மெய்கண்டவன்

கல்யாணசுந்தரத்திற்கும் நித்யாவிற்கும் நடக்கவிருக்கும் நாளைய திருமணத்திற்கு இன்றிரவு இப்பொழுது சென்னை அடையாற்றில் திருமணவரவேற்பு நடந்துகொண்டிருந்தது. மேடையில் பின்னால் வடிவமைக்கப்பட்டிருக்கும் பெருந்தெய்வப் படத்திற்கு முன்னால் நின்றுகொண்டு இணையர் இருவரும் நண்பர்கள் உறவினர்கள் என வரிசையில் காத்திருந்து வருவோரிடம் கைக்குலுக்கி, வணங்கி, பரிசு வாங்கி, புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

“என்ன சுந்தர், அதெல்லாம் உன்னோட பிரண்ட்ஸா,” வரிசையில் மூன்று பேரை நித்யா காட்டினாள்.

“ஆமா, கலீக்ஸ், ஃபிரண்ட்ஸ். என்கூட பாங்குல வேலை செய்யறவங்க.“ மனோஜ் கையில் ராப் செய்யப்பட்ட சிறிய என்வலப் ஒன்று இருந்தது. எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றிருக்கும் கிஃப்ட் கார்டாக இருக்கும்.

“ஸ்பெக்ஸ்ல இருக்கறது மனோஜ். பக்கத்துல இனியா. அப்பொறம் ராஜராஜன்.” நித்யாவின் நண்பர்கள் கூட்டம் ஏற்கனவே சந்தித்துவிட்டு கிளம்பிருந்தார்கள். மொத்தம் பதினொன்று பனிரெண்டு பேர் இருக்கும் என்று நினைத்தான்.

அவர்கள் மேடைக்கு வந்து சேர்ந்தவுடன், குரல் சேர்த்து “வாழ்த்துக்கள் கமாண்டர்,” என்று வாய்முழுக்க சிரித்தார்கள்.

அவன் அப்பா ஒருமுறை கூறியிருந்தார், “ஒரு மனுஷன் தன்னையே எல்லாருக்கும் விளக்கிட்டு இருக்கக்கூடாது. அதான் அவன பொறுப்புள்ளவனா ஆக்கும்.”

சுந்தரம் எந்த எதிர்வினையும் உதிர்க்காமல் தாங்க்ஸ் என்று மட்டும் சொன்னான். “இது நித்யா.”

“ஹலோ” என்று, இனியா, “உங்க வெடிங் இன்விட்டேஷன் டிசைன் ரொம்ப அழகா இருந்ததுங்க, நீங்க வடிவமைச்சது தானே,” நித்யாவிடம் கூறினாள்.

மனோஜ், சுந்தரத்தைப் பார்த்து, “எங்க நீதான் செஞ்சதோண்ணு நான் ஆச்சர்யப்பட்டேன்” என்றான்.

ராஜராஜனும் கூட சேர்ந்து, “கரெக்ட், சுந்தர் ரொம்ப ஒழுங்கு தான். தியேட்டருக்கு கூட ஷர்ட் போட்டுட்டு டக்கின் பண்ணிட்டு வருவான். ஆனா, இத மாதிரி இழையொடற டிசைன் பண்ணமாட்டான்னு எனக்கும் பட்டுச்சு,” சிரித்தான்.

நித்யா, “இல்ல, நாங்க ரெண்டுபேரும் சேந்து டிசைட் செஞ்சது தான்,” என்று மட்டும் புன்னகைத்தாள்.

“சரி சரி, போதும்…” நண்பர்களைப் பார்த்து, ”எல்லாரும் முன்னாடி பாருங்க” என்று சுந்தரம் சொன்னான்.

போட்டோ எடுத்துக்கொண்டார்கள். மேடையின் ஓரத்திலும் ஒருவர் நின்றுகொண்டு கேண்டிட் ஷாட்ஸ் என்று வருபவர்கள் இயல்பாக மணமக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே படமெடுத்துக்கொண்டிருந்தார்.

