சுழற்பிரயாணம்

1

உள்ளே நுழைபவர்களை மிகச்சிறியவர்களாக உணரச்செய்யும் மைய மண்டபம் மிகமிக பிரமாண்டமானது. வானின் முழுநிலவு வெளிச்சத்திலும் மையமண்டபத்தை அடையும் எட்டு வாயில்களும் இருளடர்ந்து இருந்தன. மையக்கட்டிடம் எண்கோண வடிவத்தில் அமைந்தது. அதன் சுற்று வட்டப்பாதைகள் கால்களுக்குப் பழக மாதக்கணக்காகும். 

மையக்கட்டிடத் தரையெங்கும் இத்தாலியிலிருந்து கொண்டு வரப்பட்ட மார்பிள்கள் பாவப்பட்டது. அதன்மேல் ராஜஸ்தானின் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. குளிரும் கதகதப்பும், கிழக்கும் மேற்கும், ஆணும் பெண்ணும் என்று குருஜி சொல்வார்.

அறையின் சுவர்கள் வெண்ணிற சலவைக்கற்களால் ஆனவை. இதை கட்டும் காலத்தில் ஆசிரமத்தில் பணம் மழையாக கொட்டியது. எண்ணி அடுக்குவதற்கு நேரம் இருந்ததில்லை. பின்னர் இங்கிருக்கும் பணம் எண்ணும் மிஷின்கள் திறன் குறைந்தவை என்று ஜெர்மனியிலிருந்து திறன் வாய்ந்த இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஒரு நிமிடத்தில் 600 நூறுரூபாய் தாள்களை எண்ணித்தள்ளின. ஓய்வில்லாமல் ஒரு நாளைக்கு பத்துமணி நேரம் ஓடின. பிறகு ஐநூறுரூபாய் புழக்கத்தில் வந்த பின்னும் கூட அதே நிலைமைதான் நீடித்தது.

அன்றெல்லாம் இந்த மையக்கட்டிடம் மாதாஜி ஆசி அளிக்கும் இடமாக இருந்தது. பின்னர் குருஜி, தானே ஆசி அளிக்கும் இடமாக ஆக்கிகொண்டார் என்று கேள்விப்பட்டேன்.

காட்சிமேடையை சுற்றிக்கொண்டு பின்பக்கமாக ஏறும்போது அங்கிருந்த விளக்குகள் மங்கிய ஒளியில் மினுமினுத்துக் கொண்டிருந்தன. 

சுழற்படிகளில் ஏறிச்சென்று குருஜியின் அறைக்கதவின் முன் நின்றேன். அனிச்சையாக மேலுடம்பை முழுவதும் திருப்பி, இருண்டு நீண்டு கிடந்த மாடத்தின் நேரெதிர்முனையில் இருந்த அறைக்கதவை பார்த்தேன். 

“பேரழகி” என்ற சொல் மனதில் எழுந்தது.

கதவைத்திறந்து குருஜியின் அறைக்குள் நுழைந்தவுடன் மட்கிய வாசனை மூக்கில் ஏற ஒரு கணம் மூக்கை சுளித்து, தன்னுணர்வு கொண்டு முகத்தை இயல்பாக்கி கொண்டேன்.

அறையின் மேற்குச்சுவரில் பெரிதாக மாதாஜியின் புகைப்படம் புதிய மாலையுடன் பிரகாசமாக இருந்தது. அவர்கள் சமாதி அடைந்து பனிரெண்டு வருடங்கள் ஆகியிருந்தன. இரண்டாம்முறை பேரழகி என்று நினைத்துக்கொண்டே பார்வையை கீழ் இறக்கினேன்.

படுக்கையைச் சுற்றி இருந்த சீடர்கள் விலக, அவர்களில் முதல்வன் பிரவானந்தன் என்னை நோக்கி வந்து “இன்னும் சிறிதுநேரம்தான் ஜி, உங்களை இன்னும் முன்னரே எதிர்பார்த்தோம்” என்றான். அவன் இன்றிருக்கும்  இடம் நானிருந்தது.

படுக்கையில் கிடந்த குருஜியின் உடலைக் கண்டு மனம் அசுயை அடைந்தது. உடலா? உடல் என்றா எண்ணினேன்? இல்லை, குருஜி இன்னும் சாகவில்லை, ச்சே என்ன இது, ஏன் மனம் இப்படி யோசிக்கிறது. நீண்ட மூச்சை உள்ளிழுத்து குருஜி இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டேன். மனம் ஓர் ஓரமாக பிரிந்து நின்று புன்னகைத்து இன்னுமா என்று சொன்னாய் என்றது. மனம் இவரா இவரா என்று அரற்றி கொண்டே இவர்தான் என்று ஒருப்பக்கம் குதூகலம் அடைய ஆரம்பித்தது. தலையை இடவலமாக ஆட்டிக்கொண்டே படுக்கையை நெருங்கினேன்.

குளிரில் நீண்டநேரம் இருந்த குருஜியின் பாதங்கள் சுருங்கி மஞ்சள் பூத்து பூசானம் படிந்தது போல கிடந்தது. கால்விரல் நகங்கள் கருப்பு நிறத்தை பூசியிருந்தன. கெண்டைக்காலிலும், தொடையிலும் தசைகள் வற்றிப்போய் எலும்புகள் துருத்திக்கொண்டு எரிந்து கருகிய விறகை நினைவூட்டியது. 

படுக்கைப்புண் என்பதால் வெள்ளைநிற அரைடிராயர் மட்டுமே அவரின் உடலில் கிடந்தது.

வயிறு வற்றிப்போய் முதுகெலும்புடன் ஒட்டியிருந்தது.

“ஊறா இறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை,

நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை” யார் பட்டினத்தாரா? சிவவாக்கியரா? இது வேறு ஏன் இப்போது ஞாபகம் வந்து தொலைக்கிறது?

நெஞ்சுக்கூட்டின் எலும்புகள் நிறைகுளத்தில் அலையெழுவது போல எழுந்தெழுந்து அடங்கிக்கொண்டிருந்தன.

திரவஉணவுதான் என்பதால் பல்செட் மாட்டிவிடும் தொல்லை இல்லை போல. கன்னங்கள் உள்ளொடுங்கி, கண் மூடி இருந்ததால் கண்ணின் குழி இருளடைந்து கிடந்தது. 

நெற்றியில் பிரவானந்தன் இட்ட திருநீற்றுப்பட்டை பளிச்சென்று விரிந்து கிடந்தது. தலையில் நீண்டமுடியைச் சுற்றி கிரீடமாக்கி இருந்தான்.

என் கண்கள் இயல்பாக அவரின் வலதுமணிக்கட்டை சென்று தொட்டது.

உளம் நடுங்க பிரவானந்தனை நோக்கி “முடியை வெட்டி மொட்டை ஆக்க வேண்டியதுதானே ஏன் செய்யவில்லை” என்றேன். என் குரலில் இருந்த கடுமை ஆச்சர்யமாக இருந்தது.

பிரவானந்தனின் கண்கள் இன்னும் அங்கு நின்ற சீடர்கள் பக்கம் திரும்பி, பின்னர் என்னை நோக்கியது. பிரவானந்தன் உறுதியான குரலில் “நான் தான் வேண்டாம் என்று முடிவுசெய்தேன் ஜி. குருஜியின் கிரீடம் அது. அவரின் ஆசையும் கூட” என்றான்.

என் காதுமடல்கள் சூடாகியது. கைகள் இறுகின. மீண்டும் மனம் இவனா? இல்லை அவனா? என்றது. எரிமலை குழம்பென ஊறி வெளிவந்த சொற்கள் அமைதியாக அனைவரையும் வெளியே போகச் சொல்லு என்று சொல்லி வலுவிழந்தது.

பிரவானந்தன் திரும்பி மற்ற சீடர்களைப் பார்க்க, அவர்கள் வணங்கி வெளியேறினர்.

“காத்திருக்கிறாயா நீ?” என்றேன். 

பிரவானந்தன் கனிவு ஊறிய கண்களில் புன்னகை எழ “நீங்களா?” என்றான்.

