ஒரு சவம் பேசப்போவதில்லை ஆனால் அப்படி பேசும் போது கேட்டுத்தானே ஆக வேண்டும். ராகவன் வேறு வழியில்லாமல் அதை கேட்கத் துவங்கி இன்றுடன் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இப்போதெல்லாம் அவனை யாரும் வித்தியாசமாக பார்ப்பதில்லை. ராகவன் என்றாலே இப்படிதான் என்றாகிவிட்டது. இன்று அது ராகவனுடன் ”துரை சலூனுக்கு” சென்றது. ராகவன் எவ்வளவு சொல்லியும் அது கேட்கவில்லை. என்ன இது இங்கிதம் தெரியாமல் எல்லா இடத்திற்கும் ஒரு சவம் இப்படி தன் கூடவே வருகிறதென்று கொஞ்சம் எரிச்சல் அவனுக்கு ஆனால் கடல் கடந்து வந்து இன்று தன்னுடனே வாழ ஆரம்பித்துவிட்ட ஒரு சவத்தின் மீது தன் எரிச்சலைக் காண்பிப்பது மகா பாவமென்று நினைத்து அமைதியாகவே இருந்துவிட்டான். அவன் அப்பாவும் இப்படித்தான் அவனுடைய முதல் வருட கல்லூரி படிப்பு வரை ராகவனை சலூன் கடைக்கு அழைத்துச் சென்று அவனுக்கு முடி வெட்டுவதைப் பார்த்தபடியே இருப்பார். அவனுக்கு வெட்கமாக இருக்கும். இந்த சவமும் அப்படித்தான் அவரைப் போலவே அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.ஆனால் இப்போது அவன் அப்பாவை திரும்பி பார்க்க இயலாமல் தலைக் கவிழ்ந்து கூனி கூசி கிடந்ததைப் போல் இல்லாமல் உதட்டை சிரிப்புக்கு மிக அருகாமையில் கொண்டுவந்து அந்த சவத்தை ” என்ன என்பது போல் “திரும்ப பார்த்தான். அது எதையோ புரிந்து கொண்டதாக அவன் மீதிருந்த தன் பார்வையை திருப்பிக் கொண்டது.அதன் பிறகு எதோ யோசனையில் மூழ்கியவனாக கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். கத்தரிக்கோல் அவன் முடியுடன் சேர்த்து கடந்த காலத்தையும் துண்டு துண்டாக நறுக்கி வேறு ஒரு தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தது.
கடந்த காலம் என்பது தனியாக உதிர்ந்து கிடக்கும் இலைகளாக எப்போதும் நீள் கணத்தில் அவனைச் சுற்றி சிதறியபடியே இருக்கும். அவன் அந்தக் கணத்தில் எண்ணத்திலிருந்து உதிரும் வார்த்தைகளை உருட்டி உருட்டி தனக்கென்று மட்டுமே தெரியும் சிறு சிறு பளிங்கி கற்களாக மாற்றி தனக்குள்ளே பதுக்கிக் கொள்வான். அவன் அன்றாட வாழ்வில் தனக்கு தான் மட்டுமே பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருப்பதையே உரையாடல் என்பதாக நம்பிக் கொண்டு வாழ்ந்து வருபவனுக்கு அதைத் தவிர எதையும் செய்யத் தெரியவில்லை. சலூனிலும் அதைதான் செய்து கொண்டிருந்தான்.ஆனால் இப்போது அவன் தனக்குள் பேசும் எல்லாவற்றையும் வெளிப்படையாக கேட்க அவன் கூடவே ஒரு சவம் இருப்பது கடந்த காலம் இவனுக்கு கொடுத்த ஒரு பரிசாக எண்ணிக்கொண்டான்.
சிறிய வயதிலிருந்து அவனுடன் பேச எல்லாருக்கும் தயக்கம் தான். அம்மாவா? அப்பாவா? அக்காவா? தம்பியா? எல்லோருக்கும் அவன் ஒரு மாதிரியான ஆள் தான் பள்ளிக் கூடத்திலும் புரியாதபடி ஏதேதோ பேசுபவன், எதுக்கும் இலாயக்கில்லை என்று எல்லோரும் சொல்லி அவனை ஓரமாக உட்காரவைத்துவிட்டு அவரவர் வேலைகளை பார்க்கப் போய்விடுவார்கள். அவன் தன் வீட்டில் கூடத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்தபடி நடக்க இயலாத தன்னுடைய கால்களையே வெறித்து பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் முழுக்க ஒரே இடத்தில் முணகல் சத்தம் கூட எழுப்பாமல் அவனால் அப்படியே அமர்ந்திருக்க முடியும். அவனுடைய அப்பாவுக்கு ராகவனுடைய கால்களையும் கால்களைப் போலவே எவ்வித அசைவும் அற்ற அவனுடைய முகத்தையும் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு இந்த வீட்டிற்குள் ஏன் வருகிறோம் என்று தோன்றும்.அவரது வாய் யார் யாரையோ திட்டியபடி கெட்ட வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் . யாருடைய பாவமோ இப்படி என் வீட்டில் இந்த உருவத்தில் வந்து உட்கார்ந்து என்னை தினம் கொல்ல வேண்டுமா ? என்று சாமி படத்திற்கு நேராக நின்று திருநீரைப் பூசியபடி ராகவன் காது படவே வேகமாக சொல்லிவிட்டு விருட்டென்று வெளியே கிளம்பி போவார். ராகவனுக்கு தன் உடல் அசைவற்று போனதைப் போல மூளையும் அசைவற்று போயிருந்தால் இப்படி வார்த்தைகள் திராவகமாக தன் மீது ஊற்றப்படுவதை உணராமலே இருந்திருக்கலாம் என்று தோன்றும் .
ஓடி ஆடி விளையாட இயலாத சிறு வயதில் ஒவ்வொருமுறையும் அவன் அப்பா அவனைப் பார்த்து தலையை திருப்பிக்கொண்டு செல்லும் போதெல்லாம் ஏற்பட்ட நிராகரிப்பை குற்றவுணர்வை செலவு செய்யாத பழைய சில்லரைக் காசுகளைப் போல அவன் தன்னுடனே வைத்துக்கொண்டு வாழ்ந்தது அபத்தமான அவனுடைய வாழ்வை இன்னும் அபத்தமாக்கி கொண்டிருந்தது. சிறிய வயதில் தனக்கு மனிதர்களை விட நெருக்கமாக இருந்த நாய்களையும் பூனைகளையும், நடு வயதுள்ள சில பெண்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்வான். அவர்கள் தான் அவனை பாவத்தை சுமக்காத வெறும் ஜீவராசியாக பார்த்தார்கள். அவனுடைய பிறப்பிற்கும் வாழ்விற்கும் எவ்வித சாப மோட்ச விளக்கமும் கொடுக்காதவர்களாக இருந்தார்கள்.
