யதேச்சையின் தாட்சண்யங்கள்

   மெஜஸ்டிக்கில் இருக்கும் எனது நண்பரைப் பார்க்க மெட்ரோ ரயில் வசதி வந்த பிறகு அதில்தான் பயணிக்கிறேன். இன்று மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்ல நானும் எனது மனைவியும் நடந்து செல்லும் போது மேம்பாலத்திற்கு கீழே இருந்தப் பாதை வழியாக சென்றோம்.  

இப்பொழுது இங்கு வந்த நான்கு நாட்களாக இதன் வழியாக சென்று வருகிறேன். அந்த  மேம்பாலத்தின் கீழே பழைய மூட்டையின் மேல் குளிர்காலப் போர்வை மூடப்பட்டிருந்தது. அதைச் சுற்றியுள்ள பகுதி கூட்டிச் சுத்தமாக இருந்தது. 

காலையில் பத்து மணிக்கு ஆரம்பித்து இரவு பத்து மணிவரை நான் வெவ்வேறு நேரங்களில் இந்த இடத்தைக் கடந்திருக்கிறேன். இந்த மூட்டை மூடி இருப்பதற்கான நபரை என்னால் காண முடியவில்லை. கடந்த மாதம்வரை இந்த இடத்தில் யாரும் இல்லை. குளிர் காலம் ஆரம்பித்ததால் இங்கு வந்து தஞ்சமடைந்திருக்கலாம். 

நேற்றுக் காலை நடைப் பயணத்தின் போது நினைவுக்கு வர ஆர்.எஸ். கார்டன் லே அவுட்டிற்குள் நுழையாமல் நேராக டி மார்ட் நோக்கி நடந்து இடது பக்கம் பொம்மச்சந்திரா என்று பெயர் பலகை காட்டிய சாலைக்கு எதிரே இருக்கும் பாலத்தின் கீழே செல்லும் பாதையைப் பார்த்தேன். அங்கு ஒருவர் படுத்திருப்பது தெரிந்தது. முழுவதும் போர்த்தி இருந்ததாலும் கொஞ்சம் தூரமாக இருந்ததாலும் அது யார் எனத் தெரியவில்லை. படுத்திருப்பதைப் பார்க்கும்போது அது பெண் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.

அந்தச் சாலையின் திருப்பத்தில் டிபன் கடை இருந்தது. அந்தக் கடைக்கு பக்கத்திலும் எதிரிலும் கடைகள் இருந்தது. ஒவ்வொரு கடையிலும் ஆட்கள் இருந்தார்கள். நான் நேராக சென்று திரும்பாமல் அந்த வீதியோரவாசியைப் பார்த்ததும் திரும்பியதால் அந்த டிபன் கடையின் பெண் என்னைப் பார்த்தது. நான் குனிந்தபடி நடக்க ஆரம்பித்தேன்.

காலையிலிருந்து இரவு வரை இங்கு எங்காவது தர்மம் வாங்கி அவர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆர்.எஸ் கார்டனுக்குள் நுழைந்தபோது ஒரு பையன் ஓடிக் கொண்டு இருந்தார். கனரா வங்கிக்குப் பக்கத்தில் மேலே உள்ள அப்பார்ட்மெண்ட்க்கான வாட்ச் மேன் பல் விளக்கிவிட்டு அந்த பிரஷ்ஷில் இருக்கும் தண்ணீரைத் தட்டிக் கொண்டு இருந்தார். தினத்தந்தி பையில் காலை செய்தித் தாள்களை அப்பார்ட்மெண்ட்க்கு மேலே சென்று போட ஒருவர் உயரமாக குளிர்த் தொப்பி அணிந்து போனார். அந்தப் பையில் தினத்தந்தி என்பதைத் தவிர அதற்கு கீழே எழுதி இருந்தது எல்லாம் படிக்க முடியாதபடி வெளுத்தோ நிறம் மங்கியோ இருந்தது .அவரிடம் ‘தமிழ் வார இதழ்கள் உங்களிடம் கிடைக்குமா’ என்று கேட்க நினைத்தேன். அவர் மேலே சென்றுவிட காத்திருக்க வேண்டாமென லே அவுட் சாலையில் நடந்து சென்று திரும்பி வரும்போது கேட்கலாமென விட்டுவிட்டேன்.

பெங்களூரின் பொம்மச்சந்திரா பகுதில் தமிழ் பத்திரிகைகள் கிடைப்பதற்கான இடங்கள் தெரியவில்லை. எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் கிடைக்கலாம் என்று சொன்னார்கள். ஆனந்த விகடன் தீபாவளி மலரில் யூமா வாசுகி அவர்களின் சிறுகதை வந்திருப்பதாக அறிந்து அதைப் படிக்க புத்தகங்கள் விற்கும் பெட்டிக்கடைகளை விசாரித்த பொழுது இங்கு எங்குமே இல்லை என்று சொன்னார்கள்.