“நீயும் வெளியில் இரு, நான் குருஜியுடன் தனியாக இருக்கவேண்டும்”.

பிரவானந்தன் சத்தமில்லாமல் வெளியில் சென்று கதவை மூடினான்.

எவ்வளவு பெரிய அறை என்ற எண்ணம் எழுந்தது. ஏசியின் ரீங்காரம்  காதை நிறைத்தது.

2

26 ஆண்டுகளுக்கு முன், இந்த மையக்கட்டிடம் கட்டப்பட்டபோது மாதாஜிக்கு அடுத்த இடத்தில் குருஜி இருந்தார். அடுத்த இடத்தில் நான். ஞானப் பாதையில் அடியெடுத்து வைத்து பனிரெண்டு ஆண்டுகள் ஓடிய தடங்கள் என் உடலில் வெளிப்படையாக தெரிந்தன. தொடர் யோகப்பயிற்சிகள் உடலை இரும்பென ஆக்கி அதன் விளைவான ஒளி உடலில் கூடி இருந்தது. 

ஆசிரம வாழ்க்கைக்கு வந்தபின் ஒருபுறம் எனது உலகியல் கூர்மை அடைந்து கொண்டே சென்றது. எனது ஏழாவது வருட ஆசிரம வாழ்கையில் நான் அறியா மானுட இருப்பு இருக்கமுடியாது என்ற அசைக்க முடியா தன்னம்பிக்கை ஏற்பட்டது. குருஜி வர இயலாத, விரும்பாத இடங்களில் என் இருப்பும், சொல்லும் குருஜியுடையது என்றே ஏற்கப்பட்டது, வணங்கப்பட்டது.

மையக்கட்டிடத்தை வடிவமைக்க அமெரிக்காவிலிருந்து வடிவமைப்பாளர் வரவழைக்கப்பட்டார். ஆசிரமத்தின் மற்ற பகுதிகள் இந்தியாவின் தலை சிறந்த ஆர்க்கிடெக்கை கொண்டு வடிமைக்க, இது மட்டும் வேறு ஒருவரை கொண்டு செய்வது ஆசிரம வளாகத்தில் சீடர்களிடம் ஒருவித மன கிளர்ச்சியையும், ரகசிய உரையாடல்களையும் உருவாக்கியது.

அன்றைய ஆசிரமத்தின் நிதி நிலைமைக்கே, அமெரிக்க வடிவமைப்பாளர் ராபர்ட் லீ-க்கு அளிக்கப்படும் சன்மானம் மிக அதிகம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், மாதாஜி மற்றும் குருஜி இருவரும் வேறு எண்ணங்கள் எழுவதை ஒப்புவதில்லை. அவர்களுக்கான மன ஓட்டங்களை எண்ணி சென்றடைவதும் எனக்கு இயல்வதும் இல்லை.

அமெரிக்க வடிவமைப்பாளருடன் சேர்ந்து முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளுமாறு மாதாஜியின் ஆணை வந்திருந்தது.

ஆசிரமத்தின் பழைய குடிலில் தங்கியிருந்த ராபர்ட்டை சந்திக்க சென்றேன். குடிலின் கதவை திறந்து உள்ளே நுழைந்த கணம் ராபர்ட் முன் மேசையிலிருந்த மதுவும், அவன் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டும் முதலில் பார்வையில் பட்டது.

உயர்த்திய உறுதியான குரலில் “இது ஆன்மீக ஆசிரமம்” என்றேன்.

நிமிர்ந்த ராபர்ட், தன் கோலிக்குண்டு கண்களால் கண்ணாடி வழியே என்னை பார்த்தான். வயது அறுபதுக்கும் மேல் இருக்கும். பரங்கிப்பழம் போன்ற முகத்தின் தசைகள் அவற்றின் இயல்பான இடத்தை விட்டு கீழே இறங்கி தொங்கிக் கிடந்தன. இருக்கா இல்லையா என்று தெரியாத சிவந்த உதடுகளை திறந்து பழுப்பேறிய பற்களின் வழியே “வருமுன் கதவைத் தட்டி வரும் பழக்கம் இல்லையா இளைஞனே?” என்று சொற்களை இறைத்தான்.

கோபம் தலைக்கேறியது. அவன் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்து “நான் துறவி நீங்கள் என்னை சுவாமிஜி என்றே அழைக்க வேண்டும்” என்றேன்.

வெடித்துச் சிரித்து, “இது சரியான பதில் இல்லையே சுவாமிஜி, வரைபடங்களை கொண்டு வந்து இருப்பாய் என்று நினைக்கிறேன்” என்றான். அதில் இருந்த கூர்மை என்னை அசைத்தது.

 காவிநிற கைப்பையிலிருந்து இரண்டு பைல்களை எடுத்து மதுக்கோப்பை இருந்த மேசையில் வைத்து, “இதில் மேற்கொண்டு நீங்கள் என்ன மாற்றம் கொண்டு வரமுடியும் என்று தெரியவில்லை. பிரமாண்டத்துக்கும், கலை அழகுக்குமாக உலக புகழ் பெற்ற மூன்று கோவில்களை கட்டிய வடிவமைப்பாளர்கள் வடிவமைத்தவை” என்றேன்.

உலகப் புகழ்பெற்றவை என்ற வார்த்தைப் பிரயோகத்தை நினைத்து ஒரு கணம் என் தோள்கள் மேலும் உயர்ந்தன.

சுருக்கமாக “இன்னும் செய்வதற்கு இருக்கிறது என்பதாலேயே நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்” என்றான் ராபர்ட்.

இடது கையால் பைல்களை எடுத்து பிரித்துப் பார்க்கத் தொடங்கினான். அப்போது அவனில் கூடிய ஒன்று எனக்கு வியப்பளித்தது.

அவன் அறையை, அங்கு கூடியிருந்த ஒரு வித்தியாசத்தை உணர ஆரம்பித்தேன். ஆசிரம அறைகள் அறுக்கப்பட்ட செங்கல் போல ஒரே மாதிரியானவை. ஆனால் இந்த அறை இவன் வந்த ஒரே நாளில் இவனுடையதாக மாறி இருந்தது. 

அறையில் மாட்டப்பட்டிருந்த திரைச்சீலைகள் முழுவதும் மூடப்பட்டு இருந்தன. சுவரை ஒட்டி இருந்த நாற்காலியும், மேசையும் அறையின் மையத்தில் இருந்தன. மேசைக்கு மேலே தொங்கிய விளக்கில் இருந்த ஐந்து பல்புகளில் மூன்று கழட்டப்பட்டு மெல்லிய ஒளியை மட்டும் உமிழ்ந்தன. அந்த ஒளியும் நான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் அதிகமாக விழும்படியும், ராபர்ட் அமர்ந்திருந்த இடம் மெல்லிய இருட்டிலும் இருந்தது. அந்த இருள், ராபர்ட்டை நிழலுருவாக மிகப் பெரிதாகக் காட்டியது. நான் அமர்ந்திருந்த இருக்கை சற்று விந்தையான கோணத்தில் இருந்தது. நான் ராபர்ட்டை பார்க்க சற்று கண்களை திருப்பி அமர வேண்டும். என் கால்கள் வெளிவாசலை நோக்கி ஓடும் எத்தனிப்பில் இருப்பது போல இருந்தது.

பைல்களை மேசை மீது வைத்த ஒலி என்னை திடுக்கிட வைத்தது. 

“இந்த மொத்த பிளானும் உபயோகமற்றது. குப்பையில் எறி. மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்” என்றான் ராபர்ட்.

“ஆமாம், சரி” என்று சொல்லிய அடுத்த கணமே உணர்ந்து இருக்கையை விட்டு எழுந்தேன். 

அவனை நேருக்கு நேர் பார்த்து “என்ன சொல்கிறாய்? அது முடியாது, உன்னை அழைத்து வந்ததது மேலதிகமாக நீ ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கத்தான். முற்றிலும் உன் பிளானை கேட்டு செய்வதற்கு அல்ல, மேலும் அவை இங்கு ஏற்கனவே பிரமாண்டமான மூன்று கோவில்களை எழுப்பிய கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது. ஐயாயிரம் ஆண்டுகளாக தொடரும் ஒரு பாரம்பரியத்தின் நீட்சி அவர்கள்” என்றேன்.

