காட்டுத்தடம்

எங்களுக்கு முன்னால் தூக்குக் கயிற்றைப்போல் ஆலமர விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்தது. பாதி உயிர் அதைப் பார்த்தவுடனயே போய்விட்டது. மீதி உயிர் போகும்படி விழுதுகள் தொங்கும் கிளைக்கு மேலுள்ள கிளையில் வடக்குப்பார்த்து அமர்ந்திருந்த ஆந்தையொன்று தன்னுடலை துளிகூட அசைக்காமல் தலையை மட்டும் திருப்பி தென்புறமாக விழுந்த எங்களை முண்டக்கண்ணை விரித்து இமைத் தட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பார்வை எங்களின் தலையை முதுகுப் பக்கமாகத் திருகி கொண்டை முடிச்சினை முறித்துக் கொல்வது போலிருந்தது. 

புளியமரத்தாள்

மரம் பூக்கணும்ன்னு இவ காத்துருந்தாளா! இல்ல இவ பூக்கணும்ன்னு மரம் காத்துருந்துச்சான்னு ஊருசனம் அதிசயமாய் பேசிய புளியமரத்தாளப் பாக்கப்போன எங்களப் பாத்து, ‘அடியே! நீங்களாம் எப்பும் குத்தவைக்கப் போறீங்கட்டின்னு கேட்டா!‘ அதுக்கு நாங்க, கால் வலிக்கும்போது  குத்தவைப்போம்ன்னு சொன்னோம்.

கனியக்கா

வீட்டுக்கு ரெண்டுக்கூறு எடுத்து மொதல்லயே கொடுத்துருவாரு. சில நாள் வியாபாரம் சரியில்லாமல் கறி மீந்துப்போச்சுன்னா. ஓவ்வொரு கூறையும் பனையோலைப் பட்டையில் போட்டு பொதிஞ்சி ஓலைப்பெட்டியில் அள்ளிப்போட்டு, சைக்கிள் பின்னாடி  வச்சுக் கட்டிக்கிட்டு பக்கத்தூரு… எங்கூருக்கெல்லாம் விக்க வருவாரு. அவர் குரலும் மலையாள வாடை கலந்த அழகான தமிழும் வாங்க விருப்பமில்லாதவர்களையும் வாங்க வச்சுரும்.