அன்றைய நாளிதள்களையும் பாலையும் வாங்கிக்கொண்டு இருக்கும் போது பின்னாலிருந்து யாரோ அழைப்பதாக தோன்றியது. எனது மனைவி கீழே குனிந்து எதையோப் பார்த்துக்கொண்டு இருந்தார். எனது பார்வை புகையும் வாவ(வாகை மரம்) மரத்தின் அடிக்குச் சென்றது.
மரத்தைச் சுற்றி மிக நேர்த்தியாக கூட்டப்பட்டு அதன் இலைகளை மரத்தின் அடியைச் சுற்றி ஒதுக்கி தீ வைத்திருக்கிறார்கள். நீண்ட நாட்களாக இது நடப்பதற்கு அடையாளமாக வாவ மரத்தின் அடித்தூரைச் சுற்றி அதன் பட்டைகள் எரிந்து கருப்பாக காணப்பட்டது.
ஒரு உயிருள்ள மரத்தைச் சுற்றி இப்படி எரிந்து கொண்டிருப்பது ஏன் எவரது கவனத்தையும் ஈர்க்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அதன் நிழலில் ஆட்டோக்கள் ஸ்டாண்ட் உள்ளது. அவர்களாவது இதை தடுத்திருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் வருகிறவர்கள் இதன் நிழலில் தான் வண்டிகளை நிறுத்துகிறார்கள் அவர்களுக்கும் எரிந்து கொண்டிருப்பதை அணைக்க வேண்டும் என்று தோன்றவில்லை.
வீட்டிற்கு வந்துவிட்டு அலுவலகம் செல்லும் போதும் புகைந்து கொண்டுதான் இருந்தது. இப்போது அதன் பக்கத்தில் ஒரு ஆட்டோ நின்று இருந்தது. அதற்குள் இரண்டு பேர் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் புகைப்பது கஞ்சாவாகவும் இருக்கலாம். இப்போது நகரத்தின் பல இடங்களில் கஞ்சா விற்கும் இடங்களைத் தெரிந்தால் தகவல் தெரிவிக்கச்சொல்லி விளம்பரப் பலகைகள் உள்ளது. அந்தளவிற்கு அதனை பயன்படுத்துகிறவர்கள் அதிகமாகிவிட்டார். மலைகளற்ற சமவெளியான மருத நிலப்பகுதியில் இதுபோன்ற அறிவிப்புகள் இளைஞர்கள் சீர்கேடாகிக் கொண்டிருப்பதன் உச்ச அடையாளம்.
சிவப்பாக ஆட்டோவிற்குள் உட்கார்ந்து இருப்பவன் தான் இந்த ஸ்டாண்டிற்குத் தலைவன். அவன் எப்பொழுதும் தண்ணி அடித்து போதையில் தான் இருப்பான்.
நாங்கள் காலையில் நடைபயிற்சி முடித்து நாளிதழ்கள் வாங்கும்போது அவன் குடித்துவிட்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பான். கண்கள் எப்போதும் அவனுக்கு சிவப்பாகவே இருக்கும்.
அவனிடம் சொல்லி இருக்கலாமோ என்று தோன்றியது. அவன் காலையிலேயே தண்ணி அடிச்சிருக்கான் அவன்கிட்ட சொல்லி என்ன ஆகப் போகிறது.
அலுவலகம் முடிந்து இரவு செல்லும்போது சுத்தமாக எரிந்து இருந்தது. வாவ மரத்திடம் மன்னிப்புக் கேட்கத்தோன்றியது. கைபேசியின் வெளிச்சத்தில் அடி மரத்தைப் பார்க்கும் போது சருகுகள் எரியாமல் இருந்த இடத்தில் எறும்புகள் மொய்த்துக் கொண்டு இருந்தது. வண்டியின் பெட்டியில் இருந்த பிஸ்கெட்டைப் பிரித்துப் போட்டு விட்டு கிளம்பும் போது யாராவது என்னைப் பார்க்கிறார்களா என்று பார்த்தேன். கறம்பக்குடியார் கடைக்குப் பக்கத்து கடையில் யாரோப் படுத்து இருந்தார்கள்.
நானே ஒரு குடம் தண்ணீர் ஊற்றி அணைத்து இருக்கலாம் இல்லையென்றால் பக்கத்தில் ஒதுக்கி வைத்து கொளுத்திவிட்டிருக்கலாம். ஆனால் நான் இருக்கும் இந்த நகரத்தில் கொஞ்சமாக அறியப்பட்ட நபராக இருப்பதால் இப்படியானதை செய்துவிட முடியாது. அது சிறு அசௌகரியத்தை கொடுத்துவிடுமோ என்ற அச்சத்தில் அதனைச் செய்யத் தயங்கினேன்.
சில சமயம் இரவு தாமதமாக வரும் பொழுது பிஸ்கெட்டை பிரித்துப்போடுவதும் வழக்கமாகிவிட்டது.
இப்படியாக கடந்துபோன வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் கூட்டி ஒதுக்கி எரியூட்டியதால் புகைந்து கொண்டு இருந்தது. மரத்தின் கவலையோடு எறும்புகள் என்ன ஆகி இருக்குமோ என்ற கவலையும் சேர்த்து அசௌகரியப்பட வைத்தது.
முன்பு நான் பால் வாங்கும்போது கறம்பக்குடியாரிடம்
“இங்கே கூட்டுகின்ற துப்புற பெண் யாருங்க.” என்றேன்.
“ஏன் சார். என்னாச்சு. இங்கதான் பத்து மணிக்கு வரும். வர்றீங்களா இங்க இருக்கச் சொல்றேன்.” என்றார்.
