தி.ஜானகிராமன் சிறப்பிதழ் குறித்து…

இது சொல்வனத்தின் ஐம்பதாவது இதழ். இந்த இதழை தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் குறித்த சிறப்பிதழாகக் கொண்டு வர விரும்பினோம். ஜானகிராமன் வாழ்ந்த காலத்தில் பெரிய கவனத்தையும், மதிப்பையும் பெற்றவராயினும், அவர் மறைந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகிவிட்ட நிலையில் அவரைக் குறித்து சில நினைவுகளையும், மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கவேண்டும் என்று தோன்றியது. இந்த இதழ் தயாரிப்பில் வெங்கட் சாமிநாதன் அவர்கள் காட்டிய அக்கறை மிகவும் நெகிழ வைத்த ஒன்று. இந்த இதழை அவருக்குச் சமர்ப்பிக்கிறோம். சொல்வனத்தைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, விமர்சனம் செய்து, அக்கறை காட்டிவரும் அத்தனை நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் ஐம்பதாவது இதழைத் தொட்டிருக்கும் இத்தருணத்தில் எங்கள் நன்றிகள்.

“இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது?

என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரஸனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்.

சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன் – எழுத்து மூலம்.

– தி.ஜானகிராமன்”

தி.ஜானகிராமன் குறித்து அசோகமித்திரனுடன் ஒரு பேட்டி

“Essentially a far better short story writer than a novelist” நிறைய கதைகள் நன்னாருக்கும். ஜானகிராமனுடைய நாவல்களை விட சிறுகதைகள்தான் மிகவும் சிறப்பானவை என்பது என் அபிப்ராயம். அவர் சிறுகதைகளில் பெரிய master. தமிழின் மிகச்சிறப்பான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். பாயசம், கண்டாமணி ஆகியவை மிகவும் சிறந்தவை. ஜானகிராமன் கதைகள் கருணையை மட்டுமே சொல்பவை என்று பொதுமைப் படுத்திவிட்டார்கள். ஜானகிராமனின் எத்தனையோ சிறுகதைகளில் – பாயாசம் கதையில் வரும் பெரியவரைப் போல – மனித மனத்தின் வேறு குணங்களையும் பதிவு செய்திருக்கார்.

தி.ஜானகிராமனின் இசையுலகம்

ஜானகிராமனுக்கு நல்ல செவி இருந்தது. ஒருமுறை கேட்டதை அப்படியே பாடிவிடுவார். மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாட்டென்றால் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அவர் பாடிக் கேட்டதும், அந்தப் பாட்டுமுறையை அப்படியே திருப்பிப் பாடிவிடுவார். பல வித்வான்களோடு ஜானகிராமனுக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. லால்குடி ஜெயராமன், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் போன்றோருக்கு ஜானகிராமனின் பாட்டென்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் பாடச்சொல்லிக் கேட்பார்கள். ஜானகிராமன் கச்சேரிகள் செய்வதில்லையென்று அவர்கள் ஆதங்கப்பட்டுக்கொள்வார்கள். லால்குடி ஜெயராமன் ஜானகிராமனின் சங்கீத அனுபூதியை வியந்து போற்றுவார்.

பற்கள்

நுட்பமாக கதைகூறும் திறனும் கவித்துவ நடையும் அவருடைய முத்திரை. விருந்து மண்டபம் ஒன்றுக்கு ஓர் அழகி நேர்த்தியாக உடையணிந்து, அலங்கரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறாள். உடனே அங்கிருக்கும் அத்தனை பெண்களும் தங்கள் தங்கள் உடைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்கிறார்கள். அப்படித்தான், தி.ஜாவின் எழுத்தை படிக்கும் ஒவ்வொரு முறையும் மற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை ஒருமுறை திரும்பவும் பார்த்துக் கொள்வார்கள்.

