“ஏம் புள்ள. ஒனக்கு என்ன பயித்தியமா? அந்தப் பயலோட அடி பொறுக்க மாட்டாமத்தான் மூத்தவ செத்துப் போனான்னு நீயேச் சொன்னவ, இப்ப மாரியம்மாவையும் அவனுக்கே கட்டிக்குடுக்கப் போறேன்னு வந்து நிக்கிறியே, என்னாடி ஆச்சு ஒனக்கு?” அம்மாவின் குரலில் கோபம் அதிர்ந்தது.
தங்கம்மாவின் பதில் நிதானமாக வந்தது. “என்ன செய்யிறது. மருமவன் ரெண்டாங் கலியாணத்திலியே குறியா இருக்கான். மூத்தவ பெத்துப் போட்டது வேற ரெண்டு கெடக்கே. வேற எவளையாவது கட்டிகிட்டு வந்து, இந்த புள்ளைங்களப் போட்டு கொல்றதுக்கு, சின்னவளே போனான்னா அதுங்களுக்காவது தொணையா கெடக்கும். இவளையும் எவனுக்காவது கட்டிக்குடுத்துதானே ஆவனும்! எம்பொழப்புக்கு, காசு பணத்துக்கு எங்க போவேன். அவனே வந்து கட்டிகிறேன்னு கேக்குறான். நகை நட்டு எதுவும் வேணாங்கிறான்.”
“அதுக்காக? எங்க வேனா கொண்டுபோயி தள்ளிடுவியா? அவளுக்கு என்னடி வயசாச்சு. வயசுக்கு வந்து இன்னும் ஒரு வருசங்கூட ஆவுல. பதினஞ்சு வயசுதான ஆவுது. அதுக்குள்ள கட்டிகுடுக்கறன்னு அலயிறியே, ஒனக்கே நாயமா இருக்கா?” அம்மாவின் கோபம் குறைவதாகத் தெரியவில்லை.
“வயசுல என்னெ இருக்கு. இன்னும் பத்து வருசம் ஆனா மட்டும், அவளுக்கு சீமையில இருந்தா மாப்பிள வரப்போறான். எப்பப் போனாலும் இப்பிடிப் போவ போறவதான். அதுக்கு இப்பவே போவட்டுமே.” தங்கம்மாவின் குரலும் உறுதியாக இருந்தது.
”மாரியம்மா, இங்க வா!” அம்மாவின் அதட்டலில் வேகமாக நெருங்கி வந்தது அந்தப் பெண். முகமெல்லாம் பயமும் வருத்தமும். மாரியம்மாவின் அழுக்கு பாவாடையைப் பிடித்துக்கொண்டு அவள் அக்காவின் பிள்ளைகள் இரண்டும் கூடவே வந்தன.
“ஏன்டி, ஒங்கம்மா என்னவோ சொல்றாளே ஒனக்கு ஏதாவது புரியிதா? ஒன் அக்கா புருசனுக்கே ஒன்னயும் கட்டி வைக்கிறேங்கிறா தெரியிதா?”
“அம்மா நேத்தே சொல்லிச்சி.” தலை நிமிராமல் வந்தது பதில்.
அம்மாவுக்கு மனது ஆறவில்லை. தனக்கு ஒரு மகள் இல்லையே என்பது ஏக்கமாகிப்போன அம்மாவுக்கு இந்த மாரியம்மா குட்டியின்மேல் எப்பவுமே தனிப்பிரியம். மாரியம்மா பிறந்து, இந்த காலவாய்ப் புழுதியில் விளையாண்டு வளர்ந்ததெல்லாம் அம்மாவின் பார்வையிலேயே நடந்ததுதானே! அம்மாவுக்கு வெற்றிலைக்காகட்டும், கடையிலிருந்து ஒரு டீத்தண்ணிக்காகட்டும், எல்லாவற்றுக்கும் கூப்பிட்டக் குரலுக்கு விழுந்தடித்துக்கொண்டு வந்து நிற்பவளாயிற்றே! இந்த குழந்தையை எப்படி அந்த படுபாவிப் பயலுக்கு பலி கொடுப்பது! இந்த குட்டியை ஒரு நல்லபையனிடம் பிடித்துக் கொடுக்க வேண்டுமென்று அம்மாவுக்கு ரொம்ப நாளாக ஆசை. ஆனால், பெற்றவள் இப்போது வேறு ஏற்பாடு, அதுவும் இப்படி ஒரு ஏற்பாட்டைப் பண்ணிக்கொண்டு வந்து நிற்பதைக் கண்டதும், எதுவும் செய்ய முடியாத இயலாமை, கோபமாகப் பீரிட்டது.
”அப்பிடீன்னா, ஒங்கம்மா சொல்றாப்பில அந்தப்பயலையே கட்டிகிறேங்கிறியா?” அம்மாவின் குரல் ஆக்ரோஷமாகி வெடித்தது.
அக்கா பிள்ளைகள் இரண்டும் திடுக்குற்று மாரியம்மாவிடம் இன்னும் ஒட்டின. மாரியம்மாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. கண்களில் மட்டும் இரண்டு துளி கண்ணீர் வெளியேறி விழுந்தது. யாரும் பேசாத மௌனத்தில் இறுக்கமாக இருந்தது. காலவாயில் ஆட்கள் சலித்துக் கொண்டிருந்த மண், புழுதியாகச் சுற்றிச் சுற்றி அடித்தது.
