எதிர்ப்பட்ட சந்திக்கருகே அமைந்திருந்த கடைத்தொகுதியில் உந்துருளியை நிறுத்தி, தலைக்கவசத்தைக் கழட்டினேன்.
இலையான்கள் ஒன்று சேர்ந்து ஒலிபெருக்கியில் ரீங்காரிப்பதுபோல ஊர் இரைந்துகொண்டிருந்தது. வெயிலின் எரிச்சலைக் கக்கியபடி வாகனங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. கடைகள் ஒவ்வொன்றிலும் ஒலித்த வெவ்வேறு பாடல்கள் ஒன்றுடனொன்று கலந்து எரிச்சலை மேலும் அதிகப்படுத்தின. தெருவோரம் அழுகிக்கிடந்த பலாச்சக்கையை குட்டை கண்ட நாய்க்குட்டி ஒன்று இழுத்துக்கொண்டு எங்கோ போனது. மூக்கருகே மொய்த்த கொசுக்களிலிருந்து பலாப்பழ வாசம் வரவும் நான் சவத்தை என்றபடி அவற்றைக் கலைத்தேன்.
செத்த வீடு இங்கே எங்கோதான் அருகில் இருக்கவேண்டும் என்று கூகிள் வரைபடம் சொல்லியது. உணவுக் கடைக்கு வெளியே கிடந்த கொத்து ரொட்டித் தட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த இளைஞனிடம் கேட்டேன்.
தம்பி, இந்த மார்க்கண்டேயரிண்ட செத்த வீடு எங்கெண்டு தெரியுமா?
அவன் மொனவத என்று சிங்களத்தில் பதிலுக்குக் கேட்டான்.
செத்த வீடு. மல்கெதர, கொகதிங்… தன்னவத?
அவன் புரியாது தலையை உயர்த்த, நான் கமன்னா என்றபடி பக்கத்துக்கடையைப் பார்த்தேன். அது ஒரு நவீன முடி திருத்தகம். அருகிலேயே பல்பொருள் அங்காடி ஒன்று இயங்கியது. அங்காடிக்கு முன்னாலே அதிட்ட இலாபச் சீட்டுகள் விற்கும் பெட்டிக்கடை இருந்தது. அத்தனையும் ஊருக்குப் புதிது. செத்த வீடு எங்கு நிகழ்கிறது என்பதை எவருமே அறிந்திருக்கமாட்டார்கள். இப்போதெல்லாம் எந்த ஊருக்குப் போனாலும் சொந்த ஊரவரைவிட வெளியாள்கள்தான் அதிகமாகத் திரிகிறார்கள். மரண அறிவித்தலில் புகைப்படத்தைப் போட்டிருந்தாலும் அதனைக்காட்டி விசாரித்திருக்கலாம். சற்றுத் தள்ளி ஒரு கோயில் தெரிந்தது. அங்கு உட்கார்ந்திருப்பவர்களிடம் கேட்கலாம் என்று நான் உந்துருளியை இயக்கப்போனேன்.
ஆனைக்கோட்டை வீதிப்பக்கமிருந்து பறை ஒலி எழுந்தது.
நான் உடனேயே உந்துருளியை ஒலி வந்த திசையில் திருப்பினேன். வரும்போது நகர மையத்தில் வாங்கிய பூச்செண்டு பெற்றோல் தாங்கி மேலே குழந்தையைப்போல உட்கார்ந்திருந்தது. சில ரோசாக்களோடு பெயர்கள் தெரியாத மேலும் பல பூக்கள் சேர்த்துக் கோர்த்த செண்டு அது. மலையகத்துத் தோட்டத்திலிருந்து வந்திருக்கவேண்டும்.
வான்கூவரிலிருந்து மாமா அதிகாலை நான்கரை மணிக்கே அழைப்பெடுத்திருந்தார்.
காலமை சாப்பிட்டியா? என்ன, பாணா?
