வேலையை விரும்பிய தருணம்

“புதுசா வந்திருக்கிற நாலு பேரையும் சூப்பர்வைசர் வரச் சொன்னாரு” என்று சமையற்காரர் சொல்லிவிட்டுப் போனார்.

திருமண ரிசப்ஷன் நடந்து முடிந்து ஓய்ந்து மண்டம் அமைதியைத் தேடும் நேரம். மறுநாள் காலை முகூர்த்தத்தில் மறுபடியும் கூச்சலும் இரைச்சலும் திரும்பி வந்துவிடும். அதுவரைக்கும் மணவீட்டாரின் சிரிப்புகளும், சமையல் பாத்திரங்களின் ஒலிகள், சமையற்காரர்களின் பேச்சுக் குரல்களும் அங்கங்கு ஒலித்துக் கொண்டிருக்கும்.

நால்வரும் அவசரம் அவசரமாக உணவை விழுங்கி, கையைக் கழுவி சட்டையிலேயே துடைத்துக் கொண்டு டைனிங் ஹாலை நோக்கி ஓடினர்.

சூப்பர்வைசர்  மணி அவர்களை ஒரு நோட்டம் விட்டார். ஒரு பார்வையிலேயே அவருக்குத் தோன்றிய சந்தேகம் கேள்வியாக வெளிப்பட்டது.

“இதுக்கு முன்னாடி சாப்பாடு பரிமாறின அனுபவம் இருக்கா?” 

நால்வரில், இரண்டு பேர் உத்தேசமாக ‘அனுபவம் இருக்கு’ என்று தலையசைக்க மற்ற இருவரும் இல்லையென்று உறுதியாகவே ஜாடை காட்டினர்.

“சரி.. நாலு பேருக்கும் சேர்த்தே சொல்லிடறேன். நாளைக்கி இப்படியெல்லாம் இருக்கக் கூடாது. தலைக்கி நல்லாக் குளிச்சிட்டு எண்ணெய் வெச்சி, தலைமுடிய வாரிக்கிட்டு வரணும். புள்ளிங்கோ மாதிரி வந்தீங்கன்னா சம்பளமில்லாம வீட்டுக்கு அனுப்பிடுவேன். சரியா?”

சரியென்று தலையை ஆட்டியவர்களில், முருகேசன் மட்டும் “சார். தலைக்கு எண்ணெய் எடுத்து வர்லியே சார்..” என்றான்.

“சமையல் பண்ற எடத்துல எண்ணெய்க்கா பஞ்சம்.? சீமெண்ணையைத் தவிர வேற எதெ வேணும்னாலும் தடவிக்க” என்றவர் தனது ஜோக்கில் மயங்கிப் புன்னகைத்தார்.

“அடுத்து நெத்தி நிறைய வீபூதி பூசிக்கிட்டு வரணும் . இல்லன்னா ஒரு கீத்து வீபூதியாவது இருக்கணும்.. சரியா தம்பி?” என்றவர், அவர்களில் ஒருவனைப் பார்த்து, “தம்பி.. நீ வீபூதி வெச்சிக்கலைன்னாலும் பரவாயில்ல. நாளக்கி மட்டும் உன் சிலுவைச் செயினைத் தூக்கி பனியனுக்குள்ள போடு..நீ உள்ள போடலேன்னா, நான் உன்னைத் தூக்கி வெளியில் போட்ருவேன்” என்னவென்றே தெரியவில்லை அவருக்கு –அநியாயத்துக்கு ஜோக் அடிக்கிறோம் என்று தெரிந்ததும், மறுபடி முகத்தில் புன்னகை ஒளிர்ந்தது.

பேச்சைத் தொடர்ந்தார்.

“இவங்க சாதியில சாப்பாட்டை எப்படிப் பரிமாறணும்னு சொல்றேன். தப்பாயிட்டுதுன்னா நம்ம ஓனரைத் தப்பாப் பேசுவாங்க.. புரியுதா?” என்றவர், அவர்களில் ஒருத்தனிடம் வாழை இலையைக் கொடுத்து, “டேபிளில் எப்படிப் போடுவ?” என்றார்.

அவர் எதிர்பார்த்தபடியே இடவலமாக இல்லாமல் மாற்றிப் போட்டான்.

