கல்பதரு

ஏசு நாதருக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன ஒற்றுமை என்று உங்களுக்குத் தெரியுமா?’’ இந்த கேள்வியுடன் தான் தச்சர் வேணுகோபாலுடனான உரையாடலைத் தொடங்கினேன். அவர் அதனை அறிந்திருப்பார் என்று நினைத்தேன். ஊரில் இருந்த ஒரு பழைய சினிமா தியேட்டரில் ஒருமுறை தற்செயலாக மிக தற்செயலாக பென்ஹர் படம் பார்க்கப் போனேன். வேறு ஒரு வேலையாக அந்த பக்கம் சென்று கொண்டிருந்தவன் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருந்த படத்தின் பேனரைக் கண்டேன். பலர் சொல்லிக் கேள்விப்பட்ட படமாயிற்றே என்று அதனைக் காணச் சென்றேன். எத்தனையோ திரைப்படங்கள் பார்க்கிறோம். அத்தனையையும் ஒரு தட்டிலும் பென்ஹர் படத்தை மறுதட்டிலும் வைத்தால் பென்ஹர் மிகுஎடை கொண்டிருக்கும் என்பதில் எனக்கு இப்போது ஓர் ஐயமும் இல்லை. அந்த படத்தின் திரை அனுபவம் என்பது அரிதானது. இஸ்ரேல் தேசத்தில் நடக்கும் கதை. படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஓர் இளம் தச்சர் வருவார். அவர் வயது 25 இருக்கலாம். அவர் தச்சுவேலை செய்து கொண்டிருப்பார். தன் உடன் பணியாளர்களுடனான உரையாடலில் மன்னிப்பே சிறந்த பண்பு என்றும் அன்பே மகத்தான குணம் என்றும் மிக மென்மையாக சொல்லிக் கொண்டிருப்பார். படம் பார்த்துக் கொண்டிருந்த போது எனக்கு அவர் ஏசுவாக இருக்கலாம் என்று தோன்றியது. அடுத்த சில நிமிடங்களில் அந்த படத்தில் ஒரு அரச ஊழியனை ராஜத்துரோக குற்றம் சாட்டி சிலுவையில் அறைய வீதியில் இழுத்து வருவார்கள். அவன் சிலுவை சுமந்து தள்ளாடி நடப்பான். அவனை சவுக்கால் அடிப்பார்கள். அவன் தண்ணீர் தண்ணீர் என்பான். கொலைக்களம் கொண்டு செல்லப்படுபவனுக்கு எவரும் நீர் தரக் கூடாது என்பது அந்த ஊரின் நியதி. இருப்பினும் இரக்கப்பட்டு ஓரிருவர் நீர் தர முனைவர். தச்சர் அந்த கைதிக்கு நீர் தருவார். அப்போது அந்த கைதியிடம் அவர் கூறுவார். ‘’நான் உனக்கு அளித்த நீரை நீ எனக்கு திருப்பித் தருவாய்’’. அவன் திகைப்பான். இன்னும் சில நிமிடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். இந்த சூழ்நிலையில் அவனால் எப்படி அவருக்கு நீர் தர முடியும் என்று யோசிப்பான். படம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அந்த தச்சர் தீர்க்கதரிசியான ஏசுதான் என்று தெரிந்து விட்டது. அத்துடன் கொலைக்களத்துக்கு கொண்டு செல்லப்படுபவன் உயிர் பிழைக்கப் போகிறான் என்பதும் அவர் சொற்களிலிருந்து தெரிந்தது. எதிர்பாராதவிதமாக அவன் கொலைக்களத்திலிருந்து மீட்கப்படுவான். பல ஆண்டுகள் பலவிதமான இன்னல்களை அனுபவித்து தன் நகருக்கு அவன் எவ்விதம் மீள்கிறான் என்பதே பென்ஹர் திரைப்படத்தின் கதை. 

வேணுகோபாலிடம் ஏசு ஒரு தச்சரின் மகனாகப் பிறந்தவர். ஞானம் பெறுவதற்கு முன் அவர் தச்சுத் தொழில் செய்து கொண்டிருந்தார் என்று கூறினேன். அவருக்கு நான் கூறிய விஷயம் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாள் இந்த விஷயம் தன் கவனத்துக்கு வரவில்லையே என்னும் வியப்பும் அவருக்கு ஏற்பட்டது. 

