மகுடத்தில் தீ தன் தழலலைகளால் சன்னதம் கொண்டாடி ஓசை எழுப்புவது போலிருந்தது. வாசிப்பவர்களின் பழுப்புநிற விரல் அசைவுகள் அச்சிறு மயக்கத்தை மணிகண்டனுக்குக் கொடுக்க, மோனநிலையில் கண் எடுக்காது கேட்டான். மகுடத்தில் அவன் கண்ட அனலலைகள் சற்று முன் காய்ந்த தென்னை ஓலைகளில் ததும்பிக் கொண்டிருந்தன. அவற்றிடம் ஆடியைப் காட்டுவது போல் இரு வாத்தியக்காரர்கள் மகுடத்தை காய்ச்சிக் கொண்டிருந்தனர். நெருப்பலைகள் பக்கவாட்டில் திரும்பித் திரும்பி தங்கள் நிழல்களைக் கண்டு அலங்கரிப்பதாக அசைந்தன. பிடி கிட்டும் வரை மகுடத்தைத் தட்டி தட்டிப் பார்த்து போதாமை கொண்டார்கள். ஒருவகை பிடிவாதம். ஓலைகள் சாம்பலாக, நெருப்பலைகள் மகுடத்தில் ஆரோகணித்துவிட அவர்கள் தங்கள் இடம் வந்து வாசிக்க ஆரம்பித்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நெருப்பலைகள் தான் பூடத்திற்கு எட்டும். கோமரம் கொள்ளச் செய்யும்.
நீண்டு சென்ற மகுட இசையின் ஒரு புள்ளியில் இரண்டு கணியான்களின் சலங்கை ஓசைகள் இணைந்து கொண்டன. அதைப் போலவே அண்ணாவியின் குரல்…
“வடிவழகன் ஆறுமுகோஓஓஓ….
குடிகளெல்லாம் காக்கும் தினோஓஓஓ….
பார்வதியாள் கொடுத்த வேலுஊம்ம்ம்….
பார்த்தனுக்கு தேரா நிக்குஊம்ம்ம்….
ஆஆஆஆ……”
பெரிய ஆரத்திற்கு அடுத்தடுத்து தொடுக்கப்படும் பூ வரிசைகள் போல இந்த இசைவு நிகழ்ந்தது. அண்ணாவி சுடலை மாடன் கதை சொல்ல ஆரம்பித்தார். அண்ணாவி கதை கூறுவதற்கும் பாடுவதற்கும் ஏற்ப மகுட இசையும் கணியான்களின் ஆடல் வெறியும் ஏறி இறங்கின.
சம்மணம் போட்டிருந்த மணிகண்டனின் கால்கள் ஆற்றுமணல் பரப்பில் பதிந்திருந்தன. கோவிலில் சாம கால பூஜைக்கான அலங்கார வேலைகள், பலகாரம் சுடுதல், பஞ்சாமிர்தத்திற்குப் பழங்களை அரிதல் போன்றவை நிகழ்ந்துகொண்டிருக்கச் சிலர் மட்டுமே கணியான் கூத்து காண ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.
ஒத்திசைவு தவறாது நடனமிடும் கணியான்களின் அசைவுகள் அவனை வியப்பிற்குள்ளாகிக் கொண்டே இருந்தன. மணலில் யாரும் கண்டுவிடாதபடிக்கு கோலம் வரைந்து அப்படியே அழித்துச் செல்லும் அவர்களின் நடனக்கால்கள். அதன் சலங்கை ஓசைகள். நிற்கும் போது கூட ஒரு கால் தாள பாவனையில் திளைக்கிறது. நாடித்துடிப்பாக.
மணிகண்டன் மிகச்சிறு வயதில் கணியான்களைக் கண்டு பயந்திருக்கிறான். அதுவரை இளம்பெண்கள் அப்படி வயிறு தெரியும்படி ஆடி பார்த்ததில்லை. அதுவும் கோவிலில். வளர்ந்த பின் அது ஆண்கள் போடும் வேடம் எனத் தெரிந்தது. பெண்ணே தான் என நம்பும் அளவிற்கு அலங்கார தத்ரூபம்.
அவனின் விலகாத பார்வை அருவ அழைப்பாக மாறிப்போனது. திடீரென ஒரு கணியானின் கண்கள் அவனைச் சந்தித்தன. புருவங்களை உயர்த்தி மெல்லிய சீண்டல். அவன் நாணத்தால் முகத்தைத் திருப்பி பின் எழுந்து கோவிலுக்கு வெளியே ஓடி வந்தான். வெட்கத்தில் முகம் சுழித்தான். சற்று அவமானமாகக் கூட இருந்தது.

