முழுக்க முழுக்கக் கருங்கற்களால் கட்டப்பட்டு , விசாலமானதொரு வளாகத்தில் பிரிட்டிஷ் பாணியில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் அந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், மதுரையின் காதலியான என்னைப் பார்த்ததும் பரவசப்படுத்தும் ஒரு கட்டிடமாகவே இத்தனை நாளும் இருந்தது. பணி ஓய்வு பெற்று இங்குள்ள கருவூலப்பிரிவுக்கு அவ்வப்போது வந்து போகத் தொடங்கிய பிறகுதான், ஏதோ ஒரு பொருந்தாமையையும் ஆற்றமையையும் கிளர்ந்தெழச் செய்கிற இடமாக இது ஆகிப்போனது.

இன்றும் உச்சிவெயில் நேரத்தில் ஆட்டோவை விட்டிறங்கிப் படிகளில் ஏறும்போது அவ்வாறே உணர்கிறேன். கருவூல முகப்பில் நீண்டு கிடக்கும் தாழ்வாரம். அதன் இரு புறங்களிலும் – கற்சுவரை ஒட்டியும், எதிர்ப்புறமும் பதிக்கப்பட்டிருக்கும் கான்கிரீட் திண்ணைகள். நாள் முழுவதும் சூரிய வெப்பத்தில் சூடேறிக் கிடக்கும் அந்தத்திண்ணைகளில் காலை முதல்…இருந்தும், கிடந்தும், கிடக்க முடியாதபடி நெளிந்தும்,உள்ளே இருந்து வரும் அழைப்பில் செவி ஊன்றி, சித்தம்பதித்து இடையிடையே சற்று நேரம் நின்ற நிலையில் இருந்தபடியும் தவித்துக்கொண்டிருக்கும் மூத்த குடிமக்கள். அறுபதைக் கடந்து தொண்ணூறைக்கூடத் தொட்டுக் கொண்டிருக்கும் இருக்கும் அந்த மனித மாதிரிகளின் கூட்டம், அங்கே ஏதோ ஒரு ‘ முதியோர் மேளா’ நடைபெறுவது போன்ற தோற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஓய்வூதியத்திற்காகவோ அல்லது குடும்ப ஊதியத்துக்காகவோ விண்ணப்பித்து விட்டுக் காத்திருப்பவர்கள், இன்னும் கூட உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பதை மெய்ப்பித்துப் பென்ஷனைத் தொடர்வதற்கான வருடாந்திர வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்காகக் காத்துக்கொண்டிருப்பவர்கள், பென்ஷன் கோப்பிலுள்ள ஏதோ ஒரு ஐயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்காக – நடுக்காட்டில் தவம் செய்யும் முதிர்ந்த ஞானிகளைப் போல நட்டநடுப்பகலில் சூரியச் சூடு குடித்துத் தவமிருப்பவர்கள். நானும் எனக்கிருந்த ஒரு சந்தேகம் தொடர்பான காரியத்தை முடிப்பதற்காகவே இன்று வந்திருந்தேன்.
நடக்கவே முடியாமல் தள்ளாடிக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர், ஒரு இளைஞனின் துணையோடு அவனது இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்தார். அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து அழைத்து வந்து கல்திண்ணையில் அமர வைக்கிறான் அவன். அடிக்கிற வெயிலையும்…,அவருடைய மூச்சுத்திணறலையும் பார்க்கும்போது அந்தக் கருவூலம் எப்படி அவரை வழியனுப்பி வைக்கப்போகிறதோ என்று ஒருகணம் எனக்குத் திக்கிட்டது. இப்போதுதான் வீட்டுக்கே நேரில் வந்து உயிரியல் அளவீடு செய்யும் பையோ மெட்ரிக் முறை வந்து விட்டதே இதற்காக இத்தனை மெனக்கெட வேண்டுமா என்று ஒரு வினாடி சிந்தனை ஓடினாலும், என்னைப் போலவே அவரும் வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காக வந்திருக்கலாமே என்றும் உடனே நினைத்துக்கொண்டேன்.