’’உங்களுடைய பெயருக்கும் மரவேலைக்கும் தொடர்பு இருக்கு. உங்களுக்குத் தெரியுமா?’’ என்றேன். 

‘’எனக்கு பெருமாளோட பேர் வச்சிருக்காங்க’’

‘’என்ன பெருமாள்?’’

‘’கிருஷ்ணர்’’

‘’கோபால்ன்னு சொன்னாலே அது கிருஷ்ணர் தானே. அப்ப வேணுகோபால்னா என்ன?’’

வேணுகோபால் யோசித்தார். 

‘’வேணு-ன்னா மூங்கில். கையில் மூங்கில் குழல் வச்சிருக்கற கிருஷ்ணன் வேணுகோபாலன்’’

வேணுவுக்கு ஒரே ஆச்சர்யம். 

பெரிய பதவிகளுக்கான இண்டர்வியூ நடக்கும் போது பங்கு பெறுபவர் பெயர் குறித்து அவர் ஊர் குறித்து கேள்வி கேட்பார்கள் என்று வாசித்திருக்கிறேன். தனது பெயர் குறித்தும் ஊர் குறித்தும் பேச்சு எழும் போது ஒரு சகஜமான தன்மை ஏற்பட அவ்வாறு செய்வார்களாம். 

பங்குனி வெய்யில் பல்லை இளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் எனது நேரம் நான் மரவாடிக்கு மரம் கொண்டு சென்ற நாளில் பேய்மழை பெய்தது. காலை ஆறு மணிக்கு மரம் தூக்கும் பணியாளர்கள் இரண்டு பேர் வந்து விட்டார்கள். அவர்களுக்கு பதினைந்து நிமிடம் முன்பே நான் மனைக்குச் சென்று கதவைத் திறந்து வைத்து காத்திருந்தேன். பணியாளர்கள் வந்து சில நிமிடங்களில் பேய்மழை கொட்டியது. 

அவர்களிடம் கேட்டேன். ‘’இன்னைக்கு வேலை உண்டா?’’

‘’இன்னும் ரெண்டு பேர் வரணும். மழையா இருக்கு. மரம் தூக்க முடியாது. வழுக்கும்.’’

’’அப்ப இன்னைக்கு வேலை இல்லை. அப்படித்தானே?’’

அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. 

‘’நான் கதவைப் பூட்டிட்டு போயிடறன்’’ கதவைப் பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். 

அரைமணி நேரம் கழித்து மரவாடிக்காரர் அலைபேசியில் தொடர்பு கொண்டார். ‘’சார் ! ஏன் இன்னைக்கு வேலை வேணாம்னு சொல்லிட்டீங்களாம்?’’

‘’நான் சொன்னனா?’’

‘’ஆளுங்க நீங்க சொன்னதா சொன்னாங்க’’

‘’நான் காலைல அஞ்சே முக்கால்லேந்து வெயிட் பண்ணிட்டு இருந்தன்’’

’’இப்ப போங்க சார். மரம் ஏத்துவாங்க’’

‘’மழையா இருக்கு. மரம் தூக்க முடியாது. வழுக்கும்னு சொன்னாங்க’’

‘’அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க. நீங்க போங்க சார். நான் வண்டி வர சொல்லிடறன்’’. நான் சென்று கதவைத் திறந்து விட்டு வந்தேன். மரம் வெட்டி மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. பனியிலும் மழையிலும் வெயிலிலும் கிடந்து விட்டன. மனையை சுத்தப்படுத்தி கட்டிடப் பணி துவங்க இருக்கிறான் நண்பன். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது என் வாழ்க்கை. என் பணி மட்டும் செய்திருந்தால் கிடைத்திருக்கக் கூடிய அனுபவங்களைப் போல நான்கு மடங்கு அனுபவங்கள் இப்போது கிடைத்திருக்கின்றன. ஒருவர் நம்மிடம் உதவி என்று கேட்கும் போது எப்படி உதவாமல் இருப்பது? நண்பன் மனை வாங்கிய பின் இங்கே வரவில்லை. அங்கேயிருந்த மரங்களை வெட்ட நான் தான் 6 முறை வனத்துறை அலுவலகத்துக்குச் சென்றேன். 4 முறை கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்தேன். கிராம அதிகாரி இருமுறையும் வனத்துறை பணியாளர் இருமுறையும் மனையைப் பார்வையிட வந்தனர். அப்போதெல்லாம் மனைக்கு வந்து அதன் கதவைத் திறந்து விட்டு அனுமதி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது நான்தான். அனுப்புநர் பெறுநர் போட்டு விண்ணப்பம் எழுதி நண்பனுக்கு தபாலில் அனுப்பி கையெழுத்திடச் செய்து மீண்டும் தபாலில் பெற்று அலுவலகங்களில் கொடுத்து விண்ணப்பித்தது நான் தான். இத்தனை பணி நடந்தது என்று கூட நண்பனுக்குத் தெரிந்திருக்காது. அதனால் பரவாயில்லை. இந்த அலுவலக இடர்கள் எவருக்கும் தெரிந்திருப்பதை விட தெரியாமல் இருப்பதே நல்லது. மனையில் மூன்று பெரிய வேப்ப மரங்களும் நான்கு பெரிய தேக்கு மரங்களும் இருந்தன. அதற்குத்தான் இத்தனை பாடு. நண்பன் மரத்தை வெட்டு என்று கூறவில்லை. வேலை துவங்க வேண்டும் என்று தான் சொன்னான். வேலை கோடையில் தொடங்க வேண்டும் என்றால் இப்போது மரத்தை வெட்டினால் தான் சரியாக இருக்கும். 