ஊரில் மணிக்கூண்டிற்கு பக்கத்தில் பேப்பர் கடை வைத்திருக்கும் புருசோத்தமன் அண்ணனுக்கு போன் செய்து விவரங்கள் சொன்ன பிறகு ஆட்டோ ஓட்டும் நண்பன் சுதாகரை அந்தப் புத்தகத்தை வாங்கி போட்டோ எடுத்து அனுப்பச் சொல்லி படிக்க வேண்டியதாக இருந்தது. அதனால் அவரிடம் தமிழ் வார இதழ்கள் எங்கு கிடைக்கும் என்று விசாரிக்க நினைத்தேன்.

அந்த நீண்ட சாலையில் லே அவுட் வீடுகள் ஆரம்பிக்கும் இடத்தில் செக் போஸ்ட் போட்டு செக்யூரிட்டிகள் ஒவ்வொரு முறையும் திறந்து மூடி வாகனங்களுக்கு வழி விடுவார்கள். அந்த இடத்திற்கு முன்புவரை சென்று திரும்பிப் பிரதான சாலை வரை வந்து திரும்பி ஒரு மணி நேரம் நடப்பது எனது வழக்கம். இப்பொழுது திரும்பி வரும்போது இருந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு இளைஞனும் இளைஞியும் குளிராடையில் நெருக்கமாக கைபேசியைப் பார்த்தவாறு பேசிக்கொண்டு இருந்தார்கள். அதற்குப் பக்கத்தில் இருந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரைப் பெண் ஒருவர் திறந்து கொண்டு இருந்தார். பள்ளி வாகனம் ஒன்று வந்து நிற்க அதில் ஒரு சிறுமி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பக்கம் இருந்த பாதையின் வழியாக சிரித்தபடி  ஓடி வந்து ஏறியது. அந்தப் பிள்ளையின் தந்தை முக மலர்ச்சியாக அந்தச் சிறுமிக்கு டாட்டா காட்டி விட்டுச் சென்றார்.

அந்தச் சிறுமி வந்த பகுதியிலிருந்து மூன்று நடந்தர வயதைக் கடந்தவர்கள் வந்தார்கள்.இதற்கு முன் இவர்களை நடக்கும்போது இதே இடத்தில் பார்த்திருக்கிறேன். அவர்கள் லே அவுட் உள்ளே சென்றார்கள். அங்கு அதிகமான வீடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஒரு வேலை அங்கு பூங்கா எதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. அவர்கள் மூவரும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களின் முகச் சாயலில் தெரிந்தது. ‘நீதியைக் கொல்வது எந்த வகையில் நியாயம் ‘என்றார் ஆங்கிலத்தில் ஒருவர் .அவர் பேசிய மொழியின் தொனியே அவரின் மாநிலத்தை நினைவூட்டியது. என்னால் அவர்கள் எதுபற்றி பேசுகிறார்கள் என்று அனுமானிக்க முடியவில்லை.

நான் அந்தப் பேப்பர் போடுகிறவர் போய்விடுவாரோ என்று அந்த அப்பார்ட்மெண்ட்டைப் பார்த்தபடி நடந்து போனேன்.

வழியில் இரண்டு தெரு நாய்கள் படுத்து இருந்தது.அதற்குப்  பக்கத்தில் ஒரு நாய் அந்த இரண்டு நாய்களையும் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தது. படுத்திருந்த நாயில் ஒன்று என்னைப் பார்த்து விட்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்தது. தூரமாக ஒரு நாய் நிறுத்தி இருந்த காரின் டயரில் சிறு நீர் கழித்துக் கொண்டு இருந்தது. அநேகமாக படுத்திருக்கும் நாயில் ஒன்று நிச்சயமாக பெண் நாயாக இருக்கவேண்டும்.

மரத்தின் மேல் குரங்கு ஒன்று குட்டியை மடியில் சுமந்து கிளைகளைப் பிடித்து தாவி சென்றது. அது எனக்குள் கலவையான பல சிந்தனைகளை ஏற்படுத்தியது.

என்னைக் கடந்து சென்ற இரு சக்கர வாகனத்தில் இருந்தவர்கள் என்னை திரும்பித் திரும்பி பார்த்து சென்றார்கள். அவர்கள் நெற்றியில் குங்குமத்தை நேராக இழுத்து இருந்தது கவலை அளித்தது.

 பேப்பர் போட வந்தவரைப் பார்க்கும் போது அவர் செக்யூரிட்டியிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கும்போது அவருடைய இரு சக்கர வாகனத்தை எடுத்து முகப்பில் உள்ள கம்பெனியின் செக்யூரிட்டியிடம் பேப்பரை வண்டியில் நின்றபடியே கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

நான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போது மனதிற்கு வேறொரு வேலை கொடுத்திருந்தாலும் அது பல விசயங்களை என்னோடு பேசிக் கொண்டு வந்தது. முடிக்கும் நேரத்திற்கு முன்பாக அந்த வீதியோரவாசிக்கு டிபன் வாங்கிக்கொடுக்கும் எண்ணம் ஒன்றை என் மனம் அந்த நினைவே இல்லாதபோது எடுத்து வந்தது. அதனைப் புறந்தள்ள முடியாமல் நான் நடப்பதை முடித்து அந்த டிபன் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அந்தப் பையில் இருபது ரூபாயையும் வைத்து தூங்கும் இடத்தின் தலைமாட்டில் வைத்திடலாமென நினைத்தேன்.

