மலரிடுதல்

ஒரு வாழ்க்கை முடிந்துவிட்டது என எனக்கு அன்று புரியவில்லை. எல்லோரும் நினைப்பொழிவார்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை. மெல்லிய அவ்வப்போது வந்துபோகும் நியாபகமாகத்தான் என்னில் எஞ்சப்போகிறாள் என்பதையும் அன்று நான் அறியவில்லை. இவ்வளவு கறாரான ஒரு நிகழ்வாக மரணம் இருக்க வேண்டுமா என இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

உயிர்க்குளிர்

அலை அடித்துக்கொண்டே இருக்கிறது
துமிகள் பறந்துகொண்டே இருக்கின்றன
காற்று ஏந்திக்கொண்டே இருக்கிறது
அத்தனை அத்தனை மௌனமாய்
துமிகள் அலைமீதே விழுகின்றன

காதலெனும் திசைமானி

சிவதனுசு
உடைபட்டது.
மழையில் கண்ணீர்த்துளியாய்
நின்று இசைத்துக்கொண்டிருந்தான்.
ஆம்
கேள்விகளை நோக்கி
பாடலாகப் பெருகுகிறான் அவன்
பழி பாவங்களை நோக்கி
சிறு புன்னகையாய் பெருகுகிறான் அவன்
கண்ணீரை நோக்கி
கண்ணீராகவே பெருகுகிறான் அவன்.
பேதையாய் ஆகி நிற்பவளே
காதலின் அழைப்புகள்
ஆழங்களில் பிறக்கிறது

ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள்

அன்னையே
மீண்டும் உன்னிடம் கையேந்தி நிற்கிறேன்
ஓவியமாய் விரிந்துள்ள இரவும் பகலும்தான்
எத்தனை எத்தனை அழகு
கபாலத்தில் படிந்த தடித்த கசடுகள்
அகமெல்லாம் நிரம்பிவிட்டுள்ளது
சுடரேற்றும் வளைக்கரங்கள்
விரித்தெடுக்கிறது கடலெங்கும் பெருவானமொன்றை
ஏனோ கட்டங்கள் சதுரங்கள் வரைவதில்
என் இசையின் காலங்கள் கழிகிறது.

புரத்தல்

தொழுவத்தின் கூரையில்
முட்டையிட்டு அடைகாத்த
கோழியின்
பக் பக் ஒலி
இரவைக் கூட்டிக்கழித்து
எல்லாம் சரியாக
இருப்பதாய்ச் சொன்னது

இருத்தலும் ஆணையும்

அழல்
மோகம்
காமம்
இன்னும்
இன்னும்
கீழ்மைகள்
இருக்கும்
திசைக்கூட திரும்பப்போவதில்லை

அன்பு

அன்பின் ஊற்றைப்போலவே
அவ்வளவு இயல்பாய்
பெருக்கின் சுழிவுகள்கூட
அச்சசலாய்
இருந்தது
அன்பின்மையின் ஊற்று

புதிய பாடத் திட்டம்

ப்ரெஞ்சுப் புரட்சியைப் படிக்கப் புகுந்த மதன் ஸார் மாவட்ட நூலகமே கதியென இருக்கத் துவங்கினார். ஏற்கனவே குண்டு குண்டு நாவல்களாக வாசிப்பவர், இப்போது உலக வரலாறு பற்றிய குண்டு குண்டு புத்தகங்களாக வாசித்துத் தள்ளுகிறார். நூலகத்தில் மணிக்கணக்காக படிப்பதோடில்லாமல் வீட்டிற்கும் பள்ளிக்கும் கூட எடுத்து வந்து அந்த குண்டுப் புத்தகங்களை வைத்து வாசிக்கிறார். பாட்டி ‘இந்த வாத்தியார் புள்ளைக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வெச்சாதான் என்ன’ என்றார்.

வட்டம்

அர்ச்சுன வாயிலினுள் நுழையும் முன்  வலது புறமாக காட்டுக்குள் நுழைந்து சென்றால் கழுகுப் பாறையை அடையலாம். அருகிலேயே பிரசன்னரின் மடம் உள்ளது. பிரசன்னரின் மடத்தில் விழுப்புண்களுடன் கொஞ்ச காலம் அணங்கர் தங்கியிருந்தார். குருவின் அருளினால்தான் இந்நகரம் நிறுவப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கழுகுப் பாறையின்  நுனி நின்று நோக்குகையில்தான் ஒரு கணம் தோன்றி மறைந்தது இந்த மாநகரம்.