பேச்சு சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்த மனைவி, என்னை வெளியே போய்க் கதை என்று விரட்டினாள். மகளும் எழுந்துவிட்டாளானால் தொலைந்தது. நான் நேரே குசினிக்குள் சென்றேன்.
இஞ்ச இன்னும் விடிய இல்ல மாமா. என்ன விசயம்? சொல்லுங்கோ.
ஓ ஓகே ஓகே. அவசரமா ஒரு அலுவல். எங்கட மார்க்கண்டேயரைத் தெரியும்தானே? என்னோட கந்தோரில வேலை செஞ்ச மனுசன். அவர் நேத்து மோசம் போயிட்டதா இண்டர்நெட்டில கிடந்துது. நல்ல சீவன். பதினொரு மணிக்கு பிரேதம் எடுக்கினமாம். ஒருக்கா போய் எட்டிப்பாக்கிறியா?
இண்டைக்கா மாமா? எனக்கு வேலை நாள். லீவு எடுக்கிறது கஷ்டம். மத்தியானம் லஞ்ச் பிரேக்கில எட்டிப்பார்க்கவா?
பிரேதத்தை எரிச்சாப்பிறகு என்னத்த எட்டிப்பாக்கிறது? அரை நாள் லீவு போட்டிட்டுப் போ. அந்தக்காலத்தில மார்க்கண்டேயர் எங்கட குடும்பத்துக்கு செஞ்ச உதவியள் கொஞ்ச நஞ்சமா? விலாசத்தை வாட்சப்பில அனுப்புறன். மறக்காம ஒரு பொக்கேயும் கார்டும் கொண்டுபோய் வச்சிட்டு வா.
அவர் சொல்லும் காலத்தில் அம்மாவும் மாமாவும் ஏதோ ஒரு கடன் பிரச்சனையால் பேச்சுவார்த்தையே இல்லாது இருந்தது ஞாபகம் வந்தது. அம்மாவின் மரணத்தோடுதான் மறுபடியும் இரண்டு குடும்பங்களுக்கிடையே தொடர்பு ஏற்பட்டது. பின்னர் மாமா ஊருக்கு வரும்போதெல்லாம் எதையேனும் கொண்டுவருவதுண்டு. மடிக்கணினி, செல்பேசி, உடுப்புகள், ஸ்பீக்கருகள். என் திருமணத்தையும் வந்து நின்று நடத்தி வைத்தது அவர்தான். இன்றும் வீட்டில் நான் பணம் கொடுத்து வாங்கிய பொருட்களின் பெறுமதியைவிட மாமா கொடுத்தவையின் பெறுமதிதான் அதிகமாக இருக்கும்.
சொன்னாப்போல எம்பசிலயிருந்து ஈமெயில் ஏதும் வந்ததே? இன்னும் ஒரு கிழமைக்குப் பார்ப்பம். அதுக்குமேலயும் ஒரு சிலமனும் இல்லாட்டி நான் கோல் பண்ணிப்பார்க்கிறன். எப்பிடியும் விசா கிடைச்சிடும். சரி சரி, நீ நிம்மதியாப் போய்ப் படு. மறக்காம செத்த வீட்டுக்கு நேரத்துக்குப் போயிடு, என்ன?
என் தூக்கம் முற்றாகக் கலைந்துவிட்டிருந்தது. மாமாவிடமிருந்து மரண அறிவித்தல் செய்திகள் மின்னிக்கொண்டிருந்தன. நான் அவற்றைத் திறந்து பாராமல், கேற்றிலை அடுப்பில் வைத்தேன். இழவு சீவியம்.
