இறுதி வாக்குமூலம்

தமிழ் இலக்கியம் பூரா பெரும்பாலும் வாழ்ந்து கெட்டுப் போனவங்களைப் பத்தித்தானே இருக்கு. அதுதான எழுத்தாளங்களுக்கு லேசா எழுத வருது. சோகத்த எழுதுறது சுலபமா இருக்கு என்று தோன்றியது. இந்த மாதிரி, நாராயண பிள்ள மாதிரி சின்னச் சின்னப் பணக்காரங்கதான் அரசியல், சமூக மாத்தங்களிலே தாக்குப் பிடிக்க முடியாமே சில பேரு நொடிச்சுப் போயிருதாங்க. டாடா, பிர்லா மாதிரி பெரும் பணக்காரங்களை ஒலகத்துல நடக்கிற மாற்றங்கள் ஒண்ணும் பண்ணுதது இல்லே. அம்பானி குடும்பம், அதானி குடும்பம் எல்லாம் எத்தன தலைமொறை ஆனாலும் நொடிச்சுப் போகாது. இவங்க எல்லாம் பல தொழில்கள்ள மொதலீடு செஞ்சு நிரந்தரப் பணக்காரங்களா இருக்காங்க.

வாக்குமூலம் – அத்தியாயம் 15

பொங்கல் டயத்துல கடைகள்ள வெள்ளை அடிக்கிற மட்டைகள் விப்பாங்க. அது பனை மட்டை. அதை மாரியப்பன் வாங்கிட்டு வருவான். ஒரு பக்கம் கல்லை வச்சு மட்டைய நைப்பான். சுண்ணாம்புல நீலத்தக் கலந்து அடிச்சா வீடு பளீருன்னு ஆயிடும். எல்லா அறைகளையும் அடிச்சம் பெறவுதான் அடுப்பாங்கரைய அடிப்பான். ஏன்னா அடுப்படிச் சொவர் எல்லாம் பொகை பட்டு கருப்பா இருக்கும். மொதல்லயே அடுப்படி அடிச்சா நல்ல சுண்ணாம்புத் தண்ணியெல்லாம் கருத்திரும்ன்னு கடைசியிலதான் அடிப்பான். வெள்ளையடிச்சதுமே வீட்டுக்குப் பொங்கல் களை வந்துரும்.

வாக்குமூலம் – அத்தியாயம் 14

எம்.ஜி.ஆர். மன்றத்த ஆரம்பிச்சு வைக்க கே.ஆர். ராமசாமியும், கருணாநிதியும் வந்திருந்தாங்க. ரொம்ப ஒண்ணும் பெரிய கூட்டம் இல்ல. ஏழெட்டுப் பேரு நின்னுருப்பாங்க. கோனாக்கமார் தெருக்கார திருவை அண்ணாமலைதான் அந்த மன்றத்தை நடத்துனாரு. கீழ, தெருவுல ரெண்டு நாற்காலியப் போட்டு கே.ஆர். ராமசாமியவும், கருணாநிதியவும் உட்காத்தி வச்சிருந்தாங்க. கருணாநிதியும், ராமசாமியும் தோள்கள்ல நீளமா நேரியல் மாதிரி துண்டைத் தொங்க விட்டிருந்தாங்க. அயர்ன் கடைக்காரர் அவா பாட்டுக்கு துணிகளைத் தேய்ச்சுக்கிட்டிருந்தாரு. பெரிசா எந்தப் பரபரப்பும் இல்ல. கொஞ்ச நேரம் இருந்துட்டு ரெண்டு பேரும் பொறப்பட்டுப் போயிட்டாங்க.

வாக்குமூலம் – அத்தியாயம் – 13

சபரி மலைக்கிப் போறாங்க. மகர ஜோதி பாக்கப் போறாங்க. எதிர்த்த மலை உச்சியில ஆட்கள், ஜோதி தெரிய வேண்டிய அந்தக் கருக்கல் நேரத்துல, தீப்பந்ததைக் கொழுத்திக் காட்டுதாங்க. அந்த இருட்டுல ஆட்கள் இருக்கது தெரியாது. அந்த நெருப்பத்தான் மகர ஜோதின்னு சொல்லுதாங்கன்னு இவங்க அப்பா சொல்லுதாஹ. மகர ஜோதி அன்னைக்கி எதிர்த்த மலையில என்ன நடக்குன்னு ஆட்கள் போயிப் பாத்திருக்காங்க. அங்க போயிப் பாத்தா இதுதான் நடந்திருக்கு. கடவுள் நம்பிக்கையை வளர்க்கிறதுக்காக, நம்பிக்கை ஏற்படுகிறதுக்காக இதெல்லாம் செய்தாங்கன்னு ரவியோட அப்பா சொல்லுதாங்க. இது நெசமோ, பொய்யோ? யாரு கண்டது? நமக்கு அடியும் தெரியாது, முடியும் தெரியாது.

வாக்குமூலம் – 12

ஒலகத்திலே எல்லாமே கணக்குத்தான். நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போலன்னு சிவவாக்கியர் சொல்லுதாரு. சூரியன், பூமி, இந்தக் கெரகங்கள் எல்லாமே ஏதோ ஒரு கணக்குலதான் சுத்திக்கிட்டு இருக்கு. வேகம் கூடினாலும் போச்சு, வேகம் கொறைஞ்சாலும் போச்சு. ஒடம்புச்சூடு கூடிரவும் கூடாது, கொறைஞ்சிரவும் கூடாது. இந்த மாதிரித்தான், எல்லாமே கணக்குதான்.