ஆயன்

உண்டிக்கோலும் கதிரருவாளுமில்லாமல் சோமன் மேய்ச்சல் விட வருவதில்லை. சிறு சிறு கற்களைப்பொறுக்கி சேமித்துக்கொண்டான். அதுநாள் வரை சாமியை கும்பிட வேண்டும் என்பதனால் ஒரு வணக்கம் போட்டு வைப்பான். ஆனால் இப்பொழுதெல்லாம் அவரிடம் பாதுகாப்பை தைரியத்தை கோர வேண்டிய அவசியம் உருவாகி விட்டது. வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையோ பூக்களோ என்ன முடிகிறதோ அதை பறித்து வந்து உண்டியல் முன் வைத்துவிடுவான். மேய்ச்சலுக்கு அருகிலேயே கல்லில் புடைத்து நிற்கும் வீரன் சிலை ஒன்றிருந்தது. தினமும் ஒரு எலுமிச்சையை வீரனுக்கு காணிக்கையாக வைத்துவிட்டுத்தான் தன் பாறைக்குடைக்கு திரும்புவான்.

நதி

அந்தக் கடிதம் வந்ததிலிருந்து மூன்றாவது மாதம் லாஸ் ஏஞ்சலஸ் ஏர்ப்போர்ட்டில் அவருக்காகக் காத்திருந்தேன். வேஷ்டியுடன் தான் வந்திருந்தார். மேலே வெளிர் கருப்பில் போன முறை சென்றபோது அவருக்கு நான் கொடுத்திருந்த சட்டை. அன்றிரவு ஆஷா சொன்னாள் ‘ஸீம்ஸ் லைக் அ ஜென்டில்மேன்” என்றாள். ஆஷா நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை என இருப்பவள். ஆனால் இருப்பது வெறும் செருக்கு. சக மனிதரை ஆணவத்துடன் திமிருடன் எதிர்கொள்ள வாழ்க்கை அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. ஒரு வாரத்தில் அவள் சொன்னாள் “ஐ லைக் யுவர் தாத்தா”.

பிரதி

அன்றுதான் அல்கா முதன் முதலில் அந்த ஒளிரும்‌ கிருஷ்ணனைக் கண்டாள். அதென்ன அப்படி ஒரு அழகு ஒய்யாரம். இடையில் என்ன ஒரு ஒசிவு. அவன் காலருகே தலையை அள்ளிப்பிடித்தபடி ஒரு பித்தி. அவள்தான் தான் என்று நினைத்தாள் அல்கா. கண்ணைக் கொட்டி கொட்டி எத்தனை முயன்றாலும் நீர் திரண்டுகொண்டே இருந்தது. ரமாபாய் சொன்னாள் ‘பரவால்ல இந்த அழகுக்கு முன்னாடி அழாட்டிதான் தப்பு’. அந்த ஒரு மாலையில் அந்த அயல் நிலத்தை தனதாக உணர்ந்தாள் அல்கா.

உதிர்தல்

பசுக்களெல்லாம் கொட்டடைந்தபின்னான மாலையில் சொன்ன நாள் நேரத்துக்கு ஊர் கூடியிருந்தது. பறவை திசை நோக்கி ஷிவலிங்கையா இந்த வருடம் மழை அதிகமிருக்குமென்றும், இன்னும் இரண்டு நாட்களில்  மழை துவங்குமென்றும் சொன்னார். ஊர் தானியங்களை நீர்ப்பதமேறாமல் பாதுகாக்கக் கிடங்குக்கு இன்னும் இரண்டு சுவர் கூடுதலாக எடுக்க வேண்டுமென்றார். அதுவரை அவ்வூர் கண்டிராத மழை அவ்வருடம் இருக்கப்போவதாகச் சென்னார். நிகழாதவை தன்னை நிகழ்த்திக்கொள்ளும் காலமது.

வெந்துயர்க் கோடை

படிக்கையில் சிரிப்பும் ஏக்கமுமாக இருக்கிறது. இவ்வளவு உக்கிரமான காதல் எப்படி பிரிவில் முடிந்தது. அவ்வளவு கறாரானதா வாழ்க்கை? இது என்ன இப்படியெல்லாம் மனதை உழட்டிக்கொள்கிறேன். நான் பாட்டுக்கு நெட்ஃப்லிக்ஸில் எதாவது ஸாம்பி படம் பார்த்துக்கொண்டிருப்பேன். இவனால் வாழ்க்கையை பற்றியெல்லாம் யோசிக்கவேண்டியாகிவிட்டது. மாதவை நேரில் பார்த்து இரண்டு வருடம் இருக்கும். மைசூரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். ஊர் பக்கம் வருவதே இல்லை. சென்னைக்காவது வா என்றாலும் வருவதில்லை.

