மாபெரும் சூதாட்டம்

பிரக்ஞை உதித்ததும் உடல் அசைந்தது. தன் உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்து தன் கண்களின் மீது வைத்தார். மெல்லிய வெம்மை கண்களின் மேல் படர்ந்தது. அறையின் தூரத்து மூலையில் இரு அகல் விளக்குகள் சுடர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் ஒளி அறையில் மிக மெலிதாக அடர்ந்திருந்தது. கண்களைத் திறந்து தனது உள்ளங்கைகளைப் பார்த்தார். விழித்தெழுந்ததும் கூறும் இறை வணக்கச் செய்யுளைச் சொன்னார். தனது உள்ளங்கைகளை அதிகாலையில் பார்க்கும் ஒவ்வொரு தினமும் அவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் பாவத்தின் கறைகள் அவர் முழு உடலையும் சூழ்ந்து சங்கிலியிடுவதாக எண்ணுவது அவரது வழக்கமாகியிருக்கிறது. அந்தச் சங்கிலி தன்னை நெறித்து உடைத்து விட வேண்டும் என்னும் விழைவு அவருக்குள் தினமும் உருவாகிறது. ‘’ஒரு முடிவு கிடைத்து விடும் ; ஒரு தற்காலிக முடிவேனும் கிடைத்து விடும். சகோதரன் கூறினான் : அந்தக் கைகள் எரிப்பதற்குரியவை என்று. சகோதரர்கள் அதனைச் செய்திருக்கலாம். செய்திருந்தால் அவர்கள் மீது வருந்தியிருக்க மாட்டேன்.’’

இது படைப்போன் பொழுது. நிமித்தகனான இளைய சகோதரன் விழித்திருப்பான். குதிரைகளைப் பராமரிப்பவனும் அடுமனைப் பணியாளனும் விழித்திருப்பார்கள். நாட்டியம் பயிற்றுவிப்பவன் சற்று தாமதமாக எழக் கூடும். அரண்மனையின் புலரி மணி இன்னும் ஒலிக்கவில்லை. ஒலித்த பின் தேவி எழுவாள். பேரரசியாகப் பிறந்து பேரரசியாகவே வாழ்ந்தவள். தனக்கு மனைவியானதால் ஒரு பணிப்பெண்ணாக வாழ்கிறாள். அவரது உடலும் மனமும் ஒரு கணம் அலையெழுந்து அடங்கியது. 

நளனுடைய சரிதத்தை நினைவுபடுத்தி மனத்தில் நிறையச் செய்தார். நளன் மாவீரர். உடல் வலிவும் போர்த்திறனும் மிக்கவர். அவரைப் போல் குதிரைகளை அறிந்தவர் இன்னொருவர் இல்லை. அவர் தீண்டும் குதிரைகள் ஒவ்வொன்றும் அவர் உடல் உறுப்புக்களைப் போல அவருடன் இணைந்திருந்தன. அவரது ஒவ்வொரு குதிரைப்படை வீரனும் அவருடைய சீடனைப் போன்றவன். குதிரைப்படையை அவர் இயக்கும் திறனும் அவரது குதிரைப்படையின் விரைவுமே பிற அரசர்களை நளனுடன் போர் செய்வது குறித்து யோசிக்கச் செய்தது ; தயங்கச் செய்தது. நளன் தன்னை அரசராகவும் பின்னர் பேரரசராகவும் நிலைநிறுத்திக் கொண்டார். தனக்குப் பின் பிறந்த இரு சகோதரர்களின் வலிமையால் மட்டுமே நிலைகொண்டிருக்கும் தான் தன்னை நளனுடன் இணைத்து யோசித்துக் கொள்வது பொருத்தமாக இருக்குமா என்னும் ஐயம் நளன் குறித்து யோசிக்கும் ஒவ்வொரு முறையும் அவருக்கு ஏற்படும். 

