ஒரு சராசரி இந்திய குடிமகன் எண்பத்தைந்து வயது வரை வாழ்கிறான் என்று வைத்துக் கொண்டால், அதில் அறுபது நொடிகள் என்பது எத்தனை சதவிகிதம்? கால்குலேட்டரில் தட்டிப் பார்த்தீர்கள் என்றால் 0.000… என்று நிறைய பூஜ்யங்கள் வரும். ஒன்றும் பெரிது இல்லைதான். ஆனால் இவனைப் பொறுத்தவரை அறுபது நொடிகள் என்பது இவனுடைய வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானது.
கடந்த கால முக்கிய நிகழ்வுகளை சரித்திரம் என்று குறிப்பிடுகிறோம். ஆனால் ஒரு விந்தையான விஷயம் என்னவென்றால், அத்தகைய நிகழ்வு நம் கண்முன்னேயே பரந்து விரியும் போது, பிற்காலத்தில் அது சரித்திரமாக பேசப்படும் என்பதை நாம் உணர்வதில்லை. அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று தன் கண்முன்னே நடக்கப் போகிறது என்பதை உணராமல், மாலை மும்பை லோக்கல் ட்ரைனில் பயணித்து சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் இறங்கி வேகமாக வெளியே ஓடி கொண்டிருந்தான்.
குட்டையான, சற்று குண்டான ஒரு மனிதனை, அவனுடைய சட்டையும் இவனுடைய சட்டையும் உரசும் தூரத்தில் கடந்து போனான். ஒரு வேளை, அவனுடைய மூச்சுக்காற்றுகூட இவன் மேல் பட்டிருக்கக்கூடும். அல்லது, இவனுடைய பிம்பம் அவனுடைய விழிகளில் நுழைந்து, தலைகீழாக ரெட்டினாவில் பதிவாகி, அந்த பிம்பத்தை அவனுடைய மூளை நேர் செய்யும் கணத்தில், சுவாரஸ்யமில்லாமல் இவனைக் கடந்து போய்விட்டிருக்கலாம். நாம் தினம் தினம் எத்தனையோ மனிதர்களை கடந்து போகிறோம். அவர்களில் எத்தனை மனிதர்களுடைய பெயர் நமக்கு தெரிய வருகிறது? ஆனால் அந்த மனிதனுடைய பெயர் இவனுக்கு தெரிய வந்தது. இவனுக்கு மட்டுமில்லை. இந்த உலகத்துக்கே தெரிய வந்தது. இவனைக் கடந்து போன அந்த மனிதனின் பெயர் அஜ்மல் கசாப் என்று.
டெர்மினஸை விட்டு வெளியே வந்து ரோட்டைக் கடக்க நின்று கொண்டிருக்கும் போது, உள்ளேயிருந்து படபடவென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. பின்னாளில் அந்த நிகழ்வை ‘மும்பை தீவிரவாத தாக்குதல்’ என்றும் ‘26/11’ என்றும் சொன்னார்கள். அன்று அந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 58 பேர் கொல்லப்பட்டார்கள் என்று சரித்திரம் சொல்கிறது. அந்த கொலைகளில் ஒன்றில், இவனுக்கும் தொடர்பு இருந்தது.
மாலையில், நைட் ஷிஃப்ட் வேலைக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தான். டைனிங் டேபிளில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இவன் பெண் “அப்பா நாளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட கடைசி நாள். கட்டலேன்னா கிளாஸ்லே அலோவ் பண்ண மாட்டாங்க” என்று பரிதாபமான குரலில் சொன்னாள்.
“கட்டிடரேண்டா. கவலைப் படாதே” என்று அவளுக்கு தைரியம் சொன்னான்.
‘நீ தான் சாட்சி’ என்று சொல்வது போல் தன் அம்மாவைப் பார்த்துவிட்டு, ஸ்கூல்பையை தூக்கிக் கொண்டு தன் ரூமுக்குப் போனாள் இவன் பெண்.
அவள் போனவுடன், “என்னங்க, கட்டிடுவீங்கதானே?” என்று கவலையுடன் கேட்டாள் மனைவி.
“ம்.. நாளைக்கு காலையிலே முதல்லே ஸ்கூலுக்கு போயிட்டு ஃபீஸ் கட்டிடறேன்” என்றான்.