இரண்டு டாடா ஏஸ் வாகனத்தில் வெட்டப்பட்ட மரத்துண்டுகள் மர அறுவைக்காக வந்து சேர்ந்தன. காலை 6 மணிக்குத் தொடங்கிய மழை மறுநாள் மதியம் 3 மணி வரை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. வேம்பும் தேக்கும் சேர்த்து 200 கன அடி மரம் இருந்தது. ஏதேனும் ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்றால் குறைந்தது 100 சதுர அடியாவது மேற்கூரையிடப்பட்ட இடம் வேண்டும். அறுக்கப்பட்ட மரத்துண்டுகள் காற்று புகும் வண்ணம் முறையாக அடுக்கப்பட வேண்டும். 

‘’சார் ! இன்னைக்கு சாயந்திரமே ரெண்டு பெரிய உருட்டு வருது.’’

‘’இந்த மழைல என்னைத் தவிர வேறு யாரு என்னைப் போலவே மரம் அறுக்க வருவாங்க?’’

‘’இவங்க முன்னாடியே சொன்னவங்க சார். இன்னைக்கு சாயந்திரம் இல்லன்னாலும் நாளைக்குக் காலைல வந்திடுவாங்க’’

அவர் வேலை நிறைவாகி விட்டது. இடம் காலி செய்யப்பட வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஊரிலிருந்து 10 கி.மீ தள்ளியிருக்கும் நண்பரின் கடை ஒன்றில் மரத்துண்டுகளைக் கொண்டு போய் தற்காலிகமாக வைப்பது என்று முடிவு செய்தேன். மரம் அறுத்த அன்றே அங்கே அவற்றைக் கொண்டு சேர்த்து விட்டேன். 

மறுநாள் காலை விடிந்தது. எனக்குப் பழக்கமான தச்சருக்கு ஃபோன் செய்து மரத்துண்டுகளை முறையாக அடுக்கி வைக்க வேண்டும் என்று சொன்னேன். ‘’சார் ! ரெண்டு நாள் மழை. வேலை எதுவும் இல்லை. இன்னைக்கு மழை விட்டிருக்கு. பெண்டிங் வேலை எல்லாம் இன்னைக்குத்தான் பாக்கணும். அடுத்த வாரம் வந்து அடுக்கி வைக்கறன் சார்’’

‘’அடுத்த வாரமா?’’ அதற்குள் எந்த ராஜா எந்த பட்டணமோ என்ற விசனத்துடன் அதிர்ச்சியாகக் கேட்டேன். 

‘’ஆமாம் சார். அடுத்த வாரம்’’ தச்சர் அமைதியாக பதில் சொன்னார். 

‘’உங்களுக்குத் தெரிந்த வேற கார்பெண்டர் ரெஃபர் பண்ண முடியுமா?’’

‘’யாரும் வரமாட்டாங்க சார். எல்லாரும் ரெண்டு நாள் மழைக்குப் பின்னாடி வேலைக்குப் போவாங்க’’

‘’என்னங்க இது. முயற்சியே பண்ணாம முடியாதுன்னு பதில் சொல்றீங்க. கொஞ்சம் முயற்சி பண்ணி பாருங்க.’’

