எனக்கு இன்று சம்பள தினம் . அதுவும் இது முதல் சம்பளம். இந்த விஷயம் தருமங்குடி கடகத்துப்பிள்ளைக்கு எப்படியோ தெரிந்துதான் இருக்கிறது. பிள்ளை பிறந்த ஊரின் பெயர் கடகம். அந்த ஊரிலிருந்து தருமங்குடிக்கு அவர் மாப்பிள்ளையாய் வந்திருக்கிறார். வீட்டோடு மாப்பிள்ளை.. அவர் பெண் எடுத்த வீட்டில் ஆண் வாரிசு யாரும் இல்லை. அப்படியும் பிள்ளைக்கு ஒரு சவுகரியம்.
கடகத்துப்பிள்ளைக்கு அப்பா அம்மா வைத்த ஒரு பெயர் இல்லாமலா, ராஜகோபால்தான் அந்தப் பெயர். ராஜகோபால் என்று பெயரை வைத்து யாரும் அவரைக் கூப்பிடுவதில்லை. அதனில் மரியாதை சமாச்சாரமும் இருக்கலாம். தருமங்குடியில் தபால் கொடுப்பவன் குள்ள வடிவேலு. என் அண்ணனுக்கு வகுப்புத்தோழன். அவன் தான் பிள்ளையின் பெயரைச் சரியாய் அறிந்து சொல்பவன். தருமங்குடிக்கு அருகில் இருப்பது சேத்தியாத்தோப்பு நகரம். அங்கிருக்கும் இந்தியன் வங்கியிலிருந்து அவ்வப்போது பிள்ளைக்குத் தபால் வரும். குறுவையோ சம்பாவோ சாகுபடி நெல் விற்று வரும் பணத்தைக் கணிசமாய் எடுத்துப்போய் பிள்ளை அந்த வங்கியில் வைப்புத்தொகை எனப் போட்டிருந்தார். பிள்ளையின் பெயரும் விலாசமும் அந்த வங்கி அனுப்பும் தபாலில் பளிச்சென்று எழுதியிருப்பார்கள்.
எனக்கு முதுகுன்றத்தில் தொலைபேசி அலுவலகத்தில் வேலை. இந்திய அஞ்சல் இலாகாவில் டெலிகிராஃப் என்பது ஓர் அங்கம். அதனில் டெலிபோன் ஆப்ரேட்டராக நான் வேலையில் சேர்ந்தேன். ஒரு மாதம் முடிந்தது எனக்குச் சம்பளம் வந்திருக்கிறது. அது பெரிய தொகை. முந்நூறு ரூபாய். அப்போது ஒரு பவுன் தங்கமும் முதுகுன்றம் பஜார் வீதி பழனிசாமிக்கவுண்டர் கடையில் அதே விலைதான். சாக் பீசால் பவுன் விலையைக் கடை வாசலில் சிலேட்டுப்பலகையில் அன்றன்று கவுண்டர் எழுதிப்போட்டுவிடுவார். நான் அதனை அடிக்கடிப் பார்த்துக்கொள்வேன்.
எங்களுக்குச் சம்பளம் போடும் அலுவலகம் கடலூரிலிருந்தது. அங்கிருந்து மாவட்டம் முழுவதற்கும் மாத சம்பளத்தை மணி ஆர்டர் வழி அனுப்பி வைப்பார்கள். வெளியூர் போகும் எந்தத் தபாலுக்கும் எங்கள் அலுவலகத்தில் ஸ்டாம்பு ஒட்டமாட்டார்கள். உறைமீது ஆன் பி அண்ட் டி சர்வீஸ் என ரப்பர் ஸ்டாம்பு குத்திவிடுவார்கள். அஞ்சல் அலுவலகத்துக்காரர்களும் அவர்களின் டெலிபோன் பில்லுக்குப் பணம் ஏதும் கட்டமாட்டார்கள். இரண்டு துறையும் ஒன்றாய்த்தானே குடும்பம் செய்தது. அத்யாவசிய சேவைகளில் தனியார்கள் நுழைவு என்பது தடுக்கப்பட்டிருந்த ஒரு பொற்காலம்.
