அலுவலக அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார் அரவிந்தன். பெரியவர் ராமையா எதிரில் இருந்த பாஸ்போர்ட் அலுவலகத்தின் மாமர நிழலில் அமர்ந்திருந்தார். கக்கத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் பை சற்றுப் புடைப்புடன் காணப்பட்டது. தன்னால் இயன்றவரை பணம் புரட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்று எண்ணினார். அப்போதுதான் பெரியவர் ராமையாவைப் பற்றி வங்கி பொது மேலாளர் குணசீலனிடம் பேசிவிட்டு வந்திருந்தார் அரவிந்தன்.
“ஏன் அரவிந்த் பிரச்சனை பண்றீங்க? ஏழு வருஷமா அடைக்க முடியாத கடனை இனியா அந்த ஆளு அடைக்கப் போறாரு? வட்டியோடு சேர்த்து இன்னமும் ஒரு லட்சம் இருக்கு” என்றார் குணசீலன்.
“எல்லாம் நியாயம்தான் குணா, தவணை எப்பவோ முடிஞ்சிடுச்சி, இன்னும் 30 சதவிகிதம் பணம் கட்ட வேண்டி இருக்கு. இரண்டு வருஷம் கொரோனா பாதிப்பு வேற, அந்த வருஷத்துலதான் இவர் தவணை கட்டவே இல்லை. மத்தபடி கொஞ்சம் கொஞ்சமா கட்ட முயற்சித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார், கொஞ்சம் அவருடைய கடன் அட்டவணையைப் பாருங்க குணா,’’ என்றார் அரவிந்தன்.
“என்ன பண்ணலாம்னு சொல்றீங்க அரவிந்த்?’’ என்று குணசீலன் சீறினார்.
“உங்களுக்குத் தெரியாததா சார்? கடன மறுசீரமைப்பு செய்வோம், வட்டி விகிதத்தை மாற்றி, கால அவகாசம் ஆறு மாசமோ ஒரு வருஷமோ நீட்டிச்சி கொடுப்போம். எப்படியாவது கடனை அடைத்துவிடுவோம்னு பெரியவரும் அவர் மகனும் வந்து கெஞ்சுறாங்க. கொஞ்சம் விட்டுப் பிடிப்போமே,’’ என்ற அரவிந்தனிடம்,
“அவர் உங்ககிட்ட இதையெல்லாம் கேட்டாரா,’’ என்ற குணசீலனின் தொனியில் எரிச்சல் அப்பட்டமாகத் தெரிந்தது.
“அவருக்கு இதெல்லாம் தெரியுமா குணா?” அவரை ஒரு மனு கொடுக்க சொல்லுவோம்’’ என்ற அரவிந்தன் தன் மென்மையான தொனியை விட்டு விடவில்லை.
“உங்களுக்கு யார் அரவிந்த் அந்த ஆளு? உறவா! பழக்கமா! ஒண்ணும் இல்ல… பின்னே எதுக்கு நீங்க துடிக்கிற?” என்று கையை மேசையில் அடித்தவாறு கேட்டார் குணசீலன்.
“இல்ல குணா, நிலம் கைய விட்டு போயிடுச்சுனா நாளைக்கு இவருடைய மொத்த குடும்பமும் சென்னையில போய் ஏதாவது மூட்டை சுமக்கிற வேலையோ, கொத்த வேலையோ பார்த்துதான் பிழைக்க வேண்டி இருக்கும்” என்றார் அரவிந்தன்.
குணசீலன் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“வாழ்நாள் முழுசும் பாடு பட்டாவது கடன கட்டி நிலத்தை மீட்டுடலாங்கிற நம்பிக்கையிலதான நம்மகிட்ட அடகு வச்சி இருக்காங்க, அந்த நம்பிக்கையை நாம காப்பாற்றுவோமே,” என்று மிகவும் கெஞ்சிய குரலில் கேட்டார் அரவிந்தன்.
“அவர் பேரன் தாத்தாவாகிதான் கடனை அடைக்கணும். இதுங்களுக்கு அந்த இடத்தோட மதிப்பு தெரியல. கணேசன் குரூப் அங்க ஒரு வணிக வளாகம் கட்டணுங்கிற யோசனையில் இருக்காங்க. கணேசன் குரூப்பே இந்த நிலத்தை ஏலத்துல எடுக்கலாம், யார் கண்டா! நீங்க கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு தொலைபேசியை எடுத்து பேசத் தொடங்கினார் குணசீலன்.