எதிர்முனையில் அவர் அமைதியாக இருந்தது அவர் எந்த முயற்சியும் செய்யப் போவதில்லை என்பதை எடுத்துக் காட்டியது. 

அதன் பின் நான்கு மணி நேரம் உதவி செய்ய வாய்ய்பு இருப்பவர்களிடம் ஃபோன் செய்து விசாரித்தேன். எல்லா பதில்களும் எதிர்மறையாகவே இருந்தன. ஒருவர் மட்டும் ‘’சார் ! நான் ஒரு நம்பர் தரன். நீங்களே ஃபோன் பண்ணி பேசிக்கங்க’’ என்றார். நம்பரை எஸ்.எம்.எஸ் செய்யுங்கள் என்றேன். 

‘’வணக்கம். என்னோட பேர் ஸ்ரீநிவாஸ். வெங்கட்ராமன் உங்க நம்பர் கொடுத்தாரு. ஃப்ரியா இருக்கீங்களா. அஞ்சு நிமிஷம் பேசணும்’’

’’சொல்லுங்க சார்’’

நான் ஆதியோடு அந்தம் கதையைக் கூறினேன். ‘’ இப்ப வேலை கூட ரெண்டாம் பட்சம் தான். இன்னொருத்தர் பொருள் நம்ம பொறுப்பில இருக்கு. அதை முறையா அடுக்கி வைக்கணும். கன்னா பின்னான்னு கிடந்தா என் மனசு நிம்மதியா இருக்காது.’’

‘’ரெண்டு டாடா ஏஸ் அளவு மெட்டீரியல்னு சொல்றீங்க. கூட ரெண்டு பேராவது இருந்தாத்தான் வேலை செய்ய முடியும். நான் ஆளுங்க கிடைக்கறாங்களான்னு பார்க்கறன். எனக்கும் இன்னைக்கு வேலை இருக்கு’’

‘’இங்க ஆளுங்க கிடைக்கறாங்களான்னு பாருங்க. இல்லன்னா நாம அங்கயே ரெண்டு ஆள் அரேஞ்ச் செஞ்சுக்கலாம். நான் உங்களை என்னோட பைக்கில பிக் அப் செஞ்சுக்கறன். வேலை முடிஞ்சதும் திரும்ப டிராப் பண்ணிடறன்’’

’’நீங்க 11 மணிக்கு நம்ம பட்டறைக்கு வந்துடுங்க சார்’’. பட்டறையின் அமைவிடம் சொன்னார். 

அதுவரை இன்னொரு வேலை இருந்தது. இன்னொருத்தரின் வேலை. செய்து முடித்தேன். சொன்ன நேரத்துக்கு பத்து நிமிடம் முன்பாகவே சென்று சேர்ந்தேன். இருவரும் பைக்கில் புறப்பட்டோம். மரத்துண்டுகள் கிடக்கும் இடம் வரை செல்லுகையில் எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடலே தீர்க்கதரிசிகள் குறித்து. 

‘’உலக வரலாறுல யோசிச்சுப் பாத்தா மண்ணை வச்சு வீடு கட்டறதுக்கு முன்னாடியே முறிஞ்சு விழுந்த கிளைகளை வச்சு கீத்தை வச்சு மனுஷங்க தங்க வாழிடத்தை உருவாக்க முயற்சி பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கு. அப்படின்னா கார்பெண்டரி உலகத்தோட தொன்மையான தொழில்கள்ள ஒன்னு.’’ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். 

‘’அப்படியா சொல்றீங்க?’’ என்று வேணுகோபால் யோசித்துப் பார்த்தார். 

‘’குகைகள்ல வாழ்ந்த மனுஷங்க நிலத்துக்கு வந்து வாழ முயற்சி பண்ண காலத்துல இருந்து கார்பெண்டரி உருவாகியிருக்கு. அப்படினா விவசாயத்துக்கெல்லாம் முன்னாடியே உருவான தொழில் இது’’

தச்சுத் தொழில் மேல் பெருமதிப்பு வைத்திருக்கும் ஒருவனைச் சந்தித்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சி வேணுகோபாலுக்கு உண்டானது. அவர் மனம் நெகிழ்ந்து விட்டார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். 

‘’நீங்க மரங்களோட மரத்துண்டுகளோட வாழ்க்கை முழுக்க இருக்கீங்க. மரங்களோட ரொம்ப உணர்வுபூர்வமா நீங்க உணர்ந்த சந்தர்ப்பங்கள் உண்டா?’’ 