” அதோ அந்த வாவ மரத்துக்கு கீழே யாரோ கூட்டிக் கூட்டி கொளுத்தி விட்றாங்க.”
“ஆமாம். சார்.
யாருன்னு தெரியலையே சார்”
“நீங்கள் கவனிக்க வாய்ப்பில்லை தான். அந்தம்மாவை கூட்டி அள்ளச் சொல்லுங்க. வாரா வாராம் நீங்கள் அவர்களுக்கு ஒரு பவண்டோ கொடுங்க. ஐம்பது ரூபாய் பணம் கொடுத்து விடுங்கள். பிறகு மொத்த தொகையும் என்னிடம் வாங்கிக்கொள்ளுங்கள்.” என்றேன்.
அவர் சொன்னதாக சொன்னார். ஆனாலும் இந்த ஞாயிற்றுக்கிழமை காலையிலும் அங்கு புகைந்து கொண்டு தான் இருந்தது.

தேவாலயத்தில் உள்ளவர்களிடம் சொல்லலாமென நினைத்து உள்ளே போனேன். உள்ளே நான்கைந்து பெண்கள் பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரிடம்
“இங்க கூட்டுறது நீங்களாம்மா. “
“இல்லையே தம்பி.”
“அதோ அந்த மரத்துக்கு கீழே கூட்டிப் போட்டு கொளுத்துறாங்க. அதை செய்யவேண்டாம்ன்னு சொல்லுங்கள். வேற இடத்தில் ஒதுக்கி கொளுத்தச்சொல்லுங்க.”
“கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்தா நானே ஒதுக்கி விட்டற்றேன் தம்பி. கர்த்தரே… “
ஏதோவொரு நம்பிக்கை வந்ததாக நான் வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.
வீட்டிலிருந்து கிளம்பிய அவசரத்தில் மணிப்பர்ஸ் எடுக்க மறந்து போனதால் பதினோரு மணியைப்போல ஆபீஸிலிருந்து திரும்பி வரும்போதுதான் கவனித்தேன் வாவ மரத்தின் அடியில் சருகுகளுக்கு இடையில் புகை வந்து கொண்டு இருந்தது. தேவாலயத்தில் மன்றாட்ட சங்கீதம் ஒலித்துக் கொண்டு இருந்தது. பாடல்கள் நின்றபொழுது அல்லேலூயாவால் கர்த்தரைப் பற்றிவிட எல்லோருமே பிரயத்தனப்பட்டார்கள்.
மரத்தைச் சுற்றி வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் வெயிலுக்கு அபயம் தேடி நுழைக்கப்பட்டிருந்தது.
வழி தவறிய ஆட்டுக்குட்டிகள் எதுவும் மரத்தின் வேதனைகளை கண்ணுரவே இல்லை. அவர்கள் ஹிருதயத்தை சுத்தம் செய்து தேவனை தரிசிக்க விரும்பவில்லை.
உள்ளே சென்று பாதரை சந்தித்து இந்த இடத்தில் எரிக்க வேண்டாம் என்று சொல்லத்தோன்றியது. அந்த வயதான பெண்ணிடம் சொன்னேன் என்றால் அவர்களை வேலையை விட்டு நிறுத்திவிடுவார்களோ என்ற கவலை வந்தது. தலைமை பிஷப் வந்து ப்ரயர் வைத்துக்கொண்டு இருந்தால் தேவையில்லாமல் பாதரிடம் பகை வளர்க்க வேண்டியது வருமே என்ற எண்ணம் வர மறுபடியும் வாவ மரத்திடம் மன்னிப்பு கேட்டேன். புகை ஊதிபத்தியிலிருந்து வருவது போல சன்னமாக வந்து கொண்டு இருந்தது. அது பிரான்சிஸ் கிருபாவின் ஒரு கவிதையை நினைவூட்டியது.
அப்போதுதான் கவனித்தேன் பக்கத்தில் கோல்டன் பாய் வாங்கிய இடத்தில் கட்டிய கடைக்கு சிலாப்பிற்கு சென்டரிங்க் அடித்து எப்போது வேண்டுமானாலும் கான்கிரீட் போட தயாராக இருந்தது. வாவ மரத்தில் பத்தடி உயரத்தில் சிறு மரமாக இருக்கும் போதே இருந்த கிளை இப்போதும் பெரிதாக சிலாப் போடுவதற்கு இடஞ்சலாக வளர்ந்து இருந்தது.
இப்போது எனக்கு கூடுதலான ஒரு எண்ணம் ஒட்டிய கவலை கோல்டன் பாய் பக்கம் திருப்பிவிட்டது.
அவர் எனக்கு நண்பர். அவரிடம் கிளைகளை வெட்டாதீர்கள் என்று சொன்னால் ஒத்துக்கொள்ளக் கூடியவர்தான். நான் கான்கிரீட் போட வழி சொல்லுங்கள் என்பார். மொட்டை மாடியில் கைபிடி சுவர் எப்படி எடுப்பது என்று கேட்பார். அதனால் அந்தக் கிளையை வெட்டுவதை எதுவும் செய்ய முடியாது.
எப்படியாவது எரிக்கிறதை நிறுத்திவிட்டால் போதும் என்று மட்டும் தோன்றியது.
இன்றைய இரவும் அலுவலக வேலைகள் முடிக்க தாமதமானதால் பின்னிரவு அங்கிருந்து கிளம்ப வேண்டியதாகிவிட்டது.