அந்த டிபன் கடையில் இப்பொழுது வேறு ஒரு இளைஞர் இருந்தார். இவர் அந்தப் பெண்ணின் கணவராகவும் இருக்கலாம். நான்கு இட்லி பார்சல் கட்டச் சொன்னேன். என்பது ரூபாய் என்றதும் நான் அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல் இருந்தேன். அவர்கள் பார்சல் கட்டுவதைப் பார்த்த பிறகுதான் பெங்களூரில் தட்டு இட்லி உள்ளங்கை அகலத்திற்கு சற்று கூடுதலான அளவில் இங்கு இட்லி போடுவது எனக்கு நினைவுக்கு வந்தது. 

“அண்ணே… இட்லி இரண்டு போதும். இன்னொரு பார்சல் இந்த ரைஸ்ஸை கட்டுங்க. ஐந்து வடையைக் கட்டித் தனியாக தாருங்கள்.” என்றேன்.

அவர் என்னைப் பார்த்தார். காரணம் கடைப்பையன் இரண்டு இட்லி பார்சலைக் கட்டி முடித்துவிட்டான். அவர் ஒரு இட்லி பார்சலை எடுத்து வைத்துவிட்டு ரைஸை அவரேக் கட்டினார்.

“ரைஸ் எவ்வளவு சார்.”

“இட்லியும் ரைஸ்ஸூம் ஒரே ரேட்தான் சார் .நூற்றி ஐந்து ரூபாய்க் கொடுங்கள்.”

நான் கைபேசியில் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிட்டு மூன்று பார்சல்களை வாங்கி வடைப் பையைத் தனியாகப் பிடித்துக்கொண்டு வீதியோரவாசியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

வாகனங்கள் வந்து திரும்புகிற இடமாக இருந்ததாலும் சாலையின் இரு பக்க வாகனங்களைப் பார்த்து சாலையைக் கடப்பது சற்றே சிரமமாக இருந்தது.

சாலையைக் கடக்க நிற்கும்போது இருபது ரூபாய் தாளை எடுத்து கையில் வைத்துக் கொண்டேன். 

அந்த டிபன் கடையிலிருந்து பார்த்தால் மேம்பாலத்தின் கீழே உள்ள அந்தப் பாதை தெளிவாகத் தெரியும்.

நான் பார்சலைக் கொடுக்க நெருங்கும்போது அந்த நபர் எழுத்துவிட்டார். வயதானவராக எண்ணெய்த் தேய்க்காத தலை முடி, தாடியுடன் எழுந்து அமர்ந்தார். அவர் தனது கையில் மீதம் இருந்த மிக்சரைக் கொட்ட ஒரு கையை விரித்து ஒரு கையைச் சாய்க்கும்போது பார்சலை நீட்டினேன். அவர் வாங்கியபோது இருபது ரூபாயையும் கொடுத்துவிட்டு திரும்பிவிட்டேன். 

அவர் தேங்ஸ் என்றோ கன்னடத்தில் நன்றி என்றோ ஏதோச் சொன்னார். வேகமாக நான் கொடுத்துவிட்டு திரும்பியதால் அவர் முகத்தை நான் பார்க்கவில்லை. அவரின் என் பக்கம் இருந்தக்கால் செயற்கை கால் போன்றும் பார்வையில் பட்டது. எப்பொழுதும் உதவிகள் செய்யும்பொழுது அவர்களின் முகத்தைப் பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. காரணம் அந்த முகம் நீண்ட நேரம் காட்சியாக தோன்றி அசௌகரியம் தரும் அதனால் இதனை நான் நடைமுறையில் வழக்கமாக வைத்து இருக்கிறேன். உதவிகள் செய்வதை உதவி பெறுகிறவர்களுக்கு தெரியாமல் செய்வது. அவருக்கு தெரிந்து செய்தால் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று வாக்குறுதி வாங்கி விடுவதுமானப் பழக்கம் என் நண்பரிடமிருந்து எனக்கு வந்தது.

