எதிர்மறை சோதனை வழக்கு

ஒரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிர், மற்றொரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிராவது எதைக் குறிக்கிறது? ஒரு கிரகம், தன் சாத்தியங்களுக்குள் ஒரு உயிரை உருவாக்க எத்தனை காலமெடுத்துக்கொள்கிறது? அந்தத் தயாரிப்பை, அந்த முனைப்பை, அதில் செலுத்தப்படும் உழைப்பை ஒரு தழுவு கருவி ஒரு  நொடியில் கடப்பது என்பது எதைக்குறிக்கிறது? இதன் பொருள் என்ன?

 தூண்டில் மீன்கள்

மீன் கிடைக்காத கோபமும் சேர்ந்துகொள்ள அவன் சாப்பிட உட்கார்ந்ததும், “புள்ளைக்கு வயசு ஏறிட்டே போவுதுங்க. இன்னும் எத்தன நாளுக்கு இப்பிடியே மீன் புடிச்சுட்டே வாழ்க்கய ஓட்டிட்டு இரிக்கலாம்னு நெனச்சுட்டு இரிக்கீங்க?  கல்யாணம் காச்சினு நாலு பக்கம் பொண்ணக் கூட்டிட்டுப் போவும்போது இப்பிடி மூளியாட்டம் கூட்டிக்கிட்டுப் போனா பாக்குறவங்க என்ன நெனப்பாங்க? யாராச்சும் பொண்ணு கேட்டு வருவங்களக்கும்? கொஞ்சமாச்சும் நகநட்டு பொண்ணு கழுத்துல வேணுமில்ல? செயிக்கிள் கடைலதா வருமானம் இல்லேனு தெரியுதுல்ல வேற ஏதாச்சும் வேலை பாக்கலாமல்ல? எவ்வளவுதா நாஞ்சொல்றது.

வேண்டத்தக்கது

அலசிப் பிழிந்து, சட்டத்தில் ஒரு பக்கம்  புடவையின் முனையில்  முடிச்சிட்டு உலர்த்திய மடிசார் புடவை திண்ணையின் சட்டம் போட்ட மறைப்பில் காய்ந்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு காற்று அசைவிற்கும் அழுத்தமான வெந்தய நிறமும், சிவப்புக்கரையும், நடுவில் இடதும் வலதுமான வரிகளும் கொண்ட தேவேந்திரா ஒன்பது கஜம் புடவை  கொடியைப்போல படபடத்தது.

இலக்கிய ஏஜெண்டுடன் ஒரு சந்திப்பு 

கதாநாயகன் யாரு? அனாதயா சென்னைக்கு வந்து, பாத்திரக்கடைல வேலை பாத்து, அடி ஒதயெல்லாம்பட்டு, துபாய் போய் சம்பாரிச்சி, பெரிய ஆளாகி, சிங்கப்பூர்ல போய்ப் பாத்திரக்கடை வைக்கிறாரா? அப்புறம் பெங்களூர்ல கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்கிறாரா? தமிழ் மீடியத்துல படிச்சவங்களுக்கு மட்டுந்தான் வேல குடுக்கிறாரா? தீம் ரொம்ப நல்லாருக்கே! இப்டில்லாம் பாசிட்டிவ்வா எழுதினாத்தான் இளைஞர்க படிக்கிறாங்க.

வளர்ப்புப் பிராணி

நான் நாயின் மூச்சை எண்ணிக்கொண்டிருந்தேன். ஒன்று. இரண்டு. மூன்று. ஒரு கட்டத்தில் எண்ணுவதை விட்டுவிட்டேன். எண்ணுவது பயமாக இருந்தது. அடுத்த நாள் காலை நாய் எழவில்லை. அப்பா தூக்கினார். எடை இல்லை. உயிர் போன உடலுக்கு எடை இருக்காது. அப்பா அதைத் தோட்டத்தின் பின்புறம் புதைத்தார். பெரிய குழி இல்லை. நாய்க்கு பெரிய இடம் தேவையில்லை. அம்மா அருகே வரவில்லை.

பொய்

‘இப்ப  இந்த அறுவது கல்யாணம் அவசியமா. எனக்கும் தான் அறுவது வந்துது. நானும் ஆச்சியும் திருக்கடையூர் பஸ் பிடித்துப்  போனோம். காதும் காதும் வச்சமாதிரி சுப காரியத்த முடிச்சிகிட்டு வூட்டுக்கு  வந்தம்.ஒரு பாயசம் வச்சம்  வாழ எல போட்டு சாப்டம்.  பெரிய செலவு எதுவும் இல்ல. ஆனா கடன் வாங்கியாவது  இப்ப இந்த மணிவிழாவை செஞ்சிகிணுமா’

எது தர்மம்?

