நிழல்களின் ஓலம்

1

கண் ஆஸ்பத்திரியைக் கடக்கும்போதே மழை வலுப்பெறத் துவங்கியிருந்தது. பின் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெண் பக்கவாட்டுத் திரைகளை விரிவடையச் செய்தபடி, “ஓ! இன்னிக்குன்னு பாத்து இப்படி கொட்டுதே!” என்று புலம்பினார்.

“பிரச்சனை இல்ல, போயிடலாம்” என்று எந்திரத்தனமாகச் சொல்லிக்கொண்டே ஆட்டோவை வலப்பக்கமாக ஒடித்தான் முத்தப்பன்.

லெட்சுமி விலாஸில் அப்போதும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. அதன் வாசலில் அமர்ந்து பூ விற்கும் பெண்மணி அவசரகதியில் அனைத்தையும் மூட்டைக்கட்டிக் கொண்டிருந்தாள். வெண்ணிற நாய் ஒன்று மறைவிடம் தேடி பேருந்து நிலையத்தை நோக்கி ஓடியது. சாலையின் இருமருங்கிலும் இருந்த நடைபாதையில் மக்கள் கூட்டம் செறிந்திருந்தது. அதில் பெரும்பான்மையான முகங்களில் ஒருவித பொறுமையின்மை அப்பிக்கிடந்தது. ஸ்டேஷன் வாசலில் இருந்த மூவண்ணக்கொடி வாடிய மலர்போல் சுருங்கி கம்பத்துடன் ஒட்டிக்கிடந்தது.

பயணிகள் இறங்கிக்கொண்டிருந்த நகரப் பேருந்து நகர்வதுவரைக் காத்திருந்துவிட்டு ஆட்டோவை புதிய நுழைவை நோக்கிச் செலுத்தினான் முத்தப்பன். அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த ஆட்டோக்காரர்களின் ஹாரன் சத்தத்தையும், அதைவிட சத்தமாக ஒலித்த அவர்களின் உச்சுக்கொட்டல்களையும், உறுமல்களையும் கருத்தில் கொள்ளாமல் வண்டியை வாசலை ஒட்டி நிறுத்தினான்.

புடவைத் தலைப்பால் தலையை மறைத்தபடி இறங்கிக்கொண்டு, உள்ளங்கையினுள் சுருட்டி வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டை தந்துவிட்டு நடைமேடை நோக்கி நடந்துபோனார் அந்த முதிய பெண்.

முத்தப்பன் ஆட்டோவினுள் அமர்ந்துகொண்டு தலைக்குமேல் இருந்த கம்பியில் செருகிவைத்திருந்த கரி படிந்த பழைய பனியன் துணியை எடுத்து கண்ணாடியை அழுத்தித் துடைத்தான். பிறகு சட்டையின் உள்பாக்கெட்டினுள் இருந்த பில்டர் சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு வண்டியைத் திருப்பினான். மீனாட்சிபுரம் சாலை நுழைவில் இருந்த கீதா டீ ஸ்டாலில் காபி சொல்லிவிட்டு, பாக்கெட்டினுள் இருந்த உள்ளங்கையளவு குறிப்பேட்டில் அன்றைய வரவுசெலவு கணக்குகளை பதியத் துவங்கினான். மாலையிலிருந்தே மழை விடாது பொழிவதால் அன்று பெரும்பாலான பயணிகள் பேரம் பேசியிருக்கவில்லை. அதன் விளைவாக பெட்ரோல் பணம் போக கையில் கணிசமான தொகை எஞ்சியிருந்தது. டவுண், பேட்டை என்றில்லாமல் வண்ணார்பேட்டை, பாளையம்கோட்டை திசையில் ஏதேனும் சவாரி வந்தால் மட்டும் ஏற்றுக்கொண்டு அப்படியே அன்பு நகரில் இருக்கும் தனது அறைக்குத் திரும்பிவிடலாம் என்று தீர்மானித்தபடி காபியை அருந்தினான். டீக்கடையில் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் பெருகிக்கொண்டிருந்தது. கரூரில் கூட்ட நெரிசலால் நிகழ்ந்த மரணங்கள் குறித்து ஒரு குழு காரசாரமாக விவாதித்துக் கொண்டிருருப்பதை ஒருவித பற்றின்மையுடன் கவனித்துக்கொண்டிருந்தான். வெகுஜனத்துடன் உறவாடுவதை நெடுங்காலம் முன்பே நிறுத்தியிருந்தான் அவன். 

மழை அதன் அடர்த்தியைக் குறைத்துக்கொண்டு மெல்லியத் தூறலாய் நிலைகொண்டிருந்தது. ஸ்டேஷன் அருகே எதுவும் அமையாததால் வண்டியை பேருந்து நிலையத்தை ஒட்டினாற்போல் ஓட்டிச்சென்றான். பழமுதிர்சோலை அருகே ஒரு பெண் தச்சநல்லூருக்கும், ஹார்டுவேர் கடை வாசலில் ஒருவர் ரெட்டியார்பட்டிக்கும் சவாரி கேட்டனர். அவர்களை தவிர்த்தபடி நயினார் காம்ப்ளெக்ஸின் ஊடாக பயணித்தான். மின்சாரக் கோளாறினால் இரட்டைப்பாலத்தின் கீழடுக்கு இருளைப் பூசிக்கொண்டிருந்தது. வலதுபுறம் ஒரு கடைக்காரன் ஷட்டரைப் போட்டுவிட்டு நீர்தேங்கி இருந்த சாலையை எப்படி கடப்பது என திட்டமிட்டுக் கொண்டிருந்தான். பூர்ணகலா தியேட்டர் நுழைவை ஒட்டி ஒரு டிவிஎஸ் மொபெட் அனாமத்தாகச் சரிந்து கிடந்தது. பிற வண்டிக்காரர்களும், நடந்து செல்பவர்களும் அதைக் கண்டும் காணாததைப்போல் கடந்துசென்றனர். எதிர்சாரியில் பூட்டிக்கிடந்த பேக்கரி ஒன்றின் தகரக்கூரையின் கீழ் ஒரு பசுவும் அதன் கன்றும் நின்றுகொண்டிருந்தது. அதற்கு இரண்டடி பின்னால் முற்றிலுமாக இருண்டிருந்த மூலையில் ஒருவர் குடையுடன் நின்றுகொண்டிருந்தார். முகம் புலப்படவில்லை என்றாலும் அவர் விழிகள் தன்னையே நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்த முத்தப்பன் அவரை அணுகி, “ஆட்டோ?” என்றான். அவர் வேண்டாம் என்று தலையை மட்டும் அசைத்துவிட்டு வெடுக்கென மறுபுறம் திரும்பிக்கொண்டார். அவர் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்கிற உத்தேசத்துடன் இரண்டொரு நொடிகளுக்கு அங்கேயே நின்றான் முத்தப்பன். பிறகு இதென்ன அபத்தம் என தன்னிடமே கூறிக்கொண்டு வண்டியை நகர்த்தினான்.

