விஷயம் கேள்விப்பட்டதும் கிரைண்டருக்குள் கை விட்டு மாவு வழித்துக் கொண்டு இருந்த அம்மா, அப்படியே பாத்திரத்தை நழுவ விட்டு ஓடி வந்தாள்.
“வண்டியை எடு.. வண்டியை எடு”
“மொதல்ல கையை அலம்பிண்டு வா.”
“அதை நான் பொடவைலயே தொடச்சுப்பேன்..”
கணேசன் சாவியைத் தேடி, அம்மாவிடம் ஏகப்பட்ட வசவுகள் வாங்கி, வண்டியை உதை-உதை என்று உதைத்து, அது க்ஷயரோக வியாதியஸ்தரைப் போல ஏகத்துக்குக் கமறி, கொள்ளிவாய்ப் பிசாசு போல குபுகுபு என்று புகையைக் கக்கி..
“வண்டில பெட்ரோல் இருக்கா பாரு.. பாதி வழில நின்னுத் தொலைக்கப் போறது.. பாதி பெட்ரோல் உதைக்கறதுலயே வீணாப் போயிடறது..”
“கொஞ்சம் சும்மா இரேம்மா..”
“என்னத்துக்காக சும்மா இருக்கறது? பத்தாயிரம் பன்னண்டாயிரம் போட்டு வண்டி வாங்கினா, அதை வெளீல எடுக்கறதுக்கு உனக்கு சோம்பல்.. பாதி நேரம் உங்க பாட்டி மாதிரி இருமி இருமி… ….யன்.. எனக்கு நல்ல காலமே பொறக்கப் போறதுல்லே..
இருந்து இருந்து இவ்ளோ கிட்டக்க வந்திருக்கார்.. எப்போ வந்தாரோ? இப்பத்தான் வந்தார்ங்கறா ஆதி..
அவளுக்கு யார் எப்ப சொன்னாளோ? கையக் கூட அலம்பாமக் கிளம்பினா வண்டி நொண்டி அடிக்கறது பாரு.. சனீஸ்வரன் ”
கணேசன் அப்போது தான் அம்மாவின் கையைப் பார்த்தான்.. பேருக்கு அலம்பித் துடைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.. அவள் புறங்கையிலும், உள்ளங்கை மடிப்புகளிலும், புடவையிலும் மாவு பிரிபிரியாக ஈஷிக்கொண்டு இருந்தது..
நல்ல வேளையாக கணேசனின் மெலிந்த காலின் அயராத உதைக்கு வண்டி பணிந்து விட்டது. கணேசனுக்கு அதற்குள் தொப்பென்று வியர்த்து விட்டது. வேட்டி வேறு அவிழ்ந்த மாதிரி தான் தோன்றியது. அரணாக்-கயிற்றில் சுருட்டி இருந்தாலும் முப்பது நாற்பது உதைக்கு இரும்பு ஸ்கூட்டரே பணியும் போது நைந்து போன வேட்டி எம்மாத்திரம்?
அம்மாவைப் பின்னால் அமர்த்திக் கொண்டு கிளம்பினான். அம்மாவுக்கு தாட்டியான உடம்பு இல்லாவிட்டாலும் கணேசனால் பேலன்ஸ் செய்ய முடியாத அளவு எடை உண்டு. ஒரு பக்கமாக வேறு அமர்ந்து கொண்டு வருவதால் கணேசனுக்குக் கொஞ்சம் சிரமப்படும்.
வண்டி அந்த நாட்களில் அனுதினம் புழக்கத்திற்கு வந்து கொண்டிருந்த ஒரு அயல்நாட்டுக் கம்பெனியின் உள்நாட்டுத் தயாரிப்பு.

ஒழுங்காக பஜாஜ்-சேட்டக் வாங்கியிருக்கலாம். அடக்க விலையில் ஆயிரம் ரூபாய் கம்மி. ஐந்நூறு ப்ரீமியம் போனாலும் மீதம் ஐந்நூறு ரூபாய் லாபந்தான். ஆனால், மூன்று முதல் ஆறுமாதங்கள் கழித்துத்தான் வண்டி கைக்கு வரும்.
அப்பா தீர்மானமாக முடியாது என்று சொல்லி விட்டார். வெயிட்டிங் மட்டுமல்லாது சொல்ப பெறுமானமுள்ள பண்டத்திற்கு அதிக விலை கொடுத்து வாங்குவதை அவரது பொருளகராதி எப்போதும் அனுமதித்ததில்லை.
கடைசியில், தினசரி ஒன்றின் விளம்பரம் பார்த்து அப்பாவும் கணேசனும் மவுண்ட்ரோடு போய் அந்தக் கடையை நோட்டம் விட்டனர்.