வெளியே பந்தல் தூண்களில் நேர்ச்சைக்கு விடப்பட்ட கிடாய்களும் பெட்டைகளும், தீவனத்திற்கு ஒரு பெரிய பலா கொப்போடு கட்டிப் போடப்பட்டிருந்தன. சனிக்கிழமை பிறந்திருக்கும். நீள் பந்தல் மேலே நடுவரிசையில் தாமரையைக் கவிழ்ந்து தொங்க விட்டது போல் வண்ண மின்விளக்குகள். வாசல்களிலும் வளாக முக்குகளிலும் தொம்பைத் தோரண பூ அலங்காரம் தொங்க விடப்பட்டிருந்தது. கோவில் திடலின் பளிச்சென்ற ஒளிக்கு அப்பால் சாலைகளில் கும்மிருட்டு. ஒலிபெருக்கிகளின் பேரிரைச்சல். தூரத்தில் மேற்கே குளத்தங்கரை சாலையில் அவனின் நண்பர்கள் குழாம். நடந்து அங்கு சென்று ஒட்டிக் கொண்டான்.
அவன் சேர்ந்ததும் “சரி மணிகண்டனும் வந்துட்டான் அவனையும் சேப்போமா சரியா இருக்கும்'” என்று வேலாயுதம் சொன்னான்.
“லேய் அவுங்க அப்பா யாசுவாவல வியாண்டா” என்று அபி தடுத்தான்
அவன் “என்னதுல நானும் வாரேன், என்னயும் சேத்துகிடுங்க”
வேலாயுதம் “பொக்காண்டிக்க மவன் சாமி ஆட போறான் கேட்டியா” என்றான்.
“கதிரவனா”
“ஆமா…இன்னிக்கி ராத்திரி ஆட்டம் உண்டுன்னாக்கும் சொல்லிட்டு போனான்”
“எங்க வச்சி”
“சுடுகாட்டுக்க”
“சுடுகாடா”
“அதாம்மக்கா சொல்லுகேன். உங்க வீட்டுல காணோம்னு தேடுனாவன்னா எல்லோரும் செத்தோம் கேட்டியா” என்று அபி மீண்டும் எச்சரித்தான்.
“இருக்கட்டு வாரேன். ஒன்னு ஆவாது. என்னய தேடமாட்டாவ” என்று மணிகண்டன் சற்று உறுதியுடன் கூறினான்.
“பயறுவியால? பாதில பயந்துட்டு அழுதா நாங்க கண்டுக்க மாட்டோம் சொல்லியாச்சு”
“உங்கொப்பன்ட சொல்லு”
“சரிடே வா. ஆனா யாருகிட்டயும் சொல்லிட்டு திரியாத சுடுகாட்டுக்கு போறேன்னு. அணக்கலாம வந்துரு கேட்டியா”
“சரி எத்தனபேரு, யாரெல்லாம் வாரா”
“முண்டகண்ணனும் தடியனும் வேண்டிய ஐட்டத்தோட போயாச்சு, நம்ம நாலுபேரு அப்றம் பொக்காண்டிக்க மவன், அவ்ளோதான். அவனுக்காண்டி தான் நிக்கோம். வரட்டு… வந்ததும் கெளம்புவோம் சரியா”
மணிகண்டன் “சரி” என்று பெரியவர்களின் கண்கள் தன் மீது படாதவாறு ஒதுங்கி நின்றான். அப்பா ஊரில் எல்லோருக்கும் பரிச்சயம் உடையவர். யார் கண்டாலும் சிக்கல் தான்.
அரைமணிநேரம் கழித்து தூரத்தில் கதிரவன் நடந்து வருவது தெரிந்தது. பயக்கள் எல்லோரும் குஷி அடைந்தனர். மணிகண்டனுக்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி சீருடையான காக்கி நிக்கர் வெள்ளை மங்கிய வெள்ளை சட்டை அணிந்து இடுப்பில் காவி துண்டு கட்டி ஒரு தென்னை ஈக்கு போல வந்துகொண்டிருந்தான். விழா பூண்ட கோவிலை அவன் ஒரு அலட்சியப் பார்வையோடு கடந்து வந்தான். ‘ஆம் நடக்கட்டு நடக்கட்டு’.
ஆதி, “இசக்கியம்ம வந்துட்டாலேஏ ஆஆஅ….” என்று வில்லுப்பாட்டு தொனியில் இழுக்க எல்லோரும் கதிரவன் வருவதைக் கண்டு சிரித்தார்கள்.
அவன் இருப்பில் அலாதி அதிகாரம். அவர்களைக் கண்டபின்னும் நேர் பார்வையில் கடந்தான். “ம்ம்ம்…ம்ம்ம்…சீக்கிரம் அம்மைக்கி நேரமில்ல” என்று சொல்லி குளத்தங்கரை நோக்கிச் சென்றான். அவர்கள் பின் தொடர்ந்தார்கள்.
வேலாயுதம் “பையன் சரியான பாம்ல இருக்கான் கேட்டியா” என்றான்.
ஆமோதிப்பது போல் எல்லோரும் “ம்ம்ம்” போட்டனர்.
குளிர்காற்று உடம்பில் பரவி மணிகண்டனுக்கு மயிர் கூசி நடுங்கச்செய்தது. திரும்பிப் போய்விடலாமா என்று கூட நினைத்தான். மறுகணமே அதன் பின்விளைவுகளை கணித்து தன் முடிபை மாற்றி அமைதியாக நடந்தான். இருளுக்கு முதலில் கண்கள் பழகின. பின் உள்ளமும் அதற்கேற்றாற்போல் அமைந்தது. சாலை இடதுபுறமாக வளைந்து திரும்பியதும் கிழக்கே குளம் அதையொட்டி குளக்கரையில் வேப்ப மரத்தடியில் தனி இசக்கியம்மன் சன்னதி. சிறுவயதில் கேட்ட பேய்க்கதைகளுக்குக் களமாக அமைந்த இடம் இது. மேற்கே சுடுகாடு. அகண்ட வாசல் இருக்கும் கதவு கிடையாது.