வாக்குமூலம் – அத்தியாயம் 11

அவ நேத்து வந்திருந்தா. யாரோ கோடாடுன்னு ஒரு டைரக்டர் செத்துப் போயிட்டாருன்னு ரொம்ப வருத்தப்பட்டுப் பேசிக்கிட்டு இருந்தா. நம்ம நாட்டு டைரக்டர் செத்துப் போயிட்ட மாதிரி ரொம்ப ஆத்தாமைப் பட்டா. இவுஹ அப்பாவுக்கும் அவரு செத்துப் போனது சங்கடமாத்தான் இருக்குது போல. அவரோட படங்களப் பத்தி ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நாளைக்கி முன்னாலே ஶ்ரீதர் செத்துப் போனதையும், பாலச்சந்தர் செத்துப் போனதையும் பத்தி நெனச்சுக் கிட்டேன். ஒலகத்துல பொறந்துட்டா சாவுன்னு ஒண்ணு வரத்தானே செய்யும்? எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் செத்துத்தானே போறாங்க? சாவு கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா?

வாக்குமூலம் – அத்தியாயம் 10

வீடு மாதிரி, பள்ளிக்கூடம் தேவை, காலேஜ் தேவை, வாகனங்கள் தேவை, உணவு பயிரிட நிலம் தேவை, கோவில், மசூதி, சர்ச்கள் எல்லாம் வேணும். வியாபாரம் வேணும், தொழில் வேணும், நீர்நிலைகள் வேணும், காடு, மலை எல்லாம் வேணும். ஆனா, இலக்கியம் நவீன சினிமா எந்தளவுக்குத் தேவை? சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தான கோபாலன் இவங்களோட இசை எல்லாம் ரொம்ப பேருக்கு தேவைப்படாம இருக்கலாம். ஆனா இதுக்கும் உலகத்திலே இடம் இருக்கு.

வாக்குமூலம் – அத்தியாயம் 9

இப்பம் எந்தப் பேருகாலம் வீட்டுல நடக்குது? எல்லாம் ஆசுப்பத்திரிதான். ஜாதகம் எல்லாம் பார்த்து, அந்த நட்சத்திரத்துப்படி பேருகாலம் நடக்கணும்ன்னு சிசேரியன் கூடப் பண்ணிக்கிடுதாங்களாம். அப்போ எல்லாம் பிள்ளை பெத்தா ‘பச்ச ஒடம்பு, பச்ச ஒடம்பு’ன்னு சொல்லி, ஏழெட்டு நாள் எந்திரிக்கவே விடமாட்டாங்க. இப்போ பேருகாலம் ஆன மறுநாளே வீட்டுக்குப் போகலாம்னு சொல்லுதாங்க. ஆயுதம் போட்டு (சிசேரியன்) பிள்ளையை எடுத்தாத்தான் கூடுதலா ரெண்டு மூணு நாளு இருக்க வேண்டியது வரும். கல்யாணம் ஆகி வருஷக் கணக்கா பிள்ளை இல்லாமே இருந்ததெல்லாம் போயி, கல்யாணம் ஆன பத்தாவது மாசமே பிள்ளையைப் பெத்துக்கிடுத காலமா ஆயிரிச்சு. சில பேரு கல்யாணம் ஆகும்போதே ரெண்டு மாசம், மூணு மாசம் கர்ப்பமா இருக்காங்கன்னுல்லாம் சொல்லுதாங்க. கலி முத்திச் போச்சு. வேறென்னத்தைச் சொல்ல?

வாக்குமூலம் – அத்தியாயம் 8

கடவுளை வழிபட பிரார்த்தனை, மந்திரம், சடங்குகள்னு நெறஞ்சு கிடக்குது. கோவில்களும், தேவாலயங்களும், பள்ளிவாசல்களுமா பெருத்துக் கிடக்கு. எல்லா இடத்திலேயும் பிரார்த்தனையோட முணுமுணுப்பு கேக்குது. பாவம் ஜனங்க. இதிலே செத்துப்போன பிறகு நற்கதி அடையணும், சொர்க்கத்துக்குப் போகணும்னு அதுக்காக வேற கடவுள்கிட்டே மல்லாடுகிறாங்க. இத்தனை பில்லியன் ஜனங்களோட ஆசையையும் அவரு எப்படி நிறைவேற்றி வைப்பாரு? அதனாலேதான் ‘மதம் ஒரு அபின்’னு கார்ல் மார்க்ஸ் சொன்னாரு போலிருக்கு.

வாக்குமூலம் – அத்தியாயம் 7

பள்ளிக்கூடம் தொறந்த அன்னைக்கே பரிச்சப் பேப்பர் எல்லாம் தந்திருவாங்க. ஒவ்வொரு பீரியட் ஆரம்பிக்கும்போதும் பக்கு பக்குன்னு இருக்கும். மார்க் கொறைஞ்சா சார்வா பெரம்பால அடிப்பாரு. நான் விஞ்ஞானத்துலயும், தமிழ்லயும் தான் பெயிலாவேன். அண்ணன் எல்லாப் பாடத்துலயும் பெயிலாயிருவான். ஒரு வாரத்துல புராக்ரஸ் ரிப்போர்ட் வந்துரும். பெயிலான பாடத்து மார்க்குக்குக் கீழே செவப்பு மையால கோடு போட்டிருக்கும். அப்பாட்ட கையெழுத்து வாங்கணுமே. வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெரு மகராசன், அவன் அப்பா கையெழுத்தை அவனே போட்டு சார்வா கிட்ட மாட்டிக்கிட்டான். ஹெட்மாஸ்டர் அவனை ப்ரேயர்ல கூப்புட்டு அடிச்சாரு. ரொம்பப் பாவமா இருந்துச்சு.