வண்டியை நிறுத்தி வாவ மரத்தை பார்க்கலாமென இறங்கினால் அங்கு நான்கு பேர் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து மரத்தைப் பார்த்தேன். இலைகளை எரித்ததற்கான அடையாளமாக மரத்தின் அடித்தூர்ப் பட்டைகள் அதிகம் கருகி இருந்தது. நாய் ஒன்று குப்பையை சீய்த்துப் படுத்துக்கிடந்தது. நான் பக்கத்தில் சென்றதும் வாலை ஆட்டிக்கொண்டு வந்தது. வீட்டிற்கு வாங்கி இருந்த சாமான்களில் பிஸ்கெட்டை நாயிடம் போட்டுவிட்டு ஒரு பிஸ்கெட்டை கையால் நுணுக்கி மரத்தின் தூரில் போட்டபொழுது நாய் ஓடி அதை மோந்து பார்த்துவிட்டு அதற்குப் போட்ட பிஸ்கெட் டை சாப்பிட ஆரம்பித்தது. நான் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். பிறகு நிறுத்தி என்னை யாரும் பார்த்தார்களா என்று திரும்பி நாலாப்பக்கமும் பார்த்தேன்.
கறம்பக்குடியார் கடைக்கு பக்கத்து கடையில் வேட்டியைப் போர்த்தி படுத்து இருந்தவர் இப்போதும் படுத்து இருந்தார். வண்டியை எடுக்கும்போது அவர் பார்த்திருப்பாரோ என்று மீண்டும் ஒரு முறை பார்த்துபோது அவர் எந்த அசைவுமற்று தூங்கிக்கொண்டிருந்தார்.
காலையில் அலுவலக வேலைகள் முடித்து வேறொரு வேலையாக கிளம்பும் போது வாவ மரம் நினைவு வந்தது.
கவுன்சிலரிடம் சொன்னால் தேவாலயம் இருப்பதால் மதக்கலவரமாக அவர் அதை மாற்றிவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தபோது போலீஸ் ஸ்டேஷனில் சொல்லலாமே என்ற ஒரு முட்டாள்தனமான எண்ணம் வந்து ஸ்டேசனுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தபோது அங்கு காவலராக இருக்கும் எங்கள் ஊர்ப் பையன் வெளியே வந்தார்.
“என்ன மாப்பிள்ளை இங்க நிக்கிறீங்க.”
“ஒண்ணுமில்லை மாமா. மரத்துக்கிழே சருகக் கூட்டி கொளுத்திவிட்டுறாங்க. மரத்தோடு தூரு கருகிப்போயிருது மாமா. அதான் ஸ்டேஷன்ல சொல்லி…”
“மாப்பிளே . நம்ம மரமா எங்க இங்க டவுன்லயா. ஊர்லயா.”
“சர்ச்சுக்கு பக்கத்தில் பி டபுல்யூ டி மரத்தை மாமா.”
“மாப்பிள்ளை ஒண்ணு சொல்லட்டுமா . உங்க தம்பி கொல்லப்போறான்னு ஒருத்தன் பாதுகாப்பு கேட்கிறான். உங்க மாமா அதான் அண்ணையா மாட்டு லோனைக்கட்டலைன்னு மாடுகளை பேங்க்ல சப்த்தி பண்ண வராங்க. அதுக்கு போராட்டங்கறார். நீங்கள் மரத்துக்கு பாதுகாப்பு கொடுங்கங்கிறீங்க. ஏன் மாப்பிள்ளை ஸ்டேஷனை நம்ம வீட்டுக்கு மாத்திருவோமா மாப்பிள்ளை. நம்ம குடும்பத்துக்கு வேலை பார்க்கிறதுக்கு இங்க எதுக்கு ஸ்டேஷனை வைக்கனும்.”
“ஏன் மாமா டென்சனாகுறீங்க. மாமனாச்சேன் கிண்டலடிச்சா.
செம காண்டாவுறீங்க.”
“வேறென்ன மாப்பிள்ளை அங்க உயிரெடுக்கிறாங்களேன்னு ஒரு டீயைப் போட்டு தம்மடிக்கலாம்ன்னு வந்தா. நீங்கள் வேற என்னைய டென்ஷனாக்கிட்டு. சரி அதவிடுங்க. டீ சாப்பிடுவோம் மாப்பிள்ளை.”
வேண்டாமென்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். நல்ல வேலை கிண்டலென்று சொல்லி தப்பித்துவிட்டேன்.
வரும் வழியில் பி டபில்யு டியில்வேலை பார்க்கும் நண்பரிடம் அலுவலக விளம்பரம் வைக்கனும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் அலுவலகத்தில் கேட்டுச் சொல்லுங்கள் என்றது நினைவுக்கு வந்தது.
அவருக்கு போன் செய்தேன்.
“தோழர். இதுவரைக்கும் இதுமாதிரி யாரும் இங்கு வந்து கேட்டதில்லையாம். மேலிடத்தில் தெரியப்படுத்தி தான் அனுமதி வாங்கனும். வழிபாட்டு இடம் என்பதால் கொஞ்சம் சென்சிடீவ்வானதாம். நீங்கள் என்ன செய்யப் போறீங்க அப்படிங்கிறதை தெளிவாக எழுதி அதாவது பலகையா விளம்பர தட்டியா இல்லை சுற்றி சிமெண்டால் கட்டப் போறீங்களான்னா தெளிவாக குறிப்பிட்டு அதுக்கு தனியாக வரைபடம் வைக்கனும். இப்படி எல்லாவற்றையும் தெளிவாக எழுதிட்டு.தனியாக அனுமதிக்கடிதமும் எழுதச் சொல்றார். ஒரு வேலை அவர்கள் கட்டணம் நிர்ணயிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்குங்கிறார். தோழர் நீங்கள் எழுதி எடுத்துட்டு வாங்க நாம பார்த்துக்கலாம்.”என்றார்.