சில தூரம் முன்சென்றபோது ஒரு ஆட்டோ அவனை இடிப்பதைப்போல் நெருங்கி வந்து கடைசிக் கணத்தில் தந்திரமாய் வளைந்து நூலிழையில் விலகிச்சென்றது. அதை ஓட்டிவந்தவன் தலையை வெளியே நீட்டி, நாக்கை மடித்துக்காட்டி அவனை பரிகாசம் செய்தான்.

தெரிந்தவன்தான்.

முத்தப்பன் அவனைப் பார்த்து கையசைத்து முறுவல் செய்தான். அவன் மறைந்ததும் கீழ்த்தரமான வசைச்சொல் ஒன்றை முணுமுணுத்தபடி வண்டியைக் கிளப்பினான்.

முத்தப்பன் படித்தவன். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தவன் அதன் பிறகு குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்லத் துவங்கினான். இறுதித் தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே தந்தை மற்றும் அண்ணனை ஆற்று வெள்ளத்தில் பறிகொடுத்தவன் அதன் பிறகு ஆயிரத்தம்மன் கோவில் அருகே இருக்கும் சிறிய மெக்கானிக் கடையில் பணிக்கு அமர்ந்தான். மூன்று வருடங்கள் கழித்து அம்மா வழி தாத்தா மறைந்தபிறகு பணகுடி அருகே சிறிய கிராமம் ஒன்றில் எதற்கும் உதவாமல் கிடந்த ஐந்து சென்ட் நிலம் அவர்கள் கைக்கு மாறியது. அதை விற்று தனக்கு சொந்த ஆட்டோ வாங்கிக்கொண்டு, மீதம் இருந்த பணத்தை வைப்புத்தொகையாக வங்கியில் போட்டான். எப்பாடுபட்டாவது படித்துவிடவேண்டும் எனும் உத்வேகத்துடன் தொலைதூரக்கல்வி முறையில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயில விண்ணப்பித்தவனை வறுமையின் விஷக்கொடுக்குகள் வெகுவிரைவிலேயே முடக்கிப்போட்டன. அம்மாவின் சிகிச்சைக்கென வாங்கியிருந்த கடனை வட்டியுடன் சேர்த்து அடைப்பதிலேயே பத்தாண்டுங்கள் பஸ்பமாகியிருந்தது. அம்மாவின் மரணம் அவனுள் தாளமுடியாச் சலிப்பை விதைத்து, உதிக்கும் எண்ணம் ஒவ்வொன்றிலும் கசப்பின் கருநிறச் சாயம் பூசியது. எந்த ஒரு உறவிலும், செயலிலும் எளிதில் பற்றிழந்தான். அவனை பலவந்தமாய் தக்கவைத்துக்கொள்ள முற்படும் சுற்றங்களை வெறுத்தொதுக்க காரணங்களை நாடுபவனானான். காலப்போக்கில் சகமனிதர்களிடம் இருந்தே தன்னை விலக்கிக்கொள்பவனாக உருமாறிப்போனான். இயல்பென வெளிப்பட்ட இக்குணத்தை நியாயப்படுத்தும் பொருட்டு பல நம்பிக்கைகளை உரம்போட்டு வளர்த்தெடுத்துக்கொண்டான். பிணந்தின்னிகளின் உலகத்தில் பிறர்நலம் கருதுவதில் பொருளேதுமில்லை என அடிக்கடி எண்ணலானான். எவரை நம்பியும் தானில்லை என்கிற கூற்றை ஆபரணம்போல் அணிந்துகொண்டான். உறவுகள், சமூக அமைப்புகள் என அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்திருந்தாலும் அதை பிறரின் மீது திணிக்கும் மூர்க்கம் இல்லாததால் பெருவாரியான பயணிகளுக்கு அவன் ஏற்புடையவனாக திகழ்ந்தான். கடின உழைப்பு, அளவான பேச்சு மற்றும் நியாயமான வாடகையினால் இப்போது பாளையம்கோட்டை, மகாராஜ நகர், வி.எம்.சத்திரம் பகுதிகளில் ஒருசில குடும்பங்களுக்கு வேண்டப்பட்டவனாக உருவாகியிருந்தான். ஆனால் பின்னிருக்கையில் அமர்ந்து உற்சாகமாய் பேசிக்கொண்டு வருபவர்கள் ஒருகணம் மௌனித்து அவன் முகத்தையும், உடல்மொழியையும் கூர்ந்து கவனித்தால் அவற்றில் இருக்கும் ஒருவித விலகலை, நிரந்தர இறுக்கத்தை எளிதில் கண்டுகொள்ளமுடியும். தங்களை முற்றாக புறக்கணிப்பவன் இவன் என்று உடனுக்குடன் புலமாகும்.

பதினைந்து நிமிடங்கள் அங்கும் இங்குமென அலைந்துவிட்டு, அலுப்புடன் அதே இடத்திற்கு மீண்டபோது, அதே கடையின் வாசலில் அசையாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார் அந்த மனிதர். விழிகள் அவனையே வெறித்துக்கொண்டிருக்க குல்லா ஒன்றினால் முகத்தை முழுவதுமாக மறைத்திருந்தார்.