வெயில் புழுக்கத்திலும் வியர்வைப் பிசுபிசுப்பிலும் ஊறிச் சோர்ந்து போய் மயக்கம் போடும் நிலையில் இருந்தவர்களைப் பார்க்கும்போது பத்து மின்விசிறிகளும், வசதியாக உட்கார்ந்து கொள்ள ஐம்பது பிளாஸ்டிக் நாற்காலிகளும் கூட வாங்கிப்போடாத – வாங்கிப்போட வக்கில்லாத நிர்வாக இயந்திரத்தின் மீது எப்போதும் போல அடிவயிற்றிலிருந்து சுரீரென்று ஓர் அக்கினி மூள ஆரம்பித்திருந்தது.
“ திரும்பத் திரும்ப எட்டிப்பார்த்துக்கிட்டே இருக்காதீங்க அம்மா. வாசப்பக்கம் நெருக்கடியாகுதில்லே. உங்க பேர் சொல்லும்போது கட்டாயம் கூப்பிடாமலா போயிடப்போறோம்” என்று பியூன் நான்கைந்து முறை எச்சரித்துக்கொண்டிருந்தாலும், அவர் சற்று அங்கிருந்து அகலும்போதெல்லாம் உடலை வளைத்துத் தலையை நீட்டி அலுவலக உட்புறக்கூடத்தை நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.
அகலமான அந்தக்கூடத்தில் இடையே ஓரிரு ஆட்கள் மட்டும் நடந்து செல்ல வழி விட்டு விட்டு இரண்டு பக்கமும் கண்ணாடித்தடுப்புக் கொண்ட அடுத்தடுத்த கூண்டுகள், அவற்றில் அந்தந்தப் பிரிவுக்கேற்ற கோப்புக்குவியல்களோடு அமர்ந்திருந்த குமாஸ்தாக்கள்.
இந்த முறை எங்கள் கல்லூரி வங்கிக்கான கூண்டின் இடம் மட்டுமல்லாமல் அலுவலரும் மாறி விட்டிருந்ததாகக் கேள்விப்பட்டிருந்தததால் அது எங்கே இருக்கக்கூடும் என்று நான் இருந்த இடத்திலிருந்தே ஆராய்ந்து கொண்டிருந்தேன்.
“என்ன கவிதா இங்கேயே நின்னுக்கிட்டு அப்படி எதை வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே…வாசல்லே சொல்லிட்டு உள்ளே போக வேண்டியதுதானே”
அலமுவின் குரல் கேட்டு கவனம் கலைகிறேன்.
கல்லூரிப் பணியில் எனக்கு ஓராண்டு சீனியர். வாய்ப்பேச்சு,செயல் வீரம் இரண்டிலுமே கில்லாடி என்று பெயரெடுத்தவள்.
“ ஹாய் அலமு… நீயும் வந்திருக்கியா?இத்தனை நேரம் உள்ளேதான் இருந்தியா ? நீ உள்ளே போனதும் தெரியலை, வந்ததும் தெரியலியே? உன்னை மாதிரி வந்தோமா,காரியத்தை முடிச்சோமான்னு இந்த இடத்திலே இருந்து அப்படி எல்லாராலேயும் சுலபமாப் போயிட முடியுமா என்ன? வாசல்லே இருக்கிற துவார பாலகர்கள் வழி விடணும்..அப்புறம் உள்ளே இருக்கிற சாமி கண் தொறக்கணும்..ம்ம்ம். , எவ்வளவு இருக்கு”
அலமு என் கையைப் பற்றிக் கொள்கிறாள்.
“ இதுக்குப் போய் இவ்வளவு சோர்ந்து போயிடாதே கண்ணு..இப்பல்லாம் கொஞ்சம் சுறுசுறுப்பாதான் வேலை நடக்குது. ஆல் த பெஸ்ட்.. சரி,அதிருக்கட்டும், ஒரு நிமிஷம் உள்ளே யார் இருக்காங்கன்னு பார்த்தியா”
“ யாரு..?”
“ அட,நீயேதான் பாரேன்…ஹால் கோடியிலே … நல்லா கவனிச்சுப் பாரு”
“ யாரு….? தெரியலியே…, ஓ…ஹால் கடைசியிலே உள்ள கவுண்டருக்கு முன்னாலேயா?