சில வினாடிகளுக்குப் பின் அவர் பதில் சொன்னார். ‘’எல்லா மரமும் உயிர் தான். நாம அந்த உயிரைக் கொன்னு பொருள் செய்யறமேன்னு அப்பப்ப மனசு வருத்தப்படும் சார்’’ 

அவர் கூறிய உணர்வுபூர்வமான பதில் என்னை நெகிழச் செய்தது. 

‘’உங்க ஃபீலை நீங்க சொல்லியிருக்கீங்க. அது ரொம்ப ஆழமான ஃபீலிங். ஆனா அதுக்கு இன்னொரு பக்கம் இருக்கு. அது வழியா நீங்க பாருங்க. அதாவது, மரங்கள் நம்ம அம்மாக்கள் மாதிரி. அம்மாக்களோட இயல்பு கருணை. மரங்களும் எல்லார் மேலயும் கருணையோட இருக்கும். தன்னை வெட்ட வரவங்களுக்கும் நிழல் கொடுப்பது மரத்தோட இயல்பு. மரங்கள் மனுஷங்களை தங்களோட குழந்தைகளாகத்தான் நினைக்கும். தன்னோட குழந்தைகள் தன்னை நாற்காலியா கட்டிலா முக்காலியா சோஃபாவா பயன்படுத்தினாலும் பயன்படுத்தறவங்க நல்லா இருக்கணும்னு தான் மரங்கள் நினைக்கும். அதனால இப்பவும் நம்ம நாட்டுல பல பகுதிகள்ல மரங்களை வெட்டறதுக்கு முன்னாடி அந்த மரங்கள்ட்ட  இன்ன காரணத்துக்காக வெட்டறோம். எங்களை மன்னிச்சு அருளணும்னு அனுமதி கேட்டு வெட்டற பழக்கம் இருக்கு. காசியில கங்கைக் கரையில முன்னோர்களுக்கு பிண்டம் கொடுக்கும் போது வாழ்க்கைல நான் வெட்ட நேர்ந்த மரங்களுக்காகவும் பிண்டம் கொடுக்கறன்னு சொல்லி பிண்டம் கொடுப்பாங்க. முன்னோருக்கு செய்யற சடங்கோட முக்கியமான பகுதி அது.’’

வேணுகோபால் சொன்னார் : ‘’வானத்துல தேவலோகத்துல ஒரு மரம் இருக்கு. அது கல்பதரு. நாம கேக்கறதை அது கொடுக்கற இயல்பு உள்ளது’’

நான் மேலும் சில விஷயங்களைச் சொன்னேன்.‘’விநாயகர் ஊர் முழுக்க மரத்தடியில இருக்கார். முருகன் கையில் மரத்தண்டம் இருக்கு. கிருஷ்ணன் மரத்தடில நின்னு குழல் வாசிக்கறவர். வால்மீகிக்கு ராம நாமம் கிடைச்சது மரா மரப்பொந்துல. அரசும் வேம்பும் சேந்து இருந்தா அத சிவ பார்வதியா நம்ம நாட்டுல கும்பிடுறாங்க’’

மரங்கள் தொடர்பாக பல விஷயங்களைப் பேசிக் கொண்டே சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடைந்தோம். நான் சென்ற போது நண்பகல். எதிர்பார்த்த விதமாக உதவிக்கு ஆட்கள் அமையவில்லை. அவர் அடுக்கத் தொடங்கினார். என்னால் முடிந்த உதவிகளை நான் செய்தேன். தேக்கு தனியாகவும் வேம்பு தனியாகவும் பிரித்து 7 அடி கட்டைகளை அடியிலும் அதன் மேல் 6 அடி அதன் மேல் இன்னும் குறைவான உயரம் கொண்ட கட்டைகளையும் முறையாக அவர் அடுக்கி வைத்த போது நேரம் 4 மணி ஆகியிருந்தது. மிகச் சரியாக மிக நேர்த்தியாக தான் இருக்கும் இடத்தில் அவை பொருந்திக் கொண்டன. காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது அதாவது உலகத்தை விடப் பெரியது என்கிறார் திருவள்ளுவர். கேட்டதைக் கொடுப்பது கல்பதரு ; அன்று நான் கேட்டது கிடைத்தது ; நினைத்தது நடந்தது. 


Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.