எதுக்கு எங்கப்போனாலும் எங்கயாவது இழுத்துக்கொண்டு போகிறது. நான் ஏன் இந்த வாவ மரத்துக்கிட்டே மாட்டிக்கிட்டேன். ஒரு வேளை அந்த மரத்துல ஆவி இருந்து நமக்குள்ளாரப் பூந்துருச்சோ நல்ல வேலை இப்படி அக்காகிட்டே சொன்னால் உடனே இந்நேரம் என்னைய ஏர்வாடிக்கு கூட்டிக்கிட்டுப் போயிருக்கும்.
நாடு இருக்கும் சூழ்நிலையில் எங்காவது இடறினால் அது மதக்கலவரமாக மாறிவிடுமோ என்கின்ற கவலைதான் என்னை ஏதேதோ செய்ய வைக்கிறது.
ஒரு வாரம் கழிந்த ஒரு நாள்
அலுவலகத்திலிருந்து வண்டியை எடுத்து வீட்டுக்குப் போகலாமென சென்று கொண்டிருந்த போதுதான் மணி அண்ணன் கடையில் இருப்பதால் லதா சலூன் பெயர்ப் பலகை வெளியே இருந்தது.
முடிவெட்டலாமென உள்ளே நுழைந்தால் யாரோ ஒருவருக்கு முகச்சவரம் செய்துகொண்டிருந்தார்.
“சார். இதோ முடிஞ்சிருச்சி உட்காருங்க சார். வெளியூர் போயிருந்தீங்களா. போக்குவரத்தையேக் காணோமே.”
“ஆமாம். ஊர்ல கொஞ்சம் வேலை.”
அவர் கடை பெஞ்சில் உட்கார்ந்து எதிரே பார்க்கும்போதுதான் வாவ மரத்தின் கிளையை வெட்டிவிட்டு கோல்டன் பாய் சிலாப் போட்டிருந்தது தெரிந்தது. மரக்கிளைகள் இருப்பது வெற்றிடத்தில், அவைகளை வெட்டியதும் அந்த இடம் வெறிச்சென இருப்பது இன்றுவரை விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
கொஞ்ச நேரம் முன்புதான் சிலாப்புக்கு கான்கிரீட் போட்டிருக்க வேண்டும். தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. கவனித்தபொழுதான் வலது புற காலத்தை ஒட்டிய முட்டு இறங்கியதால் சீலிங்க் கொஞ்சம் தாழ்ந்திருப்பதை காண முடிந்தது.
“சார். இன்னைக்குதான் சிலாப் போட்டீங்களா. நான் சொன்னேன்னு சொல்லவேண்டாம். வலதுபுற காலத்துக்கிட்ட முட்டு ஆடுதா இல்லை விழுந்துருச்சான்னு கொஞ்சம் சரிபார்க்கச் சொல்லுங்கள். இப்பொழுதே சரி செய்துவிட்டால் நல்லது.” என்று கோல்டன் பாயிடம் சொன்னேன்.
நான் பேசியதைக் கேட்டு மணி அண்ணன் வெளியே வந்து எட்டிப் பார்த்தார். நான் சொல்வது சரிதான் என்று ஆமோதித்தார். முகச்சவரம் முடிந்தவரும் கட்டிடத்தை பார்த்துக்கொண்டு சென்றார்.
“எப்படி சார். உங்களால் இப்படி இருக்க முடியுது. எல்லாருக்கும் பிடித்தமா. எல்லோரோடையும் ரொம்ப இணக்கமா.”
“அது அப்படித்தான் அண்ணே.”
“கோயிலுக்கெல்லாம் போவீங்களா சார்.”
“இதுக்கு நான் என்ன பதில் சொல்றது. எனக்கு புத்தரைப் பிடிக்கும் அதனால் பௌத்தர்களைப் பிடிக்கனும்னு அவசியமில்லை. ஆனாலும் எனக்கு அங்கு பிடித்தவர்களும் இருக்கிறார்கள். எனக்கு இயேசுவைப் பிடிக்கும். அதனால் கிறிஸ்தவர்களை பிடிக்கனும்ன்னு அவசியமில்லை. ஆனால் அங்கு பிடித்தவர்களும் இருக்கிறார்கள். முகமது நபி அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் எனக்கு இஸ்லாமியர்களை பிடிக்கனும்ன்னு அவசியமில்லை. ஆனாலும் எனக்கு அங்கு மிகவும் பிடித்தவர்கள் இருக்கிறார்கள். மதம் என்பது மனதை கடக்கும் அழகான கண்டுபிடிப்பு. அதில் எது லேட்டஸ்ட் வெர்சன் என்பதை ஒருவர் புரிய முற்படுவதற்கு பழைய வெர்சன்களின் புரிதல் வேண்டும் இல்லை என்றால் புது வெர்சனை ப்ளைண்ட்டாக அனுபவத்திற்கு உட்படுத்த முயல வேண்டும். உங்களுக்கு புரிகிற மாதிரி சொன்னால் நான் இவைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறவன்.”
“போன முறை சொன்ன தியானமாவது கொஞ்சம் புரிஞ்சுது. இது புரியல சார்.”
“நன்றி. புரிஞ்சா. என் கழுத்தில் கத்தியை வச்சுருவீங்க.”
