இந்த முறை, மொபைல் அலார்ம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி பின்னர் உச்ச ஸ்தாயிற்கு மாறிய பின்னரே விழிப்புணர்வு வந்தது.
இரண்டு விஷயங்கள் சுரீரென உறைத்தன. ஒன்று, இன்று திங்கள். இங்கிலாந்தில் முதல் வேலை நாள். காலை எட்டு மணிக்கெல்லாம் வாடிக்கையாளரின் லண்டன் தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும் – 8:30 மணிக்கு முதல் கூட்டம்.
இரண்டாவது நேற்றிரவு நடந்த…க்வில்ட் எனப்படும் கனத்த போர்வையோடு அதையும் சேர்த்து உதறிவிட்டு கிளம்பினார்.
திங்கள் காலை இரயிலில் அத்தனை கூட்டமில்லை. லண்டன் லிவர்பூல் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பதினைந்து நிமிட தொலைவில் மானுமெண்ட் அருகில் இருக்கும் வாடிக்கையாளர் தலைமையலுவலகத்திற்கு கிட்டதட்ட ஓடினார் என்றுதான் சொல்லவேண்டும்.
சொட்ட சொட்ட அவரும் லேப்டாப்பும் நனைந்து, லண்டன் குறுகிய தெருக்களில் பச்சை விளக்கு எரிய ஆரம்பித்து பல நொடிகள் ஆன பின்னும் நிற்காது கடும் வேகத்தில் வந்த ஓர் சைக்கிள்காரியுடன் மோதி, கவனமாக இஸ்திரி செய்திருந்த கோட் கை முடுக்குகளும், கால் சராயின் கால் முட்டிகளும் நன்கு சிராய்த்து…ஒரு வழியாய் 8:15க்கு உள்ளே சென்று, லிப்ட்டிலேயே மின்னஞ்சல்களைத் திறக்க முயன்றாலும் (“கேவலமான நெட்”) கூட்டத்திற்கான அறைக்குள் நுழைந்தபின்புதான் மின்னஞ்சல்கள் திறந்தன.
முதல் மின்னஞ்சலே, வாடிக்கையாளரின் காரியதரிசியிடமிருந்து: 8 மணிக்கே மீட்டிங் வைத்துக்கொள்ளலாமா என்று செல்ல மன்னிப்புடன் காலை 7:45 மணிக்கு கேட்டிருக்கிறார்.
என்றுமே ஒத்துக்கொண்ட நேரத்திற்கு வராதவர் இன்றுதான் சீக்கிரமே ஆரம்பிக்கலாமே என்று கேட்கிறார்…இதை (மட்டும்) எதிர்கால கூட்டங்களில் அனைவரின் முன், நினைவும் படுத்துவார்.
அந்த வாரம் முழுவதுமே ஒரு மாதிரி தகராறாகவே இருந்தது. அவர் ஏற காத்திருக்கும் இரயிலுக்கு முந்தின இரயில் வரை சரியான நேரத்திற்கு வந்தன,சென்றன. அலுவலகத்தின் உள்ளே செல்லும் வரை மழை அடித்துப்பெய்தது. சரியாக அவர் வெளியே வரும்வரை காத்திருந்தது.
ஒரு சில இணைய கூட்டங்களில் இவரது ஹெட்செட் வேலை செய்யவில்லை; சுற்றி இருந்தவர்கள் சிரித்து சுட்டிக்காட்டும் வரை அவருக்கு அது உறைக்கவில்லை.
எந்த வெளிநாட்டு பயணத்திலும் மொபைலை சைலண்ட் மோடில்தான் வைத்திருப்பார். ஓர் மதிய உணவு வேளையில் வெளியே சென்றபோது மொபைலை கையோடு எடுத்துச் செல்ல மறந்து விட்டார்.
பின்னர், திரும்ப தனது இருக்கைக்கு வரும்போதே அந்த நீண்ட தளத்திலிருப்பவர்களின் பார்வையை கடும் கனமாக உணர்ந்தார். பயந்தது போலவே 10 மிஸ்ட்கால்கள், மொபைல் சைலண்ட்டில் இல்லை.
இங்கிலிஷ்காரர்களுக்கும் மற்ற ஐரோப்பிய, அமெரிக்கர்களுக்கும் இருக்கும் முக்கிய வித்தியாசம் அமருக்கு நன்கு தெரியும். மற்றவர்கள் நேரிலும் சரி, எழுத்துகளிலும் சரி, நேரடியாக இருக்கும். என்ன சொல்ல வருகிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்பதை மறைக்க எத்தனிப்பதில்லை.
இங்கிலிஷ் வாடிக்கையாளர்கள் அப்படியல்ல, எதிலும் “மறை பொருள்” இருக்கும். பல்வேறு அர்த்தங்கள் பொதிந்த பார்வைகள், சிரிப்புகள், மின்னஞ்சல்கள்…தயாராகத்தான் வந்திருந்தார். இருந்தும் இந்த முறை, சலிப்பாக இருந்தது.
இடையில் ஒரு நாள் உள்ளூர் நாரிச் அலுவலகத்திற்கு டாக்ஸியில் போய்வந்தார். பெரிய நகரம் இல்லை; எனினும் ஏராளமான ரவுண்ட் அபவுட்களும் சிக்னல்களும், மழை ஈர தெருக்களும் நெடு நேர பயணமாக காட்டின.