இதற்கு மேல் அவரிடம் பேசுவது உபயோகமற்றது என்பதைப் புரிந்துகொண்ட அரவிந்தன் தன் அறைக்குத் திரும்பினார். அவருடைய மனம் அல்லாடிக்கொண்டிருந்தது. அவருக்குத் தெரியும் கணேசன் குரூப்ஸ் ஒரு மனையைக் கையகப்படுத்திவிட்டார்கள் எனில் வெகு விரைவிலேயே ஒட்டுமொத்த ஞானபுரமும் அவர்களின் கைக்குச் சென்றுவிடும். தேவைக்குத் தகுந்தாற்போல நிலத்தின் மதிப்பை ஏற்றியும் இறக்கியும் மொத்தத்தையும் கையகப்படுத்திவிடுவார்கள். வயல் வரப்புகள் எல்லாம் குடியிருப்புகளாகவும், வணிக வளாகங்களாகவும் விரைவில் மாற்றப்பட்டுவிடும்.
இப்படி யோசித்துக்கொண்டிருக்கையில் அரவிந்தனைப் பார்ப்பதற்காக பெரியவர் ராமையா அறைக்குள் வந்தார். “நல்லா இருக்கீங்களா ஐயா,” என்றவாறு கையைக் கூப்பினார்.
“ஐயா, பெரிய சாரைப் பார்த்து பேசி இருக்கிறேன். எப்படியாவது முயற்சி பண்ணுகிறோம். நீங்களும் நிலத்தைச் சீக்கிரம் திருப்ப முயற்சி பண்ணுங்க” என்றார் அரவிந்தன்.
“எம் பெரிய மவன் மதுரைக்குப் போயிருக்கான், நாலு பேத்த பாத்து கொஞ்சம் பணம் புரட்டிட்டு வந்துடுவான். கையில ஒரு பத்து ரூபா கொண்டாந்திருக்கன். இந்த வருச கடல விளைச்சல். எப்படியும் மீட்டுடுவோம்யா. கொஞ்சம் இரக்கம் காட்டுங்கய்யா” என்று கூறியவாறு மறுபடியும் கைகளைக் கூப்பினார்.
“பார்ப்போம்,” என்ற அரவிந்தன், “சாப்டீங்களா ஐயா” என்று ராமையாவைப் பார்த்து கேட்டார். பெரியவரின் கண்களில் சட்டென்று ஒரு நம்பிக்கையின் ஒளி வந்து சென்றது. “சாப்பிட்டன்யா, சாப்பிட்டேன். வாங்கிக்கிடுதியளா இந்த பணத்த,” என்றார் தழுதழுத்தக் குரலில்.
“சுமதி மேடத்துக்கிட்ட கொடுத்துக் கட்டிருங்க,’’ என்றார் அரவிந்தன்.
“இங்கன எதித்தாப்புலதான்யா உட்கார்ந்திருப்பேன், எதுனாலும் ஒரு சத்தம் குடுங்க ஓடியாந்துடுவேன்” என்று சொல்லியவாறு தளர்ந்த நடையில் அறையை விட்டு வெளியேறினார்.

கோப்புகளைப் புரட்டியபோது அரவிந்தனின் மனதில் பல முகங்கள் வந்து நிழலாடின. அவர் பணியில் சேர்ந்த புதிதில் ஒரு கிராம கிளை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அந்தக் கிராமத்தை சேர்ந்த சொர்ணம் என்ற பெண் தன் கணவனை நோயிலிருந்து காப்பாற்ற தன்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் அடகு வைத்து, மீட்க முயன்றுகொண்டிருந்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. நகைகள் ஏலத்திற்கு வந்தபோது, சொர்ணம் வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அனைவரின் கால்களிலும் வந்து விழுந்தாள்.
ஏலத்தின் அன்று வங்கியின் வாசலிலேயே அந்தப் பெண் அழுது கிடந்தாள். அரவிந்தனால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை. பல வருடங்கள் கழித்து சொர்ணத்தை மின்சார ரயிலில் பழ வியாபாரியாகப் பார்த்தபோது, அவள் கழுத்திலும் காதுகளிலும் கிடந்த பிளாஸ்டிக் செயினும், கம்மலும், நைந்த புடவையுமே அவர் மனதை பல நாட்களாக உறுத்திக்கொண்டிருந்தன.