மௌனத்தை மீண்டும் அம்மாதான் கலைத்தாள். “எப்பிடியாவது போங்க. நாளைக்கு அவன் அடிக்கிறான், ஒதைக்கிறான்னு இங்க யாரும் வந்து நிக்கக்கூடாது. இப்பவே சொல்லிட்டேன். வாப்பா, போவலாம்.” என்று விளாசித் தள்ளிவிட்டு, வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வேகமாக எழுந்துவிட்டாள்.
ஸ்கூட்டரை எடுக்கச் சென்ற என்னை, “வேண்டாம்பா, நடந்து போவலாம், வா!” என்று அழைத்துக்கொண்டு நடந்தாள். நடந்து போகலாம் என்று சொன்னால், என்னிடம் தனிமையில் பேசுவதற்கு ஏதோ விஷயம் வைத்திருக்கிறாள் என்று அர்த்தம். சுண்ணாம்புக் காலவாயிலிருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து காலவாய்க்கும் எப்போதாவது இப்படி நடந்து போகிற அரைமணி நேரம்தான் அம்மா என்னிடம் மனம் திறந்து பேசுகிற நேரம். வீட்டில் பேரப்பிள்ளைகள், காலவாயில் வேலையாட்கள் என்று எப்போதும் கும்பலும் சந்தடியுமாக இருக்கும். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே இங்கே வந்து போக முடிகிற எனக்கும், இப்படி அம்மாவோடு தனியாக பேசிக்கொண்டு செல்லுகிற தருணம்தான் மனதிற்கு திருப்தியாக இருக்கும்.
ரோட்டைத்தாண்டி, வயக்காட்டில் இறங்கியதும், அம்மா பேச்சை ஆரம்பித்தாள். குரலில் கோபம் அடங்கி நிதானம் வந்திருந்தது. “மாரியம்மா ரொம்ப நல்ல பொண்ணுப்பா. ஒடம்பு ஒழைக்கிறதுக்கு அஞ்சாத புள்ள. மத்த குட்டிங்க மாதிரி, கெடைக்கிற காசக் கொண்டுபோயி சினிமா கொட்டாயிலியும், ஓட்டல் கடையிலியும் வீணாக்கறவ இல்ல. பின்னாடி நல்லா வசதியா வருணும்னு இப்பவே சேத்து வைக்கிறதுக்கு நெனைக்கிறவ. இவளப்போயி இப்பிடி அநியாயமா அந்தப்பயலுக்கு குடுக்கிறேன்னு சொல்றாளேன்னுதான் கோவமாப் போச்சு. இந்நேரம் ஒங்க அப்பா மட்டும் இருந்தாருன்னா, ‘போடி கழுத, அந்த புள்ளைக்கு நானே மாப்பிள்ள பாத்து கட்டிக்குடுத்துக்கிறேன், போயி ஒன் வேலையப் பாரு’ன்னு நிறுத்தியிருப்பாரு.” அம்மாவின் குரலில் இயலாமை நிழலாடியது.
“ஏம்மா, சின்னபுள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சட்டமெல்லாம் இருக்கே. அதெப்படி இவங்க இஷ்டத்துக்கு பண்ண முடியும்?”
“அதெல்லாம் ஒன்னும் செய்ய முடியாதுப்பா. இங்க யாரு பொறந்த தேதியெல்லாம் குறிச்சிவைக்கிறாங்க. அம்மாகாரி சொல்ற வயசுதான். தங்கம்மாவ கேட்டா ‘எம்பொண்ணுக்கு இருவது வயசாவுது’ன்னு சொல்லுவா. ஊருகாரனங்களும் எனாமா கெடைக்கிற ரெண்டுவேள கல்யாண சோறு போயிடுமேன்னு தெரண்டு வந்துருவானுவ சண்டைக்கி.”
“அப்பிடின்னா நாம என்னம்மா பண்ண முடியும். பெத்தவ முடிவு பண்ணியாச்சு. அந்தப்பொண்ணும் ஒத்துகிற மாதிரிதான் தெரியிது. நடந்துட்டுப் போவட்டுமே.”
“இல்லப்பா, அந்தப்பயலப் பத்தி ஒனக்குத் தெரியாது. நம்மக்கிட்டக்கூட கல்லுவண்டி ஓட்டியிருக்கான். கண்ணு மூஞ்சின்னு பாக்காம அடிப்பான். மாரியம்மாவோட அக்கா பெரியநாயகி இல்ல, அவள இந்தப் பாவிப்பய அடிச்சேல்ல கொன்னுப்புட்டான். தூக்குமாட்டிக்கிட்டு செத்துப் போனாங்கிறதெல்லாம் சும்மா. ஊருக்கு கெட்ட பேராயிடும், அதோட இந்தப்பயலும் ஜெயிலுக்குப் போயிட்டா, அந்த கொழந்தைங்க அனாதையாப் போயிடும்னு ஊர்காரங்கெல்லாம் சொல்லி, அப்பறம் ஒங்க அப்பாதான் போயி போலிஸ்ல, ‘ஒடம்புக்கு முடியாமதான் தூக்குமாட்டிக்கிட்டா’ன்னு எழுதச் சொல்லி முடிச்சு உட்டாரு. இல்லன்னா, இந்தப்பய இன்னைக்கு ஜெயில்லல்லக் கெடப்பான்.” அம்மா வெறுப்புடன் காறித் துப்பினாள்.