Rotationplasty – கால் இழந்தோர்க்கு ஒரு வரம்

புற்றுநோய் போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு மனிதர் தன்னுடைய கால் முட்டியை இழக்க நேரிட்டால் தன்னுடைய இயல்பான வாழ்க்கையை இழக்க நேரிடுகிறது. ஆனால் மருத்துவம் Rotationplasty எனும் ஒரு புதுவித அணுகுமுறையால் அந்த குறையை போக்குகிறது.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 12

ரொமோன்டிஸம் (Romanticisim) என்னும்சிந்தனையிலிருந்து விரிவடைந்தது தான் ஸிம்போலிஸம் (Symbolism) சிந்தனையும் செயற்பாடும். அது இலக்கியத்தில் தொடங்கி ஓவியம், சிற்பம் போன்ற காட்சிவழிக் கலைகளிலும் பரவியது. ஆனால், இரண்டும் பயணித்த பாதை ஒன்றல்ல. படைப்பில் இயற்கையை பிரதி பலிப்பது (Naturalism), தத்ரூப அணுகல் (Realism) போன்றவற்றுக்கு எதிர் விளைவாகத் தோன்றிய ஒரு நிகழ்வு அது. ஸிம்போலிஸம் மனித வாழ்க்கையின் யதார்த்தத் தன்மையை ஒளிவு மறைவு இல்லாமல் தோற்றப்படுத்த முயன்றது.

நடந்தாய் வாழி காவேரி – காவேரியே ஒரு சங்கீதக் கச்சேரி

எந்த பயணத்துக்கும் இருக்கும் கிளைப் பயணங்கள் போல், இவர்களது பயணம் காவிரியின் பல தாத்பரியங்களை பூவிதழ் போல் விரித்துக் காட்டுகிறது. காட்டாறு போல் பாறையைப் பிளந்து விரையும் தலைக்காவிரி, சிவசமுத்திர பகுதியாகட்டும்,வறண்டுப் போன தமிழ்நாட்டுப் பகுதிகளாகட்டும் நதியின் போக்கை மட்டும் இவர்கள் ரசிப்பதில்லை. பயணத்தின் பல முகங்களாக நதிக்கரை ஓரம் வாழும் மக்களின் வாழ்க்கை, அவர்களது நம்பிக்கைகள், கன்னடம் மற்றும் தமிழ் மொழிப் பிரயோகங்கள், இயற்கை வளங்கள், காவிரியின் செழிப்பு என எல்லாவற்றையும் ரசித்திருக்கிறார்கள். அவற்றை பயணக்கட்டுரைகளில் மிக விரிவாகப் பதிந்திருக்கிறார்கள்.

‘உதய சூரியன்’ – தி.ஜானகிராமனின் ஜப்பான்

நாங்கள் போன சமயம் இலையுதிர் காலம். செர்ரி போன்ற மரங்கள் எல்லாம் தகதகவென்று எரியும் பொன் போலச் சுற்றிலும் சிலிர்த்துக் கொண்டிருந்தன. இலைகள் அப்படித் தங்கமாக மாறி, தாமிரமும் ஆரஞ்சும் மஞ்சளும் சிவப்புமாகப் பல வர்ணத் தீயைப் போல மைல் கணக்கில் அடி வானம் வரையில் பரந்து ஜொலிக்கும் அந்த வனப்பை நான் கண்டதில்லை. உயரமும் அந்த வர்ண நெடும் பரப்பும், தனிமையும் மெல்லிய பட்சியோசையும் புறக் கண்ணை ஊடுருவி, ஒரு அமானுஷ்யமான அந்தராத்மாவில் ஆழ்ந்து தோயும் அனுபவமாக, மறதியாக, மேலும் மேலும் ஆடிச் சென்றுகொண்டே இருந்தன. வாயைத் திறந்து பேசக் கூட முடியவில்லை. திறந்தால் அந்த அமைதி, ஆனந்தம், லயம் எல்லாம் கெட்டுவிடும் போலிருந்தது.