ஆனைக்கோட்டை வீதிக்குள் கொஞ்சத்தூரம் சென்றதும் வரக்கூடிய இடதுபுற ஒழுங்கைக்குள் பறை ஒலி அழைத்துச்சென்றது. ஒழுங்கையின் இரு மருங்கும் குருத்தோலைத் தோரணங்களை இரண்டு சிறுவர்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரு லாண்ட் மாஸ்டர் பச்சைக்குலை வாழை மரங்களைப் பறித்துவிட்டுத் திரும்பிச்செல்ல முயன்றுகொண்டிருந்தது. நான் பிரதான வீதிக்கரையில் உந்துருளியை நிறுத்திவிட்டு பூங்கொத்தோடு உள்ளே இறங்கி நடந்தேன். செத்த வீட்டில் கூட்டம் இன்னமும் அதிகம் சேர்ந்திருக்கவில்லை. மாமரத்துக்குக் கீழே உட்கார்ந்து பறைக்கலைஞர்கள் இசைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு கூடவே வந்திருந்த ஒரு சிறுவன் செல்பேசியில் எதையோ துழாவிக்கொண்டிருந்தான். வாசல் மேசையில் வெற்றிலை, சீவல் சரை ஒன்று புதிதாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கம் பூசைப்பொருட்களின் பை கிடந்தது. வெளியில் ஓரிருவர் மாத்திரம் வாடகை நெகிழி நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். முழுக்கைச் சட்டை, பாண்ட்ஸ் என்று அலுவலக உடையோடு பூங்கொத்தும் கையுமாக வந்திருந்தவனை அத்தனை கண்களும் நூதனமாய் நோட்டமிட்டன.
நான் சப்பாத்தையும் காலுறையையும் வாசலில் கழட்டி வைத்துவிட்டு உள்ளே நுழைந்தேன்.
வரவேற்பறையில் பட்டு வேட்டி சட்டையோடு மார்க்கண்டேயரை வளர்த்தியிருந்தார்கள். பார்த்தால் மிக வயதானவராகத் தெரிந்தார். சிவலை மனுசன். தன்னைவிட இருபது வயதேனும் குறைந்த என் மாமாவோடு எப்படி இவருக்கு நட்பு ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகம் எழுந்தது. நான் அவரது காலடியில் பூங்கொத்தை வைத்துவிட்டு சற்று நேரம் அமைதியாக நின்றேன்.
உள்ளேயும் நெகிழி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பெண்கள் சிலர் அங்கு குழுமியிருந்தார்கள். வீட்டு உடையில் நின்றவர்கள் அயலவராக இருக்கலாம். மரண வீடுகளில் வெள்ளை வேட்டி, சட்டை என்று ஆண்களுக்குத் தம் உடையில் இருக்கும் கவனம் பெண்களுக்கு இருப்பதில்லையோ என்றே தோன்றியது. சேலையில் நின்றவர்கள்கூட எளிமையான நூல் சேலைகளையே அணிந்திருந்தார்கள். இளம்பெண் ஒருத்தி தேநீர் தட்டோடு சுற்றி வர, ஓரிருவர் மாத்திரம் கிண்ணங்களை எடுத்தார்கள். அந்த வீடே ஒருவித வெறுமையோடு இருந்தாற்போலத் தோன்றியது. வரவேற்பறையில் ஒரு ஷோகேஸ் நிறையக் கண்ணாடிக் குவளைகளும் பீங்கான் தட்டுகளும் புகைப்படங்களும் இருந்தன. இன்னொன்றில் பழைய தினப்பத்திரிகைகள் குவிந்திருந்தன. சில புத்தகங்களும் அலங்கோலமாகக் கிடந்தன. சுவரில் இன்னமும் சென்ற ஆண்டுக்கான நாட்காட்டி தொங்கியது. எப்போதே