தொட்டவுடன் நீராக ஓடிய பனி

டிசம்பர் மாத மத்தியில் அதிகாலையில் நல்ல குளிர், இருட்டும் விலகாத கும்மிருட்டு குளிர், வாகனத்தின் மேல் பூஞ்சையாக படிந்த பனி தொட்டவுடன் நீராக ஓடியது, வாகனத்தின் இரும்பு பாகங்கள் மிகக் குளிர்ச்சியாக ,கையில் பிடித்தால் சற்றே விறைக்கும் அளவுக்கு இருந்தது. ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடிக்கும் விறைப்பு உடல் சூட்டினாலும் கைகளை தேய்ப்பதாலும் உடனே பழையபடிக்கு வந்தது.

விடிகாலை ஐந்து மணியாகி விட்டது .தன் தந்தையை அழைத்து வர இரயிலடிக்கு செல்ல, இரு சக்கர  வாகனத்தை இரும்பு சங்கிலி போட்டு பூட்டியிருந்ததை திறந்து சங்கிலியை வாசற்படியின் அருகில் மூலையில் குவித்து, பெரிய கேட்டை திறந்து  வாகனத்தை சுற்றுச் சுவருக்கு வெளியே வைத்து , பெரியகேட்டை ” ப ” வடிவ கொக்கியால் மூடிப்  பூட்டாமல்  வாகனத்தை கிளப்பினான் ஜெகன்  என்கிற ஜெகன்நாதன்.

குளிரில் வாகனம் உடனே  கிளம்ப மறுத்தது. நீண்ட உதைகளுக்கு பிறகே எஞ்சின் சூடாகி கிளம்பியது. ஜெகனின் தம்பி தியாகராஜன் குடியிருக்கும் வீடு சென்னை அண்ணா நகரில் இருக்கிறது . அப்பா  இரண்டு மாதமாக அங்கு தான் இருந்தார். போன வாரம் பெங்களூருக்கு தங்கையுடன் சுற்றுலா சென்றிருந்தார். சென்னை வந்தவுடன் திடீரென்று தஞ்சைக்கு கிளம்பி வருவதாக  போன் செய்து சொன்னார் , தம்பியும் உடனே தட்கலில் டிக்கெட் எடுத்து கொடுத்து விட்டான்.சென்னை எழும்பூரிலிருந்து இரவு 9.50க்கு புறப்படும் உழவன் அதிவிரைவு வண்டி காலை 5.30க்குள் தஞ்சைக்கு வந்து விடும் . இன்று வருவதாக அப்பா சொல்லியிருந்தார். நேற்றும் காலையில் ஒரு தடவை, ரயில் ஏறிய பின்பு ஒரு தடவை போன் செய்து ஞாபகப்படுத்தினார். சரியான நேரத்துக்கு போகவில்லை என்றால் கடுமையாக கோபித்துக் கொள்வார். ஏற்கெனவே கால்பந்து விளையாட முடியாமல் போனதில் மிகுந்த மன வேதனையில் தூக்கமில்லாமல் அவதியுற்றிருந்தார். நல்ல வேளை அதிக நேரத்தை வாகனம் புறப்பட எடுத்துக் கொளாவில்லை . இரயிலடியை நெருங்கிய போது ஐந்தரையாகிவிட்டது . ஆட்டோ ஓட்டுனர்களும், வாடகை டாக்ஸி ஓட்டுனர்களும், மிகச் சுறு சுறுப்பாக அந்த குளிரிலும் இரயில் வருவதை எதிர்பார்த்து கைகளை தேய்த்தும் மார்புப் பக்கம்  கைகளை கட்டியும் , ஒரு சிலர் இரயிலடி நுழைவாயிலின் இடது புறம் இந்தியன் வங்கி ஏடிம் க்கு முன்புறம் இருந்த  ஆவின் பாலகத்தில் தேநீர் அருந்தியும் குளிரை போக்க முயற்சிகள் செய்தனர்.  உறவினரை, நண்பரை அழைக்க வந்தவர்களின் கூட்டமும் அதிகமிருந்தது. அவரவர் தனி செல் உலகத்தில் ஆழ்ந்திருந்தனர். உழவன் அதிவிரைவு வண்டி இன்னும் சற்று நேரத்தில் முதலாவது நடைமேடைக்கு வந்து சேரும் என இந்தி, ஆங்கிலம், தமிழில் சொன்னார்கள். நல்ல வேளை சற்று முன்பே வந்து விட்டோம் என பெருமூச்சு விட்டான் ஜெகன்.