இவர்கள் உள்ளே நுழையும் போது கணேசனை ஒத்த ஒரு இளைஞன் ஏகத்துக்கு வளர்ந்த தலைமயிரைத் தாறுமாறாகக் கலைத்துக் கொண்டு, அந்நாளில் புழக்கத்தில் இருந்த புத்தம்புது எஸ்.டி. மோட்டார் பைக்கில் லாவகமாக ஏறி அமர்ந்தான். நெடுநாள் பழகியவனைப் போல, ஸ்டைலாகப் பின்பக்கமாக உதைத்து, அது நவீனமாக டப்டப் பென்று சீராக ஒலியெழுப்ப, ஒரு கையால் கடைவாசிகளிடம் வீசி விடைபெற்று, பைக்கை அப்படியே தரையைத் தொடுமாறு மடித்து, கடையில் இருந்து மவுண்ட்ரோட்டில் தவழ்ந்தான்.
“இதென்ன இப்படிப் போறான் இவன்” என்று அலுத்துக் கொண்ட அப்பா, கணேசனிடம் “இதையா வாங்கப் போறோம் நாம?”என்றார் கவலையாக.
“இல்லப்பா” என்றான் கணேசன் ஏக்கத்துடன்.
அவன் மனதில் அந்த அவன் தரையில் மடிந்து எழுந்த காட்சி திரும்பத் திரும்ப ஓடியது. அது தன்னால் எந்தக் காலத்திலும் முடியாது. அதை விடத் தான் வாங்கப் போகும் வாகனத்தாலும் முடியாது.
“இது பைக்குப்பா.. நாம வாங்கப் போறது ஸ்கூட்டர் “
கடையில் யாருமே இவர்களைக் கண்டு கொள்ளவில்லை.
அப்பாவின் வேட்டி சட்டை அவர்களை ஈர்க்கவில்லை. கடையில் இருந்தவர்கள் இவர்கள் ஏதோ வழிதவறி விலாசம் விசாரிக்க வந்தவர்கள் என்றே நினைத்திருக்க வேண்டும்.
கணேசன் அங்கு இருந்த ஒரு நபரை அழைத்துத் தாங்கள் வந்த காரணத்தைக் கூற அங்கே லேசாக ஒரு பரபரப்பு தோன்றியது.
“என்ன வண்டி சார் வேணும்?”
கணேசன் முதல் நாள் காலையில் தாங்கள் தினசரியில் பார்த்த விளம்பரத்தைக் கூறினான்.
“ஓ.. அதுவா..” என்று இவர்களை வேறொரு இடத்திற்கு அழைத்துப் போனான்.
அங்கே ஒரேயொரு ஸ்கூட்டர் சாம்பல் வண்ணத்தில் நட்ட நடு ஹாலில், கன்றுக்குட்டியைக் கட்டிப் போட்ட மாதிரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
“இது தானா..” என்று அப்பா அதனருகில் சென்று பசுமாட்டைத் தடவுவது போல் அதன் இருக்கையைத் தடவிக் கொடுத்தார். அதுவும் பதிலுக்குக் கனைத்த மாதிரி தான் தோன்றியது.
“சின்னதா இருக்கு.. ஆனா நல்ல கலர்.. இங்கிலீஷ் கலரோன்னோ.. பாக்க நன்னா இருக்கு.. ஆனா அதுக்காக இவ்வளவு காசு இதுக்கு?”
அதற்குள் ஸ்கூட்டர் பிரிவில் இருக்க வேண்டியவர் வந்து விட்டார். வண்டி செய்யக் கூடிய ஜாலக்குகளை தங்குதடையின்றி ஒரு பிரவாகமாக ஒப்புவித்தார்.
“இது எல்லெம்மலா?” என்றான் கணேசன்.
“இல்ல சார்.. இது ஏப்பி மோட்டார்ஸ்.. கவர்மென்ட் “
அப்பாவைப் பொறுத்தவரை கவர்மெண்ட் என்பது மந்திரச்சொல். அவருக்கு இப்போது சுவாரஸ்யம் மேலும் கூடியிருந்தது.
கவர்மென்ட் என்றால் அதில் தரம் தாண்டவமாடும் என்ற அசட்டு நம்பிக்கையை அவர் எவ்வளவு அனுபவப்பட்டும் தளர்த்திக் கொள்ளவில்லை.
இப்படித்தான் இரண்டு வருடங்கள் முன்னால் ராதாநகரில் பளபளவென்று இருந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் குடும்பமாகப் போய் டிவி வாங்கினார்கள். அந்தக் கடையின் முதலாளி அப்பா வேலை பார்க்கும் வங்கிக் கிளையின் வாடிக்கையாளர். அந்தக் கடையில் மஸ்டாங் டீவியை பிரத்யேகமாக விற்று வந்தனர்.
கணேசனுக்கும் அவன் அப்பாவுக்கும் மஸ்டாங் டீவியில் அவ்வளவு பிடித்தமில்லை.
கணேசன் எலக்ட்ரிக் ட்ரெயினில் கல்லூரி போகும் போது கிண்டி ஸ்டேஷனில் கிடைத்த இடத்தில் எல்லாம் மஸ்டாங் டீவி என்று வரைந்து தள்ளி இருப்பார்கள்.