ராபர்ட் அவன் இருந்த இருக்கையிலிருந்து எழுந்தான். அவன் எழுந்தபோது முந்தி எழுந்த அவனின் பெரிய நிழல் என் மேல் படிந்து பின்னால் சென்று விழுந்தது.  நின்றபோதுதான் அவன் உயரம் தெரிந்தது. என் தலை அவன் மார்பளவுக்கே இருந்தது.

மெல்ல குனிந்து முன்னால் வந்து சொன்னான், “நான் அழைக்கப்பட்டது பிரமாண்டத்தை கட்ட அல்ல, இன்னும் உங்கள் ஆசிரமத்துக்கு மக்கள் கூட்டத்தை எப்படி வர வைப்பது என்பதை திட்டமிட, குறிப்பாக உங்கள் பணம் எண்ணும் இயந்திரங்கள் எப்படி 24 மணிநேரமும் வேலை செய்ய முடியும் என்று காட்டுவதற்காக. இதுவே உங்கள் மாதாஜியின் கோரிக்கை, சுவாமிஜி” என்றான்.

என் இதயம் துடிக்கும் ஓசை வெளியில் கேட்க ஆரம்பித்தது. காது மடல்கள் சூடாகின. கெண்டைக்காலில் இரத்தம் வேகமாக பாய்ந்து முடிகள் நட்டுக்கொண்டன. கமறிய குரலில் “நீ.. நீங்கள் சொல்வது உண்மையா லீ?” என்றேன். என் மாற்றம் எனக்கே வியப்பாக இருந்தது.

லீ பொறுமையாக “சுவாமிஜி நீங்கள் இளைஞர். சொல்லுங்கள், ஒரு கட்டிடம் என்றால் என்ன?”

“கட்டிடம் என்பது ஒரு பருவடிவம். நாம் இருப்பதற்கு, வசிப்பதற்கு, குளிர், மழை, வெயில் போன்ற இயற்கை நிகழ்வுகளில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள உருவாக்கிக்கொள்ளும் ஒரு  இடம்”

லீ புன்னகைத்து, “அப்படியானால் நீங்கள் சொல்லும் பிரமாண்டம் என்பது என்ன?”

“பெரியது, பார்த்தவுடன் நம்மை வியப்பில் ஆழ்த்துவது”.

“ஹும், ஆனால் இந்த இரண்டும் நீங்கள் எதிர்பார்க்கும் அளவு பணப் பெட்டியை நிரப்பாது”

“இல்லை. அதில் நான் இல்லை”.

“சுவாமிஜி, சற்று கூர்ந்து கேளுங்கள். யாருக்கு தெரியும் உங்கள் ஆன்மீக பயணத்தில் இது உதவவும் கூடும்” என்று லீ கண்ணடித்தார்.

என் மறுப்பு எழும் முன்னே தொடர ஆரம்பித்தார்.

“நீங்கள் சொல்லும் வரையறைகள் சாதாரணமானது. சாதாரணமானவர்களுக்கானது. ஆனால், இங்கு உருவாக்க இருப்பது ஒரு ஆன்மீக அதிகார மையம். அதன் கணக்குகளும், வரையறைகளும் வேறு. 

இதோ இந்த ஆசிரமத்தின் வெளியே உயர்ந்த மலை இருக்கிறதே, இதை உங்கள் எத்தனை பக்தர்கள் பிரமாண்டமாக உணர்வார்கள்? நூற்றில் ஒருவர் இருக்கலாம். ஆனால் ஒரு கட்டிடத்தை பிரமாண்டமாக மனித மனம் உணர, கட்டிடக்கலை உருவாகி சில வழிமுறைகளை உருவாக்கியது. கடந்த 5000 ஆண்டுகளாக எகிப்தின் பிரமிடுகளிலிருந்து, கிரேக்க அரசவை முதல் இன்று நீங்கள் சொல்லும் அந்த மூன்று கோவில்கள் வரை, அந்த கட்டிடக்கலையே உருவாக்கி அளித்தது. மனித மனதின் இடத்தின் போதம், கண்களின் நிலை, செவியுணர் திறன் போன்றவற்றின் மீது அடைந்த ஞானத்தின் வெற்றியிலிருந்து அது கிளைத்து எழுந்தது.

ஆனால் நான் வந்த வழி என்பது அந்த ஞானத்தில் ஒரு திருகலை உருவாக்குவது. இதுவும் கலைதான். மறைந்து இருக்கும் கலை. லூசிபரின் கலை. லூசிபர் என்றால் ஒளியைக் கொண்டுவருபவன். ஒருமுறை உள்ளே வருபவர்களை என்றென்றும் விசுவாசியாக்கும், அவர்களின் பர்ஸை திறக்க வைக்கும்”.

நான் எனது அத்தனை கட்டுப்பாடுகளையும் இழந்து திகைத்து நின்றிருந்தேன்.

மதுக்கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு “நான் இரண்டு நாளில் வரைபடம் தயாரித்து தந்துவிடுவேன் என்று தி மதர்ஜியிடம் தெரிவித்து விடுங்கள். கட்டுவதை எல்லாம் உங்கள் ஆட்களே பார்த்துக்கொள்வார்கள். அதில் அவர்கள் திறமையானவர்கள்” என்று சொல்லி நிறுத்தி கண்ணடித்தார் லீ.

“நன்று மிஸ்டர் லீ, நான் தெரிவித்து விடுகிறேன்” என்று திரும்பி நடந்தேன். முன்னால் விழுந்த என் நிழல் மிகச்சிறியதாக இருந்தது.

3

மறுநாள் காலைநடைக்கு குருஜியுடன் நான் மட்டும்தான் சென்றேன். குருஜி காலையில் இரண்டு மணி நேரத்தில் பத்துமைல் நடக்ககூடியவர். நாளின் எஞ்சிய பொழுதில் ஜெபம், தவம் என்று வகுத்து கொண்டவர். மாலையில் ஒருமணிநேரம் சத்சங்கம் நடக்கும். பெரும்பாலும் அவர் ஒரு உரை நிகழ்த்துவார். இல்லை என்றால் பஜனைப்பாடல்கள். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மாதாஜி கலந்துகொள்வார். மற்றபடி ஆசிரம நிர்வாகம் முழுவதும் என் கீழ்தான் இயங்கியது. ஆசிரமத்தில் குருஜியின் பூர்வாசிரமம் பற்றி ரகசியமாக பேசிக்கொள்வது உண்டு. சீடர்களின் உலகம் வேறு, அங்கு ரகசியங்களுக்குப் பஞ்சமில்லை.

பாதையிலிருந்து விலகி மரச்செறிவிற்குள் நுழைந்தார். அவராக பேசினால்தான் உண்டு. உடன் செல்ல மட்டுமே என்னால் முடியும்.

“எது உன்னை உடைத்தது?”

“குருஜி?!”

“உன்னை உடைத்தது எது? உன் கண்கள் ஒளி இழந்து தோள்கள் குறுகி இருக்கின்றன. முக்கியமாக உன் மூச்சு ஒழுங்கில் இல்லை. உன்னில் என்ன நடக்கிறது என்று அறிவாயா?”

நான் எனது அனைத்து கட்டுகளும் அறுபட, மூச்சு திணற “இங்கு நடப்பது ஆசிரமம் அல்ல. பணம் மற்றும் அதிகாரத்தை உருவாக்கும் ஒரு இடம். அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் மிஸ்டர் லீ-யைக் கொண்டு நாம் வடிவமைக்கும் கட்டிடம் மனிதர்களை ஏமாற்றி பணம் பிடுங்க. இதுவா நான் பன்னிரெண்டு ஆண்டுகளாக இங்கிருந்து சென்று அடையும் இடம்?” என்றேன்.

“மிஸ்டர் லீ?… சரிதான்” என்று புன்னகைத்தார் குருஜி.

