மீசை

சிரிப்பு வந்தது. சத்தமிட்டுச் சிரிக்கவில்லை. நான்கு பேர் தூங்கும் அறையில், இரவு பதினொரு மணிக்கு எப்படிச் சத்தமிட்டுச் சிரிப்பது? சிரிப்புக்கு பின்னால் மகிழ்ச்சியான நினைவுகள் தான் இருக்க வேண்டுமா? கடந்து வந்துவிட்ட வலியான நினைவுகளும் சிரிப்பாகத்தான் இருக்கின்றன. சில காயத்தின் மீது பூப்போல, சில வடுவிற்கு கீழே மறைந்த காயம் போல.

கோபால் தனது கம்பிக் கட்டிலில் இடதுபுறம் திரும்பிப் படுத்தான். கட்டில் ஆடியதில் தலைமாட்டிலிருந்த இரும்பு பீரோ ‘டங்.. டங்’ என்று சத்தமிட்டது. மூட்டைப்பூச்சி கடித்ததில் கழுத்தோரத்தில் விறுவிறுவென்று வலி. இடது கையால் தேய்த்துக்கொண்டான். கைப்பேசி எங்கே என்று படுக்கையில் துழாவினான். கைக்கெட்டும் தூரத்தில் உள்ள வட்ட மேசையின் மீது வைத்தது நினைவுக்கு வர, தேடுவதை நிறுத்தினான்.

அறையை விழுங்கிவிட்டு அமைதியாகக் கிடந்தது மென்மையான இருள். இருளைக் கண்ணால் காண முடிந்தது, ஆனால் தொட்டுணர முடியவில்லை. இருட்டில் அவனுக்கு அவனைத் தெரியவில்லை. இருட்டில் அவன் அங்கு இருப்பதை ஓர் உணர்வாக மட்டுமே உணர்ந்தான். இருட்டில் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு இடத்தில் கிடப்பது போலத் திகைத்தான். தன்னை ‘உதிரி உடம்பு மனிதன்’ என நினைத்துக்கொண்டான்.

மனம் திடுக்கிட்டது. திடுக்கிட்டதில் தோன்றிய பயம், உடம்பு முழுவதும் மரவட்டை போல ஊர்ந்து நெளிந்து போனது. திரும்பி மல்லாக்கப் படுத்து, நெஞ்சுக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு மேல்கூரையைப் பார்த்தான். கூரை தெரியவில்லை.

நாற்பது வருடங்களுக்கு முன்னால் இறந்துபோன மீசைத் தாத்தாவின் முகம்   எழுந்து வந்தது. சுதைச் சிலையின் விழிகளைப் போலப் பளிங்கு கண்களால் பார்த்தார். இமைகள் அசையவில்லை. அந்தப் பார்வை நெஞ்சுக்குள் இறங்கியதில் உடல் அதிர்ந்தது. அதற்கு அவர் மீசையும் ஒரு காரணம். வீரப்பன் மீசையெல்லாம் அவர் மீசைக்கு முன்னால் வெறும் கலாக்காய், இது பலாப்பழம்! மீசையில் அவர்தான் ராஜாதிராஜன். குழந்தைகள் அழுதால் தூக்கிக் கொஞ்சிச் சமாதானப்படுத்துவார். ஓயவில்லை என்றால், தனது மீசைக்கன்னத்தால் குழந்தையின் கன்னத்தில் வைத்து ஒரு தேய் தேய்ப்பார்; அழும் குழந்தை கூடச் சிரித்துவிடும்.

“மருமகள் சமைக்கும் சாப்பாடு பிடிக்காமல், அவரே சமைத்துச் சாப்பிட்டார். தினம் தினம் மீன் குழம்புதான். மூன்று வேளையும் மீன்தானோ என்னவோ? மாலை பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு மீனைத் தாத்தா கழுவிக்கொண்டிருப்பார். மண்சட்டி நீரில் மீன்கள் நீந்தும். வீட்டுக்குப் போவதை நிறுத்திவிட்டு, மீன்கள் நீந்துவதையே கோபால் பார்ப்பான்.

அவருடைய பேரன்கள் பார்க்க வந்தால், அடுப்பு எரிக்க வைத்திருக்கும் முள்ளுள்ள காட்டுக்கருவைக் குச்சியால் அவர்களை விரட்டுவார். ‘ஏன் சின்னப்பையன்களை விரட்டுகிறார்?’ என்று கோபால் நினைத்துக்கொள்வான். ‘ஏன் தாத்தா விரட்டுற?’ என்று கேட்க நினைப்பான். எங்கே தன்னையும் விரட்டிவிடுவாரோ என்று பயந்து, பயம் இல்லாதது போலத் தாத்தாவிடம் பேசுவான்.

கோபாலின் அம்மாவிடம் அவர் மருமகள், “என் மேல இருக்குற கோபத்தைப் போயி அந்தப் பச்சைப் புள்ளைகிட்ட காட்டுறாரு, என்ன ஜென்மமோ இது!” என்று சொல்லி ஆதங்கப்படுவார்.

கோபாலை அவர் ஒன்றும் சொல்ல மாட்டார். ‘அது என்ன மீன்? இது என்ன மீன்?’ என்று கேட்டுக்கொண்டே இருப்பான். அவரும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருப்பார். கெண்டை மீன், விரால் மீன், ஜிலேபி மீன், கெளுத்தி மீன், பவள மீன், வாளை மீன், ஐரை மீன், உளுவை மீன், தேளி மீன், நெத்திலி மீன், பாறை மீன், குறவை மீன், சென்னாவரை மீன் என அடுக்கிக்கொண்டே போவார். ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு சுவையையும் அவர் விளக்கும்போதே நாக்கில்   அந்தந்த மீன் சதை  தட்டுப்படும், மீன் நாக்கில் தித்தித்து தித்தித்து வயிற்றுக்கு நழுவும். வாயின் எச்சிலை தேனாக ரசவாதம் செய்துவிடுவார். சாப்பிடவே வேண்டாம். கேட்டதே போதும் என்று இருக்கும்.  

