கார் கிளம்பியதும்,
“டாக்டர் குஞ்சுமணிக்கு என்மேல பொறாமை” என்றார் வேல் ரெட்டி.
அனிகா தன் தொழிலில் செய்வதுபோல தந்தையின் வார்த்தைகளில் குறுக்கிடாமல் அவர் தொடர்ந்து பேச முகத்தில் சுமுகம் காட்டினாள். சென்ற ஆண்டு வேலையில் இருந்து விலகும்வரை டாக்டர் குஞ்சுமணி தந்தையின் பெர்சனல் ஃபிஸிஷியன். அது எந்த உடல்நலப் பிரச்சினைக்கும் முதலில் அணுகும் மருத்துவர் என்பதைக் குறித்தாலும் அதற்குமேல் அவர் ஒரு அந்தரங்க நண்பர். ஒவ்வொரு சந்திப்பிலும் உடல்நிலையை விட வாழ்க்கை விவரங்களைத்தான் அதிகமாக விவாதிப்பது வழக்கம்.
‘என்னோட சிநேகிதர் பாஸ்கர் பணிக்கரோட பையன், அனிகா கிட்ட ஆலோசனை கேட்டுட்டு வந்து அவளுக்கு ஒரு நீளமான புகழ் மாலை எழுதி இருக்கான். படிச்சுப்பாருங்கோ!’
‘டாக்! உங்க பையன் அஜய் பேர் செய்திகளில நிறைய அடிபடுதே.’
‘அதனால அவனுக்குக் காயம் படாம இருக்கட்டும்!’
“நாங்க நித்யாவைப் பார்த்துகிட்டு இருக்கற மாதிரி அவருக்கும் பேரக்குழந்தைக பக்கத்தில இருக்கணும்னு ஆசை. அஜய்க்கு வாஷிங்டன்ல பரபரப்பான வேலை. ‘ரெண்டு குழந்தைகளையும் பார்த்துக்க வீட்டோட ஒரு நான்னி வச்சிருக்கோம். நீங்க எதுக்கு அலட்டிக்கிறீங்க?’ன்னு சொல்லிட்டான்.”
அதனால் ஊரைவிட்டு சற்றுத் தள்ளி முதியோர் குடியிருப்பில் ஒரு கச்சிதமான வீடு.
நுழைவிடத்தில் நிறுத்தி டாக்டரை அழைத்ததும் வாசல் கதவுகள் பிரிந்து அவர்களுக்கு வழிவிட்டது. வீட்டை நெருங்குமுன்பே குஞ்சுமணியும் அவர் மனைவியும் முன்பாதையில் காத்திருந்தார்கள்.
“வாங்க! வாங்க!”
டாக்டரின் மனைவி ராஜி, காரின் பின் கதவைத் திறந்து இறங்கிய அனிகாவின் குழந்தை, நித்யா – இவர்களின் அறிமுகம்.
“எங்களைத் தனியா அனுப்ப அனிகாவுக்கு பயம். எங்க எல்லாருக்கும் துணை நித்யா.”
“நீங்க நாலு பேரும் வந்ததில எனக்கு ஒரே சந்தோஷம். ஆனா… அனிகாவையும் நித்யாவையும் நான் எப்படி என்டர்டெய்ன் பண்ணப்போறேன்?”
“உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம், அங்க்ல்! தொழிலில் உங்களுக்கு இல்லாத தொந்தரவு இப்போது எனக்கு. சில வருஷங்களுக்கு முன்னால ‘க்ளவுட்லெஸ் ஸ்கை’ என்கிற மென்ட்டல் ஹெல்த் க்ரூப்லேர்ந்து ஒருவன் என் ப்ராக்டீஸை வாங்க வந்தான். நான் மறுத்துட்டேன். என்னைப் பழிவாங்க என்னை மாதிரி இன்னும் சில க்ளினிக்களை பக்கத்தில வாங்கி ஃபீஸை ஒரேயடியாகக் குறைச்சிட்டான்.”
“நீ நஷ்டப்பட்டு கடையை மூடிட்டா விலையை ரெண்டு மடங்கு ஏத்திடுவான்.”
“கரெக்ட். அதைபத்தி லினா கான் எழுதிய ஒரு நீண்ட ரிபோர்ட் கொண்டுவந்திருக்கேன். நிதானமா படிக்கணும்.”
Amazon’s Antitrust Paradox
Lina M. Khan
The Yale Law Journal, 126 (2016-2017), 710-805.
லினா கான் பெயரைக் கேட்டு அவர் முகத்தில் படர்ந்த வருத்தத்தின் நிழல். சமாளித்துக்கொண்டு,
“நித்யா?”