முத்தப்பன் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான். அவருடன் விழி கோர்ப்பது வீண் என உணர்ந்து முகத்தை நேராக்கிக்கொண்டான்.

“ஆட்டோ தம்பி, கொஞ்சம் நில்லுய்யா!”

முத்தப்பன் ஒருகணம் உறைந்தான். பிறகு வண்டியை நிறுத்திவிட்டு அவர் முகத்தைப் பார்க்காமல், “எங்க?” என்றான்.

குடையை மடக்கியபடி வண்டியினுள் ஏறிக்கொண்டவர், “பெருமாள்புரம்” என்றார்.

“…”

“வண்டி வரும்லா?”

அவன் இல்லையென சொல்லிவிடவே எத்தனித்தான். பிறகு ஏதோ சிந்தனையில், “ம்” என்றான்.

அண்ணா சிலையைத் தாண்டி பிரதான சாலையை எட்டியதும் ஒரே ஒருமுறை பக்கவாட்டுக் கண்ணாடியில் அவரைப் பார்த்தான் முத்தப்பன். முகமூடியைப்போல் அணிந்திருந்த குல்லாவை அந்த மனிதர் அப்போதும் கழற்றியிருக்கவில்லை.

2

சிந்துபூந்துறை முருகன் கோவில் தெருவில், ரம்மியமான பௌர்ணமி இரவொன்றில் கேட்ட அந்தக் குரூரமான ஓலம் அவன் ஆழ்மனக் கிடங்கில் அழியா இருப்பு பெற்றிருந்தது.

அவனுக்கு அப்போது எட்டு வயது. அக்கா, சிற்றன்னை, தோழியென அக்காலங்களில் அவனுக்கு அனைத்துமாய் திகழ்ந்தவள் அண்டைவீட்டு கிறிஸ்டி அக்கா. வீட்டில் விழித்திருக்கும் வேளையிலெல்லாம் அவனுடனே இருந்து, பேச்சு, நன்னடத்தை, படிப்பு என அனைத்தையும் அன்புடன் பயிற்றுவித்தாள் அவள் ரஜினிகாந்த், ஷாருக், பிரசாந்த் என அவளுக்குப் பிடித்த நடிகர்களைப்போல் அவனுக்கு தலைசீவிவிட்டு நெற்றியில் முத்தமிடும் கிறிஸ்டி அக்காவின் பெயரை உறக்கத்தில் ஒருமுறையேனும் புலம்பியிராத இரவுகள் மிகவும் சொற்பம் என அவன் அம்மா அடிக்கடிச் சொல்வதுண்டு.

ஓர் அந்திப் பொழுதில் முத்தப்பனை உடையார்பட்டி குளத்திற்கு அழைத்துச் சென்ற கிறிஸ்டி, கரையோரம் கிடந்த கல்லொன்றின் மீது அமர்ந்து, அவனது இடக்கையை தன் மடிமேல் கிடத்தி, சிவப்புமை பேனாவினால் அதில் பொருளில்லாச் சித்திரங்களைத் தீட்டிக்கொண்டிருந்தாள். வழக்கத்திற்கு மாறாக அன்று அவள் நிசப்தமாய் இருப்பதை உணர்ந்த முத்தப்பன் ஏதேதோ அசட்டுத்தனங்கள் செய்து அவளை மகிழ்விக்க முயன்றுகொண்டிருந்தான். ஐவிரல் இடுக்குகளிலும் ஐந்து நாகத் தலைகளை வரைந்த கிறிஸ்டி திடீரென எதற்கோ வெடித்துச் சிரித்தாள். பிறகு, “வீட்டுக்கு போலாமாடா முத்துகுட்டான்?” என்றாள்.

வீட்டை அடைந்ததும் ஏனோ இறுக்கமடைந்த கிறிஸ்டி வெடுக்கென அவன் கையைப் பற்றி அதில் எதையோ கிறுக்கினாள்.

அதை எழுத்துக்கூட்டிப் படித்த முத்தப்பன், “லூசு, என் பெயர் ஸ்பெல்லிங் தப்பு” என்று சொல்வதற்குள் அவள் கிளம்பிச் சென்றிருந்தாள்.

நடுச்சாமத்தில் அந்த கோரமான ஓலம் கேட்டு அம்மாவும் அவனுமாய் பதறியடித்துச் சென்றபோது அவள் வீட்டின் நடுக்கூடத்தில் கரிக்கட்டையாய் கிடந்தாள் கிறிஸ்டி. விதவையான அவள் அம்மா பேய் அறைந்ததைப்போல் உறைந்து நின்றுகொண்டிருந்தார்.

மறுநாள் நிகழ்ந்த இறுதி ஊர்வலத்தில் கிறிஸ்டியின் பள்ளித் தோழிகள் பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் சிலர் வந்து கிறிஸ்டியின் அம்மாவிற்கு ஆறுதல் சொல்லினர். ஆங்கிலம் பயிற்றுவிக்கும் வாத்தியார் மட்டும் மனைவியை உடன் அழைத்துவந்திருந்தார். அவரைக் கண்டதும் உடைந்து அழுத கிறிஸ்டியின் அம்மா அவர் கைகளைப் பற்றிக்கொண்டு, “மூர்த்தி சார்… எல்லாம் போச்சு சார்!!” என்று கதறி அழுதார். அப்போது அந்த வீட்டின் மூலையில் காய்ச்சல்கண்டு சுருண்டுப் படுத்திருந்த முத்தப்பன் தனது இடதுகை விரல்களை ஒவ்வொன்றாய் பிரித்து உள்ளங்கையில் கிறுக்கப்பட்டிருந்த பெயரைப் படித்தான். அக்கணம் பார்த்து பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருந்த மேரியன்னை படம் எவர் கைப்பட்டோ கீழே விழுந்து சில்லுசில்லாய் சிதறியது. அவ்வோசை கேட்டு திடுக்குற்ற முத்தப்பனுக்கு உடனே வலிப்பு வந்தது.