“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க. நீங்கள் எங்களுக்கான ஆள். நீங்கள் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும் சார்.”
நான் சிரித்தேன்.
“பாய் வருவார்ன்னு நினைக்கிறேன். ஆட்கள் வந்துட்டாங்க.”
இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு ஒரு சேர வெளியேப் பார்த்தோம்.
மணி அண்ணனுக்கு புரியவில்லை என்பது தெரியும்.
இதுபோன்ற சூழலில் மணி அண்ணன் பேச்சை நாகரீகமாக மாற்றிவிடுவார்.
நான் மணி அண்ணனை கட்டிப்பிடித்து ஒரு செல்ஃபி எடுத்தேன். அவர் கொஞ்சம் கூசி நிற்பதை என்னால் உணர முடிந்தது. அவரது மகனிடம் இந்தக் கூச்சம் இருக்காது. அந்த மாற்றம் அதையும் தாண்டி வேறொரு தளத்திற்கு போக வேண்டும். பொருளாதார மாற்றம் மட்டும் அதை நிவர்த்தி செய்து விடாது.
இப்பொழுது அவரது கைபேசி அடித்தது இருவருக்குமே அது வசதியாகப் போய்விட்டது.
வாவ மரத்தின் அடியில் புகைவதன் அடையாளமாக காற்றில் கருகல் வாடை வந்தது. வெளியே வந்து பார்த்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிரார்த்தனைக்கு வந்தவர்களின் வாகனங்கள் மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டு இருந்தது. தேவாலயத்தில் பிரார்த்தனைப் பாடல்கள் வேத வசனங்களுக்கு இடையில் ஒலித்துக் கொண்டு இருந்தது. கோல்டன் பாய் வந்த ஆட்களை வைத்து முட்டுக்கொடுத்ததை சரி செய்து கொண்டு இருந்தார். அவர் அவர்களை திட்டுவது புரியாமல் சத்தமாக மட்டும் கேட்டது. இந்தப் பக்கம் அவர் திரும்பினால் பேச வேண்டுமென நான் கடைக்குள் வந்துவிட்டேன்.
மணி அண்ணன் துணியை போர்த்திய பிறகு கேட்டேன்.
“அந்த வாவ மரம் எழுவது என்பது வருஷ மரமாக இருக்குமா “ என்றேன்.
“அதுக்கும் மேலயும் இருக்கும் சார். நான் சின்ன வயதாக இருக்கும் போது அந்த மரத்துக்கு கீழே ஒரு கிழவன், கிழவி மோர் விற்பாங்க. டவுனுக்கு உள்ள மில்லுக்கு போற மாட்டு வண்டிகள் இங்கதான் நிறுத்தி மோர் சாப்பிடுவாங்க. அதுக்குப் பிறகு நம்ம கரிக்கடைப் பாய் இருக்காருல்ல அவர் மரத்துல ஆட்டை அறுத்துக் கட்டி உரிப்பார். அவரும் ரொம்ப காலத்திற்கு முன்னாடியே கடையை மாத்திக்கிட்டுப் போய்விட்டார். .இந்த பக்கம் தான் அவரோட கடை இருந்தது சார்.” என்றார்.
“மரத்துக்கு அடியில் சருக போட்டு கொளுத்திவிட்றாங்க. யாருன்னு தெரியுங்களா.”
“தெரியலை சார்.”
முடி வெட்டி முடித்ததும்
வீட்டிற்கு வரும்போது மனைவி பால் வாங்கி வரச்சொன்னது நினைவுக்கு வர, கறம்பக்குடியார் கடையிலையே வாங்கிக்கொள்ளலாமென வாய்க்காலுக்கு மறுபக்கம் இருக்கும் கடைக்கு வந்தேன். எதிரில் தேவாலயத்தில் பிரார்த்தனைகள் முடித்து எல்லோரும் சென்றிருந்தார்கள். சருகுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி இருந்தது.
பால் வாங்கிக்கொண்டு அவரிடம் பணம் கொடுக்கும்போது
“சங்கீதான்னு ஒரு பொண்ணு வேலை தேடிக்கிட்டு இருக்கு சார். நல்ல டைப் சார். கம்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்காம்.”
“எனக்கு போன் பண்ணி ஆபீஸ்ல இருக்கேனான்னு செக் பண்ணிட்டு வரச்சொல்லுங்கள்” என்று எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன்.
இப்போது என் அலுவலகத்திலிருந்து கீர்த்தனா போன் செய்தார். நாளை குலதெய்வக் கோயிலுக்கு போவதாக லீவு சொன்னார். நான் நந்தினியிடம் நாளைய வேலைகளை சொல்லிவிடுங்கள் என்றேன்.
சங்கீதா என்றொருவர் வந்தால் எனக்கு போன் செய்யுங்கள் என்று சொல்லலாமா என்று தோன்றியது. சங்கீதாவையே பேசச் சொன்னதால் கீர்த்தனாவிடம் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
இரண்டு மாதமாக ஊரில் இல்லாததால் அலுவலக வேலைகள் முடித்து வருவதற்கு இரவு ஒரு மணியாகிவிட்டது. வீட்டிற்கு வரும்போது வாவ மரத்தைப் பார்க்கலாமென சென்றால் அடித்தூரில் நாய் படுத்துக்கிடந்தது.