நான் மேம்பாலப் பாதையை விட்டு வெளியே வரும்போது அந்தக் கடைக்கார இளைஞர் என்னைப் பார்த்தார். கையில் ஒரு பார்சல் வடைப்பை இருப்பதையும் ஒரே நேரத்தில் கவனித்தார். நான் குனிந்தபடி வித்தியா நகர் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

வீட்டில் நடந்ததை சொல்லலாம் என நினைத்தால் கீழ் வீட்டில் இருக்கும் மகேஷூம் அவர் மனைவியும் என் மனைவியுடன் ‘கீழ் வீடு வசதிகள் குறைவாக உள்ளது. மேலே நாங்கள் வர வேண்டும்’ எனப் பேசிக்கொண்டு இருந்தார்கள். புதிதாக திருமணம் நடந்திருப்பதால் அவர்கள் குழந்தை பெற தயாராக வேண்டும் எனவும் பேசிக் கொண்டார்கள்.

யாரிடமும் எளிதாக நெருங்கிப் பழகிவிடும் குணம் எனக்கும் என் மனைவிக்கும் இயல்பாக இருப்பதால் இந்தக் காலணியில் எல்லோரிடமும் ஒரு வாரத்திலையே என் மனைவி நெருக்கமாகப் பழகிவிட்டார். 

பக்கத்து வீட்டில் மெடிக்கல் வைத்திருக்கும்  தமிழ் பேசும் லாவண்யா, எங்கள் வீட்டிற்கு அடுத்து உள்ள கன்னடம் பேசும் மோகனின் அம்மா நாகவேணி, கீழே உள்ள தெலுங்கு பேசும் காலணி இன்சார்ஜ் மஞ்சுளா, இரண்டாவது மாடியில் இருக்கும் முதல் வீட்டு தெலுங்கு பேசும் மோனிகா, அவர்கள் பக்கத்துவீட்டு ஹிந்தி பேசும் அம்மா, இவர்கள் எல்லோரும் நாங்கள் இருக்கும் முதல் மாடி வீதியின் பக்கம் நாற்காலியில் அமர்ந்து சிரித்துப்பேசி மகிழ்வதை அங்கம் பக்கமே வியப்போடு பார்க்கும். பத்து வருடங்களுக்கு மேலாக இந்தக் காலணியில் பலபேர் இருந்தும் இந்த நெருக்கத்தை ஏற்படுத்தியவர் என் மனைவிதான். பக்கத்து வீட்டு முதல் மாடியில் இருக்கும் அந்த வீட்டு ஓனர் மலையாளி. அவர்கள் வீட்டில் உள்ள சின்னப் பெண் குழந்தையை இந்த காலணியின் முதல் மாடியிலிருந்து வாங்கிக் கொஞ்சி விளையாடுவார்களாம்.

வரும் புது வருடம் ஜனவரி பிறக்கும் அன்று இரவு மொட்டை மாடியில் ஒவ்வொரு வீட்டிலும் சமைத்து எடுத்து வந்து கேக் வெட்டி கொண்டாடும் அளவிற்கு மாற்றிவிட்டது இவர்களின் மாலை நேர ஒன்று கூடல்.

இப்படியாக இவர்களுக்குள் மகேஷ் மனைவியும் பழகி இருந்தால் அந்த நெருக்கத்தில் ‘குழந்தை பெற நீங்கள் எப்படி உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண் குழந்தைப் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்.பெண் குழந்தைப் பிறக்க என்ன செய்ய வேண்டும்’ என இன்னும் பல நுணுக்கமான விசயங்களை எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்றாலும் ஒரு சிலவற்றையாவது அவர்களுக்கு சொல்லி இருக்கலாம். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து ‘உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். பிறந்தால் போன் செய்து சொல்லுங்கள்’ என்ற பொதுவானப் பதத்தை அவர்களிடம் பேசி அனுப்பிவிட்டோம். 

டீ மார்ட்டில் சென்னையில் இருக்கும் மகனுக்கு பனியன் வாங்க பதினோரு மணிக்கு போகும்போது மெடிக்கல் வைத்திருக்கும் செந்தில் குமார் அவரது வீட்டைத் திறந்து உள்ளே சென்றுக்கொண்டு இருந்தார். அவர் மனைவி லாவண்யா ஊருக்கு உடல்நிலை சரி இல்லாமல் சென்று இருப்பதாக செந்தில் குமார் சொன்னதாக மனைவி சொல்லி இருந்தார். 

வரும் வழியில் கடைகள் எதிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்காமல் இருந்தது. உணவகங்களில் கூட அதன் அறிகுறியே இல்லை என்பதை யாரிடம் கேட்பதெனத் தெரியவில்லை.

நான் நடந்து இட்லிக்கடையின் பக்கம் வரும்போது காலையில் பார்த்த அந்தப் பெண் இருந்தார். அந்த இளைஞர் கடைக்கு அந்தப் பக்கம் யாரிடமோப் பேசிக்கொண்டு இருந்தார். அந்தப்பெரியவர் அங்கே படுத்திருந்தார். அவர் காலையில் இட்லி சாப்பிட்டு மதியத்திற்கு அந்த ரைஸை வைத்திருப்பாரோ. அந்த ரைஸிற்குள் தேங்காய் சட்னி வைத்திருந்தார்களே அது மதியம் வரும்போது கெட்டுப்போகுமே என்றக் கவலை வந்தது. வேறு ஒரு பார்சல் வாங்கிக் கொடுக்கத் தயக்கமாகவும் இருந்தது. அந்த இருபது ரூபாய் இன்று அவருக்கு போதுமானதாக இருக்குமா. எது எப்படியோ ஒரு நாள் அவருக்கு ஓய்வு கொடுத்தது மனத்திற்கு நிறைவாக இருந்தது.