ராஜராஜன் தன் திறன்பேசியை எடுத்து, கையை உயர்த்தி, “செல்பி” என்று சொல்லும்போது, இனியா, “கொஞ்சம் சகஜமா போஸ் கொடு சுந்தர்” என்றாள்.

மூவரும் வாழ்த்து தெரிவித்துவிட்டு விலகினார்கள்.

வரவேற்பு முடிந்து இரவுணவு சாப்பிட்டு அறைக்கு வருவதற்கு பதினொன்றரை ஆகிவிட்டது, கல்யாண சுந்தரத்துக்கு. கதவை உட்புறம் தாழிட்டுவிட்டு படுக்கையில் உட்கார்ந்து இரண்டு நிமிடம் உள்ளங்கையை முகத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து கண்ணாடி முன்னே நின்றுகொண்டு டை, பிளேசர், என ஒவ்வொன்றாக அவிழ்த்து, அருகில் இருந்த இருக்கையில் மடித்து வைத்தான். ஏற்கனவே சரியான வகிடில் படிந்திருந்த முடியை, சீப்பை எடுத்து திரும்பவும் சரிசெய்துகொண்டவுடன் சற்று அமைதியானது போல் எண்ணினான்.

தனக்கிருக்கும் அடர்ந்த வேலைக்கு மத்தியிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரம் நான்கு நாட்கள் ஜிம் செல்வதால் ஏற்பட்டுள்ள தன் உடலின் கட்டுமானத்தைப் பார்த்தான். கையில் பைசப்ஸ் மேடு முறுக்காமலேயே தெரிந்தது. வளைத்து, டிரைசெப்ஸ் உருவாவதைக் கண்டான் – அவன் கட்டியெழுப்பிய தன் வாழ்வைப் போலவே, கடினமான கட்டுப்படுத்திய கோடு. நீக்கமுடியாத கேடயம் அணிந்திருப்பதுபோல் மேலும் மேலும் தோன்றும் வாழ்வு.

மணமகன் அறையில் கண்ணில் அடிக்கும் டியூப்லைட் இல்லாமல், மென்மஞ்சளில் சிறுசிறு விளக்குகள் விட்டத்தில் சீரான இடைவெளியில் அமைக்கப்பெற்று எரிந்துகொண்டிருந்தன. திறன்பேசியின் மோடை சைலன்ட்டிலிருந்து அகற்றி, மேசையில் வைத்துவிட்டு, டிஷர்ட்டுக்கும் டிராக்சுக்கும் மாறி, முகம் கழுவப்போனான்.

கதவு தட்டுவது கேட்டது.

“சுந்தரோம்.” ஆறுமுகம் சித்தப்பாவின் குரல்.

போய் கதவைத் திறந்தவுடன், ”எல்லாம் சரியா இருக்கா, ஒமட்டிட்டு இருந்துச்சோ? மேலுக்கு ஒன்னுமில்லல்ல” என்றார். நெற்றியில் நீண்ட துண்ணூறு இட்டிருந்தார். பெரும்பாலும் முன் வழுக்கை.

டிஷர்ட்டின் மேல் பட்டனைப் போட்டுக்கொண்டே, “அதுலாம் ஒன்னுமில்ல சித்தப்பா. கொஞ்சம் டயர்ட்,” என்று சிறிது சிரிப்பை வரவழைத்துக்கொண்டு சொன்னான்.

ஆறுமுகம் அறையுள்ளே நுழைந்து, இருக்கையில் துணிமடித்துவைத்திருப்பதைக் கண்டு, நின்றுகொண்டே,“கடுகடுன்னு இருக்க… ஏதாவது மாத்துர வாங்கனும்னா சொல்லு,” என்றார்.

“இல்ல, ஐம் ஆல்ரைட். உங்களுக்கு எதுக்கு சிரமம்.”