அந்த வீட்டில் நிகழ்ந்த திருமணத்திற்காக ஒட்டிய சுவர் எழுத்துகள் அழுக்கேறிக்கிடந்தன. நான் மெதுவாக அறைகளையும் நோட்டம் விட்டேன். எங்கும் பெரிதாய்த் தளபாடங்களைக் காணக்கிடைக்கவில்லை. அதிகம் புழக்கத்தில் இல்லாத வீட்டிலிருந்து அடிக்கக்கூடிய ஒருவித செனி நாற்றம் பிரேதத்தின் வாசனைத் திரவியத்தையும் தாண்டி நாசிக்குள் எட்டியது. படுக்கை அறைக்குள் நாய் ஒன்று கீழே சளித்துத் தூங்கிக்கொண்டிருந்தது. பறை ஒலிக்குப் பயந்து அறைக்குள் அது ஒதுங்கியிருக்கலாம். அல்லது இறந்தவரோடு அதுவும் அந்த அறையில் வசித்திருக்கலாம். மார்க்கண்டேயரின் மனைவி இன்னமும் உயிரோடு இருப்பதாகத்தான் மரண அறிவித்தலில் கிடந்தது. ஆனால் எழுபது வயதுகளில் உள்ள எவரையும் அங்கு காணக்கிடைக்கவில்லை. ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மாத்திரம் அருகே உட்கார்ந்திருந்து செல்பேசியில் யாரோடோ பேசிக்கொண்டிருந்தார். அவருடைய முகஜாடை சடலத்தின் முகத்தோடு கொஞ்சம் பொருந்திப்போனாற்போலவே தோன்றியது. டென்மார்க்கில் ஒரு மகள் வசிப்பதாக அறிவித்தலில் வாசித்தது ஞாபகத்துக்கு வந்தது. அவராக இருக்கலாம். செய்தி கேட்டதும் அவசரம் அவசரமாகப் புறப்பட்டு வந்திருப்பார். நான் அவர் பேசி முடிக்கும்வரை காத்திருந்து, பின்னர் தயக்கத்தோடு அருகில் சென்றேன்.
நான் தில்லைநாதனின் மருமகன். மாமாவும் மார்க்கண்டேயர் அங்கிளும் ஒண்டா வேலை செஞ்சவையாம்.
அவர் உடனேயே எழுந்து நின்றார்.
விளங்கேல்ல. யாரைச் சொல்லுறீங்கள்? எனக்கு டக்கெண்டு ஞாபகம் வரேல்ல.
தில்லைநாதன். கந்தோரில வேலை செஞ்சவர். இப்ப கனடால இருக்கிறார். தண்ட பெயரைச்சொன்னால் மட்டுக்கட்டுவிங்கள் எண்டு சொன்னார்.
அதற்கிடையில் மறுபடியும் ஒரு தொலைப்பேசி அழைப்பு வரவும் அவர் ஒரு நிமிசம் என்றபடி அதைக் காதில் வைத்தார். நான் ஆளைத் தவறாக மட்டுக்கட்டியிருக்கவேண்டும். கூர்ந்து பார்க்கையில் பிரேதத்தின் மூக்குக்கும் இந்தப் பெண்ணின் மூக்குக்கும் சம்பந்தமே இல்லை. நிறமும் அத்தனை நெருக்கமில்லை. அவர் செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
இல்லை. எப்பிடியும் இரண்டு மணியாகும் எண்டு நினைக்கிறன். சித்தப்பா இப்பதான் வவுனியா தாண்டினவராம். அவர் வந்து குளிச்சி ரெடியானாத்தான் ஐயர் பூசையைத் துடங்கலாம். ஓம் ஓம், ஐயர் வந்திட்டார். அவருக்கு இதை முடிச்சிட்டு இன்னொரு செத்த வீட்டுக்கும் போகோணுமாம்.
நான் புறப்படலாமென்று திரும்பினேன். அப்போது செல்பேசியில் பேசுவதை நிறுத்திவிட்டு அந்தப்பெண் என்னை அழைத்தார்.
தம்பி. அந்தக் கொப்பியில உங்கட பேர், விலாசம், போன் நம்பரை எழுதிவிடுறிங்களா? பிளீஸ்.