வாய்க்கால், ஆறு, குளம், குட்டை என எங்காவது தூண்டில் போட்டு மீன் பிடித்து வருவார். சில நாட்களில் கைவலை வீசுவார். தன் கைகளால்  மூங்கில் குச்சிகளால் செய்த கூம்பு வடிவ மீன்பிடிக்கும் கூடைகளை வீட்டில் வைத்திருப்பார். அவற்றை எடுத்துப்போய் மீன் பிடித்து வருவார். மீன் பிடித்துக் காசுக்கு விற்க மாட்டார். அதிகமாக இருந்தால் யாருக்காவது கொடுப்பார். மருமகளுக்கு வேண்டாவெறுப்பாகக் கொடுப்பார். கோபாலின் அம்மாவைப் ‘பொண்ணு, பொண்ணு’ என்றுதான் கூப்பிடுவார். கோபாலின் அம்மாவுக்கும் மீன் கொடுப்பார்; ஆனால் அம்மா ஏதாவது ஒரு காரணம் சொல்லி ‘வேண்டாம்’ என்று சொல்லிவிடுவாள்.

அது காவிரி, கொள்ளிடம், வடக்கு ராஜன் வாய்க்கால், காஞ்ச வாய்க்கால் என்று வழங்கும் கான்சாகிப்பு கால்வாய் அனைத்திலும் காலம் தவறாமல் தண்ணீர் வந்து நஞ்செய் முப்போகம் விளையும் காலம். ஐம்பது பைசாவுக்கு மூன்று கிலோ சாறுமுட்டி மீன் கிடைக்கும். மூன்று மைல் நடந்து போய் வடக்கு ராஜன் வாய்க்கால் மதுகில் கிடைக்கும் மீனை வாங்கி வருவார். அத்தனையும் ஆஞ்சி எடுப்பதற்குள் இடுப்பு ஒடிந்துவிடும். சலிக்காமல் ஆய்வார்; முகம் பிரகாசத்தில் ஜொலிக்கும். நேரம் ஆக ஆகத் தியான முகம் வந்துவிடும். புத்தருக்குப் போதி மரம் என்றால், மீசைத் தாத்தாவிற்கு மீன்.

வாய்க்கால் ஓரத்தில் வளர்ந்த நீர்நொச்சி மரத்தின் வேர்கள், இஞ்சி வண்ணக் கூந்தல் போலத் தண்ணீரில் பரவிக் கிடக்கும். அதன் அடியில், தண்ணீர்கூட அசையாதபடி மெதுவாகக் கையை விட்டுத் துழாவுவார். குழந்தையின் கை உருவத்திற்குப் பெரிய இறால்கள் கிடைக்கும். அவருக்கு அதிக ஆசையெல்லாம் கிடையாது; ஒருவேளைச் சாப்பாட்டிற்குத் தேவையான அளவு கிடைத்துவிட்டால் போதும், சமைக்கக் கிளம்பிவிடுவார்.

மீனுக்குக் குடல் வயிற்றில் என்றால், இறாலுக்கோ முதுகில். அதைச் சுத்தமாக உரித்துக் கழுவித் தட்டில் வைத்திருப்பார். பார்ப்பதற்கு அது ஊறிய பாதாம் பிசின் போல வழுவழுவென்று மின்னும். சமைக்காமலேயே அள்ளி விழுங்கிவிடலாம் எனத் தோன்றும். கோபால் தன் நாக்கில் ஊறும் எச்சிலைச் சத்தம் வராமல் விழுங்கிக்கொண்டு அதையே பார்த்திருப்பான்.

தாத்தாவின் கூரைவீட்டுக்கு முன்னால் உள்ள வேப்ப மரத்தடியில்தான் தாத்தா சமைப்பார். இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி, மண்சட்டியில் பொன்னிறமாக வறுத்து, தக்காளி சேர்த்து வதக்குவார். பிறகு, கழுவி வைத்திருக்கும் இறாலை அதோடு சேர்த்துப் பிரட்டுவார். மஞ்சள் தூள், மீன் மசாலா, தேவையான அளவு மிளகாய்த்தூள், மல்லித்தூள் என அனைத்தையும் சேர்த்து கிளறுவார்.

தண்ணீர் வற்றி, மசாலாவின் காரம் இறாலில் ஏறும் வேளையில், நறுக்கித் தோல் சீவி வைத்திருக்கும் முருங்கைக்காயைச் சேர்த்து, கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீர் கொஞ்சமாகச் சேர்த்து கொதிக்கவிடுவார். அது ‘பிரட்டல்’ பதத்திற்கு வெந்து வரும்போது ஊரே மணக்கும். அந்த வாசத்திற்கே ஒரு சட்டி சோறு திங்கலாம். நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலையை மேலே தூவி இறக்கி வைப்பார். அதற்கும் மேலே கோபாலால் அங்கே நிற்க முடியாது ஓடிவிடுவான். தாத்தா நில்லுடா என்றாலும் நிற்க மாட்டான்.

“அம்மா வேண்டாம்” என்று தடுத்தாலும் கேட்காமல், “பிள்ளைக்குக் கொடு பொண்ணு” என்று சொல்லிவிட்டுத் திண்ணையில் வைத்துவிட்டுப் போவார். கோபால் எச்சில் விழுங்கியது அவருக்குத் தெரியாதா என்ன? இறால் சமைக்கும் அன்றைக்குத் தன் பேரப்பிள்ளைகளுக்கும் கொடுப்பார். அன்று அவர் சாப்பாடு, அந்தச் சட்டியிலேயே போட்டுப் பிசைந்தெடுத்த பிரட்டலாகத்தான் இருக்கும். ”நம்ம சாப்பிடாததா, வளரற பிள்ளைக சாப்பிடட்டும்” என்றபடியே சாப்பிடுவார்.