நான் சொன்னதில் உள்ள என் உள்ளகிடக்கை என் மனம் சென்று தொடும் கணத்தில், குருஜி, “என் பூர்வாசிரம கதை முழுவதும் நீ அறிந்ததில்லை அல்லவா”  என்றார்.

என் பதிலை எதிர்பாராமல் குருஜி தொடர்ந்தார். நாங்கள் இப்போது மரச்செறிவின் வழியே மலையேறிக் கொண்டிருந்தோம். சூரியோதயம் வர இன்னும் நேரமிருந்தது.

“வெகுகாலம் முன்பு, உன் தந்தை கூட அப்போது பிறந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு பழைய கதை, அதை சொல்லும் பழைய உடம்பு இது” என்று சொல்லி சிரித்தார்.

நானும் புன்னகைத்தேன்.

“அன்று இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்டு கோஹிமா வனப்பகுதியில் இருந்தேன். நாங்கள் பர்மாவில் இருந்து முன்னேறி வரும்  ஜப்பானிய இராணுவத்தை எதிர்பார்த்து காட்டின் வழியில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்தோம். முக்கால்வாசி வெடிகளை நான்தான் புதைத்தேன். எனக்கு அதிலிருந்த தேர்ச்சியும் வேகமும் வியப்பளித்தது. ஜப்பானிய ராணுவம் தவிர வேறு எதுவும் அந்த வெடியில் கால் வைக்கமுடியாது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.

மனித நடமாட்டம் மிகுந்ததால் அங்கிருந்த விலங்குகள் ஏற்கனவே விலகி விட்டிருந்தன. தங்களைவிட கொடூர விலங்குகளின் இடத்தில், மற்ற விலங்குகள் வசிப்பதில்லை” என்று சொல்லி நிறுத்தி தன் கூரிய கண்களால் என்னை பார்த்தார் குருஜி.

நான் நிகழ்காலத்துக்கு வந்து குழப்பமான முகத்துடன் அவரை பார்த்தேன்.

வெடிச்சிரிப்புடன் குருஜி தொடர்ந்து பேசலானார்.

“அன்று நள்ளிரவில் தொடர்ந்து வெடிகள் வெடிக்கும் சத்தம் கேட்டு நாங்கள் அரக்கப்பரக்க கூடாரத்திலிருந்து எழுந்தோம். எங்கள் பையையும், துப்பாக்கியையும் தூக்கிகொண்டு எதிர்திசையில் இருந்த மேட்டில் ஏறி பதுங்கிக்கொண்டோம். எங்களுக்குப் பின்னால் தொலைவில் காரிசன் குன்று இருந்தது.

ஜப்பானிய ராணுவம் முன்னேறி வர இரவெல்லாம் காத்திருந்தோம். விடிந்தபின்னும் கூட மரச்செறிவில் எந்த அசைவும் இல்லை. என் கமாண்டர், அவர்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்று பலமாக நம்பினார்.

எவ்வளவு நேரம் காத்திருக்க முடியும்? அதுவும் போர்க்களத்தின் நேரம் என்பது சாதாரண மனிதர்கள் உணரும் நேரத்தைவிட எடை மிகுந்தது.

முற்பகலில் எனது கமாண்டர் முடிவு எடுத்தார். அதன்படி நான் காட்டுக்குள் முன்னேறி சென்று பார்ப்பது, முடிந்தால் சமிக்ஞைகள் அளிப்பது, ஒரு மணி நேரத்தில் திரும்பவில்லை என்றால் அங்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்று முடிவு செய்து கொள்வது. மொத்த பட்டாலியனிடமும் இருந்தது இரண்டே இரண்டு ரேடியோக்கள். அதை இழப்பதற்கு கமாண்டர் விரும்பவில்லை. எனவே பழைய முறையான ஓநாய் போல சத்தமிட்டால் எதிரிகள் என்று புரிந்து கொள்வது என்று முடிவு செய்து கொண்டோம்.

இருபத்தியோரு வயது இளைஞனுக்கு அன்று இதை விட வேறு என்ன சாகசம் வாழ்வில் நிகழ முடியும்? வாழ்வாசை என்பது பாவம் என்று அனைத்து வீரர்களுக்கும் கற்பிக்கபட்டு இருந்தது. நாங்கள் அதை முழுவதும் நம்பினோம். அந்த நம்பிக்கை இல்லாமல் போர்க்களம் போக முடியாது.

நிறுத்திய குருஜி, “உயிர்கள் எல்லாம் இறப்பை நோக்கி சென்று கொண்டே இருக்கின்றன. சில வேகமாக, சில மெதுவாக. ஆனால் இறப்பு சிலநேரம் உயிர்களை தன்னுடன் விளையாட இழுத்துகொள்ளும். அணுகும் தோறும் விலகும், விலகும் தோறும்  அணுகும். இந்த தீரா விளையாட்டே உயிர்களின் வாழ்வில் இனிப்பை நிறைக்கிறது. அதுவும் இல்லை என்றால் கசப்பை தவிர இங்கு எதுவும் மிஞ்சுவதில்லை. நீ என்றாவது இறப்பை நோக்கி பெருவிருப்புடன் போயிருக்கிறாயா? என்றார். 

நான் தயங்கி “இல்லை குருஜி” என்றேன்.

“கசப்பை இனிப்பாக மாற்றும் வேறொரு மருந்தொன்று இருக்கிறது” என்று சிரித்த குருஜி தொடர ஆரம்பித்தார். 

“மேட்டிலிருந்து வேகமாக இறங்க தொடங்கினேன். இறங்க இறங்க என் வேகம் குறைந்தது. கொசுவுக்காக உடலெங்கும் பூசியிருந்த களிம்பு வியர்வை பட்டு நாறத் தொடங்கியது. கூடாரத்தை வலப்புறமாக சுற்றி கடந்து புதர் செறிவிற்குள் சென்றேன். நான் எனது பட்டாலியன் பார்வையில் இருந்தும் மறைந்தேன். ஒவ்வொரு காலடியும் மரணத்தை நோக்கி செல்வதாக கற்பனை செய்யும்போதே மனகிளர்ச்சியில் எனது புலன்கள் அதிகூர்மை அடைந்தன. மரச்செறிவை கடந்து சமவெளி தொடங்கும் இடத்தில் வெடிகளை புதைத்து வைத்திருந்தோம். நெருங்க நெருங்க தரையோடு தரையாக ஒட்டி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தேன். மரங்களின் நிழலில் இருந்து சமவெளியின் வெயில் வெளிச்சத்தை நான் எதிர்கொண்ட தருணத்தில், எனது அத்தனை ராணுவப்பயிற்சிகளும் பொருளிழக்க எழுந்து நின்றுவிட்டேன்.

சமவெளி எங்கும் நாற்பது, அம்பது ஓநாய்கள் தலை வேறு கால் வேறாக பிய்ந்து கிடந்தன. பசும்புல்வெளியில் இரத்தம் தேங்கி உறைந்து கருநீல வண்ணமாக இருந்தது. இத்தனை ஓநாய்கள் இறந்தபோது எழுப்பிய சத்தம் எப்படி கேட்காமல் போனது? கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தேன் முப்பதைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. இன்னும் இருபத்தைந்து நிமிடங்களில் திரும்பிச் சென்று செய்தி அளிக்க வேண்டும் என்று பரபரப்பு தொற்றிக்கொண்டது. சுற்றி சென்று மரச்செறிவை கடந்தால் விரைவாக போய்விட வாய்ப்பு இருக்கிறது. சமவெளியின் விளிம்பை ஒட்டி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். சட்டென்று என் கண்கள் அசைவை கண்டன, கைகளால் துப்பாக்கியை தோளிலிருந்து உருவினேன்.

அப்போதுதான் பிறந்திருந்தது போலிருந்த ஓநாய் குட்டி தேங்கிய இரத்தத்தில் வழுக்கி என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. உடலெங்கும் இரத்தம் பூசி கரியநிறத்தில் இருந்தது.