சொல்லிவிட்டு அவர் மறுபடியும் செல்பேசியில் பேசத்தொடங்கினார். நான் என் விபரங்களைக் குறித்துவிட்டு வெளியே வந்தேன். நேரம் பதினொன்றைத் தாண்டியிருந்தது. கூடத்தில் ஐயர் பூசைப் பொருட்களை நிலத்தில் பரப்பித் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தார். இரண்டு வாழைகளையும் வாசலில் நிமிர்த்திக் கட்டியிருந்தார்கள். பறைக்கலைஞர்கள் வாசிப்பதை நிறுத்திவிட்டு வெற்றிலை, சீவல் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆள்களும் இப்போதுதான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தார்கள். வழமையான செத்த வீடுகளுக்கேயான ஒப்பாரியேதும் அங்கு இருக்கவில்லை. கந்தோருக்கு வந்து போகிறவரைப்போலத்தான் ஒவ்வொருவரும் உள்ளே சென்று திரும்பினார்கள். கட்டியணைத்துக்கூட எவரும் அழவில்லை. மார்க்கண்டேயர் என் மாமாவுக்கு என்ன உதவி செய்திருக்கக்கூடும் என்ற யோசனை வந்தது. யாரிடமாவது சொல்லிவிட்டுப் புறப்படலாம் என்றால் செத்தவீட்டிலே சொல்லிக்கொண்டு விடைபெறக்கூடாது என்ற ஐதீகம் நினைவுக்கு வந்தது. நான் அன்றைய தினப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு ஒரு நெகிழி நாற்காலியில் உட்கார்ந்தேன். வீட்டு முற்றத்தின் அமளியைக் காணொளி எடுத்தேன். மாமாவுக்கு உடனேயே அனுப்பினால் உள்ளே போய் மார்க்கண்டேயரை நேரலையில் காட்டு என்று கேட்டுவிடுவார். வேண்டாம். தேநீர்த் தட்டோடு அந்தப் பெண் இப்போது முற்றத்தில் உட்கார்ந்தவர்களிடம் வருவது தெரிந்தது. அம்மாள் கோயில் கொடியேறி அன்று ஏழாம் திருவிழா. ஒரு மிடறு உள்ளே போனாலும் துடக்காகிவிடும். நான் பத்திரிகையை வைத்துவிட்டு எழுந்தேன்.
ஒழுங்கைக்குள் நடந்தபோது தோரணங்களைக் கட்டிய சிறுவர்கள் இப்போது அஞ்சலி சுவரொட்டிகளைக் கையில் எடுத்திருந்தார்கள். மின் கம்பத்துக்குச் சிறிதாகவும் சுவரில் ஒட்டப் பெரிதாகவும் என இரு வேறு சுவரொட்டிகள். வீதி முகப்பிலிருந்த கம்பத்திலிருந்து அவர்கள் ஒட்ட ஆரம்பித்தார்கள். மார்க்கண்டேயரின் வண்ணப் படத்தோடு குட்டிக் குட்டியாய் எழுத்துகள். உள்ளூர ஏதோ துணுக்குறவும் நான் கண்ணாடியை எடுத்து மாட்டி வாசித்தேன்.
கண்ணீர் அஞ்சலி
திரு நமசிவாயம் பொன்னுக்கோன், (B.A)
ஓய்வு பெற்ற தமிழாசிரியர்
தோற்றம் 16-07…
நமசிவாயம் பொன்னுக்கோனா? நான் சுவரொட்டியை நெருங்கிப்போய்ப் பார்த்தேன். அந்த வீட்டினுள்ளே வரவேற்பறையில் கிடக்கும் அதே மனுசன்தான். ஆனால் பெயர் மார்க்கண்டேயர் அல்ல. திடீரென்று பறை ஒலி காதைப் பிளக்க ஆரம்பித்தது. நான் ஐந்தும் கெட்டு அவசரமாக மாமா அனுப்பியிருந்த மரண அறிவித்தல் செய்தியைத் திரும்பவும் திறந்தேன். திரு காராளசிங்கம் மார்க்கண்டேயர். குளப்பிட்டிச் சந்திக்கருகில்தான் அந்த முகவரியும் இருந்தது. இங்கேதான் அருகில் எங்கோ அந்த செத்த வீடும் இடம்பெறவேண்டும். நான்தான் இடம் மாறி வந்துவிட்டேன். இனிமேல் அந்த வீட்டை எங்கே என்று தேடுவது? கோயிலடியில்தான் சென்று விசாரிக்கவேண்டும். இல்லையேல் ஏதாவது பழைய பலசரக்குக்கடை எனில் கேட்கலாம். நான் விரைந்து சென்று உந்துருளியை இயக்கினேன். உடனேயெ ஒரு நினைப்பு வரவும் உந்துருளியை அந்த ஒழுங்கைக்குள்ளேயே திருப்பி, பிரசுரம் ஒட்டிக்கொண்டிருந்த சிறுவர்களின் அருகே சென்று நிறுத்தினேன்.