இன்றைய தினம் இந்தக் கணம் தான் அரசன் அல்ல ; தான் அரசன் என்னும் எண்ணமோ தான் அரசனாயிருந்தவன் என்னும் எண்ணமோ எழுந்து தன் உடலில் பிரதிபலிக்கத் தொடங்கினால் தனது அடையாளம் அனைவராலும் அறியப்பட்டு விடும். மீண்டும் பன்னிரண்டு ஆண்டு வனவாசம். தனக்கும் சகோதரர்களுக்கும் தேவிக்கும். 

கங்கன் உடற்தூய்மை செய்து நீராடி அன்றைய தினத்துக்கான ஆடையை அணிந்து கொண்டு அறையில் மேலும் சில அகல் விளக்குகளை ஏற்றினார். அறையில் ஒளி நிரம்பியது. அறையின் நடுவில் ஓர் விரிப்பை விரித்து அதில் அமர்ந்தார். கண்களை மூடி முதுகை நேராக்கிக் கொண்டார். சில கணங்களில் மூச்சு மென்மையாகியது. பின்னர் மேலும் பல கணங்கள் சென்ற பின் மூச்சு மேலும் மென்மையாகியது. மனதில் ஏதேதோ நினைவுகளும் காட்சிகளும் உரையாடல்களும் தோன்றின ; கேட்டன. கங்கன் அவை வேறு தான் வேறு என மூச்சின் மீது மட்டும் கவனம் வைக்கும் போது உணர்ந்தார். கணங்கள் செல்லச் செல்ல மூச்சைப் போலவே மனமும் சீர் இயக்கம் கொண்டது. மனதுக்குள் பிரணவத்தை உச்சரிக்கத் தொடங்கினார் கங்கன்.  

***

தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் குடிலிலிருந்து வெளியே வந்த கங்கனைக் கண்டதும் அந்த வீதியிலிருப்பவர்கள் பணிவுடன் வணங்கினர். விராடனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் சாமானியராகச் சென்று அரசனை சந்தித்து முதல் சந்திப்பிலேயே அரசனுக்கு மிக நெருக்கமானவராக ஆனதால் அவரைச் சந்தித்தவர்கள் அனைவரும் அவரிடம் பணிவைக் காட்டத் தொடங்கியிருந்தனர். 

அரசிடம் செல்வம் இருக்கிறது. சாமானியனுக்கு அரசின் செல்வம் பெருஞ்செல்வம். செல்வந்தனுக்கும் அரசின் செல்வம் பெருஞ்செல்வமே. செல்வந்தன் முன்னோர் வழியாக வந்து சேர்ந்த சொத்தின் வழியாகவோ அல்லது முதல் போட்டு லாபம் ஈட்டி அதனை மேலும் மேலும் பெருக்கியோ செல்வத்தைச் சேர்க்கிறான். எந்த அரசும் வணிகம் செய்வதில்லை. வரி விதித்தே செல்வத்தைச் சேர்க்கிறது. வணிகம் சிறப்பாக நடக்க உதவும் அரசுகள் உண்டு. வணிகர்களைக் கசக்கிப் பிழியும் அரசுகள் உண்டு. 

சாமானியர்கள் ஏன் அரசின் மீதும் அரசனின் மீதும் பெரும் ஈடுபாடு கொள்கிறார்கள் என்பது எப்போதும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயமே. எல்லா அரசுகளும் மக்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் கொடுக்க முயல்கின்றன ; தங்களால் இயன்ற அளவு கொடுக்கவும் செய்கின்றன. சமூகத்தில் அமைதியும் பாதுகாப்பும் இருப்பதற்கு அரசு அளவுக்கே குடிகளுக்கும் பொறுப்பு உண்டு. குடிகள் பொறுப்பை உணர்வதில்லை. அந்த பொறுப்பை அரசனின் கோலே வன்மையாக நிலைநாட்டுகிறது. ஒரு விஷயத்தைச் செய்வதில் அரசு கைக்கொள்ளும் வன்மையே அரசின் மீது மக்களுக்கு ஈர்ப்பையும் இன்னொரு புறத்தில் விலக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அரசுடன் தொடர்புடைய எவருக்கும் சமூகத்திடமிருந்து விரும்பத்தக்க இடைவெளி கிடைத்து விடுகிறது. 

