“சுகுமார் வீட்டு பூனை பல் துலக்கி முகம் அலம்புமாம்.” என்று பெரிய அண்ணன் சொன்னதைக் கேட்ட எங்களுக்கு பெரும் வியப்பாக இருந்தது. அந்த நிமிடமே, அந்த பூனை பல் துலக்குற அழகைப் பார்த்து விடவேண்டும் என்று ஆசை வந்தது. நான் ஆரம்ப பள்ளியில் ஒன்றாவது வகுப்பிலும், சின்ன அண்ணன் மூன்றாவது வகுப்பிலும், பெரிய அண்ணன் ஐந்தாவது வகுப்பிலும் முறையே பயின்று வந்தோம். பெரிய அண்ணனோடு பயின்று வந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த சுகுமார் என்கிறப் பையன் அவனது வீட்டில் பூனை ஒன்று இருப்பதாகவும், தற்போது, அது குட்டிகள் ஈன்று இருப்பதாகவும், அந்த பூனை பல் துலக்கி முகம் அலம்புகிற குணாதிசயம் கொண்டது என்றும் சொல்லிருக்கிறான். அதைத்தான் எங்களிடத்தில் வந்து சொன்னான். பாலப் பருவம் என்பது பிறர் சொல்கிற எதையும் அப்படியே உண்மையென்று ஏற்றுகொள்கிற பருவம் தானே. தாய்ப்பூனை பல் துலக்கும் என்றால் அதன் குட்டிகளும் பல் துலக்கத் தானே செய்யும் என்று நினைத்து, சுகுமாரியின் வீட்டில் இருந்து எப்படியாவது ஒரு பூனைக்குட்டியை எங்களுடைய வீட்டிற்கு கொண்டு வந்துவிட வேண்டுமென்று எங்கள் எல்லோருக்கும் ஆசை வந்தது.
“சுகுமார்கிட்ட கேட்டு எப்படியாவது ஒரு பூனைக்குட்டியை வாங்கிக்கிட்டு வந்துடு.” என்றோம் பெரிய அண்ணனிடம். அவனும் சென்று சுகுமாரிடம் ஒரு பூனையைக் கேட்டான். “பூனை, குட்டியை ஈன்று மூன்று நாட்கள்தான் ஆகிறது. அதற்கு, இன்னும் கண்கூட திறக்கவில்லை. கண் திறந்து, தானாகவே உணவு சாப்பிடுகிற நிலைக்கு வந்ததும் சொல்றேன், வந்து வாங்கிட்டு போ.” என்றான். அன்றைய தினத்திலிருந்து காலைப் பள்ளிக்கூடம் வந்ததும், முதல் வேலையாகச் சுகுமாரைப் பார்த்து பூனைகுட்டியின் நலத்தை விசாரித்து விட்டுதான் அவரவர் வகுப்பறைக்கு சென்றோம்.. எங்கள் வீட்டில் அம்மா ஏதாவது பலகாரங்கள் செய்திருந்தால் அதையும் மறக்காமல் சுகுமாருக்கும் எடுத்து வந்து தருவோம். இவ்வாறு நாட்கள் நகர்ந்தது. ஒரு நாள் பள்ளியின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று பூனைக்குட்டிகள் சோறு சாப்பிடுவதாகவும் நாளைச் சனிக்கிழமை வீட்டிற்கு வந்தால் பூனைக்குட்டி ஒன்றைத் தருவதாக சுகுமார் சொன்னான்.
சனிக்கிழமைப் பள்ளிக்கு விடுமுறை என்றாலும் பள்ளிக்கு சத்துணவு சாப்பிட செல்வதாக, எங்கள் அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் மாசிலாப்புரத்திற்கு சென்றோம்.