தம்பியவை. இங்காலப்பக்கம் இன்னொரு செத்தவீடும் நடக்குதா? மார்க்கண்டேயர் எண்டு.
அவர்கள் யோசிக்காமலேயே தம்மிடமிருந்த பைக்குள்ளிருந்து ஒரு துண்டுப்பிரசுரத்தை எடுத்துக் காட்டினார்கள்.
இவரா அண்ணை?
நான் அதைப் பறிக்காத குறையாக வாங்கிப்பார்த்தேன். திரு காராளசிங்கம் மார்க்கண்டேயர் வண்ணப்படத்தில் புன்னகைத்துக்கொண்டிருந்தார். மனைவி, பிள்ளைகள் தகவல் கொடுத்திருந்தார்கள். மாமா குறிப்பிட்ட அதே மார்க்கண்டேயர்தான்.
இந்த மனுசன்தான். இவரிண்ட செத்தவீடு எங்க நடக்குதெண்டு தெரியுமா?
இந்த றோட்டாலேயே இன்னும் ரெண்டு நிமிசம் உள்ள ஓடினிங்கள் எண்டால் அந்தப்பக்கம் ஒரு ஒழுங்கை வரும். நாங்கள் முகப்பிலயே வாழை கட்டி வச்சிருக்கிறம். கண்டுபிடிச்சிடுவியள்.
அப்பிடியா. சரி. நான் போய்ப் பாக்கிறன்.
நான் கிளம்பவும் அவர்கள் புறத்தாலே கூப்பிட்டார்கள்.
ஆனா அண்ணை, சவத்தை அப்பவே எடுத்திட்டினம். நீங்க நேரா சுடலையடிக்குப் போனீங்கள் எண்டால் பிடிக்கலாம்.
பன்னிரண்டு மணிக்கு இன்னமும் ஐந்து நிமிடங்களே இருந்தன. சுடலைக்குப் போக இனி நேரமில்லை. உடல் இப்போதே வியர்த்து கசகசத்தது. காலையில் நிகழ இருந்த வேலை நிமித்த சந்திப்பு ஒன்றை நான் ஒரு மணிக்கு மாற்றியிருந்தேன். அதற்குள் நகரத்துப் பல்லடுக்கு அங்காடிக்குச் சென்று, கழிப்பறையில் கைகால் முகம் கழுவி, எதையாவது சாப்பிட்டுவிட்டுத்தான் அலுவலகத்துக்கு விரையவேண்டும். மாமாவைச் சமாளிப்பதுதான் கடினம். சும்மாவே நான் ஒன்றுக்கும் உருப்படாதவன் என்ற எண்ணம் அவருக்குண்டு. ஒரு செத்த வீட்டுக்குக்கூட ஒழுங்காகப் போகத்தெரியாதவன் என்று எரிந்து விழுவார். என் மனைவிக்கும் அழைப்பெடுத்துக் கரித்துக்கொட்டக்கூடும்.
சுருக்கென்று ஒரு யோசனை எனக்குள் எழுந்தது. நான் அச்சிறுவர்களிடம் கேட்டேன்.