குழந்தைக்கு ஜுரம்

“ஏன்யா, எத்தினி நாளாய்யா இநத் வேலையை ஆரம்பிச்சிருக்கீரு? வாத்தியாராச்சேன்னு கொஞ்சம் இரங்கினத்துக்கா இந்தத் தண்டனை எனக்கு? ரங்கசாமி வாத்தியார்தான் போக்கடாப் பயன்னு நெனச்சேன். நீரும் சேந்துப்பிட்டீரா?” வாத்தியாருக்கு உடம்பெல்லாம் பதறிற்று. அவர் வாத்தியார். யாரும் அவரை இப்படித் தூக்கி எறிந்து பேசுகிறதில்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு மரியாதை உண்டு. அதாவது அவமரியாதை கிடைத்ததில்லை. முட்டி வந்த ஆத்திரத்தை அமுக்கிக்கொண்டு, பணிந்த குரலில், “நீங்க தெரியாம சொல்றீங்க, நல்லா யோசனை பண்ணிப்பாருங்க” என்றார்.

ஆயிரம் பிறைகளுக்கப்பால்

அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் என்று ஒரு வித்வான் வந்தார். அவர் ரொம்ப சிக்கனம். ராகம் மூன்று நிமிஷம் பாடுவார். கீர்த்தனம் நாலு நிமிஷம் பாடுவார். சுரம் மூன்று ஐந்து நிமிஷம் அடிப்பார். எனக்கும் சந்தோஷம். நவருசி சாக்லேட் டப்பா மாதிரி எல்லோருக்கும் திருப்தியாக ராகம், பாட்டு, சுரம், நிரவல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பாடுவார். “காதை ரொப்பரேடா ராமானுஜம்!’ என்று அவரைப் பார்த்துக் கூத்தாடுவார் லோகநாதய்யர். அவரைப்பார்த்து, பிறகு வந்த வித்வான்களும் விதூஷிகளும் காதை ரொப்ப ஆரம்பித்தார்கள்.

ஜானகிராமனுக்காக ஒரு கதை

நாங்கள் இருவரும் கல்லூரி நண்பர்கள். 1936-37லிருந்து கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சக மாணவர்கள். முதல் ஆண்டிலேயே என் கதைகள் மணிக்கொடியில் வெளிவரத்தொடங்கி நான் எழுத்தாளன் ஆகிவிட்டேன். என் கதை வெளிவந்ததும் கல்லூரியில் என்னை மிகவும் சங்கோசத்துடன் அணுகிப்பாராட்டுவார்,அவரைவிட அதிக சங்கோசப்பட்டபடி அவருக்குப் பதில் கூறுவேன். இப்படி ஆரம்பித்தது எங்கள் தொடர்பு. நான் எழுதுவதைப் பார்க்க அவர் எங்கள் வீட்டிற்கு வருவதும், நான் அவர் இருப்பிடம் செல்வதுமாக எங்கள் நெருக்கம் அதிகரித்தது.

பண்பின் சிகரம்

எழுத்தாளராகவோ, இலக்கியகர்த்தாவாகவோ நடந்து கொள்ளத் தெரியாத ஜானகிராமனிடம் காணப்பட்ட பெருங்குறை, அவர் தம்முடைய படைப்புகளைப் பற்றிப் பேசாததுதான். பொதுவாக தம்முடைய எழுத்தைப் பற்றிப் பேசாததுதான். பொதுவாக, நம்முடைய எழுத்தைப் பற்றி பேட்டிகளிலோ, கூட்டங்களிலோ பேசும் வாய்ப்புகள் அல்லது நிர்ப்பந்தங்கள் ஏற்படும்போதெல்லாம் எப்படியாவது இலக்கியப் பொதுமையைப் பற்றிப் பேசிவிட்டுத் தம்முடைய சாதனையைக் குறிப்பிடாமல் விட்டுவிடுவது அவருக்குக் கைவந்த கலை.

தி.ஜானகிராமன்

ஜானகிராமனுக்கு தமிழ் இலக்கிய சரித்திரத்தில் பிரதானமான இடம் அவரது சிறுகதைகளால்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. மிக நுட்பமான பார்வையும் தஞ்சாவூர்த் தமிழின் சரளமும், சிறுகதைக்கு மிக முக்கியமான காலப் பிரமாணமும் அவர் எழுத்தில் இருக்கும். சிக்கனமான வார்த்தை அமைப்புகளில் மிக அதிகமான விஷயங்களைச் சொல்லிவிடுவார். அவர் நடையில் இருந்த நளினத்தை இன்னும் யாரும் எட்டிப் பிடித்ததாகத் தெரியவில்லை.

தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்

காவிரின்னா சங்கீதம்னு சொல்றபடி இருக்கு. இது நமக்கு பிதுரார்ஜிதம், நீங்க எழுத ஆரம்பிச்சபோதும் சரி… இப்போதும் சரி… சுற்றியிருக்கிற எழுத்தாளர்கள் இந்தக் காவிரிக் கரையிலிருந்து வந்தவர்கள் தான். உங்க எழுத்தில வர்ற சங்கீதம் ஒரு சூழலா ஒவ்வொருத்தவர் உள்ளேயும் ஒரு ஆத்மிக உத்வேகமா வந்திருக்கு. பிரமாதமான விஷயம் அது… நான் பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டது… வியப்படைந்தது. பிரமாதமான விஷயம்.

மதுர மணி

கச்சேரியில் உட்கார்ந்து ஆரம்பித்ததுமே களை கட்டி, சபையின் கவனம் முழுவதையும் அந்தக்கணமே ஒருமிக்கவைத்து, சலசலப்பில்லாத, வேறு எங்கும் திரும்பாத, தனியானந்த மௌன நிலையைச் சாதிக்கிற ஒரு அனுபவத்தைக்காண வேண்டுமானால், மதுர மணி அய்யரின் கச்சேரியில்தான் காண முடியும். சூடேற வேண்டும், பிடிக்க அரை மணி ஒரு மணி ஆக வேண்டும், அதுவரையில் பொறுமை காட்ட வேண்டும் என்ற தர்மசங்கடங்கள் எல்லாம் அவர் கச்சேரியில் ஏற்படுகிறதேயில்லை.

பாலையும், சில பாம்புகளும் – இறுதிப் பகுதி

கிட்டத்தட்ட இரண்டாய் துண்டிக்கப்பட்டு, தன் உள்ளுறுப்புக்கள் உடலின் வெளியே வழிந்தபடி, பாதி மல்லாந்து க்ராஸ் கிடந்தான், நடுங்கியபடி அவள் பார்க்கையில் அவன் ஒருமுறை துடித்து, நாக்கை ஒருமுறை வெளியே சொடுக்கி, உள்ளே இழுத்தான், ஸ்னேக் ஏதோ ஒரு ஒலியை எழுப்பினாள், அடித்தொண்டையிலிருந்து வந்தது அழுகை என்று சொல்ல முடியாத அளவு சிறு ஒலி.

மகரந்தம்

உயிரியல் சமீபகாலங்களில் நிறைய தொழில் துறை நுட்பங்களுக்கு உதவுகிறது. தேனீக்களின் கொட்டு நமக்கு நிறைய கடுக்கும் என்பதைக் கொட்டு வாங்கியவர்கள் அறிவர். சிலருக்கு இந்தத் தேனீக்களின் ‘விஷம்’ ஒவ்வாததால் துரிதமாக எதிர் மருந்து ஏதும் கொடுக்கப்படாவிட்டால் ஆள் உயிருக்கே கூட ஆபத்து நேரும். இந்த ‘விஷத்தை’ என்ன விதங்களில் பயன்படுத்தலாம் என்று அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகையில் இதை வைத்து வெடிமருந்துகள் இருப்பதைக் கண்டறிய ஒரு கருவி செய்ய முடியும் என்று அறிந்தனர்.

ஜானகிராமன்… மனுஷன்! எழுத்துக் கலைஞன்! ரெண்டும் ரெண்டும்தான்!