இத்தனை இருந்தும், அவ்வப்போது, கூட்டங்களுக்கு இடையில், மழை மாலைகளின் கடும் இருட்டில் வீடு திரும்பும் சமயங்களில், சென்ற வார இறுதியில் யதுவிடம் பேசிய விஷயங்கள், அப்போது எடுத்த தீர்மானங்கள் நினைவிற்கு வந்து உறுத்திக்கொண்டுதான் இருந்தன.
கடந்த ஞாயிறு அதிகாலையிலேயெ மோகனும் அனுவும் கிரிஸ் சென்றுவிட்டார்கள்.
அந்த வார நாட்களில் எப்படியோ அவனை நேருக்கு நேராக சந்திப்பதை தவிர்க்க முடிந்தது.
காலையில் அவருக்கான டாக்ஸி வீட்டுவாசலில் வந்து நிற்கும்வரை அவனது அறையிலிருந்து விழித்துக்கொண்டதற்கான சப்தங்களே வராது. எப்போது கல்லூரிக்கு போவானோ, தெரியாது. இரவுகளில் களைத்து அவருக்கான சாவியைக் கொண்டு உள்ளே வந்து, மிக கவனமாக வீட்டு செக்யூரிடி அலார்மை அணைத்துவிட்டு, கையோடு வாங்கிகொண்டு வந்திருக்கும் சப்வே சாண்ட்விச்சையும் வாழைப்பழத்தையும் உண்டுவிட்டு ப்ரஷ் செய்யும் போது கீழே கதவை திறக்கும் சப்தம் கேட்கும்.
முடிந்தவரை வேகமாக அறை விளக்கை அணைத்துவிடுவார்.
அமருக்கு மனம் குழப்ப நிலையிலிருக்கும் போது பெட்டிகளில், வாஷிங்மெஷினிலிருந்து இப்படி எங்கிருந்தும் துணிகளை எடுத்து கவனமாக மடிக்க ஆரம்பிப்பார். அலுவலகத்திற்கான சட்டைகள், டிஷர்ட்டுகள், ஏன் உள்ளாடைகளையும் அழகாக மடிப்பதற்கான ரீல்களை பார்த்திருக்கிறார். அதன்படி உடைகளை மடித்து வைக்க, வைக்க மனம் ஒரு சீராக துலங்குவதை உணர முடியும். உள்ளாடைகளின், கால்சராய்களின் ஓரங்களை நீவிக்கொடுத்துக்கொண்டே இருக்கையில் அடுத்தடுத்த திட்டங்களும் ஓர் ஒழுங்காய் மனதில் துலங்கிக்கொண்டே வரும்.
ஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் அவரால் எதையும் செயல்படுத்த முடியவில்லை.
முதலில் எங்கு ஆரம்பிப்பது என்று ஒரு குழப்பம் – சர்ச்சிலிடமிருந்து என்று ஓரிரு நாட்கள் தேட ஆரம்பித்தார். ஏகப்பட்ட இணையதளங்களின் சுட்டிகள் வந்து விழுந்தன.
இங்கிருந்த ஐஎஸ்பி என்பதால்தான் இவ்வளவோ என்று ஐயம் கொண்டார். இரவு, லேப்டாப்பிலேயே தூங்கிவிழுந்துவிட்டார்.
பின்னர், காந்தியின் பக்கம் மனதை திருப்பின பின்புதான் அவருக்கு உறைத்தது. காந்தியைப் பற்றி அவருக்கு எதுவும் பெரிதாக நினைவில்லை. பள்ளிகளில் படித்ததோடு சரி.
இணைய சுட்டிகளில் அவரை கடுமையாக விதந்தோதியும், விமரிசித்தும் பக்கம் பக்கமாய் இருந்தன.
சில தளங்களிலோ இந்த இரண்டில் எது என்பதே விளங்கவில்லை.
ஒரு சில தளங்களில் காந்தியைப் பற்றி கிறிஸ்துவ பள்ளிகளில் மோசமானவராக சித்தரிப்பார்கள் என்று இருந்தன.
ஆனால், அமருக்கு மெல்லிய நினைவிருந்தது. அவர் படித்த செயிண்ட் மேரிஸ் பள்ளியின் திடலில் பாபா ஆம்தே நடைபயண குழுவினருடன் நடந்த மாலை பிரார்த்தனை கூட்டங்கள்.
கடைசியாக எப்போது அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் தொலைகாட்சியில் திரையிட்டார்கள் என்று நினைவு கூற முயன்றார். முடியவில்லை.
திரைப்படம், அமேசான் பிரைமில் கிடைத்தது. கட்டணம் கட்டவேண்டும் என்றவுடன் அடுத்தடுத்த க்ளிக்குகளை தவிர்த்துவிட்டார்.
இணையத்தளங்களில் தேட ஆரம்பிக்கலாம் என்பதற்குள் வியாழன் வந்துவிட்டது. அவரது To Do பட்டியலில் காந்தியும் சர்ச்சிலும் கடுமையாக பின் தங்க ஆரம்பித்தார்கள்.
சில சமயங்களில், அலுவலக ஜன்னலிலிருந்து வெறித்துக்கொண்டிருப்பார். மழை இடைவெளி தருணங்களில், லண்டன் சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் சாலையில் தேங்கியிருக்கும் குட்டி நீர் குவியல்களில் தொப்பு தொப்புனெ குதித்து விளையாடிக்கொண்டே சென்றார்கள். பெற்றோர்கள் திட்டாமல் ரஸித்தார்கள்…..
