கம்பளிப் பூச்சி

காலை ஆறு மணிக்கு மகாதேவனுக்கு எப்பவும் போல் அலாரம் அடிக்காமலேயே விழிப்பு வந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது. எனவே ஆறு மணிக்கு எழுந்திருக்க அவசியமில்லைதான். ஆனால் தன்னால் இனி மீண்டும் தூங்க முடியாதென்பதை உணர்ந்தான்.

படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டான். பக்கத்தில் கங்கா தூங்கிக் கொண்டிருந்தாள். வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கிடைக்கக்கூடிய அதிகப்படியான ஒரு மணி நேரத் தூக்கத்தை அவள் அனுபவித்துக் கொண்டிருந்த மாதிரித் தோன்றியது. கங்காவின் மேல் காலைப் போட்டுக்கொண்டு கணேஷ் தூங்கிக் கொண்டிருந்தான். 

கூடத்திற்கு வந்தான். அதற்குள்ளாகவே அங்கு நல்ல வெளிச்சம் பரவியிருந்தது. 

கட்டிலில் படுத்திருந்த அப்பாவின் கண்கள் திறந்திருந்தன. கடந்த இரண்டு மாதங்களாகத் தினமும் அவன் பார்த்து வரும் எங்கோ தூரத்தில் நிலைத்திருந்த அதே பார்வை. ஆனால் அது யாரையும் அல்லது எதையும் அடையாளம் கண்டு கொள்ளாத ஒரு ஜடத்தின் பார்வை. மகாதேவன் அருகில் வந்து நின்ற போதும் அந்தக் கண்களில் எந்த வித்தியாசமுமில்லை. அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் அங்கிருந்து விலகி சமையலறைக்குள் நுழைந்தான். 

மகாதேவனின் அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்து அவர் படுத்த படுக்கையாகி இன்றோடு நான்கு வருடங்களாகிவிட்டன. அப்பாவின் அறுபதாவது பிறந்த நாளின் போதுதான் முதல் ஸ்ட்ரோக் வந்தது. ஷஷ்டி அப்த பூர்த்தி ஹோமத்திற்கு முன் அமர்ந்திருந்த அப்பா திடீரென்று ரத்த அழுத்தம் ஏறித் தரையில் சாய்ந்து விழுந்து அவர் வாயிலிருந்து நுரை வந்த அந்தக் காட்சியைத் தன்னால் இனி ஆயுசுக்கும் மறக்கமுடியாதென்று அவனுக்குத் தோன்றியது. இன்று அப்பாவின் பிறந்த நாள். இன்றோடு அப்பாவுக்கு 64 வயது முடிகிறது. ஆனால் அது அவருக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்காது. 

போன ஞாயிற்றுக்கிழமை வந்த டாக்டர் இன்னும் அதிக பட்சம் போனால் இரண்டு மாதங்களென்று சொல்லிவிட்டார். அதாவது இன்னும் ஓரிரு மாதங்களில் அப்பா மருத்துவரீதியாய் இறந்து விடுவார். எதற்காகவென்று தெரியாமல் இன்னமும் துடித்துக்கொண்டிருக்கும் அவரது இதயம் நின்றுவிடும். ஆனால் அவனைப் பொறுத்த மட்டில் அவன் அறிந்த அப்பா போய் நான்கு வருடங்களாகி விட்டன.

சமையலறையில் அம்மா ஸ்டவ்வின் அருகில் நின்று கொண்டு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். பால் காய்ந்து கொண்டிருந்தது. அவன் உள்ளே நுழைந்ததும் அம்மாவின் நிஷ்டை கலைந்தது. 

“இன்னிக்கு ஞாயித்துக் கிழமதானடா. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கறதுதான?” என்றார். அது பதிலை எதிர்பாராத கேள்வி. அம்மாவைப் பார்க்க அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கடந்த சில் மாதங்களாகவே அம்மாவின் பேச்சு மிகவும் குறைந்துவிட்டது. சொட்டுக் கண்ணீர் கூட வராமல் அம்மா அழக் கற்றுக்கொண்டு விட்டாரென்று அவனுக்குத் தோன்றியது.  