இந்த நோட்டிஸ நான் வச்சிருக்கவா தம்பி?
அவர்கள் பைக்குள்ளிருந்து ஒரு கற்றையையே எடுத்துக்கொடுத்தார்கள். நான் அவற்றை வேண்டாமென்று சொல்லி, கையிலிருந்ததை மாத்திரம் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். செத்தவீட்டுக் காணொளி, மார்க்கண்டேயர் முகத்தோடு அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் இரண்டுமே போதும். எல்லாவற்றையும் நான் மாமாவின் வாட்சப்புக்கு தரவேற்றினேன். மார்க்கண்டேயரின் செத்த வீட்டினுடைய நேரலை இணையத்தில் இருந்தால் என்னாவது என்ற சந்தேகம் வந்தது. உடனேயே பதிவேற்றிய காணொளியை அழித்தேன். பறைச்சத்தம் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது. நான் அந்தப் பின்னணியில் மாமாவுக்கு ஒலிச்செய்தியை அனுப்பினேன்.
மாமா. செத்தவீடு நல்லா நடக்குது. நீங்க சொன்னமாதிரி பொக்கேயும் ஒரு கார்டும் வச்சிட்டு வந்திட்டன். எண்ட டீடெயில்தான் குடுத்தனான். அந்திரட்டிக்கு எடுத்துச் சொல்லிச்சினம் எண்டா சொல்லுறன்.
செய்தியை அனுப்பிவிட்டு துண்டுப்பிரசுரத்தை மடித்து சிறுவர்களிடமே திருப்பிக்கொடுத்தேன். பறை ஒலி இப்போது அசுரத் தாளத்துக்கு எகிறியிருந்தது. மாமாவிடமிருந்து வந்த வாட்சப் அழைப்பை உடனேயே எடுத்தேன்.
மாமா. நீங்கள் கதைக்கிறது ஒண்டும் கேக்குதில்லை. இஞ்ச பிரேதத்தை எடுத்துக்கொண்டிருக்கிறினம். நான் வீட்ட போய் எடுக்கவா?
நகர மையத்தை நோக்கி நான் உந்துருளியைத் திருப்ப, பறை ஒலி கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து விடைபெற ஆரம்பித்தது.
மூன்று வாரங்கள் கழித்து ஒரு பதிவுத் தபாலில் அமரர் நமசிவாயம் பொன்னுக்கோனின் அந்தியேட்டி அழைப்பிதழ் கடிதம் வந்து சேர்ந்தது.

அந்தியேட்டி அழைப்பிதழை எவராவது பதிவுத் தபாலில் அனுப்புவார்களா என்று அதிசயித்தபடி கடித உறையைப் பிரித்தால் உள்ளே இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. வழமையான அந்தியேட்டிக்கான கிரியை, மதிய உணவு அழைப்பிதழ் அட்டையோடு கூடவே ஒரு கடிதமும் காசோலையும் வைக்கப்பட்டிருந்தது. மொத்தமாக இருபதினாயிரம் ரூபாய்களுக்கான காசோலை அது. நான் அவசரமாக அக்கடிதத்தைப் பிரித்து வாசித்தேன். கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த கடிதத்தின் பிரதி அது.
அன்புடையீர்,
என்னுடைய இறுதிச்சடங்குக்கு தாங்கள் வருகை தந்ததையிட்டு மனமகிழ்கிறேன்.
வயோதிபத்தின் தனிமையில் உழன்று போனவன் நான். இக்கடிதத்தை எழுதக்கூட அனுமதி கொடாமல் முதுமை என் விரல்களை நடுநடுங்க வைக்கிறது. பேனாவை உறுதியாகப் பிடிக்கமுடியவில்லை. மனிதர்களைச் சந்திப்பதும் பேசுவதும் அரிதாகிக்கொண்டிருக்கின்றன. நான் இறந்துபோனால்கூட அதைத் தெரிந்துகொள்ள மனிதர்கள் எவரும் அருகில் இல்லை. நாளை நான் எங்கேனும் ஒரு அனாதைப் பிணமாய்க் கைவிடப்பட்டுவிடுவேனோ என்ற தீரா கவலை உள்ளத்தை அலைக்கழிக்கிறது. ஒரு பத்துப்பேராவது என் மரணச் சடங்குக்கு வரமாட்டார்களா என்று மனம் ஏங்குகிறது.