———————-
அந்த வார சனிக்கிழமையும் அமர் லண்டன் சென்றிருந்தார் – பெரிய ஷாப்பிங் பட்டியல் இல்லைதான். இருந்தும் இன்றைக்கு விட்டால் பின் முடியாது, திங்கள் மாலை அவருக்கான கலோன் விமானம் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
கைகளில் பெரும் பைகளுடன் லண்டன் லிவர்பூல் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, எதிரில் மின்னிக்கொண்டிருகும் ரயில் நேரங்களுக்கான பெரும் அறிவிப்பு பலகையை நிதானமாக பார்த்துக்கொண்டே நின்றார்.
“ஹலோ அமர் அங்கிள், நமக்கான நாரிச் ரயில் இன்னும் 20 நிமிடங்கள் கழித்துதான். இன்னும் எந்த ப்ளாட்பார்ம் என்று அறிவிக்கவில்லை” என்ற குரல் மிக அருகாமையில் கேட்டு திடுக்கிட்டு திரும்பினார்.
இரு காதுகளுக்கு கீழே யானைக்காதுகள் போன்ற ஹெட் செட்களை இறக்கிவிட்டுக்கொண்டு யது நின்றிருந்தான். ராணுவ பச்சை கால்சராய்களும், அதிக கனமற்ற ஜாக்கெட்டும், கொத்து கொத்தாக அலைந்து கொண்டிருந்த தலை மயிரும் இன்னும் சற்று தள்ளி நின்றிருந்தால் கூட அமருக்கு அவனை அடையாளம் தெரிந்திருக்காது.
அவனது மிக கடுமையாக சுருண்டிருந்த கருத்த முடிக்கொத்துகளுக்குள் மழைத்துளிகள் ஏராளமாக சிக்கியிருந்தன.
வேகமாக தலையை சிலிப்பினாலும் அனைத்தும் உதிரக்கூடிய சாத்தியம் இல்லை.
இரு பக்க கிருதாக்களும் வெவ்வேறு உயரங்களில் இருந்தன.
அத்தனை வாத்சல்ய சிரிப்பு அந்த வயதிற்கே உரியது என்று தோன்றியது.
“ஹேய் யது…நீயும் இப்போதுதான்…வீட்டிற்கா?” தடுமாறினார்.
அவன் பின்னாலேயே நடந்து அவன் சுட்டிய பயணியர் பெஞ்சில் அமர்ந்து கொண்டார்.
“ஒரு நிமிடம்” என்றவாறே ஜனத்திரளில் மறைந்து போனான். சென்னையிலிருந்து வாட்ஸப் அழைப்பு வந்ததில் அவன் எப்போது திரும்ப வந்தான் என்பதை கவனிக்கவில்லை.
“கபே நீரோவில் ஒரிஜினல் இத்தாலி காபி, உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் – பில்டர் காபி” என்றவாறே அவர் கையில் ஒரு கரும் கப்பை திணித்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டான்.
அவர் எப்போது போனிலிருந்து காதை எடுப்பார் என்று காத்திருந்தது போல், முடிந்ததும்,
“அங்கிள், மிஷன் இம்பாஸிபிள் படங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் முதன் முதல் படம். நினைவிருக்கிறதா?” என்றான்.
“முதல் படமா? ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டதே? டாம் க்ரூஸ் ரொம்ப சின்னப்பையனாக இருப்பாரே…நினைவில்லையே? என்ன விஷயம்?” என்றார்.
அதில், க்ளைமாக்ஸிற்கு முன் டாம் ஓர் மழை இரவில், ரயில் நிலையத்தின் ஒரு பொது தொலைப்பேசியில் பேசுவார் – படத்தின் மிக முக்கிய ட்விஸ்ட் அங்குதான்”
“ஓஹோ…அதற்கு என்ன இப்போது?”
“அந்த ரயில் நிலையம், இதுதான். அதோ அந்த இடத்தில்தான் பொது தொலைப்பேசிகள் இருக்கும்- இப்போது கொஞ்சம் மாற்றி கட்டியிருக்கிறார்கள். பொது தொலைப்பேசிகளெல்லாம் எப்போதோ போய்விட்டன”
இருவரும் தத்தம் காபியை உறிஞ்சிக்கொண்டிருக்கையில், அவர்களைச் சுற்றி ஓராயிரம் ஈர ஜனங்கள் எல்லா திசைகளில் சென்றும் வந்தும் கொண்டிருக்கையில், ரயில் நிலைய அறிவிப்புகள் ஓய்வில்லாமல், மழை போல் தொடர்ந்து கொண்டே இருக்க, திடீரென ஓர் எதிர்பாரா கணத்தில்,
“அங்கிள், சென்ற வாரம் நான் நடந்து கொண்டது உங்களை ஏதேனும் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும், ப்ளீஸ்” என்றான்.
அவர், சில கணங்கள் எடுத்துக்கொண்டார். பின் மெல்ல, திரும்பி அவனைப் பார்த்து புன்னகைத்தார். ஏதோ சொல்ல விரும்பினார். ஆனால் வழக்கம் போல் சொற்கள், வாக்கியங்கள் கோர்வையாக வரவில்லை. இன்னொரு மடக்கு விழுங்கிக்கொண்டார். தலையை நிமிர்த்தி வெறித்தார்.
அவன் விடுவதாக இல்லை. “அங்கிள், இங்கு பாருங்கள்” அவர் முகத்தின் முன் கிண்டிலை ஆட்டினான்.
பின், அதை உயிர்த்துக் காட்டினான்.
லூயி பிஷரின் “த லைப் ஆப் காந்தி”..!
“அட…!”
