தன் நண்பன் கண்மூடிக் கிடப்பதை அருகில் சென்று பார்க்க அவருக்கு தைரியமில்லை. பெரியசாமியின் வீட்டிற்கு எதிர்சாரியிலிருந்த அந்த நாவல் மரத்தடியிலேயே அமர்ந்து விட்டார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பெரியசாமியின் ஆத்ம சிநேகிதர். ஐந்து வயதில் ஆரம்பப் பள்ளியில் இடித்துக்கொண்டு உட்கார்ந்தபோது ஆரம்பித்த அறுபது வருட சிநேகிதம். கருவேல முள்வேலியில் கையைவிட்டு புளியம்பழம் பொருக்கவும், மரத்தில் ஏறி நாவல் பழம் உலுக்கவும், குளம் கண்ட இடத்திலெல்லாம் குதிக்கவும் என்று ஒன்றாகத் திரிந்தவர்கள். அவர்களின் வாழ்க்கையில் அடித்த வெள்ளமும், புயலும், கொளுத்திய அனலும் அவர்களின் சிநேகிதத்தைச் சிதைக்க முடியவில்லை. எதிர்நீச்சல் போட வேண்டியிருந்த நேரங்களில், ஒருவர் கையை ஒருவர் இறுக்கிக் கொண்டு கரையேறினார்கள்.
Tag: வீ.மணி
மின்மினிகள்
காரில் அமர்ந்து ராஜாவாக சவாரி போகிற கற்பனை அவனுக்குள் செத்து விழுந்தது. உடம்போடு மனமும் சேர்ந்து இடிபட, கால்களுக்கு நடுவில் நசுங்கிக் கொண்டு உட்கார்ந்தான். காரின் ஜன்னல் வழியே பார்த்தால் வானமும் மேகமும்தான் தெரிந்தன. பஸ்ஸில் போனால் ரோட்டோர மரங்களும் மக்களும் பின்நோக்கி வேகமாகப் போவார்களென்று கேட்டிருந்ததெல்லாம் ஞாபகம் வந்தது. எக்கினால் வெளியே பார்க்கலாம். ஆனால் உட்கார்ந்திருப்பவர்களின் முழங்கால்களை இடித்துக்கொண்டு எழுந்திருக்கவேண்டும். ‘உட்காரு, உட்காரு’ என்று முதுகில் அழுத்தி, கீழே மீண்டும் உட்கார்த்திவிட்டால் இன்னும் அவமானம். ‘நடந்தே வந்திருக்கலாம். கஷ்டம்தான், இருந்தாலும் இப்படி கூனி குறுகுவதற்கு அந்த கஷ்டமே பரவாயில்லை.’