வாக்குமூலம் – அத்தியாயம் 6

சித்தப்பா வேல பார்த்தது ஶ்ரீவைகுண்டத்துல. இப்போ இதை திருவைகுண்டம்னு சொல்றாங்க. ‘ஶ்ரீ’, ‘ஸ’ இதெல்லாம் கூடாதுன்னு அரசியல் கட்சிக்காரங்க சொல்றாங்க. சமஸ்கிருத எழுத்துகள் வேண்டாம்ங்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, காலங்காலமா ஜனங்க சொல்லிக்கிட்டு இருக்கிற ஊர்ப் பேருகளை மாத்துறது என்ன ஞாயம்னு தெரியலை. பஸ்ஸை பேருந்துன்னு தமிழ்ப்படுத்தினாங்க. ஆனால் இந்த 2022-ல எத்தனை பேரு பேருந்துன்னு சொல்றாங்க?

வாக்குமூலம் – அத்தியாயம் 5

எனக்கு காவேரி அத்தையோட ஞாபகம்தான் வந்துச்சு. காவேரி அத்தை வீட்டு மாமா வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோவில் தெருவுல இன்னொரு குடும்பம் வச்சிருந்தாங்க. காவேரி அத்தை மூக்கும் முளியுமா நல்லாத்தான் இருப்பா. சமையல் எல்லாம் நல்லா பண்ணுவா. மாமாவுக்குத் தொண்டர் சன்னதியில் புரோக்கர் வேலை. வத்தல், வெங்காயம், சிமெண்ட் இன்னதுன்னு இல்ல. எல்லாத்தையும் லாரி பிடிச்சி வெளியூருக்கு அனுப்புவா மாமா. அதுல கமிஷன் கெடைக்கும். அத்தை – மாமாவுக்கு ஆண் ஒண்ணு பொண்ணு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளைக. காவேரி அத்தையைக் குத்தம் சொல்ல முடியாது. கட்டாத்தான் குடும்பம் நடத்துனா.

வாக்குமூலம் – அத்தியாயம் 4

ஒரு காலத்திலே ஆனந்த விகடன், கல்கி, குமுதமெல்லாம் வாராவாரம் படிக்கலைன்னா என்னவோ மாதிரியா இருக்கும். இப்போ இந்தப் பத்திரிகைகளைப் படிக்கவே முடியலை. முன்னே தாமரை, கணையாழி மாதிரி சிற்றிதழ்கள் கூடப் படிக்கப் பிடிச்சிருந்திச்சு. இப்போ வருகிற இலக்கியப் பத்திரிகைகளைக் ‘கடனே’ன்னுதான் படிக்க வேண்டியதிருக்கு. சினிமாவும் இப்படித்தான் ஆகிப்போச்சு. ஆரம்பத்திலே ஶ்ரீதரோட நெஞ்சில் ஓர் ஆலயம், அவளுக்கென்று ஒரு மனமெல்லாம் ரொம்பப் பிடிச்சிருந்துது. போலீஸ்காரன் மகளும் அப்படித்தான்.

வாக்குமூலம் – அத்தியாயம் 3

ஊர் என்றால் வீடுகளும், கட்டிடங்களுமா ஊரு? இல்லை தெருக்களும், ரோடுகளும் ஊரா? இவங்க என்னென்னவோ புஸ்தகங்களைப் படிச்சுப் போட்டு என்னென்னவோ பேசுறாங்க. அவுகளுக்கும் பொஸ்தகம், சினிமா, நாடகம், கதை இதுதான் உலகம்னு ஆயிப் போச்சு. “வேணும்னா நீயும் சினிமாவுக்குப் போயிட்டு வா”ங்கிறாங்க. டி.வி.யில் போடாத படமா? டி.வி.யில் போடாத நாடகமா? ஒண்ணும் மனசுல ஒட்ட மாட்டேங்குது.

வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்

அவளுக்கு ஊரோடயே இருக்கணும், நல்லது பொல்லாததுக்கு சொந்த ஜனங்களோட இருக்கணும்னு ஆசை. ஊர்தான் இருக்க விடலியே? பொழைக்க வழி இல்லாமே விரட்டில்லா விட்டுடுத்து. அப்பிடியே வேலை வெட்டி ஏதாவது கெடச்சாலும் படிச்ச படிப்புக்கு கவர்னர் உத்தியோகமா கெடைச்சிரும்?

வாக்குமூலம் – அத்தியாயம் 1

நாகலிங்கப் பூவின் வாசனை இத்தனை நெருக்கடி, களேபரத்திலும் மூக்கைத் துளைக்கிறது. திருநெல்வேலியில் காந்திமதி அத்தை இருக்கிற வளவில், பின்னால் வாய்க்காலுக்குப் போகிற முடுக்கில் ஒரு உயரமான நாகலிங்க மரம் நிற்கிறது. பூக்கிற காலத்தில் பூத்துத் தள்ளிவிடும். இளஞ்சிவப்பும் வெள்ளையுமாய் உதிர்ந்து கிடக்கும் பூவை, பூவென்றுகூடப் பாராமல்தான் எல்லோரும் மிதித்துக்கொண்டு போவார்கள். தை மாதம் வாசலில் கோலம் போட்டு சாணிப் பிள்ளையார் பிடித்து பூசணிப் பூவையும், பீர்க்கம் பூக்களையும் அழகாகச் சொருகி வைத்திருந்தால், உச்சியில் வெயில் ஏறுகிறதற்குள் ஏதாவதொரு சாணிப் பிள்ளையாரைப் பூவுடன் சேர்த்து யாராவது மிதித்துவிட்டுத்தான் போகிறார்கள். என்ன செய்ய முடியும்? இதற்கெல்லாம் என்ன செய்ய முடிந்தது?