“ஆமாம் அங்கிள், அன்றிரவு ஏதோ தேடப்போக இந்த புத்தகம் பரிந்துரைப்பட்டியலில் இருந்தது, சரி என்றாவது ஒரு நாள் வாசிக்கலாம் என்று வாங்கிவிட்டேன்!”
“நீங்கள் நம்பமாட்டீர்கள்…”
அமர் ஒன்றுமே சொல்லத்தோன்றாமல், வெறுமனே இருந்தார்.
“முதல் பாகம் முடித்துவிட்டு இப்போது இரண்டாம் பாகம் ஆரம்பித்திருக்கிறேன்!” அமரைப் பார்த்து சிரிக்கையில் எந்தவிதமான பாசாங்கும், மறை பொருளும், குத்திக்காட்டல்களும் தெரியவில்லை. சென்ற மாதத்தேர்வில் நான் முதலிடம் என்பது மாதிரியான வெற்றிச்சிரிப்புதான் இருந்தது.
அமர் சற்றே யோசிப்பது போல் பார்த்துவிட்டு,
“ஸோ? என்ன நினைக்கிறாய்?”
“புத்தகமா? ம்ம்ம்…ஓகே…ரொம்ப போரடிக்கவில்லை..”
“ம்ம்ம்…அடுத்த பாகம் நிச்சயம் நன்றாக இருக்கும்” ஏற்கனவே வாசித்துவிட்டது போல் அமர் ஒரு தொனி அளித்தார்.
“தொடருவேனா என்று தெரியவில்லை அங்கிள். முந்தா நாள், ரயிலில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது ஸ்ராட்போர்ட் ஸ்டேஷனைத்தாண்டி ஒரு பத்து நிமிடங்கள் இருக்கும். ப்ரண்ட்வுட் பக்கத்தில் யாரோ ரயில் பாதையை கடக்க முயன்று முந்தின ரயிலில் அடிபட்டிருந்ததாக அறிவிப்பு. நம்பமாட்டீர்கள், கிட்டதட்ட 40 நிமிடங்கள் ரயிலிலேயே இருக்க வேண்டியதாயிற்று. வேறு வழியே இல்லை…முதல் பாகம் முடித்துவிட்டேன்!”
“ஓ..” பின் மெல்ல தயங்கி, எதாவது கேட்கலாமா என்று அமர் தயங்கிக்கொண்டிருந்த போது, யதுவே,
“ம்ம்ம்…சுவாரசிய மனிதர்தான்…” சற்றே வெறித்துவிட்டு,
“அமேசிங், ஏதோ பழங்கால கதையை வாசிப்பது போல் இருந்தது…”
“அவருடைய தென்னாப்பிரிக்க வாழ்க்கையைப் பற்றி படித்தேன்” என்று சொல்லிவிட்டு அவரை நேருக்கு நேராக பார்த்தான். அமர் கண்கள் இமைக்காமல் காத்திருந்தார்.

“இந்த புத்தகமும் பின்னர் இதிலிருந்து பல இணைய சுட்டிகளும். அவர் ஜெனரல் ஸ்மட்ஸிடம் நடத்திய பேச்சுவார்த்தை, என்னை சட்டென கவர்ந்துவிட்டது. இந்தியர்கள் கட்டாயமாக தங்களை பதிந்து கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை, நாங்களாக வந்து பதிவு செய்து கொள்கிறோம், எனவே அது சட்டமாக இருக்கக்கூடாது என்ற அணுகிய விதம்…வின் வின்…நீயும் வெற்றி, நானும் வெற்றி…சமரச வெற்றி”
அமரை அவன் கவனிக்கவே இல்லை. பேசிக்கொண்டே சென்றான்.
“அப்புறம் அந்த ஜெனரல் அவரை ஏமாற்றியிருக்கலாம், இருந்தாலும் என்ன ஒரு அழகான அணுகல், சமரசம். இன்றைக்கும் எதை அரசியல், வியாபாரத்திற்கும் பொருத்தமான அணுகல்…”
நிதானமாக எழுந்து அவரிடமிருந்து காலி காப்பிக்கோப்பையை வாங்கும் போது அவருக்கு பின்னால் பார்த்துவிட்டு, அவரைப் பார்த்து, “அங்கிள்” என்றான்.
அமர் திரும்பிப்பார்த்தார்.
பெரும் டிஜிடல் விளம்பர பலகை – 10 அல்லது இருபது செகண்ட்களில் விதவிதமான விளம்பரங்கள். “கொஞ்சம் பொறுங்கள்” என்றான். இருவரும் பார்த்தபடியே இருந்தார்கள்.
Churchill Insurance என்ற விளம்பரம் வந்தது; ஒரு பெரிய புல்டாக், ஏராளமான சதைத்தொங்கல்களோடு தலையை ஆட்டிக்கொண்டிருந்தது.
இருவரும் ஹெக் என ஒருசேர சிரித்தார்கள்.
“சென்டிமெண்ட் எல்லாம் இல்லை; ஆனால் இவர் ஓர் தேசிய தலைவன்; ஒரு ஜனநாயக நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கவும் பட்டவர். பிரதமர் ஆவதற்கு முன் இவர் இந்தியாவில் ராணுவ பணியும் ஆற்றியிருக்கிறார். அந்த காலத்தில் ரேஸிஸ்ட் என்பது எல்லாருமேதானே?”
“காந்தி ஆரம்பகாலங்களில் கபிர் என்றதெல்லாம் புழக்கத்திலிருந்த சொற்கள், அதனாலேயே அவரை…” என்றவரை சிரித்தவாறே நிறுத்தினான்.