“நான் வேணுமின்னா இங்க உறங்கிடட்டுமா, உன்ன உசுப்புறதுக்கு சரியா இருக்கும். காலையில எழுந்திருக்கனுமே.”

“நோ பிராப்ளம் சித்தப்பா. நானே எழுந்துருச்சுவேன். நீங்க உங்க ரூம்லயே உறங்கிடுங்க.”

“பரம்பர பரம்பரையா நாம ஊர்லதான் திருப்பூட்டு நடக்கும்… இப்ப எல்லாம் மாறியாச்சு,” சோர்வாக பெருமூச்சு விட்டார்.

“இப்பதான் நம்ம சுத்தத்துல எல்லாரும் சென்னை பாங்களூர்னு இங்கதான இருக்கோம். இங்க ஒருவாட்டி ரிஸப்ஷன் முடிச்சுட்டு, அங்கபோய் ஒருவாட்டி கல்யாணம். எதுக்கு தேவையில்லாம எல்லாரையும் அலையவிடனும். ”

சுந்தரம் எப்போதும் எது மற்றவர்களுக்கு சௌகரியமோ அதைத்தான் செயல்படுத்துவான் என்று ஆறுமுகத்துக்கு தெரியும்.

“நீ சொல்றது சரிதான், சுந்தரொம்,” அலுத்தமாதிரி சொன்னார்.

“இங்க முடிஞ்சதும் ஊர்க்கோயிலுக்குத்தான் போகிறோமே” என்றான். ஆறுமுகமும் தலையாட்டிவிட்டு கிளம்பிச் சென்றார்.

அரைநொடியில் வேகமாக தட்டும் உடுக்கை போல ஒலித்தது. ஒரு நோட்டிபிக்கேஷன். உடனே அவன் முகத்தில் பதற்றம். அந்தச் செயலியை சில வாரங்கள் பயன்படுத்தி, சில வாரங்கள் அழித்து, பின்பு இதையே சுழற்சியாக—இப்படியே பல ஆண்டுகள் தொடர்ச்சியாக. இப்போது அவன் அதை அழித்துவிட்டிருந்ததாக எண்ணியிருந்தான். ஆனால் அது அடித்ததும், குழப்பமும் ஒடுக்கமும் தடுமாற்றமும் கொண்டான்.

திறந்து பார்த்ததில், “ஹை, டு யு வான்ன மீட் நௌ?” என்றிருந்தது.

புதிய ப்ரொஃபைல் ஒன்றிலிருந்து வந்திருந்தது. தாங்க முடியாமல், “இல்லை, என்னால் இப்போது முடியாது” என்று அனுப்பினான்.

“என்னுடன் வந்தால் உன்னையே மறக்கலாம்,” என இளிக்கும் சிரிப்பானுடன் பதில்.

எவ்வளவு தூரம் மனத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தாலும் ஒவ்வொருமுறையும் இது இழுக்கிறது என்று நினைத்தான். இதற்காகவே ஒவ்வொரு வாரமும் திருவொற்றியூர் கோயிலுக்குப் போகிறான். மாலை சென்றால் மண்டபத்தில் ஒருமணிநேரமாவது உட்கார்ந்திருப்பான், யாரிடமும் பேசாமல். ஒவ்வொரு நாளும் ஒரு செயலியில் கற்றுக்கொண்ட தியானத்தையும் மூச்சுப்பயிற்சியையும் தவறாமல் செய்கிறான்.

எட்டாம் வகுப்பிலிருந்து மற்ற பையன்களின் தொடுகையைத் தன் மனம் வேண்டுகிறது என்று தெரிந்து ஒவ்வொரு நாளும் மலக்குவியலில் குளித்து எழுந்தியிருப்பதாக எண்ணிவந்திருக்கிறான்.

’சீ இதென்ன இவ்வளவு வீக்கானதா என்னோட மனம்’ என்று புழுங்கியிருக்கிறான். ’ஒருவேளை நான் இப்படி ஒல்லியா இருப்பதுனால தான் எனக்கு இப்படியெல்லாம் தோனுதோ.’ அன்றிலிருந்து வீட்டிலேயே தினமும் புஷ்அப்ஸ். நேர்உடம்பு வளையாமல் நடை.