வீடு

“ஆமா… நீதான் ஒன் மருமகன் பேச்ச நம்பணும்…” என்றாள் ஜூலி. அம்மாவிடம் அவள் அப்படி விட்டேற்றிதாகப் பேசினாலும் ‘ஒரு வேளை டேனியலு செயிச்சு வூடுவேண்டிக் குடுத்துட்டாருன்னா…” என்றொரு ஆசை ஜூலியின் மனதில் துளிர்க்கத்தான் செய்தது. அதற்காக ஸ்டீபன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு சும்மாவா இருக்க முடியும்? ஆம்பளைகளை அவ்வப்போது சத்தம்போட்டு அடக்கி வைத்தால்தானே குடும்பம் ஒழுங்காக ஓடும்? இதெல்லாம் ஜூலிக்குத் தெரியாதா என்ன?

அம்பையின் சிறுகதைகள்

‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ தொகுப்பில் இந்த ஆணாதிக்க எதிர்ப்பு, ரசனையற்ற ஆண்களைச் சித்தரித்து உவகை கொள்ளும் போக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டு,பாம்பு தன் சட்டையை உரிப்பது போல் உரித்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறார் அம்பை.பொதுவாக எந்த எழுத்தாளரும் செல்ல விரும்பாத பகுதி இது. ஒரே மாதிரி எழுதினால் தான் ‘இமேஜ்’ அடிபடாமல் இருக்கும், சுந்தர ராமசாமி,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற வெகு சிலரே தங்களை அடிக்கடிச் சட்டையுரித்துக் கொள்பவர்கள். இந்தச் சட்டையுரிப்பில், தனது பழைய இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல்,அம்பையும் இறங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ கதைகள் எல்லாமே …

எம்.எல்- இறுதி அத்தியாயங்கள் – 22-23

ஜீப் அவனை ஏற்றிக் கொண்டு ஊரை விட்டு எங்கோ வெளியே சென்றது. ஒரு அரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு கட்டிடத்தின் முன்னால் போய் நின்றது. பொழுது மங்கலாக விடிந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார்கள். ஒரே ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. எந்த ஊர், எந்த இடம் என்று நிதானிக்க முயன்றான்.  “போயி அவனுகளோட உக்காரு…” என்று கையை நீட்டிச் சொன்னார்.  அவர் கையை நீட்டிய இடத்தில் நாலைந்து பேர் இருப்பது மங்கலாகத் தெரிந்தது.. “வா.. சோமு..” என்ற துரைப்பாண்டியின் குரல் கேட்டது. ஒரு வித ஆச்சரியத்துடன் அவர்கள் இருந்த பக்கம் போனான். ஸ்டடி சர்க்கிளுக்கு வருகிறவர்களெல்லாம் இருந்தனர். எல்லாருமே வெறும் ஜட்டி, அண்டர்வேருடன் இருந்தார்கள். “நீயும் உன் வேட்டிய அவுருடா..” என்றார் போலீஸ்காரர். சோமு அவமானத்தால் கூனிக் குறுகினான். வேட்டியை அவிழ்க்காமல் தயங்கினான். அவரே அவன் இடுப்பிலிருந்த வேட்டியை உருவினார். சோமுவுக்கு அழுகை வந்து விட்டது. முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டான். துரைப் பாண்டியும் இன்னும் இரண்டு பேரும் “சாரு மஜும்தார் வாழ்க… மாவோ வாழ்க…” என்று கத்தினார்கள். போலீஸ்காரர் அவர்களைக் காலால் உதைத்தார்.

எம்.எல் – அத்தியாயம் 20-21

இந்த ஊருக்கு என்ன வயதிருக்கும்? எத்தனை நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்த ஊர். சங்க காலத்துக்கு முன்பே, இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ஊர் இருக்கிறது என்று சொல்கிறார்கள். எத்தனையோ லட்சம் மக்கள் வாழ்ந்து விட்டுச் சென்ற ஊர். கோவலனும், கண்ணகியும் இந்தத் தெருக்களில் நடந்திருப்பார்களா? புரட்சி நடந்த ரஷ்யா மாதிரி, சீனா மாதிரி இந்தியாவும் ஆகி விட்டால், இந்த வீடுகள், கட்டடங்கள் எல்லாம் அரசின் சொத்துக்களாகி விடும். அப்பாவின் கடை, சீதா பவனம் கூட அரசுக்குச் சொந்தமாகி விடும்.

