பைசாசம்

நீண்ட நாட்களுக்குப் பிறகான அந்த விருந்தினர் வருகை, சிவசங்கரனுக்கு உண்மையில் வேண்டியதான ஒன்றாகவே இருந்தது. மனம் விரும்பியபடி வாய்விட்டு பேச, தன்னைக் காண யாரேனும் தம் வீட்டிற்கு வந்தால் தேவலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவன், இன்றோ நாளையோ தனக்கு தெரிந்தவர் யாரையாவது சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில், அவனது பால்ய நண்பனின் இந்த வருகை சிவசங்கரனுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. 

சங்கரனுக்கு தெரிந்தவர்கள் நலன் விரும்பிகள் பலர் இருந்தாலும் ஆத்மார்த்தமான நண்பர்கள் என சொல்லத் தக்கவர்கள் மொத்தம் மூன்று பேர்கள் மட்டுமே. அதில் இந்த வரதன் எனும் வரதராஜன் மிக முக்கியமானவன். 

இவன் ஒருவன் மட்டுமே இன்று உயிருடன் இருப்பது தான் அதற்கு ஒரே காரணம். மீதம் இரண்டு பேரில் ஒருவன், கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது, காதல் விவகாரத்தில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டான். மற்றொருவன், பெயர் இன்னதென்று தெரியாத வியாதி ஒன்றில் மாண்டு போனான். 

அந்த இரண்டு நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றிலாவது சிவசங்கரனும் உடன் சேர்ந்து இறக்காமல் இருந்தது அதிசயமே. துக்கத்தில் தன்னை மறந்து, அன்ன ஆகாரமின்றி நாட்கணக்கில் அழுதுகொண்டே இருந்த சிவசங்கரனைக் கண்டு அஞ்சிய அவனின் பெற்றோர் வேறு வழியின்றி மனநோய் மருத்துவரை அணுகி காண்பித்த போது தான் சிவசங்கரனுக்கு சிறுவயதிலிருந்தே HSP எனப்படும் Highly Sensitive person எனும் மனம் சார்ந்த பிரச்சனை இருப்பது தெரியவந்தது. உடல்ரீதியிலான பாதிப்பென்று எதுவும் இல்லாத ஒரு மனநல பிரச்சனை தான் அது என்றாலும் எளிதில் உணர்ச்சிவயப் படக்கூடியதான அந்த மனநிலை சங்கரனுக்கு பலநேரங்களில் மனோரணங்களைத் தந்துவிடுவது துருதிஷ்டமே.

கோபம், பாசம், அன்பு, மகிழ்ச்சி என சகலவித உணர்வுகளையும் பிறரைக் காட்டிலும் மிகுதியாக வெளிப்படுத்தக்கூடிய ஒருவனாக வாழ்வதென்பது, இந்த நவயுகத்தில் மிகுந்த தர்மசங்கடமான ஒன்று என்பது பலருக்கும் புரிவதில்லை. கண்ணீர் வழிய மனம்விட்டு சிரிப்பதும், மனம் நோகும் நேரங்களில் தாளமுடியாமல் அழுவதும், கோபத்தில் யாரையேனும் திட்டிவிட்டு, அவர்கள் மீதே தவறு இருப்பினும் மனம் தாளாமல் அவர்களிடம் வழிய சென்று வருத்தம் தெரிவிப்பதும் இவனுக்கு வாடிக்கை. 

எல்லோருக்கும் பொதுவானதான அது மாதிரியான சந்தர்ப்பங்களில் சிவசங்கரனின் யோசனைகளும், எதிர்வினைகளும் மட்டும் அனைவரிடமிருந்தும் வித்தியாசப்பட்டு இருப்பது அவனை அறிந்தவர்கள் மட்டுமே தெரிந்துகொண்டுள்ள ஒன்று. இப்படி எல்லா சந்தர்ப்பங்களிலும் உணர்ச்சிவயத்திலேயே கிடப்பவனை நண்பனாக ஏற்போரும், ஏற்று நீடிப்போரும் அரிதே. 

அப்படி ஒரு அரிதான நண்பனின் வருகை தான் சிவசங்கரனின் தற்போதைய மகிழ்ச்சிக்குக் காரணம்.

கடந்த ஆண்டு நடந்த வரதனின் திருமணத்தில் பார்த்த பிறகு, தற்போது தான் மீண்டும் இருவரும் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. வரதன் தன் மனைவியையும் தன் இரண்டுமாதக் குழந்தையையும் உடன் அழைத்து வந்திருந்தான். 

தன் மனைவி அமிர்தாவை சங்கரனுக்கு அறிமுகப் படுத்தினான். 

சங்கரனைப் பற்றி ஏற்கனவே தம் கணவர் பலமுறை பேசி இருப்பதாகவும், இருவருக்கும் இடையிலான நீண்டகால நட்பு பற்றி தாம் அறிந்திருப்பதாகவும் கூறிய அமிர்தாவைப் பார்த்து சங்கரன் புன்முறுவலிட்டான். 

வந்த இருவருக்கும் இரண்டு குவளைகளில் தண்ணீர் கொண்டுவந்து தந்த சங்கரனின் கைகளைப் பிடித்துக் கொண்ட வரதன், நீண்ட நாட்களுக்குப் பிறகான அந்த சந்திப்பின் மகிழ்ச்சியை ஸ்பரிசத்திலேயே சொல்ல விளைவது போல சங்கரனை அனைத்துக் கொண்டான். 

தம் குழந்தையை சங்கரனிடம் காண்பித்துக் கொஞ்சிக்கொண்டிருந்தவன், அவனிடம் குழந்தையைத் தர முயற்சிக்கவே, சங்கரன் வாங்கிக்கொள்ள மறுத்து, தமக்கு குழந்தைகளை தூக்கிக்கொள்ளத் தெரியதென்றும், சற்று பயமென்றும் கூறி மறுத்தான்.

தலை நிற்காத கைக்குழந்தைகளை சரியான நிலையில், சரியானபடி எடுக்கவில்லையானால், குழந்தைக்கு பாதிப்பு உண்டாகுமென்று எப்போதோ யாரோ சொன்னது முதல் சிவசங்கரன் குழந்தைகளைத் தூக்குவது கிடையாது. தொட்டிலிலோ, தூளியிலோ, தாய் தந்தையின் அரவணைப்பிலோ  படுத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை மிருதுவாக அதன் கன்னத்தை இரண்டு விரல்களால் வருடிப் பார்ப்பது மட்டுமே சங்கரனுக்குத் தெரிந்த குழந்தைகளை கொஞ்சும் முறை. மற்றபடி அதனைத் தூக்கிக் கொள்வது, வாங்கி கொள்வதெல்லாம் அவனுக்கு அச்சம் தான். 

குறைந்த பக்ஷம் குழந்தை சுயமாக நடக்கும் பருவத்தில் இருந்தால் எடுத்துக் கொள்வான். அதற்கும் கீழான எல்லா குழந்தைகளும் அவனைப் பொறுத்தவரை தலை நிற்காத கைக்குழந்தைகள் தான். 

ஆனால் இது உண்மையிலேயே தலை நிற்காத கைக்குழந்தையாதலால் வரதனும் சங்கரனை வற்புறுத்தவில்லை.  