“இட்ஸ் ஓகே அங்கிள்; இந்த லூயிஸ் ப்ஷரே சில இடங்களில் நீக்ரோ என்ற பதத்தை உபயோகித்திருக்கிறார், அதனாலேயே அவர் ரேஸிஸ்ட் அல்ல, அல்லவா?”
மாபெரும், பிரமாண்டமானமொரு கதவை ஒரு சின்ன தள்ளலில் திறந்துவிட்டது போலிருந்தது; ஒரு குட்டி சாவியால் திறந்துவிட்டது போல் நம்பமுடியாமல் இருந்தது.
“என்று உங்களுக்கான அடுத்த ப்ளைட் என்று சொன்னீர்கள்?”
“திங்கள் இரவு, ஸ்டான்ஸ்டட்”
“ஓ, நாளன்னைக்கு…சரி”
“ஆமாம்…அப்பா அம்மா என்று ஏதென்ஸ்லிருந்து வருகிறார்கள்?”
மென்சிரிப்புடன், “அவர்கள் நாளை மதியம் வந்துவிடுவார்கள்…ஆதன்ஸ்லிருந்து” என்றான்.
“எத்தனை பயணங்கள், இல்லை?”
“ஸாரி அங்கிள், நான் காந்தியைச் சொல்கிறேன், மூன்று கண்டங்கள், அடேயப்பா…எத்தனை பயணங்கள்…”
ஆமாம், தமிழ்நாட்டிற்கு மட்டுமே கணக்கற்ற தடவைகள் வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்”
சரியான எண் நினைவில்லாதபோது கணக்கற்ற என்ற சொல் வழக்கத்தைப் போலவே அப்போதும் உபயோகப்பட்டது.
“எத்தனை கலாசார மாற்றங்களை எதிர்கொண்டிருப்பார்…எத்தனையோ ஆயிரம் பேர் அப்படி எதிர்கொண்டிருக்கலாம்…இன்னொரு அலும்னி, எங்கள் யுசிஎல்லில்…பெயர் சட்டென நினைவிற்கு வர மறுக்கிறது…ம்ம்ம்…”
“இருந்தாலும் காந்தியைத்தான் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம் இல்லையா?” அமருக்கு தாமும் சொல்ல ஏதாவது இருக்கிறது என்பதில் ஒரு திருப்தி…
“ம்ம்ம்…ஆங்…தாதாபாய் நவ்ரோஜி..!…கரெக்ட், இவர் குஜாராத்தி பேராசிரியர்”
“சரி நீ எப்போது கடைசியாக இந்தியா வந்தாய், உன்னை பற்றிச் சொல்லு, போதும் காந்தியெல்லாம்”
கைகளைக் கட்டியவாறு சற்று பின்னுக்குத் தள்ளி அமர்ந்தார்.
“நான்… சென்ற வருட ஆகஸ்ட் அங்கிள். டெல்லியில் இறங்கி, இரு நாட்கள், ஆக்ரா, தாஜ்மகல் எல்லாம் பார்த்துவிட்டு பின் சென்னை, அம்மா தாத்தா வீடு. அப்புறம் கிட்டதட்ட ஒருவாரம், அப்பா ஆச்சி வீடு, நாகர்கோவிலில்”
“ஓ வெரிகுட். வெயில்லாம் கொஞ்சம் குறைஞ்சிருக்கும்”
“அதெல்லாம், வந்து ஓரிரு நாட்கள் மட்டும்தான். அப்புறம் பழகிவிட்டது. பல மணி நேரங்கள் விமானத்தில் பறக்கிறது போலதான், பழகிட்டது!”
“அது சரி! மொழி பிரச்சனையெல்லாம் ரொம்ப இருக்காது, நீ ஓரளவிற்கு தமிழ் பேசறயே!”
“நன்றி அங்கிள், அதிகம் பேச மாட்டேன், அம்மா அப்பா பேசினா புரியும், திட்டும்போது இன்னும் நன்றாக புரியும்!”
மறுபடியும் சிரிப்பு.
“பரவாயில்லையே! மோகன் உன்னை தமிழ் பள்ளிக்கு அனுப்பியிருப்பார் இல்லையா”
“ஆமாம், இங்க நாரிச்சில் இல்ல, கொஞ்சம் தள்ளி எங்கோ ஒரு தமிழ் பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டிட்டு போவார். அப்பல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் எனக்கு வயிற்று வலி வந்துவிடும்!” பளிச்சென சிரித்தான்.
“அப்பா விடமாட்டார். அப்புறம் தமிழ் சங்க விழா மேடைகளில் தமிழ் சினிமா பாட்டுகளுக்கு ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடுவோம். அந்த ஸ்டெப்களைச் சொல்லிக்கொடுக்கும் ஒத்திகைகள் வாரக்கணக்கில் இருக்கும்!
அப்புறம்…ம்ம்ம்… நாலைந்து குறள்கள் மைக்கில் சொல்லியிருக்கிறேன், எழுத்துக்கூட்டி சில சொற்களை எழுத்து கூட்டி வாசிக்க ஆரம்பிச்சேன். ஆனா…”
“ஆனா?”
அப்புறம் கொஞ்ச நாளிலேயே தமிழ் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திட்டார். 11ப்ளஸ் கோச்சிங் வகுப்புகள் இருக்கில்லையா. வருடம் 5லிருந்து…”
“என்னது, ஐந்தாம் வருடத்திலிருந்தேவா?”