“போன மாசம் மளிகை சாமான் வாங்கின பாக்கி இருக்கு. நேத்திக்கு சாயந்திரம் கடைக்காரர் பையனை அனுப்பியிருந்தாரு” என்று சன்னமான குரலில் சொன்னாள்.
அதைத்தவிர இன்னும் இருந்த மிச்ச பாக்கிகளையும், ஆஃபீஸ் கிளம்பும் வேளையில் சொல்லி இவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டிருப்பாள் என்று தெரியும்.
“நாளைக்கு கார்த்தாலே வந்ததும், என்னென்ன பாக்கி இருக்கோ எல்லாத்தையும் கட்டிடலாம். கவலைப்படாதே. இந்தமாசக் கடைசிவரை பல்லைக் கடிச்சுக்கிட்டு கொஞ்சம் பொறுத்துக்கோ. எல்லாம் சரியாயிடும்” என்று ஆதரவாக அவள் கை மேல் தன் கையை வைத்து சமாதானப் படுத்தினான்.
“அப்படியே இந்த சனிக்கிழமை ஃப்ளாட் பக்கம் போய் எல்லா வேலையும் முடிஞ்சிடுத்தான்னு பாத்துட்டு வரணும். நாம கொஞ்சம் அவசரம் காட்டினாதான் அவங்களும் முடிச்சுக் குடுப்பாங்க. இல்லேன்னா நம்ம வேலையே விட்டுட்டு வேறே எங்கேயாவது வேலை பாத்துக்கிட்டுருப்பாங்க” என்றாள்.
அவள் சொல்வதும் நிஜம்தான். எல்லா நடுத்தர வர்க்க குடும்பத்தை போல இவர்களும் கஷ்டப்பட்டு சொந்தமாக ஒரு ஃப்ளாட் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்து, ஒரு வழியாக மும்பை புறநகர் பகுதியில், ரெயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்திலேயே, ஒரு ஃப்ளாட்டை புக் செய்தார்கள். ஆனால், எல்லா பில்டர்களும் வழக்கமாக செய்வது போல், சொல்லியிருந்த காலத்தில் வீட்டை இவர்களுக்கு ஒப்படைக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் இழுத்தடித்து கடைசியாக போன மாதம்தான் இவர்கள் கைக்கு வந்தது. இப்போது, ஃப்ளாட்டில் மரவேலை செய்து கொடுப்பவர் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர் இன்னும் ஒரு வாரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பதாக சொல்லியிருந்தார். கடந்த மூன்று வருடங்களாக வங்கிக்கான வீட்டுக்கடன் தவணையையும் கட்டிக்கொண்டு, தற்போது குடியிருந்த வீட்டுக்கு வாடகையையும் கட்டிக் கொண்டு ரொம்ப அவதிப்பட்டு கொண்டிருந்தார்கள். எப்போது எல்லாம் முடிந்து சொந்த வீட்டிற்கு குடிபோவோம் என்றாகிவிட்டது. அடுத்த மாதம் எல்லாம் சரியாகி, சகஜ நிலைக்கு வந்துவிடும் என்று நம்பினார்கள்.
சாப்பிட்டு முடித்து, பையை எடுத்துக் கொண்டு ஆஃபிஸிற்கு கிளம்பத் தயாரானான். வழக்கம் போல் கிளம்புவதற்கு முன் எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டான். கைப்பையின் உள்பாக்கெட்டில் ஆஃபீஸ் சாவி கொத்து, ஷர்ட் பாக்கெட்டில் மொபைல், பேனா, பின் பாக்கெட்டில் பர்ஸ், கழுத்தில் செயின் என்று ஒருமுறை தொட்டுப் பார்த்து விட்டு, “வரேன்” என்று மனைவியிடம் சொல்லி, விடுவிடுவென்று படிகளில் இறங்கி லோக்கல் ட்ரையினைப் பிடிக்க ஓடினான்.

முதலில் யாரோ பட்டாசு வெடிக்கிறார்கள் என்றுதான் நினைத்தான். பிறகு எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து கொண்டிருப்பதை பார்த்ததும்தான் ஏதோ விபரீதமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான். ஆனாலும் நின்று பார்த்து, உதவி செய்ய நேரமில்லை. அதனால் இவனுக்கு மனிதாபிமானம் இல்லை என்று அர்த்தமில்லை. அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறியாக வேண்டிய நிர்பந்தம்.