ஒரு கணத்தில் என் துப்பாக்கியின் விசையை அழுத்தினேன். தோட்டா பாய்ந்த கணத்தில் அச்சிறு ஓநாய் மிகப்பெரிய ஓலம் எழுப்பியது. அடுத்தகணம் அதன் உடல் புதைத்து வைத்த வெடியின் மீது விழுந்து வெடித்து சிதறியது. பிய்ந்த அதன் கால் இரத்தத்துடன் வந்து என் முகத்தில் அறைந்தது

கீழே விழுந்த கணம், நான் பார்த்தேன் சமவெளியின் மறுமுனையில் இருந்து  முன்னேறி வரும் ஜப்பானிய இராணுவத்தை. ஊர்ந்து சென்று சமவெளியின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் விழுந்தேன். என் நினைவு தப்பியது” என்று சொல்லி நிறுத்தினார் குருஜி.

மனிதன் உட்பட அனைத்து விலங்குகளும், இக்கட்டான சூழ்நிலையில் செய்வதறியாமல் நினைவு தப்பி விழுகின்றன. அது ஆக்கி அளித்த விசைகளின் பெருங்கருணை. நினைவுக்கு ஸ்மிருதி என்றும் பெயர். நினைவழிவது விஸ்மிருதி, மிருத்யு ஏறி வரும் ஊர்தி, ஆனால் நினைவாலேயே கூட மரணம் நோக்கி செல்பவர்கள் உண்டு. உனக்கு அப்படி யாரையாவது தெரியுமா? என்று கேட்டு குருஜி சிரித்தார்.

இன்னும் நடக்கவேண்டிய தூரம் இருந்தது.

குருஜி தொடர ஆரம்பித்தார், “நினைவு திரும்பியபோது இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக பெரிய அடி எதுவும் இல்லை. எழுந்து நின்று பார்த்தபோது உயரத்தில் காரிசன் குன்று இருந்த இடத்திலிருந்து வானத்தில் புகை எழுந்து கொண்டிருந்தது.

மெல்ல எதிர்திசை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இரவு வேகமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஓநாயின் இரத்தம் உடலெங்கும் களிம்புபோல அப்பியிருந்ததை அப்போதுதான் கவனித்தேன். இந்த கறையுடன் மேலும் நடப்பது ஆபத்தை நோக்கி செல்வது, எங்காவது பாதுகாப்பாக தங்க வேண்டும். பக்கத்தில் இருந்த செடியின் இலைகளை பறித்து கசக்கி உடலெங்கும் தேய்த்து கொண்டேன்.

அரைமணி நேரத்திற்கு பிறகு ஒரு விசித்திரமான இடத்தை கண்டேன். பாறைவிளிம்பின் குகை உள்ளே ஒரு கவிழ்த்து வைத்த குடம் போல மூன்றடிக்கும் குறைவான மண்ணால் செய்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுமானங்களை பார்த்தேன். அதனுள் நுழைவதற்கு பக்கவாட்டில் தரையில் இருந்து ஒன்றரை அடி உயரத்தில் துளை இருந்தது. முன்னர் அங்கு வாழ்ந்த ஏதேனும் பழங்குடிகள் உருவாக்கியவையாக இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. அதன் விசித்திரமான வடிவம் அந்த நேரத்திலும் கிளர்ச்சியை அளித்தது.” 

“கற்களை எடுத்து ஒன்றினுள் எறிந்தேன். எதுவும் வெளியில் வரவில்லை. முதுகில் கிடந்த என் பையை எடுத்தேன். அப்போதுதான் கவனித்தேன் விழுந்தபோது துப்பாக்கி, பையில் இருந்த பொருட்கள் எல்லாம் எங்கோ விழுந்துவிட்டுருந்தன. என்ன மீதம் இருக்கிறது என்று பார்த்தேன். ஒரு சிறிய உறைய வைத்த மண்ணெண்ணெய் கொண்ட அடுப்பு, சிறிய பாத்திரம், முழுவதும் நிரம்பிய இராணுவ தண்ணீர் பாட்டில், பனிரெண்டு உலர வைத்த மீன் துண்டுகளின் பொட்டலம் ஒன்று, கிழங்கு மாவும் இருந்தது. நல்லவேளை இந்த அடுப்புக்கு தனியாக தீக்குச்சி தேவைப்படாது. அதிர்ஷ்டத்தை நினைத்து வியந்தேன். தண்ணீரை சூடாக்கி கிழங்கு மாவை கொட்டிக்கிளறி கஞ்சி ஆக்கினேன். அடுப்பை அணைத்து விட்டு மீனை தொட்டுக்கொண்டு கஞ்சியை அருந்தினேன். பின்னர் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுபோய் தூரமாக குகைவாயிலின் பக்கவாட்டில் வைத்தேன். உணவு வாசனைக்கு தேடி வரும் விலங்கு ஏதாவது இருந்தால் உள்ளே வரைக்கும் வராது. எந்த வாய்ப்பையும் விட்டுவைக்க விரும்பவில்லை”.

“துளையின் வழியே ஏறி உள்ளே படுத்துக்கொண்டேன். கருவறை இப்படித்தான் கதகதப்பாக இருக்குமோ? நான் ஆறு மாதத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்தவன். அன்று எல்லாம் நிறைமாதத்தில் பிறக்கும் பத்து குழந்தைகளில் கூட இரண்டு தப்பி பிழைத்து வாழ்வது அபூர்வம். அதிலுமொன்று ஐந்து வயதுக்குள் இறந்துவிடும் எல்லா வாய்ப்புகளும் உண்டு. என் தாய் எனக்கு ரதியானந்தன் என்று பெயரிட்டார். வாழ்வின் மீது பெருவிருப்பு கொண்டு மகிழ்பவன். எளிய தாயுள்ளங்கள், நாம் கஷ்டப்பட்டு துறந்து, ஞானத்தின் துணைகொண்டு சென்று சேர்ந்தோம் எனும் இடங்களில், ஒருபடி முன்னே நின்றுகொண்டு நம்மை வரவேற்கின்றன, வாழ்த்துகின்றன. மாதொருபாகன் இதை சற்றேனும் உணர்ந்தவன். அரியும் அயனும் அங்கு வந்து சேர இன்னும் நாட்கள் இருக்கிறது. 

இதுவரை என்னை கையில் ஏந்தி வருவது எது? மெல்ல நினைவு மங்க தூக்கத்தில் நழுவ ஆரம்பித்தேன். அப்போது அந்த எண்ணம் தோன்றியது நான் ஏன் அந்த ஓநாயை சுட்டேன்? எனக்கு கண்டிப்பாக தெரியும் அது என்னை தாக்க வரவில்லை என்று, பின் எதற்காக வந்தது? ஏன் சுட்டேன்?”

“மறுநாள் காலை எழுந்த போது முதலில் வந்த எண்ணம் எனது வலது கை ஓநாய் கடித்து இழுத்து சென்று விட்டது என, வேகமாக இடது கையை கொண்டு போய் வலது கை இருந்த இடத்தை தொட்டேன். கை அங்குதான் இருந்தது. சடாரென்று இரவில் கண்ட கனவு நினைவில் எழுந்து வந்தது”.

“அதை நான் உனக்கு சொல்ல போவதில்லை. ஆனால் அந்த கனவில் வாழ்நாள் எல்லாம் யோகத்தில் அமர்ந்த குருநாதர் ஆன ஒருவர் இறக்கும் கணத்தில் ஓநாயின் காலை தோள்பட்டையோடு பிய்த்து கையில் வைத்து இருந்தார் அல்லது ஒருவேளை அது நான்தானா தெரியவில்லை.

அதிலிருந்த கசப்பில் நான் முற்றிலும் உடைந்தேன். கண்களை மூடிய ஒரு கணம் சமவெளியில் இறந்து கிடந்த ஒரு ஓநாயின் செக்க சிவந்த பெண்குறி என் கண்ணில் தெரிந்தது. குடலை பிடுங்கி வெளியே எறிவது போல வயிற்றில் இருந்து வாந்தி எழுந்து வந்தது. நான் மலைச்சரிவில் ஓடத் தொடங்கினேன். வரும் வழி நெடுக இருப்பே கசப்பாக மாறியது போல காறி உமிழ்ந்து கொண்டே வந்தேன்.