சரியாக ஐந்து ஐம்பதுக்கு தஞ்சை சந்திப்பில் முதல் நடை மேடை அதிர நீண்ட பெரிதான ஒலி எழுப்பியவாறு நுழைந்தது உழவன் அதிவிரைவு வண்டி, நடை மேடை நுழைவுச் சீட்டு வாங்கியிருந்த ஜெகன் முதலாவது நடைமேடையில் S 7 என காட்டும் கணினி திரைக்கு அருகில் நின்றான். அதில்தான் தந்தைக்கு இருக்கை ஒதுக்கியிருப்பதாகவும் சொல்லியிருந்தார். சரியாக S 7 பெட்டி  கணினி திரை காட்டிய அதே இடத்தில் வந்து நின்றது . பயணிகள் இறங்க ஒருவரை ஒருவர் முந்தும் வேடிக்கையும் நடந்தது , எப்பொழுதும் முந்திக்கொண்டிறங்கும் தந்தை அன்று கடைசியாகத்தான்  இறங்கினார். இறங்கும் வாயிலுக்கு அருகாமையில் நின்றதால் உடனே அவரை கண்டதும் மகிழச்சியுடன் கையாட்டினான். அவரும் கையாட்டினார் முகத்தில் மகிழ்சியை அவ்வளவாக காட்டவில்லை. வலிந்து புன்னகையை உறைய வைத்துக் கொள்ள மனதில் போராட்டம் நிகழ்ந்தது.

இரண்டு பைகளையும் வாங்கிக் கொண்டான் தலையனை, போர்வையை மட்டும் அவர் வைத்துக் கொண்டார். இரயில் பயணமென்றால் எப்பொழுதும் தலையனையும் பெரிய போர்வையும் எடுத்துக் கொண்டு , தூங்க வசதியாக இருக்குமென்பார். இருவரும் நடைமேடையை கடந்து வெளியேறி, ஆவின் பாலகம் அருகே வைத்திருந்த வாகனத்தினருகே வந்து சேர்ந்தார்கள்..

ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களின் அழைப்பும், பயணத்தொகை பேரங்களும் வாகனங்கள் புறப்பட்டு செல்லும் சப்தங்களும் கலந்து சந்தை கடை போல இருந்தது. வானம் ஒரளவு வெளுத்திருந்ததால் அனைவரின் முகங்களை தெளிவாக பார்க்க முடிந்தது. பயணத்தால் கலைந்த தலைகளும், தூக்கமின்மையும், ஒரு சிலர் அந்த நேரத்திலும் முகம் கழுவி ஒப்பனையும் செய்திருந்ததை நினைத்ததால் மெல்லிய புன்னகை தோன்றியது. குழந்தைகளும், சிறுவர்களும் பேந்த விழிந்தவன்னம் நின்று கொண்டும், தாயின் இடுப்பில் அமர்ந்தும் , தூக்கம் கலையாத கண்களுடன் இருந்தனர்.

இரு சக்கர வாகனத்தை எடுக்க முடியாத அளவுக்கு பின்னால் பின்னால் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னால் உள்ளவர்கள் எடுத்தால் தான் ஜெகனின் வாகனம் எடுக்க முடியும். கடுப்பானான், மனதிற்குள்ளாக கன்னா பின்னா வென திட்டியபடி வாகனம் வைத்தவர்களை பெரும் குரலில் கூவியழைத்தான். ’முட்டாப் பயல்கள் , இதே வேல மயிரா இருக்கு, வண்டி நிறுத்த வா இடம் இல்ல பரதேசிப் பயலுங்க’ என திட்டிய வாறே  வாகனங்களை நெருங்கினான்.

ஜெகனின்  தந்தையும் கடுப்பானார். அவரும் திட்ட ஆரம்பித்தார். அறிவு கெட்ட பயலுங்க, மூள மழுங்கிடுச்சி போல இப்படியா வண்டிய வப்பானுங்க என்றார். பத்து நிமிடத்துக்குள்ளாக அவரவர் வாகனங்களை எடுத்து விட்டனர், மருந்துக்கு கூட மன்னிப்பு கேட்கும் பாவனை  யார் முகத்திலும் இல்லை. முனகியபடியே ஜெகனும் இரு சக்கர வாகனத்தை எடுத்து திருப்பி லோபிரிட்ஜ் போகும் பாதையை நோக்கி திருப்பி நிறுத்தி, இருபைகளை முன்புறம் வைத்து வண்டியை ஒட்ட ஏதுவாக சரி செய்தான் தந்தையை  அமரச் சொன்னான்.