இங்கிருந்து இவனுடைய ஆஃபீஸ் பத்து நிமிட நடை தூரத்தில் இருந்தது. வேகமாக நடந்தால் எட்டு நிமிடங்கள். இவன் ஆஃபீஸ் போய் சேர்ந்த போது சரியாக ஆறு நிமிடங்கள் ஆகியிருந்தது.
ஒரு பிரபல ஆங்கில நாளிதழில் பராமரிப்பு எஞ்சினியராக வேலை செய்து கொண்டிருந்தான். இயந்திரங்களின் பராமரிப்பிற்கு இவன் முழுபொறுப்பு. ஒரு எஞ்சினியர் கட்டாயம் ஆபிஸில் இருந்தாக வேண்டும். இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிட்டால் மறுநாள் நாளிதழ் வெளிவராது. நல்ல வேளையாக அப்படி ஒரு அசம்பாவிதம் இதுவரை நடந்ததில்லை. இவனும் இவனுடைய சிறுகுழுவில் இருந்த மற்ற எஞ்சினியர்களும் மாறி மாறி நைட் ஷிஃப்டில் வேலை செய்வார்கள்.
ஆஃபிஸில் ஒரே களேபரமாக இருந்தது. எல்லோரும் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். எடிட்டர் எப்படியோ அடித்துப் பிடித்துக்கொண்டு வந்து சேர்ந்துவிட்டார். ஃபோனில் ரிப்போர்ட்டர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு வெவ்வேறு இடங்களுக்கு போகுமாறு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக, அங்கிருந்த டிவியில் வந்து கொண்டிருந்த ‘பிரேக்கிங் ந்யூஸ்’ மூலம் தாக்குதல் ரயில் நிலையத்தில் மட்டும் நடக்கவில்லை. தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல், லியோபோல்ட் கஃபே, ஆஸ்பத்திரிகள், நாரிமன் ஹவுஸ் என்று பல இடங்களில் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. அவனுடைய போட்டோகிராபர் நண்பன் ஓடி வந்து “நடந்து கொண்டிருப்பது சாதாரண தாக்குதல் இல்லை. ஒரு போர்” என்று சொல்லி, தன் கேமரா பையை தூக்கிக் கொண்டு அதை படம் பிடிக்க ஓடினான்.
இவனுடைய மனையிடமிருந்து போன் வந்தது. “என்னங்க, எங்கே இருக்கீங்க?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.
“கவலைப்படாதே, ஆஃபீஸ் வந்து சேர்ந்தாச்சு. பத்திரமா இருக்கேன். பொண்ணை நாளைக்கு ஸ்கூலுக்கு அனுப்பாதே. நேர்லே வந்து எல்லாத்தையும் சொல்றேன்” என்று சொல்லி போனை வைத்தான்.
காலை இவனுடைய சக எஞ்சினியர் வந்தவுடன் அவனுக்கு பொறுப்பை ஒப்படைத்து விட்டு கிளம்பினான். வீட்டிற்கு போகுமுன் ஸ்கூலுக்கு போய் ஃபீஸ் கட்டிவிட்டு போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். பேண்ட் முன் பாக்கெட்டில் சொருகி இருந்த பர்ஸை எடுத்து திறந்து பார்த்தான். சலவை நோட்டுகளாக பதினைந்தாயிரம் ரூபாய் இருந்தது. கூடவே, இன்று ஸ்கூல் திறந்திருப்பார்களா என்று ஒரு சந்தேகம் வந்தது. இருந்தாலும் போய் பார்க்கலாம் என்று போனான். வாசலில் ‘இன்று விடுமுறை’ என்று போர்ட் போட்டிருந்தார்கள். ஆஃபீஸ் ரூமிற்கு போன போது, இவனைப் போல ஃபீஸ் கட்டத் தவறிய இரண்டு மூன்று பெற்றோர் வந்திருந்தனர். இவர்களைப் பார்த்து ‘மும்பையில் இன்று நடந்து கொண்டிருக்கும் கலவரத்துக்கிடையில் எதற்கு இவ்வளவு தூரம் வந்தீர்கள். ஃபீஸைக் கட்ட ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது’, என்று ப்யூன் சொன்னார். மெனக்கெட்டு இவ்வளவு தூரம் வந்தது வீணாகப் போயிற்றே என்று நொந்தபடி அங்கிருந்து கிளம்பினான்.