மேற்குநிலம் நோக்கி நிற்காமல் பயணித்துக்கொண்டே இருந்தேன். முன்னேறி வந்த ஜப்பானிய ராணுவத்தை, படைகள் காரிசன் குன்றிலிருந்த பங்களாவின் டென்னிஸ் மைதானத்தில் எதிர்கொண்டு தடுத்து நிறுத்தின என்று வரும்வழியில் தெரிந்துகொண்டேன்.

உலகின்  மிகச்சிறிய போர்க்களத்தில் உலகின் இரு பிரமாண்டமான சாம்ராஜ்யங்கள் போரிட்டுக்கொண்டன. பிரமாண்டங்களின் வெற்றி தீர்மானிக்கபப்படுவது மிகச்சிறிய இடத்தில்தான் அல்லவா?” என்று சொல்லி கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தார் குருஜி.

குருஜி மேலும் தொடரலானர் “வரலாற்றில் இடம் பெற்றிருக்ககூடிய ஒரு வாய்ப்பை இழந்தது என்னை வாட்டியது. கூடவே மலேரியா காய்ச்சலும், மஞ்சள் காமாலையும் சேர்ந்துகொண்டது. ‘பவதி பிட்சாம் தேஹி’  என்ற ஒரு வார்த்தையை தவிர வேறு ஒரு வார்த்தை என் வாயிலிருந்து எழவில்லை. அந்தசொல் சென்ற இடம் முழுதும் உணவாக மாறியது. 

ஓரிரவின் தொடக்கத்தில் ஹரிராம்புகூர் கிராமத்தை அடைந்தேன், நினைவு தப்பி விழும்போது நீண்ட இருண்ட குகைவாயிலை கண்டேன். அதன் அடியில் ஒரு வெளிச்ச புள்ளி. அதில் எழுந்தது ஒரு பெண்ணின் பேரழகு முகம்.” 

அவள் என்னிடம் கேட்டது “வந்துவிட்டாயா? ஏன் இவ்வளவு தாமதம்?”.

என் முழுஉடலே “பவதி பிட்சாம் தேஹி” என்றது என்று சொல்லி நிறுத்தினார் குருஜி!

நான் சொல்லிழந்து செயலற்று நின்றிருந்தேன்.

சூரியனின் முதல் ஒளிக்கீற்று வெளிப்பட்டது. குருஜி மட்டும் இரு கைக்கூப்பி காயத்ரியை வேண்டலானார்.

4

குருஜியின் நேரடி வார்த்தைகளில் அவரின் பூர்வாசிரமத்தை தெரிந்துகொண்ட பின், நான் மெல்ல மெல்ல விலகிச்சென்று கொண்டு இருந்தேன். மறுபுறம் ஆசிரம வேலைகள் மலைபோல எழுந்து வந்தன.

லீ வரைபடம் அளித்துச்சென்ற பின் மையக்கட்டிடம் விரைவாக எழ ஆரம்பித்தது. வரைபடம் முழுவதும் மாதாஜியிடம் இருந்தது. மையக்கட்டிடத்தின் வலப்புறம் சீடர்களும், சாதகர்களும் தங்குவதற்குரிய அறைகள் நீண்ட செவ்வக வடிவ கட்டிடத்தில் கட்டப்பட்டன. இடதுபுறத்தில் பக்தர்கள் தங்குவதற்குரிய அறைகள் வட்ட வடிவ கட்டிடத்தில் அமைக்கப்பட்டன. 

மையத்தில் வளரும் கட்டிடம் முதலில் வட்டவடிவமாக தோன்றியது. பின்னர் அந்த வட்டத்தில் ஒரு வால் தோன்றி வளர ஆரம்பித்தது. அது என்ன வடிவம் என்றே முதலில் தெரியவில்லை. ஆனால் ஒருநாள் இரவுணுவின் போது அது ஆங்கில எழுத்தான Q வடிவம் என்று பிரவானந்தன் சொன்னான். எரிச்சலுடன் ஊறுகாயை தட்டிலிருந்த பொங்லின் நடுவில் போட்டுகொண்டு திரும்பி ஏன் என்றேன். குயின் ஸ்டார்ட்ஸ் வித் கயூ என்று புன்னகைத்தான். அந்த கணத்தில் அவனை தீவிரமாக வெறுத்தேன். 

ஆனால் தொடர்ந்து மேலும் வால்கள் வளர ஆரம்பித்தன. ஒருவாறாக கற்பனையை அந்த வடிவம் வந்து தொட மாதங்களாகியது. எண்கோண வடிவ கட்டிடத்துக்கு, ஒவ்வொரு கோணத்துக்கும் நீண்ட நடைபாதைகள் அந்த வால்கள் என்று தெரியும்போது மாதங்கள் கடந்து ஆசிரமம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது.

கட்டி முடிக்கப்பட்ட பின் ஆசிரமத்துக்கு வரும் பக்தர்கள் வெள்ளத்தை பிரித்து நான்கு முன்புற வாயில்கள் வழியாக உள்ளே அனுப்பி, பின் பின்புற வாயில்கள் வழியாக வெளியேறச்செய்தோம். நடைபாதையை விட்டுவிலகி வழிதவறி சுற்றும் பக்தர்களை மீண்டும் மையநிரையில் கொண்டு சேர்ப்பதே சீடர்களுக்கு நாள் முழுதும் பெரும்பணியாக ஆனது. வழிப்பலகைகள் மற்றும் தடுப்பு சட்டங்கள் வைக்கலாம் என்று சொன்னபோது, மாதாஜி அதை மறுத்துவிட்டதாக குருஜி சொன்னார்.

நீண்ட வாயில்கள் வழியே வெளியே செல்லும் பக்தர்கள் முன் திடீரென்று எழுந்து நிற்பது பின்புறம் அமைந்த பிரமாண்ட நீல மலைகள். பெரும்பாலான சமயம் பக்தர்கள் திடுக்கிட்டு அப்படியே திரும்பி மீண்டும் உள்ளேவர முயல்வார்கள். அங்கு இருக்கும் சீடர்கள் மீண்டும் அவர்களை நுழைவாயிலுக்கு கொண்டு வந்து உள்ளே அனுப்புவார்கள். அவ்வாறு உள்ளே வருபவர்கள் மாதாஜியின் முன் உள்ள பலிபீடத்தில் மீண்டும் மீண்டும் காணிக்கை செலுத்துவதில் உள்ள விந்தை புரியவில்லை. 

காணிக்கைகள் பணமாக மட்டுமல்லாமல் பொருளாகவும் வர ஆரம்பித்தன. இரண்டாம் முறை உள்ளே வந்த தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய ரோல்ஸ்ராய்ஸ்சை காணிக்கையாக அளித்தபோது, எனக்கு புரிய ஆரம்பித்தது. விலை உயர்ந்த பொருட்களை, சொத்துக்களை, ஏற்றுகொள்ள ஒரு சடங்குமுறையை உருவாக்கி அளித்தேன். லீ சொன்னது மறுக்க இயலா உண்மை என என் கண் முன்னே நிகழ்ந்து கொண்டு இருந்தது. காணிக்கைகளை கணக்கில் வைக்க பிரவனாந்தனிடம் முழு பொறுப்பை அளித்தேன்.

மாதாஜி காலை, நடுப்பகல், மாலை என்று மூன்றுமுறை பக்தர்களுக்கு காட்சி தருவார். மையக்கூடத்தில் நிரப்பப்பட்ட பக்தர்நிரை உணர்வெழுச்சியில் தளும்பும் நேரத்தில், வானிலிருந்து தேவன் என கட்டிடத்தின் மேல்தளத்தில் உள்ள அவரின் வசிப்பிடத்திலிருந்து தானியங்கி தூக்கி மூலம் நேரடியாக காட்சிமேடை மீது தோன்றுவார். பெரும்பாலும் அந்த முதல் உணர்வெழுச்சி அங்கு இருக்கும் சீடர்கள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்படும். பின்னர் அவர் விடைகொள்ளளும் போதும் அவ்வாறே நிகழ்த்தப்படும். 