“நெனச்சேன்.. சாப்பிட உக்கார்றவங்க வலது கைப்பக்கம் இலை அகலமா இருக்கணும். இடது கைப்பக்கம் நுனி இருக்கணும்” என்றார்.

“இடதுகைன்னா? பீச்சாங்கைப் பக்கமாண்ணா?” என்றான் முருகேசன்.

“அடேய்.. சாப்பிடற இடத்துல பீச்சாங்கைன்னு சொல்லி ஏண்டா உன்னையே நீ காட்டிக் கொடுக்கறே? ஒரு நாளக்கி நீ ஊமையா நடிச்சாலும் பரவாயில்ல போல..”

அந்த நான்கு பேரையும் ராத்திரியோடு ராத்திரியாகப் பிடித்து வந்து இப்படிச் சொல்லிக் கொடுக்க வைத்தவர்களின் மேல் அவருக்குக் கோபம் கோபமாய் வந்தது.

மொட்டைமாடியில்தான் விழுந்து கிடக்கிறார்கள் கடங்காரப் பசங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளையும் சாப்பாடு போட்டு, கையில் ரொக்கமாகச் சம்பளம் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு சுகமாக வாழத் தெரியாதா இந்த சர்வர் உத்தியோகம் பார்க்கிறவர்களுக்கு? தண்ணி அடிப்பது போய், இப்போது கண்ட கண்ட வஸ்துக்களையும் தின்றுவிட்டு மாடியில் கவிழ்ந்து கிடக்கிறார்கள். இத்தனைக்கும் சாயங்காலம் “மைசூர் பாகு, மிக்சர்” என்று மண்டபத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருத்தராய் தேடித் தேடிக்  கொடுத்துக் கொண்டிருந்தவர்கள். ராத்திரி சாப்பாட்டுக்கு நான்கு பேரைக் காணவில்லையென்று தேடினால், மூச்சுப் பேச்சின்றி மாடியில் கிடப்பதை யாரோ பார்த்து வந்து சொன்னார்கள். 

விஷயத்தைச் சொன்னதும், கேட்டரிங் ஓனருக்கு கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது.  “அவனுங்க தெளிஞ்சு எழுந்து வந்ததும், பாதி சம்பளத்தைக் கொடுத்து உடனே துரத்திவிடுங்க”.

கூடவே அவருக்குத் தெரிந்தவரிடம் சொல்லி மாற்று ஆட்களுக்கு ஏற்பாடும் செய்தும் விட்டார். அவரது அவசரத்திற்கு அகப்பட்டவர்கள் எல்லாரும் அரைவேக்காடுகள். ‘அதனாலென்ன.. பாலம் கட்டவா போறாங்க? படிச்சவங்க கட்டினதே தண்ணில அடிச்சுக்கிட்டுப் போறது. சமாளியுங்க” என்று போனில் சொல்லிவிட்டார். 

“சரி இலையைச் சரியாப் போட்டாச்சு. அடுத்து அதில் தண்ணீர் தெளிச்சு சுத்தம் செய்யணும்” என்று சொல்லி ஒரு அரை லிட்டர் பாட்டில் எடுத்து அதன் மூடியில் நான்கு ஓட்டைகள் போட்டு , ஒவ்வொரு இலையாக எப்படிப் பீய்ச்சிக் கொண்டே போகவேண்டும் என்று காட்டினார்.

சமையலறைக்குள் போய் நீளமான காம்புடன் கூடிய ஒரு கரண்டியைக் கொண்டு வந்து அதைத் திருப்பிப் பிடித்துக் கொண்டார். இலையின் எந்தெந்த பகுதியில் என்னென்ன ஐட்டங்கள் வைக்க வேண்டும் என்று பாடம் எடுக்க ஆரம்பித்தார்.

“இலையில் சாப்பாடு வைப்பதில் இவ்வளவு விஷயமிருக்கா” என்று முருகேசன் அதை அப்படியே வியந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எங்கே இதையெல்லாம் பார்த்திருக்கிறான்? 

“அவசரமா ஒரு கல்யாண கேட்டரிங்காரங்களுக்கு நாலு பேர் தேவைப்படுதாம். தெரிஞ்சவர் கேட்டாரு. நல்ல கூலி. மூணு வேளையும் கல்யாணச் சாப்பாடு கிடைக்கும். நீ போறியா?” என்று பக்கத்து தெருவில் வசிக்கும் மனோகர் கேட்டபோது முருகேசன் கேட்ட பதில் கேள்வி என்ன தெரியுமா?