வீட்டிற்கு போய்க்கொண்டிருந்த போது, முன்தினம் இரவு நடந்தது மீண்டும் இவன் நினைவுக்கு வந்தது. ட்ரெயினிலிருந்து இறங்கியதிலிருந்து, வேகமாக ஓடி டெர்மினசுக்கு வெளியே வந்தது வரை அறுபது நொடிகளுக்கு மேலாகியிருக்க வாய்ப்பில்லை. எப்படி, ஒரு கண்டத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறான்! இதைத்தான் ‘கடவுள் செயல்’ என்று சொல்கிறார்களா? தனக்கு அறுபது நொடிகள் கால அவகாசம் தந்து தன்னை காப்பாற்றிய கடவுளுக்கு மனதில் நன்றி சொன்னான்.
காலிங் பெல்லை அழுத்தினதும் மனைவியும், பெண்ணும் ஓடி வந்து கதவைத் திறந்து இவனைக் கட்டிப்பிடித்து கொண்டார்கள்.
“என்னப்பா நடந்தது” என்று பெண் கவலையுடன் கேட்டாள்.
“முதல்லே அப்பா குளிச்சுட்டு வரட்டும். அப்புறமா எல்லாம் பேசலாம்” என்று சொல்லி பையை வாங்கிக் கொண்டாள் மனைவி.
குளித்து விட்டு வந்து, டைனிங் டேபிளில் உட்கார்ந்து, மனைவி கொடுத்த டிபனை சாப்பிட உட்கார்ந்தான். நேற்று மாலை இதே டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டதிற்கும் இப்போதைக்கும் இடையே எவ்வளவு விஷயங்கள் நடந்து விட்டது.
நேற்றிரவு தான் மயிரிழையில் உயிர் தப்பித்ததை அவர்களிடம் சொன்னான்.
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொன்னாள். “சனிக்கிழமை ஃப்ளாட்டுக்கு போயிட்டு அப்படியே ‘சித்தி விநாயக்’ கோயிலிக்கும் போயிட்டு வந்துடலாங்க” என்றாள்.
ஸ்கூலுக்கு போய் ஃபீஸ் கட்ட முடியாமல் திரும்ப வந்ததையும் சொன்னான். “ஐயோ, போயேயிருக்க வேண்டாம்ப்பா. டைம் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டாங்களாம். என் ஃபிரெண்ட் சொன்னாள்” என்றாள் இவன் பெண்.
அவர்கள் இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
பெட்ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்க போனான். ஹாலில் இவன் மனைவி தன்னுடைய அம்மா, உறவினர்கள், நண்பர்கள் என்று ஒருவரை விடாமல் எல்லோருக்கும் ஃபோன் செய்து நடந்ததை தெரிவித்துக் கொண்டிருந்தாள்.
படுத்திருந்தவனுக்கு என்னவோ மனதை உறுத்திக் கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்தான். தூக்கம் வரவில்லை. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அன்றிலிருந்து தான் இவன் தன் தூக்கத்தை தொலைத்தான்.
சனிக்கிழமை ஃப்ளாட்டுக்கு போய் பார்த்தார்கள். கார்பெண்டர் சொல்லியிருந்த எல்லா வேலையையும் கச்சிதமாக செய்து முடித்திருந்தார். இவர்கள் எதிர்பார்த்திருந்ததை விட அற்புதமாக வந்திருந்தது. இவனுடைய மனைவிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஒவ்வொரு ரூமாகப் போய் பார்த்தாள். இவ்வளவு காலம் பொறுத்திருந்ததிற்கு ஒரு பலன் கிடைத்தது என்ற நிம்மதி.