இப்போது இந்த சவம் அந்த ஒரு சிலரைப் போல தன்னை வித்தியாசமாக கருதாமல் வாழ்விற்கான எவ்வித விளக்கமும் கொடுக்காமல் சகஜமாக பேசியபடி அவன் கூடவே வருகிறதே ! அது போதும் என்றிருந்தது அவனுக்கு. அவன் படித்ததில் பழகியதில் இல்லாத ஜனநாயகத் தன்மையை இந்த சவத்தோடு உணர முடிந்தது. அதனுடன் எல்லாவற்றையும் அவனால் பேச முடிகிறது .ஒரு போதும் அது மனிதர்களைப் போல தனது நிராசைகளை,வெறுப்பை, வன்மத்தை ,கசப்பை பேச்சில் வெளிப்படுத்தவே இல்லை. ஒரு நேரத்தில் இவையெல்லாம் தான் அவனை சக மனிதர்களுடன் மிக எளிதாக பழகவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. அந்த சவம் இவனுடன் பழகத் துவங்கியதிலிருந்து எதையும் கடந்த காலத்திலிருந்து உருவி எடுத்து புனிதப்படுத்தியோ அல்லது அசுத்தப்படுத்தியோ போதித்ததில்லை .ராகவனுக்கு போதனை என்பது தனது துயரத்தை நிதானமில்லாமல் கடக்க துடிப்பவனை மீண்டும் நிதானத்திற்குள் தவறி விழச்செய்யும் கொடூரமாகவே தெரிந்தது..அந்த சவத்திற்கும் அதே என்ணம் இருந்தது எதார்த்தமானதாக தெரியவில்லை .
ஞானத்தை போதித்தல் என்பது ராகவனை பொறுத்தவரை மருந்து கொடுத்து மலடாக்குவது அல்லது துடிக்க துடிக்க காயடிப்பது என்பதாகவே தோன்றியது.தனது வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய நெருக்கடியை கடந்து போவதற்கு பெரிய தடையாகவே அதைக் கருதினான். அவன் எப்போதும் ஞானத்தை வார்த்தைகளால் விவரிப்பதை அருவருப்பானதாக உணர்ந்தான். உண்மையில் அவரவர் வாழ்வு தானே அவரவர்க்கு ! இதை அடிக்கடி அவன் சொல்லிக்கொள்ள காரணமாக அமைந்ததும் அந்த சவம்தான்.
இதை வாழ்வின் உண்மைகளாக் கொண்டு உரையாடிய அந்த சவத்தின் மீது யாரிடமும் இல்லாத மரியாதை தோன்றியது அவன் குணத்திற்கு இயல்பானது தான்.
வாழும் மனிதர்களின் துயரம் ஒருவரின் போதனைகளால் தீர்வதாக நினைப்பதெல்லாம் கேலியாக இருக்கிறது . இதில் நாம் யாருக்கான தீர்வை யாரிடம் தேடுகிறோம் ராகவா ? என்றதும் ஒரு கணம் அவனுக்கு தீரா பசியுடன் திரியும் வேட்டை நாயின் தொங்கிய நாக்கு கண்முன் வந்து மறைந்தது. நம் காலத்திலும் அதற்கு முன்பும் செய்யப்பட்ட போதனைகளையும் அதை சொல்லிச் சென்றவர்களையும் எண்ணிப் பார்த்தால் இந்த சவம் சொல்வதுதான் வாழ்வியலின் எதார்த்தமான நடைமுறையோ என்று தோன்றியது ராகவனுக்கு இப்படியான போதனைகளை ஒதுக்கி தள்ளியதால் தானே தான் பலராலும் வெறுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட ஒருவனாக இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தான் . அவனுக்கு போதிக்காதவர்கள் யாருமில்லை . அத்தனை பேரும் போதித்தாகிவிட்டது. ஆனால் இப்போது அதை நிராகரித்த அவனுடைய குற்றவுணர்வுகளிலிருந்து இந்த சவ்த்துடன் தினம் நடக்கும் உரையாடலால் அவன் எளிதாக வெளியேற முடிந்தது. இதைவிட பெரிய ஆறுதல் ராகவனுக்கு இருக்க முடியமா ?
தன்னைப் போல யோசனைகள் கொண்ட ஒருவரை வாழ்வில் சந்தித்து அவருடன் உரையாடுவதும் அதுவரை யார் யாரோ தனக்குள் உண்டாக்கிய குற்றவுணர்வுகளை தொடர்ச்சியான அந்த உரையாடல்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கூழம் குப்பைகளாக மாற்றிவிடுவதும் எவ்வளவு நிம்மதியைத் தருகிறது. இதை ராகவன் வாழ்வில் இப்போதுதான் முதல் முறையாக முழுமையாக அனுபவிக்கத் துவங்கினான். அதிலும் தனது கால்கள் எவ்வித பிரார்த்தனைகளும் இன்றியே திடமாக மாறி நடக்க இயலும் அளவிற்கு மாறியதிலிருந்து வாழ்வில் இன்னும் அதிக நம்பிக்கையுடன் நடைமுறைக்கு எதிரான அனைத்தையும் எதிர்த்தபடி பயணித்துக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் இந்த சவத்துடன் என்ன பேசுவது இது ஏன் நம்மையே சுற்றிவருகிறது என்றெல்லாம் யோசனையாக இருக்கும் ஆனால் இப்பொதெல்லாம் எந்த குழப்பமும் இல்லாமல் அதனுடன் அவனால் எதையும் பேச முடிகிறது .
அவன் இதுவரை சவங்களைப் பற்றி கேள்விபட்ட மாதிரியெல்லாம் இது இல்லை. யாரோ அப்படி உருட்டியிருக்கிறார்கள். மனிதர்கள் கடவுளைப் பற்றியும் மீட்பர்களைப் பற்றியும் இதைவிட தாண்டி எத்தனையோ சொல்லிவிட்டார்கள் தானே ! அதை உலகத்தில் பெரும்பாலானோர் நம்பிவிடவும்தானே செய்கிறோம் .
ராகவனும் சவங்களைப் பற்றிய கதைகளை அப்படித்தான் நம்பியிருந்தான். முடிவில் நாம் என்ன செய்வது”அது போல செய்தலில்” தானே முடிகிறது மனிதர்களுடைய அறிவின் எல்லைக்கு மீறிய எல்லாம் ! என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். ஆனால் அவன் எதிர்பார்த்ததை விட சவங்கள் மிகுந்த ரசனை உள்ளவையாக தோன்றின அவைகள் எப்போதும் தங்களை மிக நேர்த்தியாக வைத்துக்கொண்டன, இங்கிதம் தெரிந்தவையாக இருந்தன, இறந்த பிறகு அவை யார் மீதும் தான் இப்படி ஆகிவிட்டதற்கு இவர் இவரெல்லாம் காரணம் என்று குற்றம் சுமத்தவில்லை மேலும் சவங்கள் அத்தனை சுத்தமானவை என்பதெல்லாம் அந்த சவத்தை சந்திக்காமல் போயிருந்தால் ராகவனுக்கு தெரிந்திருக்காது. அதன் குணமும் இணக்கமான மொழியும் பளிச்சென்ற உடையும் யாரையும் ஆராயாத அதன் பார்வையும் நான் எப்போது சவமாக மாறுவேன் என்று ராகவனை ஏக்கப்பட வைத்தது.