அந்தச் சந்தோஷத்தை அனுபவிக்க விடாமல் தடுப்பதற்கு என்றே பேருந்து நிலையங்களில் அலையும் விசித்திரமான மனிதர்களுள் ஒருவகையான ” பர்ஸ் தொலைஞ்சு போச்சு நூறு ரூபாய் குடுங்க. உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்” என்று போதை வீச்சம் அடிக்க உங்கள் தோள்களைச் சுரண்டும் மனிதன் என்னையும் சுரண்டினான். ஏதோ ஒரு பெண்ணின் தோளையும் சுரண்டியதால் அவனைக் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பேருந்திலிருந்து இறக்கிவிட்டனர்.

யதேச்சையின் தாட்சண்யங்கள்

அந்தப் பெண்ணின் முகம் எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அவர் அணிந்திருந்த ஆடை நினைவில் இருக்கிறது. பார்த்தால் அவர் முகத்தை அடையாளம் கண்டு விட முடியும். ஒரு வேலை அந்தப் பெண் இது என்னுடையது இல்லை என்றால் என்ன செய்வது என்ற சிந்தனை வந்ததும் நாப்கினை அழுத்தாமல் அதன் எடையை அவதானிக்க முயன்றேன். அது பஞ்சு மெத்தையைப்போல இலகுவாகக்தான் இருந்தது.

சுழற்பிரயாணம்

நான் எனது அனைத்து கட்டுகளும் அறுபட, மூச்சு திணற “இங்கு நடப்பது ஆசிரமம் அல்ல. பணம் மற்றும் அதிகாரத்தை உருவாக்கும் ஒரு இடம். அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் மிஸ்டர் லீ-யைக் கொண்டு நாம் வடிவமைக்கும் கட்டிடம் மனிதர்களை ஏமாற்றி பணம் பிடுங்க. இதுவா நான் பன்னிரெண்டு ஆண்டுகளாக இங்கிருந்து சென்று அடையும் இடம்?” என்றேன்.

பரகாயம்

ஒரு உளவியல் மருத்துவராக என்னால் இதை நம்ப முடியவில்லை என்றாலும் என் கண்கள் பார்த்து மூளை உணர்ந்து பதிவு செய்த அந்த ஒரு நொடிக் காட்சி உண்மை நிகழ்வு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதனை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி அவரை இன்னொரு முறை செய்து காட்டச் சொன்னேன். கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தேன். மீண்டும் பத்மாசனம். பாபா முத்திரை. ஏதோ புரியாத தமிழில் மந்திர முணுமுணுப்பு. வலிப்பு வந்தது போன்ற முகக் கோணல். இப்போது ஓரளவு தெளிவானது

மௌனத்தின் சுமை

தன் வேலைகளில் அவளுக்கு இலேசில் திருப்தி வருவதில்லை. எதையும் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவாள். ஆனாலும், கடைசி நேரம்வரை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பாள். என்றாலும்கூட, அவளின் அந்தப் பழக்கம் அவள் பாடசாலையில் இருந்தபோது எந்தப் பிரச்சினையையும் அவளுக்குக் கொடுக்கவில்லை. எப்படியோ நிறையப் புள்ளிகளும் பாராட்டுகளும் வாங்கிவிடுவாள். பல்கலைக்கழகத்துக்குப் போனபின் அது எப்படிப் பிரச்சினையானதென்று எனக்கு விளங்கவேயில்லை.

சரணாகதி

அன்பு, பிரியம், பக்தி கலந்து அவன் “கிருஷ்ணை” என்று அழைக்கும்போது, அவள் உணர்வு நரம்புகள் மீட்டப்படும். அவள் மனக்கொடியில் “கிருஷ்ணை” என்ற அவன் வாய்ச் சொல் மலர்ந்து மலர்ந்து தேன்வடிப்பதை, ரகசிய மணமாய் நுகர்வாள். ஆனாலும் அவள் சக்கரவர்த்தினி அல்லவா? அவளால் காதல் படிக்கட்டில் இறங்க முடியாது. அவளால் இறங்க முடியாது என்பதால், இவனால் ஏறவும் முடியாது

பஞ்சமி

திகில் படங்களைக் கூட பார்க்கத் திராணி இல்லாத பரிமளாவால் பேயைப் பார்ப்பது, அதனால் துன்புறுத்தப்பட்டு மாண்டு போவது என்றெல்லாம் யோசிக்கவே பேரச்சமாக இருந்தது. மரணம் நிகழும் நாளென ஓலையில் குறிப்பிட்டிருந்த திதியான பஞ்சமி என்ற பெயரே அவளுக்கு ஏதோ அமானுஷ்யமான வார்த்தையாகத் தோன்றியது. 