சமையலறையைக் கடந்து மகாதேவன் கொல்லைப்புறம் சென்றான். செடிகளையும் மரங்களையும் மலர்களையும் பார்த்ததும் மனது சற்று இலேசானது. இந்த ஞாயிற்றுக் கிழமையை எப்படிப் போக்குவதென்று யோசிக்க ஆரம்பித்தான். வாரம் பூராவும் ஞாயிற்றுக் கிழமையாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று கல்யாணமான புதிதில் ஆசைப்பட்டது நினைவுக்கு வந்தது. 

தோட்டத்தில் பூச்செடிகள் வாடியிருந்தன. இந்தத் தோட்டம் மட்டும் இல்லையென்றால்? பைத்தியம் பிடித்திருக்குமென்று நினைத்துக் கொண்டான். கிணற்றில் தண்ணீர் மட்டம் இன்னும் குறைந்திருந்தது. இன்னும் மே மாதமே முடிந்த பாடில்லை. மரங்கள் பரவாயில்லை. சில நாட்கள் தண்ணீர் இல்லாவிட்டாலும் பிழைத்துக் கொள்ளும். அம்மா அடிக்கடி சொல்லும் ‘மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்ற வாசகம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. 

எப்பவும் போல் தென்னை, மாதுளை, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, முருங்கை மரங்களைப் பார்வையிட்டுக் கொண்டு வந்தான். மாமரம் இல்லாதது குறையாக இருந்தது. இது வரை வைத்த மாங்கன்றுகள் எதுவும் உருப்படியாய் வளரவில்லை. குட்டைத் தென்னை மரங்களின் குறும்பைகள் சற்று வளர்ந்திருந்தன. பெரிதாவதற்கான வாய்ப்பிருந்ததாத் தோன்றிய கொய்யாப் பிஞ்சு ஒன்று இலேசாகக் கருகியிருந்தது. அது ஏமாற்றமாக இருந்தது. 

முருங்கை மரத்தைப் பார்த்ததும் அங்கேயே நின்றுவிட்டான். காம்பவுண்டு சுவரையொட்டியிருந்த அந்த முருங்கை மரம் இருபது அடிக்கு மேல் வளர்ந்திருந்தது. அதன் பெரும்பான்மையான கிளைகள் பக்கத்து வீட்டுக்கு நிழல் தந்து கொண்டிருந்தன. ஆனால் கடந்த ஐந்தாறு வருடங்களில் அதிலிருந்து பறித்த காய்கள் பத்து கூட இருக்காது. அந்த ஏரியாவிலேயே காய்க்காத முருங்கை மரம் அது ஒன்றுதான். போதாக் குறைக்கு அதில் சடைசடையாய்க்  கம்பளிப் பூச்சிகள் வேறு வந்துவிட்டன. அப்பா ஆசையாக நட்டு வைத்த மரமென்பதால் அவனுக்கு அதை வெட்ட இதுவரை மனது வரவில்லை. அப்பாவுக்குச் செடி, கொடிகளென்றால் மிகவும் பிடிக்கும். அப்பா நட்ட மற்ற மரங்களெல்லாம் நன்றாகத்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றன. 

அந்த முருங்கை என்னவோ பேய் முருங்கை ஜாதி என்றாள் அவர்கள் வீட்டு வேலைக்காரி ராஜம்மா. ராஜம்மா சொன்னபடி, அந்த மரத்தில் செருப்பால் ஆணி அடித்தும் பார்த்தாகி விட்டது. சரியான செருப்பால் அடித்தோமாவென்று  நிச்சயமாகத் தெரியவில்லை அவனுக்கு.  முருங்கை மரம் மென்மேலும் வளர்ந்துகொண்டே போனதே ஒழியக் காய்க்கிற வழியாய் இல்லை. இனிமேல் அது காய்க்குமென்ற நம்பிக்கையும் அவனுக்குப் போய்விட்டது. இப்போது கம்பளிப்பூச்சிகள் வேறு. 