நாத்தடிக்கும் வேலைக்குப் போனால் நாத்தங்காலில் இவருக்காகவே காத்திருக்கும் குறவை மீன். ‘உனக்கின்னே என் வயலில் வாழ்ந்திருக்கு மீசை’ என்று வயல்காரன் சிரித்துக்கொண்டு சொன்னாலும், தன் சொத்தையே அவர் எடுத்துப்போவது போல உள்ளுக்குள்   ஏங்கிப்போய்விடுவான். முகம் தொங்கிப்போய்விடும். எங்கிருந்து வந்திருக்கும்? எங்கு மறைந்திருக்கும்? இது எப்படி அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது? அவர் என்ன மீன் காந்தமா?

பசுமாட்டுக் கட்டித் தயிர் சேர்த்து அம்மா பிசைந்த சோற்றை, முருங்கைக்காய் சாம்பார் தொட்டுக்கொண்டு அவசர அவசராய்ச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கோபால். சீக்கிரம் போகவில்லை என்றால் நண்பர்கள் விட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போய்விடுவார்கள். வாய்க்கால் கரையில் காட்டில் இரண்டு மைல் தனியாகப் போக வேண்டும். காடு என்றால் பேய்கள் இல்லாமலா இருக்கும்? மனதில் தெய்வங்கள் குடியேறுவதற்குள், பேய்கள் குடியேறிவிடுகின்றன. அழகாக அலங்கரித்துத் தூக்கி அழுத்தி வைத்தாலும், நழுவுவதே தெரியாமல் தெய்வங்கள் நகர்ந்து போய்விடுகின்றன. ஆனால் மனதின் பேய்கள் அடித்து உலுக்கினாலும் இம்மியும் நகராமல் அழுந்தி அமர்கின்றன. மனப்பேய்கள் இருட்டு போல, நகர்த்த முடியாது; வெளிச்சம் வந்தால் சுவடே இல்லாமல் போவது தெரியாமல் போய்விடும். வெளிச்சம் வரும் வரை பேய்களின் ஆட்டம் தானே!

‘கறக்… கறக்..’ மீசைத் தாத்தாவின் தோல் செருப்பு ஓசை, வர வரக் கூடிக்கொண்டே இருந்தது. அதுவும் இடது கால் செருப்பு செம்மண் தரையில் இழுபட்டு கேவும் ஒலி தனியாக வந்து மீசைத் தாத்தாதான் என்று சத்தியம் செய்தது.

வாசலில் அம்மா, வெள்ளை மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காகத் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தார். சிவப்புப் பெட்டைக்கோழி தனது குஞ்சிகளுக்குப் பாத்திரம் கழுவும் இடத்தில் கிடைத்த புழுவைப் பகிர்ந்துகொள்ள, ‘கொக்.. கொக்..’ எனக் கரைந்து அழைப்பு விடுத்தது.

வாசலில் கரைந்துகொண்டே உட்கார்ந்திருந்த மணியம் காக்கை, தத்தித் தத்தி வாசல் படி வரை வந்து அவனைக் கழுத்தைத் திருப்பிப் பார்த்தது. “குழந்தைகளிடம் திருடலாம்” என்று இந்தக் காக்கைகளுக்கு யார்தான் சொல்லிக் கொடுத்தார்களோ?

பள்ளிக்கூடத்தில் மதிய உணவின்போது, கோதுமை மாவுக் களியை உருட்டி எறிவான். அது கீழே விழுவதற்கு முன்பே காற்றில் எகிறிப் பிடித்துக்கொள்ளும். இது அன்று அவன் பார்த்த அந்தக் காக்கையின் வாரிசாக இருக்குமோ? ஒரு பிடி சோற்றை அள்ளி அவன் வாசலில் எறிந்தான். அந்த காக்கை, ஊர்க் காக்கைகளையெல்லாம் ‘கா… கா…’ என்று கரைந்து அழைத்துவிட்டுச் சோற்றைப் பொறுக்கத் தொடங்கியது. பறந்து வந்த மற்ற காக்கைகளும் சோற்றை மட்டுமே கொத்தித் தின்றன. சோற்றில் இருந்த தயிர் மட்டும் வாசல் முழுவதும் தெளித்தது போல அப்படியே சிதறிக் கிடந்தது.

“அதையெல்லாம் சுத்தம் செய்துவிட்டுத்தான் பள்ளிக்கூடம் போகணும்!” என்று அம்மா கட்டளையிட்டாள்.

அம்மாவைப் பார்த்ததும் நின்ற தாத்தா, “நல்லா இருக்கியா பொண்ணு? நேத்து உடையார்குடி போயிருந்தேன். மத்தியானம் மன்னார்குடி முனியாண்டி விலாசுல சாப்டேன். என்ன நெனச்சான்னு தெரியல, அந்த முதலாளி ஒரு பெரிய விரால் மீன் மண்டையக் கொண்டு வந்து வெச்சு, ‘நல்லா சாப்டுங்க பெரிசு’ன்னு சொல்லுச்சு. மீன் மண்டைக்குத் தனியாகக் காசு ஒன்றும் கேட்கல. கண்ணுல தண்ணியே வந்துடுச்சு பொண்ணு” என்று மீசை குலுங்கச் சிரித்தார். கைகூடக் கழுவாமல் எழுந்து ஓடிவந்தான் கோபால். தாத்தா கண்ணில் அப்போதும் முத்துக்கள் துளித்தன.