அவரும் அமர்ந்து கொண்டார். ஆறு மணிக்கு மேலாகிவிட்டதால் நன்றாக வானம் வெளுத்து சூரியன் தலைகாட்டவும் செய்தான். குளிர் ஒரளவுக்கே இருந்தது. தார்சாலைகள் தெளிவாக தெரிந்தது. மிகப்பெரிய கட்டிடங்களுக்கும் பாலத்திற்கிடையேயும் போடப்பட்ட நீண்ட தார்பாயை போல கிடந்தது, எப்போது வேண்டுமானாலும் சுருட்டி வைப்பது போல. மிக மெதுவாக வண்டியை ஒட்டும்படி சொன்னதால் , மெதுவாகவே ஒட்டி வீடு வந்து சேர்ந்தனர். கேட்டும் கொக்கி போட்டது போட்ட படியே இருந்தது. 

கேட்டிற்கு வெளியே வாகனத்தை நிறுத்தி அப்பாவை மெதுவாக இறங்க சொல்லி , இறங்கியவுடன் சைடு ஸ்டேன்ட்  போட்டு , வாகனத்தை பூட்டி பைகளை எடுத்துக் கொண்டு கேட்டை திறந்து உள்ளே நுழைந்தான். வீட்டின் கதவும் சாத்திய படியே இருந்தது. அம்மா இன்னும் எழுந்திரிக்க வில்லை என நினைத்தான். அவரும் பின்னால் வந்து பூட்டாம வந்தியா ? நீ இன்னும் மாறவே இல்லடா என்றார்.

இல்லப்பா இங்க யாரு வரப்போறா ? அம்மா எழுந்திருச்சா தட்டு தடுமாறும் அதனால பூட்டாம வந்தேன். என்றான்.

அப்பொழுதுதான் அப்பாவை  முழுதாக வெளிச்சத்தில் பார்த்தான் ஒரு வார தாடி சவரம் செய்யப்படாமல் இருந்தது நினைவு தெரிந்து அவர் முகம் பளபள வென்றே இருக்கும் , தினமும் அவரே  சவரம் செய்து கொள்வார். முகம் கூட லேசாக கவலையில் ஆழ்திருப்பதாகவும் ரயிலில் வரும் போது தூங்காமல் வந்ததாக சொன்னது. சரி இப்போது கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். அம்மாவ எழுப்பாதீங்க அவங்களா எழுட்டும் என்றான்.

சரிடா  எழுப்பலை  சற்றே கோபத்துடன் சலித்துக் கொண்டார்.

அப்பா வருவதாக தெரிந்ததும் ஹாலில் இருந்த கட்டிலை தயார் செய்து , தலையணை,  கீழே நல்ல மொத்த ஜமக்காளத்தை விரித்து , அதற்கு மேலே மெல்லிய மெத்தை விரிப்பை விரித்து வைத்து, அவர் கட்டிலில் அமர்ந்து, படுத்துக் கொண்டு  டிவி பார்க்கும் வண்ணம் திருப்பி போட்டிருந்தான். அவர் கொண்டு வந்திருந்த தலையணை, போர்வையை கட்டில் மேலேயே போட்டு உடனே படுத்து விட்டார். சோர்வா? உடல்நிலை ஏதும் சரியில்லயா? என குழம்பினான் ஜெகன். எது எப்படியிருந்தாலும் கொஞ்சநேரம் போகட்டும் எழுந்ததும் கேட்போம் என முடிவுக்கு வந்தான்.