சமஸ்கிருதப்படிப்பும், சமஸ்கிருத ஈடுபாடும் அவரைத் தமிழில் ஒரு தனி படைப்பாளியாக்கினது போலவே சாதாரண ஆசைகளும், அளவுகளும் அவரை எழுத்தில் தனித்துவத்தை அமைத்துக்கொள்ள உதவின என்பது ரொம்பச் சிலருக்கே தெரியும். அவரைத் தஞ்சாவூருக்கு அப்பால் வராத கலைஞராகவே விமர்சகர்கள் சொல்லிப் பழகினார்கள். அவர் வரைந்துகாட்டிய பெண்கள் மேல் மட்டுமே அதிக ருசி கொண்ட சில எழுத்தாளர்கள் “ஏன் ஸார், அப்படி பெண்கள் தஞ்சாவூரில் இருக்காளா என்ன? அப்படிக் கூட இருப்பாளா என்ன?” என்று என்னைக் கேட்ட எழுத்தாளர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இசைப் பயிற்சி

சென்னையில் ஜார்ஜ் டவுனில் பன்னிரண்டு குடிகளுக்கு நடுவில் ஒரு குடியாக, கீழே சமையலறையும் மாடியில் படுக்கையறையுமாகக் குடித்தனம் செய்த காலத்தில் இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு ஒரு பயல் பாடிக்கொண்டு போவான். அவன் ஒரு மோட்டார் கார் க்ளீனர். கிட்டப்பா, ராஜரத்னம், பாகவதர் என்று நாடக, சினிமாப்பாட்டுக்கள், ராகங்களையெல்லாம் அச்செடுத்துப் பாடுவான். குரலில் ஒரு கம்மல் – அவர் பொறாமைப் படுகிற தெளிவு, புரளல், ரவைகள்…

கரிச்சானின் கீதம்

கு.ப.ராவின் ஒரு பெரிய குணத்திற்கும் இந்தக் கரிச்சான் காதலுக்கும் சம்பந்தமுண்டு. இளம் எழுத்தாளர்களுக்கு அவர் பெரிய ஆதரவாக இருந்தார். அவர்கள் எழுதி வாசித்துக் காட்டிய ஆயிரக்கணக்கான கட்டுரை, கதைகளை அலுப்பில்லாமல் சுணங்காமல் கேட்டுத் திருத்தங்களைச் சூசித்துக் கொண்டே இருப்பார். இந்த இளம் ஹிருதயங்களை முன்னுக்குக் கொண்டு வந்த ஆர்வம் கரிச்சானையும் முன்னுக்குக் கொண்டு வந்தது. ஆனால் கரிச்சானைத் திருத்த வேண்டிய அவசியம் மட்டுமிருக்கவில்லை. அது பிறக்கும்போதே மகாவித்வானாகத்தான் பிறக்கிறது.

தி ஜானகிராமன் – ஓர் அஞ்சலி

சரியாக இனம் கண்டுகொள்ளப்பட்டிருந்தால் தமிழ் இலக்கியச் சூழலில் தீர்க்கமான கலையுணர்வு இருந்திருக்குமானால் மோகமுள் எழுதிய கைகளுக்கு முதல் ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில், இன்றைய தமிழ்நாட்டில் அது அமிழ்ந்திருக்கும் ரக அறிவார்த்த கலைச்சூழலில் எந்த ஒரு கலைஞனும் அறிவாளியும் சிலுவை சுமக்கப் பிறந்தவன்தான். தி.ஜானகிராமன் அதிர்ஷ்டவசமாக, அல்லது அவருக்கிருந்த அவர் எழுத்துக்கிருந்த இனிமை, கவர்ச்சி காரணமாக அவருக்கிருந்த அடங்கிப்போகும் சுபாவம் காரணமாக சிலுவை சுமக்க நேர்ந்ததில்லை.