மாலை நான்கு மணிக்கு டிராவலிங்க் பேக் வாங்க டி மார்ட் செல்லும்போதும் அவர் படுத்து இருந்தார். ஒரு முதியவரை ஒரு நாள் முழுமையாக ஓய்வாக இருக்க வைக்க முடிந்ததே என்று இப்பொழுது மனம் மகிழ்ச்சியாக இருந்தது.

காலையில் அவர் கையில் அந்த மிக்சரைக் கொட்டும்போது அதுதான் தனது பசிக்கு உணவு என்று நினைத்திருப்பார். ஆனால் கண நேரத்தில் அது இட்லியாக மாறும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். ஒவ்வொரு உணவிலும் அதற்குரியவரின் பெயர் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை என்பது உறுதியானது.

“ஏங்க எப்பப் பார்த்தாலும் அந்த மூட்டையைப் பார்த்துக்கிட்டே வர்றீங்க.” மனைவி.

“நேத்து…” என்று நான் ஆரம்பிக்கும் போது ஒரு இருசக்கர வாகனம் வேகமாக உரசியது போலச் செல்ல அவர் பின் வாங்கினார். நாங்கள் இருவரும் எதுவும் பேசாமல் டெல்டா மெட்ரோவுக்குள் நுழைந்து எக்ஸ்லேட்டரில் ஏறிச் சென்றோம்.

டிக்கெட் கவுண்டரில் ஒருப் பெண் கைபேசியில் பணம் செலுத்த முடியாமல் பேக்கில் தேடி எடுத்து பணத்தைக் கொடுத்துவிட்டு வேகமாக நடந்து போனார். நான் கொடுத்த ஐந்நூறு ரூபாயை என்னிடமே தள்ளி கியூ ஆர் கோட் மெஷினில் நூற்றி அறுபது ரூபாயை டைப் செய்து என் பக்கம் நீட்டினார். நான் ஜிபே செய்து டோக்கனை வாக்கியபொழுது  எனக்கு முன்னால் சென்ற அந்தப் பெண் தான் வாங்கி வந்த நாப்கினை கவுண்ட்டரிலையே வைத்துவிட்டு சென்றுவிட்டதைக் கவனித்தேன்.

அதை எடுத்து செக்யூரிட்டி ஸ்கிரினில் போட்டு முன்னால் செல்லும் மனையிடம் டோக்கனைக் கொடுக்கும்போது வெறுப்போடு அவர் என்னிடம் ‘என்ன இது’ என்றார். நான் டோக்கன் இரண்டையும் எனது மணிப் பர்சில் வைத்தேன்.

இதுபோன்ற பொது இடங்களிலும் விமானப் பயணத்தின் போதும் கடிதக்கவர், பேக் என்று எவர் எதைக் கொடுத்தாலும் வாங்கக்கூடாது. கீழே தனியாக இருக்கும் எதையும் தொடக்கூடாது என்று நான் தான் இவர்களுக்கு பலமுறை சொல்லி இருக்கிறேன். நானே எடுத்து வந்ததால் அவர் என்னை வெறுப்பாகப் பார்த்தார்.

நான் விவரத்தைச் சொல்லியதும் அவரும் என்னோடு வேகமாக நடக்க ஆரம்பித்தார். மாதத்தின் அந்த நாட்களில் அவரும் என் மகளும் படும் வேதனைகள் பார்க்க முடியாதபடி துயரமாக இருக்கும்.

அந்தப் பெண்ணின் முகம் எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அவர் அணிந்திருந்த ஆடை நினைவில் இருக்கிறது. பார்த்தால் அவர் முகத்தை அடையாளம் கண்டு விட முடியும். ஒரு வேலை அந்தப் பெண் இது என்னுடையது இல்லை என்றால் என்ன செய்வது என்ற சிந்தனை வந்ததும் நாப்கினை அழுத்தாமல் அதன் எடையை அவதானிக்க முயன்றேன். அது பஞ்சு மெத்தையைப்போல இலகுவாகக்தான் இருந்தது.