“அடுத்த மாசம் நல்ல நாளாக பாத்து, முக்கியமானவங்களை மட்டும் கூப்பிட்டு சின்னதா ஒரு பூஜை செஞ்சு, உடனடியா வாசத்துக்கு வந்துடலாம். ஃப்ரெண்ட்ஸை எல்லாம் அப்புறம் தனியா கூப்பிட்டுக்கலாம்.” தன்னுடைய திட்டத்தை விவரித்துக் கொண்டு போனாள். இவன் வெறுமனே தலை ஆட்டினான்.
அங்கிருந்து ‘சித்தி விநாயக்’ கோயிலுக்கு போய் ஒரு அர்ச்சனை செய்தார்கள். இவனுடைய மனைவி தான் முடிந்து வைத்திருந்த காணிக்கையை உண்டியலில் போட்டாள். பூசாரி கொடுத்த விபூதியையும், குங்குமத்தையும் இவன் நெற்றியில் இட்டு விட்டாள். எல்லாவற்றையும் நல்லதாக முடித்துக் கொடுத்ததற்கு மனமாற நன்றி சொன்னாள். இனிமேலிருந்து அவர்கள் வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்கிற சந்தோஷம் அவளுக்கு.
வெளியே சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினார்கள்.
அவர்கள் பெண் தன் அறைக்குப்போனதும் மனைவி இவனைப் பார்த்து கேட்டாள். “என்னங்க, ஏதோ மாதிரி இருக்கீங்க. ஃப்ளாட்டிலேயும் கவனிச்சேன், கோயில்லேயும் கவனிச்சேன், ஒரு சுரத்தே இல்லாம இருந்தீங்க. எது கேட்டாலும் பதில் சொல்லாம தலையை மட்டும் ஆட்டிக்கிட்டிருக்கீங்க. உடம்பு சரியில்லையா?”
பெண்களுக்கு தெரியாதா, ஆண்கள் வெறுமனே தலை ஆட்டினால் என்ன அர்த்தம், தலை ஆட்டாவிட்டால் என்ன அர்த்தம், பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம், அதிகமாக பேசினால் என்ன அர்த்தம் என்று?
“எனக்கு ஒண்ணும் இல்லே. நல்லாத்தான் இருக்கேன்” என்றான்.
“நானும் பார்த்துக்கிட்டுருக்கேன். மூணு நாளா நீங்க நார்மலா இல்லை. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லி ரூமுக்கு படுக்கப் போனாள்.
இவன் தூக்கம் வராமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக படுக்கைக்கு வந்தான்.
மறுநாள் காலை வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான். இவன் மனைவி ஆச்சரியத்துடன் பார்த்தாள். “என்னங்க இன்னக்கி ஆஃபீஸ் லீவு இல்லையா?”
“ஆஃபீஸ் லீவுதான். வெளியே கொஞ்சம் வேலை இருக்கு”
இதுவரை இவன் வெளியே போகும் போது எங்கே போகிறேன் என்று சொல்லாமல் போனதில்லை. இவனாக எதையும் சொல்லாவிட்டால், அவளாக எதையும் கேட்பதில்லை.
பஸ்ஸை பிடித்து தனக்கு பரிச்சயமான அந்த மார்வாடி கடைக்கு போனான். ஞாயிறு என்பதால் கடை திறந்திருக்கவில்லை. கடைக்கு ஒட்டினாற்போல இருந்த அவருடைய வீட்டுக் கதவை தட்டினான். வெளியே வந்தவரிடம் அவசரமாக பணம் வேண்டும் என்றான். கடைக்கதவை திறந்து இவனை உட்கார வைத்தவர், “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, இதோ வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு போனார். சில நிமிடங்கள் கழித்து வந்தவர், எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். ‘பதினைந்தாயிரம் வேண்டும், அடுத்த மாதம் சம்பளம் வந்தவுடன் மீட்டு விடுகிறேன்’ என்று சொல்லி தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி கொடுத்தான். அதனை உரசிப் பார்த்தவர், ஒன்றும் சொல்லாமல் பதினைந்தாயிரம் ரூபாயை எண்ணி இவன் கையில் கொடுத்தார். அதற்கான ரசீதையும் வாங்கிக் கொண்டு கிளம்பினான்.
இவன் போக வேண்டிய இடத்திற்கான பஸ் வந்ததும் அதில் ஏறி இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டான். இவன் மனதில் மூன்று நாட்களுக்கு முன்பாக நடந்த சம்பவம் மீண்டும் ஓடியது.