எந்தக் காலத்திலும் உபயோகப்பட்டுவிடாத கழிப்பறை சுவர்களிலும் கூட ஆண்பிள்ளை மஸ்டாங் பெண்பிள்ளை மஸ்டாங் என்று எங்கும் வியாபித்து இருந்தது.
டீவி விற்ற சொல்ப லாபத்தைச் சுவர்களில் தீட்டி வீணடித்து இருந்தது கம்பெனி.
இவர்களது போதாத காலம் ஒரேயொரு கெல்ட்ரான் டீவியும் இருந்தது.
அதன் அமைப்பு இவர்கள் எல்லோருக்குமே பிடித்து விட்டது. அது இயல்பாகவே மரக்கதவுகள் பொருத்தப்பட்ட ஒரு அழகான கட்டமைப்பில் வடிக்கப்பட்டதாக இருந்தது.
அதில் காட்சிகள் அதீத துல்லியமாகத் தெரிந்தன. மஸ்டாங் டீவியில் டீவிக்கே சாளேஸ்வரம் வந்தது போல் தான் காட்சிகள் தெரிந்தன.
ஆனால், விலையைக் கேட்டதும் அம்மாவுக்குத்தான் முதலில் தூக்கி வாரிப்போட்டது.
“இதென்ன யானை விலை குதிரை விலையான்னா இருக்கு.. நம்ம கிராமத்து வீட்டை இதே விலைக்குத்தான் அந்தக் கழிச்சல்ல போறவனுக்கு தாரை வார்த்தார் உங்கப்பா”.
அம்மா ஆரம்பித்தால் நிறுத்த மாட்டாள். வீடு கட்டும் போது கான்ட்ராக்டரிடம் ஏமாந்தது, பன்னிரண்டு வேலிநிலம் பெரியப்பாவிடம் ஏமாந்தது.. எதில் தான் ஏமாறவில்லை? நம்பி நம்பி ஒவ்வொரு முறையும் ஏமாந்தாகி விட்டது.
ஆனால், கெல்ட்ரான் கவர்மென்ட் என்ற சுழலில் வீழ்ந்து விட்ட அப்பா, உடனே அதையே வீட்டுக்கு அனுப்பச் சொல்லி விட்டார்.
அந்தக் கடையின் உரிமையாளர், அப்பாவுக்கு நன்றாக அறிமுகமானவர், கொஞ்சம் யோசித்து முடிவெடுக்கச் சொன்னார். “இன்னும் ரெண்டாயிரம் போட்டா கலர்-டீவியே வாங்கிடலாம் சார்.”
“அது டீவில கலர் புரோக்ராம் வரும் போது வாங்கிண்டா போச்சு” என்று அவரை மேக்கரித்து விட்டார் அப்பா.
அவர் எதையுமே யோசித்து முடிவெடுப்பவர் என்றாலும் இரண்டு விஷயங்களில் யோசிப்பதே கிடையாது.
ஒன்று, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கணேசனை சலூனுக்கு அழைத்துப் போய், சம்மர்கட் என்ற பெயரில் கிட்டத்தட்ட முடி இறக்கி விடுவது. இரண்டாவது கவர்மென்ட் என்ற பெயரில் யார் எதை விற்றாலும் வாங்கி விடுவது.
டிவி முதலில் நன்றாகத்தான் இருந்தது. பிறகு, அதனிடம் யாரோ கணேசனைப் பற்றிக் கோள் மூட்டியிருக்க வேண்டும்.
அபூர்வமாக அவன் வீட்டில் இருக்கும் பகல் நேரங்களில், மறுபடியும் அபூர்வமாக ஒளிபரப்பப்படும் கிரிக்கெட் மேட்ச்சுகளைப் பார்க்க நேர்ந்தால் வல்லடி வந்து விடும்.
டீவியில் அப்புறம் புள்ளி வைத்த கோலம் தான். கருப்பு வெள்ளைப் புள்ளிகளாகத் திரை முழுக்கத் தென்படும். நடுநடுவே நிகழ்ச்சிகளின் ஒலிகளும் மழையில் மாடுகள் கனைப்பது போல வந்து போகும்.
கத்துக்குட்டி முதல் கதறக்கதற பெட்டியைத் திறந்தாலே ஐம்பது ரூபாய் கறந்து விடும் லோகநாதன் உள்பட பார்த்தாகி விட்டது. அவ்வளவு செலவையும் டீவி விழுங்கி ஏப்பம் விட்டது.
கடைசியில் இது சரிப்படாது என்று கணேசன் பகல் நேரங்களில் டீவி பார்க்கக் கூடாது என்று தடையுத்தரவு போடப்பட்டது. இந்தத் தடையுத்தரவு அவன் சகோதரிக்குக் கிடையாது.
அந்த சரித்திரப்புகழ் பெற்ற நாளில், அவள் தோழி மெனக்கெட்டு எங்கிருந்தோ வாடகைக்கு எடுத்து வந்த டெக்கில் பழைய மிஸ்ஸியம்மா படம் பார்த்தது தப்பாகி விட்டது.