அன்று ராகவன் நாற்காலியில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே சலூன் கடை துரை வழக்கம் போல பேச ஆரம்பித்தான் . துரை பேசுவது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் . அவன் ஓடிப் போன காதலர்களைப் பற்றி, கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட கொலைகளைப் பற்றி ,அக்கிரகாரத்தில் வயதான மாமாக்கள் வேலைக்காரிகளுடனும் தங்களின் வயதுக்கு மீறிய பெண்களுடன் வைத்திருக்கும் உறவு பற்றி அவனுடைய வேலை முடியும் வரை பேசிக் கொண்டே இருப்பான். அவன் கடையில் அந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்த படி அவன் சொல்லும் கதைகளைக் கேட்பது ராகவனுக்கு அலாதியானது. தனக்குள்ளாகவே நிகழும் நிகழ்தலிலிருந்து விடுபடவும் அன்றாடத்தில் குறைந்த பட்சமாக தன்னை கரைத்துக் கொள்ளவும் கிடைக்கும் அப்போதைக்கான ஆறுதல். அவனுடன் சேர்ந்து அந்த சவமும் அன்று துரை சொல்லிய கதைகளை சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தது.அப்போது காலம் அவர்களுக்கு முன்னால் எறும்பு தனது வாயில் கவ்வி இழுத்துச் செல்லும் அரிசித் துண்டென வாழ்வின் போதாமைகளை சுமந்து சென்று கொண்டிருந்தது. எத்தனை எளிதாக வாழ்க்கையில் நடக்கும் மிக சிறிய எதுவோ ஒன்று நம் கண் முன்பாகவே காலத்தை கவ்வி இழுத்து சென்றுவிடுகிறது. அதற்கு முதலில் ஒப்புக் கொடுத்துவிட்டு கடைசியில் நாம் எதுவும் தெரியாத அப்பாவிகள் போல வளர்ந்துவிட்டதாக நம்பும் காலத்தில் புலம்பத் துவங்கி விடுகிறோம் என்றே அவனுக்கு தோன்றியது.கடந்து போக தயாராக இருப்பவர்களுக்கு எல்லாவற்றிலும் உள்ள சுவாரசியம் போல இழத்தலிலும் சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் நமக்கு எல்லாவற்றிலும் இருக்கும் பதட்டம் அதை புரியவிடாமல் செய்கிறது. இதையெல்லாம் ஒரு சவம் வந்து புரியவைக்கும் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை.
முடிவெட்டி முடிந்த உடன் சலூன் கடையிலிருந்து இருவருமாக கிளம்பி ஆற்றங்கரையோரமாக நடந்து அக்கிரகாரத்தை தாண்டியுள்ள மேட்டுத்தெருவிற்குள் நுழைந்தார்கள். சவம் தெருவில் இருந்த திண்ணைகளையும் அதில் அமர்ந்தபடி செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த வயதான மாமாக்களையும் ”ஆ” வென்று பார்த்தபடியே வந்துகொண்டிருந்தது. சாலைகளின்றி வெறும் மணல் பரப்பிக் கிடந்த அத்தெருவில் வெயில் ஒரு பெரும் பூதத்தைப் போல எல்லா திசைகளிலும் கை கால் பரப்பிக் கிடந்தது.
ராகவனுக்கு அன்றைய வெயில் சென்னையை ஞாபகப் படுத்தியது. அங்கு சென்றிருந்த போதுதான் ஒரு நாள் கழுவி அடுக்கப்பட்ட பீங்கான் தட்டைப் போல இருந்த ஓர் ஆர்மீனிய பேராலயத்தில் கீர்த்தியை சந்தித்தான். அத்தனை பெரும் இரைச்சலுக்கு இடையே இவனைப் போலவே அவளும் தன்னை ஒளித்துக்கொள்ள இடம் தேடி வந்திருப்பதாக நினைத்தான். அந்தப் பேராலயத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் தெரிந்தது அங்கே அவர்கள் இரண்டு பேரும் மட்டுமல்ல அவர்கள் கால்களுக்கு கீழே புதைக்கப்பட்ட 350 க்கும் மேற்பட்ட சவங்களும் இருக்கின்றன என்று. அந்த நடுப் பகலில் கீர்த்தியின் உடல் முழுக்க பேரமைதி வழிந்தபடியிருந்தது .ராகவனுக்கோ அவளைப் பார்த்ததும் கண்ணாடியில் யாரோ கீறும் ஒலி அவன் காதுகளுக்குள் தொடர்ச்சியாக ஒலிக்கத் துவங்கியது. அவளுடன் எதையாவது பேசிவிட வேண்டும் என்று அந்த ஒலியும் அவள் மௌனமும் ஒரு சேர அவனைப் பிடித்து தள்ளியது அவனுக்கே வினோதம் தான்.
அவள் அர்மீனியர்களின் உடல் வாகுடன் கலந்த தமிழ் பெண்ணின் முகவெட்டுடன் இருந்தாள். ஒளிப்புள்ளியாக அவள் மூக்கில் ஒட்டிக் கொண்டிருந்த வைர மூக்குத்தி ராகவனுக்கு அவள் மூதாதையர்களின் மதராச வாழ்வை ஞாபகப்படுத்தியது.
அவளை நோக்கி பார்வை செல்வதை தவிர்க்க முடியவில்லை அப்படி அன்று அவளை தவித்து தவித்து பார்த்ததும் அதன் பிறகு அவளுடனான தனது வாழ்வும்தான் இன்று அங்கிருந்து வந்த ஒரு சவத்துடன் தனது வாழ்வை பகிர்ந்துகொள்ளும் படி ஆக்கிவிட்டதோ என்றே ராகவன் நினைத்தான். யாருடைய நினைவோ யாருக்கோ மிக நெருக்கமாகத் தோன்றுவதும் அவரது உணர்வுகளுடன் அவர்கள் கைகுலுக்க நினைப்பதும் தானே உலகில் அன்பென பகிரப்படுகிறது. ஒருவரை மற்றொருவருடன் நெருங்கி பழகச் செய்கிறது.அப்படித்தான் இதுவும் நடந்துவிட்டதாக ராகவன் நம்பினான்.
சற்று முன்பு வரை அவனுடன் சலூன் கடையில் அமர்ந்திருந்தது அந்த பேராலயத்தில் இருந்த ஓர் ஆர்மீனிய பாதிரியின் சவமாக இருக்ககூடும் என்று ராகவன் நினைத்தது சரிதான். அங்கிருந்துதான் அது ஒருவர் இன்னொருவருக்காக வைத்திருக்கும் பிரியத்தை பின்தொடரத் துவங்கியது. பாதிரிகளுக்கு பிரியங்களின் இரகசியப் பாதைகள் நன்றாகவே தெரியும். அவர்கள் காதலிப்பது ,காதலை மறைத்துக் கொண்டு வாழ்வது,காதல் வாழ்விற்கு பிறகான பிரிவை ஏற்க இயலாமல் ஒரு சவமாக மாறிப் போவது உலகத்தில் நடக்காதது இல்லை . ஒரு வேளை இது அப்படிப்பட்ட பாதிரியின் சவமாக இருப்பதற்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. கடவுளை சரியாக புரிந்து கொள்ள இயலாமல் போவதைப் போலவே மனிதர்கள் காதலையும் சவங்களையும் புரிந்துக் கொள்ளாமல் போய்விடுகிறார்களே என்பதுதான் இவற்றின் ஆறா துயரமாக இருக்கக்கூடும்.
ஆனால் சவங்கள் இன்னொருவனின் காதலில் தன்னை பார்த்து பூரிப்பு அடையுமா என்பதெல்லாம் ராகவனுக்கு தெரியாது. தான் அன்று கீர்த்தியிடம் எப்படி தனது இயல்பை விட்டுப் போய் பேசினோம்? அவளும் அடுத்த நாளே எப்படி அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்? என்பதெல்லாம் இன்றுவரை ராகவனுக்கும் புரியவில்லை. இதற்கெல்லாம் ஒருவேளை இந்த பாதிரியின் சவம்தான் காரணமாக இருக்குமோ என்று இப்போது யோசித்து என்ன பயன் ? அவனுக்கு அருகில் இந்த யோசனையெல்லாம் எதற்கு உதவ போகிறது என்று கேட்பது போல் காலியாக இருந்த சுழல் நாற்காலியில் அந்த சவம் அமைதியின் உருவமாக அமர்ந்திருந்தது. அது வள வளவென்று பேசும் ஆளல்ல. மிக அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் எப்போதாவது தான் தானாக பேச்சை துவக்கும் அதுவரை அவன் பேசுவதை அல்லது சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும். இதுவரை ராகவன் பார்ததிலேயே சிறந்த ஜனநாயகவாதி இந்த சவம் தான்.