“ கேட்டரியா .. எனக்கு பேட்டரிதான் தெரியும் ?”

மனோகரும் நிறைய கல்யாண விசேஷங்களுக்குப் போய் சர்வர் வேலை பார்க்கிறவன்தான். முருகேசனுக்கு சுருங்கச் சொல்லி விளக்கினான். சிறுவயதிலிருந்தே அனாதையாக வளர்ந்த முருகேசன் எதைக் கண்டிருக்கிறான்?

சிறுவயதில், கலர் பேனாக்கள், கலர் அடிக்கிற புத்தகம், சீசனில் இந்தியக் கொடியென்று விற்றுக் கொண்டிருந்தான். யாரும் வாங்கவில்லையென்றாலும் விடமாட்டான். “பசிக்குது சார். ஏதாவது கொடுங்க சார்” என்று கேட்டுவிடுவான். 

பெரிதாக கார் ஏதேனும் வந்து நின்றால் அவர்களிடம் விற்பனைக்கு முயற்சிக்கமாட்டான். அவர்கள் அவனிடம் வாங்கப் போவதில்லை. அவனுக்குத் தெரியும்.  நேரடியாக ‘வயிறு பசிக்குது சார்’ என்பான்.  காருக்குள் இருப்பவர்களுக்கு அவன் கார்க் கண்ணாடியைத் தொட்டுக் கேட்பதே கௌரவக் குறைச்சலாகத் தோன்றும்.

டிரைவரின் கண்ணாடி ஜன்னல் ஒரு விரற்கடை அளவு கீழிறங்கி அதன் இடுக்கு வழியே ஒரு ஐந்து ரூபாய் காசு எட்டிப் பார்க்கும். அது போதும். சென்னையில் பெரிது பெரிதாக எவ்வளவு கார்கள் இருக்கின்றன? எல்லோரும் கொடுக்கப் போகிறார்களா என்ன?  ஆனால், ஆட்டோ ஓட்டுகிற அண்ணா ஒரு சிலர் பத்து ரூபாய் கூட கொடுத்துவிட்டுப் போவார்கள்.

முருகேசன் வளர்ந்து, அவனுக்கு கீழே இப்போது பத்து சிறுவர் சிறுமிகள் சிக்னலில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் யாராவது வரவில்லையென்றால் அவனே தொழிலில் இறங்கிவிடுவான். அதனால் முருகேசனை இப்போதும் எங்கேயாவது ஒரு டிராபிக் சிக்னலில் பார்க்கலாம்.

“டேய் தம்பி. நான் பாட்டுக்கு சொல்லிக்கிட்டே இருக்கேன். கவனிடா” என்று சூப்பர்வைசர் திட்டியபிறகு தன்னிலைக்கு வந்தான். 

“இதுவரை சொன்னது எல்லாருக்கும் புரிஞ்சிதா?” அதற்கு எல்லாரும் தலையை ஆட்ட, “நல்லா தலையை ஆட்டிப்புட்டு நாளக்கி மானத்தை வாங்கிடாதீங்க. நல்ல பேரெடுத்தா அடிக்கடி வேலைக்கு கூப்பிடுவேன். மாசத்துல அஞ்சு முகூர்த்தம்னாலும், பத்து நாள் வேலை இருக்கும். அப்புறம் இருக்கவே இருக்கு– வளைகாப்பு, புதுமனை புகுவிழா அப்படி இப்படின்னு நம்மாள்கிட்டே அதுக்கெல்லாம் பஞ்சமே கிடையாது”

தான் இந்த வேலைக்கு வந்துவிட்டால் தனக்குக்  கீழே வேலை பார்க்கிற பசங்க எங்கே போவார்கள் என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் முருகேசன். கூடவே, மேஸ்திரியின்  கெடுபிடியும், இடும் கட்டளைகளும்  அவனுக்குப் பிடிக்கவே இல்லை இதுதான் முதலும் கடைசியும் என்று முடிவெடுத்தான்.. மனோகரனிடம் சொல்லிவிடவேண்டியதுதான். 