எம். எல். – அத்தியாயம் 19

“அதனால என்ன?… நடந்தது நடந்து போச்சு… அவன் வந்தான்னா அவனுக்குப் புத்தி சொல்லு…”
“நாஞ்சொல்லி எங்க கேக்கப் போவுது?… நீங்கள்ளாம் சொல்லியே திருந்தாத ஆளு, நாஞ்சொல்லியா கேக்கப் போவுது?… கட்டையில போற வரைக்கும் அது மாறாது…”

“சரி… சரி… காபி குடிச்சியா?…”
“குடிச்சிட்டேன். இந்த ஒரு தடவ மட்டும் அத காப்பாத்தண்ணே… நாளயும் பின்னயும் அது சீட்டாடப் போச்சுன்னா… அதத் தலை முளுகிட்டு நானும் எம் பிள்ளையும் எங்கயாவது போயிப் பொழச்சுக்கிடுவோம்…”
சுப்பிரமணிய பிள்ளை பாக்கியத்தையே பார்த்துக்கொண்டு நின்றார். அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ஏதாவது ஒன்னக் கெடக்க ஒண்ணு பேசாத… பொட்டப் புள்ளய வச்சிருக்க… மனசுவிட்டுப் போயிராத…”

எம். எல். – அத்தியாயம் 18

கூத்தியார் குண்டுப் பிள்ளை தன் இரண்டு மகள்களுடனும் மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது ஏழரை மணி இருக்கும். கோவிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. அதனால் சுவாமியையும், அம்மனையும் ஆற அமர நின்று தரிசிக்க முடிந்தது. மீனா சென்ட்ரல் டாக்கீஸைத் தாண்டி, மெத்தைக் கடைகளின் பக்கம் வரும்போதே வீட்டை மறந்துவிட்டாள். சோமு அவர்களுடன் கோவிலுக்கு வரமாட்டேன் என்று சொன்னதெல்லாம் அவளுடைய மனதிலிருந்து காணாமல் போய்விட்டன. மேலக்கோபுர வாசலில் கூத்தியார் குண்டுப் பிள்ளை மீனாவுக்கு, கற்பகத்துக்கும் நிறைய பூ வாங்கிக் கொடுத்தார்.

எம். எல். – அத்தியாயம் 17

வரவர ஜனங்களுக்கு அரசியலில் அக்கறை இல்லாமல் போய்விட்டது என்று நினைத்தார் கோபால் பிள்ளை. வெறுமனே அரசியலை மட்டும் விஷயத்தோடு பேசுவதைக் கேட்க ஜனங்கள் தயாராக இல்லை. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு கச்சேரி வைக்க வேண்டும். கட்சிப் பிரச்சாரத்தையே சினிமா பாடல் மெட்டுக்களில் பாடினால்தான் கூட்டம் சேருகிறது. கூட்டத்தில் பேசுகிறவர்களும் நகைச்சுவையாகப் பேச வேண்டும் என்றது ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு காலத்தில் அவர் பேசிய அரசியல் மேடை இப்போது இல்லை. கேளிக்கையோடு கலந்து அரசியல் பேச வேண்டும் என்று ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள். 
தி.மு.க.விலும், காங்கிரஸிலும் இதற்கெல்லாம் பாடகர்களும், பேச்சாளர்களும் இருக்கிறார்கள். இடது கம்யூனிஸ்ட் கட்சியில் கூட இருக்கிறார்கள். ஆனால் அவருடைய கட்சியில்தான் இல்லை. ஜனங்களுடைய விருப்பத்துக்கு மாறாக என்ன செய்ய முடியும்?

எம். எல். – அத்தியாயம் 16

அன்று கட்சி ஆஃபீஸை நாராயணன் தான் பூட்டினான். ஆஃபீஸ் செக்ரட்டரி கனகசபை, சுப்பிரமணியபுரத்தில் யாரோ தோழரைச் சந்திக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நாலு மணிக்கே சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். கட்சி அலுவலகத்தை விட்டுப் புறப்படும் போது நாராயணனிடம், “நீ பொறப்பட நேரமாகுமா?” என்று கேட்டார். “பிரஸ்லே இருந்து “எம். எல். – அத்தியாயம் 16”

எம். எல். – அத்தியாயம் 15

உலகமே நம்பிக்கையில்தானே இயங்குகிறது? எல்லோரும் தங்களுக்கு விருப்பமானவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வாழுகிறார்கள். கண்மூடித்தனமாக எதையாவது பற்றிக்கொள்ள வேண்டும், அதை நம்ப வேண்டும். அது அவர்களை வாழத்தூண்டுகிறது…. சுப்பிரமணிய பிள்ளை அந்தக் குடும்பத்தையும், கடையையும் ஒழுங்காக நிர்வகித்தால் போதும் என்று வாழ்ந்து வந்தார். …அவருடைய பக்தியே குடும்பத்தையும், அந்தச் சீதாபவனத்தையும், கடையையும் முன்னிட்டே இருந்தது…. மேலமாசி வீதியில் கோபால் பிள்ளை கடந்த கால அரசியல் நினைவுகளிலும், நிகழ்கால அரசியல் உலகிலும் வாழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய மூத்த மகன் ராமசாமியும், இளைய மகன் பிச்சையாவும் எப்படியாவது வாழ்க்கை ஓடினால் போதும் என்று இருந்தார்கள்.
சாரு மஜும்தாரும், அப்புவும் ரஷ்யாவிலும், சீனாவிலும் நடந்தது போல் இந்தியாவிலும் புரட்சி வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். …அப்புவும் கண்மூடித்தனமாக சாரு மஜும்தாரை அப்படியே பின்பற்றினார்.