கங்கன் ஒன்றிலிருந்து அடுத்தது என மெல்ல நகரும் தன் மனதின் இயக்கத்தை தன் மனதின் எண்ணங்களைக் கவனித்தவாறே அரண்மனையைச் சென்றடைந்தார். 

***

விராடன் அரசவைக்குச் சென்று அன்றாடம் நிகழும் சடங்குகளில் கலந்து கொண்டு விட்டு தனது ஆலோசனை மண்டபத்துக்கு வருகை புரிந்தான். மன்னனின் நுழைவை கட்டியக்காரன் அறிவித்து விராடனுக்கு ஜயகோஷம் எழுப்பினான். கங்கன் எழுந்து நின்று கொண்டார். மன்னனைக் கண்டதும் வணங்கினார். மன்னர் தன் இருக்கையில் அமர்ந்ததும், ‘’மன்னருக்கு வெற்றி உண்டாகட்டும் . மன்னரின் கொடிவழியினர் இந்த பாரத வர்ஷத்தை ஆளட்டும்’’ என்று வாழ்த்தினார். 

‘’மைத்துனன் கீசகன் துணையால் நாடாள்கிறேன். இளவரசன் உத்திரன் எளிய படைக்கலப் பயிற்சி கூட இல்லாதவன். ஆனால் கங்கரே நீங்கள் விராடனின் கொடிவழியினர் இந்த பாரத வர்ஷத்தை ஆளப் போகிறார்கள் என்கிறீர்கள். அரச வாழ்க்கையில் புகழ் மொழிகளுக்கு என்றுமே பஞ்சம் இல்லை’’

‘’அரசே ! மண்ணில் நிகழும் வாழ்வென்பது அதை உருவாக்கிய சக்திகள் ஆடும் மாபெரும் பகடையாட்டம். யார் எங்கே இருக்கப் போகிறார்கள் என்பதும் யார் என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் அவரவர் கையில் மட்டும் இல்லை. அதில் ஊழின் பங்கு கணிசமான அளவு இருக்கிறது. ஊழின் கைகளில் நாம் எளிய பகடைக்காய்கள் மட்டுமே மகாராஜா’’

‘’கங்கரே ! நம் நகரில் ஒரு நிமித்தகர் இருக்கிறார். அவரது கணிப்புகள் பொய்க்காமல் நடக்கின்றன என்கின்றனர் அவரிடம் சென்று வந்தவர்கள் அனைவரும். அரசி சுதேஷ்ணை அவரை அரண்மனைக்கு வரவழைத்து இளவரசி உத்தரையின் பிறவி ஏட்டைக் காண்பித்து அவள் எதிர்காலம் குறித்து கேட்டிருக்கிறாள்.’’

‘’அவர் உரைத்த நிமித்தம் என்ன அரசே?’’

‘’உத்தரையின் கொடிவழியினர் ஒட்டு மொத்த பாரதத்தையும் ஆள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.’’

‘’நிமித்தகர் அரசியிடம் இதனை உரைத்த போது அரசி, இளவரசி, அரசியின் பணிப்பெண்கள், இளவரசியின் தோழிகள், காவலர்கள் அனைவரும் இருந்திருக்கின்றனர் அரசே! விராட நகரமே இன்று அதைக் குறித்து பேசித்தான் மகிழ்ந்து கொண்டிருக்கிறது.’’

‘’இந்த தகவல் உங்களை முன்னரே அடைந்து விட்டதா? அதனால்தான் நீங்கள் அவ்விதம் வாழ்த்தினீர்களா? என்று கேட்டு விராடன் உரக்கச் சிரித்தான். மேலும் ‘’உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது நான் எனது கவலைகளை மறக்கிறேன் கங்கரே ‘’ என்றான். 