பால்யகால நினைவுகள், நிகழ்வுகள் பற்றியெல்லாம் வரதனும் சங்கரனும் பேசிக்கொண்டிருந்தாலும், அமிர்தாவிற்கு பொழுது செல்லவில்லை. குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு இருவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் அவளுக்கு தோதாக அந்த வீட்டில் இல்லை. 

அலமாரிகள் மட்டும் என்றில்லாமல், திரும்பிய பக்கமெல்லாம் அடுக்கியும், கடைசியாக படித்த பக்கம் கலையாமலிருக்க நடுவில் பேனாவோ, புத்தாடைகளில் தொங்கிக்கொண்டிருந்த விலைக்குறிப்பு அட்டையோ  செருகி அடையாளம் செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களும், எவராலும் புரிந்துகொள்ள முடியாதபடியான கையெழுத்துக் குறிப்புகளையும், வடிவற்ற வரைபடங்களையும் தாங்கிக்கொண்டு சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வெள்ளைநிற எழுதுபதாகையையும் தவிர அவள் கண்களுக்கு வேறெதுவும் தெரியவில்லை. 

கைக்குழந்தையை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றுவது, அதன் தலையைக் கோதிவிடுவது என எதையாவது செய்து நெளிந்துகொண்டிருந்த அமிர்தாவை கவனித்த வரதன், தம் நண்பனிடம் மனம்விட்டுப் பேசுவது தமக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை பார்த்துக் கொண்டிருக்கும் துளியும் சம்மந்தம் இல்லாத மூன்றாம் நபருக்கு மிகுந்த சலிப்பையே ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டு, படுக்கையறை சென்று தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஏதேனுமிருந்தால் பார்த்துக்கொண்டிருக்கும்படி அமிர்தாவிடம் கூறினான். 

தயங்கியபடியே படுக்கையறை நோக்கி நகர்ந்த அமிர்தாவை அங்கே டிவி ஏதும் இல்லை என்று கூறி தடுத்தான் சங்கரன். வரதனுக்குப் புரியவில்லை.

கூடத்திலும் புத்தங்களைத் தவிர வேறெதுவும் காணவில்லை. படுக்கையறையில் இல்லை என்றால் வேறெங்கு இவன் டெலிவிஷனை வைத்துக்கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் சங்கரனிடமே கேட்க, தம் வீட்டில் டீவியே வாங்கிக்கொள்ளவில்லை என்று சங்கரன் பதிலளித்தான். 

சங்கரனை வேற்றுலகவாசியைப் பார்ப்பதுபோல பார்த்தாள் அமிர்தா. சங்கரனுக்கும் அது புரிந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

ஏற்கனவே அலைபேசி பிரயோகம் அதிகரித்து, முன்புபோல புத்தக வாசிப்பில் கவனம் செலுத்துவது குறைந்து வருவதாகவும், அதுமட்டுமின்றி, அலைபேசியில் புதிய வெளியீடு திரைப்படங்களே பதிவிறக்கம் செய்ய கிடைப்பதுடன், தரமான திரைப்படங்கள் ஏதேனும் வெளிவரும் பக்ஷத்தில் அதற்கு மட்டும் திரையரங்கம் சென்று பார்த்துவிடுவதாலும், மேடை நாடகங்கள், கச்சேரிகளுக்கெல்லாம் செல்லும் வழக்கம் இருப்பதாலும், தனியாக தொலைகாட்சி என்று ஒன்று தேவைப்படவில்லை என்று சங்கரன் கூறிய காரணம் அமிர்தாவிற்கு விசித்திரமாகத் தோன்றினாலும் அவனைப் பற்றி அறிந்திருந்த வரதனுக்கு அது ஆச்சர்யத்தை அளிக்கவில்லை.

வேறு என்ன வேலை கொடுத்து அமிர்தாவின் சலிப்பை போக்குவது என்று யோசித்த வரதனுக்கோ ஒன்றும் தோன்றவில்லை. அதற்கிடையில் அமிர்தாவே வரதனிடம் தாம் அனைவருக்கும் தேநீர் தயாரித்து வருவதாகக் கேட்க, வரதனின் பதிலுக்கு முன்பாகவே சங்கரன் எழுந்து, தீர்க்கமாக மறுத்தான். 

தங்களுக்கு எதற்கு சிரமமென்றும், தாமே சென்று தேநீர் தயாரிப்பதாகவும் கூறி செல்ல முயன்ற சங்கரனை உரிமையுடன் இழுத்து அமர வைத்த வரதன், அமிர்தாவிடம், சங்கரனைப் பொருட்படுத்தவேண்டாமென்றும், உள்ளே சென்று நன்றாக மூன்று தேநீர் தயார் செய்து எடுத்துவருமாறும் கூற, அமிர்தாவும் சமயலறைக்கு சென்று சரியானதொரு பாத்திரத்தைத் தேட துவங்கினாள். 

பொதுவான திருமணமாகாத ஆண்கள் வாழும் வீடு போல ஒழுங்கீனமாக இல்லாமல், சமையலறை முதற்கொண்டு ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதும், வேண்டிய பொருட்கள் எல்லாம், சிரமமின்றி எடுக்கும் வகையில் தெளிவாக இருப்பதும் அமிர்தாவுக்கே சற்று யோசனையாக இருந்தது. அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரில் பாலை சேர்த்து, இஞ்ஜித் துண்டுகளை தோல் நீக்கி கல் உருளியிலிட்டு நசுக்கிக் கொண்டிருந்தாள்.

சமீபத்தில் முகநூலில் பரிச்சயமான நண்பரின் மூலம் அறிந்து, மிகுந்த ப்ரயத்தனப் பட்டு, அவன் கேட்ட தொகையை மின்னணுமுறையில் இங்கிருந்தே செலுத்தி, தாம் தருவித்திருந்த ஒரு பழைய புத்தகத்தை வரதனிடம் காட்டி பேசிக்கொண்டிருந்தான் சங்கரன். 

கிரந்த மொழியில் எழுதப்பட்டிருந்த அப்புத்தகம் காளிதாசர் இயற்றிய “ரகு வம்சம்” எனவும், அதன் மற்றொரு சிறப்பு, அது பதிப்பிக்கப் பட்ட ஆண்டு கி.பி. 1882, அதாவது மஹாகவி பாரதியார் பிறந்த ஆண்டு என்றும் சிலிர்த்து கூறிக்கொண்டிருந்தான் சங்கரன்.

அழுத்தமாகத் தொட்டால் பொடிந்துவிடும் நிலையிலிருந்த அந்த புத்தக தாள்களை மிகுந்த எச்சரிக்கையுடன் தடவி பார்த்தான் வரதன்.

தமக்கு கிரந்த எழுத்துக்கள் முழுதும் படிக்கும் அளவிற்கு தெரியாவிட்டாலும் மிகச்சிறு அளவிற்கு புரிவதாகவும், இணையத்தில் பார்த்து மேலும் சிலவற்றை தெரிந்துகொள்ள முடிவதாகவும் கூறிக்கொண்டிருந்த சங்கரனுக்கும், வரதனுக்கு அடுப்படியிலிருந்து வீசிய ஏலக்காயின் நறுமணம் இதம் அளித்தது. 

வெண்மையானதொரு நீள்சதுரத் தட்டில் மூன்று கோப்பை தேநீருடன் வந்த அமிர்தா இருவருக்கும் தந்துவிட்டு தாமும் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.