சற்று நேரம் இருவருக்கும் பேச்சு எழவில்லை. ஒன்றும் பேசாமல் நடந்தோம். வீடு நெருங்கியதும், தொண்டையைக் கணைத்துக்கொண்டு கேட்டேன்.
“நான் இன்னைக்கு சாயந்தர வண்டிக்கே கெளம்பரேம்மா. முடிஞ்சா இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு வரேன். நீயும் எங்கூட வந்தீன்னா திருப்பி வரும்போது கொண்டாந்து உட்டுர்ரேன். என்ன வரியா? ”
“எங்கப்பா வர்ரது! கடலக்கொடி ஆயாமக் கெடக்கு. பத்து பன்னெண்டு மாட்ட வேற வாங்கியாந்து கட்டி வச்சிருக்கான் ஒன் அண்ணன். அதுங்கள பாத்துகிறத்துக்கு ஒரு ஆளு ஏற்பாடு பண்ணணும். இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு வர்ரேன். புள்ளைங்களப் பத்தரமா பாத்துக்க.”
அன்றைக்குப் போனவன், இரண்டு வாரங்கள் கழித்து, இரண்டு நாள் விடுமுறையில் ஊருக்கு வந்தேன். வந்து சேர்ந்தபோது ராத்திரி ஆகிவிட்டது. அம்மாவிடம் விபரமாக எதுவும் பேச முடியவில்லை. சாப்பிட்டுப் படுத்துவிட்டேன். காலையில் எழுந்தபோது, அம்மா கால்மாட்டில் உட்கார்ந்திருந்தாள். புதுப்புடவைக் கட்டி, தலைவாரி, கழுத்தில் தங்கச் சங்கிலிகள் இரண்டு மூன்று சேர்த்துப் போட்டுக்கொண்டு, வெற்றிலைப் பெட்டியை ஆராய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள்.
“என்னம்மா விஷேஷம் இன்னைக்கு? எல்லாம் ஒரே பளபளப்பா இருக்கு.”
“நம்ம மாரியம்மாவுக்கு இன்னைக்கு கல்யாணம்பா. பெருமாள் கோவில்ல வச்சிருக்கானுவ. அதான் கெளம்பிகிட்டிருக்கேன். வரியா?” அன்று நடந்த பேச்செல்லாம் நினைவுக்கு வந்தது. “வரேம்மா. இரு, சேர்ந்து போவலாம். யாரு மாப்பிள?”
“ அந்த பயலுக்குத்தான் குடுக்கிறா. நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். ஒன்னும் கேக்கிற மாதிரி தெரியில. அப்புறம் நாம என்ன பண்றது. அது தலையில அப்பிடி எழுதியிருக்கு.”
அம்மாவும் நானும் கோவிலுக்கு காரில் போய்ச் சேர்ந்தபோது பெண்ணும் மாப்பிள்ளையும் மணவறையில் இருந்தார்கள். அன்றைக்கு இன்னும் இரண்டு மூன்று திருமணங்கள் பெருமாள் கோவிலில் ஏற்பாடாகியிருந்ததாகத் தெரிந்தது. ஒரே கும்பலாக, சத்தமாகக் கிடந்தது. சுத்துவட்டாரக் கிராமத்து மக்களுக்கெல்லாம் பரம்பரை பரம்பரையாக இந்த பெருமாள் கோயில்தான் கல்யாண மண்டபம். அம்மாவின் கல்யாணமும், அண்ணனின் கல்யாணமும்கூட இங்குதான் நடந்தன. ரொம்ப விஷேஷமான கோயில் இது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். பெருமாளின் பத்து அவதாரங்களையும் ஆறடி உயரத்திற்கு கருங்கல்லில் செதுக்கி, கற்பக்கிரக மண்டபத்தின் இருபக்கத்திலும் வரிசையாக வைத்திருந்தது. வேறு எந்த கோயிலிலும் இப்படி கிடையாதாம். ஆனால் இதையெல்லாம் பார்த்துப் பரவசப்படவோ, பக்தி செலுத்தவோ, இங்கு வருகின்ற மக்களுக்கு விவரமில்லை. கல்யாணம் பண்ணிக்கொள்ள வருவதோடு சரி. தாலியேறியதும் பெண்ணும் பிள்ளையும் விழுந்துக் கும்பிட பக்கத்திலேயே ஒரு சாமியிருக்கிறது என்கிற வசதிதான் முக்கியமாகப் பட்டது. மற்றபடி யாரும் தானாகப் போய் வணங்கியதாக நான் பார்க்கவில்லை.
அம்மா கோயிலுக்குள் நுழையவும், பெண்கள் உட்கார்ந்திருந்த பகுதியிலிருந்து, ’அம்மா வந்துட்டாங்க’ என்ற சலசலப்பு. பெண்கள் நகர்ந்து இடம் கொடுக்க, எல்லோருக்கும் முன்னதாகப்போய் அம்மா அமர்ந்து கொண்டாள். ‘தம்பி, இப்பிடி வாங்க’ என்று இடம் கொடுக்க முயன்ற பெரியவர்களிடம் மறுத்துவிட்டு, மணவறைக்குச் சற்றுத் தள்ளி, தெற்குப் பக்கத்தில் சாய்ந்து கிடந்த கல்தூணில் உட்கார்ந்தேன்.
