அம்மாச்சி இறந்தபோது நான் அழவில்லை. இத்தனைக்கும் பன்னிரெண்டு பேரக் குழந்தைகளில் அவளால் வளர்க்கப்பட்ட பேரக்குழந்தை நான்தான். எல் கே ஜி, யூ கே ஜி முடியவும் ஒன்றாம் வகுப்புக்கு பாட்டி வீட்டிற்கு வந்தவன்தான் நான். அம்மாச்சி இருந்த தெருவிலேயே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது அங்கு சேர்த்துவிட்டார்கள். முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் முன் அம்மாச்சி என்னை சாமி அறைக்கு அழைத்துச்சென்று அவள் சொல்ல சொல்ல நான் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் சொன்னேன். அன்றிலிருந்து இன்று கூட ஏதேனும் கோயிலுக்குச் சென்றால் இன்ன தெய்வம் என்றில்லாமல் எல்லா தெய்வத்துக்கும் ‘பாலும் தெளிதேனும்தான் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என முடிப்பேன். ஒருவரால் வளர்க்கப்படுவது என்பது அவரின் மென்மையான சிறந்த குணங்களை சுவீகரித்துக்கொள்வதுதான். நான் அம்மாச்சிதான் எனத் தோன்றும் பொழுதுகள் உண்டு.
ஒரு வாழ்க்கை முடிந்துவிட்டது என எனக்கு அன்று புரியவில்லை. எல்லோரும் நினைப்பொழிவார்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை. மெல்லிய அவ்வப்போது வந்துபோகும் நியாபகமாகத்தான் என்னில் எஞ்சப்போகிறாள் என்பதையும் அன்று நான் அறியவில்லை. இவ்வளவு கறாரான ஒரு நிகழ்வாக மரணம் இருக்க வேண்டுமா என இப்போது நினைத்துக்கொள்கிறேன். ஒரு வாழ்க்கை இருந்ததன் நிகழ்ந்ததன் அர்த்தம் என்ன? புறவயமாக அகவயமாக தேடிச் சலித்தேன்.
அம்மாச்சி விட்டுச்சென்றது சில கதைகளை. அவள் பேரக்குழந்தைகள் இன்று அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், கத்தார், ஆஸ்த்ரேலியா என எங்கெங்கோ இருக்கிறார்கள். எங்கோ யாரோ ஓரிருவர் அவர்கள் குழந்தைக்கு அம்மாச்சியின் கதைகளை சொல்லக்கூடும். அம்மாச்சியின் வாழ்க்கையின் முதல் கதையே காந்தியைப் பற்றியதுதான். காந்தி அம்மாச்சியின் ஊருக்கு வந்தது குறித்த கதைதான் அது. காந்தி வருகிறார் வருகிறார் என ஊரெல்லாம் பேச்சு, அப்போது அம்மாச்சிக்கு ஒரு எட்டு வயது இருக்கும். ஊரில் இருந்த சிறு பள்ளிக்கூடத்தில் இருந்த திடலில் காந்தி உரையாற்ற ஏற்பாடாகியிருந்தது. அந்த சிறு கிராமத்தில் திருவிழாவுக்குக் கூட இத்தனைக் கூட்டம் கூடியது கிடையாது. அம்மாச்சி வியந்து ‘அத்தன கதர் ஆட அத்தன காந்தி குல்லா மன்னார்குடி வென்னத்தாளில கூட அப்டி கூட்டத்த நான் பாத்ததில்ல’ என்பாள். காந்தி பேசும் முன் நிகழ்வைத் துவங்கும் விதமாக ஒரு பாடல் பாடவேண்டும். அமைப்பாளர் அது அந்த ஊரைச் சேர்ந்த குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என விரும்பினார். அம்மாச்சி, ப்ரேமா மற்றும் முத்துலட்சுமி எனும் மூன்று சிறுமிகளை வைஷ்ணவ ஜனதோ பாடப் பயிற்றுவித்து தயார் செய்தார்கள். அம்மாச்சி தற்காலிகமாக அமைக்கப்பட்ட அந்த சிறு மேடையில் நிற்கிறார் மற்ற இரு சிறுமிகளுடன். காந்தி கும்பிட்டபடி மேடையில் ஏறுகிறார். அம்மாச்சி தெய்வீகக் கல அவர் முகத்துல என்பாள். பாடச் சொன்ன போது மூன்று குழந்தைகளுக்கும் பயம். அத்தனைக் கூட்டத்தை பார்த்ததேயில்லை. அதன் முன் பாடவேண்டும் என்பது சாத்தியமேயில்லை. மூன்று சிறுமிகளும் கைகளைக் கோத்துக்கோண்டு பயந்து நிற்கிறார்கள். பாடலை பயிற்றுவித்தவர் ‘வைஷ்ணவ வைஷ்ணவ’ என எடுத்துக்கொடுக்கிறார். அதற்குமுன் கேட்டிராத பாடல் அன்று காலைதான் முதன்முறை கேட்டு மனனம் செய்த பாடல். கொஞ்சமும் நினைவில் எழவில்லை. அம்மாச்சிதான் ஆரம்பித்தாள் பாலும் தெளிதேனும் என்று. மற்றக் குழந்தைகளும் சேர்ந்துகொண்டன. காந்தி புன்னகைத்தபடி கேட்டுக்கொண்டிருந்தார். பாடல் முடிந்தபின் குழந்தைகளை அருகழைத்து குஜராத்தியில் ஏதோ சொல்லி அம்மாச்சியின் கன்னத்தைப் பற்றிக்கொண்டார்.