வரதனின் கையிலிருந்த குழந்தை தூக்கமிகுதியால் பெரிதாக வாயைத் திறந்து கொட்டாவி விட்டது. குழந்தையை சற்றுநேரம் படுக்க வைத்தால் தூங்குவானென்றும், தோதாக எங்கே விடலாம் என்றும் கேட்ட அமிர்தாவிடம், சங்கரன் தம் படுக்கையறைக்கு அழைத்துச் சென்று மெத்தையிலேயே படுக்கவைத்துக் கொள்ளுமாறும், உருண்டு கீழே விழுந்துவிடாதபடிக்கு தலையைணைகளை புறத்தில் வைத்துக்கொள்ளலாமென்றும் கூறினான். 

அமிர்தா சிரித்தபடியே தம் கைப்பையில் உடன் கொண்டுவந்திருந்த புடவை ஒன்றை எடுத்து, தூளி கட்ட இடம் உள்ளதா என்று கேட்க, சங்கரனும் புரிந்துகொண்டு தம் படுக்கையறையிலேயே மேலே தூளி கட்ட ஏதுவாக கம்பி மாட்டல் இருப்பதை காண்பித்தான். 

குழந்தையை தூளியிலிட்டு ஆட்டி, தூங்க வைத்த அமிர்தா, பேசிக்கொண்டிருக்கும் நண்பர்களின் குரல் கேட்காதபடி சிறிது படுக்கையறைக் கதவை சாத்திவிட்டு கூடத்திற்கு வந்தாள்.

குழந்தை தூங்கிவிட்டானா என்று கேட்டபடியே எழுந்து வந்த வரதன், அமிர்தாவுக்கான தேநீர் கோப்பையை எடுத்து அவளிடம் கொடுக்க, ஆறியிருந்த அந்த கோப்பையை கையில் வாங்கிக்கொண்டு, காற்றோட்டமாக வெளியில் பால்கனிக்கு சென்று பேசலாமே என்று வரதனிடம் கூறினாள்.

சங்கரனும், அதற்கென்ன எனும் பானியில் எழுந்து மூவரும் முன்மாடத்திற்கு சென்றனர். முதல் தளத்திலிருந்து சங்கரனின் வீட்டு முன்மாடத்துடன் கூடிய வாசல் நன்கு காற்றோட்டமானது. இடதுபுறம் கீழே இறங்கிச்செல்வதற்கான படிகளும், வலது புறம் எதிர்வீட்டின் சுவரும் இருப்பது போலான நல்ல விஸ்தாரமான அந்த பால்கனியில் நான்கைந்து நாற்காலிகள் போடுமளவுக்கு இடமிருந்தாலும், சங்கரன் ஒரு நாற்காலியையும் டீப்பாயியையும் போட்டு வைத்திருந்தான். மேலுமொரு மூங்கில் ஊஞ்சல் ஒன்றும் தொங்கிக்கொண்டிருந்தது. 

ஊஞ்சலைப் பார்த்த மாத்திரத்தில் அமிர்தா உரிமையுடன் அதில் அமர்ந்துகொண்டாள். அவளுக்கு புதிதான அந்த இடமும் சங்கரனும் இப்போது சற்று பரிச்சயம் ஆனது போலவும், அவள் தற்போது சற்று அந்நியோன்யமாக உணர்கிறாள் என்பதும் சங்கரனுக்குப் புரிந்தது. அது அவனுக்கு மகிழ்வையே தந்தது. 

தேநீர் ஆறியிருக்குமே, சூடு செய்துகொள்ளலாமே என்று மேலும் பேச்சு கொடுத்த சங்கரனைப் பார்த்து, தாம் இப்படி வெதுவெதுப்பாகவே எப்போதும் தேநீர் சாப்பிடுவதாகவும், மிகுந்த உஷ்ணத்துடனிருக்கும் தேநீர் உள்ளிட்ட பானங்கள் எதையும் எப்போதும் நன்கு ஆறவைத்தே பருகுவதாகவும், அதுவே தமக்கு பிடித்தமானதென்றும் புன்முறுவலுடன் கூறினாள். 

போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு வரதன், டீப்பாயிலிருந்த செய்தித்தாள்களையெல்லாம் எடுத்து கீழடுக்கில் போட்டுவிட்டு, கால்களைத் தூக்கி டீப்பாயின் மீது போட்டுகொண்டு ஓய்வாக சாய்ந்து அமர்ந்துகொண்டான். அவனைப் பார்த்த அமிர்தவும், நாற்காலி அமர்வதற்குத் தானே தவிர படுத்துக்கொள்வதற்கு அல்ல என்று கேலி செய்தாள். அந்த இரவு நேர ஈரக் காற்று வரதனுக்கு மிகுந்த இதம் அளித்தது. மறுநாள் மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டுமே என்ற எண்ணம் எழும்போது மிகுந்த அசவுகரியமாகத் தோன்றியது. இப்படி கைகால்களை நீட்டி காற்றுவாக்கில் அமர்ந்து மனம்விட்டு பேசி மகிழ்ந்து எவ்வளவு காலங்கள் ஆகின்றது என்று தோன்றியது. பிடித்த நிகழ்வுகளுக்கு செல்லவோ, பிடித்தபடி விடுப்பெடுக்கவோ, பிடித்த ஊர்களுக்கு செல்லவோ, புதிய விஷயங்களை யோசிக்கவோ என எதற்கும் நேரமோ அவகாசமோ இன்றி எப்போதும் அலுவலகம், பணிநிமிர்த்தமான சந்திப்புகள், உரையாடல்கள், லாப நஷ்ட இலக்குகள், போக்குவரத்து, சாலை நெரிசல், மாதாந்திர செலவுகள், குடும்ப பாரம் என யந்திரத்தனமான வாழ்க்கையில் தம்மை முழுவதுமாக இழந்துவிட்டிருந்தது வரதனுக்கு பல சந்தர்ப்பங்களிலும் தோன்றுவது போல அப்போதும் உரைத்தது. விடையற்ற, முடிவற்ற அந்த மன உரையாடல் ஒரு அர்த்தமற்றது எனும் அதே வழக்கமான சமாதானத்தையே இப்போதும் மனதிற்குள் சொல்லிக்கொண்டான். லட்சங்களில் ஊதியம் பெரும் வரதனுக்கு கெட்டப்பழக்கங்களென்று எதுவும் கிடையாது. வாரஇறுதியில் உடன் பணிபுரியும் நண்பர்கள் செல்லும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சேர்ந்துசெல்லும் பழக்கம் எப்போதுமே அவனுக்கு இருந்ததில்லை. மோட்டார் வண்டிகளில் சீறிச்சென்று க்ளப்புகளிலும், மனமகிழ்மன்றங்களிலும் மது அருந்தி, ஆண் பெண் பேதமின்றி கட்டிப் புரண்டு நடனமாடி இச்சைகளில் திளைத்து களியாட்டமிடும் அவனது சக ஊழியர்கள் யாவும் அவனைப் பொறுத்தவரை சீரழிந்தவர்களே. உத்யோக சுமை, மன அழுத்தம், குடும்ப சுமை என ஏதாவதொரு காரணத்தைக் கூறி இந்த களியாட்டங்களை தம் நண்பர்கள் நியாய படுத்தினாலும், வரதனுக்கு என்றுமே அவை ஏற்புடையதாகத் தோன்றியதில்லை. அவற்றிலிருந்தெல்லாம் அவன் விலகியே இருந்துள்ளான். ஆனால் வேறுவகையிலான உற்சாகங்கள் என்று வரதனுக்கு எதுவுமே இல்லாமலிருந்ததே மேற்படி சலிப்பிற்கான காரணமாக இருந்தது.