“அவள் வாசிக்க ‘த கேர்ல் ஹு சேஞ்ச்ட் த வேர்ல்ட்’. எங்களை மறந்துவிட்டு நீங்க தாராளமா உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களைப் பேசலாம்.”
டாக்டரின் பார்வை நித்யாவின் பக்கம் திரும்பியபோது அவள் முன்பாதையில் நின்றிருந்த கால்ஃப் வண்டியை வேடிக்கை பார்த்து நின்றிருந்தாள். அவள் அருகில் சென்று, சாய்ந்து நின்ற உயரமான பையில் இருந்து ஒரு கால்ஃப் குச்சியையும் பந்தையும் எடுத்துக் காட்டினார்.
“நீ ஆடி இருக்கியா?”
“ஊகும்.” தலையை இலேசாக அசைத்தாள்.
“ஆடணுமா?”
“யெஸ்! யெஸ்!” கண்களை விரித்து தலையை வேகமாக ஆட்டினாள். உலகை மாற்றிய பெண்ணின் கதை இருக்கவே இருக்கிறது.
நித்யா வாரத்தில் ஐந்து நாள் நீச்சல் பயிற்சி செய்தாலும் பந்தயங்களில் அவள் நேரங்கள் ‘ஏ’ அளவுகளிலேயே நின்றுவிட்டன என்பதால் அதில் ஆர்வம் குறைந்திருந்தது. வேறு எதில் அவள் கவனத்தைத் திருப்பலாம் என்று அனிகாவுக்கும் யோசனை.
குஞ்சுமணி அலைபேசியில் யாரையோ அழைத்துப் பேசினார். நித்யாவை ஏற இறங்கப் பார்த்து, “ம்ம்.. ஒன்பது வயது, நாலரை அடி”.
“நித்யா! நீ எந்தக்கையில் எழுதுகிறாய்?”
“இடது.”
அதை மறுபக்கத்துக்கு அறிவித்ததும் உரையாடல் முடிந்தது.
“நித்யா! போகலாம் வா!”
“இனிமே தான் ரைஸ் குக்கர் வைக்கணும்” என்றாள் ராஜி. அப்போது அவள் பேச்சுத்துணைக்கு அனிகாவின் அம்மா.
கால்ஃப் ஊர்தி குடியிருப்பில் இருந்து வெளியேறி ஒரு சாலையின் ஓரமாக ஊர்ந்து லிட்டில் கால்ஃப் கோர்ஸ் வளாகத்தில் நுழைந்து நின்றது. கட்டடத்தின் அலுவலக வாசலில் நித்யாவின் உயரத்துக்கேற்ற கால்ஃப் கழிகளுடன் காத்திருந்த ஸ்டீவுடன் அறிமுகம். அவனிடம் நித்யாவை ஒப்படைத்துவிட்டு கட்டடத்தின் வெளிப்புற வராந்தாவுக்கு குஞ்சுமணி அழைத்துப்போனார். ஒரு மேஜையில் அனிகா அமர்ந்து லினா கானின் அறிக்கையை ஐ-பேட் திரையில் பிரித்தாள். மற்ற இருவரும் சாய்வு நாற்காலிகளில் சாய்ந்தார்கள்.
வராந்தாவுக்கு எதிரே நீண்ட பச்சைக் கம்பளம் விரித்தது போல் வெட்டிய புல்வெளியில் அங்கும் இங்குமாக பத்துப்பன்னிரண்டு குழிகள். அவற்றைக் குறிபார்த்து நின்ற சிலர்.
சற்றுத் தள்ளி கழிகளை எப்படிப் பிடித்து வீசுவது என்கிற ஆரம்பப்பாடம். அது முடிந்ததும் தொலை தூரம் பந்தை அடிக்க ஒரு கூடை நிறைய பந்துகளுடன் நித்யாவை நீண்ட களத்துக்கு ஸ்டீவ் கூட்டிப்போனான்.

“வேல்! நீ நியுஸ் படிக்கிறது உண்டா?”
“எழுத்துக்களைப் பெரிசுபடுத்தி காலையில ஒரு வாட்டி பார்க்கறது உண்டு.”
“லினா கான்?”
“பேர் கேள்விப்பட்டு இருக்கேன். அவ்வளவுதான்.”
‘லினா கான்’ காதில் விழுந்ததும் அறிக்கையில் இருந்து அனிகாவின் கவனம் மற்ற இருவரின் உரையாடலுக்குத் தாவியது.
“நான்-கம்பீட் க்ளாஸ் பற்றி உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கும்.”