மாரியம்மா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அன்றைய வருத்தம் இப்போது இல்லை. சாமந்தியும், வாடாமல்லிகையும், ஆவாரம்பூவுமாக தலையை நிறைத்து அலங்காரம் பண்ணியிருந்தது. புதிதாகப் புதுப்புடவை கட்டியிருக்கிற பூரிப்பும், காதிலும் கழுத்திலும் புதுத் தங்கம் பூட்டியிருக்கிற சந்தோஷமும் மாரியம்மாவின் முகத்தில் புன்னகையாக நிறைந்திருந்தன. பக்கத்தில் மாப்பிள்ளையாக ‘அந்தப் பயல்’. தலையில் பளபளவென்று எண்ணெய்த் தடவி, மொடமொடப்பான புதுச்சட்டை வேட்டியில், ஆசைப்பட்டதை அடைந்துவிட்ட குதூகலிப்போடு பல்லைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். சடங்குகள் முடிந்து தாலியேறியதும், பெண்ணும் மாப்பிள்ளையும் அம்மாவின் காலில் விழுந்து கும்பிட்டார்கள். மாரியம்மாவைத் தூக்கிவிடும்போது அம்மாவின் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. மாரியம்மாவின் தோள்களும் குலுங்கின.
“சேச்சே, இப்பப் போய் அழுதுகிட்டு. நல்லபடியா இருக்கனும். ஊட்டுக்காரன் கோவக்காரந்தான். நீதான் கொஞ்சம் அனுசரிச்சி போவனும். என்ன, புரியிதா?” அம்மாவின் கேள்விக்கு புரிந்தாற்போல மாரியம்மா தலையாட்டியது.
“எலேய், பெரியசாமி மவனே, அவ அக்காவுக்கு பண்ணுனதெல்லாம் போதும். இவ சின்ன புள்ள. இவளையாவது பத்தரமா வச்சு காப்பாத்து.” அம்மா எழும்பி வந்த கோபத்தைக் குரலில் காட்டாமல் அமைதியாக, ஆனால் ஒரு எச்சரிப்பாகச் சொன்னாள். தலையை நிமிராமல் ‘சரி’ என்று தலையாட்டினான்.
”யாருப்பா மாப்பிள்ள ஊட்டு மொய்யி? இங்க குடுங்கப்பா. பொண்ணு ஊட்டு மொய்யெல்லாம் அங்க குடுத்துடுங்க”, என்று எல்லோருக்கும் கேட்கிற மாதிரி சத்தமாகச் சொல்லிவிட்டு, ஒரு ஆள் மணவறைக்குப் பக்கத்தில் நோட்டுப்புத்தகத்தோடு உட்கார்ந்தான். கல்யாணக் கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. அம்மா கிளம்பினாள். தங்கம்மாவும், மாப்பிள்ளையின் அப்பனும் கோயிலின் வாசல்வரை வந்து எங்களை அனுப்பிவிட்டுத் திரும்பினார்கள்.
“பணமா குடுக்கறேன்னு சொன்னேன். வேண்டா, ஒரு தாலி பண்ணிக்குடுங்கன்னு தங்கம்மா கேட்டா. முந்தா நாளுதான் அரைபவுனுக்கு தாலியும் குண்டும் வாங்கிக் குடுத்தேன். இந்தப்பய மாரியம்மாவ நல்லா வைச்சிக்கனும்.” காரில் திரும்பும்போது அம்மா பெருமூச்சோடு சொன்னாள்.
“அதெல்லாம் வைச்சிருப்பான். நீ ஒண்ணும் கவலப்படாதே. மாரியம்மா தைரியமான பொண்ணு. அவ அக்காவ கொடுமப் பண்ணுன மாதிரி இதுகிட்ட நடக்காது. எல்லாம் சரியா வந்துடும்.” அம்மாவின் ஆறுதலுக்காக சொல்லிவைத்தேனேத் தவிர, என் பேச்சில் அவ்வளவு உறுதி இல்லை. இந்த மக்களிடம் ஆணின் அதிகாரம் என்பது கல்லில் செதுக்கிய கட்டளையைப்போல. ஆம்பளைக்குச் சளைக்காமல் காட்டிலும் மேட்டிலும் உடம்பு உழைத்தாலும், பொம்பளை கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகவேண்டியிருந்தது. அம்மா என்னதான் நிலம், காலவாய், வீடு என்று பம்பரமாகச் சுழன்று ஆள் மாகாணம், வரவு, செலவு எல்லாவற்றையும் தனியாளாகக் கையாண்டாலும், அவர் இருந்தவரை உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமலே, ‘நில்’ என்றால் அனைத்தும் நின்றுபோய் விடுகின்ற அதிகாரத்தை அப்பா தன் கையில் வைத்திருந்தார். இங்கே எல்லா குடும்பங்களிலும் இது எழுதிவைக்காத சட்டம். மீறல்கள் ரொம்ப அரிது.