“இங்க தாம்ல வாத பேய் சம்முவேல் நாடாருக்க செவுட்டுல அடிசிச்சி” என்று வேலாயுதம் பேச்செடுத்தான்.
ஆதி “நாடாரு வெள்ள வேட்டி வெள்ள சட்டலா மாட்டிட்டு வந்தாரு” என்று பதிலளித்தான்
“ஆமா நமக்க கூட்டுகாரன்னு அது நெனச்சிருக்கும்” என்று அபி சிரித்தான். எல்லோரும் மெல்ல சிரித்தார்கள்.
“வேப்பில அடிச்ச பொறவு தான் நாடாரு காப்பி குடிக்கவாங்க தல காட்டுனது கேட்டியா”
தினம் போய்வரும் இடம் கணக்காகக் கதிரவன் சுடுகாட்டிற்குள் நுழைந்தான். ஏற்கனவே நடந்து நடந்து ஒற்றையடிப் பாதை உருவாகியிருந்தது. எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள். மணிகண்டனுக்கு இப்போது ஏனோ பரவசம் கூடிற்று. பிறந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்த பின்னும் குடும்பத்தில் இழவு விழவில்லை. முதல்முறையாக சுடுகாட்டிற்குச் செல்கிறான். இருபுறமும் உடைமரங்கள் சிறு தள்ளாட்டங்களோடு நின்றன. கொஞ்ச தூரம் சென்றதும் மரங்களற்ற வெளி திட்டுத் திட்டான தரைகளுடன் தெரியலாயின. பாத்தி கட்டி வைத்தது போல் தோன்றியது அவனுக்கு. வலது பக்கம் சற்று தள்ளி பெரிய புளியமரத்தடியில் இருவர் ஏதோ வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதை நோக்கிச் சென்றனர். பாதைக்கு இருபுறமும் திட்டுகள். கதிரவன் மரத்திற்கு எதிரே இடதுபுறத்தில் தொடங்கும் முதல் திட்டில் குத்த வைத்து அமர்ந்து கொண்டான். அவர்கள் சற்று பின்னால் ஒரு குழுவாக இரு திட்டுகளில் எதிரெதிரே அமர்ந்து கொண்டனர். மணிகண்டன் தரையில் அமர்ந்து திட்டில் தலை சாய்ந்து கைகளை தலைக்கு மேலே வைத்துப் படுத்தான்.
“மக்கா லேய் நீ யாருக்க மேல தல வச்சிருக்க தெரியுமா” என்று அபி கேட்டான்
மணிகண்டன் “யாரு” என்று குழப்பத்தில் முழித்தான்
“உனக்க சொக்காரமாறு தான். பொன்னப்ப நாடாரு”
“சும்மா கெடந்து சளம்பாதல என்னத்தையாவது”
“லேய் உள்ளதாக்கும். கீழ மதத்தவரு தான் ஒறங்காறு கேட்டியா. நீ தல வச்சிருக்க எடத்துல தான் அவியல பொதச்சாவ”
மணிகண்டன் திடுக்கிட்டு எழுந்து தன்னில் ஒட்டியிருக்கும் மண்ணை தட்டி விட்டுக்கொண்டிருந்தான். இதயத் துடிப்பு காதுகளுக்குக் கேட்டன. மூச்சு வாங்கியது.
“சமாதியால இது” என்று பயத்தோடு கேட்டான்.
“ஆமா. பின்ன கெழங்கு நடதுக்கா தோண்டி வச்சிருக்கு” என்று எதிர் சமாதியில் இருந்த ஆதி சொன்னான்.
மணிகண்டன் சுற்றிப் பார்த்தான். அலை அலையாகப் பூமி கிடந்ததைக் கண்டதும் தொண்டை அடைத்தது.
“எல்லாமே சமாதியால”. குரல் எழவில்லை.
“மக்கா கதிரவே யார் சவத்துக்க மேல இருக்கான்னு சொல்லு பாப்போம்” என்று ஆதி மிடுக்காகக் கேட்டான்.
“போல தொட்டி” என்று திட்டிவிட்டு மணிகண்டன் சுற்றிச் சுற்றி வெறுமென பார்த்து நின்றான். காட்சி அவன் தர்க்கத்திற்குள் சிக்க மறுத்துக் கொண்டிருந்தது போலும். கதிரவன் தியானத்தில் திளைப்பவன் போல அசையாது இருந்தான். புளியமரத்தடியில் இருவரும் பூசைக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சாமிக்குப் போட்டு கழிந்த மாலைகள், திருநீறு, குங்குமம், சூடகம், ஊதுபத்தி, தீப்பெட்டி, பன்னீர் குப்பி, உடைந்த சிறு மண்பானை ஓடு, வேப்பிலை கொத்து, சிவப்பு பட்டு சால்வை என எல்லாமே சம்பாதித்து வந்திருந்தனர் எப்படியோ. நீள் வாக்கில் கிடந்த சிதைந்த சிறிய வேலி கருங்கல்லைப் பிரதிஷ்டை செய்து அலங்கார பணிவிடை நடந்து கொண்டிருந்தது.