“அந்த மீன் சட்டியில் வேகும்போதே உங்களை நினைத்துத்தான் வெந்திருக்கும். அதான், அத்தனை பேர் சாப்பிடும் கடையில், உங்களைப் பார்த்ததும் உங்களுக்கே இதைக் கொடுக்கணும்னு அந்த முதலாளிக்குத் தோன்றியிருக்கு!” என்று அம்மாவும் சிரித்தாள். அம்மாவின் கன்னத்தில் விழுந்த குழியைப் பார்த்துக்கொண்டு கோபாலும் சிரித்தான்.

‘இருக்கும் இருக்கும்’ என்று தாத்தா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். சிரிப்புச் சத்தம் கேட்டுத் தெருவின் நாலாவது எதிர் வீட்டில் வாழும் மருமகள் வெளியில் வந்து, அம்மாவிடம் கண்களால் ‘என்ன?’ என்று கேட்டார். அம்மா ‘கண்களால் சொல்கிறேன்’ என்று பதில் சொன்னாள்.

அம்மா வாசலில் இருந்த மண்பானைத் தண்ணீரை முகந்து கோபாலின் கையைத் கழுவிவிட்டாள். கோபால் தன் ஈரக்கையைக் கால்சட்டையின் பின்புறத்தில் துடைக்கப் போனான். அதைப் பார்த்த அம்மா, செல்லமாக அவன் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு, தனது சேலை முந்தானையால் அவன் கையைத் துடைத்துவிட்டாள்.

தாயிடம் பால் குடித்துக்கொண்டிருந்த சிவப்புக் கன்றுக்குட்டியை இழுத்து, அதன் வெள்ளை நெற்றிச் சுட்டியில் அழுந்த முத்தமிட்டுவிட்டு கோபால் பள்ளிக்கூடம் சென்றான். வேப்பமரத்தடியில் படுத்திருந்த வெள்ளை நாய் கோபால் பின்னால் ஓடியது.

மாலை பள்ளிக்கூடம் விட்டு வந்தான். தாத்தா வீட்டு முன்னாடி ஊரே கூடியிருக்கிறது; எல்லோரும் அழுகிறார்கள். கோபாலுக்கும் அழுகை வந்தது. ஓடிப்போய் தாத்தா தினம் தினம் மீன் கழுவும் இடத்தில் நின்றான். குழம்பு வைக்கத் தாத்தா நறுக்கி வைத்த காட்டுக் கருவை குச்சிகள்  அடுக்கி இருந்தன. குச்சி நறுக்கிய இடத்தில் கட்டை மேல் கொடுவாளும் நறுக்க வேண்டிய காட்டுக் கருவை குச்சியும் கிடந்தன. மண்சட்டியில் தாத்தா பிடித்து வந்த குறவை மீன்கள் நீந்திக் களித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்க்கப் பார்க்கக் கோபால் கேவி அழுதான்.  

‘இந்த மீன் தாத்தாவைச் சாப்பிட்டு விட்டதா?’

கோபாலால் படுக்க முடியவில்லை. கண்களைத் துடைத்துக்கொண்டே எழுந்தான். ‘என்ன வாழ்க்கை?’ மனம் பேசியது. ‘இந்தக் கேள்வியைக் கேட்காத மனிதர்கள் இருப்பார்களா?’ இது மனம் பேசியது இல்லை; மனம் பேசவில்லை என்றால் இதைக் கேட்டது யார்? அறிவா? அல்லது மனம்தான் தனி நடிப்பு நடிக்கிறதா?

கோபால் படுக்கையிலிருந்து அதிராமல் இறங்கி நின்றான். வலதுபுறத்தில் படுத்திருந்த பீகாரி தாளம் மாறாமல் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். அந்தத் தாளம்தான் அவன் அங்கு இருக்கிறான் என்பதற்கு அடையாளம். ஜன்னலுக்கு அருகில் நேப்பாளி கொண்டு வந்து வைத்த பவளமல்லி, ‘பூத்திருக்கிறேன்’ என்று வாசமாக வந்து சொல்லிப்போனது. கோபால் ஆழமாக மூச்சிழுத்து விட்டான். நெஞ்சு நிறைந்து நிறைவாக இருந்தது.

மேசையில் இருந்த கைபேசியை எடுத்துக்கொண்டு, சத்தமிடாமல் கதவைத் திறந்து வாசலுக்கு வந்தான். நட்சத்திரமே இல்லாமல் சவூதி  வானம் நீறு பூசி நிஷ்டையில் இருந்தது. மூன்றாம் பிறை நிலவு சவூதி வானில் மோதிரம் போல் வட்டமாக இருப்பதைப் பார்த்திருக்கிறான். நூல் போன்ற வட்டம். கிழக்கே உதித்த சிவந்த சூரியன், மேற்கே மறையும் அப்பள மஞ்சள் வண்ணப் பௌர்ணமி நிலவு, இரண்டையும் ஒரே காலையில் பார்த்திருக்கிறான்.  

ஒரு நட்சத்திரம் திடீரென்று தோன்றிப் பிரகாசித்தது; அது நகர்ந்தது, மறைந்தது, மீண்டும் தோன்றி நகர்ந்தது. அது நட்சத்திரம் இல்லை, விமானம். சவுதி அரேபியா தம்மாமில் உள்ள, உலகின் மிகப்பெரிய விமான நிலையமான ‘மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையம்’ நோக்கி அந்த விமானம் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த விமான நிலையம் அண்டை நாடான பஹ்ரைன் நாட்டை விடவும் பரப்பளவில் பெரியது. பூமிக்கு அடியில் உள்ள எண்ணெய் வளத்தால், பூமிக்கு மேலே கட்டி எழுப்பிய பெருமை இது. அந்த விமானம் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றான். சாலையோர ஈச்சமரத்தின் மெல்லிய காற்று எழுந்து வந்து தொட்டதில் உடல் சிலிர்த்தது. இன்று இரவு மழை வர வாய்ப்புண்டு. பனிக்கட்டி மழை பெய்தாலும் பெய்யலாம்.