சாயங்காலம் டீவியில் ஒரே இழைகோலம்.
அகில உலகில், இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்றதை, நேரலையாகப் பார்க்காமல் இருந்த ஒரே இந்திய கிரிக்கெட் வெறியன் கணேசன் தான்.
“ஒழுங்கா பாத்து ஓட்டுடா” என்று அதட்டினாள் அம்மா.
“எங்கயாவது சாக்கடைல கொண்டு போய் விட்டுடப் போற”.
ஆனாலும் கணேசன் பாலன்ஸ் பண்ண முடியாமல் இடதுகை குறக்களி வாங்குவதை சமாளிக்க முடியாமல் மறுபடியும் பழைய நினைவுகளில் மூழ்கினான்.
வலது புறம் வரதராஜா தியேட்டர் மெதுவாக நகர்ந்தது. வண்டி கணேசன் மாதிரியே பலகீனமாக இழுக்க முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்தது. கங்கைச் சொம்பு இருந்தால் உடைத்து ஊற்றலாம் என்ற அளவில் அதன் இழுப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது.
“அரிசி மூட்டையை முன்னால கால்மாட்டுல வச்சுக்கினு பறக்கலாம் சார்”
“அப்படியா சொல்றீங்க?”
“ஆமாம் சார்.. வாங்கினவங்க எல்லாம் ஃபோன் மேல ஃபோன் போட்டு ஒரே பாராட்டு.. வெண்ணை மாதிரி வழுக்கிக்கினு போவுதுன்றாரு ஒருத்தரு.. கிக் பண்றதுலயே கிக்கு இருக்குதுப்பா.. கால் கட்டை விரலால கிச்சு கிச்சு மூட்னாலேயே ஜிவ்வுனு கிளம்புதுய்யா வண்டின்றாரு இன்னொருத்தரு..
ரெண்டே நிமிசத்துல எண்பதுக்கு எகிறுது ஆஸிலேட்டரு.. காத்துல பேப்பர் கணக்கா பறக்குதும்மா வண்டி.. என்னா சோக்கா போவுது தெரியிதான்றாரு ஒத்தரு.. இப்பக் கூட ஆராச்சும் கூப்டுவாங்க பாருங்க.. ஃபோனை உங்ககிட்டயே தர்றேன்.. நீங்களே இன்னா வேணாலும் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க”
“அதெல்லாம் வேண்டாம் ”
இருவரும் போய் வண்டியை விநோதமாக நோட்டம் விட்டனர். உண்மையில் அதில் எதைப் பார்க்க வேண்டும் என்று கூட அவர்கள் இருவருக்கும் தெரியாது. ஆனால், ரொம்பவும் தெரிந்த மாதிரி ஒரு தோற்றத்தைக் காண்பிக்க முயன்று தோற்றனர்.
அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களது அறியாமையைத் தான் காட்டுவதாக அமைந்தது.
கணேசன் அதில் ஏதோ பித்தானை இன்டிகேட்டர் என்று அமுக்க, அது கொய்ங் கொய்ங் என்று தொண்டை கட்டிய எருமைக்கன்று ஈனஸ்வரத்தில் கத்துவது போல கத்தியது.
கணேசன் பயந்து விட்டான்.
அந்த சேல்ஸ் நபர் சிரித்து விட்டு,
“என்னிக்கு வாங்கறதா இருக்கீங்க” என்று கேட்டார்.
கணேசன் ஏதும் கூறாமல் அப்பாவைப் பார்த்தான்.
அவர் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, “இன்னிக்கு நாள் நன்னாத்தான் இருக்கு.. இன்னிக்கே புக் பண்ணிடேன்” என்றதும் கணேசனை விட அந்த நபர் அதிகமாக மகிழ்ச்சி அடைந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த காட்சியகத்தில் கணேசன்களின் அந்தஸ்து அதி உயரத்தை அடைந்து விட்டது.
துரிதமாக நாலு பேர் வந்து காட்சிக்கு வைத்திருந்த வண்டியை அலாக்காகத் தூக்கி அவசரம் அவசரமாகத் துடைத்தனர்.
இன்னும் இரண்டு பேர் வந்து கலாட்டா கல்யாணம் படத்தில் கோபாலகிருஷ்ணனுக்கு சிவாஜியும் நாகேஷூம் பான்ட் அணிவிப்பது போல வண்டிக்கு சீட் கவரை மாற்றி விட்டனர். ஐந்து மருமகள்கள் கதை மாதிரி ஆளாளுக்கு அதற்கு அலங்காரம் செய்ததில் அதன் சோபையே குறைந்தாற் போல கணேசனுக்குத் தோன்றியது.
அப்போது தான் கணேசனுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. இருந்த ஒரே வண்டியைத் தங்கள் தலையில் கட்டுகிறார்களே என்று.