ஒரு வாரம் முன்பு பக்கத்துவீட்டுக் கிழவரை அந்த மரத்தின் ஒரு கம்பளிப்பூச்சி கடித்துவிட்டது. அவரது கை,கால்கள் அதனால் எக்கச்சக்கமாய் வீங்கிப் போய்விட, அவர் மனைவி தண்டத்திற்கு வளர்ந்திருக்கும் அந்த முருங்கை மரத்தையும், அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்து, கம்பளிப்பூச்சிகளையும் சேர்த்து வளர்த்து வரும் இவனையும் இவன் காதுபட நாராசமாகத் திட்டினாள். 

“அப்பா, குட் மார்னிங்” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் மகாதேவன். 

கணேஷ் வீட்டின் கொல்லைப்புற வாசலில் நின்று கொண்டிருந்தான். 

“குட் மார்னிங், நீ எப்படா எழுந்த?”

“இப்போத்தாம்பா”

“பல்லெல்லம் தேச்சாச்சா?”

“அம்மா எழுந்தப்புறம் தேச்சுவிடுவா. நீ என்னப்பா பண்ணிடிருக்க?”

“சும்மா இந்த மரத்தையெல்லாம் வேடிக்கை பாத்திண்டிருக்கேன்”

“இன்னிக்கு ஆபீஸ் கிடையாதா?”

“கிடையாது”

“ஆஹா ஜாலி. அப்ப இன்னிக்கு சர்க்கஸ் போலாமா?”

“சர்க்கஸ் சாயங்காலம் போகலாம். இப்ப நம்ம என்ன பண்ணப் போறோம் தெரியுமா? இந்த மரத்த வெட்டப் போறோம்”

“எதுக்குப்பா? மரம் பாவமில்ல?”

“பாவம்தான். அதனாலதான் வெட்டப்போறோம்”  

கணேஷுக்கு அது நிச்சயம் புரிந்திருக்காது. 

சற்றும் யோசியாமல் தான் செய்த அந்தத் திடீர்த் தீர்மானம் மகாதேவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. 

மகாதேவன் பல் தேய்த்து விட்டு, காப்பி குடிக்கச் சமையலறைக்குள் நுழைந்தான். எதிரே இருந்த பாத் ரூமின் கதவில் கங்காவின் புடவை தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“ஏண்டா அந்த மரத்தை வெட்டப் போறியா” அம்மா கேட்டார் சற்று ஆச்சரியத்துடன்.

“ஆமாம்”. 

அவன் சொன்ன விதத்திலிருந்து அவனது தீர்மானத்தை உணர்ந்த அவன் அம்மா அது பற்றி அப்புறம் ஒன்றும் பேசவில்லை. 

“கங்கா எழுந்தாச்சா?” என்றான் தெரிந்து கொண்டே பேச்சை மாற்ற.

“குளிக்கறா போலருக்கு. வாரத்துல ஒரு நாள் தான அவளுக்கும் கொஞ்சம் தூங்க முடியறது”  

அரிவாளை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறத்துக்கு வந்தான்.

“இந்த மரத்தை எப்படிப்பா வெட்டறது? இந்த அரிவாள வெச்சா?” கணேஷின் ஆர்வம் வெளிப்படையாகத் தெரிந்தது. 

“ஆமாம்”

“டமால்னு ஒரு போடு போட வேண்டியதுதானா? அன்னிக்கு அந்தக் குப்பச் செடியெல்லாம் வெட்டினியே அது மாதிரி?”

“ஆமாம். அதே மாதிரி தான்”

சொல்லி விட்டானேயொழிய, அது அவ்வளவு எளிதான காரியமில்லையென்று அவனுக்குத் தெரியும்.

“எப்பப்பா வெட்டப் போற?”