“சான்ட்விச் கடைகள் நடத்தினப்ப நான் அதைப் பயன்படுத்தினது இல்ல. வாரக்கூலிக்கு மேல எதாவது சாக்கு சொல்லி பணம் தர்றது வழக்கம். கடைகளை மூடற வரைக்கும் நான் யாரையும் வேலைவிட்டுப் போகச்சொன்னது இல்ல. வேற நல்ல வேலை கிடைச்சு அவங்களா போனப்ப நான் தடுத்ததும் இல்ல. அவங்க சேர்த்த பணத்தோட என் ஆசீர்வாதத்தையும் சேர்த்து அனுப்பிவைப்பேன்.”
“உன்னை மாதிரி எல்லா காபிடலிஸ்ட்களும் இருந்தா, மார்க்ஸ் ‘டாஸ் காபிடல்’ எழுதி இருக்க மாட்டார். இப்ப… ‘வென்டிஸ்’ல வேலை செய்யறவன் அதிக சம்பளத்துக்கு ‘மெக்டனால்ட்ஸ்’ போனா தொழில் ரகசியத்தை கடத்திண்டு போயிடறான்னு அதைத் தடுக்கலாம். அது மாதிரி இன்னும் பல வேலைகள். நாங்க இருக்கற கட்டடங்களை மெய்ன்ட்டெய்ன் பண்ணற ஆட்கள் கூட சுலபத்தில வேலை மாற முடியாது. காரணம், இந்த நான்-கம்பீட் க்ளாஸ். சமுதாயத்தின் அடிமட்டத்தில இருக்கறவங்களின் கூலியை விட கம்பெனியின் வருமானம் தான் சட்டத்துக்கு முக்கியமாப் படறது” என்று நிறுத்தினார். “தொழிலாளிகளின் நிலைமையை நாட்டின் பல இடங்களில் சுத்திப்பார்த்து லினா கான் இந்த நான்-கம்பீட் கட்டுப்பாட்டை போன வருஷம் எடுத்துட்டா.”
“நல்ல காரியம்.”
“என் பையன் அதைத் திரும்பக் கொண்டுவந்திட்டான்.”
பதவி கொடுத்தவர்களுக்கு அஜய் காட்டும் நன்றிக்கடன்.
“அப்படியா? ம்ம்ம்.”
“இது மட்டுமில்ல, எஃப்.டி.ஸி.(ஃபெடரல் ட்ரேட் கமிஷன்)யின் சேர்-ஆக இருந்தப்ப லினா கான் இன்னும் சில ஏற்பாடுகள் கொண்டு வந்திருக்கா. நர்ஸிங் ஹோம்ல இத்தனை நோயாளிகளுக்கு இத்தனை நர்ஸ்களாவது இருக்கணும். ஓவர்டைம் சம்பளத்தை ஒழுங்காக் கொடுக்கணும். நெட்ஃப்ளிக்ஸ்லேர்ந்து நியு யார்க் டைம்ஸ் சப்ஸ்க்ரிப்ஷன் வரைக்கும் எந்த ஒப்பொந்தத்தையும் ஒரு க்ளிக்ல கான்சல் செய்ய முடியணும். வட்டிக்கடைகள் சொன்ன வட்டிக்கு மேல ஃபீஸ் வாங்கக் கூடாது. இதை எல்லாத்தையும் கூட அஜய் ஒவ்வொண்ணா எடுத்துண்டு வரான்.
லினாவின் முயற்சியினால க்ரோகர் ஆல்பர்ட்சன் சூபர்மார்க்கெட் பூதங்கள் ஒண்ணு சேரல. அதனால வாடிக்கைகளுக்கும் லாபம், தொழிலாளிகளுக்கும் சுதந்திரம். இனிமே கம்பெனிகள் ஒண்ணு சேர்ந்து போட்டியைக் குறைக்க எந்தத் தடையும் இருக்காது.”
டாக்டருக்கு மகன் பற்றிய அதிருப்தியை வேல் சமீபத்தில் கவனித்திருந்தார். அதன் காரணம் புரியத் தொடங்கியது.
“அதிகாரத்தில இருக்கும்போது சாதாரண மக்களுக்குச் சாதகமான காரியங்கள் செய்ய ஆசையும், எதிர்ப்புகளைச் சமாளித்து அந்தக் காரியங்களைச் செய்து முடிக்க தைரியமும் வேணும். இரண்டும் லினாவுக்கு இருக்கு. அப்படி அவளோட அப்பா அம்மா வளர்த்து இருக்காங்க” என்றபோது டாக்டரின் குரல் கரகரத்தது.