மேலே சென்று மனைவியை இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு நான் அந்தப் பெண்ணைத் தேடினேன். அப்போது  பயணிகளை இறக்கிவிட்ட இரயில் எவரையும் ஏற்றாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

மனைவி குனிந்து கைபேசியில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தார். அநேகமாக மகனுக்கு செய்தியைச் சொல்லி இருப்பார். ‘அப்பா சமூக சேவை செய்யப் போய்ட்டாருடா.’ அதற்கு அவன் ஒரு எமோஜி போட்டிருப்பான். இவர்கள் ஒரு பதில் எமோஜி போட்டிருப்பார்கள். தூங்கும் மகள் விழித்திருந்தால் ‘ இங்க என்னடா நடக்குது ‘ என்று அவரும் ஒரு எமோஜி போட்டிருப்பார். நாங்கள் நான்கு பேரும் வைத்திருக்கும் வாட் ஆஃப் குழு செய்திகளால் நிரம்பி இருக்கும். நாப்கினை படம் எடுத்து குழுவில் போடலாமா என்று நினைக்கும்போது நான் தேடிவந்தப் பெண் சோர்வாக டிஜிட்டல் அறிவிப்பு பலகைக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்தார். நான் அவரிடம் நீட்டினேன். தன் தவறினை உணர்ந்தவராக முகம் மலர நன்றி சொன்னார்.

” சகோதரனே… உன்னை யாரென எனக்குத் தெரியாது.உன் உதவி வாழ்வில் மறக்க முடியாத சிறப்பானது. எனக்கு காலையிலிருந்து விடாமல் இரத்தப்போக்கு செல்கிறது. இன்று நான் அவசியம் ஆபீஸில் இருக்க வேண்டும். நான் இறங்கிச் செல்லும் இரயில் நிலையத்திற்கு வெளியே கடைகள் இல்லை. இது இன்று என்னிடம் இல்லை என்றால் என்னால் எதுவுமே செய்ய முடியாது. ஆன் லைனில் ஆர்டர் செய்வது என் அவசரத்திற்கு உதவாது. நீங்கள் மகத்தான மனிதர். உங்கள் குடும்பம் குழந்தைகள் சிறப்பாக இருக்கட்டும். நன்றி சகோதரனே. நன்றி, நன்றி”  என்று ஆங்கிலத்தில் பேசி பௌத்தர்கள் குனிவதுபோல இடுப்புவரை குனிந்து நன்றி சொன்னார். அவர் குனிந்தததும்தான் பலர் எங்களை திரும்பிப் பார்த்தார்கள்.

“இறைவன் ஆகச்சிறந்தவன் அம்மா. அவன் யாரையும் கைவிடுவதில்லை. இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பான். வாழ்த்துகள் ” என்று நான் சொல்லிக் கொண்டு இருக்கும்போது இரயில் வந்து நின்றது.

மனைவியிடம் கையை அசைத்து வரச்சொல்லி மனைவிக்குப் சமீபமாக இருந்தப் பெட்டியில் ஏறிக் கொண்டோம். கூட்டத்தில் நான் மட்டும் பெட்டிகள் இணையும் இடத்தில் இருந்த இரண்டு பேர் அமரும் இருக்கையில் அமர்ந்தேன். மனைவி நின்று கொண்டு இருந்தார். வேலை நேரக் காலை என்பதால் கூட்ட நெரிசல் கூடுதலாக இருந்தது.

சில்க் சிட்டியில் ஏறியக் கூட்டத்தில் குழந்தையுடன் ஏறிய இளம் கணவன், மனைவியரில்  குழந்தை வைத்திருந்த கனவனுக்கு நான் எழுந்து இடம் கொடுத்தேன். அவர் அமர்ந்ததும் அங்கு சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அந்தக் குழந்தையைப் பார்த்தனர். அது எல்லோரையும் பார்த்து சிரித்தது. நான் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தேன். அனைவரது முகமும் பிரகாசமாக இருந்தது. அவர்களுக்குள் சாதிகள் இருக்கிறது. மதங்கள் இருக்கிறது. இனம் என்ற பிளவு இருக்கிறது. ஒருக் குழந்தையின் சிரிப்பு. அத்தனைப் பேரையும் ஒன்றாக்கிவிட்டது. குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் போலும். பிறகேன் இத்தனைப் பிணக்குகள் என்று தெரியவில்லை.

அங்கிருந்தவர்களில் ஒருப் பையன் அந்தக் குழந்தைக்கு காற்றில் முத்தத்தை பறக்க விட அந்தக் குழந்தையும் அதையேச் செய்தது. அது மறுபடியும் மறுபடியும் செய்ய அந்தப் பையனும் சிரித்துக்கொண்டே செய்து கொண்டு இருந்தான். அந்தக் குழந்தை சிணுங்கியபடி செய்தது. அந்தப் பிள்ளையை நோக்கி யாவரின் கவனத்தை ஈர்த்தது . அந்தக் குழந்தையை இப்படி பழக்கி இருக்கக் கூடாதோ என்றும் எனக்குத் தோன்றியது. ஒருக் குழந்தையை எதுவாகவும் மாற்ற முடியும் தான்.