சுகுமார் பூனைக்குட்டிகள் இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்து சென்று காட்டினான். ஐந்து குட்டிகள் இருந்தது. ஐந்தும் ஐந்து நிறத்தில் இருந்தது. கருப்பும் வெள்ளையுமானப் பூனைக்குட்டி ஒன்று இருந்தது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அதையே எங்களுக்கு பிடித்திருந்தது. ஆனால், நாங்கள் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். அதற்கு காரணம் அது ஆண்குட்டி என்பதுதான். பூனையில் ஆண் குட்டியை வளர்க்கக் கூடாது என்று எங்களது பாட்டி ஒரு முறைச் சொல்லி இருந்தார். ஆண் பூனைக்கு என்னதான் பால், மீன் இறைச்சி என்று பூனைக்கு பிடித்த உணவாகக் கொடுத்து வளர்த்தாலும் அது பருவத்திற்கு வந்ததும் வீட்டில் தாங்காது, ஓடிவிடும் என்பார். அதே பாட்டி இன்னொன்றும் சொல்லுவார் பூனையில் பெண்குட்டியை வளர்ப்பது எப்படி நல்லதோ; அதுபோல, நாயில் ஆண்குட்டியையும் வளர்க்க வேண்டும், பெண் நாயை வளர்த்தால் அது பருவத்துக்கு வந்ததும் பெண் நாயை தேடிக்கொண்டு ஆண்நாய்கள் வர ஆரம்பிக்கும். பெண் நாயை யார் துணையாக்கிறதுங்கிறதுல ஆண் நாய்களுக்குள்ள போட்டி வந்து சண்டைப் போட்டு கொள்ளும். அதைத் துரத்த முயலுகிறவர்களைச் சில நேரம் கடித்துவிடும் என்பார். அப்படியே வளர்த்தாலும் அது குட்டி போடும்போது ஆண்குட்டி என்றால் எனக்கு உனக்கு என்று போட்டிப் போட்டுகொண்டு வளர்ப்பதற்கு வாங்கிச் சென்று விடுவார்கள். பெண் குட்டி என்றால் யாரும் திரும்பிகூடப் பார்க்க மாட்டார்கள். அப்பறம், அந்த குட்டியை பாலுங்கிணறு, குளம், குட்டை என்று ஏதாவது ஒன்றில் தூக்கிப் போட்டுவிட்டு அந்த பாவத்தையும் இந்த பிறவிக்கானப் பாவத்தோடு சேர்த்து நாமதான் சுமக்க வேண்டியது வரும். அப்படியே வளர்த்தாலும் எத்தனை நாயைதான் வளர்க்கிறது. வளர்க்கிற ஒத்த நாயிக்கு கஞ்சி ஊத்துறதே பெரும் பாடாகப் போகுது என்பார். அதை மனதில் வைத்து கொண்டு நாங்கள் ஒரு பழுப்பு நிறப் பூனைக்குட்டியைக் கேட்டோம். சுகுமார் எங்களுக்கு நாங்க கேட்ட பழுப்பு நிறப் பூனைக்குட்டியையே கொடுத்தான். பூனை குட்டியை நாங்கள் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து எடுத்து வந்தோம். பெட்டியை சின்ன அண்ணன்தான் கையில் வைத்திருந்தான். வீட்டின் முற்றச் சுவற்றுக்குள் நுழைந்தபோது( எங்கள் வீட்டின் முற்றச் சுவர் ஒன்றும் செங்கற்களாலும் சிமெண்டாலும் கட்டப்பட்டது அல்ல. நாலாப் புறமும் வெறும் மண்ணை குழைத்து வைத்து சுவர் போல கட்டி இருக்கும். மழைக்காலங்களில் அந்த சுவர் கரைந்து விடக்கூடாது என்பதற்காக, கைகள் இரண்டையும் சேர்த்து கும்பிடு போடுவதுபோல இரண்டு இரண்டு பனை ஓலைகளை இணைத்து சுவற்றிற்கு மேலே வைத்து கட்டி விடுவார்கள். எங்களது வீடும் செங்கற்களாலோ, சிமெண்டாலோ கட்டப்பட்டது அல்ல. முற்றச் சுவர்போல அதுவும் வெறும் மண்ணால் ஆன சுவர்தான். வீட்டின் கூரைப் பனை ஓலைகளைக் கொண்டே வேயப்பட்டிருக்கும். வீட்டின் தரையும் மண் தரையே. ஆனாலும், எங்க அம்மா ஒரு கண்ணாடி