மருத்துவமனையில் ஒருவாரம் சிகிச்சைப்பெற்று திரும்பியபோது கிறிஸ்டியின் அம்மா வீட்டை காலிசெய்திருந்தார். நாசரேத்தில் வசித்துவந்த அவரது சகோதரன் அவரை அழைத்துச் சென்றதாக தெருவில் பேசிக்கொண்டனர். காதல் விவகாரம், மதிப்பெண் குறைந்ததால் மன அழுத்தம் என்றெல்லாம் சந்தேகித்த காவல்துறையினர், குடும்பம் மற்றும் பள்ளிக்கூடத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி வழக்கை விபத்தென மாற்றி எழுதிவிட்டதாக அரிசிக்கடைக்காரர் சொன்னார்.

எண்ணியதைவிடவும் துரிதமாக முத்தப்பனின் குழந்தை மனம் அச்சம்பவங்களை ஆழத்தில் புதைத்து விட்டிருந்தாலும், சில காலத்திற்கு இரவில் மெல்லிய ஓசை கேட்டால்கூட திடுக்குற்று எழுந்துகொள்பவனாக இருந்தான். பெரும்பாலும் அப்படி விழித்துக்கொள்ள நேரிடும்போது எதற்கென்றே தெரியாமல் விம்மியழுவான். ஆனால் இரண்டொரு முறை மட்டும் பற்களைக் கடித்துக்கொண்டு, விரல்கள் அனைத்தையும் மடக்கி எவரிடமோ சண்டையிடப் போவதைப்போல் கொலைவெறியுடன் சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டிருந்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள்.

பின்னாட்களில் அவனது அன்றாடம் போராட்டமாக மாறியதும் அச்சிக்கல் தானாகவே ஒழிந்திருந்தது.

ஆறேழு ஆண்டுகள் கழித்து தூரத்துச் சொந்தக்காரரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு அம்மாவுடன் மானூர் சென்றிருந்தான் அவன். உள்ளூர் அரசியல்வாதி ஒருத்தரின் பினாமி நடத்திவந்த சீட்டு கம்பெனியில் பணம்போட்டு ஏமாந்திருந்ததால் தற்கொலை செய்துகொண்டவரைக் காண அங்கு அதிகம்பேர் கூடியிருக்கவில்லை. அருகினில் இருக்கும் அம்மன் கோவிலில் நிகழவிருந்த விழாவிற்கு நன்கொடை கேட்டு அச்சடிக்கப்பட்டிருந்த துண்டுசீட்டு அத்தெரு நெடுக சிதறிக்கிடந்தது. பிணத்துடன் காட்டுக்குக் கிளம்பியபோது கூட்டத்திலிருந்த கால்கள் அனைத்தும் அம்மனை மிதித்துக்கொண்டுச் செல்வதையே வெறித்துக்கொண்டிருந்த முத்தப்பன் திடுமென அருகில் வந்துகொண்டிருந்த அம்மாவின் கையைப் பற்றி, “கிறிஸ்டி அக்கா அன்னிக்கு என் கையில மூர்த்தின்னு எழுதிச்சும்மா” என்றான்.

அம்மாவின் முகம் ஒருகணம் வெளிறிப்போனது. இமைக்க மறந்தவளாய் அவனையே உற்று நோக்கினாள். பிறகு சட்டென தளர்ந்து, “அது லூசு பிள்ளடா… விடு… அதெல்லாம் யோசிக்காத” எனச் சொல்லி அதை எளிதில் கடந்தாள்.

சுலோச்சன முதலியார் பாலத்தைக் கடக்கும்போது எதேச்சையாக கீழே குனிந்த முத்தப்பன் ஆட்டோவின் கண்ணாடியில் செருகிவைத்திருக்கும் சுடலைமாடன் புகைப்படம் கீழே தனது பாதங்களுக்கடியே மிதிபட்டுக் கிடப்பதை கவனித்து, சட்டென குனிந்து அதை எடுத்து, சட்டையில் துடைத்து பையினுள் வைத்துக்கொண்ட நொடி திடீரென மனத்தினுள் கிறிஸ்டி அக்காவின் ஓலம் கேட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பூஞ்சையைப்போல் கிடுகிடுவென பூத்துச் செறிந்த நினைவுகளை பெருமூச்சொன்றை வெளியிட்டு புறந்தள்ளியபடி கவனத்தை சாலையில் குவிக்க முற்பட்டான்.

ஆனால் அவனுள் ஏதோ மாறியிருந்தது.

ஒரே கணத்தில் இந்த இரவும், இத்தருணமும் ஏதோ அசாதாரணத்தன்மை பெற்றுவிட்டதைப்போல் தோன்ற ஆரம்பித்தது. இது அபத்தம் என்றும், வலிமிகுந்த நினைவுகளில் இரண்டொரு நொடிகள் உழன்றதே இச்சலனத்திற்கு மூலக்காரணம் என்கிற தர்க்கங்களை அவனுள் முழுவிழிப்புநிலைப் பெற்றிருந்த உட்புலன் ஒன்று ஏற்கமறுத்தது. அவனையும் அறியாமல் பின்னிருப்பவரின் அசைவுகளை, நடத்தையை கண்காணிக்கத் துவங்கினான். அவரும் தன்னைக் கண்காணிக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டபோது அத்தனை காலமாய் தன்னைக் காத்துவந்த திரை ஒன்று கிழிபட்டதைப்போல் படபடக்க ஆரம்பித்தான்.

3

தெற்கு பைபாஸ் சாலையில் நுழைந்ததிலிருந்தே அவரிடம் ஒருவித பதற்றம் தென்பட ஆரம்பித்திருந்தது. இடமும் வலமும் என இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தவர் இருநொடிக்கொருமுறை முகம் சரியாக மறைந்திருக்கிறதா என்று சோதிப்பவரைப்போல் குல்லாவைத் தொட்டுப்பார்த்துக்கொண்டார். கருவிழிகள் நிலைகொள்ளாமல் உருண்டபடி இருக்க, சுருக்கம் விழுந்திருந்த கீழிமைகளில் வியர்வைத் திட்டுக்கள் பதிந்திருந்தன. காற்றினால் சுழற்றியடிக்கப்பட்ட மழைச்சாரல் வண்டியினுள் புகுந்து ஆடையை நனைப்பதை அவர் சற்றும் பொருட்படுத்தியதாக தோன்றவில்லை.