வீடுவந்து சேரும்வரை அம்மா கவலைப்பட்டுக்கொண்டே வந்தாள். காரைவிட்டு இறங்கி பேரப்பிள்ளைகளைப் பார்த்ததும் அம்மாவிற்கு கவனம் மாறியது. காலை சாப்பாடு ஆனதும் ஆட்கள், வேலை என்று அவளின் ராஜ்ஜிய பரிபாலனத்தில் பழையபடி மூழ்கிப்போனாள். அடுத்த நாள் சாயந்தரம் நான் ஊருக்குக் கிளம்பினேன். அண்ணன் ரயில்வே ஸ்டேஷன்வரை பேசிக்கொண்டு வந்து அனுப்பிவிட்டுப் போனார்.

ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது, நான் திரும்பவும் சொந்த ஊருக்குப் போய் அம்மாவைப் பார்ப்பதற்கு. எல்லா பேச்சுகளுக்கும் நடுவில், மாரியம்மாவின் பேச்சும் வந்தது.
”எப்படிம்மா இருக்கு மாரியம்மா?”
“இருக்காப்பா. அந்தப்பய அடியும் ஒதையுமாத்தான் வச்சிருக்கான். பொழுதெல்லாம் காலவாயில வந்து வேல செய்யிறா. ராத்திரி ஊட்டுக்குப்போனா, மாட்டுக்குத் தண்ணி காட்டி, தீனி போட்டு அப்பறம் சோறாக்கி, அங்கியும் ஒராயிரம் வேல. சம்பாரிக்கிற காசையெல்லாம் அவந்தான் புடிங்கிக்கிறான். அப்பிடியும் அந்தப்பய தெனம் தண்ணிய போட்டுகிட்டு வந்து அடிக்கிறான். ‘ஒன்னோட அக்காவ ஒதச்சே கொன்ன மாதிரி நீயும் சாவுனுமான்னு சொல்லி அடிக்கிறான். தாங்க முடியில்லம்மா’ – ன்னு நேத்துகூட வந்து அழுதா. அவ தலையில இப்பிடி எழுதியிருக்கு.” அம்மாவின் குரல் தழைந்தது.
பேச்செல்லாம் ஓய்ந்து இரவு படுக்க வெகு நேரமாயிற்று. உள்ளே வெக்கை அதிகமாக இருந்ததால், வெளிக் கூடத்திலேயேப் படுத்தேன். கொஞ்ச நேரம்தான் தூங்கியிருப்பேன். “அம்மா, அம்மா”, என்று பதட்டமாகக் கூப்பிட்ட குரலுக்கு விழித்துக்கொண்டேன். நிலா வெளிச்சப் பின்னணியில் கேட்டுக்கு வெளியே நின்ற உருவம் யாரென்று புலப்படவில்லை.
“யாருப்பா அது?”
“நான் தான்ணே, அப்பாதொர. அம்மாவ கூப்புடுங்க.” குரலில் அவசரமும் பரபரப்பும் நிலை கொள்ளவில்லை.
“ஏன் இப்பிடி பதற்ற, என்ன விஷயம் சொல்லு”, என்று கேட்டுக்கொண்டே, சாவியை எடுத்து வெளிக்கேட்டை அவசரமாகத் திறப்பதற்குள், வீட்டுக்குள்ளேயிருந்து கதவைத் திறந்துகொண்டு அம்மா வேகமாக வெளியே வந்தாள்.
“என்னடா அப்பாதொர, என்னப்பா ஆச்சு?” கெட்டசேதி ஏதோ வந்திருக்கிற அறிகுறியை உணர்ந்தவளாய் அம்மா பரபரத்தாள்.
“மாரியம்மா புருசன் செத்துப் போயிட்டாம்மா.”
அப்பாதுரைக்கு வார்த்தைகள் குழரின. தேம்பி அழ ஆரம்பித்தான். அம்மா இரும்புக்கேட்டை கைகளால் இறுகிப் பிடித்துக்கொண்டாள். கைகளும் குரலும் அதிர்ச்சியில் நடுங்கின.
“கடவுளே, எப்பிடிடா ஆச்சு? நேத்துகூட அவன ரோட்ல போறப்ப பாத்தேண்டா. நல்லாத்தானே இருந்தான். எப்படா ஆச்சு?”
“இப்பத்தாம்மா. தண்ணி போதையில கால் தடுமாறி வாசல்ல கெடந்த மம்முட்டி மேல விழுந்துட்டான். நெஞ்ச பொளந்திடுச்சி. விழுந்தவனுக்கு அப்பிடியே அடங்கிப் போச்சாம்.”
“பெரியண்ணன் காலவாயில இருந்துதே சேதி சொன்னியா?”
“மொதல்ல பெரியண்ணனுக்குத்தாம்மா தங்கம்மா ஓடியாந்து சொல்லியிருக்கு. அண்ணந்தா ஒங்கக்கிட்ட சொல்லச்சொல்லி என்னை அனுப்புச்சி. இந்நேரம் அண்ணன் அங்க போயிருக்கும். என்னையும் ஒடனே திரும்பிவர சொல்லிச்சிம்மா”, என்று சொல்லிவிட்டு அப்பாதுரை வாசலில் இருந்தபடியே திரும்பி வெளியில் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு, வேகமாக மிதித்து இருட்டில் மறைந்தான்.
அதிர்ந்துபோய் பேச்சற்றவளாய் அம்மா விசியில் உட்கார்ந்தாள். எனக்கு தூக்கமெல்லாம் பறந்து போயிருந்தது. செய்தியின் தாக்கம் எனக்குள் இன்னும் முழுதாக இறங்கியிருக்கவில்லை.