மாளிகையைப் பராமரிப்பது போலதான் பராமரிப்பார். தவறாது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் தரையை பசும் சாணத்தால் வர்ணம் வைத்து மெழுகிவிடுவார். நாங்கள் சாணம் மொழுவிய அந்த மண் தரையில் பாய், போர்வை, தலையணை என்று ஏதுமின்றியே உறங்கிக்கிடப்போம். கூரைகளில் ஒட்டடை என்பதை எங்கேயும் காணவே முடியாது.) அன்று அம்மா வீட்டின் முற்றத்தில் ஒரு ஓரத்தில் வைத்து சமைப்பதற்காக, மீன் கழுவிக் கொண்டிருந்தார். அம்மாவைப் பார்த்ததும் “பூனையை வேண்டாம்.” என்று சொல்லி விடுவாரோ என்கிறப் பயம் வந்தது. பூனையை அம்மா பார்த்துவிடதவாறு எப்படியாவது வீட்டுக்குள் கொண்டு போய்விட வேண்டுமென்று நானும் பெரிய அண்ணனும் சின்ன அண்ணனை மறைத்து கொண்டு பசப்படித்தபடி நின்றோம். அம்மாவுக்கு பூனை, நாயி வளர்க்கிறது அவ்வளவாகப் பிடிக்காது. கேட்டால் “நெல் மூட்டைகள் அவிழ்ந்து இருக்கும்போது பூனை நெல்லில் குழித்தோண்டி மலம் கழித்து வைத்துவிடும். நான் மாடு வளர்க்கிறவங்க வீடுகளுக்கு சென்று சாணத்தை வாங்கிக்கொண்டு வந்து முற்றம் தெளித்து பராமரித்து வைத்திருப்பேன். இந்த நாய் ஒரு நிமிஷத்துல குழித்தோண்டி நாசமாக்கிப் போட்டு விடும்.” என்பார். அதோட விடமாட்டார், அவ்வாறு குழித் தோண்டிய நாயை “ கையில் அகப்பட்டா, வெட்டாம விடமாட்டேன். கொல்லாமல் விட மாட்டேன்.” என்று கத்திக்கொண்டே இருப்பார். அவரைச் சமாளிக்கவே முடியாது. நாங்கள் மூவரும் திருட்டு முழி முழித்துகொண்டு நிற்பதை வைத்து சந்தேகம் வந்து எங்களை உற்று பார்த்தவருக்கு அட்டை பெட்டிக் கையில் இருப்பது கண்ணில் படவே “பெட்டியில என்னல ?” என்றார்.

தயங்கியவாறு “பூனைக்குட்டி” என்றான் சின்ன அண்ணன்.
“ஏது உங்களுக்கு?”
“மாசில்லாபுரத்துல. என்னோட படிக்கிற சுகுமார் தந்தான்.” என்றான் பெரிய அண்ணன்.
“பார்த்து பார்த்து நான் சமைக்கிறதையே ஆயிரத்தியெட்டு நொட்ட சொல்றவங்க. சனிக்கிழமையும் அதுவுமா, சத்துணவு சாப்பிடப் போறேன்னு சொல்லும் போதே நினைச்சேன். ஏதோ திட்டத்தோடதான் போறீங்கன்னு. நான் நினைச்சது சரியா போச்சு.” என்றார்.
“அம்மா, இது பல் துலக்குமாம், முகம் கழுவுமாம், மலம்கூட வெளியில போயி அதுவே குழித் தோண்டி, கழிச்சிட்டு குழிய மூடி வச்சிட்டு வந்துருமாம். அதாம்மா வாங்கிட்டு வந்தோம். வேண்டாம்னு சொல்லிடாதம்மா.” என்றேன் நான்.
“ சரி, என்னவோ பண்ணிட்டு போவுது. வீட்டுல நெல்ல பூராம் எலி தின்னுறது. யாரு வீட்டுலயாவது ஒரு பூனைக்குட்டி இருந்தா, வாங்கிட்டு வாங்கன்னு நானும் உங்க அப்பாகிட்ட மாசம் ஒன்னா சொல்லிட்டு இருக்கறேன். வாங்கிட்டு வந்தப் பாடு இல்ல. பூனையக் கொண்டுபோயி அடுப்ப ஒரு மூனு சுத்து சுத்திட்டு, நெல் மூட்டை இருக்குற அறையில கொண்டு போயிக் கட்டிப் போடுங்க.” என்றார் அம்மா. அவ்வாறு சொன்னதும்தான் மூவரும் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு கொண்டோம். உடனே அம்மா சொன்னது போல வீட்டுக்குள் சென்று அடுப்பை மூன்று சுத்து சுத்திவிட்டு வந்து கட்டிப் போட்டு வைத்தோம்.