“இப்பத்தான். அம்மா கிட்டச் சொல்லி ஒரு தாம்புக் கயிறு கொண்டு வரச் சொல்லு” 

கணேஷ் வீட்டிற்குள் ஓடினான்.

மகாதேவன் அரிவாளுடன் காம்பவுண்டுச் சுவர் மீதேறி அரிவாளால் அந்த முருங்கை மரத்தில் கைக்கெட்டிய தூரத்தில் இருந்த சிறு சிறு கிளைகளையெல்லாம் வெட்ட ஆரம்பித்தான். கம்பளிப் பூச்சி எதுவும் உடலில் பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. 

“பாத்து. ஜாக்கிரதை” கங்காவின் பதட்டம் மிகுந்த குரல் கேட்டது அருகில். அவளும் கொல்லைப் புறம் வந்து பார்த்துக்கொண்டிருந்தாள். சமீபத்தில் குளித்திருந்த ஈரம் அவள் நெற்றியிலும் கழுத்திலும் தெரிந்தது. 

“அடுத்த ஞாயித்துக் கிழமை உங்க தம்பி வந்தப்புறம் வெட்டலாமே” 

“இது ஒண்ணும் பெரிய பிரமாதமில்ல. நான் பாத்துக்கறேன். நீ போய் அம்மாவுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா பாரு”

கங்கா வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.  தன் கணவர் ஏதாவது தீர்மானித்து விட்டால் அப்புறம் அதை அந்த ஆண்டவனே வந்தாலும் மாற்ற முடியாதென்பது அவளுக்குத் தெரியும். 

பல் தேய்க்க வந்த பக்கத்து வீட்டுக் கிழவர், சுவர் மேல் நின்று கொண்டிருந்த இவனைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையுடன் “முருங்க மரத்தை வெட்டியாறதாக்கும்” என்றார். 

மகாதேவன் பதில் சொல்லவில்லை. “ஏன் பாத்தா தெரியலையா?” என்று ஏதோ கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட நினைத்தவன் பேசாமலிருந்து விட்டான் அவரைக் கண்டு கொள்ளாத மாதிரி. 

அவர் விடாமல், தனக்குத் தானே பேசிக் கொள்வது போல், “மரம் வருஷ வருஷமாக் காய்க்கறதுமில்ல. கம்பளிப் பூச்சி வேற எக்கச்சக்கமா வந்தாச்சு” என்றார். மகாதேவன் அதற்கும் பதில் சொல்லாமல் அவரை முறைத்துப் பார்த்தான். அவர் தன் வீட்டிற்குள் போய் விட்டார்.

கங்கா தாம்புக் கயிறு எடுத்துக் கொண்டு வந்தாள்.

கயிறை மரத்தின் பிரதான கிளையைச் சுற்றிக் கட்டி, அந்தக் கிளை மரத்திலிருந்து பிரியும் இடத்தில் அரிவாளால் பலமுறை வெட்டிய பிறகு, மகாதேவன் முழுப் பலத்துடன் கிளையை இழுத்துப் பார்த்தான். கிளை இலேசாகத்தான் அசைந்தது. இந்தப் ப்ராஜக்டிற்கு இன்னொரு ஆளின் உதவி தேவையென்பது புரிந்தது அவனுக்கு. இது கங்காவுக்குத் தெரிந்ததுதான். 

“ஏம்ப்பா, இழுக்க வரலியா?” கணேஷ் கொல்லை வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு ஆர்வத்துடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. 

“நீ எதுத்த வீட்டுக்குப் போயி, அந்த மாமா கிட்ட உங்களால கொஞ்சம் எங்க வீட்டுக்கு வரமுடியுமான்னு எங்கப்பா கேட்டார் அப்படின்னு சொல்லிட்டு வா”

“என்னப்பா நீ, மரத்த வெட்டறதப் பாக்கவே விடமாட்டேங்கற” என்று சற்று சலித்துக்கொண்டெ எதிர்த்த வீட்டிற்குச் சென்றான் கணேஷ்.