தூரத்தில் உள்ள முக்கிய விரைவுச் சாலையில் யாரோ ஒரு சவூதி தனது காரை வேகமாக ஓட்டி வந்து பிரேக் அடித்து காரைச் சுழலச் செய்யும் விளையாட்டின் ஒலியைக் கேட்டான். வாகனத்தின் சக்கரம் சாலையில் உராய்ந்து வாகனம் பம்பரமாகச் சுழலும் காட்சி மனக்கண்ணில் தோன்றி ஆச்சரியத்தையும் பயத்தையும் விதைத்தது.

நிறுவன வளாகத்தின் சுற்றுச்சுவர் கதவைத் திறந்து தெருவில் நடக்கத் தொடங்கினான். அந்தப் பகுதி முழுவதும் அராம்கோவில் வேலை செய்யும் நிறுவனங்களின் தங்கும் முகாம்கள் உள்ளன. இருபுற சாலையின் நடுவில் முளைத்திருந்த அலுமினிய வண்ண மின்கம்பத்தில், ஒளிப் பழங்கள் ஒளிர்ந்தன. மெல்லிய காற்று வீசியது; காற்றின் ஆடை சாலையில் இழுபடுவது போலப் பாலை மணல் சாலையில் நகரும் ஓசை. தூரத்தில் சாலையைக் கடந்த பூனையின் கண்கள் மின்னியதில், அதன் சிறிய முகம் பேருருக்கொண்ட பூதம் போன்று மனதில் திகைப்பை எழுப்பியது. திகைத்து நின்றவன், பின் மெல்ல நடக்கத் தொடங்கினான்.

தூரத்தில் எரியும் அராம்கோ எண்ணெய் வயல் நெருப்பு, பெரிய சிமிழ் விளக்குத் தீபம் போல எரிந்தது. நெருப்புதான் தூரத்தில் இருக்கும்போது எத்தனை அழகாக இருக்கிறது! அதையே பார்த்துக்கொண்டு நின்றான். மனதிற்குள் வெளிச்சம். காயத்தை ஏற்படுத்தும் எல்லாமும் தூரத்தில் இருக்கும்போது அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பது அதிசயம்தான்.

திடீரென்று ஒரு நாயும் அதன் குட்டிகளும் ஓடி வந்து அவனைச் சூழ்ந்துகொண்டன. அவன் திகைத்துப் போய் நின்றான். ஒரு நாய் இத்தனை குட்டிகள் போடுமா? மரமெல்லாம் காய் விட்டிருக்கும் பலா மரம் போல என்று நினைத்துக்கொண்டான். அருகில் உள்ள கடற்கரை மங்ரோவ் காட்டுப் புதரில் இருந்து வந்திருக்கிறது. அதில் ஒரு குட்டி மட்டும் அவனை முகர்ந்து பார்த்துவிட்டு, தன் தாயுடன் ஓடியது. சட்டென்று அவன் அடையாளம் கண்டுகொண்டான். எப்போதோ தான் போட்ட பிஸ்கட்டின் நன்றியா இது? நினைத்த மாத்திரத்தில் அவன் மனம் பூரித்துப் போனது.

எங்கே போவது? அறைக்குச் சென்றுவிடலாமா? கால்கள் தானாகவே முன்னோக்கிச் சென்றன. சஃப்வாவை ராஸ்தனுராவுடன் இணைக்கும் 15 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய சாலையான சஃப்வா–ரஹீமா சாலையில் அமைந்த புதிய பாலத்தில் வந்து நின்றான். சவூதி அரேபியாவிலேயே இரட்டைக் கடல்பால வகைகளில் மிக நீளமான, 3.2 கிலோமீட்டர் நீளமுள்ள இரட்டை கடல்பாலம் அது.

நீளமான பூந்தொட்டில் போல அந்தப் பாலம் மின்விளக்குகளில் பூத்துக் குலுங்கியது. மனிதர்கள் அலங்காரத்திற்குச் செய்யும் செலவுதான் உலகில் அதிகமாக இருக்கும் போலும். அந்த நேரத்திலும் சிலர் தூண்டில் போட்டு மீன் பிடித்தார்கள். ஒரு அரபி தனது மனைவியுடன் பாலத்தை ரசித்தபடி நடந்தார். இல்லை, அவர் மனைவி ரசிப்பதற்காக நடந்தார். உடலும் தலையும் முகமும் கருப்பு அங்கியால் மூடப்பட்ட அந்தப் பெண்ணின் கண்களுக்குள் உலகத்தை விழுங்கும் குழந்தையின் ஆவல். அவர்கள் அவனது நோக்கை அறிவதற்குள் முகம் திருப்பிக்கொண்டான். யாராவது யாரையாவது உற்றுப் பார்க்கும்போது எப்படி அவர்களுக்குத் தெரிகிறது? அவர்களும் திரும்பிப் பார்த்துவிடுகிறார்கள்.

நகர்ந்து போய் பாலத்தின் ஆழத்தைக் குனிந்து பார்த்தான். ஆழத்தில் அலைகளே இல்லாமல் இங்கிருந்து அங்கே மௌனமாய் நகர்ந்து போய்க்கொண்டிருந்தது கடல். நகர்வதே தெரியாமல் அந்த கடல் நீர் பாய்ந்து கொண்டிருந்த அமைதியில் உள்ளம் உறைந்தது.

இந்தக் கடல் எப்போது தோன்றியிருக்கும்? அதில் இந்தப் பூமி எப்போது தோன்றியிருக்கும்? அன்றிலிருந்து சூரியனை, நிலாவை, நட்சத்திரங்களை, மேகங்களைச் சூடி, தன் மீது விழுந்து தழுவும் வானத்தைத் தன்னுள் கரையவிட்டு, மகிழ்ந்திருந்த அந்த கடல் இன்று பாலத்திற்கு கீழே மறைக்கப்பட்டுவிட்டது. இந்த பாலம், இந்த இடத்தில், அந்த கடலின் கல்லறையா?