“மீனைக் கழுவி முடித்து ஒரு சட்டியில் வைத்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு மூடி வைத்துவிட்டு கடைக்கு மளிகைச் சாமான்கள் வாங்க செல்ல நினைத்தவர் எங்களிடம் “மீனு கழுவி வச்சிருக்கேன் விளையாட போனீங்கன்னா, கதவ சாத்தி தாழ்ப்பாள் போட்டுட்டு போங்க. நாயி ஏதாவது வந்து தின்னுட்டு போயிட போகுது.” என்று சொல்லிவிட்டு சென்றார்.
“பூனைக்கு மீனுன்னா ரொம்ப பிடிக்கும். அது ரொம்பவே விரும்பி சாப்பிடும்.” என்றான் பெரிய அண்ணன்.
“அப்படின்னா, அம்மாவுக்கு தெரியாம ஒரு மீன எடுத்து போட்டுடலாம்.” என்றான் சின்ன அண்ணன்.
“ அம்மாவுக்கு தெரிஞ்சா யேசுவாள்.” என்றான் பெரிய அண்ணன்.
உடனே, அம்மா மூடி வைத்துவிட்டு சென்று சட்டியை திறந்து பார்த்துவிட்டு “சட்டி நிறைய மீன் இருக்கு. ஒன்னு, ரெண்டு எடுத்தால் தெரியாது.” என்றான் சின்ன அண்ணன்.
எல்லாரும் சம்மதம் தெரிவித்து முதலில் பெரிய அண்ணன் சென்று ஒரு மீனை எடுத்து வந்து போட்டான். அந்த பூனை அண்ணன் சொன்னது போல நிமிடத்தில் மீனை தின்றுவிட்டு இன்னும் கிடைக்குமா? என்பது போல நாக்கை சுழற்றி சுவைத்த படி இருந்தது.
அதைப் பார்த்துவிட்டு “இன்னொன்னு போடலாம்மா?” என்றான் சின்ன அண்ணன். நாங்கள் இருவரும் ‘சரி’ என தலையாட்ட, அவன் சென்று ஒரு மீனை எடுத்து வந்து போட்டான். அதையும் தின்றுவிட்டு முதலில் செய்தது போலவே செய்து கொண்டு நின்றது.
“சுகுமார் இதுக்கு சோறு வச்சிருக்கவே மாட்டான் போல, ரொம்ப பசியில இருக்குது.” என்றேன் நான்.
என்னிடம்“ நாங்க ரெண்டு பேரும் போட்டாச்சி. இனிமேல, நீதான் போடணும்.” என்றான் சின்ன அண்ணன்.
நான் சென்று ஒரு மீனை எடுத்து வந்து போட்டேன். மூன்று மீனை தின்றுவிட்டு இன்னும் வேண்டும் என்பது போல இருந்தது.
“இனிமேல, போட்டா அம்மாவுக்கு தெரிஞ்சிடும்.” என்றான் பெரிய அண்ணன்.
அதன்பிறகு நாங்கள் அவரவர் வேலையைப் பார்க்க சென்றுவிட்டோம். ஆனால் எனக்கும் சின்ன அண்ணனுக்கும் தெரியாமல் பெரிய அண்ணன் சென்று நாங்கள் அவனை கவனிக்கவில்லையென்று நினைத்துகொண்டு மீண்டும் ஒரு மீனை எடுத்து பூனைக்கு போட்டான். அவ்வாறு நாங்கள் ஒவ்வொருத்தரும் ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் செய்வதாக நினைத்து கொண்டு ஆளுக்கு ஒரு மீனை எடுத்து போட்டோம்.
அம்மா மளிகைச் சாமானை வாங்கிவிட்டு வந்து குழம்பு ஆக்குவதற்காக அம்மியில் ஒரு அரை மணி நேரமாக மசாலா அறைத்துவிட்டு மீன் கழுவி வைத்த சட்டியை எடுத்து பார்த்தார். கழுவி வைத்துவிட்டு சென்ற அளவைவிட சட்டியில் மீன் குறைவாக இருந்தது.
எங்களிடம்“வீட்டுக்கு நாய் ஏதாவது வந்துச்சா?” என்றார் அம்மா.
“இல்லம்மா” என்றோம்.
“நான் கழுவி வைக்கும்போது நிறைய மீன் இருந்தது. இப்ப குறையுது என்ன பண்ணுனீங்க? பூனைக்கு எடுத்து போட்டுட்டிங்களா?”என்றார்.