”என்னால் இப்போது வெளியே வர முடியாது” என்று செயலியில் பதில் தட்டினான்.

“அப்படி எந்தச் சுழலும் இடத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறாய்?”

“சரி ஒன்று செய்வோம். நான் இங்கே அடையாறு லாட்டிஸ் ரோடு பக்கத்துல இன்னும் இருபது நிமிடத்தில் இருப்பேன். உன்னால் வர முடியுமா?” என்று மண்டபத்திலிருந்து தள்ளி ஒரு தெருவின் குறிப்பைக் கொடுத்தான்.

“கண்டிப்பாக. பை பை. பார்ப்போம்.”

மந்திரித்துவிட்டதுபோல் தன் புலன்களுக்கு ஆளாகி சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டது தவறோ என்று நினைத்தான். அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே, உடல் மெதுவாக எழுந்து உடை மாற்றிக்கொண்டது. டியோ இரண்டு அழுத்தும், தலையை சரியாக அமைத்துக்கொண்டும், பாக்கெட்டில் வாலட்டும் திறன்பேசியும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டும், அறையின் மின்விசிறியை அணைக்காமல் மெதுவாக கதவைத் திறந்துகொண்டு மண்டபத்தைவிட்டு வெளியேறி இருபது நிமிடத்தில் சொன்ன இடத்தில் இருந்தான். அங்கு சென்றபொழுது காலியாக இருப்பதைக் கண்டு மனம், அழுக்கேறிய உடைகள் நிரப்பியிருக்கும் கூடைபோல சுருங்கி நாற்றம் உடையதாய்ப்பட்டது.

இரண்டு நிமிடத்தில் ஒளிக்கதிர் முன்னே பாய ஒரு பைக் வருவது தெரிந்தது. ஒளியின் பிரகாசத்தில் உருவமின்றி ஒரு ஆள் இருப்பதுபோல் இருந்தது. அருகே வரவர உருவம் தெளிந்தது. பொன்னிற சட்டையும் கரும்பேன்ட்டும்.

சுந்தரம் அவன் முகத்தைப் பார்த்து, செயலியில் பார்த்த முகத்துடன் மனத்திலேயே ஒப்பிட்டு சரிபார்த்துக்கொண்டான்.

அகண்ட கண்கள். நெற்றியை மறைக்கும் முடி. இரு காதிலும் சிறிய மோதிரம் போன்ற தோடு.

சுந்தரத்தின் ஸ்டைல் கணக்கில் அதெல்லாம் சேராது. அல்லது சேரக்கூடாது என்று தன்னைப் பாதுக்காத்து வைத்திருந்தான்.

“ஐம் அருள்.”

“உண்மையான பேரே அருள்தானா. ஆப்ல யாரும் கரெக்டா பேர் கொடுக்க மாட்டாங்க.”

“ஹ்ம்ம்… அது ஒன்னுதான் நான். எப்படி இருக்கேனோ அப்படியேதான் மாத்தாம சொல்றேன். ”

சுந்தரம் அந்த வழியே உரையாடல் தொடர்வதைத் தடுக்கும்பொருட்டு, “சரி, எங்க?” என்றான்.

“இவ்ளோ அவசரமா?”

“ஆமா நான் இன்னும் மாக்சிமம் ஒரு மணிநேரத்துல திரும்ப வந்தாகனும்,” மெல்லிய அவசரத்தோடு கூறினான்.