பாலத்திற்கு கீழே கடல் தனியாகக் கிடக்கிறது. அதன் வானம் இனி எங்கோ? அவன் காலுக்கும் கீழே இந்தக் கடல். மானுடம் வெல்லும்போதெல்லாம், ஏன் வானம் வசப்படுவதில்லை? வானம் எங்கேயோ தொலைதூரம் போய்விடுகிறது. அதற்காகத்தான் அந்த கடல் அழுதுகொண்டு ஓடுகிறதா இங்கும் அங்கும்?

அவனின் கண்ணீர் துளி கருப்பு மை போலக் கடலில் சொட்டிக் கடலானது. கண்களைத் துடைத்துக்கொள்ள அவன் தலையைத் திருப்பியபோதுதான் அவனைப் பார்த்தான். பாலத்தின் தடுப்புச் சுவருக்கு அப்பால் அவன் கடலை நோக்கி நின்றான். அவன் கன்னத்தின் நீர்க்கோடு விளக்கொளியில் மின்னியது. மெலிந்த தேகம். இடதுப்பக்கம் சற்று வளைந்து இருந்தான். அந்த வளைவே அவன் கடலுக்குள் விழுவான் என்ற மயக்கத்தைத் தந்தது. கோபால் எப்படி அங்கு போனான் என்பது தெரியவில்லை; அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து இழுத்துப் பாலத்திற்குள் எறிந்தான்.

நல்லவேளை, யாரும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் ஒரு அலைபேசி அழைப்பில் சவூதி காவலர்கள் வந்திருப்பார்கள். இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றுதான் என்ன ஏது என்று விசாரிப்பார்கள். அவனும் அதை உணர்ந்தவன் போல அவசரமாக எழுந்து, எதுவும் நடக்காதது போலக் கோபால் அருகில் வந்து நின்றான்.

“எதுவா இருந்தாலும், நீ செய்ய இருந்தது தப்புதான்!” கோபாலின் உள்ளம் கோபத்தில் கொதித்தது. உடம்பு முழுவதும் யாரோ சூட்டுக் கம்பியால் குத்துவது போன்ற வலி. அந்த வலியில் அவன் என்ன மொழி பேசுவான் என்பதைக்கூட நினைக்காமல் தமிழில் பேசினான்.

“எனக்கு வேற வழி தெரியல,” அவன் தமிழில்தான் பேசினான்.

“எதுவா இருந்தாலும் இது பெரிய தப்பு.”

“உழைப்பு, பணம், உறவு, வயசு எல்லாம் போச்சு…” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. தொண்டை அடைக்கத் தலை கவிழ்ந்து விம்மினான். கோபாலின் கோபம் குறைந்து, அவன் தோள் மீது கை போட்டு அவன் நெஞ்சத்தை மெல்லத் தட்டினான். அங்கு நின்றால் ஊர்க்காவல் வந்து ‘இக்காமா’ காட்டு என்று கேட்டு, யார்? என்ன? என்று விசாரிப்பார்கள். ‘போகலாம்’ என்பதை நகர்தலில் சொன்னான். இருவரும் அறையை நோக்கி நடந்தார்கள்.

தூண்டில்காரன் ஒரு மீனை இழுத்துப் பாலத்தின் மீது போட்டான். பாலத்தின் அடியில் அதனுடன் விளையாடிக்கொண்டிருந்த இன்னொரு மீன் துள்ளி எழுந்து மீண்டும் தண்ணீருக்குள் விழுந்த ஓசை. வெள்ளியில் செய்தது போல மின்னிய தூண்டில் மீன் துள்ளித் துடித்து அடங்கி பாலத்தைத் தனது வாலால் அறைந்து அறைந்து அடங்கியது. சுவாசத்திற்கு ஏங்கிய அதன் செவுள் திறந்து திறந்து மூடின. உயிர் அசையும் சிவந்த செவுள் தசைகள் பளபளத்தன. கோபால் கண்ணில் முள்ளேறிய வலி. மீனில் இருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

யார் இந்த மீன்கள்? தாயா, இணையா, சகியா, சோதரியா? அவர்களுக்கு இடையில் விழுந்த அந்த மெல்லிய தூண்டில் முள், அவர்களைப் பிரித்துவிட்டதே! ஆசையை விழுங்கிக்கொள்ள வேண்டுமா? ஆசையால் விழுங்கினால், மேலே வந்தாலும், மேலானதாக ஆக முடியாதா?

இருவரும் மௌனமாக நடந்துகொண்டு இருந்தார்கள். கோபால் எதுவும் கேட்கவில்லை; அவனும் எதுவும் சொல்லவில்லை. நிறைந்த மௌனம். அவனின் உடல் பதற்றத்தைக் கோபாலின் கைகள் உணர்ந்தன. அவனின் தோளில் தட்டி அமைதியடைய உணர்த்தினான்.

எதிரில் வந்த வட்டச் சாலையின் மையத்தில் உள்ள ஈச்சமரச் சோலையில் “உக்காரலாமா?” என்று கேட்டான். சம்மதம் சொன்ன கோபால் அவனை அமரச் சொல்லிவிட்டு, இரவில் மட்டும் செயல்படும் அருகில் இருந்த சாலையோர வாகனக் கடையில் இருவருக்கும் முட்டை சாண்ட்விச் மற்றும் காபி வாங்கி வந்தான்.