ஆதி “லேய் அபி நீ சொல்லு பாப்போம், உள்ள யாரு கெடக்கான்னு” என்றான்
“நானா அடியந்தரம் பண்ணேன். என்ட கேக்க. யவனுக்க ஆச்சியோ தாத்தாவோ. யாருகண்டா”
“அதான் இல்ல கேட்டியா, நம்ம டீசன் அக்காக்க அண்ணே இருக்கவாலா”
“ஆமா பிரதீஸ் அண்ணே”
“அவிய ஆளாக்கும். ரெண்டு வருசதுக்க முன்னாடி நானும் இங்க வந்தேன் தாத்தா கூட”
“கற்பகம் அக்காவயால சொல்லுக”
“அவிய தாம்ல”
“லவ் பன்னாவளா”
“ஆமா. மருந்தடிச்சுலா செத்து போனாவ தெரியுமா”
“அப்படியா… யாம்ல”
எல்லோருக்கும் ஆவல் கூடிற்று.
“அதெங்க நமக்குத் தெரியும். ஆனா சாவதுக்கு முன்னால அந்தக்கா ஒரு தாள்ல ‘யாமாந்துட்டேன் மோளே’ னு எழுதி வச்சிட்டு செத்தாவலாம்” என்று ஆதி சொன்னதும் சூழலில் மௌனம் கூடிற்று. சற்று ஆழ்ந்து சென்றது. மணிகண்டன் கண்ணெடுக்காமல் ஆதியைப் பார்த்துக்கொண்டு நின்றான். விசித்திரமான உணர்வு அவனில் குடியேறியது.
“கன்னிச் சாமியாக்கும், இப்பவும் அவிய வீட்டுல வச்சி கும்புடுவாவ” என்று ஆதி தொடர்ந்தான். “இத பத்தி வீட்டுல கதவுடும்போ ஒட்டாக்கும் கேட்டேன். ஒருமாரி ஆவிட்டு கேட்டியா, பாவம்ல அவிய” என்றபின் ஆதி மௌனமானான்.
மணிகண்டன் “எதுக்குல அவிய மோளேன்னு எழுதுனாவ” என்று கேட்டான்.
“அது அவியளுக்குத்தான் தெரியும்”
அனைவரும் அச்சம்பவத்தை எண்ணி பச்சாதாபம் கொண்டனர். பயக்களிடம் இயல்பான கலகலப்பு அற்றுப் போனது. மணிகண்டனுக்கு அது மண்டையைப் போட்டு குடைந்து கொண்டே இருந்தது. ஏன் மோளே என்று எழுத வேண்டும். அதைத் திரும்பத் திரும்ப எண்ணி சிந்தித்தான்.
கோவிலில் நாயனார் ப்பீ… ப்பீ… என வாசித்துப் பரிசோதித்தது ஒலி பெருக்கி வழியே அவர்களுக்குக் கேட்டது. மேளவாத்திய காரர்களும் நாயனார்களும் வந்துவிட்டனர் என்று எல்லோரும் அறிந்தார்கள். சாம கால பூசை. தடியன் நாகேஷ் எல்லோரையும் அழைத்தான் “லேய் லேய் வாருங்க எல்லா ரெடி ஆயாச்சு”.
கதிரவன் அந்த சமாதி மேலேயே எழுந்து நின்றான். மீதமுள்ளவர்கள் பிரதிஷ்டை செய்த கல்லிற்கு இரு புறமும் நின்றனர். நிலத்தில் சொருகி வைத்த இரண்டு ஊதுவத்திகள் புகைந்து கரைந்தன. இவர்கள் அலங்கரித்த இசக்கி, கண்டதை எடுத்து தன மேல் போட்டு மணல் பூசி விளையாடும் அசட்டுச் சிறுமி போல குறும்புடன் நின்றிருந்தாள்.
“லேய் அவவனுக்கு கேக்க வேண்டிய கணக்கெல்லாம் யோசிச்சு வச்சிகோங்கடே சாமிட்ட கேக்கணும்லா” என்று வேலாயுதம் சிரித்தான்.
“பொக்காண்டிக்க மவனுக்கு வாய்பாடுல பிடி உண்டுமானு மொத கேட்டுக்கடே” என்று ஆதி சொன்னதும் மீண்டும் கலகலப்பு உண்டானது அவர்கள் மத்தியில்.
“இங்க அவன் சொல்லுயது தானடே கணக்கு. மறுபேச்சு உண்டுமா” என்று முண்டகண்ணன் புன்முறுவலுடன் சொன்னான்.
கோவிலில் சாஸ்தாவிற்கு பூஜை முடிந்ததும் சுடலைமாடனுக்கான அழைப்பு பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. இங்கு எல்லோரும் தயாரானார்கள். அண்ணாவி பாட பின் பாட்டுக்காரர் அதைத் தொடர்ந்தார். மகுடம் உச்சத்திற்குச் சென்றது.