யானை வெரூஉம்

எட்ஜ் சாம்பியனாக இருந்த போது என் அப்பாவுக்கு கல்கத்தாவிற்கு மாற்றல் வந்தது. நாங்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தோம். எனக்கு மீசை லேசாக அரும்பியிருந்தது. ஆக அழ முடியாது எனும் கட்டாயம் வேறு. என் அக்கா வெஸ்ட் பெங்காலில் படித்தவள் ஒரு வருடமாகத்தான் தமிழ்நாட்டில் இருக்கிறாள். குடும்பமே கல்கத்தா திரும்பும் குதூகலத்தில் இருந்தது. நான் பேசிப்பார்த்தேன். ஒரு பயனும் இல்லை. வாழ்க்கை இனித்துக்கொண்டே இருக்கக் கூடியதல்ல என்பது அந்த காலத்தில்தான் அறிமுகமானது. என்னை ரயிலேற்றிவிட பிலுக்கோண்டு மட்டும்தான் வந்திருந்தான்

உள்ளிருத்தல்

‘கல்யாணத் தரகு விசுவநாதன் இருக்கானே அவன்தான் போற போக்குல சொல்லிட்டு போனான் ‘என்ன சோம சுந்தரம்.. ராஜா வீட்டு கல்யாணத்துக்கும் நானே புடவ குடுக்குறேன்னு கேக்க வேண்டிதானே’ ன்னு, அன்னக்கி ராத்திரி எனக்கு தூக்கமில்ல. பொரண்டு பொரண்டு படுக்குறேன். காலைல விடியிறப்ப முடிவு பண்ணேன் ‘போயி கேட்டுர்ரதுன்னு. என்ன நடக்கும். விதி பெருசா ஓடிட்டு இருக்கு. யார எங்க தள்ளும் யாருக்குத் தெரியும்.  பாறைல மோதுமா இல்ல அப்டியே தூக்கி கரைல போடுமா யாருக்குத் தெரியும். காலைல குளிச்சு கோயிலுக்குப் போய் அப்பா காசி விசுவநாதா நீதான் கதீன்னு கும்பிடு போட்டு நேரா அரண்மனைக்கு நடந்தேன். இப்ப வேணா அவங்க ராஜாவ இல்லாம நாட்ட ஆளாம இருக்கலாம். ஆனாலும் ராஜ வம்சம் தானே. பணிவா போய் நிக்கிறேன். நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் அவருக்கு. தயங்கித் தய்ங்கி கேக்குறேன். கேட்டா நம்ப மாட்ட மணி. உடனே ஒத்துக்கிட்டார். அறுபத்திரெண்டு புடவ வேணும்னு சொல்றார்.

திருக்கூத்து

அந்த கோயில்ல பூசன பண்ணின பண்டாரங்களால வாய்மொழியா சொல்லப்பட்ட கதைகளும் பாடல்களும்தான் பண்டார நூலா இன்னக்கி இருக்கு. அந்த நூல தொகுத்தவர் சின்னப் பண்டாரம். அவர் அந்த நூலுக்கு இட்ட பெயர் திருநடம். ஆனா பண்டார நூலுங்குற பெயர்தான் நெலச்சிருக்கு. அந்த நூல் பெருவெள்ளங்களப் பத்தி பேசுது. மொத்தம் நூற்றியெட்டு தடவ அங்க வெள்ளம் வந்து ஊர நீர் சூழ்ந்திருக்கு. ஒவ்வொரு முறையும் உச்சிகால பூஜையோட மழை வலுத்து வாரங்களுக்கு தொடர்ந்திருக்கு.

படைத்தல்

அன்று கண்விழித்தபோது தன்னுள் ஒரு உதயம் நிகழ்வதாய் உணர்ந்தாள். இரவின் வீச்சு இன்னும் ஓயாத புலரி ஒரு பண்டிகையின் அதிகாலை நோக்கி விடிவதாய் தோன்றியது. தூக்கமின்மை களைப்பு என எல்லா சோர்வையும் மறைத்துவிடும் ஒரு மாயக்கம்பளம் என அக்காலை இப்பூமியின் மீது அவ்வூரின் மீது அவ்வில்லத்தின் மீது விரிக்கப்படுவதாய் பட்டது. முகம் விழும் சிகையைக் கோதி காதோரம் விட்டாள். அகம் முகம் மலர எழுவது அவளுக்கே ஆசையாய் இருந்தது. நீரள்ளி குளிர் உணர உணர முகத்தில் வீசிக்கொண்டாள்.மூக்கு நுனி தாடை என திரண்டு சொட்டும் நீர், ஒவ்வொரு அசைவுக்கும் ஒட்டி ஒலி எழுப்பும் வளையுடன் மெல்ல ஆடி நோக்கினாள். மகிழ்வான முகம் பூரித்திருந்தது. உதயமேதான்.