அடுத்தவருக்கு மதிப்பளித்து கேட்பது எப்படி ?அதிலும் மிக நிதானமாக சொல்பவரை இன்னும் சொல் என்று தூண்டும்படி கேட்பது எப்படி என்பதையெல்லாம் ஒரு சவத்தோடு பேசினால் தான் புரிந்துகொள்ள முடியும் என்பதை இதற்கு முன்பாக யார் சொல்லியிருந்தாலும் அவன் நம்பியிருக்க மாட்டான் .அதிலும் இது இசையும் இலக்கியமும் காதலும் தெரிந்த புரிந்த ஓர் அர்மீனிய பாதிரியின் சவம். அதற்கு மார்க்குவஸ் என்றால் அவ்வளவு பிடிக்குமாம் . ஆனால் தானும் அவருடைய கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் போல இப்படி மாறிவிடுவோம் என்றெல்லாம் அது நினைத்தே பார்த்திருக்காது. பேசிக் கொண்டிருக்கும் போதே அது ராகவனிடம் அதன் காதலி ஒரு மதராசி தமிழ் பெண் என்று சொன்ன போது அதன் முகத்தில் தோன்றிய சிரிப்பு ராகவனை ஆச்சரியப் படவைக்கத்தான் என்பது தெரிந்தாலும் தெரியாதது போலவே காட்டிக் கொண்டது.
ராகவன் காலையில் எழுந்ததும் கடுங்காப்பியின் ஆவி பறக்கும் கோப்பையோடு உட்கார்ந்துவிடுவான் கோஹாவிடம் பேசுவதற்கு. இதோடு தினம் பேசத் துவங்கி அவன் அடியோடு மாறிப் போயிருந்தான். சவத்தோடு பழகியும் பேசியும் அவனுக்கு இதுவரை இல்லாதிருந்த நிதானமும் வந்திருந்தது. சொல்லுகிற அத்தனையிலும் அவ்வளவு தெளிவு. அதற்கேற்றார் போல தினம் அந்த பாதிரியின் சவமும் இவன் பார்க்காத உலகத்தின் கதைகளை இவனுக்கு சொல்லிக் கொண்டே இருக்கும். தமிழில் கூட இதுவரை இவன் படிக்காத கதைகளையும் அது சொல்வதைக் கேட்ட போது ராகவன் ஒரு சவத்திற்கு மொழி பேதமற்று முன் முடிவுகள் எதுவும் இல்லாமல் பேசவும் மனிதர்களை அணுகவும் எப்படித் தான் முடிகிறதோ? என்று தோன்றும்.
ராகவனோ முன் முடிவுகளோடு தன் சொந்த வாழ்வின் கசப்புகளோடு எப்போதும் தனித்திருந்தவன் அவனுக்கு தன்னுடைய உலகம் அதைச் சுற்றியுள்ளவர்கள் எல்லாம் போலியானவை. அதற்குள் மூழ்கி ஒருகட்டத்தில் அந்தக் கசப்புகளை இரசிப்பதை மட்டுமே தனது இரசனையாக மாற்றிக் கொண்டவன். அன்பை ,அதைக் கோருபவர்களை உலகில் மிக புனிதமானவர்கள் என்றும் அதைத் தர இயலாத இந்த சமூகத்தின் மனிதர்கள் குறைப்பட்டவர்கள் என்றும் பேசக் கூடியவன். ஆனால் இப்போது அந்த சவம் அதை எல்லாம் அடியோடு அப்படியே மாற்றிவிட்டது. அது ஒரு நண்பனின் உணர்வோடு ராகவனிடம் “மனிதர்களும் அவர்களின் எண்ணங்களும் விசித்திரமானவை அதை நமக்கு ஏற்ற வகையில் ஒரு சிமிழில் அடைப்பது நாம் கடந்து வந்த பரிணாம விதிக்கு நாமே செய்யும் துரோகமில்லையா ? என்று கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. ஒன்று அதற்கு எதிரான இன்னொன்று என்ற அளவுக்குள் நாம் எந்த அளவுக்கு சுருங்கி போய்விடுகிறோம் என்பதை அது ராகவனுக்கு புரிய வைத்தது. ஒருவரின் பயங்களும் நம்பிக்கைகளும் வேறுவேறானவை அல்ல அது ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற எப்போதும் காத்திருக்கும் ஒரு பச்சோந்தியைப் போல அதில் எந்த முரணும் இல்லை .அதற்குள்ளாகத் தான் ஒட்டு மொத்த வாழ்வில் நாம் கொண்டிருக்கும் அத்தனை நம்பிக்கைகளும் இருக்கின்றன என்றது. இது பல முறை தனக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை ராகவனும் உணர்ந்தான்.
அவர்கள் பேசிக்கொண்டே பட்டறைத் தெருவை தாண்டியிருந்தார்கள். அப்பொது போதிக்காத குரலில் ராகவனிடம் “நீ உனது முதல் காதலில் மிக எளிதாக தெரிந்துகொண்ட விஷயங்கள் எதார்த்தமானதுதான் என்றது. ராகவன் உண்மையாகவே தனது முதல் காதலில் நம்பிக்கைக்கும் பயத்திற்குமான இடைவெளி ஒரு ஆள்மாறாட்டம் போன்றது என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருந்தான்.
ராகவனுக்கும் சவத்துடைய காதல் கதையைப் பற்றிக் கேட்க ஆசை. நடந்து வீடு இருக்கும் திருப்பத்தை அடைந்த போது ராகவன் அதனிடம் ” நீ எப்படி ஒரு மதராசி தமிழ்ப் பெண்ணை காதலித்தாய் ? என்று கேட்டதை அது தனது சொந்த விஷயத்தில் இவன் ஏன் மூக்கை நுழைக்கிறான் என்றெல்லாம் நினைக்காமல் புன்னகைத்தவாறே கண்டிப்பாக வீட்டிற்கு சென்றதும் சொல்கிறேன் என்று சொன்ன பதிலின் நாகரீகம் அவனுக்கு ரொம்பவே பிடித்தது.

அவர்கள் இருவரும் வீடு வந்த போது வீட்டு வாசலில் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் கொன்றைகளின் மீது இடைவெளியில் வழுக்கி விழுந்த சின்ன சின்ன வெளிச்சங்கள் உடைந்து சிந்திக்கிடந்தன. அவர்கள் இருவரும் அதை மிதிக்காமல் வருவதை பார்த்தபடி மரவட்டைகள் அதன் மீது தங்கள் கால்களால் கிச்கிச்சு மூட்டியவாறே ஊர்ந்துக் கொண்டிருந்தன. இருவருமாக நடந்து வராண்டாவில் கிடந்த நாற்காலிகளில் ஆளுக்கொன்றாக உட்கார்ந்து கொண்டார்கள்.கொஞ்ச நேரம் இளம் வெயிலை இரசித்தபடியிருந்த சவம் ராகவனைப் பார்த்து தனது பெயரை அர்மீனிய மொழியில் யெஸ் கோஹா யெம் என்று உச்சரித்து தன்னைப் பற்றியும் தன் மூதாதையர்கள் பற்றியும் சொல்லத் துவங்கியதும் தெரு முனையில் மரத்தடியில் பிரசுவித்து கிடந்த நாயொன்று தன் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது .
அந்த சவத்தின் மூதாதையர்கள் பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் சென்னையில் வந்து குடியேறத் துவங்கியிருக்கிறார்கள். அவர்கள் அலெக்சாண்டர் காலத்திலேயெ இந்தியாவுடன் தொடர்பு கொண்டு பிறகு அக்பர் காலத்தில் வணிகம் செய்வதற்கான உரிமை பெற்று பெரும் வணிகர்களாக வாழ்ந்துவந்த பெரிய சமூகம்.உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவோ அல்லது பிழப்பைத் தேடியோ வந்த அகதிகள் அல்ல. அந்த சமூகத்தில் பிறந்து பெரும் புகழுடன் வாழ்ந்த ஒருவராகத் தான் கோஹாவும் இருந்திருக்கிறது. கோஹா பிறந்தது பெர்சியாவில் அங்கிருந்து தனது இளம் வயதிலேயே ஆங்கிலேயர் காலத்தில் பட்டும் நவரத்தின கற்களும் வியாபாரம் செய்வதற்காக இந்தியாவிற்கு வந்து மிக குறுகிய காலத்தில் பெரும் வணிகராக மாறி ஆங்கிலேயருக்கு மிக வேண்டிய நபராக மாறிவிட்டதாக சொன்னது.
ராகவன் இதைக் கேட்ட போது இதெல்லாம் வரலாற்று உண்மையா இல்லை உண்மையென்று நம்பவைக்க பயன்படுத்தப் படும் கற்பனைகளா என்று அவனுக்கு சந்தேகம் .
ஆனால் எதனுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவனை தனது புனைவுகளால் அப்படி நம்பவைத்து இந்த சவத்திற்கு என்ன பயன் ? அதற்கான அவசியம் என்ன இருக்கப் போகிறது ? என்றும் தோன்றியது. தனது கதையை கோஹா சொல்லத் துவங்கியதும் அது தன் நினைவின் சுழலில் விரும்பி விழுந்து அப்போது உண்டாகும் மெல்லிய மயக்கத்தை அனுபவிக்க விரும்புவதை புரிந்து அவன் தனக்குள் எழும் எல்லா கேள்விகளையும் ஒதுக்கிவிட்டு அது சொல்வதை அமைதியாக கேட்டபடியிருந்தான்.
யார்தான் கடந்த காலத்தை தொட்டுப் பார்க்க விரும்பாதவர்கள் ? அதிலும் இறந்து போனவர்களுக்கு ஒட்டு மொத்தமும் கடந்த காலங்கள் மட்டும் தானே ! என்பதே அவன் கதையைக் கேட்கத் துவங்கும் முன்பு தனக்குள் எழுந்த கேள்விகளுக்கு தானே சொல்லிக் கொண்ட கடைசி பதிலாகவும் இருந்தது.
தனது சமயோஜித திறமையாலும் முன் யோசனையாலும் வணிகத்தில் கொடிகட்டி பறந்த கோஹாவிற்கென்று ஆங்கிலேயர் ஆட்சியில் மிக முதன்மையான இடம் கொடுக்கப்பட்டு அதன் பிறகு அது ஆங்கிலேயர்களுடன் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தங்கிவிட்டது . போட்டியுடனும் பொறாமையுடனும் ஒருவொருவருக்கு ஒருவர் சிறு சிறு உரசலுடன் வணிகம் செய்துகொண்டிருந்த பிரெஞ்சுக்கார்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஒரு கட்டத்தில் தொழில் போட்டி அதிகமாகி ஒருவர் மற்றொருவரின் மீது போர் தொடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டார்கள்.அப்போது ஆங்கிலேய அரசில் பெரும் வணிகராக இருந்த கோஹாவை காப்பாற்றும் பொருட்டு ஆங்கிலேயர்களுடன் நட்புறவோடு இருந்த டச்சுகாரர்களின் தரங்கம்பாடி கோட்டையில் சென்று தங்கும்படி கோஹாவை அனுப்பிவைத்து விட்டார்கள். அங்கு பிரெஞ்சுக்காரர்களுக்கென்று ஒற்றர்கள் இருப்பதாகவும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே தற்போதைய தேவை எனவே ஜாக்கிரதையாக நடந்துக்கொள்ளும் படியும் எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். அசாதாரண சூழ்நிலையால் திடீரென்று தோன்றிய பயமும் குழப்பமும் ஒன்று சேர்ந்து இத்தனை காலம் தான் வாழ்ந்த வாழ்வை அர்த்தமில்லாமல் செய்துவிட்டதே என்ற கவலையோடு இரவோடு இரவாக படகில் ஏறியிருக்கிறது கோஹா.
காஸ்பியன் கடலுக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைபட்ட இடத்திலிருந்து கிளம்பிவந்து பல ஆயிரம் மைல் கடந்து எந்த நம்பிக்கையில் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்தோம் அப்போதெல்லாம் இல்லாத உயிர் பயம் இப்போது மட்டுமென்ன? என்ற பல்வேறு கேள்விகளுடன் அங்கிருந்து தரங்கம்பாடியை நோக்கி கோஹாவின் பயணம் தொடங்கியது. அதுவரை இல்லாத எத்தனையோ யோசனைகள், கேள்விகள் குமிழ்விட்டு அதனுள் கொப்பளித்துக் கொண்டிருந்தன. எல்லாவற்றையும் தனக்குள் போட்டுக்கொண்டு அமைதியாக தோன்றும் கடலின் விசித்திரத்திற்குள் தன் கடந்த காலத்தை வீசி எறிந்துவிட முடியாதா என்று தவித்து ஆயிரம் கண்களாக தன்னை பின் தொடரும் நட்சத்திரங்களுக்குள்ளாக நாமும் ஒன்றாக ஒளிந்துக் கொள்ள இயலாதா என்று ஏங்கிய அதற்கு ஆறுதல் சொல்ல அங்கே கடல் மட்டுமே இருந்தது. கோஹா தனது ஒவ்வொரு சிந்தனையையும் விரட்டியடிக்க முயற்சித்து தோற்று பிறகு அந்த யோசனைகள் ஒரு பெரும் சிலந்தியாக மாறி தன்னை விழுங்க வருவதை பார்த்தபடி காலத்திலிருந்து அகாலத்திற்கு பயணித்து அரை மயக்க நிலையிலேயே தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அங்கே பல வாரங்கள் எங்கும் வெளியே செல்லாமல் கோட்டைக்குள்ளாகவே முடங்கி கிடந்த கோஹாவைப் பற்றி கோட்டைக்குள் வேலை செய்த வேலையாட்களும் பெண்களும் தங்களுக்குள் இரகசியமாக பலவற்றையும் பேசிக்கொண்டது அதற்கு தெரியாமல் இல்லை. கண்முன்பாக கடந்து போகும் நிகழ்காலத்திற்குள் பயத்தோடு அவமானத்தை சுமந்தபடி பயணித்தது அதற்கு மிக மோசமான அனுபவம் தான்.
அப்போதைக்கு கடல் என்பதைத் தவிர கோஹாவிற்கு பெரிய ஆறுதல் எதுவுமில்லை. ஒட்டு மொத்த உயிர்களின் இரகசியத்தை தாங்கிக்கொண்டு பூமி மீது மிதந்த அந்த நீலப்பேழையை பார்க்கும் போதெல்லாம் கோஹாவிற்கு அது மனிதர்களின் அன்றாட அபத்தங்களை , போலியான வாக்குறுதிகளை,போலியான பெருமிதங்களை தனக்குள்ளாக மூடி வைத்திருப்பதாகவே தோன்றியது .இத்தனை நாட்கள் தானும் அது தெரியாமல் தானே வாழ்ந்தோம் என்ற குற்றவுணர்ச்சி பெருக பல இரவுகள் தூக்கமற்று சன்னல் வழியாக அந்த நீலப் பேழையின் மீது நின்று பரவி ஆடும் நிலவின் எழும்பற்ற உடலைப் பார்த்துக்கொண்டே காலத்தை கடத்திக்கொண்டிருந்தது கோஹா .