எம். எல். – அத்தியாயம் 14

“கச்சியிலே சேந்து என்ன பண்ணப்போற?”
“ஜனங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுதப்பா…”
“அரசியல்லாம் ஒனக்குச் சரிப்பட்டு வராது… நம்ம கையில யாவாரம் இருக்கு… அதக் கவனிக்கத விட்டுட்டு அரசியல் அது இதுங்கறியே?…”
“அதுக்குத்தான் அண்ணன் இருக்கானே…”
சுப்பிரமணிய பிள்ளைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “அரசியல்ல எல்லாம் சம்பாத்தியம் பண்ணத் தெரியாதுடா ஒனக்கு.”
“நான் சம்பாதிக்கிறதுக்காக அரசியலுக்குப் போகலை…”

எம். எல். – அத்தியாயம் 13

ஊர்க்காவலன் அவன் சொன்னது காதில் விழாதது போல, எதிரே இருந்த பேப்பர்களைப் புரட்டிக் கொண்டே இருந்தார். அந்த ஆபீஸில் அப்படித்தான். சக வேலைக்காரனை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். ஊர்க்காவலன் பீட்டரை மதிக்காததுபோல், ஊர்க்காவலை அறைக்குள் இருக்கிற சூப்பிரண்டு மதிக்க மாட்டான். அவரை அவருக்கும் மேலே உள்ள ஜாயிண்ட் கமிஷனர் மதிக்க மாட்டார். ஜே.சி.யை டி.ஐ.ஜி ஒரு பொருட்டாகவே கருதமாட்டார். இதை எல்லாம் சகித்துக்கொண்டுதான் டிப்பார்ட்மெண்டில் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ஊர்க்காவலனை மீறி நேராகவே போய் சூப்பிரண்டைப் பார்க்கவும் முடியாது.

எம். எல். – அத்தியாயம் 11 & 12

பெரும்பாலான மேலமாசி வீடுகளுக்கு, முன்புற, பின்புற வாசல்களைத் தவிர ஜன்னலே இருக்காது. ஒரு வீட்டுக்கும், அடுத்த வீட்டுக்கும் இடையே இடைவெளியே இருக்காது. நீளமான வீடுகள். பக்கவாட்டில் இடமே விடாமல், நெருக்கமாகக் கட்டப்பட்ட அந்தக் காலத்து வீடுகள். ஜன்னல்கள் இல்லாததால் வீட்டினுள் எப்போதும் இருட்டாகவே இருக்கும். பாலகிருஷ்ணன் ஒவ்வொரு அறைக்குள் நுழையும்போதும் சுவிட்ச்சைப் போட்டு வெளிச்சத்தைப் பரவ விட்டுக் கொண்டே சென்றார்.  அந்த வீடு கல்கத்தாவிலுள்ள வீடுகளைப் போலவே இருப்பதாகப் பட்டது சாரு மஜும்தாருக்கு.

எம். எல். – அத்தியாயம் 10

“எனக்கு ஆயுதப் புரட்சியிலே எல்லாம் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. தெலுங்கானாவிலே என்ன நடந்தது?… ஆயுதப் புரட்சி அது இதுன்னு நம்ம ஜனங்களை வீணா பிரச்னையிலே மாட்டி விடாதீங்க…”

“ஏன் இப்போ எங்க நக்ஸல்பாரியிலே நடந்திருக்கே…”

“அது ஆயுதப் புரட்சியா?… நான் நக்ஸல்பாரியிலே நடந்ததை ஏத்துக்கலை. நிலச் சீர்திருத்தம் நடந்தா அங்கே பிரச்னை சரியாகிரும். அங்கே நடந்தது விவசாயிகளுக்கும் நிலச் சொந்தக்காரர்களுக்கும் மத்தியிலே நடந்த குத்தகை தகராறு,” என்றார் கோபால் பிள்ளை. சாரு மஜூம்தார் உரக்கச் சிரித்தார்.

“மிஸ்டர் கோபால் பிள்ளை, அதை அவ்வளவு எளிதா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. நீங்க பேசறது உங்க பார்ட்டி லைன். ரொம்ப விவாதிக்க வேண்டிய விஷயம் இது. இந்தியக் கம்யூனிஸ்ட்களாலே ஒண்ணும் சாதிக்க முடியாது. நான் உங்க பார்ட்டியிலே இருந்தவன்தான். யூனியன்லே எல்லாம் ரொம்ப வருஷம் இருந்து அடிபட்டவன். ஒரு கூலி உயர்வுகூட யூனியனாலே வாங்கிக் கொடுக்க முடியல…

எம். எல். – அத்தியாயம் 9

“எல்லாக் கட்சிக்காரனும்தான் கூட்டம் போடுதான், போராட்டம் நடத்துதான். இதனாலே ஜனங்களுக்கு என்ன நன்மை? அவன் அவன் ஒழைச்சுச் சம்பாதிக்கான். வேலை பாக்கான். தொழில் செய்தான். இதிலே கட்சிக்காரன் ஜனங்களுக்கு என்ன செய்யக் கெடக்கு?….”

“அப்போ கோபால் பிள்ளை தாத்தா ஜனங்களுடைய பிரச்னைகளைப் பத்திப் பேசினதுக்கு எந்த அர்த்தமும் இல்லியா மாமா?…”

“பேசினா போதுமா? வெறுங்கையாலே மொழம் போட்ட மாதிரிதான். … ஏதோ பதவிக்கு வந்து ஆட்சியப் பிடிச்சாலாவது ஏதாவது செய்யலாம். கம்யூனிஸ்ட் கட்சி என்னைக்காவது பதவிக்கு வந்திருக்கா? வெறும் பஞ்சாயத்து, முனிசிபல் வார்டு கவுன்சிலராவதுக்கே கட்சி ததிங்கிணத்தோம் போடுது… மாப்ளே.. நமக்கு எதுக்கு இந்த அரசியல் எளவெல்லாம்… இதனாலே சல்லிக் காசுக்குப் பிரயோசனம் இல்ல மாப்ளே… நீ போயிக் குளிச்சிச் சாப்புட்டுட்டு கடைக்குப் போ… இதெல்லாம் பேசித் தீரக் கூடிய வெசயமில்லே… நான் கீழே போயி அத்தை கிட்டப் பேசிட்டு வாரேன்..” என்று சோமுவின் தோளில் தட்டிச் சொல்லி விட்டு எழுந்தான்.