‘இல்லை’ என்று சொன்னால் பொய் பேசுவதாக அம்மா நினைத்து கொள்வாரென்று “ஒரே ஒரு மீனுதாம்மா பூனைக்குட்டிக்கு போட்டோம்.” என்றபோது பூனைக்குட்டி வாந்தி எடுத்து வைத்துவிட்டது.
“கழுவி வச்சிட்டு போன மீனை பாதிக்கு மேல தூக்கி போட்டுறீக்கிங்க. அது அளவுக்கு மீறித் தின்னுபுட்டு வாந்தி எடுத்து வச்சியிருக்குது? மூனு பேரும் சேர்ந்து அள்ளிப் போடுங்க. இன்னைக்கு வெறும் குழம்பதான் ஆக்கி வைப்பேன் தின்னுங்க. எவனாவது எனக்கு மீன் இல்ல, உனக்கு மீன் இல்லேன்னு சொல்லுங்க. அப்ப இருக்குது உங்களுக்கு.” என்று கோபித்து கொண்டார்.
பூனை வாந்தி எடுத்து வைத்ததை எங்களை அள்ளிப் போடுங்க என்றதும், நானும் என் அண்ணன்களோடு சேர்ந்து அள்ளிப் போட வேண்டும் என்பதால் அருவருப்பாக இருந்தது எனக்கு. “நான் இல்லம்மா. பெரிய அண்ணன்தான் முதல்ல போட்டான்.” என்று முதலில் சரணடைந்தேன்.
“ அவனுக்கு என்ன? வெயில்ல வேகாம வெந்து சம்பாதிச்சு கொண்டு வந்தவளுக்குதான் தெரியும். வலியும் வருத்தமும்.” என்றார் அம்மா.
“நீயும் தானல போட்ட. என்னை மட்டும் மாட்டி விடுற?” என்றான் பெரிய அண்ணன்.
“நீங்க ரெண்டு பேரும்தான முதல்ல போட்டிங்க. அப்புறமா, நீங்க, என்னை போட சொன்னதுனாலதான், நான் போட்டேன்.” என்று இருவரையும் மாட்டிவிட்டேன்.
“எம்மா, நாங்க முதல்ல ஆளுக்கு ஒன்னுதான் போட்டோம்.” என்றவன். என்னை காட்டி “இவன்தான் நாங்க பார்க்களேன்னு எங்களுக்கு தெரியாம, தெரியாம போயி மீனை எடுத்து எடுத்து போட்டுட்டே இருந்தான்.” என்றான் சின்ன அண்ணன்.
“ஆம், பொய் சொல்லாத. நீ தண்ணீர் குடிக்கப் போற மாதிரி போயி, மீன் எடுத்து போட்டததான் நான் பார்த்தேன.” என்றேன்.
“எப்பல போட்டேன். பொய் சொல்லாத.”
“நீ போடும்போது கதவுக்கு பின்னால மறைஞ்சி நின்னு நான் பார்த்தேன.”
“எம்மா, என்னமாப் பொய் சொல்றான்.”
“நீ பொய் சொல்லாத.”
“நான் எங்கல பொய் சொன்னேன்.”
“ஏய், மூச்சி, பேச்சி.” என்றதும் அமைதியானோம். தொடர்ந்து…
“இப்ப ஏன் சண்டை போடுறீங்க? மீன போட்டது போட்டச்சி. இனிமேல, சண்டைப் போட்டா திரும்ப வந்துடுமா? மூனு பேரும் ஒத்துமையா போயிதான பூனைய வாங்கிட்டு வந்தீங்க. அதே ஒத்துமையோட இருந்தா போதும். நீங்க, யாரும் அள்ளிப் போட வேணாம். நானே போடுறேன். பேசாம இருங்க.” என்றவர் பூனை வாந்தி எடுத்து இருந்ததை அள்ளிப் போட்டுவிட்டு சமையல் அறைக்குள் சென்றார் .
“இவன எதுக்கும் சேர்க்க கூடாது.” என்று என்னை காட்டி பெரிய அண்ணனிடம் சின்ன அண்ணன் சொன்னான்.
“அதுதான் அம்மா எதுவும் சொல்லலைய.” என்று அப்பாவிப்போல முகத்தை வைத்து கொண்டு சொன்னேன்.