இரயில் பல நிலையங்களைக் கடந்து ஆர். வி. சாலை நிறுத்தத்தில் நின்றது. கூட்டம் இறங்க முடியாமல் அதிகமாக இருந்தது. இறங்கி மேலே ஏறி மெஜஸ்டிக் இரயிலுக்கு காத்திருந்தபோது ‘மடிவாலா போக எங்கு போகவேண்டுமென’ புர்க்கா அணிந்த மலையாள இஸ்லாமியப் பிள்ளைகள் என்னிடம் கேட்டார்கள். நான் அங்கிருந்த செக்யூரிட்டி பெண்ணைக் காட்டி அவர்களிடம் கேட்கச் சொன்னேன்.

வந்து நின்ற இரயிலுக்குள் ஏறுவதற்கு வரிசையில் நிற்க வைத்திருந்தாலும் இரயில் நிற்கும்போது ஏறும் இடத்தில் இடித்துக்கொண்டு தான் ஏற வேண்டியதாக இருந்தது. கூட்டத்தில் நெருக்கி உள்ளே எங்களுக்கான இடத்தில் பிறரை இடித்துக்கொண்டு நின்றோம்.

எனக்கு முன்பு மனைவி நின்றார். அவருக்குப் பின்னால் நான் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தேன். எனக்கு வலதுபுறம் கண்ணாடி போட்டுக் குளிருக்கு கருப்பு தோல் ஆடை அணிந்திருந்தவர் கூட்டம் நெருக்குவதில் என்னைத் திரும்பிப் பார்த்தார்.

இரயில் ஜெயா நகரைக் கடந்து போகும் போது அவர் என்னை விடாமல் முறைத்தார். பார்க்கும்போது அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவராக காணப்பட்டார். அவர் தோளில் தொங்கவிட்டிருந்த பையை நான் இடிப்பதால் அவர் முறைக்கிறார் என நினைத்து நான் இன்னும் கொஞ்சம் மனைவியை நோக்கி நகர்ந்தேன். அவர் கொஞ்சம் திரும்பி என்னை நோக்கியவாறு பையை சரி செய்து நின்றார்.

இரயில் லால்பாக்கிற்கும் நேஷனல் காலேஜிற்கு இடையில் செல்லும் போது அவர் என்னைப் பார்த்து வாயில் ஏதோ முணு முணுக்க ஆரம்பித்துவிட்டார்.

இப்படித்தான் முன்பு ஒருமுறை நானும் நண்பர் ஒருவரும் ஸ்பென்சர் பிளாசாவின் நுழைவு வாயிலின் முதல் மாடியில் சிரித்துப் பேசிக்கொண்டு சென்றபோது பின்னால் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தால், வெள்ளைக்காரர்கள் இரண்டு பேரில் ஒருவன் என்னை நோக்கி திட்டி அடிக்க வர, அவனுடன் வந்தவர் அவனைப் பிடித்துக் கொண்டார். எனக்கு எதுவும் புரியவில்லை. அவன் பிடித்திருப்பவர் கையை விடுவித்து என்னை அடித்துவிடுவதிலேயே குறியாக இருந்தான்.அவனின் ஆத்திரமடைந்த முகம் இப்பொழுதும் நினைவில் இருக்கிறது. பிறகுதான் நண்பர் என்னிடம் சொன்னார்.

“அவனை நீங்கள் கிண்டலடித்து.என்னிடம் பேசிக்கொண்டு வந்தததாக.அவன் ப்ரண்ட்டுக்கிட்டே சொல்றாங்க.”

“நான் அவனைப் பார்க்கவே இல்லை. அவனை எங்கங்க நான் கிண்டலடிச்சேன். நான் அப்படிச் செய்யலைன்னு அவன்கிட்ட சொல்லிவிட்டு வர்றேங்க.”

“உங்கள் முகச்சாயல்ல அவனை யாராவது கிண்டலடிச்சிருக்கலாம் இல்லை கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கலாம்.அவன் அது நீங்கள்ன்னு நினைச்சுக் கத்துறான். நாம போகலாம் வாங்கன்னார்.”

“என்னங்க நான் எதுவுமே பண்ணல அவன் என்னையக் கெட்ட வார்த்தையில் திட்டுறானங்க.”

அவர் என்னை அங்கிருந்து அழைத்து வரும்போது சொன்னார். 

“நாம ரெண்டு பேரும் தான் பேசி சிரிச்சுக்கிட்டு வர்றோம். அதை நீங்கள் சொன்னா இங்க எவனும் நம்பமாட்டான். வெள்ளைக்காரன் சொல்றதுதான் அத்தனை பேரும் சரிம்பாங்க. அதனால்தான் நான் உங்களை இந்தப் பக்கம் அழச்சுக்கிட்டு வந்துட்டேன் ” 

எனக்கு அவர் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. ஆனாலும் வாடிய முகமும் குற்றமிழைக்காதபோது ஒருவனின் தகாத வார்த்தைகளும் என்னை நீண்ட நேரம் சுய நிலைக்கு வரவிடாமல் தடுத்துக் கொண்டு இருந்தது. நண்பர் பல செய்திகளை மேற்கோள் காட்டி என்னை மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்.