நாய் என்னைப்பார்த்து உறுமியது. எனக்குப் பயமாக இருந்தது. வண்டியில் பிஸ்கெட் இல்லாததால் சாப்பிட வாங்கி வைத்திருந்த கொத்துப் பரோட்டாவை வைத்துக்கொண்டு சிக்கன் 65 நாயிடம் போட்டு விட்டு மரத்தின் அடித்தூரைப் பார்த்தேன். அங்கு நாயின் குட்டிகள் கண் விழிக்காமல் ஒன்றின் கழுத்தில் ஒன்று தலையை வைத்து வட்டமாக பின்னிப்படுத்திருந்தது. வண்ண வெல்வெட் துணி சுருட்டி இருப்பதுபோல காணப்பட்டது.
புதிதாக எரிந்ததற்கான அடையாளங்கள் எதுவுமில்லை. நாய் குட்டிகள் போட்டு இருந்தது ஆறுதலாக இருந்தது . அதனால்தான் யாரும் எரிக்க வில்லை போலும். இலையின் சருகுகள் கூட்டப்பட்டு இடம் சுத்தமாக இருந்தது. நான் கிளம்பினேன். நாய் ரொம்ப நாள் பழகியது போல வாலை ஆட்டியது. எப்பொழுதும் போல கடைக்குப் பக்கத்தில் யாரோ படுத்திருந்தார்கள். அதே அழுக்கு வேட்டியாக இருப்பதால் வழக்கமாக படுத்திருப்பவராகத்தான் இருக்கவேண்டும்.
காலையில் பார்த்தபோது
ஆட்டோ ஸ்டாண்டில் சிவப்பு வண்ணமடித்த கம்பத்தில் யூனியன் கொடி பறந்து கொண்டிருந்தது. கறம்பக்குடியார் இல்லாததால் அவர் மனைவியிடம் கட்டி வைக்கப்பட்டிருந்த செய்தித்தாள்களையும் பாலையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
வீட்டின் படியில் ஏறும் இடத்திற்கு பக்கத்தில் காம்பவுண்ட் ஓரமாக வரிசையாக வைக்கப்பட்டிருந்த செம்பருத்தி செடிகளில் ஒன்று பட்டு வெறும் குச்சியாக இலைகள் கருகிப் போய் இருந்தது. காலை வேலைகளை முடித்து டீ குடிக்கும்போது மனைவியிடம் கேட்டேன்.
“செம்பருத்திச் செடி ஏன் கருகி இருக்கு.”
“கீழே வந்திருக்கிறவங்களோட பேசிக்கிட்டிருந்தேன். அந்தம்மா என்கிட்ட பேசிக்கிட்டிருக்கும்போது அந்த செடியைத் தொட்டுத் தொட்டு பேசிக்கிட்டிருந்தாங்க. வேறு ஒண்ணும் நடக்கலைங்க.”
எனது மனைவி சும்மா கீழே கிடக்கிற குச்சியை நட்டாலும் துளிர்த்துக்கொள்ளும் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சொல்வார்கள். அதற்கு நேர் மாறாக இது இருக்கிறது. இதுபோல நடப்பதற்கு உடல் மற்றும் எண்ணவோட்டம்தான் இதற்கு காரணமாக இருக்கவேண்டும்.
“என்னங்க எதையோ ஆழ்ந்து சிந்திச்சுக்கிட்டு இருக்கீங்க. டீ போட இஞ்சி இல்லை. வாங்கிட்டு வர்றீங்களா.”
“முன்பே சொல்லி இருக்காலாமே. வேறு ஏதாவது வாங்கவேண்டும் என்றால் இப்பவே சொல்லிடு. அப்புறம் வந்த பிறகு சொல்லாமல்.”
அவர் ஏதோ முனகிக் கொண்டு சென்றார் அது என் காதில் விழவில்லை.
கறம்பக்குடியார் கடைக்கு செல்லாமல் பயணியர் மாளிகை எதிரே உள்ள காய்கறிக் கடைக்கு சென்று வாங்கி வரும்போது வாவ மரத்தை பார்க்க வேண்டும் போல தோன்றியது. அதைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளே அதிகமாகிக்கொண்டே இருந்தது. தேவாலயத்திற்கு கொஞ்சம் தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு கைபேசியில் சும்மா எதையோ தேடுவதுபோல பார்த்துக்கொண்டு இருந்தேன்.
வாவ மரத்தில் ‘வாதை உன் கூடாரத்தை அணுகாது. சங்கீதம் 91:10’ என்று எழுதி இருந்த தகரத்தை மரத்தில் ஆணியால் அடித்து வைத்து இருந்தார்கள். கோபம் வந்தாலும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
யூனியன் தலைவரான காலையிலையே மது அருந்தும் அந்த பையன் ஆட்டோவிற்குள் உட்கார்ந்து இருந்தார். கறம்பக்குடியார் கடையில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். தேவாலய முகப்பு கம்பி கதவு ஒன்று மட்டும் கொஞ்சமாக திறந்து இருந்தது. கோல்டன் பாய் இடத்தில் காலம் பாக்ஸ் குட்டி யானையில் இருந்து இறக்கி பின் பக்கம் அடிக்கிக்கொண்டிருந்தார்கள். கறம்பக்குடியார் பக்கத்து காய்கறிகள் விற்கும் கடை அதற்கு அடுத்த கட்டடத்தில் சிப்ஸ் கடை இரண்டிலுமே ஆட்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.