எதிர்த்த வீட்டு மாமா என்றழைக்கப் பட்ட அந்த சக்திவேல் தேவருக்கு மகாதேவனை விடப் பத்து வயது கூட இருக்கலாம் போலிருந்தது. ஆனால் அவருக்கு நல்ல உடற்கட்டு. 

“வாங்க சக்திவேல். எப்படி இருக்கீங்க?” என்றான் மகாதேவன். 

“ஏதோ மஹாதேவன் புண்ணியத்திலே நல்லாத்தான் இருக்கேன்” என்றார் சிரித்துக்கொண்டே. 

“இந்த முருங்க மரத்த வெட்டறதுக்குக் கொஞ்சம் ஹெல்ப் வேணும்” என்றான் மகாதேவன். 

“ஒண்ணும் பிரச்சனையில்ல” என்று சொல்லி, வேறு கேள்விகள் ஏதும் கேட்காமல் இவனுக்கு உதவிசெய்ய ஆரம்பித்தார்.

அவர்களின் சற்று நேர விடா முயற்சிக்குப் பின், இருவரும் சேர்ந்து இழுத்ததில் அந்தப் பிரதான கிளை மடாரென்று ஒடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து, அதைப் போன்ற மூன்று, நான்கு கிளைகளை அதே போல் இழுத்து ஒடிக்க முடிந்தது அவர்களால்.

பெரும்பான்மையான கிளைகளையும் இலைகளையும் இழந்துவிட்டு, வெறும் குச்சியாய் நின்ற அந்த மரத்தைப் பார்த்தபோது மகாதேவனுக்கு என்னவோ போலிருந்தது. ஓர் இனம் புரியாத சோகம். கை, கால்களை இழந்த பின்னும் விடாமல் போராடிய கும்பகர்ணனின் நினைவு வந்தது அவனுக்கு. 

மீண்டும் கொல்லைப்புறம் வந்த கங்கா, “இது போறுமே. நடுமரம் இருந்தா இருந்துட்டுப் போறது” என்றாள். அவன் அதைக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. கங்கா உள்ளே சென்று விட்டாள்.

மகாதேவனும், சக்திவேல் தேவரும் சேர்ந்து இன்னொரு அரை மணி நேரம் போராடிய பின் மிஞ்சியிருந்த நடுமரமும் முறிந்து விழுந்தது. அது விழுந்த போது ஏற்பட்ட பெரும் சத்தம் ஏதோ ஓலம் போல் கேட்டது மகாதேவனுக்கு.

இதனைத்தையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த கணேஷ், “இப்ப கீழ கிடக்கிற இந்த மரத்தையும் இதோட இலை எல்லாத்தையும் என்னப்பா பண்றது?” என்றான்.

இந்த இலைகளை, முருங்கைக் கீரையாக பக்கத்து வீடுகளுக்கெல்லாம் வினியோகிக்கலாம். ஆனால் கம்பளிப்பூச்சி வந்திருந்த, அதுவும் இந்தப் பேய் முருங்கையின் இலைகளை யார் வாங்கிக் கொள்வார்கள்? 

“நம்ம வீட்டுக்கு முன்னாடி காலியா இடம் இருக்கே. உங்க சித்தப்பாவெல்லாம் கூடக் கிரிக்கெட் ஆடுவாளே. அங்க இந்த மரத்தோட மிச்சத்த எல்லாம் போட்டு, மண்ணெண்ண ஊத்தி எரிக்கப் போறேன்” 

“கோவில்ல சொக்கப்பான கொளுத்துவாளே. அது மாதிரியாப்பா?”

“கரெக்ட். அது மாதிரித்தான்”

“எதுக்குப்பா எரிக்கணும்?”

எரிப்பது அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அந்த மரத்தின் எச்சங்களை முற்றுமாக அழிப்பது முக்கியம். அதன் கதை முடிந்து விட்டது. அதற்கு எரித்தல் ஒரு சுலபமான வழி அவ்வளவுதான். இதைக் கணேஷுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியுமா? 