தினம்தோறும் செய்யும் எந்த ஆன்மீக சாதனைகளையும் செய்யவில்லை. குருஜியிடம் ஆசிரமவேலை அல்லாமல் தனியாக பேசி மாதக்கணக்காக ஆகி இருந்தது. குருஜியுடன் நடையும் செல்வதில்லை. 

பன்னிரண்டு வருடங்கள் அணுவணுவாக சேர்த்த அத்தனையும் இழந்து விட்டதாக உணர்ந்தேன். உடல் தளும்ப தொடங்கியது. மைய மண்டபத்தின் மேல் தளத்தில் குருஜி மற்றும் மாதாஜியின் வசிப்பிடங்கள் இருந்தன. இரண்டுக்கும் நடுவில் கீழே பார்வையாளர் மண்டபத்தின் வெற்றுவெளி பெருகி நிறைந்து இருக்கும்.

அன்றொரு நாள் ஆசிரமத்துக்கு வந்த கடிதத்தில், உலகை ஆளும் தொழில்நுட்ப வேலையிடம் ஒன்றின் அலுவலக கட்டிடத்தை வடிவமைத்த ராபர்ட் லீ அதன் இறுதிகட்ட பணிகள் முடியும் முன்னர் எழுபதெட்டாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்றும், இதை தங்களின் மதிப்புமிகு வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருப்பதாகவும், மேலும் ராபர்ட் லீ அலுவலகம் அவரின் பணியை தொடர்ந்து செய்ய விரும்புவதாகவும், எப்போதும் போல ஒத்துழைப்பை நல்குமாறும் வருத்தத்துடன் வேண்டிக்கொண்டிருந்தது.

கடிதத்தை எடுத்துக்கொண்டு மையமண்டபத்தை அடைந்து காட்சி மேடையின் பின்புறம் மறைவாக இருக்கும் சுழற்படிகளில் ஏறி குருஜியின் அறையை அடைந்தேன். கதவு மூடப்பட்டு இருந்தது. பிரவனாந்தன் பெரும்பாலும் கதவுக்கு முன் இருப்பான், காணவில்லை. என்னை தவிர வேறுயாரும் குருஜியின் அறைக்குள் நுழைவதில்லை. தரை விரிப்புகள் காலடிசத்தத்தை விழுங்கி கொண்டன. ஒரு கணம் தயங்கி கதவைத் தட்டினேன்.

“யார்” என்ற குரல் பேரலையென எழுந்து வந்து கதவை அறைந்தது.

நான் மூச்சிரைக்க இறங்கி ஓடிவந்து ஆசிரமத்தை விட்டு வெளியேறினேன்.

வெளியேறிய பிறகுதான் தெரிந்தது ஆன்ம சாதனை என்று நான் கற்றுக்கொண்டது எல்லாம் உலகியலை என்றுதான். இமைக்கும் நேரத்தில் நான் கட்டிடங்கள் கட்டி அளிக்கும் புகழ்பெற்ற தொழிலதிபர் ஆனேன். ஆசிரமத்தின் முன்னாள் சீடன் என்பதே எனது ஆகப்பெரும் அடையாளமாகி பெரும் செல்வந்த வாடிக்கையாளர்களை இழுத்து வந்தது.

குருஜியிடமிருந்து வந்து பார்க்க சொல்லி தொடர்ந்து செய்தி வந்துகொண்டிருந்தது. 

ஒருநாள் பிராவானந்தன் நேரில் வந்திருந்தான்.

“நீங்கள் வர வேண்டும், குருஜி தன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். உங்களைப் பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்” என்றான்.

அவனில் கூடியிருந்த பொலிவு என் கண்களை கூசச்செய்தது.

“என்ன ஆயிற்று” என்றேன் சுருக்கமாக.

“புரோஸ்டேட் கேன்சர், இரண்டு விதைகளையும் நீக்க வேண்டி இருந்தது. இருந்தும் அதற்குள் மற்ற பகுதிகளுக்கும் பரவிவிட்டது. இரண்டு மாதமாக படுக்கையில் தான் இருக்கிறார். படுக்கைப்புண் வேறு. அவரின் குரலும் மாறிவிட்டதால் அவர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இல்லை.

வேறுவழி இல்லாததால் முக்கியமான பக்தர்களை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம்.” என்றான்.

“ஹும், வருகிறேன்” என்றேன்.

“சரி” என்று சொல்லி திரும்பியவன், “நீங்கள் மாதாஜி சமாதி அடைந்ததற்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தோம், வந்து இருக்கலாம்” என்றான்.

அவன் கண்களை நோக்கி, “ஆம் வந்திருக்க வேண்டும், வருகிறேன்” என்றேன்.

5

ஓநாயின் தொண்டை அறுபட்டது போன்ற சத்தம் என்னை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தது. குருஜி இருமிக்கொண்டு இருந்தார். தலையணையில் இருந்து அவர் தலை கீழிறங்கி இருந்தது.

பன்னிரெண்டு ஆண்டுகள் என்னை ஆண்டவர் தலையை தூக்கி வைக்க என் கைகள் அசுயை அடைவதை உணர்ந்தேன். தலையணை கீழே பழுப்புநிற தோலட்டை போட்ட குருஜியின் குறிப்பேடு இருந்தது. நான் அவரை முதல்முறை பார்க்கும்போதே அது அவர் கையில் இருந்தது. இத்தனை ஆண்டுகள் தன் கூடவே வைத்திருக்கிறாரா என்ன? 

கைகள் பரபரப்படைந்தன. வேண்டாம் என்று என் உள்மனம் அலறும் ஓலத்தை மீறி கை தன் அத்தனை கட்டுப்பாடுகளையும் உடைத்து அதை எடுத்து திறந்திருந்தது.

அது ஒரு நாட்குறிப்பு. நான் பிறப்பதற்கு சரியாக பன்னிரெண்டு ஆண்டுகள் முந்தையது. என் கைகள் பக்கங்களை புரட்டி கொண்டு இருந்தன. குருஜியின் கிறுக்கலான கையெழுத்தில் யோகசாதனை பற்றிய சிறு குறிப்புகள் எழுதப்பட்டு இருந்தன. குருஜி எனக்கு போதித்தவை, நான் ஆன்மசாதனையாக மேற்கொண்டவை. அனைத்தும் நான் அறிந்தவைதான். 

கை புரட்டிக்கொண்டே இருக்க, மார்ச் மாத பனிரெண்டாம் தேதியும், அதற்கு அடுத்த நாளும் நுணுக்கி நுணுக்கி இரண்டு பக்கங்களும் நிரப்பப்பட்டு இருந்தன. அதன் பின் முழுதும் பழுப்பேறிய வெள்ளைப்பக்கங்களாக இருந்தது.

மனதிற்கு ஒவ்வாத ஒன்றை செய்ய ஆரம்பித்தவுடன், முழுவிசையுடன் அதை செய்யச்சொல்லி அழுத்தும்  மனதின் மாயம் என்ன என்பது எப்போதும் என்னை திகைப்பில் ஆழ்த்துவது. நான் படிக்க ஆரம்பித்தேன்.

“அன்று எல்லாம் இந்த இடம் மனிதர்கள் அணுகமுடியாததாக இருந்தது. நான் ஞானநாட்டம் கொண்டு பல்வேறு ஆசிரமங்கள் வழியே சென்றுக்கொண்டே இருந்தேன். அவ்வாறு எனக்கான குருவை தற்செயலாக கண்டடைந்து, அவருடன் இந்தமலை மீது ஏறிவந்து ஆறு மாதங்கள் ஆகின்றது.

கடந்த மூன்று நாட்களில் குருஜிக்கு உடல் மிகவும் நலிந்துவிட்டது. மலை ஏறிவந்த பிறகு இந்த ஆறுமாதத்தில் ஒருநாளும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதில்லை. டிசம்பர், ஜனவரியின் பனியில் கூட மேலாடை இல்லாமல் குடிலின் வெளியில் அமர்ந்து இருக்கக்கூடியவர். உணவும் முற்றிலும் தீர்ந்துவிட்டது. இன்று மாசிமாத முழுநிலவு, மகமும் கூட.