இத்தனை விதமான இடர்கள் இருந்தாலும் வாவ மரத்தை கட்டி அணைக்கும் உணர்வு மாறவே இல்லை. இன்னும் கொஞ்சம் நேரம் நின்றால் கட்டி அணைத்து விடுவோமோ என்ற எண்ணம் தோன்றவே அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
இனி அலுவலகத்தின் ப்ளூட் போர்டுகளை மரத்தில் ஆணியில் அடிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும். இரண்டு குச்சியான கம்பில் ஆணியை வைத்து அடித்து. அதனை மரத்தில் கயிரையோ அல்லது கட்டுக்கம்பியையோ வைத்து மரத்தில் கட்டச்சொல்ல வேண்டும்.
பஸ் ஸ்டாண்டிற்கு பக்கத்தில் உள்ள டி எஸ் பி அலுவலக வாசலுக்கு பக்கத்தில் இருக்கும் மரம், சிறியதாக இருக்கும்போது மாடு ஆடுகள் கடித்து விடாமல் இருக்க வைத்த இரும்புக் கூண்டு கழட்டாததால் மரம் பெரிதாக வளர்ந்து விட்ட பிறகு அந்தக் கூண்டு மரத்தின் உள்ளே சுற்றி பதிந்து இருக்கிறது. அதை கட்டிங் மிஷினை வைத்துதான் சிறு சிறு துண்டுகளாக அறுத்து எடுக்கவேண்டும். பெரும்பாலான கம்பிகளை அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்கவேண்டும். மரத்திற்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
இதுவரை எந்த மனித நேயப் பண்பாளர்களின் கண்ணிலும் அது படாததுதான் வேதனையின் உச்சம். குழந்தைகளிருந்து குடுகுடு கிழவிகள் வரை யூடியூப்பராக இருந்தும் எவருக்கும் இது துயரமென தோன்றாமல் போனதுதான் அவலம். மனித கவனக்குறைவின் அடையாளமாக காவல்துறை உயரதிகார அலுவலகத்தின் வாசலுக்கு பக்கத்தில் இருப்பது வெட்கித் தலை குனிய வேண்டிய ஒன்று. இதற்கெல்லாம் யார் மீதாவது வழக்கு தொடர முடியுமாயெனத் தெரியவில்லை.
ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் திருமணத்திற்கு வருகின்ற வர்களுக்கு மரக்கன்றுகள் கொடுக்கலாம் என்று சொன்னால் ஆடம்பரம் என்றோ அடி முட்டாள்தனம் என்றோ தான் சொல்லி இருப்பார்கள். ஆனால் இன்று எல்லாத் திருமணங்களிலும் மரக்கன்றுகள் கொடுப்பது திருமண வழக்கமாக இருக்கிறது. யாருக்குத் தெரியும் பின்னொரு நாள் மரங்களை மனிதர்களை விட முக்கியமாக பார்க்கும் காலம் வந்தாலும் வரலாம்.
வீட்டில் மனைவி கீழே உள்ள முருங்கை மரத்திற்கு பக்கத்தில் நின்று கொண்டு இருந்தார்.
“இந்தக் கிளை ஜன்னலுக்கு உள்ளே வருது. இதை வெட்டி விடுங்கள்” என்றார்.
நான் அருவாளை வாங்கிப் பிடிக்கும் போது கை நடுங்க ஆரம்பித்துவிட்டது.
“ஒரு அரையடி விட்டு வெட்டுங்க. சக்கரமா வெட்டுங்க அப்பதான் துளிர்க்கும் .”
“சேகருக்கு போன் செய்து வரச்சொல்லவா.”
“ஒத்தக் கிளையை வெட்ட ஆளைக்கூப்பிடனுமா.”
“என் வலது கையைப் பிடி.”
“என்னாச்சுங்க.ஏன் இப்படி நடுங்குது.”என்றார்.
மேலே வந்து உட்காரும்போது மனைவி முருங்கையின் கிளையை வெட்டியதால் அது கீழே விழுந்தது. அந்தக் கிளையைத் தொட்டுப் பார்த்திருக்க வேண்டும். இரண்டாவது முறையாகவும் தவறு செய்துவிட்டேன் என்று தோன்றியது.
இன்று இரவு வாவ மரத்திற்கு கீழ் படுத்திருக்கும் நாய் வழக்கத்துக்கு மாறாக குலைந்தது. தூரமாக நின்று பிஸ்கெட்டைப் போட்டு விட்டு திரும்பும்போது எனக்கு பக்கத்தில் ஒருவர் நின்றிருந்தார்.
நள்ளிரவு என்பதால் சப்த்த நாடியும் ஒடுங்கிவிட்டது.
நான் எதுவும் பேசாமல் ஒதுக்கி நடந்தேன்.
“உன்னிடம்தான் பேச வேண்டும்.” என்றார்.
நான் கடையில் படுத்திருக்கும் ஆள் பார்க்கிறாரா என்று பார்த்தேன்.
“நீ பார்க்கிற அந்த ஆள் நான் தான். அந்தப் பாலக்கட்டையில உட்காருவோம் வா.”
ஏனோ அவர் மீது இனம் புரியாத இரக்கம் வந்தது. இருவரும் அமர்ந்து கொண்டோம்.
அவர் பார்க்க ஒரு சித்தரைப்போல இருந்தார். ஒல்லியாக இருந்தாலும் முகம் தேசசாகவும் கண்கள் ஒளி பொருந்தியதாகவும் இருந்தது. இது எல்லாவற்றையும் விட இவர்களைப் போன்றவர்கள் மக்களைக் குழப்பாமல், ஏமாற்றாமல் இருந்ததால் எனக்கு அவரை மிகவும் பிடித்தது.