கோட்டைச் சுவர்களில் இரவுப்பூச்சிகளின் சத்தத்தை கேட்கும் போதெல்லாம் விசித்திரமான உருவங்கள் தோன்றி மறைய தூக்கம் வருமா என்ற சந்தேகத்தோடு கோஹா அரை குறையாக தூங்கி எழுந்து இன்று இருக்கும் இரவு நாளை இருக்கிறதோ என்னவோ ? என்ற அச்சத்திலேயே வாழ்ந்திருக்கிறது.
அந்த அச்சமும் அவநம்பிக்கையும் மிகுந்த சூழலில்தான் கோஹா நீலியை முதன் முதலாக சந்தித்தது. அவளை டச்சு அரசாங்கம் கோஹாவிற்கான துபாஷியாக நியமித்திருந்தது. சில நாட்களுக்கு முன்புவரை அவளும் கோஹாவைப் பற்றி ஏதேதோ பேசியவள்தான் .ஒருவரைத் தெரியாமல் அவரைப் பற்றிய கதைகளை உருவாக்கி பேசுவதில் தான் பலருக்கும் சுவாரசியம் இருக்கிறது. ஆனால் ஏதிலியாகி பரிதவிக்கும் கோஹாவின் கண்களை மிக நெருக்கமாக நேருக்கு நேர் சந்தித்த பிறகு அவளுக்கு தான் பேசியதைப் பற்றி மிகப்பெரிய குற்றவுணர்வு ஏற்பட்டது.
அவள் அறிந்தவரையில் எதுவுமற்றவர்களின் பயங்களும் எல்லாம் இருப்பவர்களின் பயங்களும் எப்போதும் வேறு வேறானவை . பயங்கள்தான் நாம் உண்மையில் யார் என்பதை அடுத்தவர்களுக்கு வெளிக்காட்டுகின்றன. உலகின் எல்லா நம்பிக்கைகளும் பயத்தின் புற முதுகுகள் தானே?அதன் பிறகு அவள் கோஹாவின் பயத்தையும் அதற்குள் இருந்த தவிப்பையும் முதன் முதலாக கருணையோடு பார்க்கத் துவங்கினாள்.
எந்த பெரிய திட்டமும் இல்லாமலேயே அவள் கோஹாவிடம் பேசுவதற்கென்றே தினம் அதனுடைய அறைக்கு வரத் துவங்கினாள். அவள் ஆங்கிலத்தோடு கிரேக்கம்,டச்சு மற்றும் பிரெஞ்சு மொழியும் பேசக் கூடிய தமிழ் பெண் என்பது கோஹாவிற்கு ஆச்சரியமூட்டக் கூடியதாக இருந்தது.
தனது பயங்களை போக்கக் கூடிய அவள் அருகாமையால் கோஹா மெல்ல மெல்ல தனக்குள்ளாகவே எப்போதும் பயணித்து அதனுள் மூழ்கி பிரழும் மனநிலையிலிருந்து வெளியேறி இயல்பான ஒருவனாக மாறத் துவங்கியது. ஒரு புறம் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அதன் உத்திகளை பயன்படுத்திக்கொள்ள நினைத்த டச்சு அரசாங்கம் நீலியை அதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டிருந்தது. மறுபுறம்கோஹாவின் சொத்துக்களை கைப்பற்றிய பிரஞ்சு அரசாங்கமோ ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்து கோஹா தனது ஒட்டு மொத்த வணிக நடவடிக்கைகளை பாண்டிச்சேரிக்கு மாற்றிக்கொண்டால் கைப்பற்றிய சொத்துக்களை மீண்டும் கோஹாவிடமே ஒப்படைப்பதாக தூது அனுப்பியது. ஆனால் இந்த ஆசை வார்த்தைகளை ஏற்காத கோஹா தான் ஒரு போதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எதையும் செய்யப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டது. இதற்கிடையில் கோஹாவின் வார்த்தைகளை மொழிபெயர்த்து நீலி டச்சு அரசாங்கத்திற்கு அவ்வபோது வணிக ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தாள். ஒரு சில மாதங்களில் தொடர்ச்சியான உரையாடல்களால் நீலிக்கும் கோஹாவிற்குமான உறவு அடுத்தக் கட்டத்திற்கு சென்றுவிட இப்போது கோட்டை முழுக்க இருவரைப் பற்றிய பேச்சுதான். கோஹவினால் நீலி கர்ப்பமுற்று இருப்பதாகவும் இருவரும் விரைவில் பிரெஞ்சு அரசால் கைதுசெய்யபட்டு நாடு கடத்தப்பட இருப்பதாகவும் கை கால்களற்ற கதைகள் காற்றில் மிதக்கத் துவங்கின. எல்லா கதைகளும் முழு கற்பனையுமில்லை முழு உண்மையுமில்லை . ஆனால் நீலியோ கோஹாவோ இதை பொருட்படுத்தவே இல்லை . இருவருக்குள்ளும் இத்தனை இருக்கிறதா பேசுவதற்கென்று இருவருக்குமே ஆச்சரியம் அந்த ஆச்சரியம் கரைந்து போகாமல் எப்போதும் இருவரும் எங்கும் இணைந்தே இருந்தனர். இருவரும் இருளுக்கும் பகலுக்குமிடையே வழி தவறிய பறவையின் சிறகோடு அங்கும் இங்கும் படபடத்தபடி காலத்தை பின்னோக்கியும் முன்னோக்கியும் இழுத்து விளையாடினார்கள்.ஆனால் அந்த உறவு தவறி விழுந்து மேசைக்கும் தரைக்கும் இடையில் மிதக்கும் கண்ணாடி சீசாவின் உடையாத கணங்களைப் போன்றதாக இருந்தை நீலி அறிந்தே இருந்தாள் . நீலிக்கு நன்றாகவே தெரியும் கோஹாவின் வாழ்க்கையில் தான் ஒரு போதும் நிரந்தரமான ஓர் உறவாக பயணிக்க இயலாதென்று .அப்படி எதிர்பார்ப்பது அவளின் இயல்பிலேயே இல்லை.அவள் அப்பா அவளுக்கு அதைத் தான் சொல்லிக் கொடுத்திருந்தார். அவர் தன் மகளும் தன்னைப் போலவே துபாஷியாக பணியாற்ற விரும்புகிறாள் என்பதை அறிந்ததும் அவளை அழைத்து நீலி ” இந்த மாபெரும் நிலப்பரப்பு வினோதங்களை மறைத்தபடி எப்படி மனிதர்களின் நடவடிக்கைகளுக்கு ஒரு பார்வையாளனாக மட்டுமே இருந்து விடுகிறதோ அப்படி இருப்பவர்களால் மட்டுமே இது போன்ற அரச காரியங்களில் தங்களுக்கு ஏதும் நேராமல் தற்காத்துக்கொள்ள முடியும்”.நீ அப்படி இருக்க முடியுமென்று நம்பிக்கை இருந்தாள் இந்த வேலைக்கு தகுதியானவள் “ யோசித்துக் கொள்” என்றார். இதை நீலி அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் ஒருமுறை திரும்ப தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டாள். அன்றோடு அவளுக்கு மாதவிடாய் தள்ளி போய் மூன்று மாதங்கள் ஆகியிருந்தது .