விபூதிப்பட்டையை நெற்றியில் குழைத்துப்போட்டுக்கொண்டு வரும் தனபால் போஸ்ட்மேனுக்கு சம்பள தினத்தன்று பெரிய மரியாதை .டெலிபோன் ஊழியர்களுக்குக் கடன் கொடுத்த லேவாதேவிக்காரர்கள் வீட்டுக்குப் பால் ஊற்றிய பால் வண்டிக்காரர்கள்,மாதாந்திர ஏலச் சீட்டுப்பிடிப்பவர்கள், குடிகார டெலிபோன் ஊழியர்களின் மனைவி மார்கள் அவர் பெற்ற பிள்ளைகள் அவர்களின் அம்மாக்காள் அக்கா தங்கைகள் எல்லோரும் ஆபிஸ் இரும்புக்கேட்டிலியே வரிசையாக நின்று தவம் கிடப்பார்கள். சமயத்தில் சிறு சண்டையும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் கன்னா பின்னாவென்று அவர்களுக்குள் அரங்கேறும்.
ஒரு காலத்தில் ஓகோ என்றிருந்த ஏக போகத் தென்னாற்காடு ஜில்லாவைத்தான் இன்று கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி என்று மூன்று மாவட்டங்களாக ஆக்கியிருக்கிறார்கள். நிறைவாகவே வளர்ச்சி. தருமங்குடி கடகத்துப்பிள்ளையிடம் ஒரு முந்நூறு ரூபாய் கடன் வாங்கியிருந்தோம். அது எதற்கு என்பதையும் சொல்லி விடுகிறேன். அப்பாவுக்கு மணி விழா என்கிற அறுபது ஆண்டு நிறைவு வந்தது. அதன் செலவுக்கு வேண்டித்தான் அந்தக் கடனும் முளைத்தது.
அப்பாவின் மணி விழாவுக்கு ஒரு மாதம் முன்பாகத்தான் அம்மாவுக்கு நல்லப் பாம்பு கடித்து விட்டது. தருமங்குடி வீட்டில் இரவு நாங்கள் கூடத்திலும் தாழ்வாரத்திலும் கோரைப் பாய் போட்டு உறங்குவோம். ஒரு நாள் இரவு ஓட்டின் கீழ் இருக்கும் பனை வாரையிலிருந்து அம்மா மீது அந்தப் பாம்பு விழுந்தது. அது அம்மாவைக் கடித்தும் விட்டது. இரவு பதினோறு மணி இருக்கும். பாம்புக்கடிக்கு பச்சிலை வைத்திம். சேத்தியாத்தோப்பு அருகே இருக்கும் பாழும் வாய்க்கால் கிராமத்திற்கு அம்மாவை முதல்முதலாய் சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துப்போனோம். தருமங்குடியில் ஒரு டெலிபோன் வசதியும் கிடையாது. பாம்புக்கடி வைத்யரிடம் விஷ முறிவுக்குப்பச்சிலை வாங்கி வந்தோம். அம்மா வீட்டுக்கு வந்தாள். அம்மாவுக்கு மயக்கம் இன்னும் கூடித்தான் போயிற்று. விடியற்காலை முதல் பஸ்ஸில் அம்மாவுடன் சிதம்பரம் நகருக்கு விரைந்தோம். தனியார் மருத்துவ மனையில் அம்மாவைச் சேர்த்து இரண்டு நாள் ஆனது. வயிறு வீங்கிப்போனது. மூச்சு விடத்திணறினாள். பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கார் வைத்து அழைத்துப்போனோம். மொத்தமும் கடன் வாங்கித்தான். ஜனங்கள் செலவுக்குக் கடன் கொடுத்தார்கள். அதனைச்சொல்லவேண்டும். கையில் காசிருந்தாலும் பெரிய மனம் வாய்க்க வேண்டுமே. அது வாய்த்தது. அம்மா பிழைத்து வீட்டுக்கு வந்தாள்.