“நிலவை பார்த்து தியானம் செய்துவிட்டு, நாளை காலை கீழ் இறங்கலாம். உனக்கு இது முக்கியமான நாள், முக்கியமான இரவு” என்றார்.

உலர வைக்கப்பட்ட கிழங்குமாவை சுடுநீரில் இட்டு கஞ்சி தயாரித்தேன். குருஜியை தாங்கிப்பிடித்து அமரவைத்து ஊட்டினேன். வலதுகை சுட்டு விரலை வானை நோக்கிக்காட்டினார். வாயை துடைத்துவிட்டு குடிலின் வெளியில் வந்து பார்த்தேன். கிழக்கில் முழுநிலவு எழுந்து கொண்டிருந்தது. 

கட்டிலோடு குருஜியை கொண்டுவந்து வெளியில் வைத்தேன். தரையில் விரிப்பை விரித்து கிழக்கு நோக்கி அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன்.

காட்டின் ஒலியாக சீவிடுகளின் ஒற்றைப்பேரலை எழுந்து வந்தது. மெல்ல அடங்கி அருகிலிருந்த குருஜியின் சீறல்மூச்சு ஓநாயின் ஓலம் போல கேட்க ஆரம்பித்தது. நெற்றியின் மையத்தில் உருவங்கள் எழுந்து வந்து பின்னர் மெல்ல உருவெளிக்காட்சிகளாக மாற ஆரம்பித்தன. மனம் இரண்டாக உடைந்தது. ஒன்றையொன்று கவ்விக்கொண்ட நச்சரவின் நோக்கு எழுந்தது. காட்டின் இருளில் இருந்து வேழம் எழுந்து வந்து கொண்டிருந்தது. ஓங்காரம் உருவெளியாகியது.

அந்த நொடியில் சிகரத்தின் உச்சியில் ஓரொற்றை ஓநாய் வானை நோக்கி அறைகூவல் விடுத்தது. எழுந்து வந்த யானை உரிக்கப்படாமல் பின்சென்று மறைந்தது. இருநிலவு எழவில்லை.

ஆங்காரம் எழுந்து கண்களில் நீர் வழிந்தது. தியானம் கலைந்து கண்களை திறந்தபோது மேற்கில் அணைந்து கொண்டிருந்த ஒற்றை நிலவைப்பார்த்தேன். கண்ணீரை துடைக்க வலதுகையை தூக்க முடியாமல் எடை இழுத்தது. இடதுகையால் கண்களை அழுந்த துடைத்து, வலதுகையைப் பார்த்தேன்.

வலதுகை குருஜியின் தொண்டையைப் பற்றி இறுக்கிக்கிடந்தது. குருஜியின் கை எனது மணிக்கட்டை இறுகப்பற்றி இருந்தது. மீண்டும் பொருளில்லா ஆங்காரம் என் அடிவயிற்றிலிருந்து எழுந்து வெளியை நிறைத்தது.

எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை. மெல்ல குருஜியின் விரல்களை பிரிக்க முயற்சித்தேன். சிறிதுசிறிதாக பலத்தை அதிகப்படுத்தி விரல்களை பிரிக்கப் பார்த்தேன். எனது இடதுகையின் பலம் இழந்து கொண்டே வந்தது.

கீழ்வானில் சிவப்பு தீற்றல் எழுந்தது. இடுப்பில் எப்போதும் இருக்கும் கத்தியை எடுத்து ஒரேவெட்டில் அவரின் கையை வெட்டினேன். பின் ஒவ்வொரு விரலுக்கும் இடையில் கத்தியை கொடுத்து நெம்பி, என் கையை விடுவித்துக்கொண்டேன்.

அங்கேயே குழி ஒன்றை வெட்டினேன். புதைப்பதற்கு முன் அவரின் கழுத்திலிருந்து வயிறு வரை இருந்த மார்பின் மேல்தோலை மிக கவனமாக உரித்து எடுத்துக்கொண்டேன்.

அவரைப்புதைத்து அங்கு ஒரு விதையை விட்டு நீருற்றிவிட்டு மலையிறங்கத் தொடங்கினேன்.

வரும்வழியில் அந்த தோலைக்கழுவி உலர்த்தி எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டேன்.”

அதன்பின் பல பக்கங்கள் எதுவும் எழுதப்படவில்லை. 

டிசம்பர் மாதம் இருபத்தி நான்காம் தேதி பக்கத்தில், “குருஜியை கொண்டு என்னை மூடிக்கொண்டேன்” என்ற ஒற்றைவரிக்குறிப்பு.

நாட்குறிப்பில் வெளிப்புறஅட்டையின் தோலை தொட்டுக்கொண்டிருந்த என் விரல்கள் வெப்பமடைந்து உருகின. நான் கண்களை மூடினேன். ஓசை அணைந்தது. இருள் யானையென எழுந்து வந்து என்னை அழுத்தத்தொடங்கியது.

6

“பவதி பிட்சாம் தேஹி” என்ற மன்றாட்டு எழுந்தது.

இருளென எழுந்துவந்த வேழத்தின் தோல் உரிக்கப்பட்டது.

அகோரானந்தன் கண்களை திறந்தான். குருஜி படுத்திருந்த கட்டிலின் பின்னுள்ள ஜன்னலின் வழியே இரு நிலவு எழுந்திருந்தது. நீர் நிறைந்த கண்களை மூடித்திறந்து மீண்டும் பார்த்தான். யோக இரவின் இரு பெருநிலவின் ஒளி அப்போதும் அமுதெனப்பொழிந்தது . 

குனிந்து குருஜியை பார்த்தான். அவனின் வலதுகை குருஜியின் பாதங்களை பற்றிக்கொண்டு கிடந்தது. என்றுமிருக்கும் ஒன்றின் கிரீடம் அவரின் தலையில் அமைந்திருந்தது. அவரின் குறி எழுந்து மூச்சு அடங்கிவிட்டு இருந்தது. அவரின் பாதங்களை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு அறைக்கதவை திறந்தான். எதிரில் நீண்டு கிடந்த இருண்ட ஆழத்தை தாண்டி மாதாஜியின் அறையின் கதவு தெரிய “பேரன்னை” என்று வாய்திறந்து அவன் சொல்லிக்கொண்டான்.

பிரவானந்தன் சுற்றுவட்டப்பாதையில் வேகமாக மையமண்டபம் நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான்.

தூரத்தில் தெரிந்த நீலமலைகள் தெளிய மீண்டும் அகோரானந்தன் நாவில் “பிரமாண்டம்” என்ற சொல் இறுதியாக எழுந்து அணைந்தது. 

சுழற்வட்டப்பாதையில் பிரவானந்தன் மேலேறி வந்தான். இருவர் கண்களும் ஒரு கணம் சந்தித்துக்கொண்டன.

“ஆம் குருஜி, நற்பொழுது மாசிமக முழுநிலவு” என்று சொல்லி வணங்கினான்.

அகோரானந்தன் சுழல்படிகளில் இறங்கி வெளியேறினான்.

சில மாதங்களுக்குப்பின், ஹரிதாம்புகூர் மலையில் ஆலமரத்தின் அடியில் அகோரானந்தர் சமாதி அடைந்த செய்தி பரபரப்பாக நாடு முழுவதும் பேசப்பட்டது. வெற்றிகரமான தொழிலதிபரும், ஞானியுமான அவரின் ஜீவசமாதி இடத்தை நோக்கி மக்கள் வெள்ளம் திரும்ப ஆரம்பித்தது.

ஆசிரமத்தில் குருஜி பிரவானந்தர் பக்தர்களுக்கு  ஒருநாளைக்கு மூன்று முறை காட்சிதர ஆரம்பித்தார். அவருடன் தோலிட்ட ஒரு நாட்குறிப்பு எப்போதும் உடனிருந்தது. அதன் கடைசி பக்கத்தில் பொடி எழுத்துகளில் “பவதி பிட்சாம் தேஹி” என்று எழுதி அதன் கீழே இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது.

“உள்ளே நுழைபவர்களை மிகச்சிறியவர்களாக உணரச்செய்யும் மைய மண்டபம் மிகமிக பிரமாண்டமானது”. 


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.