கோஹா வசந்தகாலத்தை அறிவிக்கும் dew drops பூக்களைப் பறித்துக்கொண்டு வேகமாக தன் அம்மாவைத் தேடி ஓடிக் கொண்டிருந்தது . வீட்டின் ஒவ்வொரு இடமாகத் தேடியும் அம்மாவைக் காணவில்லை.”அம்மா..அம்மா என்று கலக்கத்தோடு அழைத்தப்படி கொல்லைப்புற கதவைத் திறந்துகொண்டு கிணற்றடிக்கு போனால் அங்கே நீலா தன் குழந்தைக்கு பாலூட்டியபடி உட்கார்ந்திருந்தாள். நீலா , நீ எப்படி இங்கே வந்தாயென்று கேட்டபடியே அவள் அருகில் செல்லும் போது யாரோ கோஹாவை பெயர் சொல்லிக் கூப்பிடும் சத்தம் கேட்டது.
“Monseiur cojas “ Monseiur..un message important..monseiur cojas..
சட்டென்று கண்விழித்து பார்த்தபோது எதிரே ஒரு பணியாள் கையில் கடிதத்தோடு நின்றுகொண்டிருந்தான்.பொழுது நன்றாக விடிந்து சூரிய ஒளி சன்னல் திரயைத் தாண்டி தரையில் எதையோ பதுங்கி பதுங்கி தேடிக் கொண்டிருந்தது . கனவின் அடர்த்தியில் நீந்த முடியாமல் நீந்தி நிகழ்வின் கரையை தொடுவது கோஹாவிற்கு சிரமமாக இருந்தது. கடிதம் கொண்டுவந்தவனைப் பார்த்தவாறே உடையை சரிசெய்து கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து வந்து அவன் கொடுத்த கடிதத்தை வாங்கி படித்தது.
”ALL GOOD AGAIN
COME SOON “
JOHN SAUNDERES .
என்று மட்டுமே எழுதப்பட்டிருந்தது.
எதிர்பாராமையின் சூட்சமங்களை ஓர் அதிகாலை பொழுது இப்படி பட்டவர்த்தமாக ஆக்குமா ? என்பது கோஹாவிற்கு புதியது. ஆனால் அதற்கு முன்பாகவே நீலி இந்த நிகழ்வை எதிர்பார்த்திருந்தாள். அந்தக் கடிதத்தையும் படித்திருந்தாள். அதை உடனடியாக கோஹாவிடம் கொண்டு சேர்க்கும் படி கூறியவளும் அவள்தான். அடுத்த நாளே கோஹா ஒரு ஆங்கிலேய பிரபுவின் சாயலில் உடை உடுத்தி தனது மூட்டை முடிச்சுகளுடன் தரங்கம்பாடியிலிருந்து கிளம்ப தயாரானது . கோஹாவின் மனம் முழுக்க இப்போது புது தெம்பு பரவியிருந்தது. எப்படியாவது இழந்த பெருமையையும் பொருட் செல்வத்தையும் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையும் ஆசையும் பெரும் பிரவாகமெடுத்து அதன் உடலின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. அதற்கெனவே தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆங்கிலேய அரசின் கப்பலில் பயணம் செய்து கோஹா 3 வருட காலத்திற்கு பிறகு மதராஸ் நிலப்பகுதியில் காலடி எடுத்து வைத்தது . மதராஸ் அதன் தாய் பூமி அல்ல ஆனால் தனக்கு வாழ்வின் இச்சைகளை முறைப்படுத்தி பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்த நிலம். மிக எளிய மனிதர்களிடமிருந்து கூட இத்தனை மரியாதையும் அன்பும் கிடைக்குமா என்ற ஆச்சரியத்தை இன்றும் தீராமல் காப்பாற்றி வைத்திருக்கும் இடம். அந்த நிலத்தில் இனி செய்வதெற்கென்று ஆயிரம் அயிரம் செயல்கள் இருப்பதாக தோன்றியது கோஹாவிற்கு.
மதராஸ் வந்த ஒரு சில மாதங்களிளேயே பிரெஞ்சு அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட அதன் பழைய சொத்துக்கள் மீண்டும் அதனிடமே ஒப்படைக்கப்பட்டன.விசுவாசத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை வறலாற்றில் எப்போதும் ஆங்கிலேயர்கள் மறந்ததில்லை. கோஹாவும் ஜார்ஜ் கோட்டைக்கே மீண்டும் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டுவிட்டது.
இதை சொல்லி முடிக்கும் வரையில் ராகவன் தனது நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை கோஹா தனது கடந்த காலத்தின் நூல் அறுந்து விடாமல் மிக கவனமாக பிடித்தபடி அதோடு சேர்ந்து தானும் காற்றில் பட்டமாக பறந்து கொண்டிருந்ததை அலாதியான பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
சில வருடங்கள் களித்து வேப்பேரியை சுற்றி அமைந்த கிருத்துவ மிசனரிகளின் அருகிலேயே தனக்கென்று ஒரு இடத்தை தேர்வு செய்து தானும் அங்கேயே வாழத் துவங்கியது .அங்குதான் அதிசயத்தை நிகழ்த்திய மேரிக்காக புதிய கோவில் ஒன்றையும் கட்டியது. அங்கு வாழத் துவங்கியதும் அங்கிருந்த எளிய மக்களோடு இதுவரை இல்லாத தொடர்பும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் கோஹாவிற்கு ஏற்பட்டது. அங்கு சென்று வசிக்கத் துவங்கிய பிறகு ஏனோ மேரியின் முகம் அடிக்கடி கனவில் வருவதும் மறைவதுமாக இருந்திருக்கிறது. ஆனால் மேரியென்று நினைத்து தினம் என் கனவில் நான் தினம் பார்த்தாக நம்பியது மேரி அல்ல என்பதை தெரிந்துக்கொள்ள எனக்கு சில காலம் பிடித்தது என்று கோஹா சொன்னதும் ராகவன் சட்டென்று எதையோ தெரிந்துக் கொண்டவன் போல பதட்டத்தோடு எழுந்துக்கொண்டான். அதன் பிறகு கோஹாவும் பேச்சை நிறுத்திவிட்டு கொன்றை மரத்தில் இதுவரை அமர்ந்துவிட்டு பறந்து போகும் காகம் ஒன்றின் குஞ்சுகள் அடங்கிய கூட்டையே ஏக்கத்தோடு பார்த்தபடி இருந்தது.
அதன் பிறகு சகஜ நிலையை இருவரும் ஏற்படுத்திக் கொண்டு வந்து அமர்ந்த போது ராகவன் மனதில் கோஹாவும் கடலுமே நிரம்பியிருந்தார்கள். புதிதாக இந்த நிலப்பரப்புக்குள் வந்த மதமும் கடவுளும் கடற்கரை ஒட்டி வாழ்ந்த மக்களோடும் காலணிய நாடுகளோடும் எப்படியான தொடர்பைக் கொண்டிருந்தன என்பதை கோஹா பலமுறை ராகவனிடம் சொல்லியிருக்கிறது தான் .ஆனால் இப்போது அது ராகவனுக்கு காதலோடும் மிக நெருங்கிய தொடர்புகொண்டதாகவே தோன்றியது.
அது தனது கதையைச் சொல்ல சொல்ல பல நேரங்களில் அன்பை விடவும் மனிதர்களின் குற்றவுணர்ச்சிகள்தான் கடவுளை உயிர்பிக்கின்றன அதுதான் கோஹாவின் வாழ்க்கையிலும் நடந்திருகிறதென்று ராகவன் ஊகித்துக் கொண்டவனாக கோஹாவின் சலனமற்ற முகத்தை ஒரு முறை பார்த்து பிறகு கொன்றை மரத்தின் பக்கம் தலையை திருப்பிக் கொண்டான்.