அம்மா இன்னும் எழவில்லை, இவ்வளவு நேரம் தூங்க மாட்டார் , ஆறரைக்குள்ளாக எழுந்து தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்திருப்பார். அவருக்கு உதவியாக ஜெகன் எல்லா வேலையிலும் ஈடு கொடுத்து முடித்து விடுவான். மிகச் சிறிய வீடு, இரண்டாயிரத்து எண்ணுறு சதுர அடிகள் கொண்ட ஃப்ளாட் , வெளியே சிறிய வராண்டாவும் நுழைந்தவுடன் ஹால் ,தெற்கு பார்த்த வீடாததால் இடது புறம் வராண்டாவையும் ஹாலும் இணையுமிடத்தில் வலதுபுறமாக கச்சிதமான  சமயலறை, அதையெட்டி ஒரே ஒரு படுக்கையறை , படுக்கையறை பக்கத்தில் பொதுவான கழிவறை, குளியலறை . மாடிக்கு வழியே  கிடையாது.  பின்னால் நிறைய இடமிருந்தது, காய்கறி, பூச்செடிகளும் நிறைய இருந்தது. தந்தை தன் வருமானத்தில் கட்டியது. ஜெகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை முப்பத்தி நான்கு வயது, மத்திய அரசின் நெல் பதன, உணவு உற்பத்தி கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கிறான். நல்ல சம்பளத்தில் வேலையிருந்தாலும் , திருமணம் தள்ளிக் கொண்டே போனது . அவனது அம்மாவிற்கு அது மட்டுமே ஒரே ஒரு வேண்டுதல், கவலை , அது நிறைவேறி விட்டால் நிம்மதியாக மரணத்தை எதிர்நோக்குவார். 

அம்மா இன்னும் எழாததால் தானே தேநீர் தயாரித்து மெதுவாக சுவைத்து குடித்தான். ஏழரை வரை அப்பா, அம்மாவை பற்றிய நினைவுகளில் மூழ்கி ஹாலில் சுவரில் சாய்ந்தமர்த்திருந்தான். தேநீர் அருந்திய டம்ளரை  கையில் சுழற்றியவாறு அம்மா படுத்திருந்த அறையில் எட்டி பார்த்தான். நல்ல சிவப்பான நிறத்துடன்,  அன்று மலர்ந்த தாமரை பூவை போன்ற வெளிர் சிவப்பில் மலர்ச்சியுடன் முகமிருந்தது , லேசாக கண்ணீர் துளிர்த்து  கண்ணை மறைத்தது. அம்மா லேசாக புரண்டு படுக்க முயற்சி செய்வது தெரிந்தது. அதற்கு மேல் நிற்க இயலாமல் சமயலறையை நோக்கி நடந்தான். டம்ளரை பாத்திரம் கழுவும் எவர் சில்வர் தொட்டியில் போட்ட போது, அம்மா அழைப்பது போல தெரிந்தது. சமயலறையிலிருந்து பார்த்தால் அறை தெரியாது, உடனே படுக்கையறையை நோக்கி வேகமாக நடந்து, அறையினுள் எட்டி பார்த்தான். அம்மா எழுந்தமர்ந்திருந்தார். என்னம்மா கூப்டிங்களா ?

ஆமாடா நேத்து ராத்திரி மறந்துட்டு ரெண்டு மாத்ர போட்டுட்டேன் போல தூக்கம் இப்பவும் தலையும் கண்ணும் சுத்துற மாறி இருக்குடா , டீ போட்டுதாறியா என்றார். அப்பாவும் எழுந்து அங்கு வந்து விட்டார் எனக்கும் சேத்து டீ போடுப்பா, புட்பால் விளையாட போக முடியாது போல,

ஒடம்பு சரியில்ல ஒரு மாதிரியா இருக்கு மயக்கம் வர்றமாறியும்  தள்ளாட்டமாவும் இருக்கு டாக்டர பாக்கனும் என்றார்.

மாத்திர ஒழுங்க போட்டுகிறீங்களா?

போட்டுக்குறேன் , டூர் போனப்ப  மைசூருல சாமுண்டிஸ்வரி கோயிலுக்கு மலையில மல்லுகட்டி  ஏறுனல்ல அன்னையிலிருந்து உடம்பே சரியில்லப்பா நெஞ்சு பக்கம் ஒரு மாதிரி சரியா இல்ல, பசி கொறஞ்சிட்டு, வேகமா, நடக்க, ஓட முடியல, இனிமே கிரவுண்டுக்கு போக முடியாதுன்னு தோனுது , புட்பால தொடவே முடியாது போல, ஒன்னும் சரியில்ல சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு டாக்டர் கிரிதர பாத்துடுவோம். என்றார். இடையே குறுக்கிட்ட அம்மா. உங்களுக்கு ஒன்னுமில்ல , டாக்டர பாத்து மருத்து சாப்டா சரியாய்டுவீங்க என்றார். இருவருக்கும் தேநீர் தயாரித்து குடுத்து விட்டு குளிக்கப்போனான்