மறுக்காமல் வாங்கிக்கொண்டான்; அவசரமாக உண்டான். அவன் பசி அவனை மிஞ்சி ஆட்சி புரிந்தது. எப்போது சாப்பிட்டானோ? கோபால் தன்னிடம் இருந்ததையும் கொடுத்தான். அதையும் சாப்பிட்டு காபியை ஒரு உறிஞ்சு விழுங்கியபோதுதான் அவன் தன்னை உணர்ந்து கூசினான். வாய் கோணி முகம் சுருங்கி அழுதுவிடுவான் போலப் பார்த்தான். “நேத்துலருந்து எதுவும் சாப்புடல,” தரையைப் பார்த்துச் சொன்னான். கண்ணீர்த்துளிகள் அவன் மடியில் விழுந்தன.

கோபால் எதுவும் சொல்லவில்லை. எழுந்து சென்று மேலும் இரண்டு முட்டை சாண்ட்விச் வாங்கி வந்து அவனிடம் கொடுத்தான். ஒன்றை எடுத்துக்கொண்டு, ஒன்றை கோபாலிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னான்; சிரித்தான். சிரிக்கும்போது அவன் கண்கள் விரிந்து ஒளிர்ந்தன. வலது பக்கத் தெற்றுப்பல் அவன் சிரிப்பை அழகாக்கி அவனைப் பெண் போலக் காட்டியது. அவனைத் தொடப்போன கோபால் சட்டென்று கைகளை இழுத்துக்கொண்டான்.

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மெல்லிய குளிர் காற்று சட்டைக்குள் நுழைந்து தடவிப்போனது. காபி குடித்து முடித்ததும் காகிதக் குவளையைப் புல்வெளியில் தூக்கி எறிந்தான் கோபால். அவன் எழுந்து போய் அந்த காகிதக் குவளையை எடுத்து வந்து, சாப்பாட்டுக் குப்பைகளையும் அள்ளி எடுத்துப் போய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்து மீண்டும் கோபால் அருகில் உட்கார்ந்தான். தான் அந்த காபி குவளையைத் தூக்கி எறிந்திருக்கக் கூடாது என்று நினைத்த கோபாலுக்குத் தானே குப்பையாகிவிட்டது போன்ற உணர்வு எழுந்தது. கோபால் குறுகிச் சற்றுத் தள்ளி உட்கார்ந்தான். கோபாலின் மூச்சு நீளமாக வெளியேறியது. வான் நோக்கினான்.

ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு வேகமாக வந்த இரண்டு கார்கள், வட்டப்பாதையை அடைந்ததும் இரண்டும் பம்பரம் போலச் சுழன்றன. வெள்ளைக் காரின் வலது முன் சக்கரம் தேய்ந்ததில் புகை எழுந்து நாசியில் ஏறியது. வலது ஆள்காட்டி விரலால் நாசியை அசைத்து நெடியேறுவதை மாற்றினான். நீலக்கார் சுழன்று நடைபாதையில் ஏறியது. தூரத்தில் காவல் வாகனத்தின் விளக்கொளியைக் கண்டதும் இரண்டு கார்களும் எதுவுமே நடக்காதது போல மீண்டும் பறந்தன.

கோபால் எழுந்து “அறைக்குப் போவோமா?” என்றான்.

“இன்னும் கொஞ்ச நேரம் இருங்க, போகலாம்” என்றவன், கோபாலின் கையைப் பிடித்து இழுத்து அருகில் உட்காரச் சொன்னான். அலங்கார விளக்கொளியில், காற்றில் அசையும் ஈச்சமர நிழல் அவர்களின் மேல் விழுந்து ஒளியும் நிழலுமாக விளையாடியது.

“பத்து வருசமா சவூதியில இருக்கேன். நான் சவூதி வந்த பிறகுதான், எங்க வீட்டுல மூணு வேளை சோறே கண்ணுல பார்த்தோம். தங்கச்சியைக் கட்டிக் கொடுத்தேன்; வீட்டைக் கட்டினேன்; தம்பியையும் இன்ஜினியரிங் படிக்க வைச்சேன். அவனுக்கு ஐடி கம்பெனியில வேலை கிடைச்சதுக்கு அப்புறம்தான் ஒரு தெம்பா ஊருக்கே போனேன். ஆனா, வீடு தம்பி பேருல இருக்கு; அவன் கூட வேலை செய்யுற பொண்ணையே கல்யாணமும் பண்ணிக்கிட்டான். என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல. ஊருக்குப் போய்த்தான் பார்த்தேன்… அப்பா அம்மாவுக்கு அனுப்புன காசுல ஒரு நயா பைசா கூடச் சேமிப்பு இல்ல. மூணு மாச லீவுல போனவன், மூணே நாள்ல திரும்பி வந்துட்டேன். உழைத்துச் சம்பாதித்த வீட்டில் அறையில் படுக்க முடியல, கூடத்தில்தான் படுத்துக் கிடந்தேன். அம்மா அப்பாவிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டேன்”

“வந்து எத்தனை நாள் ஆச்சு?”

“ஒரு மாதம்.”

“ஊரில் இருந்த மூன்று நாளும் இந்த எண்ணம் வரல. வந்து ஒரு மாதமாய் இந்த எண்ணம் வரல. இன்று மட்டும் என்ன?”

“உழைப்பு, பணம், உறவு, வயசு எல்லாம் போச்சு,” என்று நினைக்க நினைக்க வலி தாங்க முடியல. நினைக்காமல் இருக்கவும் முடியல. நினைக்காமல் இருந்தா உடம்பு நடுங்குது, நினைத்தா கண்ணீர் வழியுது. முடியல.” அவன் உடல் நடுங்கியது; கண்களில் நீர் ஊறி வழிந்தது. அவன் முன் தலையில் லைட் விழுந்து ஒளிர்வதைக் கோபால் அப்போதுதான் கவனித்தான். இருக்கும் முடி உப்பும் மிளகும் கலந்த கலவை. காலம் வரைந்த கோலம்! யார் பார்த்தாலும், “பிள்ளைகள் எந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள்?” என்றுதான் கேட்பார்கள்.