ஒரு மிசோஜினிஸ்ட்டின் உளுந்த வடை

அரவிந்தன் என்னைப் பார்த்து கை கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தானா? என்ன திமிர்! அவன் கையைப் பிடித்து முறுக்கி கன்னத்தில் ஓங்கிக் குத்திக் கொண்டிருந்தேன். ஆனால், பெட்டிக் கடை அண்ணாச்சி தடுக்கவேயில்லையே! ஏன் சிரித்துக் கொண்டிருந்தார்? ‘இவன் என்ன பெரிய இவனா? எனக்கு அறிவுரை சொல்ல இவன் யாரு? சின்னப் பய? அவன் கத என்னன்னு வீட்டுல பாத்தாதான தெரியும்.

காணுமாறு காணேன்

சுந்தரம் புன்னகைத்தார். அப்புறம், மெல்லக் கையை உயர்த்த முயற்சி செய்து, ராமசாமியையும், தமயந்தியையும் இன்னமும் அருகே வருமாறு அழைத்தார். படுக்கையில் இருந்த அவருடைய விரல்கள், அவர்களது கைகளைத் தொட முயன்றன. இருவரும் முன்னே நின்று, அவர் கரங்களைப் பற்றினர். மிகுந்த சிரமத்துடன், சுந்தரம் சில வார்த்தைகளைக் கோர்த்தார். “சாம்பியன்ஸ்…” ஏதோ நினைவுகள் மனத்தில் ஓடின.

ஜீவநதி

தனிமைக்கூட்டினுள் உடல் ஒடுக்கி வாழும் நோயுற்ற  பட்சியென பின்வந்த நாட்களில் மாறிப்போனாள் சிவகாமி கிழவி. தெருவாசிகளும் அவள் விழிகளைச் சந்திப்பதை ஏனோ தவிர்க்கத் துவங்கினர். ஆனாலும் கிழவி இறப்பது வரை அங்கு நடந்தேறிய அனைத்து சுபநிகழ்வுகளும் அவளது ஆசியுடனே துவங்கியது. அவளும் ஒவ்வொருவரையும் கண்களில் நீர் வழிய மனதார வாழ்த்தி வந்தாள்.

எழுகை

பூஜ்யத்துக்கும் குறைவான பாகை குளிர்காற்று, சாலையில் குவிந்திருந்த பனிப் பரப்பின் தளர்ந்த மேற்பகுதியை அளைந்துகொண்டிருந்தது. பனியின் ஒளிரும் வெண்மையும், அலங்கார விளக்குகளின் வெளிச்சமுமாக நகரமே ஏதோ கனவுக்குள் மூழ்கிக்கிடப்பதைப் போலவும், புரதான காலத்தில் நிகழும் கிறிஸ்துமஸ் சித்திரப் படக் கதைக்குள் வரையப்பட்ட வண்ண ஓவியங்களின் தோற்றத்தையும் ஒத்திருந்தது.

மரணப் புன்னகை 

வேகமாக நடந்து அவரிடம் சென்றதும் விஜுவை எடுக்க வேண்டும் உள்ளே வாருங்கள் என்றார். கையில் பிடித்திருந்த பையை பிணவறையின் வெளிப்புற வாசல்படிமேல் வைத்துவிட்டு நேராக ஜஸ் பெட்டிகள் இருந்த அறைக்குள் நடந்தேன். விடியற்காலையில் கொண்டு வைத்த பெட்டி கூட்டத்தில் சில பேருக்கு பிடிக் கிடைக்காமலிருந்தாலும் சுரேஷ் அண்ணன் இது தான் பெட்டி என்று சரியாகப் பார்த்துச் சொன்னான்.

நிழல்களின் ஓலம்

முகப்புக் கண்ணாடியில் படர்ந்திருந்த நீர்திவலைகளின் நிழல்கள் தனது புறங்கைமேல் புள்ளிகளாய் அதிர்வதை, புழுக்களாய் நெளிவதைக் கண்ட முத்தப்பன் அரைக்கணம் விழிமூடி பெருமூச்செடுத்தான். பிறகு அவர் யாராக இருந்தாலும், அவரது நோக்கம் எத்தனை இருண்டதாக இருந்தாலும், இந்த சில நிமிடங்களை சகித்துக்கொள்வதே உகந்தது என்கிற முடிவை நிர்மாணித்து ஸ்திரப்படுத்திக் கொண்டான். இவரையும், இச்சூழலையும் விட்டு அகன்ற கணமே அகத்தின் அனைத்து நமைச்சலும் மறைந்துவிடும்.