“வெட்டினப்புறம் அது யாருக்கும் பிரயோஜனமில்லாம இருக்கற வெறும் குப்பைதான? குப்பைய என்ன பண்றது? எப்படியாவது ஒழிச்சுத்தான ஆகணும்” 

கணேஷ் ஒன்றும் சொல்லவில்லை. 

“அந்த முருங்க மரம் இருந்த இடத்தில ஒரு நல்ல மாமரம் வைக்கலாமா?” மகாதேவன் பேச்சைத் திசை திருப்ப முயன்றான். 

இம்முறை இமாம் பசந்து மாதிரி நல்ல ஜாதி மரக்கன்றாய் வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

“எனக்குக் கால்ல அடிபட்ட போது வாங்கிக் கொடுத்தியே? அந்த மாதிரி மாம்பழத்தோட மரமாப்பா?” 

“ஆமாம்”

மகாதேவனின் மனதில் அந்த முருங்கை மரம் சொக்கப் பானையாய் எரிந்து கொண்டிருந்தது. அதன் பசுமையான இலைகளும் அதிலிருந்த கம்பளிப்பூச்சிகளும் கருகியதால் வந்த நெடியும் புகையும் அப்போது அவனை நிஜமாகவே கமறச் செய்வது போலிருந்தது. 

அந்தப் கற்பனைப் புகையின் நடுவில் ஒரு கணம் அப்பாவின் முகம் தோன்றிய மாதிரி இருந்தது.  அவன் அந்த நினைவை அகற்றத் தலையைச் சற்று உலுக்கிக் கொண்டான்.

கணேஷுக்கு நினைவு தெரிந்த நாளாய்ப் படுக்கையில் கிடந்த அவன் தாத்தா இன்னும் இரண்டு மாதத்தில் காணாமல் போய்விடுவார். 

“தாத்தா எங்கப்பா போனா?” என்ற கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும். 

காலையில் எழுந்ததும், “அப்பா, தாத்தா படுக்கைல ஒண்ணுக்குப் போயிருக்கா” என்று சாதாரணமாய்ச் சொல்லத் தெரிந்த கணேஷின் தாத்தா பற்றிய நினைவுகள் அவன் பெரியவனானதும் என்னவாக இருக்கும்? பாட்டி தாத்தாவுக்குப் பல் தேய்த்து விடுவதும், துணியை மாற்றி விடுவதுமான காட்சிகள் தான் அவன் நினைவில் பிரதானமாய் இருக்குமோ? என்ன மகா கொடுமை! அவனுக்கு யார் மேலோ ஆத்திரமாக வந்தது. அவனுக்கே இந்த நான்கு வருடங்களில் ஆரோக்கியமான அப்பாவின் நினைவுகள் மெதுவாக மங்கத் தொடங்கி விட்டன. 

“ரொம்ப நன்றி சக்திவேல். நீங்க இல்லாம இதப் பண்ணியிருக்க முடியாது” என்று அவருக்குக் கை நீட்டினான் மகாதேவன்.

“இதென்ன மகாதேவன், இதுக்கு எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க” என்று சொல்லிவிட்டு அவர் விடை பெற்றார். 

கையில் அரிவாளுடன், சற்று நேரம் விழுந்து கிடந்த அந்த மரத்தையே பார்த்தவாறு அவன் நின்றிருந்தான். எவ்வளவு நேரம் நின்றிருப்பானோ அவனுக்கே தெரியாது. 

அவனது கவனம் கலைந்தது. கூடத்திலிருந்து அப்பா இருமுவது மெதுவாகக் கேட்டது. 

அந்த அரிவாளைக் கீழே போட்டுவிட்டு,  வீட்டிற்குள் சென்றான். அந்த இனம் புரியாத சோகம் போய், ஓர் இனம் புரியாத அமைதி தனக்கு வந்துவிட்டதை உணர்ந்தான். 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.