“ஏம்மா, இப்பவே போவனுமா? விடிஞ்சப்புறம் போவக்கூடாது?” இந்த இருட்டில் அம்மாவை வெளியே அழைத்துச்செல்ல மனமில்லாமல் கேட்டேன். இங்கிருந்து அல்லிநகரம் போக வேண்டும். ஐந்து மைலாவது இருக்கும்.
“இல்லப்பா, போயிட்டு வந்துடுவோம் வா. அப்பவே வேணான்டின்னு அடிச்சிக்கிட்டேனே, கேட்டாளுவளா! அவனுக்குத்தான், அவனுக்குத்தான்னு கொண்டுபோயித் தள்ளி, இப்ப இப்பிடி வந்து முடிஞ்சிப் போச்சே! கல்யாணம் ஆயி இன்னும் ஒரு வருஷம்கூட ஆவுலியே. இந்தப்பய செத்துப் போனதில எனக்கு வருத்தமே இல்லப்பா. இந்த குட்டிக்கி இந்த வயசிலியே இப்பிடி ஆவுனுமான்னுதான் மனசுக்கு தாங்கல. வண்டிய எறக்குப்பா, சால்வைய எடுத்துக்கிட்டு வரேன்.” புலம்பித் தீர்த்தவளாய் உள்ளேபோய் சால்வையை எடுத்து போர்த்துக்கொண்டு வந்தாள்.
“மணி என்னாவுது?”
ஸ்கூட்டரை வெளியில் இறக்கிக்கொண்டே பார்த்துச் சொன்னேன். “மூனாவுதும்மா.” செய்தியின் பரிமாணம் மெதுவாக மனதிற்குள் இறங்க, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும்போது கைகளை நடுக்கியது. பிறப்பும், பள்ளிப்படிப்பும் கிராமத்திலேயே நடந்திருந்தாலும் வாலிபமும் குடும்ப வாழ்க்கையும் நகரத்தைச் சார்ந்ததாக ஆகிவிட்டபடியால், இதுபோன்ற அதிர்ச்சிகளை எதிர்கொள்ள, நகரத்தின் நாசுக்குகள் என்னை தயார்படுத்தி வைக்கவில்லை. அம்மாவுக்கு ஆரம்ப அதிர்ச்சியோடு சரி, இப்போது ஸ்திரமாக அடுத்து நடக்க வேண்டியது என்ன என்கிற நோக்கில் இருந்தாள். வாழ்க்கையின் சோகங்களில் மூழ்கி நீந்திக் கொண்டிருக்கவெல்லாம் இவர்களுக்கு நேரமில்லை. செத்துப்போனவனை கொண்டு போய் சுடுகாட்டில் இறக்கிவிட்டு, இவர்கள் நேராக காடு கழனிக்குத்தான் போக வேண்டியிருக்கிறது. கடினமான வாழ்க்கையின் கஷ்டங்களிலிருந்து கரையேறுவதே பெரும்பாடாக இருக்கும்போது, சோகத்தையும் சுமந்துகொண்டு திரிவது முடியாத காரியமாகிவிட்டது. அன்றன்றைய கணக்கு அன்றன்றே முடிந்து போகும்.
அம்மாவும் நானும் அல்லிநகரத்தின் எல்லையில் இருந்த மாரியம்மா புருஷன் வீட்டை அடைந்தபோது, ஒரே கும்பலாக இருந்தது. ஸ்கூட்டரின் சத்தத்தைக் கேட்டதும் ரோட்டில் நின்றிருந்த கும்பல் விலகி வழிவிட்டது. ரோட்டின் ஓரத்தில், மரத்தடியில் ஆட்களுக்கு நடுவில் நின்றுகொண்டிருந்த அண்ணன் எங்களிடம் வந்தார்.
“போயி பார்த்துட்டு, ஒடனே வீட்டுக்குத் திரும்பி போயிடுங்க. இங்க இருக்க வேணாம். அந்தப் பயலோட சித்தப்பா மவன் போலீசுக்கு சொல்லுனும்னு கத்திகிட்டு கெடக்கிறான். கணக்குப் புள்ளைக்கு ஆள் வுட்டு அனுப்பியிருக்கேன். விடியருத்துக்குள்ள எல்லாத்தையும் முடிச்சாவனும். நான் இருந்து பாத்துக்கிட்டு வரேன். நீங்க கெளம்புங்க.” என்று சொல்லிவிட்டு மீண்டும் மரத்தடிக்கே திரும்பிப் போனார்.
ஸ்கூட்டரை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டுப்பக்கம் நடந்தோம். கூரைவீடு. வீட்டையும் வளைத்து முன்பக்கம் திடலாக நிறைய இடம் விட்டு மூங்கில் வேலி போட்டிருந்தது. திறந்து கிடந்த வாசல் படலைத் தள்ளிக்கொண்டு மேலும் மேலும் ஆண்களும் பெண்களுமாக உள்ளே நெருக்கிக் கொண்டிருந்தார்கள். கூரை எரவானத்தில் தொங்கிய லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் கும்பலில் யாரும் தனித்தனி ஆளாகத் தெரியாமல் ஒரே கருத்த உருவமாக தெரிந்தது. ஆண்களின் அதட்டல் குரல்களுக்கு அடங்காமல், பெண்களின் ஒப்பாரி ஓலம் ரோடு வரைக் கேட்டது.