மருத்துவர் கிரிதர் கடந்த பதினைந்தாண்டு காலமாக அப்பாவிற்கு இருதயம் சம்பந்தமாகவும், அதிக ரத்த அழுத்தத்திற்காகவும் மாத்திரையும், மருத்துவ ஆலோசனைகள் குடுத்தும் வருகிறார். தந்தை  பணி ஓய்வுக்கு முன்பு காலையில் மட்டும், பணி ஓய்வுக்கு பிறகு காலை மாலை இரு நேரமும் கால்பந்தாட்டமும், நடைபயிற்சியும் செய்வது வழக்கம் , பணி ஓய்வு பெற்று இரு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை படபடப்பு அதிகமிருப்பதாக சொன்னதால் , விசாரித்ததில் மருத்துவர் கிரிதர் அப்பொழுது மிகச்சிறந்த இருதய மருத்துவர் என பெயர் பெற்றிருந்த காரணத்தால் அவரை அனுகினோம். பரிசோதனை செய்ததில் இரத்த அழுத்தம்  மட்டும அதிகமிருப்பதாக மாத்திரை குடுத்தார். நான்காண்டுகளுக்கு பிறகு மாத்திரை எடுத்துக் கொண்டாலும்  மேலும் படபடப்பு அதிகமாகியதால் மீண்டும் அவரிடமே காண்பித்ததில் ஒன்றுமில்லை என்றார் ஆனாலும் உடல் உபாதைகள் குறையவில்லை , டிரட்மில் டெஸ்ட் செய்து பார்க்கலாம் என்றார்.டிரட்மில் டெஸ்டில் ஒரு இருதய வால்வு பழுதாகி இருப்பதாக காண்பித்தது. சென்னையிலும் இங்கும் மருத்துவ நிபுணர்களின் கணிப்பில் அறுவை சிகிச்சை தேவையில்லை மாத்திரையே போதும் சரியாகும், கடைசி முயற்சியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்ததன் விளைவு முன்பு போல கால்பந்து அதிகம் விளையாட போக முடியாத வருத்தம் ஏற்பட்டது. அதிலேயே மனமொடிந்து முடங்கினாலும், ஒரு வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே கால்பந்து விளையாடுவார். பள்ளி நாட்களில் விளையாட ஆரம்பித்தது இன்றுவரை ஆடி வருகிறார். பீலே, மரடோனா போன்றவர்களின் மிகத்தீவிர ரசிகர், முந்நூறுக்கும் மேற்பட்ட சான்றிதழகள், பெரிய பீரோ நிறைய கோப்பைகளும், பதக்கங்களும் நிறைந்திருக்கும் அளவுக்கு கால்பந்து காதலர் , சுற்றுவட்டாரத்தில் எங்கு கால்பந்து போட்டி நடந்தாலும் முதலில் அவரிருப்பார் எப்படியோ தகவல் அவருக்கு மட்டும் வந்துவிடும். பணி ஓய்வு பெற்று பத்தாண்டுக்கு பிறகும் ஒரு நாள் பதினேழு நிமிடம் கால்பந்தை தரையில் விடாமல் தலை, நெற்றி, நெஞ்சு, கால்களில் மாறி மாறி பயன்படுத்தியதை மறக்க முடியாது , பயிற்சியும் அனுபவமும் அதிகம். எப்பொழுது அதை நினைத்தாலும் உடல் முழுவதும் ஒருவித உணர்வு பரவுவதை தவிர்க இயலவில்லை ஜெகனுக்கு.