அம்மாச்சி இந்தக் கதையை எல்லோரிடமும் சொல்வார். காந்தியைப் பார்த்ததுதான் அவள் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு. காந்தி சுடப்பட்டதாக செய்தி அரசல் புரசலாக தெரிந்த பின் அதே மூன்று குழந்தைகள் – இப்போது பெண்கள் – ஊர் பிள்ளையார் கோயிலை நூற்றியெட்டு தடவை சுற்றி வந்திருக்கிறார்கள். பின் வந்தது வனொலியில் அறிவிப்பு. அறிவித்தவர் நேரு.
இதைத்தவிர அம்மாச்சியின் வாழ்வில் சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை, இதனை அம்மாச்சியே சொல்வார். ‘அதைலாம் நாம அறிஞ்சுக்க முடியாதுப்பா. மல்லி பூக்கிறதுக்கும் சூரியன் வந்து போறதுக்கும் ஒரு சகவாசம் இருக்குல’ . சிறு சிறு மல்லிப்பூவை நாரில் வைத்து கட்டி கட்டி சரமாக்குவதுபோல், வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகள் கதைகளாக மாறிக்கொண்டே இருந்தன. விழா நாட்களிலோ விசேஷ நாட்களிலோ பெண்கள் சமைக்கும்போது கதை சொல்லிக்கொண்டே காய் நறுக்குவாள். அம்மாச்சி சொந்த முயற்சியில் தமிழ் வாசிக்கக் கற்றவர். பொன்னியின் செல்வன் வெளியானபோதே வாசித்திருக்கிறார். ஜெயகாந்தனின் நாவல்கள் பலவற்றை தொடராக வந்த போது வாசித்திருக்கிறார். அம்மாச்சி வாசிப்புப் பழக்கத்தை எல்லா பேரக்குழந்தைகளுக்கும் கைமாற்றினாலும் நிலைத்து நீடித்தது என்னில் மட்டும்தான்.
என்னுடைய நான்காம் வயதிலிருந்தே அம்மாச்சியுடன் இருந்தாலும் சிறு குழந்தையாக அம்மாச்சியின் நினைவு ஏதுமில்லை எனக்கு. என் முதல் நினைவே நான் பள்ளி முடிந்து வீடடைகிறேன், என் மாமா அம்மாச்சியை பளேரென அரைகிறார். எனக்கு உடல் விதிர்த்துவிட்டது. நின்ற இடத்திலேயே அழத்துவங்கிவிட்டேன். அம்மாச்சி சொன்ன சொற்களும் நினைவிருக்கிறது ‘புருசன் பெத்த புள்ளன்னு எல்லார்கிட்டயும் மொத்து படணும்னு என் தலைல எழுதியிருக்கு’.
அம்மாச்சியின் வாழ்வில் அம்மாச்சி மட்டும்தான் சாந்தம். சுற்றி நிகழ்ந்தவையும் சரி சுற்றத்தாரும் சரி குரூரத்தை கொட்டிக்கொண்டே இருந்தார்கள். இதற்கு இடையில் எப்படி அந்த சாந்தம் சாந்தமாகவே நீடித்தது எனும் கேள்விதான் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. அப்படி சண்டை நிகழ்ந்த நாட்களில் கூட அம்மாச்சி நந்தியாவட்டைப் பூக்களைப் பறித்து சாமிக்கு இடத் தவறவில்லை. அம்மாச்சி பேரக்குழந்தைகளை மட்டும் வளர்க்கவில்லை.