ஆமாம்…அது நம்ம தாரகேஸ்வரி மேடம் மாதிரி இல்லே இருக்கு…”
“ உத்துப்பாரு. அவங்களேதான்,நான் வர்றதுக்கு முன்னாடியே இங்கே வந்திருப்பாங்க போல இருக்கு. ஆனா, வேலைதான் இன்னும் முடியல”
நான் இன்னும் சிறிது முன்னகர்ந்து சென்றபடி கண்களைக் கூர் தீட்டிக் கொள்கிறேன். ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருக்கா’ என்று யாரையோ பற்றி எப்போதோ என் பாட்டி சொன்ன வார்த்தைகளும், ‘ஏஜ் கேனாட் விதர் ஹெர், ..வயதால் அவள் வசீகரத்தை உதிர்த்துப் போட முடியாது’ என்ற ஷேக்ஸ்பியரின் கவிதையும் மூளையில் ஒரு நிமிடம் மின்னி விட்டுப் போகின்றன.
“சரி, நான் கெளம்பறேன், நீ உள்ளே போய்ப் பக்கத்திலே இன்னும் நல்லாப் பாரு ” என்கிறாள் அலமு.
“அலமு அலமு , கொஞ்சம் இதை மட்டும் சொல்லிட்டுப் போயிடேன். அவங்க இங்கே வந்து எதுக்காக இத்தனை நேரம் காத்திருக்கணும்? யாருகிட்டயாவது சொல்லி ஈஸியா காரியத்தை முடிச்சிருக்கலாமே?
ஆமாம் நீ பேசினியா அவங்க கூட.?”
” அப்பப்பா.., விஷயத்தைத் தெரிஞ்சுக்கணும்னு நீதான் எப்படித் துடிக்கிறே? நான் அவங்களைப் பார்த்தேன், ‘விஷ்’பண்ணினேன், பேசினேன், அவங்களும் என் கிட்ட நல்லாப் பேசினாங்க. போறுமா? அப்புறம் …முன்னாடி நம்ம செக்ஷனைப் பார்த்துக்கிட்டு இருந்தாரே முத்துசாமின்னு ஒருத்தர்… நாமகூட அவருக்கு முசுட்டு முத்துசாமின்னு பேர் வச்சிருந்தோமே, அவர்தான் பல இடம் மாறி வந்து இப்போ நம்ம செக்ஷனுக்கு இன் சார்ஜ். பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவரோட சொந்தக்காரப் பொண்ணு யாருக்கோ நம்ம காலேஜ்ல சீட்டு தராத கோபத்தை இப்ப இவங்க மேல காட்டித் தீர்த்துக்கிறார் அவர். ஆனா வேடிக்கையைப் பாரு, மேடம் அப்படி மணிக்கணக்கா காத்திருக்கிறப்ப, என்னோட வேலையை மட்டும் டாண்ணு முடிச்சுக் குடுத்துட்டாரு. அது ஏன்னே தெரியலை, எனக்கே கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது. சரிப்பா, ஃபைனல் குட்பை, ஒரு நாள் நிதானமா எங்கேயாவது பார்த்துப் பழைய கதையை எல்லாம் அசை போடலாம்” என்றபடி விடை பெற்றுக் கொள்கிறாள் அலமு.
முத்துசாமி இருக்கும் கூண்டின் மீதும் மேடத்தின் மீதும் மட்டுமே என் கவனம் குவிந்திருக்கிறது. கூடுதல் உயரமும் அதற்கேற்ற பருமனும் நல்ல ஆகிருதியும் கொண்டவர்களான தாரகேஸ்வரி மேடம், அங்கிருந்த நாற்காலியில் வெகு நேரம் உட்கார முடியாமல் அசௌகரியமாக நெளிந்து கொண்டிருக்கிறார்கள். கூண்டிலுள்ள கண்ணாடித் தடுப்பின் அரைவட்டத் திறப்புக்குள் தலையை நுழைக்க முடியாமல் சற்றே அதைத் தாழ்த்திக்கொண்டு முத்துசாமியிடம் அவர்கள் பேச முயலும் ஒவ்வொரு நேரத்திலும் அவர் அதைக் கண்டு கொள்ளாமல்,அப்போதுதான் பணியாளை அழைத்து ஏதோ ஒரு ஃபைலை எடுத்து வரச் சொல்வதும், தாரகேஸ்வரி மேடம் இருக்கும் பக்கம் கூடத் திரும்பாமல் அடுத்த நிமிடமே யாருடனோ தொலைபேசியில் பேசத் தொடங்கி விடுவதையும் என்னால் பார்க்க முடிகிறது.