மருத்துவர் கிரிதரை காலையில் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டான். பதின்மூன்றாவது டோக்கன் கிடைத்தது.தென்கீழ் அலங்கம் , தொப்புள் பிள்ளையார் கோவிலுக்கருகே அவரது கிளினிக் , ஆட்டோவில் பத்து மணிக்குள் வந்து சேர்ந்தனர். பெரிய ஹாலில் முப்பது சேர்களிலும்  ஆட்கள் இருந்தனர். நட்சத்திர ஓட்டலின் வரவற்பறை போலவே  இருந்து கிளினிக் , துல்லியமான தூய ஒரே நிறத்தாலான சீருடைகள் அணிந்த பணியாட்கள், மெலிதான , கராறான புன்னகையுடன் இருந்தனர். ஏற்கெனவே நிறைய பேர் மருத்துவரை பார்க்க காத்திருந்தனர். கிட்டதட்ட அனைவரும் வயதானவர்கள், அறுபது வயதுக்கு மேல் உள்ள நபர்களே அதிகம் , ஒன்றிரெண்டு சிறுவர்களும் நோயாளிகளாக இருந்தனர் , அவர்களை பார்க்கையில் பரிதாபமும், வருத்தமும் ஏற்பட்டது. நோயாளிகளின் முகங்களில் ஒருவித விரக்தியும், நம்பிக்கையும்  கலந்திருந்ததை நினைத்து ஆச்சர்யப்பட்டான். இவர்கள் முறை வந்த போது பதினொன்னரை ஆகிவிட்டது. பரிசோதித்த மருத்துவரின் முகம் லேசாக மாறி  சாதாரனமானது, ஜெகன் திடுக்கிட்டான்.

கைகழுவிய  மருத்துவர் பேஷண்ட் கூட வந்தவங்க மட்டும் இருங்க என்றார்.

ஜெகன் அப்பாவை வெளியே நாற்காலியில் உக்கார வைத்து பக்கத்திலிருந்தவரிடம் கொஞ்சம் பாத்துக்கங்க இதோ வந்துடறேன் என மருத்துவரின் அறைக்குள் நுழைந்தான்.

வாங்க நீங்க அவர் பையன் தானே ஞாபகம் இருக்கு. உடனே அவர சென்னைக்கு கூட்டிட்டு போங்க , மலர் ஆஸ்பிடலுக்கு இன்னிக்குள்ள ஆம்புலன்சுல  பாதுகாப்பா போய்ட்டிங்கன்னா.நா தர்ற லட்டர அங்க குடுங்க ஆப்ரேஷன் செய்யுற மாறி இருக்கும் காப்பாத்திடலாம். கொஞ்சம் செலவு ஆகும்.அப்புறம் இன்னாரு பத்து வருசம் கவலப்படாம இருக்கலாம். என்றார்.

சரிங்க சார் உடனே  ஏற்பாடு பணண்டுறேன் . நீங்க லட்டர் எழுதித் தாங்க மேற்கொண்டு என்ன செய்யனுன்னு சொல்லுங்க என்றான்.

உடனே கடிதம் எழுதி, தனது பெயர்கொண்ட காகித உறையில் வைத்து கொடுத்தார். அழைப்பு மணியை ஒலிக்க செய்து வந்த செவிலியிடம் ஆம்புலன்சும், அதனுடன் பாதுகாப்பாக செல்ல கருவிகளை  பொருத்தும்படி சென்னார்.

வெளியே வந்த ஜெகன் அப்பாவிடம் வந்து உடனே  சென்னை போக வேண்டும் டாக்டர் போகச் சொன்னார் என்றான்.

ஒரு சில வினாடிகள் யோசித்தவர். என்ன பொழக்கமாட்டேன், என்னோட கதை முடிஞ்ச்சி ன்னு சொன்னாரா என்றார். அவரின் முகம் பிரகாசமாக, மெலிதான புன்னகையுடன் இருந்தது. கண்ணீர் கண்களை மறைத்தது ஜெகனுக்கு.

மொதல்ல வீட்டுக்கு போவோம் அப்புறம் சொல்றேன் என்றார். அப்பா.

வீட்டுக்கு வருவதற்குள் தியாகராஜன் போன் செய்திருந்தான். 

என்னாச்சி டாகடர் என்ன சொன்னார். 

உடனே சென்னைக்கு போவ சொல்றாரு நானே உனக்கு போன் பண்ணனும்னு இருந்தேன். பிடி கொடுக்க மாட்றரு என்றான் ஜெகன்.