நந்தியாவட்டை செம்பருத்தி மல்லிக்கொடி என பல மலர்கள் வீட்டில் உண்டு. மரத்தாலான ஒரு பூக்கூடையில் காலையில் எழுந்து குளித்த பின் பூக்களை பறித்து நிறப்புவாள். வீட்டில் சாமி அறையில் இருந்த அத்தனை சாமி படத்திலும் செம்பருத்தி இருக்கும். விளக்கு ஏற்றிய பின்பு நந்தியாவட்டை பூவை ஒவ்வொன்றாக எடுத்து இட்டு பூஜிப்பாள். அந்த மரத்தாலான பூக்கூடை அம்மாச்சியினால் அவள் வாழ்ந்த எல்லா நாட்களிலும் உபயோகிக்கப்பட்டது. ஒரு முறை சொன்னாள் அந்த பூக்கூடை குடவாசல் சந்தையில் அவள் தாத்தா வாங்கித் தந்தாக.
நாளின் பூஜை முடிந்த பின்னும்கூட பூக்கைளை நிறப்புவாள். குளிக்காதபோதும் நான் பூக்களை பறித்துஇடுவேன். அம்மாச்சி எதுவும் சொல்வதில்லை. இரண்டாவது முறை பூப்பறிப்பது அக்கம் பக்கமிருக்கும் வீடுகளுக்கானது. சரளா மாமி தினம் தவறாமல் வருவாள். அவள் வீட்டில் டிசம்புர் பூ செவ்வரளி இருக்கும். அதனை எடுத்து வருவாள். இங்கிருந்து நந்தியாவட்டை செம்பருத்தியை கொண்டு செல்வாள். இது தினசரி வழக்கம். வந்தால் ஒரு மணி நேரமாகும், பேசிக்கொண்டெ இருப்பார்கள். அம்மாச்சியின் நெருங்கிய தோழி மாமிதான். சில நாட்கள் எதுவும் பேசிக்கொள்ள மாட்டார்கள், அமைதியாய் சோபாவில் அமர்ந்திருப்பார்கள், அவ்வளவுதான். நான் அந்த அமைதியை களைக்கும் படி எதாவது குரல் எழுப்புவேன். சரளா மாமி எதிர்வீடுதான். இரவில் ஒரு சந்திப்பு நிகழும், மாமி மாலை ஆறு மணியானால் திண்ணைக்கட்டையில் அமர்ந்திருப்பாள். அம்மாச்சி சென்று அமர்ந்தாள் தாத்தா திட்டுவார். தாத்தா படுக்கச் சென்ற பிறகு நிகழும் அம்மாச்சியின் மொத்த வாழ்வுக்கும் நடந்தேறிய ஒரு சடங்கு உண்டு. நாய்களுக்கு சோறு வைப்பது. தெருவில் வாழ்ந்துவந்த நான்கைந்து நாய்கள் தொடர்ச்சியாக அம்மாச்சியிடம் இரவுணவு கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தன. கொஞ்சம் கூடுதலாகவே அம்மாச்சி சோறு வடிக்கிறாள், இல்லையெனில் தினம் ஐந்து நாய்கள் உண்ணும் அளவுக்கு மிஞ்சாது அல்லவா? நாய்களுக்கு சோறிட்டபின் கையில் இருக்கும் பாத்திரத்துடன் மாமியுடன் இருவது நிமிடம் பேசுவாள். பௌர்ணமி நாட்களில் நிலாவை பார்த்து ஓரிரு சொல் பகிர்ந்துகொள்வார்கள். அம்மாச்சி அன்று வாசித்த செய்திகளை மாமிக்கு பகிர்வாள். சில நாட்களில் ‘ஏ பாப்பா’ என தாத்தாவின் குரல் வந்ததும் அம்மாச்சி விழுந்தடித்து ஓடுவாள்.