தன்னால் இயன்றவரை இயல்பாக இருக்க முயன்றான் முத்தப்பன். இனம்புரியாத ஒரு அச்சவுணர்வு நெஞ்சை அழுத்தும்போதெல்லாம் ஏதேனும் தர்க்கத்தைக் கொண்டு அதை ஒத்திப்போட முயன்றான். வீட்டில் உடம்பு முடியாமல் எவரேனும் இருக்கலாம், அல்லது அவருக்கே ஏதேனும் உபாதை இருக்கலாம், அல்லது நெருங்கின உறவினருக்கு ஏதோ நிகழ்ந்திருக்கலாம் என கற்பனைகள் பல செய்துகொண்டான். ஆனாலும் ஏதோ காரணத்தினால் சுவாசம் இடறியபடி இருந்தது. தன்னையும் அறியாமல் வண்டியை மிகவும் வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தான்.

வண்டியில் ஏறியதிலிருந்தே அவரது செல்போன் ஒலித்துக்கொண்டேதான் இருந்தது. அதை எடுத்துப் பேசுவதில் ஏனோ தயக்கம் காட்டிவந்தார். ஆனால் குலவணிகர்புரத்தை எட்டியதும் ஒருவித சினத்துடன் அழைப்பை ஏற்று, “பொறுடே… போக வேண்டாமா? அஞ்சு நிமிசம் ஆவும்… பொறு!” என்றார்.

“…”

“ஆங்? ஆட்டோதான்… பஸ் வேண்டாமுன்னு பட்டுச்சு”

“…”

“அதெல்லாம் பாத்துக்கிடலாம்… ஒன்னும் பிரச்சன இல்ல”

“…”

“பிரச்சனயில்லங்கம்லா? நீ வை… நான் இடத்த பாத்துட்டு என்னன்னு அடிக்கேன்!”

போனை சட்டைப்பையினுள் போட்டுவிட்டு சட்டென நிமிர்ந்து எதிர்புறம் இருந்த கண்ணாடியில் தெரிந்த முத்தப்பனின் கண்களை ஒருமுறை உற்றுப் பார்த்தார் அவர். பிறகு இடப்புறம் தெரிந்த லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியையும் அதனுள் நுழைந்தும், வெளியேறியும் கொண்டிருந்த மக்களையும் வெறுமனே நோக்கினார். ஒருமுறை நீள்மூச்செறிந்து தலையைத் தொங்கப்போட்டவர் சாலையில் தேங்கியிருந்த நீரை ஆட்டோவின் சக்கரம் கிழித்துக்கொண்டுச் செல்வதை ஒருவித கனவுத்தன்மையுடன் பார்த்தார். அப்போது அச்சமா வேதனையா என பிரித்தறிய முடியாத ஓர் உணர்வின் நிழல் அவர் விழிகளில் படர்ந்தது.

அவரை ஏறெடுத்து நோக்க விரும்பாத முத்தப்பன் பார்வையை சாலையின்மேல் நட்டுவைத்து அமர்ந்திருந்தான்.

பைபாஸ் சாலையுடன் அம்பை ரோடு இணையும் இடத்தில் முன்பிருந்த சிக்னல் நீக்கப்பட்டு, சுற்றுச்சந்தி ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்ததால் பைக்குகளில் செல்பவர்கள் சாலையைக் கடப்பதில் அவசரம் காட்டினர். அதனால் அங்கு கொஞ்சம் நெரிசல் உண்டானது.

விரக்திக் கூச்சல்களும், ஹாரன் சத்தங்களும் கட்டுமீறிச் சென்றதனால் பொறுமையிழந்த அந்த மனிதர் முத்தப்பனின் தோளைத் தொட்டு, “ஒடிச்சு போ தம்பி… பொழுதில்ல” என்றார்.

முத்தப்பன் தலையை மட்டும் அசைத்துவிட்டு வண்டியைத் தத்ரூபமாக வளைத்து, இரு கார்களின் இடையே நுழைத்து முன்னேறினான்.

புதிய பேருந்து நிலையத்தின் பின்புற நுழைவைத் தாண்டியதும் தனது கைபேசியில் எவரையோ அழைத்த அந்த நபர், “நெருங்கிட்டேன்… போன் அடிக்கேன்” என்று சொல்லிவிட்டு உடனடியாக அழைப்பைத் துண்டித்தார். பிறகு மீண்டும் முத்தப்பனின் தோளைத் தொட்டு, “தம்பி பெருமாள்புரம் ஸ்டேஷன் வழியா போக வேண்டாம்… இங்கன எஸ்.டீ.சி காலேஜ்ல ஜாயின் ஆகற அறுபதடி ரோடு எடுத்துருங்க” என்றார்.

முத்தப்பன் அவர் சொன்னதைப்போல செய்தான்.

பிறகு, “நேரா வேண்டாம்… இந்த லெஃப்ட் எடுங்க” என்றார்.

ஆள் நடமாட்டமும், அதீத வெளிச்சமும் இல்லாத பாதையைத் தேர்வுசெய்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட முத்தப்பன் தன்னுள் மெல்லிய குளிர் தீண்டலை உணர்ந்தான். படுகுழி ஒன்றில் பாதம் பதித்ததைப்போல் நாளங்களில் மெல்லியதோர் பரபரப்பு புகுந்தது. ஆனால் அடுத்த நொடியே ஒருவித இறுக்கம் அவனை ஆட்கொண்டது. அவர் சுட்டிக்காட்டும் இடத்தில் அவரைக் கொண்டு சேர்ப்பது ஒன்றே தான் செய்யக்கூடுவது என்று தன்னிடமே உரைத்துக்கொண்டதோடு சிந்தனைகளை முற்றிலுமாக அறுத்தெறிந்துவிட்டு அவர் சொல்வதற்கிணங்க வண்டியை ஓட்டுவதில் முழு கவனத்தையும் செலவிடத் துவங்கினான்.