எங்கள் பெரிய அக்காவின் கணவர் எங்கள் அப்பாவுக்கு மணிவிழாவை சிம்பிளாகவாவது செய்தே ஆகவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தார். அவரிடமும் காசு பணம் அதிகமில்லை. எப்பவும் கஷ்ட ஜீவனம். உன்னைப்பிடி என்னைப்பிடிதான். காவேரி பாயும் தஞ்சை ஜில்லாவில் ஒரு பண்ணையாரிடம் கார்வாரியாக உத்யோகம்.குடியிருக்க வீடு தோட்டம் தென்னை மாவோடு பெரிதாக இருக்கும். கெட்டா கெட்டியான ஆட்களே அவ்வீட்டைக் கூட்டிப் பெருக்கத் திணறிப்போவார்கள். பச்சை அரிசி எப்போதும் கிடைத்து விடும்.யாரும் பட்டினியாய்க் கிடக்க வேண்டாம். அவ்வளவுதான். அப்பாவின் அறுபது கல்யாணத்திற்கு இந்தக் கடகத்துப் பிள்ளையிடம்தான் முந்நூறு ரூபாய் கடன் வாங்கினது. கடன் கேட்க நானேதான் பிள்ளை வீட்டுக்குப்போய் இருந்தேன்.
‘இப்ப இந்த அறுவது கல்யாணம் அவசியமா. எனக்கும் தான் அறுவது வந்துது. நானும் ஆச்சியும் திருக்கடையூர் பஸ் பிடித்துப் போனோம். காதும் காதும் வச்சமாதிரி சுப காரியத்த முடிச்சிகிட்டு வூட்டுக்கு வந்தம்.ஒரு பாயசம் வச்சம் வாழ எல போட்டு சாப்டம். பெரிய செலவு எதுவும் இல்ல. ஆனா கடன் வாங்கியாவது இப்ப இந்த மணிவிழாவை செஞ்சிகிணுமா’

நான் பதில் எதுவும் சொல்லவில்லை. மூன்று வட்டிக்குத் தான் பிள்ளை எனக்குக் கடன் தந்தார். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விடுவேன் உறுதியாகப் பதில் சொன்னேன். சம்பாத்தியம் வேண்டுமே. அங்கு சுற்றி இங்கு சுற்றி ஏன் இந்த உலகமே சுற்றினேன். ஒரு நல்ல வேலை இப்போதுதான் கிடைத்தது. அதுவும் எனக்கு இது முதல் மாத சம்பளம். இன்றுதான் கையில் வாங்கினேன். தருமங்குடியிலிருந்து தினம் தினம் பேருந்து பிடித்து அலுவலகம் சென்று திரும்புவேன். சிதம்பரத்திலிருந்து முதுகுன்றம் செல்லும் பேருந்துகள் எல்லாமே தருமங்குடி வழியாகத்தான் செல்லும். அரை ரூபாயுக்கு முதுகுன்றமும் முக்கால் ரூபாயுக்கு சிதம்பரமும் அன்று பேருந்துக்கட்டணம். சிதம்பரம் செல்லும் பேருந்தைப்பிடித்துத் தருமங்குடியில் இறங்கினேன். பேருந்து நிறுத்தத்தில் ஒரு சிமெண்ட் கட்டை போட்டிருந்தார்கள். சாலைக்கு அடியே ஒரு கன்னி வாய்க்கால் சல சலத்துத் தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. அருகில் இருக்கும் அகண்ட ஆராபுரி ஏரிக்கு எத்தனையோ செல்லப்பிள்ளைகள். அதனில் இந்தக் கன்னி வாய்க்காலும்தான்.
‘வாங்க சின்ன அய்யா’ யார் அது நோக்கினேன்.
கடகத்துப்பிள்ளைதான் ஆரம்பித்தார்.