*……………………………*
டாக்டர் தாரகேஸ்வரி,
பிரின்ஸிபல்.
என்ற எழுத்துக்கள் , பெயர்ப்பலகையில் பிராஸோ பளபளப்போடு மின்னிக் கொண்டிருக்க,முதல்வரின் அறைக்கு வெளியே நான்கைந்து பேராசிரியர்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கிறோம். நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் வரவேற்பறை என்றே வழக்கில் இருந்தாலும், அங்கே நான்கு ஐந்து பேருக்கு மேல் நிற்பது கூட சிரமம்தான். அறையின் ஒரு பக்கச் சுவரை ஒட்டி ஒரு தொலைபேசி,அதைக் கண்காணித்துக்கொள்பவருக்கான மேசை, நாற்காலி என்று இவையெல்லாம் வேறு இருப்பதால் அதற்கு ஃபோன்ரூம் என்ற நாமகரணமும் கூட.
குளிரூட்டப்பட்ட முதல்வரின் அறை இறுக அடைக்கப்பட்டிருந்தாலும், அதன் மேல் புறக் கண்ணாடி வழியே இரண்டு பக்கங்களிலிருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடிந்தது.
வரிசையில் மூன்றாவதாக நின்று கொண்டிருந்த நான் கழுத்தை நீட்டி உள்ளே எட்டிப் பார்க்க முயல்கிறேன்.
ஏதோ ஒரு வேலையில் தீவிரமாக ஆழ்ந்திருந்தாலும் முதல்வரின் பார்வை இடையிடையே வெளியே நிற்பவர்களையும் தொட்டு மீளாமல் இல்லை. ஆனால் அதில் எங்களைக் கண்டுகொண்ட பாவனையோ, அறைக்குள் வரச்சொல்லி அழைக்கும் சைகையோ கொஞ்சமும் இல்லை. மனதுக்குள் சுழன்று கொண்டிருக்கும் முக்கியமான ஏதோ ஒரு சிந்தனையையே அந்த முகம் வெளிப்படுத்திக்கொண்டிருந்ததால், எங்கள் மீது அவ்வப்போது படியும் அவரது பார்வை , இலக்கற்ற வெற்றுப்பார்வை மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“ஏ கவிதா , நீ என்னதான் முண்டியடிச்சாலும் இப்போதைக்கு அவங்க நம்மளைக் கண்டுக்கறதா இல்லை. இங்கே தவம் கிடந்து ஒரு லீஷர் பீரியட் முழுக்கப் போயிடுச்சு தெரியுமா” என்கிறாள் தாவரவியல் பேராசிரியை பத்மா.
“உங்களுக்காவது ஒரு லீஷர் அவர் போச்சு பத்மா, எனக்கு இன்னிக்கு இருந்த லீஷர் அவர் எல்லாமே போயிடுச்சு. செவ்வாய்க்கிழமை யூனியன் டே அன்னிக்கு போர்டிகோவிலே போடுற கோலத்துக்கு அவங்க கிட்ட அப்ரூவல் வாங்கணும். அதை வாங்காம பசங்களைக்கோலம் போட வச்சேன்னா..அவ்வளவுதான், தீர்ந்தேன்” என்கிறார் தமிழ்த்துறையின் மேகலா.
“நானும் கூட யூனியன் டே அறிக்கையிலே ஒரு கையெழுத்து வாங்கத்தான் நிக்கிறேன்” இது என் எஸ் எஸ் பொறுப்பாளரும் வேதியல் துறை ஆசிரியயுமான ஷாமாவின் பொருமல்.
தற்செயல் விடுப்பு என்றாலும் காரணம் முன்கூட்டியே தெரிந்திருந்தால் சொல்லிவிட்டுத்தான் எடுத்தாக வேண்டும் என்பது அந்தக் கல்லூரியின் எழுதப்படாத விதி. அதிலிருந்து எவராலும் தப்பமுடியாது என்பதற்காகவே கையில் விடுப்புக் கடிதத்தோடு காத்திருக்கிறார் கணிதத்துறை ஜானகி.