தீர்ந்த கடன்

திலகா, உறங்கும் நேரம் தவிர எப்போதும் அமர்ந்த நிலையில் கைகளால் தரையை தட்டியபடியே இருப்பாள். அதனால் கைகள் காய்த்து தடிமனாக இருக்கும். எப்போதாவது கோபத்தில் கையை ஓங்கி அடித்தால் ராமினால் கூட தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். கோபத்தினால் மட்டுமல்ல செவியில் கேட்கும் ஏதேனும் சத்தம், நாசியைத் துளைக்கும் வாசனை போன்றவற்றால் சிலவேளைகளில் நிலையழிந்து ஒருவித பதட்டத்துடன் இருப்பாள்

மனசுப் போல

‘என்ன தப்பு செய்தோம்னு இப்பிடி தண்டிச்ச கடவுளே’ என்று  அவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் இதற்கெல்லாம் பதில் சொல்பவரா என்ன. துளசிப்பிரசாதம்  வங்கிக்கொண்டேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஆஞ்சனேயரை வலம் வந்து  தரை வீழ்ந்து வணங்கினேன். பிரசாதம் புளியோதரை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாழைச்சருகு தொன்னை.  இரண்டு இரண்டு என நான்கு கப்கள் வங்கிக்கொண்டேன்

நம்பிக்கை

அந்த அறையில் தான் பஜனை நடக்கும். கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். நிறைய அற்புதங்கள் நடந்திருப்பதாக அக்கம் பக்கத்தில் பேசுவார்கள். படங்களில் அவ்வப்போது மஞ்சள்நிறப் பொடி கசிவதும்  உண்டு. கணேசன் பார்த்தது இல்லை. ஆனால் நம்புவான். அவனுக்கு சிறுவயதில் இருந்தே மகான்களிடத்தில் நம்பிக்கையும் ப்ரேமையும் உண்டு.

காட்டுத்தடம்

எங்களுக்கு முன்னால் தூக்குக் கயிற்றைப்போல் ஆலமர விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்தது. பாதி உயிர் அதைப் பார்த்தவுடனயே போய்விட்டது. மீதி உயிர் போகும்படி விழுதுகள் தொங்கும் கிளைக்கு மேலுள்ள கிளையில் வடக்குப்பார்த்து அமர்ந்திருந்த ஆந்தையொன்று தன்னுடலை துளிகூட அசைக்காமல் தலையை மட்டும் திருப்பி தென்புறமாக விழுந்த எங்களை முண்டக்கண்ணை விரித்து இமைத் தட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பார்வை எங்களின் தலையை முதுகுப் பக்கமாகத் திருகி கொண்டை முடிச்சினை முறித்துக் கொல்வது போலிருந்தது. 

மாபெரும் சூதாட்டம்

‘’அரசே ! பகடையாட்டம் என்பது ஓர் அவதானம். நம்மால் எப்போதும் முற்றிலும் அறிய முடியாத எப்போதும் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத பெருஞ்சிக்கல் ஒன்றினை அறிய முயல்கிற புரிந்து கொள்ள முயல்கிற ஓர் முயற்சி. இதில் ஆடும் நபர்கள், ஆடும் குழுக்கள், பகடைக்காய்கள், பணயப் பொருட்கள் அனைத்துமே அறிய முடியாத பெரும் சக்திகளின் பாவைகளே. பகடையாடுபவன் அறிய வேண்டிய முதன்மையான விஷயம் இது’’

தாரகேஸ்வரி

ஏதோ ஒரு வேலையில் தீவிரமாக ஆழ்ந்திருந்தாலும் முதல்வரின் பார்வை  இடையிடையே வெளியே நிற்பவர்களையும் தொட்டு மீளாமல் இல்லை. ஆனால் அதில் எங்களைக் கண்டுகொண்ட பாவனையோ, அறைக்குள் வரச்சொல்லி அழைக்கும் சைகையோ கொஞ்சமும் இல்லை. மனதுக்குள் சுழன்று கொண்டிருக்கும் முக்கியமான ஏதோ ஒரு சிந்தனையையே அந்த முகம் வெளிப்படுத்திக்கொண்டிருந்ததால், எங்கள் மீது அவ்வப்போது படியும் அவரது பார்வை , இலக்கற்ற வெற்றுப்பார்வை மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