எம். எல். – அத்தியாயம் 8

சுதந்திரம் வந்து இத்தனை வருடங்களாகி விட்டன. யாரும் பெரிய முன்னேற்றமடைந்த மாதிரித் தெரியவில்லை. ஜனங்கள் எதையாவது விற்பனை செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். இல்லையென்றால் மாதச் சம்பளத்துக்கு வேலை செய்து காலத்தை ஓட்டுகிறார்கள். யாருக்கும் போதுமான வருமானம்கூட இல்லை. அதனால்தான், ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த கட்சிக்கு, அதை நம்பி ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தார்கள். காங்கிரஸ் போய் தி.மு.க. வந்தும் ஜனங்களுடைய வாழ்க்கையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. சர்க்கார் இலவசமாகப் பள்ளிக்கூடங்களை நடத்துகிறது, ஆஸ்பத்திரிகளை நடத்துகிறது, இவை மட்டும் போதுமா? துணிமணி, வீடு, சாப்பாடு எல்லாம் …

எம். எல். – அத்தியாயம் 7

அவர் “எய்ட் டாக்குமெண்ட்ஸ்” என்ற பேரில் பிரசுரங்களை எழுதியிருப்பதாகவும் சொன்னார். அவை எல்லாம் ஆயுதப் புரட்சியைத் தூண்டுபவை. ஒருவேளை அந்தப் பிரசுரங்களை அவர் தன்னுடன் எடுத்து வந்திருக்கலாம் என்றார். அந்த ரெவியு கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், யூனியன் லீடர்களையும் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

எம். எல். – அத்தியாயம் 6

விவேகானந்தா பிரஸைத் தாண்டி மேலமாசி வீதியில் நுழைந்ததும் பையிலிருந்த சில்லரைகளை எண்ணினான். அதை வைத்துதான் இந்த மாதம் பூராவும் ஓட்ட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் எப்போது சம்பளம் கொடுப்பார்கள் என்று தெரியாது. சில மாதம் பதினைந்தாம் தேதிகூடக் கொடுத்திருக்கிறார்கள். சம்பளம் போட மறந்துவிட்டார்களோ என்று நினைப்பான். கோபால் பிள்ளை வீட்டுக்குப் போனதும், நேரே வெளிப்புற மாடிப்படி வழியாக அவர் அறைக்குப் போகவில்லை. கீழ்ப் பகுதியில் குடியிருந்த பெரியவர் ராமசாமியைப் போய் முதலில்  பார்த்தான்.

எம். எல். – அத்தியாயம் 4 & 5

சீதா பவனத்தில் சுப்பிரமணியப்பிள்ளை குளித்து விட்டுத் திருநீறு பூசிக் கொண்டிருந்தார். அவருடைய மூத்த மகன் செண்பகக் குற்றாலம் காலியாக இருந்த குளியலறைக்குத் துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு போனான். அடுப்பங்கரையைத் தாண்டிப் பின்னால் போனால்தான் குளியலறை. அதற்குப் பின்னால் சென்டரல் டாக்கீஸின் பின்புறச் சுவர் நீளமாக ஓடியது. குற்றாலம் அடுப்பங்கரையைத் தாண்டிப் போகும்போது இட்லி அவிகிற வாசனை வந்தது.

எம். எல். – அத்தியாயம் 2 & 3

ஒரு நாள் வீட்டு தார்சாவில் மாட்டியிருந்த காந்தி படத்துக்கு பக்கத்திலேயே ஒரு தாடிக்காரனுடைய படத்தைக் கொண்டு வந்து கோபால் பிள்ளை மாட்டினார். அவர் வெளியே போயிருந்த நேரம் பார்த்து அந்தத் தாடிக்காரன் போட்டோவைக் கழற்றி மச்சில் கொண்டு போய் மூலையில் போட்டுவிட்டார் ராமசாமிப் பிள்ளை. அவர் மனைவி பிச்சம்மாள், “அந்தப் பெய ஏதோ ஆசையா ஒரு போட்டோ கொண்டு வந்து மாட்டுனா அது ஏன் ஒங்களுக்குக் கண்ணைக் கரிக்கிது?’ என்று சத்தம் போட்டாள்.

“சவத்து மூதி…. நீ என்னத்தக் கண்ட? கண்டவன் படத்தையும் மாட்டி வைக்கதுக்கு இது என்ன நாசுவங் கடையா?”

“நீங்க காந்தியார் படத்த மாட்டி வச்சிருக்க மாதிரி, அவனும் ஆசயா ஒரு படத்த மாட்டினா, அது ஏன் ஒங்களுக்கு பத்திக்கிட்டு வருது?”

ராமசாமிப் பிள்ளையுடைய அபிப்பிராயப்படி ‘பிச்சம்மாளுக்கு விவரம் பத்தாது’, காந்தியும் எவனோ ஒரு வெளிநாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிக்காரனும் ஒன்றாகுமா?

எம். எல். – அத்தியாயம் 1

அத்தியாயம் 1

அவர் பதறிக்கொண்டே இருந்தார். மதுரைக்குச் செல்ல அவசரப்பட்டார். மதுரையில் கோபால் பிள்ளை அண்ணாச்சியைச் சந்தித்ததுமே எல்லாம் கைகூடி விடும் என்று சொல்ல முடியாது. அதன்பின் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. தளம் அமைப்பதென்றால் அது சாமான்யமான காரியமா? அதற்கு முன்னாள் இளைஞர்களைத் திரட்டி ஸ்டடி சர்க்கிள் அமைக்க வேண்டும். ஸ்டடி சர்க்கிளில் எத்தனை பேர் ஸ்திரமாக நிற்பார்கள் என்று சொல்ல முடியாது.