அதை வாய்விட்டே கேட்டு விட்டான்.
“என்ன தம்பி இப்படி கேட்டுப்புட்டீங்க.. அயிநூறு வண்டி வித்திடிச்சி இத்தோட.. டிஸ்ப்ளேல வெச்சு மாளலை.. வய்க்க வய்க்க வித்துக்கினே கீது.. ப்ரீமியம் வண்டி தம்பி இது.. இதுதான் கடைசி பீசு.. இனுமே ஸ்டாக்கு வந்தாத்தான்”.
கணேசன் மிகவும் தயங்கி, “இல்லை.. எனக்கு மஞ்சள் கலர்லதான் வண்டி வாங்கனுமா இருந்தது”
“ஐயய்யே” என்றார் அவர். “அது என்ன நல்லாவா இருக்கும்?”
கணேசனுக்குத் தொண்டையை அடைத்தது. அவர்கள் குடும்ப டாக்டர் ராம்குமார் ஜம்மென்று மஞ்சள் நிற வெஸ்பாவில் வந்து தான் இறங்குவார். அவர் ஒரு கையால் ஹாண்டில் பாரைப் பிடித்து அலட்சியமாக வண்டியை ஸ்டாண்டு போடும் அழகே தனி.
அதைப் பார்த்து தான் கணேசனுக்கு ஸ்கூட்டரில் சமாதானமானது.
ஆனால், அவன் அதிர்ஷ்டம் அழுது வடியும் நிறத்தில் ஒரு வண்டி சித்தித்து இருக்கிறது.
அவனை மேலும் சிந்திக்க விடாமல் அப்பா அதட்டினார்.
“மஞ்சளும் வேண்டாம் இஞ்சியும் வேண்டாம். இந்தக் கலரே பிரமாதமா இருக்கு.. இதுவே இருக்கட்டும்..”
கடைக்காரர் சொன்ன தொகையில் லேசாக பேரம் பேசி நானூறு ரூபாய் குறைத்து பன்னிரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்து நான்கு ரூபாய் என்று முடிவாகி செக்கும் கொடுத்தாகி விட்டது.
போன வாரம் கணேசன் நண்பன் ஒருவன் ஹோண்டா பைக் வாங்கி இருந்தான். இதைவிட எண்பது ரூபாய் குறைச்சல். ஆனால் அப்பாவைப் பொறுத்த வரை எந்த வண்டியாக இருந்தாலும் ஸ்டெப்னி இருக்க வேண்டும். எங்காவது முள் குத்தி பஞ்சராகி விட்டால் சிரமப்படக் கூடாது.
கணேசன் பைக் வாங்கக் கூடாது என்பதற்காகவே பைக்கில் இன்று வரை ஸ்டெப்னி இல்லை . நாள்பட்ட சதி.
அப்படி இப்படி ஒரு மணி நேரம் ஓடிவிட்டது.
வண்டியைப் பிரமாதமாகத் துடைத்து, கல்யாணமாவதற்கு முன்னாலேயே ரிசப்ஷனில் தற்காலத்தில் நிறுத்தப்படும் மணப்பெண் போல அது அழகுடன் துலங்கியது.
அதோடு அதன் நிறத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு சிவப்பு நிற ஹெல்மெட்டும் வாங்கிக் கொண்டனர்.
ஒரு இன்ஜினீயர் வந்து ஆதியோடந்தமாக ஸ்டெப்னி மாற்றுவது உள்பட விளக்கிவிட்டு, “தம்பி.. மவுண்ட் ரோடுல ட்ராஃபிக் ஹெவி.. அப்பாவை பின்னால ஜாக்கிரதையாக பிடிச்சிக்கிட்டு உட்காரச் சொல்லுங்க”
அப்போதுதான் கணேசன் அவரிடம் தனக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது என்ற உண்மையைச் சொன்னான்.
“என்னது.. வண்டி ஓட்டத் தெரியாதா.. நிஜமாவா.. காலேஜ்ல படிக்கறீங்க..?”
“அப்பாக்கும் ஓட்டத் தெரியாதுங்க”
“என்னய்யா.. என்ன தகிரியத்துலய்யா வண்டி வாங்குனீங்க?”
“வாங்கிட்டு போயிக் கத்துக்கலாம்னு.. டீவியெல்லாம் டோர்-டெலிவரி பண்றா மாதிரி ஸ்கூட்டரைப் பண்ண மாட்டீங்களா?”
“சரிதான் “
அதற்குள் அப்பா மெதுவாக, “எதுக்கு அநாவசியமா தர்க்கம்? யாராவது ஒரு மெக்கானிக்கை ஓட்டிண்டு வரச் சொல்லுங்க.. இவன் பின்னாடி உக்காந்துக்கட்டும்.. நான் பஸ்ஸில் வந்துடறேன்.. போயிட்டு வர்றதுக்கு சார்ஜ் கொடுத்துடறேன்”
“ஊடு எங்கே”
சொன்னார்.