சென்னையின் இரவு வெக்கைக்கு எதிராக, கஃபேயின் உள்ளே நுழைந்ததும் மென்மலர் போர்த்ததுபோல் இருந்தது. அருள் நேராக கவுன்ட்டருக்குச் சென்று, சுந்தரத்திடம் கேளாமலேயே இரண்டு வைட் சாக்லெட் மோக்கா என்று சொல்லி, பணம் செலுத்தி, ஐந்து என்று எழுதிய கம்பியை வாங்கிக்கொண்டு நேராக கடல் தெரிவதுபோல் உள்ள கண்ணாடிச்சுவர் அருகில் உள்ள இருக்கைக்குச் சென்றான்.

இருவரும் உட்கார்ந்தபின், அருள் “நாம எதுக்கு இங்க வந்திருக்கோம்?” என்றான்.

சுந்தர் சற்று எச்சரிக்கைகொண்டான். இதுபோல செயலியில் பலபேர் ஏமாற்றப்படுவது குறித்து செய்திகளில் வாசித்திருக்கிறான். ஆனால் திரும்பி செல்ல மனமில்லை. இதோ என் கடைசி இரவு.

அருள் எதிரில் புன்னகை மாறாமல் பதிலை எதிர்பார்த்து இருந்தான்.

“அதானே, ஏன்? உங்கிட்ட பிளேஸ் இல்லையா?” என்றான்.

“எல்லா இடமும் பிளேஸ் தானே?”

“பப்ளிக்லலாம் எனக்கு ஒத்துவராது. நான் என்ன நாயா?”

”இது நடுராத்திரி, ஒருவேளை பேயோ?”

சூடு தலைக்கு ஏறியது சுந்தரத்துக்கு. எழுந்துவிடலாமா என்று எண்ணும்போதே, அருள், “என்ன இவ்ளோ நேரமாச்சு, நம்ம ஆர்டர் இன்னும் வரலையே. நீ போய் என்னன்னு கேட்டுவிட்டு வரியா?” என்றான்.

மீறமுடியாமல், ஐந்தாம் எண்ணைக் கையில் எடுத்துக்கொண்டு சென்று, அங்கு நின்று பேசி, இரண்டு மோக்காவையும் அவன் கையிலேயே எடுத்துவந்தான்.

ஆளுக்கு ஒன்றாக வைத்து சுந்தரம் உட்காரும்பொழுது, அருள் மேசை மேலிருந்த சுந்தரத்தின் கைக்கு அருகில் தன் கையைக் கொண்டுவந்தான். விரல்பட்ட மறுகணமே சுந்தரம் கையை இழுத்துக்கொண்டான்.

கல்லூரி விடுதியில் ஒரு நாள் இரவு நண்பர்கள் மொட்டைமாடியில் மது அருந்திகொண்டிருந்தபோது, சுந்தரம் மட்டும் எப்போதும்போல் எதுவும் குடிக்கவில்லை. சும்மா பேச்சுக்காகவும், தானே உருவக்கிய நண்பர்களின் பாதுகாப்பு காரணத்திற்காகவும் அமர்ந்திருந்தான்.

“என்ன மயித்துக்குடா என் கைய பிடிச்ச?”, சுந்தரம் ஆக்ரோஷமாகி செந்திலைப் பிடித்து அவன் நெஞ்சைத் தள்ளி ஒரு அரைவிட்டான்.

மற்ற நண்பர்கள் பயந்துபோய், “டேய் என்னடா பண்ற, விடுரா அவன. ஏதோ போதையில பண்ட்டான்டா” என்று சுந்தரத்தை அறைக்கு அனுப்பினார்கள்.

ஆனால் இப்போதோ, அருள் கைப்பட்ட அந்தக் கணம் மீண்டும் வராதா எனத் தோன்றியது இப்போது. இழந்த அந்த நொடியை எண்ணி தன்னையே நினைத்து கோபம் மூண்டது.

“தொட்டா என்ன ஆகும்னு நினைக்கிற? புனிதம் கெட்டுவிடுமா?” கோவமா, வேறுவகை சிரிப்பா என்று வரையறுக்க முடியாத இப்பதிலைக்கொண்டு மறுபடியும் அருள் அவனிடம் கை நீட்டினான். அவன் கண்களில் எந்த முன்தீர்மானமும் தெரியவில்லை.