இந்த சங்கரனைப் போல வரதன் கலாரசிகனில்லை. புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் இல்லை. சங்கீதங்கள் கேட்பதும் கூட, தற்கால டப்பாங்குத்து பாடல்கள் போலவோ அல்லது மூன்றாந்தர, சினிமா பாடல்கள் மட்டுமே எனும் அளவிற்குத் தான். சரித்திரம், அறிவியல், தத்துவம், இலக்கியம் என எதிலும் செவிவழியாகப் பெற்றிருந்த அடிப்படை அறிவைத் தாண்டி பெரிதாக ஒன்றும் அறிந்திராதவன் அல்லது ஈடுபாடற்றவன்.

ஆனால் சங்கரனோ, ரசிகமணி! 

சங்க இலக்கியங்கள் முதல், கம்பர், வால்மீகி, வள்ளுவர் என நகர்ந்து பாரதி, பாரதிதாசன், கல்கி, மு.வ, மட்டுமன்றி தி.ஜானகிராமன், சா.கந்தசாமி, சுஜாதா என தமிழ் எழுத்துலகு முழுதையும் ருசிகண்டிருப்பவன். இலக்கியங்கள் மட்டுமன்றி தத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் குறிப்பிடும்படியான ஞானத் தேர்ச்சி பெற்றவன். உலக இலக்கியங்களில் குறிப்பாக ரஷ்ய இலக்கியங்கள் அவனுக்கு விருப்பமானவை. டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, செக்கோவ் என சங்கரன் தொடாத இடங்களே இல்லை எனலாம். 

சங்கீதமென்றாலோ, ஓரளவிற்கு ஹிந்துஸ்தானியும், கர்நாடக சங்கீதமும் புரிந்துகொள்ளும் அறிவு கொண்டவன் மட்டுமின்றி, பீத்தோவன் முதல் லேடி காகா வரை உலகத்தரமான இசைப் படைப்புகளை தேடிக் கேட்டுக்கொண்டிருப்பவன். 

பழங்காலப் பொருட்கள், நூற்றாண்டுகள் பழைய நாணயங்கள் சேகரிப்பது, வீட்டிலேயே சிறிய அளவிலானதொரு தொலைநோக்கி வைத்துக்கொண்டு, விண்வெளி கிரகங்களைத் தெளிவாகப் பார்ப்பது, அது சம்மந்தமான விஷயங்களை இணையத்தில் தேடுவது, பகிர்வது, வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் தனிசிறப்புகளை, கல்வெட்டுகள், ஓவியங்களையெல்லாம் கண்டுகளிப்பது என சிவசங்கரனின் ரசனைகள் யாவும் உயர்மட்டமானவை. இதில் சொல்லாத பல விஷயங்கள் அவனே யாரிடமாவது கூறினாலொழிய தெரிய வாய்ப்பில்லை. துரதிஷ்டவசமாக சங்கரனுக்கு அவனின் இவ்வாறான விருப்பமானவற்றையெல்லாம் பேசி, பரிமாறிக்கொள்ள தோதான நண்பர்கள் யாருமில்லை. இந்த வரதனுக்கு கூட இவையெல்லாம் அறிந்தவனில்லை என்றாலும், சங்கரன் எப்போதாவது ஆர்வமிகுதியால் இவற்றையெல்லாம் விளக்கிக் கூறினால், பிறரைப் போல நழுவி ஓட நினைக்காமல், பொறுமையுடன் சங்கரன் சொல்வது முழுதையும் கேட்பதுடன் மேலும் தமக்குத் தோன்றும் சந்தேகங்களை கேட்டு சங்கரனுக்கு ஊக்கமளிப்பான். சங்கரனுக்கும் வரதனுக்குமான நட்பு இத்தனை வருட காலங்கள் நீடித்திருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் எனலாம்.

முன்மாடத்தின் விளிம்பில் கைமுட்டிகளை  இடுப்புயர தடுப்புச்சுவரில் ஊன்றி, பின்பக்கமாக சாய்ந்து நின்று கொண்டிருந்த சங்கரனுக்கு, சுகமான அந்த இராக்காற்றின் ஈரமும், மனதிற்கினிய நன்பனுடனான உரையாடலும் மிகுந்த பரவசத்தை தந்தது.

குடித்து முடித்திருந்த காப்பி கோப்பையை தன் காலுக்கடியில் வைத்த அமிர்தாவை, உள்ளிருந்த பால் திரிந்து தயாராவதற்கு முன்பாக குடித்து முடித்து விட்டதாகக் கூறி சிரித்தான்.

உடன் வரதனும் சேர்ந்துகொண்டான்.

கழுவுமிடத்தில் கொண்டு போட, கீழே இருந்த கோப்பையை எடுத்து நிமிர்ந்த சங்கரனின் கண்களில் பால்கனிக்கு வெளியே இருந்த எதிர்வீட்டு பின்புற சுவர் விழுந்தது. 

சிறிது வாரங்களாக மறந்திருந்தவன் அதனைக் கண்டதும், அவனையறியாமல் உடல் சிலிர்ப்பெடுத்தது. 

எடுத்தக் கோப்பையை கைப்பிடித்தூண் மீது வைத்துவிட்டு அப்படியே அந்த சுவரை உற்றுப் பார்த்தான். 

முன்புபோல தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. அது அழிந்து அல்லது மறைந்து போய்விட்டது போலவும் இருந்தது! கணநேரத்தில் பளிச்சென்று அச்சில் வார்த்தது போல தெரியவும் செய்தது. 

சங்கரனால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. 

பதட்டம் அதிகரித்தது!

நினைக்க வேண்டாம், நினைப்பதன் மூலம் மீண்டும் அதனை உயிர்ப்பிக்க வேண்டாமென்று பிரயத்தனம் செய்தும் முடியாத சங்கரனுக்கு கடந்த வருட நிகழ்வுகள் நிழலாடத் துவங்கின.

ஒரு வருடத்திற்கு முன்பு, இதே முன்மாடத்தில் இப்போது போலவே நின்றுகொண்டிருந்த சங்கரனை நலம் விசாரித்தபடியே வீட்டிற்குள் வந்தார் மாமா சுந்தரராஜன். மாமா என்றால் தாய்வழி வந்த தாய்மாமனோ அல்லது நெருங்கிய உறவினரோ அல்ல. 

இவர் சங்கரனுக்கு திருவண்ணாமலையில் அறிமுகமான நண்பர். கிரிவலம் சென்றுகொண்டிருந்த சங்கரனுக்கு, கிரிவலப் பாதையில் பரிச்சயமாகி, பிறகு பழக்கம் தொடர்ந்து சிலவருடங்களாக அலைபேசியில், சில சந்தர்ப்பங்களில் நேரிலும் சந்தித்து பேசிக்கொள்ளும் அளவிலானதொரு நண்பர்.