தாத்தா அம்மாச்சியை திட்டிக்கொண்டே இருந்தார். அவரது தொழில் முடங்கிப்போன கோபமா தெரியவில்லை. எப்பொழுதுமே கோபமாக இருந்தார். இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் எல்லாம் வந்தது. சாப்பாட்டில் உப்பில்லாவிட்டால் திட்டுவார். கால்மிதி குப்பையாக இருந்தால் திட்டுவார். அவருக்கு சிடுசிடுப்பு வந்தால் திட்டுவார். நான் அம்மாச்சிக்கு வாங்கிக்கொடுத்த நாவலொன்றை தாத்தா எடுத்து தன் அறையில் ஒளித்துவைத்துக்கொண்டார். அவருக்கு தெரியாமலேயே நான் திருடி அம்மாச்சியிடம் சேர்த்தேன். தாத்தா உறங்கும் நேரங்களிலேயே அந்த நாவலை அம்மாச்சி வாசித்து முடித்தார். தாத்தாவிற்கு அடுத்தபடியாக மாமா திட்டுவார் அம்மாச்சியை. சாம்பாரா இது? எனக் கேட்டுவிட்டு முகம் சுழித்து திட்டுவார். பின்பொரு நாள் மாமா இறந்து போனார் எனும் செய்தி வந்தது. உடல் கூட கிடைக்கவில்லை. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். யாரோ வெட்டித்தான் கொன்றார்கள் எனும் பேச்சு. அம்மாச்சி அழுதுகொண்டே இருந்தாள் ஒரு வாரத்திற்கு. ஒரு நாள் மட்டும்தான் பூப்பறிக்க மறந்தாள். அன்றும்கூட சரளா மாமி வந்து மரக்கூடையை எடுத்துச் சென்று பூப்பரித்துக் கொடுத்தாள். அடுத்த நாளிலிருந்து அழுது வீங்கிய முகத்துடனேயே பூப்பறித்தாள், நாய்களுக்கு உணவிட்டாள்.
‘சோகத்துலேயே கொடுமையானது புத்திர சோகம்தான்’ என்று பெரியப்பா அடிக்கடி சொல்வார். அம்மாச்சிக்கு அடுக்கி வந்தது புத்திர சோகம். ஒன்பது பிள்ளைகளில் நால்வர் மறித்தனர். எல்லாம் இருபதிற்கும் மேற்பட்ட வயதில். அம்மாச்சி ஒவ்வொரு இறப்புக்கும் உடைந்து அழுதாள். ஒரு தினம் பூப்பறிக்கத் தவறியது. ஆனால் மீண்டு எழுந்தாள் அம்மாச்சி. வீட்டுல் கொல்லையில் இருக்கும் மல்லிக்கொடி ஒரு மூங்கில் கழியைச் சுற்றி வளர்வது போல் அம்மாச்சி தன் வாழ்க்கையின் மையமாக பூப்பறித்தலையும் சாமிக்கு இடுவதையும் வைத்துக்கொண்டாள்.
நான் என்ன சாப்பிடுகிறேன் என்ன படிக்கிறேன் என்பதில் மிகக் கவனமாக இருந்தாள் அம்மாச்சி. எங்கிருந்தோ பேசி அம்புலி மாமா காமிக்ஸ் தருவித்தாள். விக்ரமாதித்யன் கதைகள், தெனாலிராமன் கதைகள், அக்பர் பீர்பால், புத்த ஜாதகக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் என அம்மாச்சியால்தான் நான் வாசித்தேன். கோடை விடுமுறைக்கு மட்டும் வந்து போகும் பிற பேரப்பிள்ளைகள் வாசிக்கவில்லை, அம்மாச்சியுடம் கதைகள் மட்டும் கேட்பார்கள். கதை கேட்கும் பொறுமையில்லாத வயதினை பேரக்குழந்தைகள் நாங்கள் எட்டிவிட்டோம். எல்லோர் கையிலும் செல்போன் இருந்தது. எல்லோரும் எங்கெங்கோ சென்று படித்தார்கள். நான் ஊரில் இருந்தபடியே ஆர்ட்ஸ் கலேஜில் பி ஏ இங்லிஷ் படித்தேன் பின் எம் ஏ முடித்தேன் பின் எம் ஃபில் பின் பி எச் டி. நான் படித்த கல்லூரியிலேயே எனக்கு ப்ரொஃபஸர் வேலை கிடைத்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள நான் வேகவேகமாக வந்த நாளில்தான் தாத்தா இறந்துபோனார். தாத்தா இறந்தது எனக்கு வருத்தம் அளித்தாலும் ஒரு ஆசுவாசத்தை நான் அடைந்தேன். இனி அம்மாச்சியை அடிக்க ஆளில்லை என்று. ஆனால் அம்மாச்சி உண்மையிலேயே அழுதாள். பின்பொருநாள் ‘அம்மாச்சி உனக்கு மாமா மேல தாத்தா மேலல்லாம் கோபமே இல்லையா?’ என்றேன். சிரித்தபடி ஒரு மௌனத்தை மட்டும் வீசிவிட்டு பூக்கூடையுடன் கொல்லைக்குச் சென்றாள்.