விராடனும் கங்கனும் பகடையாடத் தொடங்கினர். விராடன் ஆரம்ப வெற்றிகளைப் பெற்றார். அது அவரை மேலும் விசை கொள்ளச் செய்தது. மேலும் மேலும் எனத் தீவிரமாக அதில் இறங்கினார். அந்த ஆட்டத்தின் முதல் இழப்பைச் சந்தித்தார். அடுத்த சில கணங்களில் இரண்டாம் இழப்பு. விராடன் எதிர்பாராத கணம் ஒன்றில் கங்கன் ஆட்டத்தை வென்றெடுத்தார். 

***

‘’அரசே ! பகடையாட்டம் என்பது ஓர் அவதானம். நம்மால் எப்போதும் முற்றிலும் அறிய முடியாத எப்போதும் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத பெருஞ்சிக்கல் ஒன்றினை அறிய முயல்கிற புரிந்து கொள்ள முயல்கிற ஓர் முயற்சி. இதில் ஆடும் நபர்கள், ஆடும் குழுக்கள், பகடைக்காய்கள், பணயப் பொருட்கள் அனைத்துமே அறிய முடியாத பெரும் சக்திகளின் பாவைகளே. பகடையாடுபவன் அறிய வேண்டிய முதன்மையான விஷயம் இது’’

***

விராடன் கங்கன் உரைத்த பகடையாட்டத்தின் முதன்மையான பாடத்தை தனது உடலுக்கும் மனதுக்கும் உணர்வுக்கும் பயிற்சியின் மூலம் கொண்டு வர விரும்பினார்.  பலகை விரிக்கப்பட்டு களத்தின் காய்கள் அவற்றுக்கான இடத்தில் நிறுத்தப்பட்டதும் விராடன் தான், கங்கன், தனது தரப்பின் காய்கள், அறையைக் காவல் காக்கும் காவலர்கள், அரண்மனை ஊழியர்கள், அமைச்சர்கள், அரச குடும்பத்தினர், படைவீரர்கள், நகர் மக்கள், அண்டை நாடுகள், மொத்த பாரத வர்ஷமும், மண்ணுலகும், விண்ணுலகும் என அனைத்துமே இந்த ஆட்டத்தில் உள்ளன என உணர்ந்த போது முதலில் பதறினார். அந்தப் பதற்றம் எல்லையற்றதாக இருந்தது அவருக்கு நிலையழிவைத் தோற்றுவித்தது. பின்னர் மெல்ல மெல்ல அவரது உணர்வும் மனமும் உடலும் அதனை ஏற்றுக் கொண்டன. அந்த முதன்மைப் பயிற்சியை ஒவ்வொரு முறை பகடைக்களம் முன் அமரும் போதும் நிறைய பொழுதளித்துத் தீவிரமாகப் பயின்று கொண்டார். இடைவிடாத பயிற்சியின் மூலம் முதன்மைப் பாடத்தை முற்றறிந்தவராகவும் முற்றுணர்ந்தவராகவும் ஆனார். 

***

‘’அரசே ! எந்த விளையாட்டிலும் எந்த விளையாட்டுக்கும் கால நிர்ணயம் உண்டு. ஆனால் பகடையாட்டத்துக்கு கால நிர்ணயம் கிடையாது. ஒரு ஆட்டக்காரன் தனது காயை நகர்த்தி விட்டான் ; எதிர் ஆட்டக்காரன் தனது பகடையை உருட்ட இவ்வளவு நேரம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் ; இவ்வளவு காலம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த விதமான குறிப்பிட்ட கால நிர்ணயமும் கிடையாது. பகடை கைகளுக்குள் உருள்வதற்கும் கைகளிலிருந்து அகன்று பலகையில் விழுவதற்குமான கால இடைவெளியை பகடையை உருட்டுபவனே தீர்மானிக்கிறான்.’’