அன்பரே. அந்த ஏக்கத்தை நீங்கள் உங்களது வருகையால் தீர்த்துவைத்தீர்கள். அதற்காக என்னுடைய பேரன்பினைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என் மரண தினத்தன்று என்னோடு பழகிய நாள்களை நீங்கள் நினைவு கூர்ந்திருப்பீர்கள் அல்லவா? அதற்கு என் மனமார்ந்த நன்றி.
இக்கடிதத்தோடு ரூபாய் இருபதினாயிரத்துக்கான காசோலையையும் உங்களுக்காக இணைத்துள்ளேன். அதனை நீங்கள் மனமுவந்து ஏற்று விரும்பியவகையில் செலவு செய்திடல்வேண்டும். அப்போதுதான் இந்த ஆன்மா சாந்தியடையும். என் நினைவுகளோடு உங்களின் சிறு பொழுது ஒன்று புன்னகையோடு கழியும் என்கின்ற எண்ணம் பெரு மகிழ்வை ஏற்படுத்துகிறது.
நன்றி.
இப்படிக்கு,
நமசிவாயம் பொன்னுக்கோன் (B.A)
ஓய்வு பெற்ற தமிழாசிரியர்.
நான் கடிதத்தையும் காசோலையையும் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வாசித்தேன். கையெழுத்தில் தெரியும் நடுக்கம் கடிதத்தின் உள்ளடக்கத்தில் இல்லை. நாட்கள் என்று எழுதிய இடங்கள் எல்லாம் அடிக்கப்பட்டு நாள்கள் என மாற்றப்பட்டிருந்தன. நமசிவாயம் இறுதிக்காலத்திலும் இலக்கணத்தை மறக்கவில்லை என்று நினைக்கையில் எனக்குள் சிறு புன்னகை தழும்பியது.
காசோலையில் இருபதினாயிரம் என்ற இலக்கம் மின்னிக்கொண்டிருந்தது.
சின்னவள் சில மாதங்களாகவே தன் பிறந்த நாளுக்கு ஒரு பிளே ஸ்டேசன் வேண்டுமென்று சாடைமாடையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். இல்லையெனில் இன்னும் கொஞ்சம் காசைப்போட்டு மனைவிக்கு தங்கத்தில் ஒரு தோடு வாங்கிக்கொடுக்கலாம். இப்போதைய விலைவாசிக்கு இருபதினாயிரம் என்பது பெரும் தொகை ஒன்றும் இல்லைதான். போய் வந்த பெற்றோல் செலவுக்கே இது சரியாகிவிடும். இலங்கை வங்கியின் காசோலை அது. இப்படி எத்தனை கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்குமோ தெரியாது. முதல் வேலையாக வங்கிக்குச் சென்று இதனை மாற்றவேண்டும். அதில் ஒரு நூறு ரூபாய்க்கு இந்த நமசிவாயம் பொன்னுக்கோனின் பேரில் பிள்ளையார் கோயிலில் ஒரு அர்ச்சனையைச் செய்யவேண்டும். பாவம். நல்ல சீவன். நான் கடிதத்தையும் அழைப்பிதழையும் மறுபடியும் வாசித்துப்பார்த்தேன். ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. செத்த வீடு நடந்த அதே வீட்டில்தான். கொஞ்சம் தூரம்தான்.
எதற்கும் கைகாவலுக்கு ஒரு எட்டுப் போய், முகத்தைக் காட்டிவிட்டு வரலாம். பாதகமில்லை.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