வீட்டிற்குள் வந்து கட்டியில் அமர்ந்தவர் ஏதோ யோசனையில் இருந்தார். அம்மா அவரின் அருகில் அமர்ந்தது கூட தெரியத அளவுக்கு ஆழ்ந்திருந்தார். சட்டென்று எதன் பிடியிலிருந்தோ விடுபட்டவர் போல மலர்ந்த வன்னம் அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்கும் பாவனையில் பார்த்து . வாழ்ந்தது போதும்னு நெனக்கிறேன் கத்தி என்னனோட உடம்புல பட வேணாம், இயற்கையா நம்மள கூப்பிடும் போது போயிடலாம்,  வயசும் எழுபத தாண்டியாச்சி  இனி இருக்கனும்னு தேவையில்லை , நீ தான் சொல்லனும் என்றார்.

அப்படியில்லங்க பிள்ளைங்க இன்னும் கல்யாணம் முடியல, பேரப்பிள்ளைகள பாத்திட்டு அப்புறம் போலாமே , இதுலயும் என்னைய முந்தலாம்னு பாக்குறீங்களா? என்றார் அம்மா

கல கலவென பெரிதாக சிரித்தார். சரி உனக்காக முயற்சி செய்யுறேன் , பெரியவன்ட சொல்லிடு கிளம்பிறலாம்.

அம்மா,சரிங்க இதோ ஒடனே சொல்லிடுறேன் என்றார்.பாத்ரும் போயிருந்த ஜெகனும் வந்து விட்டான். அடுத்த அரை மணியில் வீட்டின் வாசலில் தயார்நிலையில் அம்புலன்ஸ் வந்து விட்டது. அப்பாவும் தயாராக இருந்தார். பணம், நகை வீட்டின் பத்திரம் எல்லாவற்றையும் எடுத்து ஜெகனிடம் கொடுத்து அர்த்தத்தோடு ஒரு பார்வை பார்த்து புன்னகைத்தார் . தினமும் உதைத்து விளையாடும் கால்பந்தை கையில் உருட்டி வெற்றுப் பார்வை பார்த்தார்.உடலின் நிலமையில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருந்தது . அவரால் நடக்கவே முடியவில்லை. எல்லாச் செயல்களும் மிக மெதுவாகவே செய்ய முடிந்தது. பிரோவை திறந்து பணம் நகைகளை எடுக்கவே சற்று நேரமானது ,மிகச் சுறுசுறுப்பாக இருப்பவர் ரெம்பவே மெதுவாக  செயல்படவே முடிந்தது .

ஆம்புலன்சில் அவரால் ஏற முடியவில்லை கால்களை தூக்கி வைக்க மிகவும் சிரமப்பட்டதால் மெதுவாக கால்களை பிடித்து தூக்கி ஏற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது ஜெகனுக்கு . ஆம்புலன்சில் படுத்தவர் குழறலான பேச்சில் புரிந்து கொண்டது.

“கால்பந்தை பத்திரமாக பார்த்துக் கொள்”திரும்ப வந்து விளையாட வேண்டும் என்பதே. அந்த நிலையிலும் கால்பந்தின் மீதான  காதல் போகவே இல்லை. அப்பாவுடன் ஜெகனின் குடும்ப நண்பர் மணியன் மட்டும் செல்வது என முன்பே முடிவு செய்திருந்தனர். அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை . நீண்ட பயணம் செய்யும் அளவுக்கு தெம்பில்லை.அறுவை சிகிச்சைக்கு பணம் புரட்ட வேண்டும் ,மாலை தான் நண்பர் தருவதாக சொல்லியிருந்தார்

ஜெகன் ஆம்புலன்சை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தமர்ந்தான். சிந்தனைகள் பரவலாகவும் திடமின்றியும் அலைக்கழித்தன. தியாகராஜனுக்கு போன் செய்து அங்கு ஏற்பாடுகளை தூரிதமாக செய்யச் சொன்னான் . பணம் எப்படியும் கிடைத்துவிடும், அம்மாவுக்கு துணையாக  சித்தியை வரச்செய்து விட்டு,இரவுக்குள் ஏதாவது  வண்டியில் ஏறி காலையில் வந்து விடுவதாக சொல்லிவிட்டான்

மாலைக்குள் ஆம்புலன்ஸ் மலர் மருத்துவமனைக்கு சென்று விட்டது. தியாகராஜன் தயாராக இருந்ததால் நேரடியாக  சில பரிசோதனைகளை செய்து அறுவை சிகிச்சை அரங்கிற்கு செல்லவதாக திட்டமிட்டிருந்தான். ஆம்புலன்சிலிருந்து அப்பாவால் தன்னிச்சையாக இறங்க முயற்சித்தும் முடியாததால் ஸ்டக்ச்சரோடு அப்படியே இறக்கினர். ஏதோ சொல்வதற்காக தியாகராஜனை  சைகையால் அழைத்தார் , வாய் அதிகம் குழறியது ஒரு வழியாக நிதானமாக சொல்லியதில் வீட்டுக்கு வரும் போது கால்பந்தை நன்றாக பராமரித்து காற்றடித்து தரும்படி சொன்னார்.