ட்ரெயின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸை நெருங்கிக் கொண்டிருந்தது. காலை வேளையில் இருப்பது போல் மூச்சு முட்டும் அளவு கூட்டம் இல்லையென்றாலும், இப்போதும் ஒரு பெரிய கூட்டம் இருந்தது. எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு இறங்க முயற்சித்துக் கொண்டிருக்கையில் இவன் காலில் ஏதோ தட்டுப்பட்டது. குனிந்து பார்த்தான். கனமான பர்ஸ் ஒன்று கீழே கிடந்தது.
அந்தக் கூட்டத்திலும் குனிந்து அவன் எடுத்ததை ஒருவரும் பொருட்படுத்தாமல் அவரவர் அவசரத்தில் இருந்தார்கள். பர்ஸை திறந்து பார்காமலேயே அதில் நிறைய பணம் இருப்பது தெரிந்தது. முண்டியடித்துக் கொண்டு வெளியே வந்தவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் போய் ஒப்படைப்பதா, இல்லை பர்ஸில் விவரம் இருந்தால் சொந்தக்காரனை பிறகு கூப்பிட்டு கொடுப்பதா?
அல்லது, இவனுடைய அவசர தேவைக்கு ஒருநாளைக்கு மட்டும் பணத்தை உபயோகப்படுத்திக் கொண்டு, பிறகு எடுத்த பணத்தை திரும்ப போட்டு ஈடு செய்து, சொந்தக்காரனுக்கோ அல்லது போலீஸிலோ ஒப்படைப்பதா?
இந்த கடைசியாக சொன்ன விபரீத எண்ணம் வந்தவுடன் இன்னொரு பயமும் தொற்றிக் கொண்டது. யாராவது இவன் பர்ஸை எடுப்பதை பார்த்து விட்டு கையும் களவுமாக பிடித்து விட்டால் என்ன செய்வது? அவமானமாக போய்விடுமே.
இத்தனை எண்ணங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனுடைய மனதில் மின்னல் போல ஓடி மறைந்தது.
உடனே, யாரும் பார்க்கும் முன் அங்கிருந்து வேகமாக ஓடிப் போவது தான் நல்லது என்று தோன்றியது. அடுத்த கணம் பர்ஸை தன் முன் பாக்கெட்டில் சொருகிக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.
குட்டையான, சற்று குண்டான ஒரு மனிதனை, அவனுடைய சட்டையும் இவனுடைய சட்டையும் உரசும் தூரத்தில் கடந்து போனான். ஒரு வேளை, அவனுடைய மூச்சுக்காற்றுகூட இவன் மேல் பட்டிருக்கக்கூடும்.
இவன் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. பஸ்ஸிலிருந்து இறங்கி, பர்ஸில் இருந்த அட்ரஸை தேடிக் கொண்டு நடந்தான்.
அந்தக் காலனியில் நுழைந்ததும் இவனுக்கு தெரிந்துவிட்டது. அந்த பர்ஸுக்கு சொந்தக்காரன் ஒரு தனியார் நிறுவனத்திலோ அல்லது அரசாங்க அலுவலகத்திலோ கடைநிலை ஊழியராக இருக்க வேண்டும் என்று. பாவம், எந்தக் கடனை அடைக்க யாரிடம் பணம் வாங்கியிருந்தானோ தெரியவில்லை.
பர்ஸில் குறிப்பிட்டிருந்த அந்த கட்டடத்திற்கு வந்து விட்டான். சுண்ணாம்பை பார்த்து பல வருடங்களாகி இருக்கும் போல் தோன்றியது. பல இடங்களில் காரை பெயர்ந்து உதிர்ந்திருந்தது. மாடிப்படிகளில் ஏறி நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு மாடி வளைவிலும் பான் பராக், வெற்றிலை துப்பியிருந்த கறை படிந்திருந்தது.
நாலாவது மாடியை அடைந்த போது, மூச்சு முட்ட ஆரம்பித்தது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கதவு இலக்கத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு கதவை தட்டினான்.