யாமார்க்கும் குடியல்லோம்

சுவரோடு சுவராய் ஒட்டியிருந்தவன் அதிலிருத்து மெல்ல விலகித் திரும்பிப் பார்க்காமல் கைகளை விரித்தபடியே பின்னோக்கி நடந்தான். அவனது கால்கள் மட்டுமே அசைந்தன அதுவொரு சிலைக்கு உயிர் வந்து நடப்பதைப் போல் இருந்தது. அறையின் மறுமுனையை அடைந்தவன் வேகம் கொண்டான், பாய்ச்சலுறும் விலங்கைப் போல முன்னோக்கி விரைந்தான். தனக்கு முன் சுவர் உள்ளது என்பதை அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை.

வேலையை விரும்பிய தருணம்

நான்கு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு தயாராக இருக்கும்படி உத்தரவு வந்தது. குளித்துவிட்டு கம்பெனி சீருடையை அணிந்து தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். ‘நல்லாத்தானேடா இருக்க’ என்று தன்னையே பாராட்டிக் கொண்டான். நுனி விரலில், தண்ணீரில் குழைத்த வீபூதியைத் தொட்டு இரு புருவங்களுக்கிடையே நீட்டினான். ‘ஈரத்துல தொட்டு வெச்சா, ரொம்ப நேரத்துக்கு இருக்கும்’ சூப்பர்வைசர் முந்தின நாள் இரவே சொல்லி வைத்திருந்தார்.

டோண்ட் கேர்

டோண்ட் கேரால் நம்பவே முடியவில்லை!. பொடி நடையாகவே அவர், ‘யான உழுந்தான் பாசா’ பக்கம் வந்திருந்தார். தனது அப்பா காலத்தில், இந்தப் பாசாவில் யானை ஒன்று விழுந்து மேலே ஏறி வர முடியாமல் நாளெல்லாம் பிளிறிக் கொண்டிருந்ததாம்!. வனத்துறை ஆட்கள் வந்தே அதைக் காப்பாற்றினார்களாம். அன்றிலிருந்து அது ‘யான உழுந்தான் பாசா’ ஆகிப்போனது. அன்று, அங்கே பாஷாணம் அடிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. சந்தனசாமிதான் கங்காணி!.  டோண்ட் கேரைப் பார்த்ததும் கையசைத்து நட்பைக் காட்டினான்.

கண்ணாடி ஷோகேஸ் – காற்றில் உருகும் கனவுகள்

ஒருகாலத்தில், பாலு காவேரி என்ற பெண்ணை காதலித்தான். அது இரண்டு குடும்பங்களுக்கும் இடையே புயலை கிளப்பியது; சண்டைகள், வாக்குவாதங்கள், உறவுகள் முறிந்தன. அந்தச் சமயத்தில், நடுவில் நின்று சமாதானம் செய்து, அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தவர் சுந்தரம் தான். அந்தக் காலத்தில்– அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்; “சுந்தரம் சொன்னார்” என்பதே முடிவாக இருந்தது.

சுழல்

களவு போன வண்டியை சரியாய்  இன்சூர் செய்து வைத்திருந்தோமே என்று  அந்தக் காகிதங்களை எடுத்துக்கொண்டு நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் போனேன். அது நகரின் பிரதான லாரன்ஸ் சாலையில் இருந்தது. அங்கு ஒரு அம்மா நடுத்தர வயது இருக்கும்.  அவர்கள்தான் டூ வீலர் இன்சூரன்ஸ் கிளையிமுக்கு பொறுப்பாக இருந்தார்கள். அவர்கள் கொடுத்த ஃபாரத்தை யெல்லாம் ஃபில் அப் செய்து கொடுத்தேன். ஆர் சி புக் செராக்ஸ்   இன்சூரன்ஸ் ஒரிஜினல் எல்லாம் சமர்ப்பித்தேன்.

கத்தி வீரன் கதை

ஓர் நாக்கு பூச்சியை போல இருந்த என்னை கண்டு அப்பா ஏன் ஓடினார் என்பது யாருக்கும் இன்னமும் புரியாத புதிர். இதெல்லாம் நான் ஏதோ மற்றவர்கள் என்னிடம் சொல்லி நான் உங்களிடம் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். எனக்கு சிறு வயதில் ஞாபக சக்தி மிகவும் அதிகம். இப்போதுதான் பொண்டாட்டியின் பிறந்த நாள் மறந்து தொலைக்கிறது. இந்த சிறு வயது சம்பவம் எல்லாம் அப்படியே தொல்லைக்காட்சியில் ரிப்பீட்டில் பார்த்தது போல இன்னும் நினைவிருக்கிறது.