சரிப்பா தயரா இருக்கும் நீ கவலப்படாதே பத்திரமா திரும்பி வந்து பழையபடி விளையாடலாம். என்றான்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்ய வேண்டிய பரிசோதனைகளில் தலைமை மருத்துவருக்கு திருப்தி இல்லை. அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டார். பரிசோதனைகளை நிறுத்தி உடனே வெண்டிலேட்டரில் வைக்க ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு, தியாகராஜனை தன்னை வந்து பார்க்க ஆள் அனுப்பி தன்னறைக்கு  சென்று விட்டார்.

இதற்கே மாலையாகி இரவு ஏழு மணியானது தலைமை மருத்துவரின் அறைக்குள் அனுமதிக்கப்பட்ட தியாகராஜனை எதிர்கொண்ட மருத்துவர். கொஞ்சம் தாமதமாக வந்துட்டிங்க இனி எதுவும் செய்ய முடியாது, இன்னும் கொஞ்ச நேரத்துல கோமாவுக்கோ உயிரோ  போகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாய்டிச்சி மூளைக்கு போக வேண்டிய சீரான ரத்தம் ஒரு வால்வு சரியா வேலை செய்வததாதால போகாம மூளை செயலிழப்பும் எல்லா செயலும் மெதுவாய்டிச்சி அவ்ளோதான் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க என்றார். ஒன்றும் செய்ய முடியாமல் கைகளை கோர்த்து பிசைந்தபடி அமர்ந்திருந்தான் 

வெண்டிலேட்டர்ல வைக்கலாம் அது தீர்வாகாது தேவையில்லாம பணவிரயம் எப்படியும் ஒரு வாரத்திற்குள் இறந்து விடுவது உறுதி என்று வெளியே புறப்பட்டார் தலமை மருத்துவர்.

அனுப்பியபடியே ஸ்டக்ச்ரில் திரும்பவும் அறுவை சிகிச்சை அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டார் அப்பா . தியாகராஜன் அவர் கைகளை பிடித்தது கூட அவருக்கு தெரியவில்லை ஏதோ குழறியபடி பேசிக் கொண்டிருந்தார். சுத்தமாக புரியவில்லை தீடிரென்று கலகலவென நீர் ஓடும் சப்தம் போல கேட்டது , அப்பாவின் கைகள் தெய்ந்தன குழறிய பேச்சு நின்றது பயத்தில் திடுக்கிட்டவன் சப்தம் போட்டு அலறினான். நடமாடிக் கொண்டிருந்த அனுபவம் வாய்ந்த செவிலியர் உடனே வந்து  நாடி பிடித்தும் கால்களை பிடித்தும் , இதயப் பகுதியில் காதை வைத்து பார்த்து விட்டு இறந்து விட்டார் கால்களிலிருந்து சூடு குறையத் தொடங்கியும், நாடி சுத்தமாக இல்லை , இருதய துடிப்பும் இல்லை  என உயிர் பிரிந்ததை உறுதி செய்தனர்.

என்ன செய்வதறியாமல் வேறு வழியின்றி ஜெகனுக்கு போன் செய்தான் 

அப்பா போய்ட்டார் நீ வர வேண்டாம் ஆம்புலன்சில் நானும் மணியும் கிளம்பி வந்துர்றோம். என்ன செய்யனுமோ அத செஞ்சி வச்சிடு என்றான்.

போனில் ஜெகன் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்களில் நீர் வழிந்தது அருகிலிருந்த அம்மா அதை பார்த்து விட்டார்.

என்ன இப்பவும் அவர் முந்திகிட்டார , புட்பால தொடச்சி காத்தடிச்சி வச்சிடு என்றார் அழுத்தமான தீர்மானமான புன்னகையோடு.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.