எல் ஷடாய் மருத்துவமனை வழியாக வெளியேறி பெருமாள்புரத்தின் மையச் சாலையை அடைந்தபிறகும் ஏதேதோ சந்தினுள் அவனை அலைக்கழித்தார் அவர். முத்தப்பனுக்கு எதுவும் விளங்கவில்லை. அவன் விளங்கிக்கொள்ள விரும்பவுமில்லை. நான்காவது முறையாக ஒரே தெருவினுள் அவர்கள் நுழைந்தபோது அதன் கடைக்கோடியில் இருந்த மஞ்சள்நிறம் பூசப்பட்டிருந்த இரண்டடுக்கு வீட்டை அவர் விழிவிரித்து உற்றுநோக்குவதை கவனித்தான் அவன். அத்தனை அலைச்சலும் இந்த வீட்டை ரகசியமாக கண்காணிக்கவே என்று அப்போது அப்பட்டமாகியது.

முகப்புக் கண்ணாடியில் படர்ந்திருந்த நீர்திவலைகளின் நிழல்கள் தனது புறங்கைமேல் புள்ளிகளாய் அதிர்வதை, புழுக்களாய் நெளிவதைக் கண்ட முத்தப்பன் அரைக்கணம் விழிமூடி பெருமூச்செடுத்தான். பிறகு அவர் யாராக இருந்தாலும், அவரது நோக்கம் எத்தனை இருண்டதாக இருந்தாலும், இந்த சில நிமிடங்களை சகித்துக்கொள்வதே உகந்தது என்கிற முடிவை நிர்மாணித்து ஸ்திரப்படுத்திக் கொண்டான். இவரையும், இச்சூழலையும் விட்டு அகன்ற கணமே அகத்தின் அனைத்து நமைச்சலும் மறைந்துவிடும். வீட்டிற்குச் சென்று உறங்கி விழித்தால் எல்லாம் ஓய்ந்திருக்கும் என்று மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டான்.

“இடத்த பாத்துட்டேன்” பின்னால் இருப்பவர் மங்கிய குரலில் அலைபேசியில் சொன்னார்.

“…”

“இல்ல, பூட்டல… வெளிய வண்டி நிக்கு”

“…”

“கையில வச்சுட்டு நிக்கியா? எங்க?”

“…”

“பொறு வாரேன்”

அலைபேசியை உள்ளங்கையினுள் பொத்தி வைத்தவர் சில கணங்களுக்கு தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பிறகு மெல்ல நிமிர்ந்து, “ஃபீடர் ரோடு டாஸ்மாக் கிட்ட போ தம்பி” என்றார்.

பெருமாள்புரம் ரயில்வே கேட்டை கடந்து வண்டியை வலதுபுறம் திருப்பினான் முத்தப்பன். பக்கவாட்டில் இருந்த கசாப்புக்கடை வாசலில் கிடந்த எலும்புத் துண்டைப் வாயில் கவ்விக்கொண்டபடி ஒரு நாய் சாலையைக் கடந்தது. மறுநாள் நிகழவிருந்த பூப்புனித நீராட்டு விழாக்கான பதாகை ஒன்றை எழுப்பிக்கொண்டிருந்தவன் அதை, “சூ!” என விரட்டிவிட்டு அருகில் இருந்த தனது கூட்டாளியிடம் ஏதோ சொல்லி உரக்கச் சிரித்தான். சற்றுத் தொலைவில் பழுதடைந்து நின்ற கார் ஒன்றை நான்கு பேர் சேர்ந்து மெக்கானிக் கடையை நோக்கித் தள்ளிக்கொண்டிருந்தனர். வண்டியின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி அதைப் பெரும் சாகசமென கருதி ஆர்ப்பரித்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

முத்தப்பன் அவர்களைக் கடந்தான். அப்போது பின்னால் அமர்ந்திருந்தவர் ஒருமுறை தலையை வெளியே நீட்டி பின்புறம் நோக்கினார்.

தொலைவில் டாஸ்மாக் தென்பட்டதும் மீண்டும் அவன் தோளைத் தட்டி, “இங்கனயே நில்லு” என்றார் அவர்.

முத்தப்பன் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

அந்த நபர் அலைபேசியியை எடுத்து யாருக்கோ மிஸ்ட் கால் கொடுத்தார்.

இரண்டொரு நிமிடங்கள் கழித்து கடையிலிருந்து ஹெல்மட் அணிந்தபடி வெளியேறிய ஒரு இளைஞன் அவர்களை அணுகி, “உள்ளுக்கு ஒரு அண்ணன் குடுத்து அனுப்பினாரு” என்று சொல்லி அவர் கையில் ஹாஃப் பிராந்தியையும், சிறிய பை ஒன்றையும் தந்துவிட்டுச் சென்றான்.

அந்த நபர் சில கணங்களுக்கு மௌனமாக இருந்தார். பிறகு கம்மியக் குரலில், “தம்பி, ஒரு தெரு வழியா வந்தோம்லா? அங்கன முனையிலே என்ன எறக்கி விட்டுட்டு நீ போயிடு, என்ன?” என்றார்.

முத்தப்பன் கண்ணாடியில் அவர் விழிகளை நோக்கி, “ம்” என்றான். அவனுள் ஒருகணம் அந்தப் பரபரப்பு மீண்டது. இன்னும் சில நிமிடங்களில் இது ஒழியப் போகிறது என்கிற சிந்தனையைக் கொண்டு அப்பரப்பரப்பைத் தகர்த்தான்.

