிட்டு, “ யக்கோவ்! ரொம்ப பசிக்குது. சோறு இருந்தா கொஞ்சமோண்டு தாயேன்” என்றார். “சரி வா”ன்னு ஆச்சி முன்னாலப் போவ. ஆச்சிக்கிப் பின்னால நாங்கப் போனோம். எங்களுக்குப் பின்னால கோட்டிபெருமாள் தாத்தா ஒடம்புலப் பூசுன திருநாறையெல்லாம் அழிச்சிக்கிட்டே வந்தாரு.
முத்தத்துல பாய் விரிச்சி, மூணு பேத்துக்கும் வாழை இலைப்போட்டு, சுடச்சுட பானையிலச் சோத்தத் தோண்டி வச்சி, உப்புக்கண்டம் குழம்ப ஊத்துனதும்.. கோட்டிபெருமாள் தாத்தா, “ யக்கோவ்! எனக்கு வெறுங்குழம்பு போதும் அவணுவ ரெண்டு பேத்துக்கும் கறிய வையி”ன்னு சொன்னாரு. அவனுவளுக்கு சட்டி நெறைய கறியிருக்கு. இனும நீ என்னிக்கி வாரீயோ! நல்ல தின்னு பா”ன்னு ஆப்ப நெறைய கறியள்ளி தாத்தாக்கு கோரி வச்சா. அடையிலக் கெடந்தக் கோழி அரிசியை வேகமாய்க் கொத்துவதுபோல கோட்டிபெருமாள் தாத்தா பசியில பெரிய பெரிய உருண்டையாய் உருட்டி வாய்க்குள்ளத் திணிச்சிட்டு, ஒரு சொம்புத் தண்ணீய ஒரு சொட்டு மிச்சமில்லாமக் குடிச்சிட்டு, வயித்தத் தடவி யாவு…ன்னு ஏப்பம் விட்டாரு.
“ இந்த ஊரு ரொம்ப மோசமான ஊருன்னு ஒங்களுக்கு எத்தனத் தடவச் சொல்லிருக்கேன். இப்படி கருக்கல்ல வந்து பேயிப்பிசாசு எதாவது பிடிச்சிக்கிட்டா! என்னலப் பண்ணுவென் நா” என்று ஆச்சி எங்களத் திட்டுனதக் கேட்ட கோட்டிபெருமாள் தாத்தா.
“ யக்கோவ், பேயிப்பிசாசுக்கிட்ட தப்பிச்சிரலாம்; என்னமாறி பைத்தியம் புடிச்சவங்கிட்டக்கூட தப்பிச்சிரலாம். ஆனா, சாதிவெறிப்புடிச்ச நம்மூருக்காரணுவக்கிட்டருந்து மட்டும் அவ்வளவு லேசுலத் தப்ப முடியாது. ஈவிரக்கமில்லாத ஈனப்பயலுவ! எப்பும் வந்தாலும், பேரனுவள நம்மூருக்கு வரும்போது மட்டும் பாத்து பத்திரமா வரச்சொல்லு. சரியா!”ன்னு முத்தத்தில் கிடந்த ஈக்குவாரியலில் ஒரு குச்சியையுடைத்து பல் குத்திக்கொண்டு வாதமடக்கி மரத்தை நோக்கி நடந்துபோனார் கோட்டிபெருமாள் தாத்தா.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