‘நான் அஜயை வளர்ப்பதில் எங்கே தவறு செய்தேன்?’ என்ற கேள்வி காற்றில் நின்றது.
“அனிகா உன்னைத்தான் ஆதரிசமா நினைக்கிறதா சொல்லி இருக்கா.”
“அது அவளோட நல்ல குணத்தைக் காட்டறது.”
“நீ வாழ்க்கையின் மேடு பள்ளங்களை சமாளிச்சிருக்கே. எவ்வளவு கீழே போனாலும் நேர்மையைக் கைவிடல. ஆனாலும் நான் எந்த விதத்தில குறைஞ்சு போயிட்டேன்? கன்சல்டன்ஸின்னு சொல்லிண்டு எந்த ஃபார்மா கம்பெனியிலியும் உழைக்காத பணம் வாங்கினது கிடையாது. ராஜி ஃபார்மகாலஜிஸ்ட். அவளைக் கேட்காம அநாவசியமா எந்த மருந்துக்கும் நான் ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுத்தது இல்ல. ஐம்பத்தைந்துக்கு மேல என் கிட்ட வந்தவங்களை வாரத்துக்கு ஐந்து தடவையாவது இதயத்துடிப்பை முப்பது நிமிஷம் நூறுக்கும் மேல வைக்கச் சொல்வேன்.”
“நீ துரத்தினதால தான் நானும் தவறாம ஜிம்முக்குப் போயிட்டிருக்கேன்.”
“அப்படி செய்தவர்களுக்கு பார்கின்சன் குறைவா வர்றதைக் கவனிச்சு அதைப் பத்தி ஒரு பேப்பர் போட்டிருக்கேன்.”
எளிதில் குணப்படுத்த முடியாத ஒரு நோயின் தடுப்பு என்பதால் அனிகா அதை ஆழமாக வாசித்திருந்தாள். எந்தவித லாப நோக்கமும் இல்லாமல் பதினைந்து ஆண்டுகள் சேகரித்த விவரங்கள். முன்னூறுக்கும் அதிகமாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும் அறிவியல் அறிக்கை. ஒருவர் பெருமைக்கு அது ஒன்றே போதும்.
“ஏன், அஜய் என்னைப் பார்த்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை?”
அவருக்கு சமாதானம் சொல்ல,
“நான் விருதுநகர் பக்கத்தில வளர்ந்தேன். பெரியப்பா மாமா மட்டுமில்ல எதாவது தப்பு செய்தா அடுத்த வீட்டுப் பெரியவங்க கூட ஒரு தட்டு தட்டுவாங்க.”
“அதுக்கு இங்க்லீஷ்ல குழந்தைகளை வளர்க்க ‘இட் டேக்ஸ் அ வில்லேஜ்’.”
நித்யாவும் ஸ்டீவும் திரும்பிவருவதைப் பார்த்து உரையாடல் நின்றது.
புல்வெளியில் நித்யாவுக்கு கால்ஃப் பந்தைக் குழியை நோக்கித் தட்டும் பாடம். இரண்டு அடியில் ஆரம்பித்து பத்தடி தூரம் வரையில். பந்து மேடுகளில் ஏறி பள்ளங்களில் திரும்பி குழிகளில் விழுந்ததும் அம்மாவைத் திரும்பிப்பார்த்தாள். அனிகா மெல்ல கைகளைத் தட்ட… டாக்டரும் வேல் ரெட்டியும், “கோ! நித்யா!” என்று கூவ…
அனிகா அவர்கள் பக்கம் வந்து அமர்ந்து,
“நான் ஒண்ணு சொல்லலாமா? டாக்!”
“தாராளமா.”
“உங்க மேல தப்பு இல்ல. நான் அஜயின் லிங்க்ட்-இன் பார்த்தேன். ஷிகாகோ(பல்கலை)யில் பி.ஏ. பொருளாதாரம், சட்டம். அப்புறம் அங்கேயே ஜே.டி. (சட்ட முனைவர்).”
“அஜய் பள்ளிக்கூடத்தில ஒன்பதாவது முடிச்சிருந்தான். ராஜிக்கும் எனக்கும் அவன் சயன்ஸில் ஏபி வகுப்புகள் எடுக்கணும்னு ஆசை. அவனுக்கு அதில் இஷ்டம் இல்ல. நாங்களும் கட்டாயப்படுத்தல. அட்வைசருடன் ஒரு சந்திப்பு. அவனுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் இருக்கு. யுனிவெர்சிடி ஆஃப் ஷிகாகோ பொருத்தமான கல்லூரின்னு அறிவுரை கொடுத்தாள். அவனுக்கும் அது பிடிச்சிருந்தது.”