மலரிடுதல்

ஒரு வாழ்க்கை முடிந்துவிட்டது என எனக்கு அன்று புரியவில்லை. எல்லோரும் நினைப்பொழிவார்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை. மெல்லிய அவ்வப்போது வந்துபோகும் நியாபகமாகத்தான் என்னில் எஞ்சப்போகிறாள் என்பதையும் அன்று நான் அறியவில்லை. இவ்வளவு கறாரான ஒரு நிகழ்வாக மரணம் இருக்க வேண்டுமா என இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

இறுதியே இயைவது ஆனால்

சங்க இலக்கியத்தின் பெண் சொல்கிறாள்… வாயால் நல்லதென்று சொல்கின்றேன், ஆனால் உடம்பு நல்லதில்லேன்னு காட்டுகிறது…. குடாகேசன்  கண்கள் விரிய, குரல் துள்ள விளக்கினான்.  இயற்பியல் உனக்கு அப்படித்தான்… படிக்கிறேன்னு சொல்கின்றாய், ஆனால் உன் சோர்வான முகமும், தளர்ந்த தோள்களும் கஷ்டமா இருக்கிறது என சொல்லுது  இல்லையா?,  குடாகேசன் கேட்டான்.

கண்ணன் காட்டிய வழி

“உன் உயிர் நண்பன், மதனி அவனை சொந்தச் சகோதரனாகத்தான் கருதுகிறாள். நம் மகள் கிருஷ்ணை என்னை விட, ஏன் உன்னை விடவும் கூட அவனைத்தான் தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள். அவன் எப்படி நமக்கு துரோகம் செய்யத் துணிந்தான்? அவன் என்ன அவமானம் ஏற்பட்டாலும் சரி என்று பீஷ்மரின் கீழ் போரிட்டிருக்க வேண்டும். முதல் நாள் போரில் அவன் பாண்டவர்களில் ஒருவரைக்  கொன்றிருந்தால் போர் அத்தோடு முடிந்திருக்கும். நாம் இன்றும் நூற்றுவராக இருந்திருப்போம்”

ஆறாவது லார்ஜ்

கதிர்வேலனின் கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்லாமல் அப்பா இப்படித்தான் அதிரடியாகப் பேசி அவனை  வாயை மூட வைப்பார். இருந்தும், கதிர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைக் கிடுக்கிப்பிடியான  கேள்விகளோடு திணறடிப்பான். மாறாக இளங்கோவை அப்பா சர்வ சாதாரணமாக வாயடைத்துவிடுவார்.

நட்சத்திர இரவு

அந்த நிசப்தம் அவன் காதுகளில் ஒலித்தது. மௌனமும் ஏதோ சொல்கிறது என்பதை அவன் உணர்ந்தான்.  மொழிக்கு தான் அர்த்தம் உள்ளதா என்ன?  மௌனங்களும்  அர்த்தங்களால் நிரம்பியுள்ளது. இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வரும் ஒரு ஆழ்ந்த மௌனம் போல. சொல்லப்படாத உணர்வுகள், கேட்கப்படாத கேள்விகள், கிடைக்காத பதில்கள் என அனைத்தையும் அந்த மௌனம் சுமந்து நிற்கிறது

மாதவரே…

ஒரு மனிதனானவன் அவனது ஸ்துால உருவம், புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாக இருக்கிறான். ‘நான் இருக்கிறேன்’ என்கையில் மனிதனால் குறிக்கப்பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப்பொருள் அல்ல. ஸ்கந்தங்களின் கூட்டுறவினாலேயே அந்த ‘நான்’ தோன்றுகிறது. மானுடனின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட தனித்த ஆன்மா என்ற எதுவுமில்லை. ஒரு பொருளையும் அதன் குணத்தையும் நாம் நம் கருத்தால் பிரித்து பார்க்க முடிகிறது. ஆனால் பிரத்யட்சத்தில் அவ்வாறு பிரிக்க முடியாது.