“செத்த சவம் சாம்பல் பூசி….
சாம்பல் பூசி….
சொடல காட்டு மண்ணுமாகி….
மண்ணுமாகி….
மூனுகாலம் நின்னு வாரான்…..
மூனுகாலம் நின்னு வாரான்….
காவலுக்கு கயிலையிலே….
கயிலையிலே….
ஈசன் பெத்த சொடல மாடன்….
சொடல மாடன்….
ஏ…மாயாண்டி சொடல மாடன்…
சொடல மாடன்…”
“ஓஓஓஓ….” என்ற உக்கிர ஊழை ஒலிபெருக்கியால் இவர்களை அடைந்தது. மேள வாத்தியக்காரர்களும் நாயனாரும் எடுத்த எடுப்பிலே குலவை தொனியில் உச்சத்திற்குப் போய் விட்டனர். கோவிலில் சுடலைமாடன் சாமி வந்துவிட்டது. மகுடம் வாசிப்பவர்கள் ஒலிபெருக்கியில் குலவையிட்டார்கள். ஐந்து நிமிடங்களாகத் தொடர்ந்த சுடலைமாடனுக்கான மேள வாத்தியம் சுடுகாட்டில் இவர்களுக்குள் ஒரு விசையை உண்டு பண்ணிற்று. அடுத்தது பலவேசக்காரனுக்கான அழைப்பு பாடல் மற்றும் வாத்தியங்கள். சாமி வந்தது. பத்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தன. மேள நாயன வாத்தியங்கள் நின்றன. தடியன் அதற்குள் மண்பானை ஓட்டில் திருநீறு குவித்து அதில் சூடகம் ஏற்ற தயாரானான். நினைத்தது போல கோவிலில் இசக்கியம்மன் அழைப்பு பாடல்,
“தீ எடுத்து சீல சுத்தி….
சீல சுத்தி….
செங்கோப ஆரமிட்டு….
ஆரமிட்டு….
கெள போல சொமந்து வாரா….
சொமந்து வாரா….
பச்ச மண்ணு பிள்ள ஒன்னு….
பிள்ள ஒன்னு….
யாரு பெத்து யாரு கண்டா….
யாரு பெத்து யாரு கண்டா….
தாயின்னு கூடு செஞ்சு….
கூடு செஞ்சு….
தாம்போக்கில் ஏறி வாரா…
தாம்போக்கில் ஏறி வாரா…
எந்தாயி இசக்கியம்மா…
இசக்கியம்மா…”
சிறிது நேரத்தில் மெல்ல அண்ணாவியின் குரலொலி மங்கி காற்றில் கரைய. இசக்கியம்மன் அழைப்பு மேளம் வாசிக்க ஆரம்பித்தார்கள். தொடக்கத்தில் மெதுவாகச் சென்று போகப்போக உச்சத்திற்கு ஏறும் வாத்தியம் அது.
பாடல் ஆரம்பித்த போதே தடியன் இங்கு சூடகம் காட்ட ஆரபித்துவிட்டான். மேளவாத்தியம் ஒலிக்க ஆரம்பித்ததும் மேலும் இரு சூடகமிட்டான்.
வாத்தியம் மெல்ல ஏற ஏற கதிரவனிடத்தில் மாற்றங்கள் தெரியலாயின. முகம் கோணலாகச் சுழித்து மீண்டது. கைகளை கட்டி முன்னும் பின்னுமாக நின்றவாறே சாய்ந்தான். உடல் நடுங்கிற்று. கால்கள் முறுக்கேறின. நிலத்திலிருந்து ஏதோ ஊடுருவுவது போலிருந்தது. கால்களை உன்னி முன்னே நடந்து திட்டிலிருந்து கீழே இறங்கினான். பூடமாக நின்ற கல்லிற்கு எதிரே வந்து முன்னும் பின்னுமாகத் தலையை குனிந்து ஆட்டி ஆட்டி நடந்தான். வேலாயுதம் அவன் கூடவே முன்னும் பின்னுமாகச் சென்று பொத்தான்களை ஒவ்வொன்றாக துளையிலிருந்து எடுத்து சட்டையைக் கழற்றினான். அவிழ்ந்த காவி துண்டை மீண்டும் இடுப்பில் கட்டிவிட்டான். தடியன் சிகப்பு சால்வையை எடுத்து வந்து கதிரவனுக்குச் சீலை போல முந்தானை சுற்றி முக்காடு போல் போட்டு விட்டான். முண்டகண்ணன் பூடத்திற்குச் சாற்றிய மாலைகள் இரண்டை எடுத்து வந்து கதிரவன் கழுத்திலிட்டான்.