இப்போது மொழி தெரியாத இந்த ஊரில் என்னை இவர் என்ன செய்யப் போகிறார் என்கின்ற கவலை வந்தது. இரயில் கே.ஆர்.மார்க்கெட்டில் நின்றபோது பெரிதாக கூட்டம் இறங்கவில்லை. இரயிலில் மேப் டிஜிட்டல் டிஸ்ப்ளே பழுதாகி இருப்பதால் அடுத்தடுத்த ஸ்டேஷனை அறிவிப்பைக் கேட்டு தான் அறிய முடிந்தது. 

டிஸ்ப்ளேயை சரி செய்யாமல் இவர்கள் என்னதான் நிர்வாகம் செய்கிறார்களோ தெரியவில்லை. இத்தனைக்கும் இந்த நகரம் பல மாநிலத்தவர்கள் நிறைந்திருக்கும் முக்கியத் தொழில் நகரம்.

அவரின் முகமும் முணுமுணுப்பும் அதிகமாக இன்னும் கொஞ்சம் மனைவியை நெருங்கினேன்.  அவர் அடித்தால் நாம் என்ன செய்யலாம். அவர் கன்னடத்தில் சொல்வது எல்லோருக்கும் புரியும்.நான் எதுவுமே செய்யவில்லை என்று இங்கு உள்ளவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது. நிச்சயமாக அவர் அடித்து விடுவார் என்று எனக்குள் தோன்ற ஆரம்பித்தது. நான் மனைவியிடம்

“சிக்பேட்டேயில உனக்கு வாங்க வேண்டிய சாமான்கள் ஏதாவது இருக்கா.” என்றேன்.

“இல்லைங்க. நாம மெஜஸ்டிக்கேப் போகலாம்.”

அவர் முகம் மாறியது.

“ஸாரி சார். ஸாரி சார்.” என்றார்.

என் மனைவியிடம் நெருங்கி நெருங்கி நான் ஏதோ தவறாக நடக்க முயல்வதாக நினைத்து அவர்  என் மேல் கோபம் கொண்டு இருக்கிறார் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது.

“சார் இந்த முகத்தைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது.”

“சம் திங் டிபரெண்ட். சாரி சார்.”

நான் சிரிக்கச் சிரிக்க அவர் அசௌகரியமாக நெளிந்தார். மெஜெஸ்டிக்கில் இறங்கினால் அவரோடு டீ குடிக்கலாமென முடிவெடுத்தேன். மெஜஸ்டிக்கில் நான் இறங்க கதவை நோக்கி நகர அவர் கிடைத்த இருக்கையில் உட்கார்ந்து என்னை நோக்கி ‘ஸாரி சார் ‘ என்றார். நான் ‘தேங்ஸ் சார் ‘ என்றேன். அவர் குழப்பமாக என்னைப் பார்த்தார். இறங்குவதற்குள் இரண்டு மூன்று நன்றிகளைச் சொல்லிவிட்டேன். 

அவர் ‘ஸாரி சார் ‘ என்பது இரயில் கண்ணாடி வழியாக தெரிந்தது. நான் விரல்களை மூடி கையின் கட்டை உயர்த்தி நன்றி சொன்னேன். அவர் தலையாட்டிவிட்டு குனிந்து கொண்டார். ‘நான் நன்றி சொன்னதற்கு நீங்கள் அசௌகரியப்படத் தேவையில்லை. எனக்கு உதவிதான் செய்திருக்கிறீர்கள்.’என்று எப்போதாவது சந்தித்தால் அவர் செய்த உதவியைப் பாராட்டிச் சிலாகிக்க வேண்டும். 

என்னிடம் சண்டை போடுகிறவர்கள் பிறகு என்னோடு நண்பராகி விடுகிறார்கள் என்று என் மகள் அடிக்கடி பெரியப் பட்டியலையே வாசிப்பார். அவர் சொல்வதையும் மறுக்க முடியாத படியாக பலதும் நடந்தும் இருக்கிறது.

நடந்தது எதுவும் தெரியாமல் மனைவி இரயில் நிலையத்தை விட்டு நாங்கள் செல்லும் பகுதிக்கு போகவேண்டிய வழியை விட்டு தவறான வழியில் சென்று கொண்டு இருந்தார். அவருடைய மெட்ரோ இரயில் டோக்கன் என்னிடம் இருப்பதால் நான் கூட்டத்தை விலக்கி  கொஞ்சம் வேகமாக அவரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 

டோக்கன் அவரிடம் கொடுத்து இருந்தால் அவரிடம் ஏதாவது கலாட்டா செய்திருக்கலாம் என்று நினைக்கும்போதே இன்னொரு குரல் ‘டேய்… உனக்கு நேரம் சரியில்லை. ஜஸ்ட்ல மிஸ்ஸாயிட்ட. போடா.. போடா… டேய்.’ என்றது.

அதுவும் சரிதான்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.