தி.ஜானகிராமன் – சில நினைவுகள்

நானும், அவனும் சேர்ந்து சங்கீதக் கச்சேரிகளுக்குப் போவதுண்டு. ரூமிலும் அடிக்கடி சங்கீத வித்வான்கள் கூடிப் பாடி மகிழ்வதும் உண்டு. ஜானகிராமன் ராகம் பாடும் முறை, கமகப் பிரதானமான ஸஞ்சாரங்கள் ஆகியவற்றை அந்த வித்வான்கள் போற்றுவார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவனுடைய ஸங்கீதோபாஸனை இளமையிலிருந்தே அவனுடன் வளர்ந்த ஒன்று. ஆகஸ்டில் அவனை நான் கடைசியாகச் சந்தித்தேன். இசைவிழாக்கள் நடக்கும் நாட்களில் தன்னுடனேயே தங்கி இருக்க வேண்டுமென்றும், என்னை மிகவும் ஸெளக்கியமாகக் கூடவே அழைத்துச் சென்று திரும்புவதாகவும், அவசியம் வரும்படியும் வற்புறுத்திக் கூறினான். பிறகு கடிதமும் எழுதினான். ஸங்கீதத்தைப் பற்றி ஒரு புத்தகமும் எழுதப்போவதாகவும், அதற்கான சில கலந்துரைகள் செய்ய வேண்டும் என்றும் சொன்னான். இளமை முதலே இசைப் பயிற்சி உண்டு அவனுக்கு.

சிறுகதை எழுதுவது எப்படி?

எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும்.

தி.ஜானகிராமன் – வாழ்க்கைக் குறிப்பும், புத்தகங்களும்

ஜானகிராமனின் தீவிர இலக்கியச் செயல்பாடு கு.ப.ராவின் அறிமுகத்துக்குப் பின்னரே நிகழ்ந்திருக்கிறது. தன்னுடைய 24-ஆவது வயதில் அமிர்தம் என்ற முதல் நாவலை எழுதியிருக்கிறார். பத்து நாவல்களும், இரண்டு குறுநாவல்களும், மூன்று நாடகங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், மூன்று பயண நூல்களும் எழுதியிருக்கிறார். கடைசி நாவலான நளபாகம் 1982-இல் வெளியானது. 1979-ஆம் வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக வழங்கப்பட்டது.

மலைவெளியில் விழுகின்ற நீர்த்துளிகள்

எங்கோ ஓடும் கங்காருவோ, கத்தும் குக்கா புர்ராவோ எத்தனை அதிசயமோ, அத்தனை அதிசயம்தான் தினம் பார்க்கும் காக்கையும். பார்க்கப் பார்க்க எத்தனையோ புதிய விஷயங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. ஜானகிராமனின் இயற்கை பற்றிய வர்ணனைகளும் அப்படித்தான். அவர் தினம் பார்க்கும் மரங்கள், செடிகள், பறவைகள், கிராமத்து அழகு – அத்தனையும். நமக்கு சாதாரணமாகத் தோன்றும் விஷயங்கள். ஆனால் அவை ஜானகிராமன் கண்களில் வியப்பும், ஆனந்தமுமாகக் கொட்டிக்கொண்டிருக்கின்றன.

அப்பா – நல்ல அப்பா

அடக்கமும் சாந்தமும் அவருக்கு எப்படி வந்தன? வேறொருவர் பிரக்ஞையில் தன்னை இருத்தி உலகத்தைக் காணல் அவருக்கு இயல்பாக வந்த கலை. அதனால்தான் கதைகளில் பாத்திரங்களை உயிரோடு நடமாடுவது போல் சித்தரிக்க முடிந்தது. மேலும் அவர் உள் மனதில் ஒரு கேள்வி ஆறு ஓடிக் கொண்டிருந்தது போலிருக்கிறது. அது அவருடைய நம்பிக்கைகளை அவ்வப்போது உடைத்து புது வெள்ளத்தை கொண்டு நிறைத்ததோ என்னவோ. தொடர்ந்து கேள்விகள், தொடந்து தீர்மானங்கள்- இவை நடுவில் அவருடைய வாழ்க்கை ஓடியது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

பாதல் சர்க்கார் – மண்ணில் உறைந்தும், மனிதனில் கிளைத்தும்

பாதல் சர்க்காருக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைத்த அங்கீகாரம் வஙகாளத்தில் கிடைக்கவில்லை. அவர் கட்சி அரசியல் செய்தவரல்ல. இடதுசாரியாகவும், சமூகப் பிரக்ஞையுடைவராகவும் அவர் நாடகங்களில் அவர் தன்னை அவ்வாறே வெளிபடுத்திக் கொண்டாலும், பிரசார நாடகங்களுக்கு வெகு தொலைவில் அவர் நின்றார்.