‘நமஸ்காரம் பிள்ளை. எங்க இவ்வளவு தூரம். எங்கயாவது வெளியூர் பயணமா’
‘ஒன்னும் இல்லே. சின்ன அய்யாவ பாக்குலாம்னு வந்தேன்’
‘நாந்தான் வீட்டுக்கு வந்துடுவேன். பஸ் ஸ்டாப்பிங்குக்கே நீங்க வந்துட்டிங்களே புள்ள’
‘வாங்க அய்யா நடந்துகிட்டே பேசுலாம்’
இருவரும் செம்மண்சாலையில் பேசிக்கொண்டே நடந்தோம்.
‘இன்னிக்கு அய்யாவுக்கு சம்பளம் போடுறாங்களா’
‘ஆமாங்க புள்ள’ இவருக்கு எப்படிஇவ்விஷயம் தெரிந்திருக்கிறது யோசித்துக் கோண்டேன்.
‘எனக்கு எப்பிடி தெரியும்னுதான யோசன. அதான’ பவ்யமாய்க்கேட்டார்.
நான் சிரித்துக்கொண்டேன் சற்று மழுப்பினேன்.
‘உங்க வூட்டுக்கு அடுத்த வூடு தருமைநாதன் கோவில்ல மணி அடிக்கிற சாமா குருக்களையா வூடு. அந்த வூட்டுத்திண்ணையில ஒரு பெரிய மனுசன் ஒக்காந்துகிட்டு இருந்தாரு. வீட்டு உள்ளேந்து குருக்களய்யாவும் வந்து அவரோட சகசமா பேசிகிட்டு இருந்தாரு. நா பக்கத்துல உங்க வூட்டு சிமிட்டுத் திண்ணையில கண்ண மூடிகிட்டு படுத்து கெடந்தன். அவுங்க பேசிகிட்டது இதுதான். அந்த பெரிய மனுசன் ஊரு முதுகுன்றம். அங்க பசார் வீதியில ஒரு ஹோட்டல் வச்சிருக்காரு. பேரு ராசேந்திரா ஓட்டலாம். உங்களுக்கும் தெரிஞ்சிமிருக்கலாம்’
‘ராசேந்திரா புலால் உணவு விடுதின்னு அதுக்கு பேரு’ என்றேன்.
‘ மிலிட்டரி ஓட்டலா. அதேதான். அந்த ஓனருதான் வந்தவரு. அவுருக்கு முந்நூறு ரூபா கடன் வேணும்னுட்டு குருக்களய்யிருகிட்ட சொல்ல. அந்த குருக்களய்யரு உங்க பேர சொல்லி, முதுகுன்றம் டெலிபோன்ல வேல பாக்குற சேதியவும் சொல்லியிருக்காரு உங்களுக்கு இன்னிக்கி சம்பளம் வருதுன்னு அவுருக்கு சேதி ஆப்ட்ருக்கு. அவரு கெளம்பி குருக்களய்யாவ தேடி அவரு வூட்டுக்கே வந்துட்டாரு. அவுருக்கு முந்நூறு ரூவா கடனா வேணும். அதான் வெஷயம். உங்க கிட்டதான் ஆ அவுங்க ரெண்டு பேரும் கடன் கேக்கறதா குந்திருக்காங்க. நீங்க எப்ப வருவீங்கன்னு காத்துகிட்டும் இருக்காங்க’
‘இவ்வளவு சேதி இருக்கா புள்ள’
‘ஆமாம். அத சொல்லதான் நா வந்தன். எனக்கும் அய்யா அறுவது கல்யாண விசேஷத்துக்கு கடனா வாங்குன மிந்நூறு அசலும் வட்டியுமா நிக்குது. அத யாபகப் படுத்தறேன்’ சொல்லிமுடித்தார்.
‘ஆமாம் புள்ள .’ கடகத்துப்பிள்ளை பொய் புரட்டு சொல்லமாட்டார். கொஞ்சம் கறார் பேர் வழி அவ்வளவே.