“உழைப்பு வீணாவது, பணம் பறிபோவது, உறவு முறிந்து போவது, காலம் கடந்து போவது எல்லோர் வாழ்விலும் உண்டு. அடுத்தவர்களுக்கு நடக்கும்போது அது செய்தி; நமக்கே நடந்தால் அது சித்திரவதை. வலி இல்லாமல் வலிமை இல்லை. ‘வலிமை’ என்று எழுதும்போது கூட ‘வலி’ இருக்கு பாத்தியா? தமிழில் வலி என்று சொன்னாலே வலிமை என்றுதான் பொருள். எந்த காயத்தின் வலியும் எல்லோருக்கும் ஒன்றுதான்; அதைத் தாங்கிக்கொள்பவர்களின் தரம்தான் வேறு வேறு. தாங்கிக்கொள்பவனைத்தான் உலகம் வலிமையானவன் என்று போற்றும்.”

அவன் அமைதியாக இருந்தான். “இப்ப எப்படி இருக்கு?”

“பதற்றமாக இருக்கிறது” கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“வாழ்க்கை என்றால் வலி, பதற்றம் வராமல் இருக்காது, தாங்கிக்கொள்ளக் கத்துக்கணும்.”

பெருமூச்சு விட்டான். “என்னால முடிஞ்சதை நான் அவங்களுக்குச் செஞ்சேன்; அவங்களால முடிஞ்சதை அவங்க எனக்குச் செஞ்சுட்டாங்க.”

அவன் நிமிர்ந்து உட்கார்ந்து கண்களைத் துடைத்துக்கொண்டான். இரண்டு கைகளாலும் தன் தொடையைத் தட்டித் துள்ளி எழுந்து “நன்றி” என்று நடந்தான்.

முதுகு காட்டிச் செல்கின்றவனிடம், “அம்மா, அப்பாவிடம் பேசு” என்று சத்தமாகக் கூறினான்.

“நாளை மறுநாள் சம்பளம் கிடைக்கும்; கிடைத்ததும் பணம் அனுப்பிவிட்டுப் பேசுகிறேன்” என்றான் சிரித்தபடி. கோபால் அந்தச் சிரிப்பின் தித்திப்பைச் சுவைத்தபடி தனது அறைக்கு நடந்தான்.

இரண்டு வருட ஒப்பந்தம் முடிந்து ஊருக்குச் செல்ல இருப்பதால், இலங்கை சகோதரர்களால் நடத்தப்படும் ‘வெள்ளை அரிசி’ உணவகத்தில் நண்பர்களுக்கு விருந்து வைத்தான் கோபால். நண்பர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்து அந்த நீளமான மேசையை நிரப்பினார்கள். நண்பர்கள் கேட்ட அனைத்தையும் கோபால் வரவழைத்தான். மேசை முழுதும் நிறைந்து இருந்தது அவரவர் ருசி; அவரவர் விருப்பம். ஆனால், நாக்கு அடுத்தவர் ருசியில் நனைந்துவிட எளிதில் நீண்டு விடுகிறது. அனைவரும் உற்சாகமாகக் கலந்து சாப்பிட்டார்கள்.

எதிர் மேசையில் இருந்தவர் மீது கண் பட்டதும், கோபால் கூர்ந்து கவனித்தான். மரவள்ளிக் கிழங்கும் மத்தி மீன் குழம்பும் வைத்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் சாப்பிடும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது. மீசை இல்லாத பளபளப்பான முகம்.  தலையில் முடி நட்டிருந்தார்.

 வெள்ளை அரிசி உணவகத்தில் வாரம்தோறும் கோபால் சாப்பிடுவதுண்டு; ஆனால் ஒருநாளும் அவரைப் பார்த்ததில்லை. புதியவராக இருக்கலாம்.

கோபால் உற்றுப் பார்ப்பதைக் கண்டு நண்பர்களும் அத்திசை நோக்கினார்கள். “என்ன?” என்று கண்களால் கேட்டார்கள். கோபால் உதட்டைச் சுழித்து, தோளைக் குலுக்கி “ஒன்றுமில்லை” என சைகை செய்தான்.

அப்போது உணவு பரிமாறுபவர், ஒரு வெள்ளை பீங்கான் தட்டில் குழம்பில் வெந்த ஒரு பெரிய மீன் மண்டையை கொண்டுவந்து அவர் முன் பிரியத்தோடு வைத்தார். அவர் பதறிப்போய், ” நா இதக் கேக்கலையே!” என்றார். 

உணவு பரிமாறும் இலங்கை அண்ணன் புன்னகையுடன், ” “பரவாயில்லை சாப்பிடுங்கோ. உங்களுக்குத் தரவேணும் எண்டு தோணிச்சு.” என்றார். அவர் கூச்சத்துடன் சிரித்தார். அந்த சிரிப்பு, தெத்துப்பல். மீசை இல்லாத அந்த முகத்தில் உதிக்கும் தேவதை.

கோபாலுக்குள் மின்னல் அடித்தது, மறைத்திருந்த திரை எரிந்து காட்சி  கண்ணில் பட்டது.   பரவச சிலிர்ப்பு. எழுந்து ஓடி அவனைக் கட்டிக்கொள்ளவேண்டும் என்ற பூரிப்பு “அவன்தான்!” அவன் பெயர் என்ன? என்று அன்று  கேட்கவில்லையே  என்ற  ஞாபகம்  எழுந்து மெளனமாக கிள்ளியது.   

என்ன பேராக இருந்தால் என்ன? மீசை இல்லாவிட்டால் தான் என்ன?.  

“மீசை…” என்று மெல்ல முணுமுணுத்தான் கோபால். 


Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.