கதவைத் திறந்த அந்த பெண்ணுக்கு இவன் மனைவி வயதுதான் இருக்கும். இவனைப் பார்த்ததும் சேலைத் தலைப்பை முக்காடாகப் போட்டுக் கொண்டு “ஜீ…” என்றாள். தடுமாற்றத்துடன் “சந்தீப் மாத்ரே…” என்று அந்த பர்ஸின் சொந்தக்காரன் பெயரை சொல்ல ஆரம்பித்தவனின் கண்கள் மேஜை மேல் மாலை போட்டு, ஊதுவத்தி கொளுத்தி வைத்திருந்த அந்த மனிதனின் போட்டோவில் நிலைகுத்தி நின்றது.
வெடித்து வந்த விம்மலை புடவைத் தலைப்பால் அடக்கிக் கொண்டு, உள்ளே பார்த்து “பேடீ..” என்று குரல் கொடுத்தாள்.
உள்ளிருந்து ஒரு சிறு பெண்ணும், அவளைவிட சற்று சிறிய வயதுப் பையனும் வெளியே வந்தார்கள்.
அந்த சிறுமியிடம் பர்ஸைக் கொடுத்து, “ட்ரெயினில் இதைப் பார்த்தேன். பர்ஸில் ஃபோன் நம்பர் இல்லாததால், உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்” என்றான்.
“தேவையில்லை, அங்கிள். எல்லாம் சரியாகத்தான் இருக்கும். நீங்கள் இதை கொண்டு வந்து கொடுத்தது ரொம்ப உபயோகமாக இருக்கும். ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்” என்றாள்.
பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டான்.
“அங்கிள், காபி கொடுக்கட்டுமா” என்றாள்.
“வேண்டாம்” என்று சொல்லி, அதற்கு மேல் இருந்தால் எங்கே அழுது விடுவோமோ என்று பயந்து, அங்கிருந்து வேகமாக படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
பஸ்ஸில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தவனின் மனம் மீண்டும் மீண்டும் நடந்த அந்த சம்பவத்தையே ஒரு கழுகு போல வட்டமடித்துக் கொண்டிருந்தது.
- அன்று இவன் அந்த பர்ஸை எடுத்த காரணத்தினால் அங்கிருந்து வேகமாக வெளியே ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்படி ஓடியதால் இவன் உயிர் தப்பித்தது.
- ஒரு வேளை, இவன் பர்ஸை எடுக்காமலே இருந்திருந்தால், இயல்பான நடையில் நடந்து போய் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கக்கூடும்
- அல்லது, இவன் அந்த பர்ஸை எடுத்து அதன் சொந்தக்காரன் தேடிக்கொண்டு திரும்ப வரும்வரை காத்திருந்து அவனிடம் ஒப்படைத்திருந்தால், இருவரும் ஒன்றாக உயிர் துறந்திருப்பார்கள்
ஆக, நடந்தது அனைத்தும் இவன் உயிரோடு தப்பிக்க வேண்டும் என்பதற்காக விதியால் நடத்தப்பட்ட நாடகம். அதே சமயம், அதன் சொந்தக்காரனுக்கு இந்த உலகில் விதிக்கப்படிருந்த காலக்கெடு அன்றோடு முடிந்து, அவன் உயிர் போக வேண்டும் என்பதும் விதி.
ஆனால், இவன் எதற்காக அந்த பணத்தை எடுத்தானோ அதற்கு தேவையில்லாமல் போனது தான் இந்த நாடகத்தின் உச்சக்கட்டம்.
இந்த விதியின் நாடகத்தில் தான் அநாவசியமாக கோர்க்கப்பட்டு, இன்னொரு மனிதனின் உயிர் போவதற்கு ஒருவிதத்தில் தான் காரணமாகிவிட்டேனோ என எண்ணி தன்னையே நொந்து கொண்டான்.
ஒரு சராசரி இந்திய குடிமகனின் வயதில் அறுபது நொடிகள் என்பது அளவிடமுடியாத சிறிய சதவிகிதமாக இருக்கலாம். ஆனால் இவனைப் பொறுத்தவரை அறுபது நொடிகள் என்பது ஒரு மனிதனை அவனது எஞ்சிய வாழ்நாட்களில் நிம்மதியாக வாழவிடாமல், உறங்க விடாமல் செய்யக் கூடியது.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