***

  விராடன் தன் நகர்வுகளை மேற்கொள்ள மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டார். அது அவருடைய தன்முனைப்பை உடைக்கக் கூடியதாக இருந்தது. அடுத்த நகர்வை உடனடியாக மேற்கொள்ள அவரை அவருடைய மனம் உந்தியது. அந்த உந்துதலுக்கு அவர் உட்படவில்லை. பல நாழிகைகள் கடந்த பின்னரும் கூட அவர் தன் மறுநகர்வுகளை நிகழ்த்தவில்லை. முதல் நகர்வை நடத்த வேண்டிய ஆட்டங்களில் கூட அவர் வெறுமனே களத்தைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கலானார். பல நாட்கள் இவ்விதம் சென்றதால் அரசரின் மெய்க்காவலர்கள் அரசரிடம் உருவாகியிருக்கும் இந்த நூதனத் தன்மையை கவனிக்கத் தொடங்கினர். மெய்க்காவலர்களில் இருந்த ஒற்றர்கள் கங்கரும் அரசரும் பகடைக்களம் முன் எவ்வித காய்நகர்வுகளும் இன்றி வெறுமனே அமர்ந்திருப்பதையும் பல ஆட்டங்கள் துவங்கப்படாமலேயே முடிவதையும் அமைச்சர்களிடம் எடுத்துரைத்தனர். அமைச்சர் ஏதேனும் மாயத்தால் மயக்கப்பட்டிருப்பாரோ என்னும் ஐயம் அமைச்சர்கள் சிலருக்கு ஏற்பட்டது. அமைச்சர்களுக்குள் இது குறித்து உரையாடல் நிகழ்ந்த போது சில அமைச்சர்கள் அரசர் கங்கருடன் விளையாடத் தொடங்கியதிலிருந்து சற்று தெளிந்திருக்கிறார் என்றும் துணிச்சலாக முடிவெடுக்கிறார் என்றும் தனது முடிவுகளில் உறுதி காட்டுகிறார் என்றும் கூறினர். 

***

‘’அரசே! நமக்கு எதிரில் இருக்கும் ஆட்டக்காரன் ஒருவன் மட்டுமல்ல. அவனுக்கு ஆட்டம் பயிற்றுவித்தவர்கள், அவனுக்குத் துணை புரிபவர்கள், அவனது விழைவுகள், அவன் விழைவுகளால் பயன் பெறப் போகிறவர்கள், கண்ணுக்குத் தெரியாத உருவம் இல்லாத சக்திகள் ஆகிய அனைத்தின் தொகுப்பாக அவன் இருக்கிறான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்’’

***

விராடன் அதிகாலையில் எழத் தொடங்கினார். தினமும் அவர் மது அருந்தும் அளவு பெரிதும் குறைந்தது. காலைப் பொழுதுகளில் படைக்கலப் பயிற்சிகளில் ஈடுபடலானார். அரசவை நிகழ்வுகளில் முழு ஈடுபாட்டுடன் இருந்தார். அரசவை விவாதங்களை நுணுக்கமாகக் கவனித்தார். அரசாணைகள் செயலாக்கப்படும் விதத்தை ஒற்றர்கள் மூலம் கேட்டறிந்தார். அண்டை நாடுகளின் அரசாட்சி குறித்த துல்லியமானத் தகவல்களை அறியலானார். பின் மதியத்தில் மட்டுமே குறைந்த நேரம் பகடையாடினார்.