சூப்பர்வைசர் அவனது தலையில் தட்டி சிந்தனை ஓட்டத்தை நிறுத்தினார். காலையில் சீக்கிரம் எழுந்து, குளித்துவிட்டு கம்பெனி தரும் சீருடையை அணிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனவர் திரும்பிவந்து, “டேய், யாரும் இந்த நேரத்துல மண்டபத்துப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கக்கூடாது. அப்புறம் ஏதாவது பிரச்சனை வந்தா நீங்க மாட்டிப்பீங்க” என்று எச்சரித்து விட்டுக் கிளம்பிப் போனதும், “இப்பப் போய்ப் படுங்க.. போனைப் பாத்துக்கிட்டு கிடக்காதீங்க, அப்புறம் காலையில எழுந்திருக்க முடியாது” என்று அவரது எடுபிடி உத்தரவு போட்டதோடு, டைனிங் ஹாலில் சேர்களுக்கு இடையே படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போனான்.

நான்கு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு தயாராக இருக்கும்படி உத்தரவு வந்தது. குளித்துவிட்டு கம்பெனி சீருடையை அணிந்து தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். ‘நல்லாத்தானேடா இருக்க’ என்று தன்னையே பாராட்டிக் கொண்டான். நுனி விரலில், தண்ணீரில் குழைத்த வீபூதியைத் தொட்டு இரு புருவங்களுக்கிடையே நீட்டினான். ‘ஈரத்துல தொட்டு வெச்சா, ரொம்ப நேரத்துக்கு இருக்கும்’ சூப்பர்வைசர் முந்தின நாள் இரவே சொல்லி வைத்திருந்தார்.

மண்டபத்தில் தங்கி இருந்தவர்கள் அனைவருக்கும், ஆறுமணிக்கு காப்பியைக் கொடுக்க அவனும் போனான். ஏழரைக்கு காலைச் சிற்றுண்டி தொடங்கியது. ஏற்கெனவே பழக்கப்பட்டிருந்த சர்வர்கள் டிபன் அயிட்டங்களைப் பரிமாற, நால்வரும் எடுபிடி வேலையைச் செய்து கொண்டே, பரிமாறுவது எப்படி, பணிவாக விசாரித்து இலையில் வைப்பது எப்படி என்று கவனித்தபடி இருந்தார்கள்.  

காலை உணவு வகைகளைப் பார்த்து முருகேசன் ஆச்சரியப்பட்டுப் போனான். முதலில் ஒரு இனிப்பு, அப்புறம் இட்லி, பொங்கல், வடை, பூரி, தோசையென்று எவ்வளவு வகை? ‘பாவம் அவர்களெல்லாம் ரெண்டு, மூன்று நாட்களாகச் சாப்பிடவில்லை போல’ என்று கிண்டலாகத் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

“வேண்டாம். வேண்டாம்” என்று கைகளால் இலைகளை மறிப்பவர்களுக்கிடையே பாய்ந்து இலையில் அயிட்டங்களை வைப்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அதே சமயம், ஒரு சிலர் இலைகளில் உணவைச் சாப்பிடாமல் விட்டுவிட்டுப் போனதும் வருத்தமாக இருந்தது.

சிறுவயதிலிருந்தே அரைகுறையாகச் சாப்பிட்டே எத்தனை நாட்களைக் கழித்திருக்கின்றான் அவன்? 

ரோட்டோர ஆயா, போனால் போகிறதென்று சுட்டுத் தருகின்ற ஒரே ஒரு தோசை. அதுவும் தீர்ந்து போய்விடும் என்று சிறு சிறு விள்ளல்களாகச் சாப்பிட்டதும் நினைவுக்கு வந்தது. 

“டேய் முருகேசா.. எதுக்குடா சாப்பிடறவங்களையே வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்க” என்றபடி சக ஊழியன் இலையை எடுக்க அழைத்தான். டேபிளின் மேல் விரித்திருக்கிற காகிதத்துடன் இலையை சமோசா மாதிரி முக்கோணமாக மடித்து எடுக்கச் சொல்லியும் தந்தான். 

பாதியில், முருகேசனே செய்யட்டும் என்று விட்டுப் போகையில், “நீ சாப்பிடறவங்களையே வெறிச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன்னு வெய்யி.. நல்லா இருக்காது. அதுக்கும் ஏதாவது அர்த்தம் கண்டுபிடிச்சு திட்டுவாங்க.” என்றான்.

ஒரு டேபிள் முழுக்க இருந்த இலைகளை மடித்து  எடுத்துக் கொண்டு போகையில், அடுத்த டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் அவனது கண்ணில் பட்டார்.