என்னுடைய ஆறாம் வயதிலிருந்து கேட்கும் அம்மாச்சியின் குரல் மெல்ல நெளிந்து வளைந்து முதுமை சூடிக்கொண்டது. எனக்கு மணமானதும் அதே தெருவிலிருக்கும் இன்னொரு வீட்டுக்கு செல்ல வேண்டியதானது. நான் ஒப்பவில்லை, அம்மாச்சிதான் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள். அப்படியும் தினம் மாலை மூன்று மணி நேரம் அம்மாச்சி வீட்டில்தான் கிடந்தேன். பல நாட்களில் அம்மாச்சி வீட்டில்தான் இரவுணவு. இரவு நாய்களுக்கு அம்மாச்சி உணவிட்டபின்தான் வீடு திரும்புவேன்.
‘நமக்கு புரிபடாத கணக்கு ஒன்னு இருக்கு வாழ்கைல’ என்பாள். அந்த கணக்குத்தானா தெரியவில்லை. எனக்கு குழந்தை பிறந்த நாளில் அம்மாச்சி இறந்து போனாள். முதல் நாளிரவுதான் அம்மாச்சியிடம் ஊருக்குச் செல்கிறேன் நாளை அல்லது மறுநாள் பிரசவமாகும் என கூறிவிட்டு விடை பெற்றேன். அம்மாச்சி சரளா மாமியிடம் பேசிக்கொண்டே நான் தெருக்கோடி திரும்புவது வரை பார்த்துகொண்டிருந்தாள். அடுத்த நாள் மதியம் செய்தி வந்தது. சரளா மாமி பூப்பறிக்க வழக்கபோல் வந்திருக்கிறாள். செம்பருத்தி ஒன்று கூட கிள்ளப்படாமல் இருக்கவும்தான் மாமி அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்திருக்கிறாள்.
அம்மாச்சி நடுக்கூடத்தில் ஐஸ் பெட்டியில் கிடத்தப்பட்டாள். எனக்கு அழுகை வரவே யில்லை. அழுகை வந்தால்தான் சோகமா? அழுதுவிட்டால் தேவலாம் என்றிருந்தது ஆனால் கொஞ்சமும் அழுகை வரவில்லை. இதென்ன இதென்ன எனும் ஒற்றைக் கேள்வியாகவே மனம் சுழன்றது. புத்தி தெளிவடைந்ததும் இதன் பொருளென்ன? என மாற்றிக்கொண்டேன். எட்டு ஏக்கர் நிலம் மற்றும் அந்த வீடு, இதனால் இரண்டு மாமாவுக்கும் கைகலப்பு வரை சென்றது. அம்மாச்சி இதனையும் கடப்பாள் எனத் தெரியும் எனக்கு. பன்னிரெண்டு பேரக்குழந்தைகளில் நான் ஒருவன்தான் நெய்ப்பந்தம் ஏந்தினேன். ஷாமியானா எல்லாம் போட்டு தப்பு தாளமெல்லாம் அடித்தானது. ஊளையிட்டு அழுத தெருநாய்களை கல்லெறிந்து துரத்தினார்கள். சரளா மாமி முந்தியால் வாய்ப்பொத்தியபடி ஓரமாய் கண் சிவக்க நின்றிருந்தாள். நெருப்பு அள்ளி பசி பசி யென அள்ளியுண்டதைப் பார்த்த போது அம்மாச்சியிடம் பறக்கும் நாவுடன் இரவுணவுண்ணும் நாய்கள்தான் நினைவில் வந்தது. அனல் படவும் சற்று எல்லோரும் விலகி நின்றார்கள். மாமா அழுதார்.
வீடு மெல்லக் காலியானது. கோர்ட்ல பாத்துக்கலாம் என மாமாக்கள் விலகினார்கள். எல்லோரும் நீங்க என் கையில் வீட்டுச் சாவி வந்தது. நான் அன்றிரவு அங்கு வழக்கமாக கிடந்துறங்கும் ஹாலிலேயே உறங்கினேன். அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்குத்தான் எழுந்தேன். வாசலிலிருக்கும் வழக்கத்தைவிட அடர்த்தியாகப் பூத்திருந்த நந்தியா வட்டையை செம்பருத்தியைப் பார்த்த போது எங்கோ எதுவோ உடைந்துகொள்ள ஓவேன ஓலமிட்டு அழுதேன். சரளா மாமிதான் ‘என்னடா கொழந்த’ என ஓடிவந்து பற்றித் தூக்கினாள். தூக்கி நிறுத்தி கண்களைத் துடைத்துவிட்டு ‘பூப்பறிச்சு சாமிக்கு வை, எல்லாம் சரியாயிடும்’ என்றாள்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