சுந்தரத்துக்கு அவன் பெற்றோரின் ஏமாற்றம் நிறைந்த முகமும் சுற்றத்தாரின் கிசுகிசுப்பும் உள்கண் திரையின் முன்னே வந்தது.

முதலில் ஏற்பட்ட கூச்சத்தையும், யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பரிதவிப்பையும், கையைப் பின்னே இழுப்பதற்கு மதயானை வெறியாடுவதுபோல மனம் செய்யும் முயற்சியையும், தானே அறுத்துக்கொண்டு பற்றினான்.

பெஸண்ட் நகர் கடற்கரை மணலை ஒட்டிய சாலையில் இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தலைக்கு மேலே வரிசையாக மின்விளக்குகள் சாலையில் அணிவகுத்து எரிந்துகொண்டிருந்தன. இடைவெளிகளின் ஊடாக அவற்றின் ஒளிக்கதிர்கள் சாலைமீது இருளையும் வெளிச்சத்தையும் மாறிமாறி அளித்துக்கொண்டிருந்தன. அதற்கும் மேலே நிலவு.

“நீ திரமிஸு சாப்ட்ருக்கியா, காஃபி கிரீம்லாம் லேயர் லேயரா?” அருள் கேட்டான்.

“இப்பத்தான் கஃபேயிலிருந்து வர்றோம். மறுபடியும் சாப்பிடுவது பற்றித்தானா”

“அப்படியா சரி, வயிற்றுக்கு முடிச்சாச்சு, இப்ப என்ன செவிக்கா. ஆல மரம் எதுவும் பக்கத்துல இருக்கா,” கிண்டலாகச் சிரித்தான்.

”நீ என்ன பண்ற?” சுந்தரம் கேட்டான்.

“நான் இப்ப உங்கூட இருக்கேன்.”

“படிக்கிறயா, வேலைல இருக்கியா?”

“நான் சினி இண்டஸ்டிரீல அஸிஸ்டண்ட் டான்சரா இருக்கேன்.”

“ஓ… இதுவரைக்கும் அங்க வேல செய்யுற ஆட்கள நான் சந்திச்சதே இல்ல.” உண்மையிலேயே ஆச்சரியத்துடன் சொன்னான்.

“நீ?”

“நான் ஒரு பாங்குல அக்கௌன்ட்ஸ் அஸிஸ்டண்ட்.”

“அடுத்தது என்ன மானஜரா, சின்ன வயசுலேயே.”

“ஹ்ம்ம் எனக்கு முப்பது ஆவ போவுது.” அலுத்துக்கொள்வதுபோல் சுந்தரம் பதிலளித்தான்.

“சிங்கிளா?”

திடீர் கேள்வியில் சுந்தரம் தத்தளித்தான். சற்று நின்றான். இவனிடம் என் கதையெல்லாம் கூறவேண்டுமா என்று யோசித்தான்.

அருள் இரண்டடிகள் முன்னே சென்று இவன் நிற்பதைக் கண்டு அவனும் நின்றான்.

“இல்ல இன்னும் இல்ல” சுந்தரம் சொன்னான்.

தயக்கத்திற்குப்பின் மேலும் சொல்ல முடிவெடுத்தான். “ஆக்ச்சுவலி நாளைக்கி எனக்கு ஒரு பொண்ணோட கல்யாணம். இன்னிக்கு நைட் தான் ரிசப்ஷன் நடந்தது,” என்று சொல்லி தரையையே பார்த்தான்.

அதைக்கேட்டு தெறித்துவிழாமல் அருள் ஒருகண மௌனத்தில் இருந்தபோது, சுந்தரம் தன் கண்களைத் தூக்க எத்தனித்தான். அதற்குள், அருள் மெதுவாகச் சொன்னான்.

”ஒரேயொரு இரவுக்காக மட்டும் உண்மைய நோக்கி வந்திருக்க, ம்ம்ம்….”