“அட நம்ம சிக்னல் பார்ட்டி” 

ஆறேழு வருடங்களுக்கு முன்னால் வரைக்கும் அவன் சிக்னலில் நின்று வியாபாரம் செய்யும்போதெல்லாம் அவருடைய நீலநிறக் காரைப் பார்த்திருக்கிறான். பின் கண்ணாடியில் உற்றுப் பார்க்கிறமாதிரி ஒரு பெரிய அனுமார் படம் வரைந்திருக்கும். 

பெரும்பாலான நாட்களில் சிக்னலைக் கடந்து போய்விடுவார். சில சமயம், சிக்னலுக்காகக் காத்திருக்கையில், அவன் அவரது காரை நெருங்க ஆரம்பித்தால், கண்டும் காணாத மாதிரி சாலையையே பார்த்தபடி இருப்பார். அவனைக் கண்டுக்கவே இல்லியாம். 

முருகேசன் அதற்கெல்லாம் அசரமாட்டான். இரண்டு மூன்று தடவை ஏதாவது பொருளை வாங்கச் சொல்லுவான். அவர் வேண்டாம் என்பது போல் கை அசைப்பார். அப்போதும் அவன் விடமாட்டான். 

ஒரு முறை, “பொருள் வாங்கலன்னா பரவாயில்லை சார். பசிக்குது.. சாப்பாட்டுக்கு ஏதாவது காசு கொடுங்க..” முதன் முறையாக அவரிடம் கேட்டான்.

அதுவரைக்கும் பேசாதிருந்தவர், கார் ஜன்னல் கண்ணாடியைக் கீழிறக்கி விட்டு, “உடம்பு முழுக்க வயிறாடா உனக்கு? ஏற்கெனவே நிறைய பேர் கிட்ட பிச்சை எடுத்திருப்பியே.. அதுல வாங்கிச் சாப்பிடு முதல்ல” என்றவர் க்ரீன் சிக்னல் விழுந்தவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு போனார்.

அதற்கப்புறம் அவரது வண்டி நின்றாலும் அவன் போய் நின்றதில்லை.

கார் ஆசாமி காலை உணவை முடித்துக் கொண்டு மண்டபத்துக்குப் போனார். 

“டேய்.. அங்க என்னடா பார்வை.. காலை டிபன் நேரம் முடிஞ்சி போச்சு.. முகூர்த்த நேரத்துல சாப்பாடு போட வேண்டியதுதான்.” என்று சூப்பர்வைசர் சத்தமாகச் சொல்லிவிட்டுப் போனார்.

இரண்டு சித்தாளுகள் டைனிங் ஹால் தரையைப் பெருக்கிவிட்டுப் போனார்கள். இனி எல்லா டேபிள்களுக்கும் புதிதாகப் பேப்பரை விரிக்கவேண்டும்.  இலையை வைத்து விட்டு, அது பறக்காமலிருக்க, வெயிட்டாக ஒரு தண்ணீர் பாட்டிலை வைக்கவேண்டும்.

முகூர்த்த நேரம் நெருங்கத் தொடங்கியது.

தயிர்ப்பச்சடி, இனிப்புப் பச்சடி, பொரியல், கூட்டு, சாம்பார் என வாளிகள் வரிசை கட்டி நின்றன.

“எல்லாப் பயலுவளும் ரோட்டோரமா பிரியாணிதான் தின்றீங்க. இவ்வளவு அயிட்டங்கள் பாத்திருக்கீங்களா. இதையும் தெரிஞ்சிக்கிங்க..” என்று சூப்பர்வைசர் பொதுவாகச் சொன்னார். அது புதிதாக வந்த நான்கு பேருக்குத்தான் என்று எல்லோருக்கும் புரிந்தது.

சூப்பர்வைசர் முந்தின நாள் சொல்லிக் கொடுத்த பாடத்தை மறுபடியும் எடுத்தார். அதை நடுவிலேயே நிறுத்தினார். சட்டென்று ஒரு யோசனை வந்தது அவருக்கு. 