“இது பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அங்கிள். இன்றெல்லாம் வருடம் 3 அல்லது 4லேயே கோச்சிங் வகுப்புகளுக்கு அனுப்புகிறார்களே? நான் சம்மர்ல இது போன்ற கோச்சிங் முகாம்களில் உதவி செய்வேன், சுமாரான பாக்கெட் மணிக்காகும்”
“ஓ…அப்ப தமிழ் மறந்து போயிருக்குமே?”
“ம்ம்ம், இருக்கலாம். ஆனால் மொழிதானே அங்கிள்? தேவைன்னா படிச்சிக்கலாம். நான் GCSEல ப்ரெஞ்சும் மேண்டரினும் எடுத்தேன் – இரண்டிலுமே A* தான்”
அமருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எதையாவது பேச வேண்டுமே என்று,
“இந்தியா பயணம் எப்படி இருந்தது சொல்லு…கன்யாகுமரி சுவாரஸியமாக இருக்குமே”
வெள்ளைக்கார வாடிக்கையாளர்கள் அவர்களது விடுமுறை ஸ்தலங்களைப் பற்றி பேசும் போது, அமருக்கு கன்யாகுமரி எப்போதுமே கைகொடுக்கும்.
“அந்த துளி முனைல நேரா நின்றால் உங்கள் முன் இந்து மஹா கடல் அலைகள் ஆர்பரித்துக்கொண்டு வரும்; கிழக்குல திரும்பிப்பார்த்தால் வங்களா விரிகுடா அலைகள், மேற்கு திரும்பினாலோ அரபி கடல் அலைகள்”
அவர்கள் உண்மையிலேயே கண்களை விரித்து கேட்பார்கள்.
“அப்கோர்ஸ் கன்யாகுமரி…அங்க முதல்ல புதுசா எனக்குப் பட்டது, கடல் மண்ணும் அலைகளும் என்னா சூடு..!”
கடற்கரை இத்தனை சுடும், வியர்க்கும்னு இது நாள் வரை எனக்குத்தெரியாது! ஆச்சரியமாக இருந்தது”
அடப்பாவி என்று நினைத்துக்கொண்டார். இருந்தும் விடவில்லை.
“இந்தப்பக்கம் உதிக்கிற சூரியன் அந்தப்பக்கம் மறையறதையும் அதே சமயம் எதிர் திசையிலிருந்து நிலவு ஆரம்பிக்கிறதையும், என்ன பிரமாதமான..”
“சின்ன வயசில இருந்து கடைசி தடவை முதற்கொண்டு போயிருக்கேன் அங்கிள், ஒரு தடவை கூட முழுசா சூரியன் மறைவதை பார்க்கவில்லை, எப்பவுமே மேகங்கள்தான் கரெக்டா அந்த விளிம்புல மட்டும் இருக்கும்” இருவரும் சிரித்தார்கள்.
“அதுவும் படு சீக்கிரமாக மறைஞ்சுடும்…”
எனக்கு கன்யாகுமரி பிடிக்கலை அங்கிள்…ஸாரி தப்பா எடுத்துக்காதிங்க, ரொம்ப கூட்டம், ரொம்ப அழுக்கு…ரொம்ப…கடல் அலைகள்ல விளையாடறவங்க தண்ணீரோடு மணலையும் அள்ளி அடுத்தவங்க மேல் வீசி விளையாடறாங்க, மத்தவங்களைப் பத்தி அக்கறையே இல்ல…”
“அம்மா கண்ல மண் பட்டு, சண்டையாகி…” அமர் எதுவும் பேசாமல் இருந்தார்.
“சுத்தம் எங்குமே குறைவு; எங்க வெளிய கிளம்பறதுக்கு முன்னாடி அப்பா பல தடவைகள் கேட்டுடுவார் – டாய்லெட்லாம் போயாச்சான்னு. இருந்தும் கன்யாகுமரில ஒரு தடவை பொது டாய்லெட்டிற்கு போனேன்…”
வாடிக்கையாளர்களிடம் இயல்பாக பேசி நம்பிக்கையை, புரிந்துணர்வை உருவாக்கும் சமயங்களில் அமர் திரும்பிப்பார்க்க விரும்பாத, கடுமையாக தவிர்க்கும் ஒரு இடம் இது. இவனிடமும் இதையே பின்பற்றவேண்டுமே என்று சலிப்பாக இருந்தது.
“இன்னும் காலம் செல்ல வேண்டும், இப்போதுதானே மேற்குலகோடு ஓரளவிற்கு இணையாக வந்துகொண்டிருக்கிறோம்” அவர் குரல் என்னவோ கணீரெனதான் ஒலித்தது.
“அங்கிள், காந்தி முதன்முதலில் தேசிய அளவில் ஒரு இயக்கம் ஆரம்பித்தாரே…ஷெல்லியின் கவிதையின் வரிகள்..ஆங்…ஒத்துழையாமை இயக்கம்”
அமர் கண்கள் இமைக்காமல் பார்த்தார்.