***

‘’அரசே ! எந்த கலையும் எந்த கல்வியும் எந்த விளையாட்டும் அதில் ஈடுபடுபவனை வளர்க்கும் ; முன் நகர்த்தும். ஆனால் பகடையாட்டம் அதில் ஈடுபடுபவனை பின்னால் பின்னால் எனக் கொண்டு சென்று அவனை அவன் ஜீவனை அவன் சாரத்தை உறிஞ்சி அவனை வெறும் ஜடமென ஆக்கும். நீங்கள் தேர்ந்த பகடை ஆட்டக்காரராக இருக்கலாம் ; நீங்கள் தேர்ச்சி அடையாதவராக இருக்கலாம் ; நீங்கள் உங்களை பகடையாடுபவராக எண்ணத் தொடங்கி விட்டால் நீங்கள் துன்னிருளால் நிரம்பியவரே’’

*** 

தினமும் கங்கனுடன் பகடையாடிக் கொண்டிருந்த விராடன் வாரம் ஒருமுறை என்று அதனை ஆக்கிக் கொண்டார். பட்சத்துக்கொரு முறை என்றாகி மாதம் ஒரு முறை என காலக்கிரமம் நீண்டது. விராடன் பகடையாடுவதில் தேர்ச்சி அடைந்தாலும் பகடையாடுவதில் உற்சாகம் இல்லாமல் ஆனார். கங்கன் விராடனின் அரசியல் ஆலோசகர் ஆனார்.

***

பாரத வர்ஷத்தின் அரசியல் நிலவரங்களை விராடனும் கங்கனும் பேசிக் கொண்டிருந்த ஒரு நாளில் விராடன் கங்கனிடம் கேட்டார்.

‘’கங்கரே ! யுதிர்ஷ்ட்ரர் சூதாடினார் அல்லவா? சூதாடி நாட்டை இழந்தார் அல்லவா? அவர் சூதாட்டத்தை முற்றிலும் அறியாமல்தான் சூதாடினாரா?’’

‘’அவ்விதம் இல்லை அரசே! அவர் சூதாட்டம் அறிந்தவர்தான். ஆனால் அதன் முக்கியமான கடைசி பாடத்தை பெரும் விலை கொடுத்து தெரிந்து கொண்டார். பகடையாட்டத்தில் ஈடுபடுபவன் அதனை ஆட எவ்வளவு ஆர்வமும் விருப்பமும் ஈடுபாடும் கொண்டிருக்கிறானோ அதை விட ஒருபடி அந்த ஆட்டத்தை எப்படி நிறுத்துவது என்பதையும் அந்த ஆட்டத்திலிருந்து எவ்விதம் வெளியேறுவது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இந்த பாடத்தை அவர் நாட்டை இழந்து செல்வத்தை இழந்து படையை இழந்து சகோதரர்களை அடிமையாக்கி மனைவியை அடிமையாக்கி கற்றுக் கொண்டார்.’’

‘’யுதிர்ஷ்ட்ரர் மீண்டும் சூதாடுவாரா?’’

‘’அரசே ! பாரத வர்ஷத்தின் அரசியல் நிகழ்வுகள் பல ஆண்டுகளாகவே ஒரு பெரும் போர் நிகழ இருப்பதன் சாத்தியங்களை சுட்டிக் காட்டுகின்றன. மேலும் அது இருமுனைப் போராகவே நிகழ வாய்ப்பு அதிகம். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும். இரு தரப்பிலும் இலட்சக்கணக்கானோர் போரில் ஈடுபடுவார்கள். அவ்விதம் போர் மூண்டால் அது அதில் ஈடுபடும் அனைவரையும் அழிக்கும். சில நூறு பேராவது எஞ்சுவார்களா என்பது ஐயமே. தன் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் திரளப் போகும் இலட்சக்கணக்கான போர் வீரர்களின் உயிரை வாழ்வை பணயமாக்கும் ஊழின் கைகளுக்கு அளிக்கும் மாபெரும் சூதாட்டத்தை யுதிர்ஷ்ட்ரன் நிச்சயம் ஆடுவார்’’

‘’அதில் அவர் வெல்வாரா?’’

‘’அது அவர் கையில் இல்லை ; ஊழின் கையில் இருக்கிறது’’


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.