“அதாரு புள்ள அங்க அழுவறது? கொஞ்சம் வாய மூடுங்க. அம்மா வராங்கல்ல.” யாரோ ஆணின் குரல் எழுந்து அடங்குவதற்குள், மரண ஓலமாக கத்திக்கொண்டு கும்பலுக்குள்ளேயிருந்து தங்கம்மா தலைவிரி கோலமாக ஓடிவந்தாள். அம்மாவின் காலில் நெடுமரமாக விழுந்துப் புரண்டாள். “எஞ்சாமி, நான் என்ன பண்ணுவேன்”, என்று தலையில் அடித்துக் கொண்டாள். கூடவே ஓடிவந்த பெண்கள் திமிரித் திமிரி தரையில் சாய்ந்த தங்கம்மாவைத் தூக்கி நிறுத்தினார்கள். வற்றிய மார்பில் அறைந்து கொண்ட தங்கம்மாவின் மேலிருந்து புழுதியும் மண்ணுமாகப் பறந்து தெறித்தன. கைத்தாங்களாக தங்கம்மாவை அணைத்தபடி அம்மா படலைத்தாண்டி உள்ளே போனாள். வீட்டின் வாசலில் வட்டமாக இடைவெளி விட்டு கூடியிருந்த கும்பல் பிரிந்து எங்களுக்கு வழிவிட்டது. தங்கம்மாவை யாரோ பின்னாளேயே நிறுத்தி கொண்டார்கள். அம்மாவும் நானும் கூட்டத்தின் உள் வளையத்திற்கு வந்தோம்.
வீட்டின் வாசலுக்கு நேராக, கட்டாந்தரையில் அவன் மல்லாந்து கிடந்தான். திறந்து கிடந்த கண்கள் வானத்தைக் குத்திட்டிருந்தன. வெற்று மார்பில், ஓரடி நீளத்திற்குப் பிளந்து, ரத்தமும் சதையுமாக வழிந்து கிடந்தது. மரணத்தோடு நடந்த ரணயுத்தத்தில் எல்லா பக்கங்களிலும் அவன் புரண்டு துள்ளியிருக்கவேண்டும். வெட்டிய மண்வெட்டி ஒரு மூலையிலும் அவிழ்ந்த வேட்டி இன்னொரு மூலையிலும் கிடந்தன. தலை, உடம்பெங்கும் ரத்தத்தில் ஊறி காய்ந்த மண் கொத்துக் கொத்தாக ஒட்டியிருந்தது. மண்வெட்டியில் பாதிவரை உறைந்திருந்த ரத்தத்தில் மண் படிந்து காய்ந்திருந்தது.
அம்மா வாயடைத்து உறைந்து போய் நின்றாள். பின்னால் தங்கம்மாவின் ஓலம் விண்ணை இடித்தது. அம்மாவின் பக்கத்தில் நெருங்கி வந்த பெண் சொன்னாள். “அவள பாருங்கம்மா. புருஷங்காரன் பொணத்தையே வெறிச்சி பார்த்துகிட்டு பயித்தம்மாட்டம் ஒக்காந்திருக்கா. ஒரு வார்த்தகூட பேசமாட்டேங்கிறா. யாரு கூப்புட்டாலும் எந்திரிச்சி வரமாட்டேங்கிறா. அழுவக்கூட நெகா இல்லாம கெடக்காம்மா.”
நடு வாசலில், இரண்டு திண்ணைகளுக்கும் நடுவில், குத்துக்காலிட்டு மாரியம்மா உட்கார்ந்திருந்தாள். வாசலுக்கு வெளியே தரையில் வைத்திருந்த லாந்தரின் வெளிச்சம் அவள் முகத்தில் அடித்தது. கண்கள், மல்லாந்து கிடந்த அவனையே வெறித்துக் கொண்டிருந்தன. கண்களில் வெறுப்பு மண்டிக் கிடந்தது. முகத்திலும், மார்பிலும், செம்பட்டையாகத் தோளில் சரிந்த முடியிலும் ரத்தம் திட்டுத்திட்டாகத் தெறித்து வழிந்திருந்தது. அக்கா பிள்ளைகள் இரண்டும் அவளை இறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தன. கூட்டத்தின் உள்வட்டத்தை சுற்றிக்கொண்டு அம்மா மாரியம்மாவை நெருங்கினாள்.
“ஏ புள்ள, அம்மா வந்திருக்காங்க பாரு.”
கீழேயே வெறித்திருந்த கண்கள் திடுக்குற்று நிமிர்ந்தன. ஒரு கணம் காலம், இடம், சூழல் எதையுமே இனம் காணத் தெரியாமல் ஸ்தம்பித்து நின்ற பார்வையில் மெல்ல மெல்ல உயிர் வந்தது. நெருங்கி வந்து பக்கத்தில் அமர்ந்த அம்மாவை, “அம்மா”, என்ற அலறலுடன் கட்டிக் கொண்டு அம்மாவின் தோளில் முகம் புதைத்துக் குலுங்கினாள். பல நிமிடங்களுக்கு அம்மா ஏதும் பேசவில்லை. கைகளால் மாரியம்மாவின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். எங்களைச் சுற்றி ஒரு பெண்கள் கூட்டம் காதை தீட்டிக்கொண்டு நின்றது. “இங்க என்ன வேடிக்க. பின்னாலத் தள்ளிப்போங்க. காத்த உடுங்க.” என்று நான் போட்ட சத்தத்திற்குப் பலனாக அந்த கூட்டம் கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்தது.