“அடேங்கப்பா.. போயிட்டு வர்றதுக்கே த்ரீ அவர் ஆகும்.. டூ ஹன்ட்ரட் கொடுப்பியா”
பதிமூன்றாயிரத்துக்கு அவ்வளவாகப் பேரம் பேசாதவர், வரிந்து கட்டிக் கொண்டு அவனோடு அரைமணி மல்லுக்கு நின்று, படிக்குப் பாதி குறைத்து, நூறு ரூபாய்க்கு ஒத்துக் கொள்ள வைத்தார். மகோன்னதமான வெற்றிப் புன்னகை அவர் முகத்தில் ஓடியது.
கணேசன் வண்டியை மற்றுமொரு முறை பார்த்தான். வழக்கமான வாகனங்களை விட மிகவும் சிறியதாக இருக்கும் போலத்தான் தோன்றியது.
இவ்வளவு பேரம் பேசாமல் ஆளுக்கு ஒரு கைப்பிடித்து கஷ்கத்தில் இடுக்கிக் கொண்டு காலாறப் போயிருக்கலாம். அக்கா பெண்களுக்கு விளையாட வாங்கி வந்தாயா என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்களோ?
வேறு ஏதாவது கலரிலாவது வாங்கி இருக்கலாம். பழைய லேம்ரட்டா ஸ்கூட்டர்கள் அநேகமாக இதே நிறத்தில் தான் இருக்கும். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். நிறத்தை உத்தேசித்து இதை ஸ்கூட்டர்தான் என்று நண்பர்கள் ஒப்புக் கொள்வார்கள்.
ஆனால் இல்லை என்று அடுத்த நாளே நிரூபணமாகி விட்டது.
“என்னடா.. இந்த ஒழிச வண்டியைப் போயி வாங்கி இருக்கே?” என்றான் ராஜசேகர்.
“என்னடா அப்படி சொல்றே”
“இதெல்லாம் ஒரு வண்டியாடா? பின்னாடி பாத்தியா? கோழியோட பின்பக்கம் மாதிரி சூம்பிக் கிடக்கு.. எங்க மாமா ஒருத்தரு ஐதராபாத்துல இருக்காரு.. அவுரு போன மாசம் இந்த வண்டியை வாங்கிப்புட்டுப் படாதபாடு பட்டுக்கிட்டு இருக்காரு.. மொத்தமே பத்து வண்டிதான் பண்ணியிருப்பான் போலருக்கு.. செஞ்சு பாத்துருக்கான்.. சரியா வரலை…. ஒண்ணு ரெண்டு அங்கங்க அனுப்பிச்சு விக்குதான்னு வெள்ளோட்டம் விட்ருக்கான்.. ரெண்டே ரெண்டு கேனைங்கதான் சிக்கியிருக்குது.. ஒண்ணு ஐதராபாத்துல.. இன்னொண்ணு நம்மூர்ல” என்று கூறி இடிஇடியென்று சிரித்தான்.
கணேசனுக்கு அழுகையாக வந்தது. அதிலிருந்து அந்த வண்டியுடனான தன் உறவைச் சிறுகச் சிறுகக் குறைத்துக் கொள்ளவாரம்பித்தான்.
நாலைந்து மாதங்களிலேயே வண்டி பழுதாக ஆரம்பித்து விட்டது.
இதோ இப்போது அம்மாவின் அதட்டலில் கிளம்பி வெள்ளோட்டம் போகிறது.
“வீடு ஞாபகம் இருக்கில்ல”
“எல்லாம் இருக்கு.. ஸ்டேஷனை ஒட்டி கொஞ்ச தூரம் ட்ராக் ஓரமா போனா மூணாவது குவாட்டர்ஸ்”. இதற்கு முன் ஓரிரு முறை சைக்கிளில் சென்று இருக்கிறான். ஸ்கூட்டரில் இது முதல் முறை.
அந்த வீட்டின் பெண்மணி பளிச்சென்று இருப்பார். நடுத்தர வயது. மூன்று குழந்தைகள். சிரம ஜீவனம்.
அவர் கணவர் ரயில்வேயில் பாயிண்ட் அடிப்பவர். அவரது தகப்பனார் காங்கிமேனாக இருந்தவர் தலை சுற்றி விழுந்து அடிபட்டுக் கொண்டதில் இவருக்கு அனுதாபத்தின் பேரில் வேலை கிடைத்து விட்டது.
மங்களூர் ஓடு வேய்ந்து அனல் பரப்பும் சின்னஞ்சிறு குடியிருப்பில் ஒரேயொரு அறைதான். அதுதான் வரவேற்பறையும் கூட. அதை அப்படியொரு சுத்தமாக வைத்திருப்பார் அவர். அந்த அறையின் நெடிதுயர்ந்த சுவற்றில் சுவர் முழுக்க ஆணியடித்து, அந்த மகானின் பெரிய பெரிய படங்கள். அப்படியொரு பெரிய படம் ஆணியில் மாட்டப்படாது, ஒரு ஸ்டூலில் அழகாக நிறுத்தப்பட்டு, அதன் கீழே வேறொரு மரப்பலகையில் பலமுறை தோய்க்கப்பட்டு நிறமிழந்த ஒரு பட்டுத்துணி.