“அதை கொஞ்ச நாட்களில் நிறுத்திவிட்டார், என்ன காரணம் சொன்னார் தெரியுமா…இந்தியர்கள் இன்னும் அதற்கு தயாராகவில்லை என்று…”
லூயிஸ் பிஷர் புத்தகம் படிக்கும்போதே அவ்வப்போது கூகுளும் செய்து கொண்டே இருந்தேன் அங்கிள். அதை வாசிக்கும் போது என்ன ஒரு துணிச்சல் வேண்டும் என்று தோன்றியது; ஏனெனில் இயக்கத்தை ஆரம்பிப்பதை விட அதிகம் துணிச்சல், பக்குவம் தேவை, அதை நிறுத்துவதற்கு என்று தோன்றியது…”
“ஆனால் அங்கிள்…”
சென்ற இந்தியப்பயணத்தை நினைத்துப் பார்த்தால், இன்னும் இந்தியர்கள் நிறைய விஷயங்களுக்கு தயாராகவில்லை என்றுதான் சொல்வேன்…ஆம்…நிறைய இருக்கின்றன”
அமர் இப்போது ஏதாவது சொல்லியே ஆகவேண்டும்;
“ஒரேடியாக இதை பொதுபடுத்த முடியாதில்லையா? எனக்கென்னவோ, நீ ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிட முயற்சிக்கிறாயோ என்று படுகிறது”
“இல்லை அங்கிள்…எனக்கு அப்படித்தான் படுகிறது. சென்னை ஏர்போர்ட்டிலிருந்து அனைத்து கார் பயணங்களிலும் ஏகப்பட்ட ப்ளைஓவர்கள், பாலங்கள், அப்பாவின் நினைவிலிருந்த இடங்கள் பல மாறிவிட்டன; அவருக்கு சந்தோஷம்தான். இரண்டு, மூன்று லேன்கள் எல்லாம். அத்தனை செலவு தரைக்கு மேல் செய்வதற்கு முன் தரைக்கு அடியில் எத்தனையோ, பாதாள சாக்கடைகள் மாதிரி செய்திருக்க வேண்டும் அங்கிள்…”
“இதே காந்தி, எந்த மக்கள் கூடுகைகளிலும், பார்க்கும் இடங்களிலும் சுத்தமாக இருப்பதைப் பற்றிதானே அவர் காலம் முழுக்க சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். அதையே இன்னும் முழுதாக செய்யவில்லையே…உங்கள் பக்கெட் பட்டியலில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன, தயாராவதற்கு”
“ம்ம்ம்…அப்ப, உனக்கு இந்தியா சுத்தமா ஒத்து வராது, இல்லையா? என்னால் புரிந்துகொள்ள முடிகிறது”
“ம்ம்ம்…தெரில அங்கிள்”
“ஆனா…எனக்கு சுத்தமா பிடிக்கலைன்னு சொல்ல முடியுமான்னு தெரியலை…
இந்த தடவை, சில கோவில்களுக்கு போனோம்; சாயந்திர வேளைல…”
“எந்தெந்த கோவில்கள்?”
அவன் டிர்குர்க்குடி என்று உச்சரித்ததை, எப்படித்தான் ஊகித்தாரோ?
“அந்த கோவில்ல கூட்டமே இல்லை, சுத்தமாகவும் இருந்தது…”
“ஓ…பெரிய பெரிய சிலைகள் இருந்திருக்குமே..தத்ரூபங்களாக?”
“ஓ ஆமாம், பெரிய பெரிய உருவங்கள். பெரிய ஸ்டூல்களில் நின்று கொண்டிருப்பதால் கால்களை நன்றாக கவனிக்க முடிந்தது. கால் பெருவிரல் நுனி, எத்தனை தத்ரூபங்களாக, இல்லை?”
“ஆமாம்…”
“நைட் அட் தி மியுசியம் படத்தில் இரவில்தான் மியுசிய பொருட்களுக்கு உயிர் வரும். இந்த சிலைகள், பகலிலும் உயிரோடுதான் இருக்கின்றன என்று தோன்றியது. ஒருவேளை நாம் அதைப் பார்க்காத தருணங்களில் நம்மை நோக்கி கண்களை உருட்டுமோ?”
மீண்டும் சிரித்தார்கள்.
“ம்ம்ம், அப்ப உனக்கு கோவில்கள் புடிச்சிருக்கு போல இருக்கே?…”
“ம்ம்ம்…தெரியலை அங்கிள். இன்னொரு கோவிலும் நினைவில் இருக்கிறது…”
யது, திடீரென அறிவிப்பு பலகையை நிமிர்ந்து பார்த்தான்.
“ப்ளாட்பார்ம் 10. இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது. போகலாம் அங்கிள்”
இருவரும் அருகருகே நடந்தார்கள், இருந்தாலும் அவர் சற்று சிரமப்பட்டு இரு கைகளிலும் பொருட்களைத் தூக்கிக்கொண்டு வருவதை கவனித்தது போல் தெரியவில்லை.
டிக்கெட்டை பாக்கெட்டிலிருந்து அவர் எடுக்க முயன்றபொழுதில் பைகளை கேட்டு வாங்கினான். ப்ளாட்பார்மில் சுளுவாக தூக்கிக்கொண்டு நடந்தான், அமர் திரும்ப பைகளை கேட்கவில்லை.
தலையை மெல்ல குனிந்து கொண்டு,
“அந்த கோவில் பெயர் நினைவில்லை, ஒரு அருவிக்குச் சென்றோம்…டிர்..டிர்…”
“எந்த அருவி என்று புரிகிறது, திற்பரப்பு. நீ சொல்லு” என்றார்.
“ஆங்…அங்கயும் அழுக்குதான். அதன் அருகே இருக்கும் கோவிலுக்கும் சென்றோம். கோவிலை ஒட்டி, ஒரு நதி….”