“ஆம். இப்ப, எதுவும் சொல்லல. இனிமேல, ஏதாவது அம்மாவுக்கு தெரியாம செஞ்சோம்னா அப்பவும் சொல்லிடுவ.”
“சத்தியமா, சொல்ல மாட்டேன்.”
“ஆம். நீ இப்ப, இப்படிதான் சொல்லுவ. அப்பறம் பேச்சி மாறிடுவ. உன்ன நம்ப முடியாது.”
“நான் வேணும்னா, படிப்பு மேல சத்தியம் பண்றேன்.” என்றேன்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.” என்றான் பெரிய அண்ணன்.
“பண்ண சொல்லு, பண்ண சொல்லு…ண்ணே!” என்று பெரிய அண்ணனை கட்டாய படுத்தினான் சின்ன அண்ணன்.
“இந்த ஒரு வாட்டி மன்னிச்சி விடுவோம்.” என்றான் பெரிய அண்ணன்.
“இவனைப் பத்தி தெரியாம, நீ இவன மன்னிச்சு விடுற.” என்று பெரிய அண்ணனிடம் கோபித்து கொண்டான் சின்ன அண்ணன்.
அப்புறம், மூவரும் சேர்ந்து விளையாட சென்றுவிட்டோம்.
அப்பா வேலைக்கு சென்றுவிட்டு வந்தார். அவர் வந்ததும், நாங்க பூனை பிடித்துகொண்டு வந்தது. மீனை ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் எடுத்து போட்டது. சண்டைப் போட்டது என்று எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அம்மா ஒப்புவித்தார்.
அன்று இரவு சாப்பாடு முடிந்ததும் எல்லோரும் படுக்க சென்றோம். படுக்கையில் கிடந்துகொண்டு தூங்காமல் பூனை காலையில் பல் துலக்க போவதைப் பற்றியும் அந்த காட்சி எப்படி இருக்கும் என்பதை அவரவர் கற்பனைக்கு எட்டியதைச் சொல்லிச் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தோம். காட்டு வேலை செய்து வந்த களைப்பில் அப்பா, அம்மா இருவரும் எங்கள் கற்பனைகளை கேட்டவாறு சீக்கிரமே தூங்கிப் போனார்கள். நாங்களும் வெகு சீக்கிரமே தூங்கி விட்டோம் ஆனால், எப்பொழுது தூங்கினோம் என்று தெரியாது.
பள்ளிக்கூடம் இருந்தது என்றால் அம்மா எங்களை எழுப்பும் வரை நாங்கள் எழுந்திருப்பதில்லை. மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்றாலும் கூட அதிகாலையிலயே எழுந்து பூனைக்கு முன்னால் பற்பொடியை தட்டி ஒரு பேப்பரில் வைத்துவிட்டு மூவரும் அமர்ந்திருந்தோம். பூனை பேப்பரில் வெள்ளையாக இருந்த பற்பொடியை எதோ உணவுப்பொருள் என்று நினைத்து மோந்து பார்த்துவிட்டு நெல் மூட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்து கொண்டது. “பூனை நம்மளப் பார்த்து பயப்படுது.” என்றான் பெரிய அண்ணன். அவன் அவ்வாறு சொன்னதும் எல்லாரும் மறைந்து நின்று கவனிக்க ஆரம்பித்தோம். ஒன்பது மணி ஆகியும் பூனை பல் துலக்கவே இல்லை. நெல் முட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்துகொண்டு வெளியே வரவும் இல்லை. பூனை பல் துலக்குவதைப் பார்க்காமல் நாங்கள் பல் துலக்குவதில்லை என்ற முடிவில் இருந்தோம். எங்க அம்மா சமையலை முடித்துவிட்டு வந்து சாப்பிட சொன்னார். அதன் பிறகு நாங்க ஒவ்வொருவராக சென்று பல் துலக்கிவிட்டு வந்து பூனையை ரகசியமாக கண்காணித்ததோம். அது பல் துலக்கவே இல்லை. “சாப்பிட்டுட்டு வந்து பார்க்கலாம்.” என்றான் பெரிய அண்ணன். எல்லோரும் சாப்பிடச் சென்றோம். சாப்பிட்டு முடித்திருந்தபோது எங்களது வீட்டிற்கு வந்து“ என்ன பூனை பல் துலக்குச்சா?” என்றான் பலவேச முத்து .