“நான் இன்று மாலையே மதுரைக்குப் புறப்படட்டுமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் மஜூம்தார். தோழர் அப்புவுக்கு கொஞ்சம் எரிச்சலாகக்கூட இருந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சாரு மஜூம்தார் மீது அவருக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. கோபால் பிள்ளை மீது மஜூம்தாருக்கு இருந்த அளவு நம்பிக்கை அப்புவுக்கு இல்லை. கோபால் பிள்ளை கட்சிச் செயல்பாடுகளைவிட்டு விலகி எவ்வளவோ காலமாகி விட்டது. இப்போது அவருக்கு எந்தளவுக்குத் தொண்டர்க்ளுடனும் மக்களுடனும் தொடர்பிருக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால், தோழர் மஜூம்தார் அவரைப் பெரிதும் நம்புகிறார். 1953-ல் மதுரை பிளினத்துக்கு அவர் வந்திருந்தபோது, கோபால் பிள்ளைக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டிருக்கலாம். இது 1953 அல்ல, 1968.

வெ.சா என்ற வெங்கட் சாமிநாதன் –எனது நினைவுகள்

தமிழ் கலாசாரச் சூழலில் நெடுங்காலமாக ஆட்சி செய்து வந்த திராவிட, மார்க்ஸீயக் கலாசாரம் இரண்டையும் எதிர்த்துக் கட்டுரைகள் எழுதி வந்தார். 70-களில்தான் அவர் ‘உள்வட்டம், வெளிவட்டம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். ‘பிரக்ஞை’, ‘கசடதபற’ போன்ற பத்திரிகைகளில் அவர் எழுதிய அக்காலத்திய கட்டுரைகளில் இந்த உள்வட்டம்- வெளிவட்டத் தியரியின் தாக்கம் இருந்தது. ….அவரது உள்வட்ட-வெளிவட்டத் தியரியை நான் ஏற்கவில்லை. க.நா.சு என்ற க.நா.சுப்ரமணியத்தைப் போலவோ, சி.சு.செல்லப்பாவைப் போலவோ வெங்கட் சாமிநாதன் இலக்கிய விமர்சகரல்ல. வெங்கட் சாமிநாதன் ஒரு கலாசார விமர்சகர். ‘பாலையும் வாழையும்’ என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு இதைத்தான் வலியுறுத்துகிறது. வெ.சா.விடம் ஒரு உணர்ச்சி வசப்பட்ட, புளகாங்கித மயமான தன்மை அவரது கட்டுரைகளில் தொடர்ந்து துருத்திக் கொண்டிருக்கின்றன.

தி க சிவசங்கரன் என்ற தி க சி

தி க சி யின் மரணம் அவர் நினைத்தபடியே நடந்தது என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. தனது மரணம் சமீபித்துவிட்டது என்பதை அவர் அறிந்திருந்தார்கள். 29.12.13 அன்று மதியம் 12 மணி சுமாருக்கு நானும் என் மனைவியும் திருநெல்வேலி சென்றிருந்த போது, அவர்களது 23, சுடலைமாடன் கோவில் தெரு வீட்டில், சந்தித்தோம். பழங்கள் (இனிப்பு கூடாது என்பதால்) காரவகைகளுடன் சென்றிருந்தோம். எதையோ படித்துக் கொண்டிருந்த தி.க.சி. எங்களைப் பார்த்ததும் சந்தோஷத்துடன் “வாங்கய்யா” என்று வரவேற்றார்கள். மிகவும் மெலிந்திருந்தார்கள் என்றாலும் முகத்தில் அயர்ச்சியோ சோர்வோ இல்லை.
என் கையில் கையினால் எழுதப்பட்ட ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள். “படியுங்க” என்றார்கள். அந்த பேப்பரில் “இதயம் பலவீனமாக இருக்கிறது. அதனால் சத்தமாகப் பேசவேண்டாம். கடலைமாவு பலகாரங்கள் கொடுக்கவேண்டாம். அதிக நேரம் பேசவைக்காதீர்கள்” என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.
படித்துவிட்டு நிமிர்ந்த என்னைப் பார்த்து சிரித்தார்கள். “டாக்டரோட யோசனைகள்” என்றார்கள்.

மீரா பென்னும் பீத்தோவனும்

காந்திஜியைப் பற்றியே இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என்றால், அவரது சிஷ்யையான மீரா பென்னைப் பற்றி வேறு எப்படி நினைக்கத் தோன்றும்? ஆனால் கடற்படை அதிகாரியின் மகளான மீரா பென்னுக்கு சாஸ்திரீய சங்கீதத்தில் அபாரமான ஆசை இருந்திருக்கிறது என்றால் நம்பத்தான் முடியுமா? இளமையில் பியானோ கற்றிருக்கிறார். பீதோவன் படைப்புகளின் பைத்தியமாகவே இருந்திருக்கிறார். பீதோவன் வாழ்ந்த வியென்னா, பான் நகரங்களுக்குப் போய் அவர் நடாடிய தெருக்களில், அவர் ஏறிய, இறங்கிய குன்றுகளில், காடுகளில் எல்லாம் மீரா பென்னும் திரிந்திருக்கிறார். அவரைப் பற்றி என்ன புத்தக கிடைத்தாலும் படித்திருக்கிறார்.