ஆம், அதுதான் சற்று தள்ளி அருவியாக…”
“அப்கோர்ஸ் அங்கிள், அது புரிகிறது. கோவிலை ஒட்டிய படிகளில் நான் மட்டும் உட்கார்ந்திருந்தேன். அம்மா, அப்பா, ஆச்சி எல்லாரும் கோவிலிருந்து வெளி வர நேரமாகியது. நான் மட்டும் படியில உட்கார்ந்துகிட்டு எதிரில் அந்த ஆற்றை பார்த்துகிட்டு இருந்தேன். எந்த அவசரமும் இல்லாம ரெண்டு மூணு பேர் குளிச்சிட்டு இருந்தாங்க….
அந்த மாலை, ஏகப்பட்ட பறவைச் சத்தம், கூட்டமே இல்லாமல், முக்கியமாக மாலைநேர சூடு…எல்லாமே நன்றாக இருந்தன…அனேகமாக இதைத்தான் நான் இங்கு மிஸ் செய்கிறேன்…என்று நினைக்கிறேன்”
அந்த சட்டுன்னு இருட்டு வந்துடுது பாருங்க, அது என்னமோ நல்லா இருக்கு, எனக்குப் பிடிச்சிருக்கு!”
இருவரும் சில பெட்டிகளைக் கடந்து ஒரு பெட்டியின் தொடு திரையைத் தொட்டு, நுழைந்தார்கள்.
பல இருக்கைகள் காலியாக இருந்தன.
எதிர் எதிராக இருக்கும் இருக்கைகளில் ஒன்றில் யது, கைகளில் இருக்கும் பைகளை தலைக்கு மேலிருக்கும் இடத்தில் வைத்துக்கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு பின்னால் மிகவும் தணிந்து சாய்ந்துகொண்டான்.
கால்களை எதிர் இருக்கையில் நீட்டி வைப்பானோ என்று அமர் ஒரு கணம் காத்திருந்தார்.
பின்னர், அவனுக்கு எதிர் இருக்கையில் அவனை நோக்கியவாறு அமர் தொப்பென சாய்ந்தார். அவர் எதிரில் இல்லையெனில் கால்களை நிச்சயம் எதிர் இருக்கையில் வைத்திருப்பான் என்று அமருக்குத் தோன்றியது.
பெட்டியில் தானியங்கி அறிவிப்புகள் ஆரம்பித்தன. பொறுமையாக ரயில் செல்லப்போகும் அனைத்து ஸ்டேஷன்களையும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தன. பின், ஓர் கரகரப்பு கேட்டது. ஓட்டுனர் ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.
அமருக்கு விமான பைலட்களின் அறிவிப்புகளைப் போலவே பட்டன.
“இரண்டுமே இங்கிலிஷ் தானே அங்கிள்” மறுபடியும் இருவரும் ஒருசேர சிரித்தார்கள்
ரயில் மெல்ல, தொடங்கியது தெரியாமல் தொடங்கியது.
“அங்கிள், உங்களுக்கு பிடித்த இடத்தில்தான் இருக்கிறீர்கள்” என்றான்.
அமர், புருவங்கள் மெல்ல நசுங்க அவனைப் பார்த்தார்.
“நீங்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கையைச் சொல்கிறேன்…”
ரயில் செல்லும் திசைக்கு முதுகை காட்டியவாறு அமர் அமர்ந்திருந்தார். “உங்கள் இருக்கையிலிருந்து தெரியும் காட்சிகள் எல்லாம் கடந்து சென்றவை அல்லவா… உங்களுக்குத்தான் hindsight பிடிக்குமே?” என்றான், மென் சிரிப்புடன்.
அமர், “ஹ…” என்றவாறே சிரித்துக்கொண்டே வெளியே பார்த்தார். அவரைத்தாண்டி காட்சிகள் சென்று கொண்டே இருந்தன.
அப்ப நீ…Foresightஆ? உனக்கு வரப்போகிற காட்சிகள் எல்லாம் தெரிகிறதா”
யது, முதலில் ஒன்றும் சொல்லவில்லை; பின், மெல்ல,
“என்னைப் பற்றி நிச்சயம் தெரியவில்லை, ஆனால் காந்தி நிச்சயம் இரு இருக்கைகளிலும் ஒரே சமயத்தில் அமர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்…just like Janus”
இருவரும் சற்று நேரம் ஒன்றும் பேசாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே இருந்தனர்.
பின்னர் அமர், “உனக்கு எத்தனை தொலைவு தெரிகிறது? என்று அவனைப் பார்க்காமலேயே முணுமுணுத்தார்.
ஒரு சில நொடிகளுக்குப்பின்,
“ஒருவேளை எனக்கு, உங்களுக்கு ஏதாவது தெரிகின்றது என்றால் அதற்கான காரணம் நாம் காந்தி போன்ற பெரும் பூத கணங்களின் தோள்களில் அமர்ந்திருப்பதால்தான் என்று நினைக்கிறேன்…நாம் எல்லாருமே ஒருவிதத்தில் ஐசக் நியுட்டன்தான் அங்கிள்” என்றான்.
இரயில் ஆரம்பித்த போது, வந்து கொண்டிருந்த பெரும், இருண்ட, சுவரில் கிறுக்கல்கள் மிகுந்த கட்டிடங்கள் எல்லாம் மறைந்து போய் மழையில் நனைந்த பச்சைவெளிகள் முடிவற்றதாய் வந்து கொண்டே இருந்தன, பின் சென்றுகொண்டே இருந்தன.
என்றாவது ஒரு நாள், முடிவெல்லையை கண்டுவிட முடியும் என்றே அமருக்குத் தோன்றியது.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