விபத்தில் அடிபட்டு லோன் எடுத்து காப்பாற்றப்பட்ட நாகராஜன், வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் வீட்டை இழந்து தற்போது கொத்தவால் சாவடியில் மூட்டை தூக்கிக்கொண்டிருக்கிறான்.
மன்னார்குடியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, போலியோவால் இரண்டு கால்களையும் இழந்திருந்த தாமு, கடலைமிட்டாய் வீட்டிலேயே தயாரித்து விற்க லோன் கேட்டிருந்தான். மூன்று மணிநேரம் அவன் தள்ளுவண்டியில் வெயிலில் காத்திருந்ததை பார்த்த அன்றைய மேலாளர் பர்னாந்து சார்,அந்த இடத்திலேயே கையெழுத்து போட்டு லோன் கொடுத்தார். பர்னாந்து சாரெல்லாம் தயங்காமல் தைரியமாக உதவி செய்வார்.தாமுவும் தவணையை வெகு சீரத்தையாய் கட்டி முடித்தான். இப்படி எத்தனை எத்தனையோ முகங்கள் அவர் கண் முன் வந்தன. வங்கியின் விதிகள் எளியவரையும் வலியவரையும் சமமாக தான் பார்க்கின்றன. வலியவருக்கு உதவும் வழிமுறைகள், எளியவருக்கு பெரும்பாலும் உதவுவதில்லை.
மதிய உணவு இடைவேளைக்குப் பின் அரவிந்தனை பெரியவர் ராமையாவின் மனையைப் பார்த்து, தோராயமாக மதிப்பீட்டு வர பணித்தார் குணசீலன்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அரவிந்தன் எதிரேயிருந்த குமரேசன் டீக்கடையில் உட்கார்ந்து வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்த பெரியவரைப் பார்த்தார். சட்டை வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டி இருக்க, கால்களை கட்டிக்கொண்டு கண்களுக்கு மிக அருகில் வெங்காயத்தை வைத்து கை நடுங்க உரித்தார். காலம் கிழித்துப் போட்ட பழைய ஓவியம் போலிருந்தார். தன் கையறு நிலையை நொந்தபடியே காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார் அரவிந்தன்.
பெரியவரின் நிலம் கோரம்பள்ளம் முக்கு ரோட்டுக்கு அருகிலேயே இருந்தது. சற்றுத் தொலைவில் வயல்கள் தெரிந்தன. காற்று இதமாக வீசியது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வயல் வரப்புகள் கண்ணில் படப்போகின்றதோ என்று நினைத்துக்கொண்டார். மனையில் இரண்டு சிறிய வீடுகள், மண் சுவரால் கட்டி எழுப்பப்பட்டு ஓடு வேயப்பட்டிருந்தது. வேம்பும் மாவும் நின்றிருக்க மாமரத்தடியில் மாடு ஒன்று கட்டப்பட்டிருந்தது. அரவிந்தனைப் பார்த்ததும் பெரியவரின் மருமகள் கங்கம்மா ஓடிவந்து கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டு உட்கார சொல்லி உபசரித்தாள்.
“நீராகாரம் குடுப்பியளா ஐயா, கொஞ்சம் மோர் கலந்து எடுத்துட்டு வரேன்,” என்றவாறு உள்ளே ஓடினாள். அரவிந்தன் உட்கார்ந்தவாறு அங்கு வீசிய இதமான காற்றை அனுபவித்துக்கொண்டிருந்தார். இரண்டு வேம்புகள் எதிரெதிரே நின்று குடை பரப்பி இருந்தன. காற்று சில்லென்று வேம்பின் மனத்தோடு வீசியது. அடிமரம் தூண் போல எழும்பி ஆறடிக்கு மேல் கிளைப்பரப்பி இருந்ததால், அதில் இருந்த கணுக்களும் முடிச்சுகளும் சேர, பார்ப்பதற்கு ஏதோ ஒரு பெண் தலையில் கீரை கூடையுடன் நிற்பது போல இருந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தார் அரவிந்தன்.
மோர் கொடுத்துவிட்டு நின்ற கங்கம்மா பீதியோடு அவரைப் பார்த்தாள். “கடனுக்காக எங்க நிலத்தை உருவிகிடுவிகளோ?” என்று மிக சன்னமான குரலில் கேட்டாள் கங்கம்மா.