வரதனுக்குப் பிறகு சங்கரன் சமீபத்தில் நெருங்கிப் பழகிய மற்றுமொருவர் இந்த சுந்தரராஜன். சங்கரனை விட வயதில் மிகவும் மூத்த இவரை சங்கரன் மாமா என்றழைப்பது அவர்களின் முதல் சந்திப்பிலேயே ஒட்டிக்கொண்ட ஒன்று.

பஞ்சாங்கங்கள் முதல் தற்காலத்திய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிகள் வரை பேசத் தெரிந்தவர் அவர்.

கணிசமாக சமஸ்கிருதம் அறிந்திருந்த மாமா, வேத மந்திரங்களைக் கூட பிரித்து பொருள்கூறி, இக்காலத்தில் அவை எவ்வாறெல்லாம் தவறாக பொருட்படுத்தப் படுகின்றன என்பதையெல்லாம் விளக்கும் போது சங்கரன் சொக்கிப் போவான்.

பல்துறை அறிவு மிக்கவர். 

ஜோதிஷம், நாடி சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம் என சுந்தரராஜன் அறிந்திருந்த பல விஷயங்களையும் சங்கரனுடன் பரிமாறிக்கொள்வார். 

கைலாய அடிவாரத்திலும், வாரணாசியில் யோகத்திலிருக்கும் அகோரிகள் முதல் கண்கட்டு சித்துகள் செய்ய இடுகாட்டில் மந்திரித்து மை செய்துகொள்ளும் குறிசொல்பவர்கள் வரை அவருக்கு பலரையும் தெரியும்.

அவர்களுடனான பல அனுபவங்களையும் சங்கரனிடம் பகிர்ந்துகொள்வார்.

சதா சர்வகாலமும் காதில் குறி சொல்லிக்கொண்டே இருக்குமொரு “கர்ண யக்ஷினி” தம்மிடம் இருந்ததாகவும், அதன் இடையறாத குரல்களைக் கேட்டு, தம்முடைய இடப்பக்க செவி, கேட்கும் திறனற்றுப் போனதாகவும், பிறகு தமது குருநாதரின் உதவியுடன் பெரும் ப்ரயத்தனப் பட்டு அந்த யக்ஷிணியை தம்மிடமிருந்து விடுவித்துக் கொண்டதாகவும் ஒருமுறை சங்கரனிடம் கூறினார்.

திருவண்ணாமலையில் தம்முடன் பல வருடங்கள் பழக்கத்திலிருந்த ஒருவர், தம் கட்டுப்பாட்டிலிருந்து ஜாலக்குரலி ஒன்றின் எதிர் தாக்குதலால் கொடூரமானதொரு மரணத்தை கண்டார் எனும் மேலதிக செய்தியையும் உடன் கூறினார்.

தமக்கு உதவிய தம் குருநாதரே பிற்காலத்தில் குட்டிச்சாத்தான் ஒன்றினால் நிர்மூலமானார் என்றும், அதுமுதல் தாம் எப்போதும் அது சார்ந்த முன்னெடுப்புகளில் ஈடுபடுவதில்லை என்று சத்ய விரதம் பூண்டதாகவும் கூறினார்.

சிவசங்கரனுக்கு  இவற்றையெல்லாம் நம்புவதில் பெரிதாக சிக்கலெதுவும் இருக்கவில்லை. இவைமட்டுமின்றி சுந்தரராஜன் மாமா கூறியிருந்த பல விஷயங்கள் யாவும் சங்கரனுக்கு ஏற்கனவே பரிக்ஷயமானவை தான். 

சிலகாலங்கள், சித்தமருத்துவம், காயகற்பம், பாஷாணங்கள், சித்தர்களின் யோக சூத்திரங்கள், மந்திரக்கலைகள், வித்தை மந்திரங்கள் சம்மந்தமான நூல்களை தேடிப்படிப்பதையே முழுநேரமாக செய்துகொண்டிருந்த சங்கரனுக்கு இவை நன்கு தெரிந்திருந்த விஷயங்களாகத் தான் இருந்தன.

பெரும்பாலும் குடுகுடுப்பைக்காரர்களால் பிரயோகிக்கப்படும் நாய்களின் வாய்க்கட்டு மந்திரம், செயலிழந்து முறிந்துபோக உதவும் மாற்று மந்திரமொன்றை பழக உச்சாடனம் செய்ய முயன்ற சங்கரன், பிறகு அதை விட்டுவிட்டதெல்லாம் வேறு கதை. 

இவற்றையொட்டிய இதுமாதிரியான சுந்தரராஜன் மாமா கதைகளெல்லாம் பிறருக்கு நம்ப கடினமாக இருக்கலாமேயன்றி சங்கரனுக்கு அல்ல.

மூன்று வருடங்களாக பொது இடங்களில், அலைபேசியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்த, முதல்முறையாக சங்கரனின் அழைப்பையேற்று அவன் வீட்டிற்கு வந்திருந்த மாமா, கிளம்பும்பொழுது நள்ளிரவை எட்டியிருந்தது. 

விடிந்ததும் கிளம்பலாமென்று யோஜனை சொன்ன சங்கரனிடம், பன்னிரண்டரை மணிக்கு கோயம்பேட்டிலிருந்து மதுரைக்கு செல்லும் பேருந்தைப் பிடிக்க இப்போது சென்றால் சரியாக இருக்குமென்றும், அரை மணி நேரத்தில் பேருந்து நிலையத்தை அடைந்துவிடலாமென்றும் கூறி மறுத்தார். 

பேசியபடியே வெளியே முன்மாடத்திற்கு வந்தவர், தம் தோல்செருப்புகளை கால்விரல்களால் கவ்வியிழுத்தது காலடியிலிட்டு ஒவ்வொன்றையும் மாட்டிக்கொண்டு கிளம்ப எத்தனித்து, சங்கரனை மீண்டுமொருமுறை ஆலிங்கனம் செய்துகொண்டார். 

அச்சமயம் அந்த சுவர் சுந்தரராஜன் மாமாவின் கண்களில் பட்டது தெய்வாதீனமாகத் தான் இருந்திருக்க முடியும்.

இரண்டு நொடிகள் உற்றுப்பார்த்த மாமாவின் முகம் சட்டென்று இருண்டது. 

ஒரு குவளை தண்ணீர் தருமாறு கேட்ட மாமாவிற்காக கையில் தண்ணீர் செம்புடன் வந்த சங்கரன் மாமாவை இதுநாள் வரை அவ்வாறு கண்டதில்லை. 

அணிந்திருந்த செருப்பை கழட்டிவிட்டு, கையிலிருந்த துணிப்பையை ஓரத்தில் கிடத்தியிருந்த மாமா, அப்படியே தரையில் அமர்ந்து வலது கை ஆள்காட்டி விரலால் புருவமத்தியையும், மடிந்திருந்த நடுவிரல் முட்டியால் நாசியின் நுனியையும் தொட்டபடி, கட்டைவிரல் வலதுபுறம் பார்க்குமாறு விரித்து வைத்துக்கொண்டும், இடது கரத்தின் நடுவிரல் தொப்புளைத் தொட்டபடி வைத்தும் கண்மூடி அமர்ந்திருந்தார். 

பதினைந்து வினாடிகளிருந்திருக்கலாம். 