திருநடம்

ஒரு வழியாக ஏரி தன் நூறாண்டுத் தாகத்தை மேலெல்லாம் நீர் வழிய அருந்தி முடித்து ஓய்ந்தது. நீர் ஏரிக்கரைக்குள் அடங்கியது. எங்கும் சேறாய்க்கிடந்து பின் காய்ந்து வெடித்து மண்ணானது. ‘வீட்டுச் சமையல் ஆரம்பிக்கலாம்’ என மீத அரிசி பிரித்துக் கொடுக்கப்பட்டது. எல்லாம் தன்னிலை மீண்ட நாளில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஒரு சிறுவன் ஊருக்குள் வந்தான். சிவன் கோயிலில் பண்டாரத்துடன் ஒட்டிக்கொண்டான். பண்டாரம் அவனுக்கு இரண்டு வெள்ளத்தின் கதைகளையும் சொன்னார். திருவாசகம் பாடிக்கொண்டே அங்கு வளர்ந்தான் சின்னப் பண்டாரம்.

பூரணம்

காந்தி ஒரு சிறு மேடையில் கண்மூடி அமர்ந்திருக்க அவர் முன் மூன்று பெண்கள். அவர்கள் முன் இரண்டு மைக். காந்தி கண் மூடியிருப்பதிலும் அப்பெண்கள் வாய் திறந்திருக்கும் விதத்திலும் அது பஜனையின் போது எடுக்கப்பட்ட படம் எனத் தெரிந்தது. இரண்டு பெண்கள் கண்ணாடி அணிந்திருந்தனர். மூன்றாவதாக இருக்கும் பெண்ணை பார்த்ததும் சிறு அதிர்ச்சி. எதிர்பாராத கணத்தில் ஒன்று அறிவுக்கு வெளிச்சமாவதன் அதிர்வு. பாட்டியேதான். அம்மாவின் அம்மா. எனக்கு ஒன்பது வயதானபோது பாட்டி இறந்து போனாள். அப்போது பதிந்த ஒரு மென் ஞாபகத்தை வைத்துக்கொண்டு எப்படி பாட்டியின் இள வயது புகைப்படத்தை இனங்கண்டேன் எனத் தெரியவில்லை

அப்பால்

ஊரின் வெளியே முதலை வால் போல் ஓடும் கோட்டைச் சுவரை ஒட்டிய மரங்களண்டிய ஒற்றைப் பாதையில் சென்றால் பாறைகளை ஏந்தி வானுக்குக்‌காட்டியபடி நதி ஓடுவதைக் காணலாம். அங்குதான் நதி நடுவில் ஒரு பாறையில்‌ அவள் நின்றிருந்தாள். ஆழ்ந்த யோசனையில் சமைந்த முகம். சோகமாகக் கூட இருக்கலாம்.‌ஆனால் அவள் அழகை தியானிப்பதாகத்தான் பட்டது. ஏனெனில் அப் பொழுதானது வழக்கமான ஒன்றல்ல. சூரியனை மறைத்துவிட மேகங்கள் காற்றால் இயக்கப்பட்டு திரண்டெழுந்த பொழுது அது. எட்டுத்திக்கும் ஒளியால் வெப்பத்தால் நிறைப்பவன் ஒரு குழந்தையைத் தீண்டுவது போல் மெல்ல உலகைத் தீண்டிய பொழுது அது.

லீலாதேவி

அன்று காவேரியைப் பார்த்த போது கங்கையைத்தான் நினைத்துக்கொண்டேன். கங்கையோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறியது ஆனால் நீர்தானல்லவா ? பாரத தேசத்தில் ஓடும் நீரெல்லாம் கங்கைதானே. நீர் அமைதியாய் நடப்பது- கங்கை காவேரி எதுவாகட்டும் – மனம் குளிர்ந்து நிறைந்துவிடுகிறது. ஆனால் ஆச்சர்யம், எப்படி கங்கையில் எங்களுக்கு இருந்த அதே வரவேற்பு இங்கு காவேரியிலும். எனக்கு தமிழ்நாட்டை நினைத்தாலே நினைவில் முகங்கள்தான் எழுகின்றன. அவ்வளவு முகங்கள். மணிக்கணக்காகக் காத்திருந்து, குழுமி, தொட முயன்று ஆசீர்வதிக்கச் சொல்லி எத்தனை முகங்கள். மனித வெள்ளம்தான் மனதில் எழுகிறது காவேரியை மீறி தமிழ்நாட்டை நினைத்தாலே.