கோவிலில் வாத்தியத்தின் ஏற ஏற கதிரவன் கண்களை மூடி முகத்தை ரொம்ப கோணலாகச் சுழித்து முன்னே குனிந்து குனிந்து எழுந்தான். கால்கள் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தன. முகத்தை தலையை கைகளால் தடவியபடி பின்னே நடந்து போய் வந்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் வாத்தியம் உச்சத்தை அடைந்து அதிலேயே நிலைத்துச் செல்ல ஆரம்பித்ததும் கதிரவன் “ஓஓஓஓ….” என்று கூச்சலிட்டு ஓடி முன்னே வந்து பூடத்தின் முன் மண்டியிட்டு ஆடிக் கொண்டிருந்தான். ஆதி நடு நடுவே குலவை போட்டுக் கொண்டிருந்தான். சாற்றியிருந்த அனைத்து மாலைகளையும் எடுத்து கதிரவன் தன் கழுத்தில் போட்டுக் கொண்டு எழுந்து இரு கால்களையும் தூக்கித் தூக்கிப் போட்டு சன்னதம் கொண்டான். அவன் ஆட்டத்தில் பெண் தன்மை இருந்தது. வெறி கொண்டு முன்னும் பின்னுமாக உடலை வளைத்து நாக்கை நீட்டியும் பின் “ஓஓஓஓஓ…” என்று கத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தான். திடீரென முன்னே வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்லை இடது கையால் எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆடத் தொடங்கினான். முண்டகண்ணன் பன்னீர் குப்பியை கதிரவன் தலையில் கவிழ்த்து ஆற்றுபடுத்தினான். திடீரென கோவிலில் நிசப்தம் சூழ்ந்தது. எந்த ஒலியும் கேட்கவில்லை.
அப்பொழுது கதிரவனின் சன்னத முனகல் தெளிவாகக் கேட்டன. நாக்கை கையால் வெளியே இழுத்து கண்கள் விரிய ஆடினான். பின், மெல்ல வெறி இறங்கி நிஜ தாய் போல் இடுப்பில் கல்லோடு முன்னும் பின்னுமாக ஒய்யாரமாக நடந்து கொண்டிருந்தான். அச்சசல் பெண்ணின் நடையே தான். அந்த மௌன கணத்தில் மணிகண்டனுக்குக் கதிரவனின் நடைக்கு ஏற்ப சலங்கை ஒலிகள் கேட்டன.
“ம்ம்… கேளு” என்று கதிரவன் கை காட்டினான்.
ஆதி முன்னே வந்து கையேந்தி பாட்டிமாரின் பாவனை கொண்டு “ஒனக்கு தெரியாததா தாயி… சோமில்லாம வீட்டுலேயே கெடக்காரு… வேற சோலி இல்ல கேட்டியா… ஆத்திர அவசரத்துக்கு சொக்காரமாருவட்ட கையேந்த போறேன்… நீ தான் பாத்துக்கணும்”
கதிரவன் “சொல்லிடாலா… நா பாத்துக்குறேன் போ” என்று தடியனை அருகில் அழைத்து கையில் கொஞ்சம் திருநீறு எடுத்து ஆதியிடம் கொடுத்தனுப்பினான்.
மீண்டும் முன்னே பின்னே நடை. “ம்ம்ம்…வா”
வேலாயுதம் முன்னே சென்று தகப்ப பாவனையில், “என் மொவன் முத்தாரம்ம கோயில்ல பத்திரகாளி ஆடுகான். என் குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்து வராது கேட்டியா. அடுத்த கொடைக்கு அவன் மேல சாமி எறபிடாது பாத்துக்க. அவ்ளோதான்”
“ஒங்கொப்பனால எல்லாத்தையும் நடத்துகான்…தாய்லீ…எல்லாம் எனக்குத் தெரியும் போல நாய….” என்று எச்சரிக்கும் தொனியில் கதிரவன் கை காட்டினான்.
திடீரென மீண்டும் வாத்தியங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. இம்முறை கும்மி வாசித்தார்கள். உடனே கதிரவன் மீண்டும் வெறி கொண்டு “ஓஓஓஓ…” என்று ஓலமிட்டு நாக்கை நீட்டி ஆடினான். பின்னே சென்று ஓடி மீண்டும் முன்னே வந்து மணிகண்டனின் கையை பிடித்து இழுத்து பின்னே சென்றான். கை கோர்த்துக் கொண்டு “ம்ம்….ம்ம்ம்…” என்று நின்ற இடத்தில் அவனையும் சேர்த்து சுத்தச் செய்தான். மணிகண்டன் முதலில் கூச்சத்தில் தயங்கினான் போகப் போக அவனுக்கும் குதுகலத்தில் கால்களைத் தூக்கித்தூக்கி சுற்றி ஆடிக் கொண்டிருந்தான். திடீரென மணிகண்டனின் கை வழியே ஏதோ பரவியது போலிருந்தது. நெஞ்சு பரப்பில் வெம்மை அதிகரித்தது. உடல் நடுங்கிப் படபடத்தது. இன்னும் வேகமாக கதிரவன் அவனோடு சேர்ந்து சுற்றினான். தலை சுற்றியது. அவன் கைகள். அவனுடையது தானா என்று மணி குழம்பினான். வேறுமாதிரி தோன்றுகிறது. மிக மென்மையாகக் குளிர்ந்து. மணிகண்டனின் உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. பெயடித்தத்து போல் ஒரு மயக்க நிலை.