கண்களைத் திறந்த மாமா, ஓரத்தில் கிடத்தியிருந்த தம் துணிப்பையை எடுத்து, உள்ளேயிருந்த தம் அலைபேசியில் கேமராவை இயக்கி அந்த சுவரில் குறிப்பிட்டதொரு பகுதியை சற்று பெரிதுபடுத்தி, படம் பிடித்துக் கொண்டார். அதனை சங்கரனிடம் காண்பித்து என்ன தெரிகிறதென்று பார்க்கும்படி கூறிவிட்டு, சங்கரனின் கையிலிருந்த செம்பை வாங்கிக்கொண்டு சற்று விலகி நின்றார்.

நன்கு அகன்று பரவலாக கட்டப்பட்டிருந்த அந்த சுவர் எதிர் வீட்டின் பின்பகுதி. அதாவது, சங்கரனின் வீட்டு வாசல் அல்லது பால்கனிக்கு எதிராக அமைத்திருக்கும் அந்த வீட்டின் வாசல் எதிர் திசையில் இருக்கும்படியும், வீட்டின் பின்பகுதி, சங்கரன் வீட்டை பார்த்தபடியுமானதொரு அமைப்பு. காய்ந்து அழுக்கேறிப் போயிருந்த அந்த சுவர், சுண்ணாம்பு கண்டு வருடங்களாகியிருக்கும். தூசியும், காய்ந்த பாசியுமாக இருந்த அந்த சுவற்றில் மழைபெய்த கறைகளும் அவை ஏற்படுத்தியிருந்த கருப்பான கோடுகளுமாய் பாலடைந்துப் போயிருந்த தடங்களைத் தவிர வேறெதுவும் சங்கரனுக்குத் தெரியவில்லை. புரிந்துகொண்ட மாமா, புகைப்படத்தை இன்னும் சற்று பெரிதாக்கி, சற்று சாய்த்து ஒருவாறு காட்டவும், சங்கரனுக்கும் அது தெரிந்தது.

கறுப்பேறியிருந்த அந்த பாசிபடர்ந்த சுவற்றின் கீறல்களுக்கு நடுவில், அந்த கீறல்களும், களைந்த தூசிப்படிமங்களுமெல்லாம் சேர்ந்து, குறிப்பிட்டதொரு கோணத்தில் ஒரு மனிதமுகம் போன்றதொரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தன! 

இரண்டு கண்கள், நீளமானதொரு நாசி, குவிந்திருந்த உதடுகள், செவ்வகமான முகவாய் என மனிதமுகமொத்து இருந்தாலும், மனிதனுக்குரிய சாந்தம் அந்த முகத்தில் இருக்கவில்லை. மாறாக, கிலியேற்படுத்துமொரு குரூரம் அதில் இருந்தது.

சிலநொடிகள் கடந்து, தற்போது சங்கரனுக்கு அந்த முகம் மிகுந்த நேர்த்தியுடன் தெரிந்தது.

அது வெறும் மலைசாரல்கள் தூசிப்புழுதியிலும், காய்ந்த பாசியிலும் ஏற்படுத்தியிருந்த அர்த்தமற்ற கீறல்கள் தானென்று சங்கரனாலும் சொல்லமுடியவில்லை. அந்த முகத்தின் தெளிவு அப்படியொன்றாக இருந்தது. 

இதுநாள் வரை சங்கரன் கண்களில் இப்படி தோன்றாமலிருந்தது அவனுக்கு ஆச்சர்யத்தையளித்தது.

மாமாவிடம் இதுபற்றி விசாரித்தபொழுது, அவர் கூறியது சிவசங்கரனுக்கு மேலும் பயத்தை கூட்டியது.

அது ஒரு பூதகனமென்றும், தெருக்குத்து உள்ள வீடுகள், முச்சந்திகள், பாழ்மண்டபங்களில்லெல்லாம் அண்டிக்கொள்ளும் பண்புடைய பைசாச யக்ஷிணியாகவோ, அல்லது இசக்கியாகவோ இருக்கலாமென்றும் கூறினார்.

இதற்கு முன்பு இதை கவனித்ததே இல்லை என்றும், இது எப்போதிருந்து இங்கே இப்படி இருக்கிறதென்றும், இதனால் என்ன மாதிரியான பிரச்சனைகள் உண்டாகுமென்றும் சங்கரன் கேள்விகளை அடுக்கவே, மாமா மெதுவாகக் கூறத்துவங்கினார். 

இந்த யக்ஷினிகள் சுத்தமில்லாத கன்னிமூலைகளைக் கொண்டிருக்கும் இல்லங்களிலும், தெருக்குத்து உள்ள வீடுகளிலும், வீட்டார்களின் அறியாத சில நிகழ்வுகளாலும் கூட வந்து ஒட்டிக்கொள்பவை என்றும், த்ரிஷ்டிகளை ஏற்படுத்தி, அந்த வீடுகளில் வசிப்போர்களுக்கு நோய்களையும், உடல் மற்றும் மனம் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்துவதுடன், காரியத் தடை, விபத்துகளை ஏற்படுத்துவதிலும் தேர்ந்தவை இந்த பைசாசங்கள் என்று விளக்கிய மாமாவை திகிலுடன் கண்டான் சங்கரன்.

இது குறித்து தாம் கூறுவது முற்றிலும் உண்மையென்றும், தெய்வங்கள் தம்மிடம் அப்படித்தான் கூறுகின்றனவென்றும் மாமா உறுதியாகக் கூறினார்.

தாம் இது போன்ற விஷயங்களையெல்லாம் எவ்வளவோ படித்தும், கேட்டும் இருந்தாலும், தம் வீட்டிலேயே அவை போன்று நடப்பதை அவ்வளவு எளிதாக சங்கரனால் அணுகமுடியவில்லை. அச்ச உணர்வு அவனை ஆட்கொண்டிருந்தது.

மாமா மேலும் தொடர்ந்தார்.

இது போன்ற பைசாசங்கள் எப்போது விலகிசெல்லுமென்று கூறமுடியாதென்றும், தினமும் பூஜையறையில் கற்பூரமேற்றி மணி அடித்து வழிபடுவதும், விளக்கேற்றிவைப்பதும் பலன் தருமெனவும் அறிவுறுத்தினார்.

பஞ்சமுக மாருதி உருவப்படமொன்றை வாங்கி, மாடத்தில் எதிற்சுவரைப் பார்த்தபடி மாட்டிவைத்து தினமும் கற்பூர ஆராதனை காட்டும் படியும் கூறினார்.

குறிப்பாக, இவ்வாறான யக்ஷினிகள், தங்கள் இலக்குக்குரியவர்களின் பயத்தையும், தங்களின் மீதான அவர்களின் தொடர்ச்சியான எண்ணத்தையும் பிண்டமாக ஏற்று ஜீவிப்பவை மட்டுமன்றி, அதன்மூலம் சக்தி பெறுபவையாதலால், எப்போதும் அது குறித்து அச்சமின்றி துணிவுடனும், அவற்றை துச்சமென்று எண்ணி, நினைவிலிருந்து நீக்கிவிட்டால், அவை சிறிதுசிறிதாக சக்தியிழக்குமென்றும் உபாயம் தந்து, எச்சரிக்கையுடன் இருக்கும்படி சமாதானம் கூறி விடைபெற்றுக் கொண்டார்.