அடுத்த பரிணாமம்

“கடவுள் குறித்த ஆதாரம் காட்டுவதாகத்தான் அழைக்கப்பட்டோம். ஆனால், ஒரு பூஞ்சையைத்தான் பார்த்தோம். கடவுளையோ, அவரின் இருப்புக்கான ஆதாரமென்று எதையுமோ பார்க்கவில்லையே. பூஞ்சை தான் கடவுள் என்றெல்லாம் கதை விட மாட்டீர்கள் என்று இன்னமும் நம்புகிறேன் ” என்றாள் மட்டில்டா ஆர்வம் தாளாமல்.

அவர் அவர் எச்சத்தால் காணப்படும்

“உன்னை மாதிரி எல்லா காபிடலிஸ்ட்களும் இருந்தா, மார்க்ஸ் ‘டாஸ் காபிடல்’ எழுதி இருக்க மாட்டார். இப்ப… ‘வென்டிஸ்’ல வேலை செய்யறவன் அதிக சம்பளத்துக்கு ‘மெக்டனால்ட்ஸ்’ போனா தொழில் ரகசியத்தை கடத்திண்டு போயிடறான்னு அதைத் தடுக்கலாம். அது மாதிரி இன்னும் பல வேலைகள். நாங்க இருக்கற கட்டடங்களை மெய்ன்ட்டெய்ன் பண்ணற ஆட்கள் கூட சுலபத்தில வேலை மாற முடியாது.

கம்பளிப் பூச்சி

எரிப்பது அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அந்த மரத்தின் எச்சங்களை முற்றுமாக அழிப்பது முக்கியம். அதன் கதை முடிந்து விட்டது. அதற்கு எரித்தல் ஒரு சுலபமான வழி அவ்வளவுதான். இதைக் கணேஷுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியுமா? 

அலையோட்டம்

இப்படித்தான், இவனுக்குள் ஊறும் எந்தக் கேள்விக்கும் அவ்வப்போதே பதில் கிடைக்காது. பார்க்க வரும் யாரிடமாவது சாமி பேசுவதைக் கூர்ந்து கவனித்து எடுத்துக்கொள்ள வேண்டும்;  பள்ளிக்கூடக் கேள்வித்தாளில் இருக்கும் ‘பொருத்துக’ பயிற்சி மாதிரி, இவனாகக் கேள்விகளையும் பதில்களையும் பொருத்திக்கொள்வான். சிலசமயம் பதில்களிலிருந்து கேள்வி உதிப்பதும் உண்டு… 

மீன்

நாகேஷ் மெதுவாக, “மாப்பிள்ளை கொஞ்சம் முரடரா,” என்றார் பாவனாசத்திடம். “அதெல்லாம் இல்லை, அவன் கொஞ்சம் பயந்து போயிருந்தான், பொண்ணு நல்ல லட்சணமா, வாட்ட சாட்டமா இருக்கா அதனாலோ என்னவோ அவனுக்கு  கொஞ்சம் காம்ப்ளெக்ஸ்,” என்று சொல்லிக் கொண்டே விரைந்தான். 

காண்பதுவே உறுதி கண்டோம்

எனக்கென்ன தோன்றுகிறது என்றால்…ஒருவருடைய நிலை, ஆளுமை நியாயவாதியா, பொய்யரா என்பது அனிச்சையாகத்தான், நிகழும் அந்த கணத்தில்தான் தெரியவரும்…கொஞ்சம் மாற்றிச்சொன்னால்…யோசிக்க நேரம் எடுத்துக்கொண்டாலே தங்களுக்கு ஏற்ப, சூழ்நிலைகளை ஆராய்ந்து தக்க எதிர்வினை செய்யலாம் என்றாலே ஒரு மாதிரி நீர்த்து போய்விடுகிறதோ என்று படுகிறது…”

ஒலிமுகவாசல்

அந்தச் சிறு அவகாசத்திற்குள் அவன் அந்தப் பெண்ணைக் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தான். அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களா, தரையில் கொள்ளையடிப்பவர்களா என்பதில் அவனுக்கு ஒரு குழப்பம் இருந்தது. கொள்ளைக்காரர்களை விரட்டி விட்டு, அவளது சிவிகையை ஒற்றைத் தோளில் சுமந்து அரசரிடம் ஒப்படைத்து இருந்தான்.