அதில் ஓரிரு பூக்கள்.
அந்த அறையில் தான் பஜனை நடக்கும். கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். நிறைய அற்புதங்கள் நடந்திருப்பதாக அக்கம் பக்கத்தில் பேசுவார்கள். படங்களில் அவ்வப்போது மஞ்சள்நிறப் பொடி கசிவதும் உண்டு. கணேசன் பார்த்தது இல்லை. ஆனால் நம்புவான். அவனுக்கு சிறுவயதில் இருந்தே மகான்களிடத்தில் நம்பிக்கையும் ப்ரேமையும் உண்டு.
தற்போது சில காலமாக ஒரு அற்புதம் நடைபெற்றே ஆகவேண்டும் என்று அவர்கள் குடும்பம் அனுதினம் ஏங்குகிறது.
இல்லாவிட்டால் அவன் அம்மா இப்படி கையைக் கூடத் துடைத்துக் கொள்ளாமல் ஓடி வர மாட்டாள்.
கடந்த சில மாதங்கள் முன்பு இதே மகான் சென்னை வந்தபோது அவரைப் பார்க்க முயன்றனர். தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பே கிட்டியது.
இதோ இந்தச் சின்னஞ்சிறிய வீட்டிற்கு அவ்வளவு பெரிய மகான் வருகை தருகிறார் என்பது தான் எவ்வளவு பெரிய வாய்ப்பு?
கணேசன் அந்த வீட்டை சுலபத்தில் அடைந்து விட்டான். வண்டியை நிறுத்தி ஸ்டாண்டு போடுவதற்குள் அம்மா வெறி பிடித்தவளைப் போல அந்த வீட்டிற்குள் ஓடினாள்.
கணேசனும் சைடு ஸ்டாண்டு போட்டு விட்டு பின்னாடியே ஓடினான்.
வீட்டின் அந்த வரவேற்பறை மூடியிருந்தது. சமையலறையில் அந்தப் பெண்மணி நன்றாக உடையணிந்து நின்று கொண்டிருக்க, அவர் முன் நாலைந்து பேர் நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர்.
அம்மாவுக்குப் புரிந்து விட்டது. அவரை அணுகிக் கைகூப்பி வணங்கினார். பேச்சு வரவில்லை. கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
அந்தப் பெண்மணி அம்மாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.
“கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் இருந்தாரும்மா.. முதல்ல நாலுமணிக்கு வரதாத்தான் சொன்னாங்க.. ஆனா என்ன காரணமோ மூணுமணிக்கே வந்துட்டாங்க.. எங்க பசங்களோட குழந்தையாட்டமா இங்க அங்க குதிச்சு ஓடி விளையாடினாரு.. அவர் வந்த உடனே அந்த ரூமுக்குத் தான் அழைச்சிட்டுப் போயிக் காட்டினேன்.
அந்த ஃபோட்டோக்களை ரெண்டு நிமிஷம் உத்துப் பார்த்தார். கண்ணை இடுக்கிக்கிட்டு என்னைப் பார்த்து லேசா சிரிச்சார். சட்டுனு வெளீல வந்தார். நாங்க பின்னாடியே வந்தோம்.
கதவை மூடுன்னார். ரூம் கதவை மூடினோம். எங்க பசங்களோட வெளையாட்டுக் காட்ட ஆரம்பிச்சிட்டார்.
எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. என்ன கேக்கணும்னும் தெரியலை. கூட வந்தவங்களும் எதுவும் சொல்லலை.
கொஞ்ச நேரம் பொறுத்து எங்களைக் கூப்பிட்டு அந்த ரூமைத் திறக்கச் சொன்னாரு..
திறந்து பாத்தா என்ன ஆச்சரியம், எல்லா ஃபோட்டோலேருந்தும் மஞ்சள் பொடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது.. தரையெல்லாம் பவுடர்..
சாமி உள்ளே போனாங்க.. அவரு காலெல்லாம் மஞ்சள் நிறமாயிடிச்சு.. அங்கயும் இங்கயும் நடக்கறாங்க..
ரூம் முழுக்க அவர் பாதம் அளவெடுத்து வரைஞ்சா மாதிரி.. அதுக்குள்ள கூட்டம் சேர்ந்துடுச்சு..
சாமி சட்டுன்னு வரேம்மான்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க..”
இப்போது அவர் கண்களில் இருந்து பொலபொலவென்று பொய்மை இல்லாத கண்ணீர்.
ஒருவேளை தாங்கள் வருவது தெரிந்து தான் சீக்கிரமே வந்து சீக்கிரமே கிளம்பி இருப்பாரோ?