தொடர்ந்தான். “நாளையில் இருந்து அப்போ … “

சுந்தரம் முகம் உயர்த்தி அருளின் கண்களைப் பார்த்தான்; அமைதியாகவே இருந்தான்.

அருள் கூர்ந்து நோக்கிச் சொன்னான், “நீ உன்னையையே என்னைக்காவது பார்த்திருக்காயா?”

கடற்கரை காற்றின் வழியே நீர்ப்பூக்களின் மணம் உப்பச மணத்தோடு அந்த நிசப்த வெளியில் கலந்து பரவியது.

“யாரும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று பயப்படுகிறாயா?” அருள் மென்மையாக கேட்டான்.

“யாரும் இல்லை. எல்லாரும்.”

மேலும் சொன்னான். ”என்கிட்ட இருக்க இந்த அழுக்கை யாரும் பார்க்கக்கூடாது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்தால், அவர்களுக்கு அவமானம் தலைக்கு ஏறும்.”

“அதனால் வேறொரு உருவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். உனக்கு அன்பு வேண்டாம், ஆனால், எல்லோரும் உன்னை அனுமதிக்க வேண்டும் என்று நினைக்கிறாய், இல்லையா?”

சுந்தரம் தலையசைத்தான். “நான் மறைந்து போகக்கூடாது.”

அருள், தன் மூச்சுக்காற்று சுந்தரத்தின் முகத்தில் படருமாறு அருகி வந்து, ”வெளியே அனுப்பப்படாத மாணவன் போல இருக்கவேண்டும் என்று எண்ணுகிறாய்.”

சுந்தரம் எதுவும் சொல்லாமல் ஆமோதிப்பது போன்று, மேலும் இடைவெளி குறைத்து வந்தான். அருளின் வெம்மை தன்மேல் பரவுமாறே மிக நெருக்கத்தில் நடந்தான்.

அலைகள் மேலெழுந்து விழும் ஓசை மட்டும் பரப்பி, கடற்கரை தனியாக இருந்தது. மணல், பல பிறைகளை அடுக்கி வைத்தாற்போன்று இருந்தது. அருள் சுந்தரத்தைக் கைப்பிடித்துக்கொண்டு, அங்கிருந்த ஒரு படகின் முன்புறம் மணலில் அமரச்சொல்லி தானும் அருகில் அமர்ந்தான்.

சுந்தரத்துக்கு நேரமும் நாளும் தெரியவில்லை. அருளின் அருகாமையிலேயே கரைந்துவிடலாமென்று எண்ணினான். அவன் நெஞ்சின் உள்ளே எப்போதும் இருக்கும் இறுக்கம் தளர்ந்துமறைந்தது போல இருந்தது.

தளைகள் களையப்பட்டன. அருளின் மேனி நிலவொளியில் மின்னுவதைக் கண்டு, தன் விரலால் சுந்தரம் வருடினான். தண் என்று முதன்முதலில் குளிர்ந்த ஆற்றைத் தொடுவதுபோன்று இருந்தது. தன்னுடைய உடல் இறுக்கம் நெகிழ்ந்திருந்ததை அறிந்தான். ஆனாலும் உறுதியாகவே இருப்பதாகவும் நினைத்தான்.

“காலைப் பிடித்து விடேன்,” அருள், கண்களில் ஈரம் மின்ன சொன்னான்.

நித்யாவிற்கும் கல்யாணசுந்தரத்துக்கும் வீட்டில் பார்த்துதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்றாலும், முகூர்த்த நாளுக்கு ஒரு மாதம் முன்பே டேட் சென்றிருந்தார்கள் – அதுவும் நிச்சயிக்கப்பட்டதுதான்,

ரெஸ்டாரன்ட்டில் சுந்தரம் நித்யாவிற்கு கதவைத் திறந்து விட்டான். அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு, பின்பு அதற்கேற்றவாறு தனக்கு உணவு சொல்லிக்கொண்டான். முடிவாக அவளுடைய வீட்டிற்குச் சென்று அவளை விடும் பொழுது,

“சுந்தர், இந்தக் கொலுச போட்டு விடறியா?” என்று கேட்டாள்.