கிளம்பி செல்லும் மாமாவின் நடையில் வரும்பொழுதிருந்த நிதானம் இருக்கவில்லை. தளர்ந்திருப்பது போல சங்கரனுக்குத் தோன்றியது. தாம் கழட்டிவிட்டிருந்த செருப்பைக்கூட அவர் மறந்து சென்றிருந்தார்.

அதன்பிறகு சங்கரன் முழுவதுமாக அதிர்ந்துப் போனான். அதுவரையில் தனிமையிலான அவனது இரவுகளை சுகமானதொரு தருணமாகப் பார்த்துக்கொண்டிருந்த அவனது மனம், தற்போதெல்லாம் பீதியூட்டுபவையாகக் கழிய துவங்கின. மின்விளக்குகளை எரியவிட்டபடியே தூங்கத் துவங்கினான். மின்விசிறி காற்றில் அசையும் நாட்காட்டிகள் சுவற்றில் உராய்ந்து சத்தம் ஏற்படுத்திடாதபடி, அவற்றின் ஓரங்களை சுவற்றோடு ஒட்டிவைப்பது, எந்நேரமும் படுக்கையறை ஜன்னல்களை மூடியே வைப்பது என அச்சமிகுதியில் உழன்றுக்கொண்டிருந்தான். 

ஆனால், மாமா கூறியபடி அசம்பாவிதங்களோ, அல்லது சிறியதொரு அமானுஷ்ய நிகழ்வோ கூட ஏதுமின்றி நாட்கள் எப்போதும் போல நகர்ந்தன.

ஓரிரு மாதங்கள் செல்லச்செல்ல, மெல்ல அவன் மனதில் இந்த விஷயங்கள் மறையத் துவங்கின. எப்போதாவது தோன்றினாலும், இதுவரை தமக்கொன்றும் நேராதிருப்பதையும், மாமா இதனை சுட்டிக்காட்டுவதற்கு முன்பும் கூட தமக்கு எதுவும் நேர்ந்திருக்கவில்லை என்பதை நினைத்தும் சமாதானம் சொல்லிக்கொள்வதன் மூலம் மெல்ல அச்சத்திலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்தான்.

அந்த உருவமும் கூட மெல்ல மறைந்து, அடுத்தடுத்த மழைபொழிவுகளின் போது புதிய கீறல்கள் உருவாகி, தற்போது முன்புபோல தெளிவில்லாமல் ஆகிவிட்டிருப்பதாக உணர்ந்தான்.

சில மாதங்களாக முற்றிலும் மறந்து போயிருந்த அந்த உருவ நிகழ்வு, அகஸ்மாத்தாக தற்போது அவன் மனதில் தோன்றியது.

அவனையறியாமல் அவன் கண்கள் அந்த உருவத்தைத் தேடியது.

மாதங்களாகியிருந்ததால், உடனடியாக அவனால் அந்த கீறல் பின்னங்களுக்கு மத்தியில் அந்த உருவம் அமைந்திருந்த இடத்தையும், அமைப்பையும் கண்டறியமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் பொழுதே வரதனின் குரல் அவனது எண்ணங்களைக் கலைத்து அவனை நிகழ்காலம் கொண்டுவந்தது.

வரதன் கையில் அமிர்தாவின் கைப்பையுடன் நின்றுகொண்டிருந்தான். அருகில் அமிர்தா குழந்தையை தூக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். இருவரும் கிளம்பத் தயாரானது போல இருந்தது. மணி நள்ளிரவு இரண்டைத் தாண்டியிருந்தது. பிரஞையடைந்திருந்த சங்கரன், இந்த அகால வேளையில் குழந்தையுடன் வெளியில் செல்வது உசிதமல்லவென்றும், இங்கேயே தங்கிவிட்டு காலையில் புறப்பட்டு செல்லுமாறும் வரதனிடம் கூறினான்.

சாத்தியமே அல்ல என்பது போல பெரிதாக தலையசைத்த வரதன், அதிகாலை எழுந்து அலுவலகம் கிளம்ப வேண்டுமென்றும் இங்கிருந்து செல்வதெல்லாம் அசாதாரணமென்றும் கூறி மறுக்கவும், அமிர்தாவும் அதையே ஆமோதித்தாள். குழந்தைக்கு ஏதுவாக இருக்காதென்றும், தாமும் மாற்று துணியென்று எதுவும் எடுத்து வந்திருக்கவில்லையாதலால் தற்போது கிளம்புவதே சரியாக இருக்குமென்றும் அமிர்தா கூறினாள்.

எவ்வளவோ நாட்களில் நள்ளிரவு ஒன்று, இரண்டு மணிகளுக்கெல்லாம் தாங்கள் வெளியில் சென்று இருப்பதாகவும், பயமொன்றும் இல்லையென்றெல்லாம் சமாதானம் கூறினாலும், சங்கரனுக்கு ஏதோ சரியாகப் படவில்லை. இருப்பினும் வரதனையோ, அமிர்தாவையோ அவனால் கட்டாயப்படுத்த முடியவில்லை.

வீட்டிற்குள் சென்று சமையலறையிலிருந்து, இரண்டு வரமிளகாய்களையும், பொட்டலமாகக் கட்டிய சிறிது கல்லுப்பையும் கொண்டுவந்து அமிர்தாவின் கைப்பையினுள் வைத்தான்.

இருவரும் அதை மறுக்கவில்லை.

சமயம் வாய்க்கும்பொழுது மீண்டும் வரும்படியும், ஓரிரு நாட்கள் தங்கிச் செல்லும் திட்டத்துடன் வருமாறும், வீடு சென்று சேர்ந்ததும் மறக்காமல் அழைத்து தகவல் கூறும்படியும் அன்புக்கட்டளையிட்ட சங்கரனை பாசத்துடன் தழுவிக்கொண்டான் வரதன். 

சங்கரனுக்கு கணப்பொழுதில் முன்பு சுந்தரராஜன் மாமா கட்டிக்கொண்ட போது அவர் கண்ணில் பட்ட அந்த உருவம், பிறகு அவர் அகக் கண்களால் கண்டும், கேட்டும் கூறிய விஷயங்களிலெல்லாம் ஒரு மின்னல்வெட்டு போல மனதில் வந்தது. தழுவிய வரதனைத் தேற்றி, கீழே வாசலுக்கு வந்து அனுப்பிவிடுவதாகக் கூறி சங்கரனும் உடன் வந்தான். மெதுவாக மூவரும் படியிறங்கி கீழே வர, உடன் கொண்டு வந்திருந்த சாவியுடன் முன்னே வந்து, வாசல் கதவில் மாட்டியிருந்த பூட்டைத் திறந்தான். 

கீழ்வீட்டில் பல மாதங்களாக யாரும் குடித்தனம் இல்லாததால் விளக்கேதும் இன்றி வெளிச்சமற்று இருந்தது.

இரண்டு கதவுகளில், ஒரு நபர் செல்லும் அளவிற்கான இடமிருக்கும்படி ஒற்றைக் கதவைத் திறந்தான். எண்ணெயிடாமலிருந்த அதன் இரும்பு இணைப்புகள் அந்த இருளைக் கிளிக்கும்படி கீரிச்சிட்டுக்கொண்டே நகர்ந்தது.