அழுகை அடங்கி தலையை நிமிர்த்திய மாரியம்மாவின் முகம் சலனமேதுமின்றி வெறுமையாக இருந்தது. தலையைக் குனிந்தபடி மாரியம்மா மெதுவான குரலில் பேசினாள். “என் ஒடம்புக்கு அடி ஒதையத் தாங்கறத்துக்கு இனிமே தெம்பு இல்லம்மா. இன்னையோட எல்லாம் முடிஞ்சு போச்சு.”
அம்மா லேசாக நடுங்கிக் கொண்டிருந்த கைகளால் மாரியம்மாவின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை உற்றுப் பார்த்தாள். மாரியம்மாவின் கண்களில் கண்ணீர் திரண்டது. “எனக்கு வேற வழி தெரியிலம்மா.” மீண்டும் அம்மாவின் தோளில் முகம் புதைத்துக் கொண்டு அழுதாள். அம்மா பக்கத்தில் நின்றிருந்த என்னை நிமிர்ந்துப் பார்த்தாள். அவள் பார்வையில் இருந்த செய்தி புரிந்ததும் எனக்கு பகீரென்றது.
“என்னம்மா சொல்றா?” என்று இன்னும் நெருக்கிக் கொண்டு வந்த பெண்களிடம் அம்மா சீறினாள். தன் குஞ்சை பருந்துவிடமிருந்து காப்பாற்ற போராடுகின்ற தாய்க்கோழியின் சீற்றம் அவளின் குரலிலிருந்தது.
“எட்டக்கப் போங்கடி. அவளே புருஷனப் பறிகுடுத்துட்டு பேயரஞ்சாப்பில துவண்டு போயிக் கெடக்கறா. அவளப் போய் ஏன் இப்பிடி புடுங்கிரீங்க. அவளா மனசு தேறி எழுந்திரிச்சி வரவரைக்கும் அவகிட்ட யாரும் நெருங்கக் கூடாது, தெரியிதா. நவுருங்க அந்தப் பக்கம்.” என்று கத்திவிட்டு தோளில் கிடந்த மாரியம்மாவை நிமிர்த்தினாள்.
“நடந்தது நடந்துப் போச்சு. அதுக்காவ இனிமே கவலபட்றதில அர்த்தம் இல்ல. மனச தேத்திக்க. பெரிய அண்ணன் இங்கதான் இருக்கு. எல்லாத்தையும் அது பாத்துக்கும். நான் கெளம்புறேன். தைரியமா இரு”, என்று தீர்மானமாக, சத்தமாக சொல்லி விட்டு அம்மா எழுந்தாள். மாரியம்மா பழையபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்து தலையை குனிந்து கொண்டாள். கண்களில் இருந்து கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது. அம்மாவின் சத்தத்திற்குப் பிறகு மாரியம்மாவை நெருங்குவதற்குத் தயங்கி பெண்களெல்லாம் சற்று தள்ளியே உட்கார்ந்திருந்தார்கள். அழுகையும் ஒப்பாரியும் ஆண்களின் அதட்டல் குரல்களும் எங்கும் நிரம்பிக் கிடந்தன.
படலைத் தாண்டி வெளியில் வந்த அம்மாவைக் கண்டதும் அண்ணன் நெருங்கி வந்தார். அண்ணனின் பார்வையில் தெரிந்த கேள்விக்கு, அம்மா ‘ஆமாம்’ என்பதுபோல் பெருமூச்சோடு தலையை அசைத்தாள்.
“நானும் அப்பிடித்தான் நெனச்சேன். சரி, நீங்க கெளம்புங்க. பாடைக்கு மூங்கி வெட்ட அப்பாதொரய அனுப்பியிருக்கேன். கணக்குப் புள்ளையும் வந்தாச்சு. சீக்கிரமா கொண்டுபோயி சேர்த்தாவனும். இந்நேரம் இந்த பயலுவ எவனாச்சும் போலீசுக்கு போயிருப்பானுவ. அவங்க வேற வந்துட்டா அப்புறம் அனாவசிய செலவு, வீணா சிக்கல். கணக்குப்புள்ள எல்லாத்தையும் பார்த்துகிரேன்னு சொல்றாரு. அதனால பிரச்சன ஒன்னும் இருக்காது. இருட்டா இருக்கு, வண்டியப் பார்த்து ஓட்டிக்கிட்டுப் போ.” என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனார்.
ஸ்கூட்டரில் ஏறி வீட்டிற்கு வந்து சேரும்போது கிழக்கில் வெளுப்பு தொடங்கியிருந்தது. காகங்களும், சேவல்களும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. வீட்டிற்கு வந்தும் அம்மா ஏதும் பேசவில்லை. “படுத்துக்கப்பா, அப்பறமா குளிச்சிக்கலாம்.” என்று மட்டும் சொல்லிவிட்டு வீட்டிற்குள் போய்விட்டாள். எனக்குத் தெரியும், அவளிடமிருந்து இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த சாவைப்பற்றி ஒரு வார்த்தைகூட வெளியில் வராது.
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.

மங்களம் உங்கள் எழுத்தின் மூலம் வாழ்கிறாள் என்பது மகிழ்ச்சியும் பெருமையும் 🙂