காலம் ஒரு நிமிடம் நின்று, அவன் தன்னைக் மீட்டுக்கொண்டு, எவ்வளவுதூரம் அவள் காலைத் தொடாமல் கொலுசை மாட்டிவிடமுடியுமோ அந்தளவு முயன்று செய்தான். அவள் புன்னகைக்கவும் அவனும் சற்று சிரிப்பை வரவழைத்துக்கொண்டான்.

கடற்கரையில், காற்றில்லா வெளியில் தட்டிவிட்டால் நில்லாமல் செல்லும் பந்தைப் போல, ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. மனத்தில் எந்த எதிர் தர்க்க கேள்வியும் எழவில்லை.

சுந்தரம் அருளின் காலை மெல்ல தொட்டான். குதிகாலில் சில கோடுகள்.

”ரொம்ப டான்ஸ் ஆடி, பித்த வெடிப்பா” என்று கேட்டான்.

சிரித்துக்கொண்டு, “ஆமா. எல்லாருக்கும் அத பார்ப்பதற்கான வாய்ப்பு அமைவதில்லை. இப்ப பார், உனக்கு அமைந்துவிட்டது.”

“சரியான மேட்மான்,” என்று சொல்லி, சுந்தரம் தன் இதழால் வெடிப்புகளை வருடினான். அதே நேரம் இரு கைகள் தன் மேல் ஊர்வதையும் உணர்ந்து, அவன் உடல் சிலிர்த்து, சிறு மின்னல் நுழைந்து ஒவ்வொரு நரம்புகளிலும் பாய்வது போன்று இருந்தது. முடிக்கற்றைகள் சாமரம் வீசுவதுபோல் பட்டுக்கொண்டிருந்தன. ஆண்டுகணக்காக தசைகளில் குமித்து வைத்திருந்த அழுத்தம் புகையாகியிருந்தது. கடல்நீரே இனிப்பாக தனக்குள் இறங்கி கசப்பை அகற்றுவதை, அவன் உடலே நாவாக கிரகித்துக்கொண்டது.

கால் உதறி திடுக்கிட்டு எழுந்து படுக்கை மீது அமர்ந்தான் சுந்தரம். மணி மூன்று பத்து என்று காட்டியது. மின்விசிறியின் சத்தம். அறை சிறியதாகப் பட்டது. கடலலைகளின் ஓசையும் விண்மீன்களின் ஒளியும் அப்பழுக்கற்று அவன் மனத்தில் நிறைந்திருப்பதை உணர்ந்தான். சுழற்சியிலிருந்து விடுபட்ட மனம், முழுவிழிப்போடு உள்ளவாறுதான் தோன்றியது.

அவன் கண்கள், மேசையில் இருந்த கல்யாண வரவேற்பிதழில் நிலைத்தன. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு எழுத்துரு அமைப்பும் அவள் வடிவமைத்தது. பிரிண்ட் செய்து அவை புதிதாக வந்தபோது, நித்யா ‘நம்முடைய பெயர்கள் முதன்முதலாக சேர்ந்து வரும் தருணம்’ என பூரிப்புடன் சொல்லிக்கொண்டதை நினைவுகூர்ந்தான். அவள் விரல்கள் பெயர்களின் மீது ஊர்ந்தன.

ஏதோ முடிவெடுத்தவன் போல், படுக்கையிலிருந்து எழுந்து, முகம் கழுவி வந்தான். கண்ணாடிமுன் நின்று, சீப்பை எடுக்காமல் தன் கையாலே தலைமுடியை சரிபடுத்திக்கொண்டான். பாசக்கயிறு அறுந்த கன்று போல் நிர்குணமான மனத்துடன், நித்யாவின் அறையை நோக்கி நடந்தான்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “மெய்கண்டவன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.