“இல்ல.” என்றோம்.
“சுகுமார் எமாத்திட்டானா?” என்றான்.
“அவன், என் நண்பன், என்னை ஏமாற்றலாம் மாட்டான்.”
“அவங்க, அப்பாவே ரொம்ப பொய் புழுகுவாராம். எங்க அப்பா சொன்னாரு.”
“எத வச்சி அப்படி சொன்னாரு?”
“ஒரு வாட்டி எங்க அப்பா, அவங்க அப்பாகிட்ட துணி வெளுக்கப் போட்டுருக்காரு. துணிய வெளுத்தவரு, பாதித் துணிய இஸ்திரிப் பண்ணி மேலயும் கீழேயுமாக வச்சிட்டு, பாதி துணிய இஸ்திரிப் பண்ணாம, மடிச்சி நடுவுல வச்சி கொடுத்துட்டாராம்.” என்றான் பலவேச முத்து.
“அது எதோ கவனம் இல்லாம நடந்திருக்கலாம். யாராச்சும் வேணும்மின்னே அப்படி செய்வாங்களா? இது புது இடம், அதுதான் பல் துலக்க கூச்சப்படுது. நாளைக்கு துலக்கும்” என்று சொல்லி பலவேச முத்துவை சமாளித்தோம். தொடர்ந்து அவன் “குமாரசாமி, செந்தில், குமார், ரமேஷ், ஆத்தியடியான், எல்லோரும் சேர்ந்து குளத்துக்கு குளிக்கப் போறோம், நீங்களும் வர்றீங்களா? அந்த சொல்லத்தான் வந்தேன்.” என்றான். சரியென்று நாங்க எல்லோரும் அவர்களோடு குளத்துக்கு குளிக்கச் சென்றோம். இரண்டு மணி நேரமாக குளத்தில் நீராடிவிட்டு வந்தோம். வந்ததும் பூனையைப் பார்த்தோம். அது நெல் மூட்டைய பிராண்டிப் பிராண்டி விளையாடிக்கொண்டிருந்தது. எங்களை பார்த்ததும் ஓடிப் போயி மறைந்து கொண்டது. விளையாட நண்பர்கள் சேர்ந்து இருந்ததால், அவசர அவசரமாகத் துணியை மாற்றிக்கொண்டு விளையாடுவதற்கு சென்றோம். விளையாட்டிற்கு இடையில், அப்பப்ப, தண்ணீர் குடிக்க வருவதுபோல வந்து பூனையைக் கண்காணித்து விட்டுதான் சென்றோம்.
காலையில் பால் வாங்கி வந்து சாதத்தில் ஊற்றி விரவி வைத்திருந்தோம். சாதத்தைப் பாதிக்கு மேல் சாப்பிட்டிருந்தது. பல்பொடி வைத்த இடத்தில் வைத்தது, வைத்தது போலவே இருந்தது. அதை வைத்து அன்று முழுவதும் பல் துலக்கவே இல்லை என்தாகப் புரிந்து கொண்டோம். அன்று இரவு தூங்கும்போது “இந்த பூனை எப்பதான் பல் துலக்கும்?” என்று பூனை பல் துலக்காதது பற்றி வருத்தம் தெரிவித்தப் படியே பேசிக்கொண்டு தூங்கிப் போனோம்.
மறுநாள் காலையில் எழுந்து பூனைய பார்த்தோம். அதுவரை நெல் மூட்டைகளைப் பிராண்டி விளையாடிக் கொண்டிருந்தப் பூனை எங்களைப் பார்த்ததும் நெல் மூட்டைகளுக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. எனது சின்ன அண்ணன் மூட்டையின் இடைவெளி வழியே கையை விட்டு வெளியே எடுத்தான். சிறிதுநேரம் பூனையை வைத்து விளையாடினோம். அதைப் பார்த்துவிட்டு “காலையிலே பூனைகிட்ட என்னல விளையாட்டு. பள்ளிக்கூடம் போக வேண்டாமா?” என்று கத்தினார் அம்மா.
பூனையை விட்டுட்டு முருகேசன் மருத்துவர் பம்பு செட்டிற்கு குளிக்க சென்றோம். குளித்து முடித்துவிட்டு சாப்பிட்டு, துணி மாற்றிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பிச் சென்றோம்.