இசக்கி புருவத்தை உயர்த்தி மென்புன்னகை கொண்டு “ம்ம்ம்…ம்ம்ம்…கேளு என்ன கேக்கணுமோ” என்றாள்.
மணி, கைகள் வெடவெடக்க உதடுகள் நடுங்க திக்கித் திக்கி உளறினான், “ஏன் அம்மா…”. ஒலியாகாமல் அடங்கிற்று.
“ஏன் அம்மா…”
“ஏன் அம்மா…மோளே என்று எழுதின” என்று கண்ணீர் வடித்தான்.
இசக்கி தலையை ஆட்டி ஆட்டி மென் புன்முறுவல் கொண்டு “ம்ம்ம்…சொல்லட்டா….” என்று ஆரம்பிக்கவும் அனைவரும் ஓடிவந்து இருவரையும் இழுத்துச் சென்றனர். இசக்கி கோர்த்த கைகளை விடவில்லை. இசக்கியிடமிருந்த பூடத்தை முண்ட கண்ணன் வாங்கி தூரே எறிந்தான். அது முதலில் கதிரவன் உட்கார்ந்திருந்த சமாதி அருகில் விழுந்தது. “லேய்…” என்று வர மறுத்த இசக்கியை நால்வர் பிடித்து இழுத்து புளியமரத்திற்குப் பின்புறம் இட்டுச் சென்றனர். மணிகண்டன், மயக்கத்திலிருந்து தெளிந்து நின்ற இடத்திலேயே “என்னல ஆச்சு” என்று கேட்டான். ஆதி அவனை இழுத்துக் கொண்டே “சொல்ல மாடே வாராம்ல சீக்கிரம் வால” என்று ஓடினான். மணிகண்டனும் மரத்திற்குப் பின்னே ஓடி ஒளிந்து குத்தவைத்து அமர்ந்து கொண்டான். தடியன் மரத்தடி பரப்பில் தடயங்கள் இல்லாதவாறு சரிபார்த்துக் கொண்டான்.
இசக்கி அடங்கியபாடில்லை. நால்வர் பிடித்திருந்த போதும் உடலை முறுக்கி நெளிந்து கொண்டிருந்தாள். முனகல் சத்தம் வாயைப் பொத்திய போதும் கேட்டுக் கொண்டிருக்க வேலாயுதம் அணியப்பட்ட மாலைகளை எடுத்துத் தூர எரிந்து சால்வையை உருவி வாயில் திணித்தான்.
“லேய் கதிரவா என்னாலே செய்க. சும்மா இருல சொல்லமாடே வாரான். அமைதியா இருல பயமா இருக்கு” என்று அபி கிட்டத் தட்ட அழுதேவிட்டான்.
“லேய் இவன் யாம்ல திடீர்னு இப்டிலாம் செய்கான்” என்று ஆதி பதற்றம் கொண்டான்.
மெல்லிய கிங்கிணி சப்தம். அதை கூர்ந்து கேட்குந்தோறும் மிக அணுக்கமானது. மணிகண்டன் மெல்ல எழுந்து வாசல் பக்கம் பார்த்தான். உடைமர புதர்களுக்கிடையில் நெருப்பு பறந்து நகர்ந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வெட்ட வெளி பக்கம் வந்ததும் மீண்டும் ஒளிந்து அமர்ந்து கொண்டான். மெல்ல ஓரக்கண்ணால் எட்டிப் பார்த்தான். சுடலை முன்னும் பின்னுமாக துள்ளி ஆடி சுற்றிப் பார்த்தது. உடுப்பில் கோர்த்திருந்த கிங்கிணிகளின் ஓசை வெளியை நிறைத்தது. இடது இடுப்பில் பெரிய தீ பந்தம். முகத்தில் தீயின் நிழல். திடீரென பார்வை புளியமரம் பக்கம் திரும்பிற்று. மணி உச்சக்கட்ட பீதியில் பார்த்துக் கொண்டிருந்தான். திரும்பி சத்தம் போடாதீர்கள் என்பது போல சைகை காட்டினான். சுடலை புளியமரம் பக்கம் நடந்து வந்தது. மணி “லேய் சொடல நம்மள பாத்து தாம்ல வருவு” என்று உடைந்த குரலில் கிசுகிசுத்தான். பின், கண் எடுக்காமல் சுடைளையையே மணிகண்டன் பார்த்துக்கொண்டிருந்தான். சுடலை அருகில் வர வர இசக்கி இருப்புக் கொள்ளாமல் தவித்தது. மணியைத் தவிர மீதி அனைவரும் இசக்கியைப் பிடித்து கட்டுக்குள் வைத்தனர். சுடலை முன்னும் பின்னுமாக ஓடி வந்து புளியமரத்தருகே நின்றது. இவர்களின் மூச்சு வாங்கலொலிகள் கிங்கிணிகளால் மட்டுப்படுத்தப்பட்டன. மணி உடல் நடுக்கத்தில் ஓரக் கண்ணால் பார்த்தவண்ணமிருந்தான்.