அவரவரும் ஏதேதோ அங்கலாய்த்துக் கொண்டிருக்க “நீ என்ன விஷயமா கவிதா ? “ என்கிறாள் ஜானகி.
“பர்சனலா எல்லாம் ஒண்ணும் இல்லப்பா. போர்ட் மீட்டிங் தேதியை உறுதிப்படுத்திக்கணும் அவ்வளவுதான்” என்கிறேன்..
“அவசியமான காரியம்னுதானே நாம எல்லாரும் காலொடிய நிக்கிறோம். ஒரு அஞ்சு நிமிஷம் ஆகுமா எல்லாரையும் பார்த்து முடிக்க. இல்லேன்னா, குறிப்பிட்ட நேரம்னு எதையாவது ஒதுக்கிட்டாக்கூடப்போறும், அந்த நேரத்துலேயாவது பாத்துக்கலாம்” என்கிறாள் துடுக்குத்தனமாகப் பேசுவதில் பெயரெடுத்தவளான ஷாமா.
“அது எப்படிப்பா முடியும்? டைம் டேபிள்ல அந்த நேரம் எல்லாருக்கும் ஃப்ரீயா இருக்கணுமில்லையா. அப்பத்தானே அது பாஸிபிள்? நமக்கே இத்தனை வேலை இருக்குன்னா, எல்லாத்தையும், எல்லாரையும் கண்காணிச்சுக்க வேண்டிய நிலையிலே இருக்கிற அவங்களுக்கு எத்தனை திசையிலேயிருந்து எப்படி எப்படியெல்லாம் பிடுங்கல் இருக்குமோ…? நம்மளை இப்படி நிக்க வைக்கறது அவங்களுக்கு மட்டும் சந்தோஷமாவா இருக்கும்?” என்று ஜானகி அதை மறுக்க,
“ நீ எப்பவுமே அவங்களை விட்டுக்கொடுக்க மாட்டியே. பேசாம நீயும் அந்தக் காக்கா கூட்டத்தோட ஐக்கியமாயிடு,அதுதான் உனக்கு சரிப்படும் ” என்று காட்டமாகிறாள் ஷாமா.
“ஸ்ஸ்…இப்படியெல்லாம் சத்தமாப் பேசாதீங்கப்பா , யாராவது போட்டுக் கொடுத்திட்டாங்கன்னா, அப்புறம் நாம இப்படி நின்னதெல்லாம் வீணாப் போய்டும்” என்று அவர்களை அமைதிப்படுத்துகிறேன்.
மேஜை மேல் இருந்த கோப்புகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வருவது போல் தெரிகிறது. வேறு சிந்தனை எதையும் முகத்தில் தேக்காமல் , சற்று சாவகாசமாக அவர் எங்களை ஏறெடுத்துப் பார்க்கத் தொடங்கிய அதே நிமிடத்தில் முதல்வர் அறையை ஒட்டிய இணைப்பறையில் இருந்து ஒரு புதிய கோப்புடன் நெருங்குகிறார் அவரது தனி உதவியாளர்.
“அவ்வளவுதாம்பா இன்னிக்கு நமக்குக் கொடுத்து வச்சது. ஸ்பெஷல் பஸ்ஸைக் கோட்டை விட்டுட்டு ஆறு மணி வரைக்கும் வீட்டுக்குப் போகாம நிக்கணும்னு விதி .”
“ஐயையோ, எனக்கு இதிலே கட்டாயம் கையெழுத்து வாங்கி ஆகணுமே”
பல வகைக் குரல்களும் கலவையாக ஒலிக்க, அந்தச் சிறிய அறைக்குள் சட்டென்று நுழையும் சீனியர் வரலாற்றுப் பேராசிரியை பூரணி, எங்களை மென்னகையோடு பார்த்தபடி, அந்த வரிசையையே கணக்கில் எடுத்துக்கொள்ளாதது போல எங்களைத் தாண்டிச் சென்று கதவை ஒட்டி நின்று கொள்கிறார்.
“இப்ப என்ன நடக்கப் போகுது தெரியுமா? பார்த்துக்கிட்டே இரு” என்கிறாள் ஷாமா.
“அதிலே என்ன பெரிய ரகசியம் இருக்கு, எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே?”