“கொஞ்சம் பொறு… வந்துடுதேன்” என்று சொல்லிவிட்டு இறங்கியவர் வண்டியின் பின்னால் மறைந்து நின்று முழு பாட்டில் மதுவையும் ஒரே மூச்சில் குடித்தார். பிறகு, “ம்ம்ம்!” என உறுமிவிட்டு இரண்டு முறை ஆட்டோவை அறைந்தார். பின்னர் “எடுய்யா… வண்டிய எடு!” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவர் சீட்டில் கிடந்த பையை, அதனுள்ளிருந்த பொருளுடன் சுருட்டி மார்போடு அணைத்துக்கொண்டார். “இறக்கி விட்டு போயிடு… ஆமா… அவ்வளவுதான்… போயிட்டா போதும்… எழவெடுத்த…” என்று ஏதேதோ உளறினார்.

மதுவின் காட்டமான நெடி முத்தப்பனை கொஞ்சம் நிலையிழக்கச் செய்தது. பற்களைக் கடித்து தாடையை இறுக்கிக்கொண்டான். புறங்கையின் பச்சை நரம்புகள் தோலைக் கிழிக்கும் அளவு விடைத்திருந்தன. விழிகளைச் சுருக்கிக்கொண்டு வண்டியின் வேகத்தை ஏற்றியபடி, “அவ்வளவுதான், அவ்வளவுதான்” என்று தனக்கு மட்டுமே கேட்கும் குரலில் முணுமுணுத்துக்கொண்டான்.

அப்போது மிக அருகாமையில், “வீல்!!!” என்றொரு அலறல் கேட்டது. அதற்கு அடுத்த நொடி வண்டி எதன் மீதோ ஏறி இறங்கியது.

முத்தப்பன் அதை உணர்ந்திராதவனாக வண்டியை ஓட்டியபடியே இருந்தான். அந்த நபர் மெல்லிய தள்ளாட்டத்துடன் சரிந்து, தலையை வெளியே நீட்டி பின்புறம்  நோக்கினார். பிறகு வெடுக்கென நிமிர்ந்து முத்தப்பனின் தோளை பலமாக அறைந்தார். முத்தப்பன் திடுக்குற்று, கனவிலிருந்தென விழித்தான். வண்டி கீச்சிடும் ஓசையுடன் நின்றதும் அவர் கீழே இறங்கி பின்பக்கம் ஓடினார்.

முத்தப்பன் இறங்கி வண்டி அருகேயே நின்றுகொண்டு ஏறெடுத்து நோக்கினான்.

சாலை நடுவே ஒரு நாய்க்குட்டி உடல் நசுங்கிக் கிடப்பது தெரிந்தது. அதன் அருகே நின்ற அன்னை நாய், “ஓ!” என வானத்தைப் பார்த்து ஊளையிட்டது. அதன் முன்னங்கால் அருகே சிறிய எலும்புத் துண்டு கிடப்பதை அவன் கவனித்தான்.

குருதி வெள்ளத்தில் கிடந்த அந்தக் குட்டியை இமைகொட்டாமல் நோக்கிக்கொண்டிருந்த அந்த மனிதர் தனது தலையை இருக்கரங்களால் பற்றிக்கொண்டார். பிறகு முத்தப்பனைப் பார்த்து உக்கிரமாக கைநீட்டி, “பாத்து ஓட்டக்கூடாதாய்யா!” என்று கேட்டு ஏதேதோ சொற்களை குழறிக் குழறி உச்சரித்தார்.

முத்தப்பன் உறைந்து காணப்பட்டான்.

நடுங்கும் விரல்களை ஒன்றோடொன்று கோர்த்தபடி நின்றுகொண்டிருந்தவர், “என்னத்த!” என்று சொல்லி விட்டேற்றியாக கையசைத்துவிட்டு, சட்டென குனிந்து அந்தக் குட்டியைத் தூக்கி சாலையோரம் இருந்த புதரின் நடுவே பணிவுடன் வைத்தார். செவிகள் கிழியும் அளவிற்கு அந்த அன்னை நாய் ஓலமிட்டுக்கொண்டிருந்தது.

முத்தப்பன் கண்களை மூடிக்கொண்டான். ஓரிரு நிமிடங்கள் கழித்து கண்திறந்தபோது அந்த மனிதர் அவன் அருகே நின்றுகொண்டிருந்தார். அவர் உடல் மறுபக்கம் திரும்பியிருந்தது. விழிகள் விண்ணை நோக்கி ஓலமிட்டுக் கொண்டிருந்த அந்த அன்னையின் மீதே லயித்திருந்தன.

முத்தப்பனும் இப்போது அந்த நாயை நோக்கினான். தொண்டையில் கூடிய எடையை எச்சில் விழுங்கி கரைக்க முற்பட்டான்.

லேசாய் உச்சுக்கொட்டிவிட்டு, மீண்டும், “என்னத்த!” என்று புலம்பினார் அந்த மனிதர். பிறகு மெதுவாய் திரும்பி முத்தப்பனை நோக்கினார்.

அவர் முகத்தில் குல்லாவினால் மறைக்கப்படாத ஒரே அங்கமான அந்த விழிகளை நேருக்குநேராய் சந்தித்தான் முத்தப்பன். அவனுள் ஏதோ நெளிந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல், “போவோமா?” என்று கேட்டான். கேட்ட கணமே தனது உடம்பெல்லாம் கூசுவதை உணர்ந்தான்.

அந்த நபரின் உடல் விக்குவதைப்போல் ஒருமுறை துடித்தது. விழிகள் திகைப்பை வெளிப்படுத்தின. பிறகு ஒருவித தயக்கத்துடன் தலையசைத்தபடி வண்டியினுள் அமர்ந்துகொண்டார்.

காரணமேயில்லாமல் வாயை அழுத்தித் துடைத்தபடி இருக்கையில் உட்கார்ந்து வண்டியைக் கிளப்பினான் முத்தப்பன். வரும்போது அவர்களைக் கண்டுகொள்ளாத நாய்கள் அனைத்தும் இப்போது படையெனத் திரண்டு, துரத்தி, வசைமாரி பொழிந்து விரட்டியடித்தன.

ரயில்வே கேட்டைக் கடந்து மறுபுறம் சென்றபோது திடீரென அவன் தோளில் கைபோட்ட அந்த மனிதர், “ஒரு நிமிசம் நில்லுய்யா” என்றார்.