எதிர்மறை எண்ணங்களுக்கு எந்த வகையிலும் இடம் கொடுக்க வழியில்லாத நிலையில் அந்த மாதிரி நினைப்புகளைப் புறந்தள்ளி, அவர் வந்து, துள்ளி விளையாடிவிட்டுப் போன அறையைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று தோன்றியது.
அந்தப் பெண்மணி சற்று யோசித்து விட்டு, கணேசன் குடும்பத்தின் இக்கட்டான எதிர்பார்ப்பை உத்தேசித்து, வாசல் கதவை யாரும் நுழையாதபடி சார்த்தி விட்டு, அறைக்கதவைத் திறந்து விட்டார்.
அந்த அபூர்வக் காட்சி கற்பனைக்கு எட்டாதது. இன்னமும் மஞ்சள் பொடி கசிந்து கொண்டு இருந்தது. தரை முழுக்க கோகுலாஷ்டமி கண்ணன் பாதம் போல சிறிதும் பெரிதுமாக பாதங்கள். அழகான மஞ்சள் பாதங்கள்.
“நாளக்கி வரைக்கும் கலைக்க வேண்டாம்னு நினைக்கிறோம். நாளைக்கு இந்தப் பக்கம் வந்தா ஒரு டப்பால கொடுத்து விடறோம். மகா ப்ரசாதம்மா. உலகம் முழுக்க எத்தனை பேரை குணமாக்கி இருக்காரு சாமி.. உங்க குடும்பத்தைக் கைவிட்ருவாரா என்ன?”
அம்மா மறுபடி கண்கலங்கி விட்டுக் கிளம்பினாள்.
கணேசன் இரண்டு முறை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே வெளியில் வந்தான்.
வெளியே அந்தக் குடும்பத்தின் மூன்று பெண் குழந்தைகளில் இரண்டு, அவர்களிடம் இருந்திருக்கக் கூடிய ஒரேயொரு புது உடுப்பில் மஞ்சள் துலங்க மண்ணில் விளையாடி மேலும் அழுக்காக்கிக் கொண்டு இருந்தன. கடைசிப் பெண்ணுக்குப் பசியோ என்னமோ மற்ற இரண்டிடமும் சிணுங்கிக் கொண்டு இருந்தது.
கணேசன் ஸ்கூட்டரை ஸ்டாண்டை நீக்கி விடுவித்து அமர்ந்து கொண்டான்.
அவன் அம்மா சற்று சிரமப் பட்டு ஏறி அமர்ந்து கொண்டாள்.
புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
“நம்மள பாக்கப்படாதுங்கற மாதிரி அவசர அவசரமா வந்துட்டுப் போன மாதிரி இருக்கேடா.. பயமா இருக்குடா”
கணேசன் பலமாக பெருமூச்சு ஒன்றை விட்டான். அவனிடம் முதலில் ஒரு அமைதியும் பின்னர் ஒரு புன்னகையும் எழுந்தது.
“என்ன இருந்தாலும் மகிமை தானேம்மா?”
“என்ன இருந்து என்னடா?”
“இருக்கறதுக்கும் இல்லாததுக்கும் வித்தியாசம் இல்லையா என்ன?”
அம்மாவுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. இல்லை புரிந்து தான் புரியாத மாதிரி மௌனம் சாதிக்கறாளோ என்னமோ?
“மஞ்சள் பொடி கொட்டறதே?”
“ஆமாம்”
“அதுனால என்ன ஆகும்?”
“தெரியலையே”
“அதுக்குப் பதிலா வைர வைடூரியம் வேண்டாம்.. வெறும் காகிதம்.. அச்சடிச்சது.. அம்பது நூறுன்னு கரன்சியா விழுந்தா இந்தப் பெண் குழந்தைகளை சந்தில நிறுத்தாம காப்பாத்தும் இல்லையா?”
மறுபடியும் பதில் இல்லை.
இரண்டு பேரும் ஒரு சேரத் திரும்பிப் பார்த்தார்கள்.
அதே பெண் குழந்தைகளைப் பெற்ற மாதரசி ஐந்தாவது முறையாகவோ பத்தாவது முறையாகவோ யாரிடமோ அலுக்காமல் அதே காலடித்தடம் பதிந்த கதையை அதே மோஸ்தரில் கண்கலங்கி விவரித்துக் கொண்டு இருந்தாள். அவள் கண்களில் அவநம்பிக்கை லவலேசமும் தென்படவில்லை. அவளது ஏழ்மை பொங்கும் பெண் குழந்தைகள் அதே அழுக்கில் விளையாடிக் கொண்டிருந்தன.
கணேசன் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு, சாவியைத் திருகி, வலது காலை வளைத்து கிக் ஸ்டார்ட்டர் மேல் மிகுந்த அலுப்புடன் வைத்தான்.
தடக்கென்று வண்டி கிளம்பி விட்டது!! வெண்ணெயைப் போல் வழுக்கிக் கொண்டு சாலையை அடைந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

அருமையான நடை. நல்ல வர்ணனை. வாழ்த்துக்கள்