நாங்கள் அனுமானித்தபடியே மூட்டா ஆசிரியர் சங்கத்தில் முக்கியப் புள்ளி என்ற பெயர் எடுத்திருந்த பூரணி, உள்ளே சென்ற அடுத்த நிமிடமே வேலையை முடித்துக் கொண்டு அதே புன்னகையோடு வெளியேறுகிறார்.
அந்தச் சிறிய சலசலப்பால் எங்கள் வரிசையில் முதலில் நின்றிருந்த ஆளுக்கும் உள்ளே போக அழைப்பு வந்துவிட ,நம்பிக்கை மீண்டவர்களாய்க் கொஞ்சம் சுறுசுறுப்பாகிறோம்.
“நல்ல வேளை , பூரணி மிஸ்ஸை உட்கார வெச்சுப் பேசாம உடனே அனுப்பிச்சாங்களே. ஏதோ, நம்ம வரிசையிலும் அதனாலே ஒரு ஆளு உள்ளே போக முடிஞ்சது” என்று ஒரு குரல் கேட்கிறது.
சில வேளைகளில் ஓய்வான மனநிலையும் ,தன்னை சற்றே தளர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் கூடி வரும்போது, உள்ளே வருபவர்களோடு முதல்வர் சற்றுக் கூடுதல் நேரம் பேச்சை நீட்டித்துக் கொண்டு போவது வழக்கம்தான்.
கனிவும் கண்டிப்பும் ஒருங்கிணைந்த ஆளுமையான தாரகேஸ்வரி, கெட்டிக்காரர் என்று பெயர் எடுத்திருந்தவர். பல்கலைக்கழக ஸிண்டிகேட் உறுப்பினர். வேலையென்று வந்துவிட்டால் அது மிகத் திருத்தமாகச் செய்யப்பட வேண்டும் என்று நினைப்பவர், பிறரையும் செய்ய வைத்துப் பார்ப்பவர். பசி தூக்கம் துறந்தவராய் இரவு பன்னிரண்டு மணி வரையிலும் கூட அவர் இந்த அறையில் வேலை செய்து கொண்டிருப்பதை விடுதியில் இருந்த நாட்களில் நான் கண்டிருக்கிறேன். மனதுக்குள் முதல்வரைப் பற்றிய பிளஸ் எல்லாம் வந்து போக, என் மனத்தைப் படித்தது போலப் பேசுகிறாள் பத்மா.
“பிரின்ஸிபல் ரொம்பத் திறமைசாலிதான், யாரு இல்லைங்கறாங்க? தனிப்பட்ட முறையிலேயும் நம்ம ஒவ்வொருத்தர்கிட்டேயும் கரிசனத்தோடதான் நடந்துக்கிறாங்க. இப்போ ஒருநாள் சி.எல்லுக்காக ஜானகி நிக்கிறாங்களே..! இப்படி ஆயிரம் கண்டிஷன் போடற இவங்களேதான் எனக்கு ஒரு காய்ச்சல்னு போனவருஷம் லீவு போட்டபோது மெடிக்கல் லீவை இன்னும் நாலு நாள் எக்ஸ்டெண்ட் பண்ணிக்கோன்னு சொன்னதோட வீட்டுக்கே வந்தும் பார்த்தாங்க.”
“அதெல்லாம் சரிதான்…. ஆனா சுத்தி இருக்கிற ஜால்ராக்கள் விடணுமே ….! பாரு..பாரு… நான் சொல்றதே நடந்துக்கிட்டிருக்கு பாரு” என்று ஷாமா சிறிது உரக்கவே சொல்ல, கண்ணாடி வழியாகப் பார்க்கிறோம்.
ஆசிரியர் சங்கத்துப் பூரணியாவது எங்களைப் பார்த்தபடி, வரிசையின் பக்கவாட்டு வழியாகத்தான் உள்ளே நுழைந்தார். ஆனால் இப்போது உள்ளே இருக்கும் ஆங்கிலப் பேராசிரியரோ , பி.ஏ அறையின் வழியாகப் பிரவேசித்து, முதல்வர் மேஜைக்கு எதிரே கூட நிற்காமல் அவரது இருக்கைக்குப் பக்கத்திலேயே ஒட்டி உரசி நின்றபடி சுவாரசியமாக ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, முதல்வரும் அதை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருக்கிறார். உரையாடல் நீண்டு கொண்டே போகிறது.