“அப்பவே அஜய் உங்க ‘ஆர்பிட்’லேர்ந்து விலகி வேற ஒரு கிரகத்துக்குப் போயிட்டான்.”
பிறகு நடந்தது எதற்கும் அவர் பொறுப்பாளி இல்லை.
“ஷிகாகோவின் பொருளாதாரக் கொள்கைகளே தனி. பெப்ஸி டெலிவரி செய்யும் டிரைவரின் ஐம்பதாயிரத்தில் இருந்து இந்திரா நூயியின் முப்பது மில்லியன் வரை ஒவ்வொருவரின் சன்மானமும் நியாயம். அது பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் சம்பாதிக்கும் பங்கு. அரசியல் சட்டங்கள் சந்தைப் பொருளாதாரத்தில் பணம் தடையின்றி ஓடுவதைப் பாதுகாக்கும் கால்வாய்கள். ஒரு சில இடங்களில் செல்வம் குவிவது எல்லாருக்கும் நல்லது. இது பட்டம் வாங்குவதற்கு முன்பே அவனுடைய இளம் இரத்தத்தில் ஊறி இருக்கும். அவன் முதல் வேலை, பெரிய பணத்துக்காக பெரிய கம்பெனிகளின் சார்பில் வாதாடும் பெரிய சட்ட நிறுவனத்தில். சமுதாயத்தை விட தனிமனிதன் முக்கியம் என நினைக்கும் இன்ஸ்டிட்யுட்டில் ஃபெலோ. பிறகு கேன்ப்ரிட்ஜ் ப்ரைவேட் ஈக்விடியில் பார்ட்னர். சில வருஷங்கள் ட்ரம்ப் சொல்றபடி ஆடிவிட்டு, மனித உரிமைகளுக்கும் சொத்து உரிமைகளுக்கும் வித்தியாசம் பார்க்காத இடத்துக்கு திரும்பப் போய்விடுவான். உங்களைப் போல அவனும் சமுதாயத்தின் கீழ்ப்பாதியில் இருப்பவர்களின் நலனை யோசிக்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும்?”
டாக்டர் யோசனையில் ஆழ்ந்தார். குற்ற உணர்வில் இருந்து அவர் விடுபட்டதாக அனிகா நினைத்தபோது, பிரகாச முகத்துடன் நித்யா ஓடி வந்தாள். அவளைத் தொடர்ந்து ஸ்டீவ்.
“உன் பெண் வேகமாகக் கற்றுக்கொள்கிறாள்.”
“தாங்க்ஸ். உன் பொறுமையும் ஒரு காரணம். உன் வணிக அட்டையைக் கொடுத்தால் நான் பாடத்திற்கான பணம் அனுப்புவேன்.”
“அவசியம் இல்லை. டாக் கணக்கில் சேர்த்துவிட்டேன்.” அத்துடன் நில்லாமல், “இன்னும் மூன்று நான்கு ப்ரைவேட் லெஸன். பிறகு வரும் கோடை விடுமுறையில் அவள் வயது சிறுவர்களுடன் நான்கு வார கால்ஃப் கேம்ப்” என்று அடிபோட்டான்.
அதை அனிகா யோசித்தபோது,
“அதுவும் என் கணக்கில்” என்று டாக்டர் முந்திக்கொண்டார். “தினம் பாடம் முடிந்ததும் நித்யாவை எங்கள் வீட்டில் வைத்துக்கொள்கிறேன். அனிகா! நீ ஆறு மணிக்கு மேல் வந்து அவளை அழைத்துப் போகலாம்.”
அனிகா மறுப்பதற்கு இடம் வைக்கவில்லை.
ஸ்டீவ் அகன்றதும், நித்யா டாக்டரைக் கட்டிக்கொண்டு, “தாங்க்ஸ்!” சொன்னாள். “எனக்கு இப்போது இரண்டு தாத்தாக்கள்” என்று இரு விரல்களை நீட்டினாள்.
இனிமேல் குஞ்சுமணி தன் நண்பரைப் பார்த்து பொறாமைப்பட மாட்டார்.
***
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

Amarnath, Such a beautiful story. The thirukkural’s meaning – here – it got interpreted differently for Ajay and his dad. And, the layered one, in reality, it gets interpreted differently by the traditional anti-trust regulators and people with ‘Non-brandeis/khan’ views. Nice one.
Thanks Radha, for the thoughtful response to my story. Credit goes to my high school Tamil teacher for a different intrepretation for the Thirukkural that stayed with me all these years.