“சாப்பாடு போடறதுக்கு முன்னால, நாங்க பிள்ளையாருக்கு படையல் வெக்கிறது வழக்கம். அது ஒரு வேளை இதுக்காகத்தானோ?” என்றவர் அவர்களை அங்கு கூட்டிக் கொண்டு போனார். அங்கு, டேபிளின் மேல் வைத்திருந்த ஒரு நான்கடிப் பிள்ளையார் பொம்மையின் முன்னால் ஒரு வாழை இலை போட்டு சாப்பாட்டு அயிட்டங்கள் ஒன்று விடாமல் பரிமாறியிருந்தது.

“இந்த இலையைப் பாத்தீங்கன்னா, எந்த அயிட்டத்தை எங்க வெக்கணும்னு தெரிஞ்சிக்கலாம். சரியாடா..” என்றார். அனைவரும் தலையை ஆட்டினர்.

அடுத்த அரை மணி நேரத்தில் கொட்டி மேளம் முழங்கும் ஒலி கேட்டது.

“பசங்களா.. முகூர்த்தம் முடிஞ்சு போச்சு.. எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்க..” என்று சூப்பர்வைசர் கூற அனைவரும் தயாரானார்கள். அதற்குள் கல்யாணத்திற்கு வந்தவர்கள் மொய் எழுதிய கையோடு தபதபவென்று உள்ளே வந்து சேர்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். பக்கத்து சேருக்குத் துண்டு போடுவதும், அடுத்த ஐந்து சேர்களுக்கு குடும்ப புக்கிங் எல்லாம் நடந்தேறின.

முருகேசனுக்கு சிரிப்புத்தான் வந்தது. “யாருக்கும் சாப்பாடு இல்லன்னா சொல்லப் போறாங்க. எதுக்காக இப்படி இடிச்சுக்கிட்டு ஓடியாராங்க.. இதுல சீட் புக்கிங் வேற” என்று முணுமுணுத்தபடி கையில் வைத்திருந்த தயிர்ப் பச்சடி வாளியைத் தூக்கிக் கொண்டான்– ‘சாப்பிடுகிறவரின் வலதுகைப் பக்க மேல் மூலை’.

சர்வர்கள் ஒவ்வொருவராய் வாளிகளைத் தூக்கிக் கொண்டு பரிமாறியபடி நகர்ந்தனர். முருகேசன் தான் பழக்கப்பட்டுவிட்டது போல உணர்ந்தான். அவனது தூக்கு வாளிக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அவனுக்கு ஒரு விதமான சிரிப்பை வரவழைத்தது.

ஒரு ரவுண்டு முடித்துவிட்டு, மேடையில் வாளியை வைக்கையில், சாதம் நிரப்பிய தட்டை யாரோ அவன் கையில் திணித்தார்கள். ‘இதை எடுத்துக்கிட்டுப் போ’.

‘யாரோட காசா இருந்தா என்ன? சோறு போடறது புண்ணியந்தானே?’ முருகேசனுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. 

ஒவ்வொரு இலையாக தட்டைச் சாய்த்து சோற்றைக் குறைவாகத் தள்ளவேண்டும். அதற்கு மேல் வேண்டுமானால், சாப்பிடுபவர்களே கேட்பார்கள் என்று சூப்பர்வைசர் சொல்லியிருந்தார்.

ஒவ்வொரு இலையாக நகர்ந்தபடி இருந்தான் முருகேசன்.

“இங்க வாப்பா.. இன்னம் கொஞ்சம் சாதம் போடு” என்று யாரோ சொல்வது போலிருந்தது.

தலை நிமிர்ந்து பார்த்தான். சிக்னல் பார்ட்டிதான். ‘இப்பத்தானே டிபன் சாப்பிட்டுப் போனாரு..அதற்குள்ளே  மதிய விருந்திற்கும் வந்துவிட்டாரா?’

“என்ன சார் வேணும்?“ அவர் சொன்னது காதில் விழுந்திருந்தாலும், மறுபடியும் வேண்டுமென்றே கேட்டான்.

“கொஞ்சம் சோறு போட்டுப் போ” என்று சொன்னார்.

‘உடல் முழுக்க வயிறாடா உனக்கு?’ என்று அவர் சொன்னது நினைவிற்கு வந்தது. 

“போதும், போதும்” என்றபடி அவர் கைகளை மறித்துக் காட்டியும், கூடவே ஒரு கரண்டி சோற்றை அவரது இலையில் தள்ளினான்.

அந்தக் கணத்திலிருந்து, அவனுக்கு அந்த வேலை பிடித்துப் போயிற்று.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.