கோஹா சற்றுத் தொலைவில் தெருக் கடைசியில் தன் குழந்தையை இடுப்பிலும் தலையில் மோர் பானையையும் வைத்தபடி மோர் விற்று செல்லும் பெண்ணொருத்தியை ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்துவிட்டு பேச்சை தொடர்ந்தது. ஒரு நாள் பகல் உறக்கத்தில் கோஹாவிற்கு ”புனிதகன்னி மேரி தனது ஒரு காலைத் தரையில் ஊன்றியபடியும் மற்றொறு காலை வானில் பறக்க தயாராகவும் வைத்திருந்த கனவு வந்திருக்கிறது. அப்போது குழந்தை ஜீஸசை கட்டிக்கொண்டு கோஹா மேரியின் காலடியில் விழுந்து அம்மா குழந்தையையை இப்படி நிராதரவாய் விட்டுச் செல்ல வேண்டாம் என்று கதறி அழுத நினைவை இன்றளவும் மறக்க இயலவில்லை என்றது.அதனிடம் ”கனவுகளில் அழும் போதுதான் நாம் உணர்வுகளுக்கு உண்மையான மதிப்பளிப்பதாக தோன்றுகிறது” என்றான் ராகவன். அவன் சொன்ன பதிலைக் கேட்டு தழும்பிய கண்களுடன் புன்னகைத்துக் கொண்டது.
அந்தப் பகல் வேளையில் வேண்டாம்.. வேண்டாம்.. வேண்டாம்.. என்று கோஹா போட்ட கூச்சலில் வேலையாட்கள் எல்லோரும் கோஹாவின் அறைக்கு ஒடிவந்திருக்கிறார்கள், எப்போதும் அமைதியாக இருக்கும் கோஹாவின் அறையிலிருந்து திடீரென்று எழுந்த அலறல் சப்தத்தை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை . . அதன் பிறகு கோஹாவின் பேச்சுக்கள் குறைந்து போயிருக்கிறது. யாரையோ எங்கோ தொலைத்துவிட்டு இத்தனை நாட்களும் இயலாதது போலவே நடித்துக் கொண்டிருந்தது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை ?, இப்போது தொலைத்தவரைத் தேடிக் கிடைக்காமல் அதற்கு தனக்கு தானே அளித்துக் கொள்ளும் போலியான சமாதனத்திற்கான பாவ மன்னிப்பு எது ? இரைஞ்சுவதும்,மீண்டும் வெற்று வார்த்தைகளால் தன்னை நிரப்பிக் கொள்வதும் தான் எல்லாமுமா? என்று தோன்ற இப்படியான தன் மனதின் நடிப்பை வெறுத்து ஒதுக்கியிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து வேப்பேரி மாதா கோவிலுக்கு போவதும் மண்டியிட்டு வார்த்தைகளற்ற பிரார்த்தனையில் மூழ்குவதுமாக இருக்கத் துவங்கியது. அப்போதுதான் வெகுநாட்கள் கழித்து தற்போது டேனிஷ் கோட்டையில் துபாஷியாக இருக்கும் கந்தசாமி முதலியிடமிருந்து செய்தி வந்தது .
நீலி ஃப்ரெஞ்சு கமாண்டர் ஒருவனுடன் சென்றுவிட்டதாகவும் அப்போது தன்னுடன் இருந்த அவளுடைய குழந்தையை அழைத்துச் செல்ல விரும்பாமல் அதை Tranquebar missionல் விட்டு விட்டு சென்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதை வாசித்ததும் எதற்காக அழுகிறோம் என்று தெரியாமல் கோஹா கதறி அழுதது. காரணமற்ற அந்த அழுகை இத்தனை நாட்களாய் அதன் நினைவின் மீது குவிந்து கிடந்த எல்லா குப்பைகளையும் ஒரே அடியாக எரித்து அதன் சுவாசப்பைகளை அழுத்தியது. இல்லாதிருந்த எல்லாம் திடீரென்று இருப்பதாகவும் இருப்பது எல்லாம் நாம் செய்த குற்றங்களைத் தவிர வேறேதுமில்லை என்பதாகவும் தோன்றும் போது மனம் தானாகவே வாழ்வின் பிடிமானத்தை இழந்துவிடத் தானே செய்யும். கோஹாவின் பிடிமானம் அப்படித்தான் நழுவி விழுந்தது.அதன் பிறகான நாட்களில் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை காணிக்கையாகவும் சேவையாகவும் மாற்றுவது மட்டுமே நாம் நமக்கு செய்துகொள்ளும் நியாயம் எனத் தோன்ற ஒரு பெரும் தொகையை மக்கள் ஆற்றைக் கடக்க உதவும் பாலம் கட்டவும் மீதமிருந்த செல்வத்திலிருந்து மற்றொரு பெரும் தொகையை தனது கனவில் தோன்றிய அதே மாதாவின் உருவத்தை வழிப்பாட்டுக்கு உரியதாய் மாற்றும் கோவில் ஒன்றை நிர்மானிக்கவும் கொடுத்ததது.
கோஹாவிற்கு மெல்ல மெல்ல கசப்புகளும் அதற்கான அர்த்தங்களும் வெறும் அபத்தங்களாக மாற குற்றவுணர்விலிருந்து வெளியேறி பிறகுதான் துறவர வாழ்க்கை ஏற்று எந்த மாதா அற்புதங்களை செய்யும் அன்னையாக அனைவருக்கும் காட்சி அளித்ததோ அதே மாதாவின் அருகிலேயே அடைக்கலம் ஆகிவிட்டது. முடிவில் அங்கிருந்து அதையும் கடந்து இப்போது வெளியேறவும் செய்திருக்கிறது.
ராகவனுக்கு இது வாழ்வின் வினோதம் மட்டுமல்ல சாவின் வினோதமாகவும் தெரிந்தது. அவனுக்கும் கீர்த்திக்கும் பிறந்த பெண் குழந்தையை அவள் அவனிடம் கொடுத்துவிட்டு அவன் வாழ்விலிருந்து வெளியேறிப் போன போது அவனுக்கு தோன்றிய உணர்வுகள் அப்படியானது தானோ என்னவோ ? இப்போது அதை சொல்லத் தெரியவில்லை . ஆனால் அப்போதிருந்த கசப்பு இப்போது இல்லை. அது ஒரு நிகழ்வின் வேறொரு பரிமாணம் என்பதைத் தவிர ராகவனுக்கு வேறேதும் சொல்லத் தோன்றவில்லை.போக வேண்டும் என்பவர்களுக்கு வழிவிட்டு அதன் எதிர் திசையில் வெகுதூரம் நடந்து வந்துவிட்ட பிறகு அந்த நிகழ்வின் மீதான குற்றவுணர்வு அவனுக்கு அநாவசியமாகப் பட்டது. அதன் பிறகு அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவும் அவனுக்கு எதுவுமில்லை. கடந்த காலத்தின் நிகழ்தகவுகளை புரிந்து கொள்வதுதான் தனக்காக மீதமிருக்கும் ஒட்டு மொத்த வாழ்க்கையின் சுவாரசியமாக இருக்கப் போகிறதோ என்னவோ என்று மட்டுமே நினைத்தான். அப்போது குஞ்சுகளுக்கான இரையோடு அந்த காகம் தனது கூட்டுக்கு திரும்பியிருந்தது.கோஹாவின் சாயலில் மேரியின் உருவம் வடகிழக்கு திசையில் மிதந்துக் கொண்டிருந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