சுடலை தன் கையில் வைத்திருந்த தேங்காயை இசக்கி பூடமாக முன்பு இருந்த கல்லில் ஓங்கி அறைந்து உடைத்தார். உடனே இசக்கி அடங்கிற்று. கதிரவனின் உடல் தளர்ந்தது. சுடலை வெளியே செல்வதை மீண்டும் உடை மர புதர்களின் ஊடே மணி கவனித்தான். அலைகள் போல கிங்கிணிகளின் ஓசை காற்றுப் பெருவெளியில் சங்கமித்து மெல்ல கரைந்தது.
“சொடல போயாச்சுலே” என்றான்.
எல்லோரும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர். கதிரவன் இன்னும் மயக்கத்தில் இருந்தான். வாயிலிருந்து சால்வையை உருவி கன்னத்தில் சில நிமிடங்கள் தட்டி தட்டி எழுப்ப ஒரு வழியாக கண் திறந்தான். திறந்ததும் “யம்மா…யம்மா…” என்று படபடத்தான்.
“ஒன்னுமில்ல லேய்….மக்கா இங்க பாரு…நாங்க தான்….பயறாத…லேய் கதிரவா” என்றான் ஆதி.
எல்லோரும் அவனை சமாதானப் படுத்த மெல்ல சமநிலையடைந்தான். மூச்சு சீரானது.
“சீக்கிரம் வெளிய போவோம் வாங்க லேய்” என்று வேலாயுதம் அவசரப்படுத்தினான்.
மரத்தடியிலிருந்து வெளியே வந்தார்கள். தேங்காய் சிதறிக்கிடந்தது.
“லேய் பாத்து மிதிச்சிறாம வாங்க” என்று ஆதி ஜாக்கிரதையாக அழைத்துச் சென்றான்.
எல்லோரும் வெளியே வந்து குளத்தங்கரைக்கு வந்து முகம் கை கால்களைக் கழுவினார்கள். படிகளில் அமர்ந்தார்கள். கதிரவன் சட்டை அணிந்து கொண்டான்.
“தெரியாம வந்துடேம்ல. வெளையாட்டு வெளையாட்டுனு எழவு விழ வச்சிருப்பியல புண்டாமொவனுவலா” என்று மணிகண்டன் எல்லோரையும் பார்த்து திட்டினான். “வெளங்கிகிடுவியளால தொட்டிப் பயலுவளா” என்று ஏசிய வண்ணமிருந்தான்.
“லேய் ஒன்ணான சொல்லுகே கேளு, இதுக்கு முன்னாடி வெளையாடும்போ இப்படி இவன் பன்னதில்ல பாத்துக்க” என்று வேலாயுதம் பதிலளித்தான்.
“ஆமால உள்ளதாக்கும்” என்று ஆமோதித்தான் ஆதி.
அருகே தனிக்கோவிலாக இருளில் நின்ற இசக்கி சன்னதியை எத்தேர்ச்சியாக்கக் கண்டதும் கதிரவன் “போனும்…வீட்டுக்கு போனும்…யம்மோ” என்று மூச்சு வாங்கி ஏங்கினான்.
“பாருல அந்த பயல என்னனி ஆக்கி வச்சிருக்கியனு…பாவம்ல…” என்று மணிகண்டன் அனுதாபப்பட்டான். கோவிலில் சாமியாட்டம் நாயனாரின் குலவை தொனியிலேயே உச்சத்திற்குச் சென்று நின்றது.
மணிகண்டன், “நா போறேன் வாரியள்னா வாங்க அவ்ளோதான்” என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
கோவில் திடலுக்கு வரும்போது சாம கால பூஜை முடிந்து எல்லோரும் திருநீறு வாங்கிக்கொண்டு கலைந்து நின்றிருந்தனர். மணி கூட்டத்தில் நுழைந்து அம்மாவைத் தேடினான். பார்த்ததும் போய் ஒட்டிக் கொண்டான்.
“எங்கல போனா…இவ்ளோ நேரம் காணும் காணும்னு தேடிருக்கேன்”
“பயக்க கூட தான் நின்னேன்”
“பக்கத்துல இருல” என்று சொல்லி அவன் கையை பிடித்துக்கொண்டாள். “இனிமேல் சக்க பச போட்டுத் தான் குண்டிய ஒட்டி வைக்கணும் போல” என்று அம்மா விமர்சித்ததும் சுற்றி நின்ற கூடிப்பிறப்புகள் உரக்கச் சிரித்து நகையாடினர்.
மணி அமைதியாக அம்மாவின் சீலையோடு பம்மி நின்றான். பின் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டே தலை குனிந்து, “இனிமேல் யாமாத்தமாட்டேன்மா” என்று கூறி சற்று கண் கலங்கினான்.
ஆனால் அதை அம்மா கேட்டதாகத் தெரியவில்லை, தலை நிமிர்ந்து பார்த்த போது, வெளியூரிலிருந்து வந்திருந்த பெரியம்மாவிடம் அம்மா இதைச் சொல்லிக் கொண்டிருந்தாள்,
“வருசா வருசம் கொடைக்கு வரது தான் அக்கா…இன்னிக்கி ஏன் இசக்கி அம்ம சாமியாடலனு தெரியல”.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

மிக சிறப்பு
நன்று