பூட்டிக்கிடந்த மீன்கடையை ஒட்டி வண்டி நின்றது. அங்கே வீசிய காற்றில் கலந்திருந்த கவுச்சி உடலையே நிரப்புவதைப்போல் இருந்தது.

தன்னுள் மூழ்கியபடி அமர்ந்திருந்த அந்த மனிதர் குல்லாவை லேசாய் கீழிறக்கி, ஆழமாய் இருமுறை மூச்செடுத்தார். பிறகு என்ன நினைத்தாரோ, “தம்பி என்ன பஸ்டாண்ட்ல விட்டுடறயா?” என்றார்.

முத்தப்பன் அவரை ஒருகணம் உற்றுப் பார்த்தான். பிறகு, “ம்” என்றான்.

அங்கிருந்து வண்டி நகர்ந்ததும் தனது அலைபேசியில் எவரையோ தொடர்புகொண்டார் அந்த மனிதர்.

“ஹலோ… நான் போறேன்”

“…”

“இல்ல… போறேன்”

“…”

“இல்ல”

“…”

“தெரியல”

“…”

“நான் போறேன்…”

“…”

“எனக்கு என்னமோ சரியா வரல… நான் போறேன்”

“…”

அழைப்பைத் துண்டித்து, அலைபேசியை அணைத்துவிட்டு பையினுள் போட்டுக்கொண்டார் அவர்.

4

மழை கொஞ்சம் கொஞ்சமாய் அடர்த்திபெறத் தொடங்கியிருந்தது.

புதிய பேருந்து நிலையத்தின் வாசலை ஒட்டி நின்றுகொண்டிருந்த முத்தப்பன், மேலே செருகிவைத்திருந்த கரிப்படிந்த பழையத் துணியைக் கொண்டு முன்பக்கத்துக் கண்ணாடியை, பின்புறம் இருந்த கம்பி மற்றும் இருக்கையில் பட்டிருந்த குருதியைத் துடைத்துக்கொண்டிருந்தான். கறை முற்றாக அழிய மறுத்தது. ஓரிரு நிமிடங்கள் கழித்து அம்முயற்சியைக் கைவிட்டவன், அந்தத் துணியை மிக பொறுமையாகச் சுருட்டி அதன் இடத்தில் வைத்துவிட்டு வண்டியினுள் உட்கார்ந்துகொண்டான். பிறகு ஏதோ நினைவு வந்தவனாய் சட்டைப் பையிலிருந்த சுடலை மாடன் படத்தை எடுத்து முன்புறத்துக் கண்ணாடி விளிம்பில் பத்திரமாய் புகுத்திவைத்தான்.

மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.

ஏனோ நேராக வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை.

சட்டென ஓர் எண்ணம் வந்தது.

அதைக் கண்மூடித்தனமாய் பின்பற்றுவதைத் தவிர்த்த ஓர் ஆணையை அவன் உடலும் உள்ளமும் ஏற்க மறுத்தது.

சற்றுமுன் அந்த நபர் வேவுபார்த்துக்கொண்டிருந்த வீட்டை நோக்கி வண்டியை ஓட்டிச்சென்ற முத்தப்பன் அந்தத் தெருவின் எல்லையில் நின்ற புளியமரத்தின் கீழ் அதை நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டான்.

அந்தச் சுற்றமே வெறிச்சோடிக் கிடந்தது. தெருவிளக்கின் வெள்ளியொளியில் குளித்தபடி நின்றுகொண்டிருந்த அந்த வீட்டின் வாசலில் ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த பச்சைவண்ண வேலியினுள் பலவண்ண மலர்ச்செடிகள் நடப்பட்டிருந்தன. அதன் இலைகள் அனைத்தும் மடிந்திருக்க, மலர்கள் மட்டும் விழிப்புற்று முறுவலித்துக்கொண்டிருப்பதைக் கண்டான் முத்தப்பன்.

அந்த வீட்டில் ஏதேதோ நிகழ்ந்திருக்கவேண்டும் எனும் எண்ணம் வந்தது.

ஒரு கொலை. அல்ல இரண்டு. அல்லது கொள்ளை. அல்ல வேறேதும்.

அந்தப் பையினுள் அவர் என்ன வைத்திருந்தார்? வெட்டுக்கத்தியா? வீச்சரிவாளா? கைத்துப்பாக்கியா? அல்ல வீட்டோடு கொளுத்திவிட எண்ணியிருந்தாரா?

அந்த இடமே அதிதூய அமைதியினால் போர்த்தப்பட்டிருந்தது. ஆனால் இதயத்தைக் குத்திக்கிழிக்கும் ஓலம் ஒன்று அவனுக்கு மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. கிறிஸ்டி அக்காவின் ஓலத்தைப்போலவே இருந்தபோதிலும் அது குட்டியைப் பறிகொடுத்த அந்த அன்னையின் ஓலம் என அவன் அறிவான்.

ஒருசில அடிகள் முன்சென்று மீண்டும் அந்த வீட்டை நோக்கினான் முத்தப்பன். அதன் பொருட்டு உருவான வஞ்சம், வலி, நிகழ்ந்த பேரிழப்பு என எதையும் அறிந்திராமல், தவம்புரியும் முனிவரென, தொட்டிலில் உறங்கும் குழந்தையென, அல்லது அற்ப மானுடனென வீற்றிருந்தது அந்த வீடு.

முத்தப்பன் வண்டிக்குத் திரும்பினான்.அனைத்துமாய் இருந்த கிறிஸ்டி அக்காவை இழந்த துயர் தாளாமல், எதற்கோ அஞ்சி திடுக்கிட்டு விழித்து உடைந்து அழுத இரவுகளை நினைவுகூர்ந்தான். அதன் மறுபக்கமென பிற்காலத்தில் துளிச் சலனமின்றி துயின்ற பல்லாயிரம் இரவுகளின் நினைப்பெழுந்தபோது ஒருகணம் அவனுக்கு மூச்சடைத்து, தலைச் சுற்றியது. ஜுரம் கண்டதைப்போல் திடுமென அவன் உடல் கிடுகிடுவென அதிரத் துவங்கியது.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.