“எங்கன உருவறது, அதான் இந்த இடத்துல உங்க ஆத்தாளே குடியிருக்கிற மாதிரில்ல இருக்கு. அவள மீறி எங்க போயி உருவுறது, உருவிட்டு அவள எங்க கொண்டு போய் விடுறது,” என்று சிரித்தவாறு கேட்டார்.
“தெரியிறாளோ, அவ தெரியிறாளோ உங்களுக்கு….” என்று படபடப்புடன் கேட்டாள் கங்கம்மா. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. “எங்க அம்மா, ஆயா, சித்தினு எல்லார் மேலயும் வர்றவளாச்சே.’’ என்று அழத் தொடங்கினாள்.
மோர் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு எழுந்த அரவிந்தன் தன் நெற்றியில் இருந்த குங்குமத்தைக் கையில் தொட்டு இரண்டு முடிச்சுகளுக்கு இடையே வைத்தார். இரண்டு கணுக்களும் கண்களாகப் பார்த்திருக்க, அரவிந்தன் வைத்த பொட்டில் அங்கே அம்மன் உருவானாள்.
“அம்மா! முத்தாலம்மா! ….” என்று கன்னத்தில் போட்டவாறு கங்கம்மா அரற்ற தொடங்கியதும், அவள் சாமியாடத் தொடங்கும் முன் அரவிந்தன் அமைதியாக அங்கிருந்து கிளம்பிவிட்டார். அலுவலகத்துக்குச் சென்றவர் நிலத்தின் மதிப்பைக் கணக்கிட்டு குணசீலனுக்கு அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் மதியம் அரவிந்தனின் அறைக் கதவை திறந்து கொண்டு வந்த குணசீலன், “என்ன அரவிந்த்! அந்தக் கிழவன் வீட்ல கோயில் கீயில் எதுவும் கட்டி வச்சிருக்காரா,” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
“இல்லையே! மா, வேம்புன்னு சும்மா பழமுதிர்சோலை மாதிரில்ல இருந்தது’’ என்றார் அரவிந்தன்.
“நம்ம கதிரேசனை, சர்வேயரைக் கூப்பிட்டு போக சொல்லி இருந்தேன். அவன் போய் பார்த்தபோது வேப்ப மரத்தடியில, சும்மா மஞ்சள் குங்குமம் வச்சி… ‘’என்றவரை இடைமறித்து,
“அது எல்லோரும் செய்வதுதானே,” என்ற அரவிந்தனின் கண்களில் நிம்மதி வந்து போனது.
“மரத்தை சுத்தி மஞ்சள் துணி கட்டி மாலை போட்டு பூச பண்ணிட்டு இருக்கானுங்களாம், ராமையா மருமகளுக்கு சாமி வருதாம், கூட்டமா நின்னு கும்பிட்டுட்டு இருக்கானுங்களாம்,” என்று கோபமாகக் கூறினார் குணசீலன்.
“தெரியல குணா, நாம வேணா மறுபடியும் போய் பார்ப்போம்,” என்றார் அரவிந்தன்.
“இந்தாளு வீட்டுக்கெல்லாம் ஆயிரம் முறை போக முடியாது. ஆனா இவர சும்மா விடக் கூடாது. நான் தலைமை அலுவலகத்துக்குத் தகவல் அனுப்புறேன், என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம். கோயில் கீயில்ன்னு வந்துட்டா பெரிய தலைவலி ” என்று தலையில் அடித்தவாறு சொன்ன குணசீலன், ‘’நீங்களும் கடன் மறுசீரமைப்புக்கும் கொஞ்சம் தயார் பண்ணிடு, நாம உதவினா மாதிரி இருக்கட்டும்’’ என்றார்.
“சரி சார்,’’ என்ற அரவிந்தன், எப்படியும் ஆறு மாசமோ, ஒரு வருஷமோ அவகாசம் கிடைக்கலாம், அதற்குள்ளாக பெரியவரைப் பார்த்து சீக்கிரம் கடனை அடைத்து நிலத்தைத் திருப்பி, கடன்காரி என்ற பட்டத்தில் இருந்து அம்மனைக் காப்பாற்றி உடையதாரியாக்கச் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