தோட்டத்தின் நடுவில் இரு மரங்கள்

ப்ரபஞ்சம் முழுதையும் படைத்த கர்த்தர், பரலோக ராஜ்ஜியத்தைத் தான் ஆண்டுகொள்வதாகக் கூறி, பூமியை இவர்கள் ஆண்டுகொள்ளும் உரிமையை அளித்திருந்தார். இவர்கள் இருவரும் வசிப்பதற்காகவே இந்த ஏதேன் தோட்டத்தை உருவாக்கினார். சுற்றிலும் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களும், செடி கொடிகளும் உண்டாயின. தோட்டத்தின் நடுவில் ஜீவ விருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார்

பைசாசம்

சதா சர்வகாலமும் காதில் குறி சொல்லிக்கொண்டே இருக்குமொரு “கர்ண யக்ஷினி” தம்மிடம் இருந்ததாகவும், அதன் இடையறாத குரல்களைக் கேட்டு, தம்முடைய இடப்பக்க செவி, கேட்கும் திறனற்றுப் போனதாகவும், பிறகு தமது குருநாதரின் உதவியுடன் பெரும் ப்ரயத்தனப் பட்டு அந்த யக்ஷிணியை தம்மிடமிருந்து விடுவித்துக் கொண்டதாகவும் ஒருமுறை சங்கரனிடம் கூறினார்.

சம்பந்தம்

நான் ஒரு செயல் செய்தால், அதுக்கு உலகம் ஒன்றை திருப்பி செய்யுது. என்ன திரும்பச் செய்யும் என்பது என் கையில் இல்லை, அது எனக்கு பிடிச்சதாகவும் இருக்கலாம், பிடிக்காமலும் போகலாம்… நான் அதில் எது வந்தாலும் அதில் நிற்கனும்…”  அவன் கண்கள் ஒரு நொடி கலங்கி தெளிந்தன. அவன் திரும்பி மாலியை பார்த்தான். அடுத்த நொடி அவன் முகம் பழைய நிலைக்குத் திரும்பியது. ”சாரி உங்களை குழப்புகின்றேன். நான் என் பர்சனல் மம்போ ஜம்போவை எங்கள் தீவின் விருந்தினரிடம் சொல்லி விட்டேன். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நான் பார்த்துப்பேன்

மின்மினிகள்

காரில் அமர்ந்து ராஜாவாக சவாரி போகிற கற்பனை அவனுக்குள் செத்து விழுந்தது. உடம்போடு மனமும் சேர்ந்து இடிபட, கால்களுக்கு நடுவில் நசுங்கிக் கொண்டு உட்கார்ந்தான். காரின் ஜன்னல் வழியே பார்த்தால் வானமும் மேகமும்தான் தெரிந்தன. பஸ்ஸில் போனால் ரோட்டோர மரங்களும் மக்களும் பின்நோக்கி வேகமாகப் போவார்களென்று கேட்டிருந்ததெல்லாம் ஞாபகம் வந்தது. எக்கினால் வெளியே பார்க்கலாம். ஆனால் உட்கார்ந்திருப்பவர்களின் முழங்கால்களை இடித்துக்கொண்டு எழுந்திருக்கவேண்டும். ‘உட்காரு, உட்காரு’ என்று முதுகில் அழுத்தி, கீழே மீண்டும் உட்கார்த்திவிட்டால் இன்னும் அவமானம். ‘நடந்தே வந்திருக்கலாம். கஷ்டம்தான், இருந்தாலும் இப்படி கூனி குறுகுவதற்கு அந்த கஷ்டமே பரவாயில்லை.’

சுழற்சி

வள் புறஒலிகளை இரத்து செய்து விட்டு காதுகளைக் கூர்ந்தாள். அய்யோ… என்னதிது? என்னவாயிற்று உனக்கு? குரலற்றுப் போனதா உன் சொற்களுக்கு? நண்பனே… என்ன வேண்டும் சொல். உனக்கென்ன வேண்டும்? எனக்கென்ன வேண்டும்? நமக்கென்ன வேண்டும்… சொல்… அய்யோ… என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்லையே. அவள் கண்களில் நீர் வழிந்தது. அலைகளின் நாவுகள் ஒன்றின் பின் ஒன்றாக கரையை மோதி ஒலிகளற்று பின்னகர்வதை அவள் இதுவரைக் கண்டதில்லை.

வெளிச்சம்

“ஒரு சில கருந்துளைகள் நமது அண்டத்தில் உள்ளன. அவை நமது பூமியிலிருந்து பல இலட்சம் மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றைப் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அறிவியலாளர்களுக்கே இவற்றைப் பற்றிய முழு புரிதல் தற்போது இல்லை. ஆனால் இப்படி அண்டப் பெருவெளியில் தோன்றும் கருந்துளைகள் கோள்களையும் நட்சத்திரங்களையுமே கூட விழுங்க வல்லன” என்றார்.