மாலைப் பள்ளி முடிந்ததும் வேகமாக வீட்டிற்கு திரும்பி வந்து பூனையை தேடினோம். பூனை நாங்க வைத்துவிட்டு சென்றச் சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு இருந்தது. எங்களைப் பார்த்ததும் நெல் மூட்டைகளுக்குள் சென்று மறைந்து கொண்டது. உடனே அம்மாவிடம் “பூனை பல் துலக்கிச்சாம்மா?” என்றோம்.
“நான் எங்கல வீட்ல இருந்தேன். நானே வேலைக்கு போயிட்டு சடஞ்சிப் போயி இப்பதான் வந்து உட்காந்திருக்கிறேன். எங்கிட்டப் வந்து பூனப் பல்லு தொலக்குச்சா, ஆனப் தொலக்குச்சான்னுட்டு இருக்கானுவ.” என்றவர் கோபத்தில் “எந்த மொட முட்டிப் பெயல சொன்னான். பூன பல் துலக்கும்னு. விடிஞ்சா, அடைஞ்சா இதையே கேட்டுகிட்டு இருக்கீய.” என்றதும் பள்ளிக்கூட பையை வீட்டில் வைத்துவிட்டு விளையாடச் சென்றோம்
நாங்கள் ஒரு வாரமாக பூனை பல் துலக்குவதைப் பார்த்து விடலாமென்று ஆர்வமாக இருந்தோம். அது பல் துலக்கிய பாடில்லை. பூனையை நாங்கள் அடிக்கடி கையில் பிடித்து “எப்ப பல் துலக்குவ?”என்று கேட்டப்படியே விளையாடியதால் அதற்கு, எங்கள் மீது இருந்த பயம் குறைந்து வீட்டில் சகஜமாக உலா வந்தது. நாங்கள் சாப்பிடும் போது அருகில் வரும் அதற்கும் சாப்பாடு வைத்தோம். எங்களிடம் நன்றாகப் பழகியப் பிறகும் பூனைப் பல் துலக்காதது, எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. எங்களது நண்பர்களிடம் அந்த பூனையின் அருமைப் பெருமையைப்பற்றி ஏற்கனவே சொல்லி இருந்ததால், அவர்களும் வீட்டுக்கு வந்து “பூனை பல் துலக்குச்சா? துலக்குச்சா?” என்று கேட்டுகொண்டே இருந்தனர், அது எங்களுக்கு பெரும் அவமானமாக இருந்தது. ஏமாற்றம் கோபமாக மாறியது. பூனை எங்களிடம் நெருங்கி வரும்போது அதை அடித்து விரட்டினோம்.
ஒருநாள் பூனை என் தந்தை சாப்பிட்டு கொண்டு இருந்தபோது அவரது சாப்பாட்டில் போயி வாயை வைத்துவிட்டது. அவர் கோபத்தில் இடது கையால் பிடித்து எரிந்து விட்டார். அது சுவற்றில் மோதி மயங்கிவிட்டது. செத்து போய் விட்டதென்று நினைத்து அதைத் தூக்கிச் சென்று சீமைக்கருவவேல மரக் காட்டிற்குள் போட்டுவிட்டு வந்தோம். அது நல்ல வெயில் அடித்ததும், மயக்கத்தில் இருந்த பூனைக்கு உணர்வு வந்து எழுந்து வீட்டுக்குள் ஓடி வந்தது. அதன்பிறகு பூனையின் செயலில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. அதற்கு, மண்டையில் அடி பட்டததோ என்னவோ லேசான மனநிலை பாதிப்பு போல ஏற்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். திடிரென்று எங்களைக் கடிக்க ஓடி வரும். அப்போது, உடனே அதை அடித்து விரட்டுவோம். அப்படி, அதுக்கு தினம் தினம் அடி உதைதான் மிஞ்சியது. ஒரு ஞயிற்றுக்கிழமை அன்று நாங்க எல்லோரும் வீட்டில் இருந்தோம். பூனைச் சுவற்றுக்கு மேலே அதாவது, கூரைக்கும் சுவற்றுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் படுத்துகொண்டு எச்சிலை அதன் வலப்புற முன்னங்காலில் தொட்டு தொட்டு அதனுடைய கண்களில் இருந்த அழுக்கைச் சுத்தம் செய்துகொண்டிருந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