“நீ போராடி எரிந்ததை நிறுத்தி இருக்கும் இந்த வாவ மரத்திற்கு கீழ்தான் நானும் எனது மனைவியும் ரொம்ப காலத்திற்கு முன்பு மோர் விற்றோம். நாங்கள் காதலித்து கல்யாணம் செய்தவர்கள். அந்த காலத்தில் இதெல்லாம் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. நாங்கள் இருவரும் வேறு வேறு சாதிக்காரர்கள். அதனால் ஊரைவிட்டு வந்து இங்குதான் வாழ்ந்து வந்தோம்.”
அவர் மதுரையைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் தொணியும் மதுரை வட்டார வழக்கை ஒத்திருந்தது.
“எங்களுக்கு குழந்தைகள் இல்லை. என் மனைவி இறந்த பிறகு எனக்கு இங்கிருக்க விருப்பமில்லை. இமய மலை பக்கம் சென்றுவிட்டேன். அங்க ஒரு சாமியாரோட என் பெரும்பகுதி காலம் கழிந்தது. அவர் ஏமாற்றுக்காரர் என்பது தெரியும் போது வாழ்வின் இறுதி கட்டத்திற்கு நான் வந்திருந்தேன். அவரை விட்டு ஒதுங்கிய பிறகு வாழ்வின் புரிதலுக்குள் நான் பயணிக்கும் போதுதான் இங்கு வரவேண்டும் என்று தோன்றியது.”
நாய் குட்டிகள் கத்தியதால் இருவரும் தலையை சாய்த்து மரத்தின் அடித்தூரைப் பார்த்தோம். லாரி ஒன்று எங்களைக் கடந்து சென்றதால் நாங்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் வாய்ப்பென பயன்படுத்தி பார்த்துக்கொண்டோம். அந்த கண நேரத்தில் இருவரது கண்களும் சந்திக்காதது வியப்பாகத்தான் இருந்தது.
“நான் இங்கு வந்து ஓராண்டுக்கு மேலாகிறது. இரவில் மட்டும் தான் நான் இங்கு இருப்பேன். அதனால் என்னை எவருக்கும் தெரியாது. உன்னைப் பார்க்கும் போது என்னை அறியாமலையே ஒரு விருப்பம் வரும். அது ஏனென்று கொஞ்சம் நாளைக்கு முன்பு தான் புரிந்தது. நான் இங்கிருந்து புறப்பட தயாரானபோது உன்னைக் காணவில்லை என நான் யோசித்துக்கொண்டு இருக்கும் போது மரத்துக்கு பக்கத்தில் நீ நின்று கொண்டு இருக்கின்றாய்.”
மேலே கையை உயர்த்தி வணங்கினார். வாவ மரத்தை கட்டிப்பிடித்து விட்டு என்னிடம் வந்தார்.
“இந்த மரத்தின் அந்தப்பக்கம் நாய் படுத்திருப்பதற்கு பக்கத்தில் தான் என் மனைவியை புதைத்து விட்டு சென்றேன். இப்பொழுது நான் வெற்று மூக்கிலாக உணர்கிறேன். உனக்கு ஏதாவது வேண்டுமானால் கேள்.”
அவரின் காதலி புதைத்து இருந்ததும் அந்த மரத்தைத் தான் கட்டிப்பிடிக்க நினைத்தோமா என்ற நினைவின் தயக்கத்திலிருந்து என்னால் வெளிவர முடியாததால் நான் எதுவும் கேட்கவில்லை.
அவர் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார். அது ஒரு பொம்மை காற்றில் மிதப்பது போல இருந்தது. குழப்பத்துடன் கிளம்பிய நான் வண்டியை நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. எனக்கு பின்னால் நின்று கொண்டு இருந்தார்.
“இப்படியே பயணி. ஒருபொழுதும் மாறிவிடாதே.” என்றார். ஏனோ எனக்கு அவரிடம் எதுவும் கேட்கத் தோன்றவே இல்லை.
இப்பொழுதெல்லாம் மரங்களை முன்புபோல் இல்லாமல் பார்க்கும் பார்வையே முற்றிலும் மாறிப்போனது.
அவரின் காதலி என்ற எண்ணம் மாறி அது என் தாயாக இருந்தால் அது எனது பாட்டியாக இருந்தால் என்ற சிந்தனை வந்துவிட்டது. இன்று வரை வாவ மரத்தை கட்டியணைக்கவே இல்லை.
அது நிறைவேறாத ஆசையாகவே இருக்கிறது. கறம்பக்குடியாரும் என்னிடம் அங்கு யாரும் சருகுகளை கொளுத்தாததால் எரிவது சம்பந்தமாக எதுவும் சொல்வதில்லை. நாய் குட்டிகள் வாவ மரத்தைச் சுற்றித் திரிந்தும், அங்கேயேப் படுத்தும் கிடக்கிறது.
வாவ மரத்தைப் பார்த்தால் வணக்கம் சொல்லும் போது கிழவிக்கு வணக்கம் சொல்வதாகவே மனதில் தோன்றுகிறது. ஏனோ இப்பொழுதெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் வணக்கம் சொல்லி வைக்கிறேன்.
என்றாவது ஒரு நாள் நான் அதை கட்டியணைக்க வேண்டும். எனக்குள் என்ன நிகழ்கிறது என்று பார்க்கவேண்டும். அதற்குள் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் ஏதாவது வந்து அதை வெட்டாமல் இருக்கவேண்டும். எல்லாவற்றையும்விட அந்த வாகை மரம் என்னை அழைக்கவேண்டும் இல்லை அந்தக் கிழவி என்னை அழைக்க வேண்டும்.
பார்க்கலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