“இதனாலேதாம்பா பேர் கெட்டுப் போகுது, இதைத்தானே பாலிடிக்ஸிலே
கிச்சன் கேபினட்ங்கிறாங்க” என்று ஒரு முணுமுணுப்பு கேட்கிறது.
ஒரு வழியாக என் ஓய்வு நேரமும் முடிந்து அடுத்த வகுப்புக்கான மணி ஒலிக்கத் தொடங்கியபோது உள்ளிருந்து சமிக்ஞை வந்துவிட, வகுப்பிருக்கும் சாக்கில் என் வேலையை விரைவாக முடித்துக் கொண்டு வெளியேறுகிறேன்.
“வந்தததிலே இருந்து உள்ளே போகலாமா போகலாமான்னு அவசரப்பட்டுக்கிட்டே இருந்தீங்களேம்மா இப்ப நீங்க உள்ளே போகலாம்”
என்று பியூனிடமிருந்து அழைப்பு வந்துவிட, பழைய நாட்களின் கவனம் கலைந்தவளாய்க் கருவூலத்தின் உட்புறக்கூடத்துக்குள் வேகமாக நுழைகிறேன்.
அருகில் நெருங்கும்போதே என்னைப் பார்த்து விடும் தாரகேஸ்வரி மேடம், முகம் முழுவதும் பூரித்த சிரிப்போடு கையசைக்கிறார்கள். நானும் வந்த வேலையை முதலில் கவனிக்காமல் அவர்களை நோக்கியே போகிறேன். நாற்காலியை விட்டு எழுந்து கொள்ள முயன்ற அவர்களைத் தடுத்தபடி வணக்கம் சொல்லிவிட்டு நான் பேச ஆரம்பிப்பதற்குள் கலகலப்பும் கம்பீரமும் கலந்த வழக்கமான தன் தொனியில் அவர்களே பேச்சைத் தொடங்கி விடுகிறார்கள்.
“என்ன கவிதா எப்படி இருக்கே? உன்னைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு? ஆமாம் …இஞ்சினீயரிங் படிச்சுக்கிட்டிருந்த உன் பையன் சதீஷ் இப்ப பாஸ்டன்லே இருக்கான்னு யாரோ சொன்னாங்களே ? அப்படீன்னா நீ அங்கே போறதும் வர்றதுமா இருப்பேன்னு சொல்லு. இப்ப எல்லாம் நீ என் கிட்டே எதுவுமே சொல்றதில்லை , அப்புறம் உன்னோட ஒட்டிக்கிட்டே வருமே உன் வாலுப் பொண்ணு நிகிலா,அவ டாக்டரா ப்ராக்டிஸ் பண்றாளாமே” என்று தொடர்ந்து பேசிக் கொண்டே போனவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு “ ஆமாம் இங்கே …ட்ரஷரிக்கு எப்ப வந்தே, நீ வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சோ” என்று கேட்கிறார்.
அதில் உள்ள குறிப்பைக் கிரகித்துக் கொண்டு விட்ட நான் “நான் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்திட்டேன் மிஸ். ஆனா, நீங்க இங்கே இருக்கிறது எனக்குத் தெரியாமலே போச்சு. இவ்வளவு நேரமும் என்னை வெளியிலேயே காக்க வச்சுப் பாடாப் படுத்திட்டாங்க , இப்ப உள் ஹாலுக்குள்ளே நான் நுழைஞ்சப்பறம்தான் நீங்க கண்ணிலேயே பட்டீங்க, இங்கே நீங்க உக்காந்திருக்கிறதைப் பார்த்திட்டு நேரா உங்க கிட்ட வந்திட்டேன்…”என்றவள், சிறிது இடைவெளி விட்டு விட்டு, “ மிஸ்! முத்துசாமி சார் என்னைக் கூப்பிடறார் போலத் தெரியுது, ஒரு நிமிஷம் பார்த்திட்டு வந்திடறேன்” என்று சொல்லி விட்டு மெள்ள நகர்கிறேன்.
நான் சொன்னது முழுப் பொய்தான் என்றாலும், அது அவர்களை நிச்சயம் ஆசுவாசப்படுத்தி இருக்கக்கூடும். சிம்மாசனங்கள் ஒருபோதும் சரிவை விரும்புவதில்லை.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