வரதன் முதலில் வெளியே சென்றவுடன் பின்னால் நின்றுகொண்டிருந்த அமிர்தா குழந்தையுடன் மெதுவாக வாசற்படியில் கால் வைத்து இறங்கினாள்.

இரண்டு படிகளையும் நடுவில் பிரித்தாற்போல அமைந்திருந்த சறுக்கலை அந்த இருளில் அமிர்தா கவனிக்கவில்லை. சட்டென்று ஒரு காலை பாதி படியிலும் மீதி சறுக்கலிலுமாக வைத்தவள் கால் இடறி முன்புறமாக சாயத் தொடங்கினாள்!

முகமோ, உடலோ கீழே மோதாதபடிக்கு கையை தரையில் ஊன்றிக்கொள்ள அனிச்சையாக எத்தனித்தபோது கையிலிருந்த குழந்தையின் நினைவு வரவே, விலக நினைத்த கைகளை சட்டென்று குழந்தையுடன் கட்டிக்கொண்டாள். இருப்பினும் முற்றிலுமாக தாங்குவதற்கோ, பிடித்துக்கொள்வதற்கோ வழியின்றி, சாய்ந்து விழும் மரக்கட்டை போல விழுந்துகொண்டிருந்த அமிர்தாவால் ஒரு கட்டத்தில் குழந்தையை பிடித்துக்கொள்ள முடியாமல் போனது. 

தன்னிலை மறந்து அவளது கைகள் குழந்தையை விட்டுவிட்டு கீழே விழும் உடலை தரையில் மோதாமல் காத்துக்கொள்ள விளைந்தது. 

தொப்பென்று விழுந்த குழந்தையின் பின்னந்தலை தரையில் மோதிய சத்தம் வரதனுக்கு அடிவயிற்றில் இழுப்பது போலிருந்தது.

ஐயோவென்று அதிர்ந்தபடி ஓடி வந்து குழந்தையை அள்ளி, தலையையும் முதுகையும் தடவி, அடியோ, காயங்களோ ஏதேனும் பட்டுள்ளதா என்று ஆராய்ந்தான். விழுந்த மாத்திரத்தில், குழந்தை வீறிட்டு அழுகத் தொடங்கியது.

பதறிப் போயிருந்த அமிர்தா குழந்தையின் முதுகில் தடவிகொடுத்துக் கொண்டும், ஆடைகளில் படிந்திருந்த மண், தூசிகளை தட்டிவிட்டபடியும் குழந்தையை சமாதானம் செய்துகொண்டிருந்தாள்.

சங்கரனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை! 

வரதனோ செய்வதறியாது குழந்தையின் உடல் முழுதும் தடவி, கண்ணுக்குத் தெரியாமல் ஏதேனும் காயம் பட்டுள்ளதாவென பார்த்துக்கொண்டிருந்தான்.

ஏதேனும் அடி பட்டுள்ளதாவென்றும், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாமென்றும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தான் சங்கரன். 

பதிலேதும் கூறாமல் இருவரும் குழந்தையை சமாதானம் செய்வதிலேயே தீவிரமாயிருக்க, மீண்டும் அதையே பதற்றத்துடன் சங்கரன் கேட்டான். 

குழந்தைக்கு அடியேதும் பட்டிருக்கவில்லையென்றாலும், கீழே விழுந்த அதிர்ச்சியில் அழுதுகொண்டிருந்தது.

பதட்டமடைந்திருந்த சங்கரனுக்கு கை, கால்கள் நடுங்கத் துவங்கின. கண்கள் ஒருவாறு சுழல்வது போல செய்தது. சுற்றிலும் நடப்பவை யாவும் செவிகளிலிருந்து விலகுவது போன்றதொரு பிரமை ஏற்பட்டது.

குழந்தையின் அழுகுரல், வரதனின் ஆரவாரம் என அனைத்தும் ஒலி மங்கிச் செல்வது போன்றதொரு உணர்வு தோன்றியது.

சற்று தடுமாற்றம் கொண்டவனாய், வரதனிடம் மீண்டும் பழையபடி, மருத்துவமனைக்கு செல்லலாமாவென்று கேட்ட சங்கரனின் குரல் தற்போது தொய்ந்து இருந்தது. முன்புபோல தெளிவாக இருக்கவில்லை. நா குழறியது. 

கேட்டுக்கொண்டிருந்த சங்கரனுக்கு பதிலளிக்க அங்கே யாரும் இருக்கவில்லை.!

பதறியடித்து குழந்தையை தூக்கிய வரதனையோ, அமிர்தாவையோ அவன் காணவில்லை. நடுநிசியில் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரலும் கூட சட்டென்று நின்றுபோயிருந்தது!

ஆம், உண்மையில் அங்கு யாரையும் தற்போது காணவில்லை!

சங்கரன் பேச்சற்று நின்றுகொண்டிருந்தான்!

சுற்றும் முற்றும் பார்த்தான்!

அவர்கள் மூவரையும் தேடி, தெருமுனை வரை ஓடிச்சென்று பார்த்த சங்கரனுக்கு யாரும் கண்படவில்லை. அவர்கள் சென்றதற்கான தடயங்கள் கூட இல்லாமல், குழப்பமாக இருந்தது. மீண்டும் வீட்டு வாசலுக்கு வந்த சங்கரன் எதுவும் புரியாமல் நின்றுகொண்டிருந்தான். 

தலையின் உச்சியில் ஆணி அடித்தாற்போல அப்படியொரு வலியை அதுவரை சங்கரன் கண்டதில்லை. மெல்ல படியேறி மீண்டும் தம் வீட்டிற்குள் வந்தான். முன்மாடத்தில் நின்றுகொண்டு தலையை தேய்த்துவிட்டுக் கொண்டான். 

ஏதோ கனவுலகிலிருந்து மீண்டவன் போல உணர்ந்தான். மெதுவாக வீட்டிற்குள் வந்தவன் கண்களில் பட்ட கடிகாரம் மூன்று மணியை காட்டிக்கொண்டிருந்தது. 

சங்கரனுக்கு மெதுவாக நிலைமை புரிந்தது. நடப்பது இன்னதென்று அறிந்துகொண்டவன் அதிர்ச்சியுடன் முன்மாடத்திற்கு ஓடினான். 

கிளம்பும் அவசரத்தில் சுந்தரராஜன் மாமா தவறவிட்டுச் சென்றிருந்த அவரின் தோல்செருப்புகள் இருந்தன!

பன்னிரண்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய மாமாவின் செருப்புகளை மூன்று மணிக்கு மீண்டும் காணும் சங்கரனுக்கு அவனது மூளை இன்னமும் நடந்தவற்றை ஜீரணிக்கும் நிதானத்தை தந்திருக்கவில்லை!

கால்கள் தளர்ந்து கீழே விழுந்துவிடத் துணிந்தான்!

தொண்டையும், நாக்கும் வறண்டு போயின!

நிற்க த்ராணியற்றவனாய் மாடத்தின் கைப்பிடித்தூண் மீது ஊன்றி நிமிர்ந்தவன் கண்களில் சில மணி நேரங்களுக்கு முன்பு மாமா காட்டிச்சென்ற உருவம் முன்பை விடவும் இப்போது பளிச்சென்று தெரிவது போல இருந்தது.

அதன் முகத்தில் தற்போது குரூரம் கூடியிருப்பது போலத் தோன்றியது!


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.