‘ஏப்பிடியும் உங்க கடன குடுத்துடவேண்டியதுதான். மொத சம்பளமாச்சேன்னு பாக்குறன். அப்பா அம்மாகிட்ட காட்டி ஆசீர்வாதம் வாங்கிகிட்டு அப்பறமா வேற வேலய பாக்குலம்னு யோசன’
தருமங்குடி சுடுகாடு தாண்டி பட்டினத்தான் வாய்க்கால் சிமெண்ட் மதகு வந்தது. வாய்க்காலில் தண்ணீர் செம்பட்டையாய் கிழக்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
‘வூட்டுக்குப் போனா அவுங்க கிட்ட சரியா மாட்டிகுவிங்க அது நிச்சயம்’
‘அப்பிடியா சொல்றிங்க புள்ள’
‘நா சொல்லவேண்டியத சொல்லிபுட்டேன். அய்யா அப்பறம் ஒங்க ரோசனை’
நான் பேண்ட் பாக்கெட்டில் இருந்து முந்நூறு ரூபாயை எடுத்தேன். ஒரு முறை எண்ணினேன். பிள்ளையிடம் கொடுத்தேன்.
பிள்ளை அதை வாங்கி அவரும் எண்ணிக்கொண்டார். பிள்ளையின் முகம் மலர்ந்த மாதிரிக்குத் தெரிந்தது. பணம் ஒரு போதைதான்.
‘நானும் எதிர் பாக்குல’ என்றார்.
‘இருக்கட்டும் புள்ள. எங்க அவசரத்துக்கு அன்னிக்கி பணம் குடுத்து ஒதவினீங்க. அது பெரிசு’
ஒரு ஐம்பது ரூபாய் மட்டுமே இன்னும் சம்பளப் பணத்தில் பாக்கியிருந்தது. அதனை எடுத்து பார்த்துக்கொண்டேன்.
‘அது என்னா’
‘சம்பள பணத்துல ஐம்பது பாக்கி இருக்கு. அம்மா அப்பா கிட்ட குடுத்துக் கும்பிட்டுக்குவன்’
‘ அய்யா அது கரெக்ட’ என்றார் பிள்ளை.
‘நா பஸ் ஸ்டாப்பிங்குக்கு க்கு வந்தது. உங்க கிட்ட இந்த சேதி சொன்னது யாருக்கும் தெரிய வேணாம். தெரிஞ்சா வம்பு’ எச்சரிக்கை செய்தார் பிள்ளை. மேலத்தெரு நாகமணிந்த விநாயகர் கோவிலுக்கு வந்து பிள்ளையாரைப் பார்த்தேன். வழக்கம் போல் கன்னத்தில் போட்டுக்கொண்டேன். கடகத்துப் பிள்ளை வெள்ளாழத்தெருவுக்குப் போய்விட்டார்.
நான் என் வீடு நோக்கி நடந்து கொண்டு இருந்தேன்.
‘ஏய் இவனே ஒங்கிட்ட ஒரு சேதி’ என்றார் குருக்கள் மாமா. வழக்கமாய் என்னை ‘இவனே’ என்றுதான் அழைப்பார்.
‘ஆத்துக்கு போய்ட்டு வந்துடறேனே மாமா’
‘அதுக்கு முந்திதாண்டா உன் கிட்ட பேசணும்.’
‘சரி சொல்லுங்க மாமா’ அப்படியே என் வீட்டு ஆளோடியில் நின்றேன்.
‘தோ திண்ணையில உக்காந்துண்டு இருக்காறே அவர் முதுகுன்றத்துல பஜார்ல . ஓட்டல் வச்சிண்டு இருக்கார். பேரு ராஜந்திரன். எனக்கு ரொம்ப நாளா சினேகம். அவருக்கு ரூவா முந்நூறு கைமாத்தா வேணும் ரொம்பவும் அர்ஜெண்டுங்கறார். நான் தான் அவர வரச்சொல்லியிருந்தேன். அதுவும் உன்ன நம்பிதான். சம்பளம் உனக்கு இன்னிக்கின்னு அவர்தான் சொன்னார். நா ஒனக்கு பக்கத்து ஆம். துரோகம் எதுவும் பண்ணிடமாட்டேன். ஒரு முந்நூறு ரூவா இப்பிடி குடு. டாண் அடுத்த மாசம் திருப்பி குடுத்துடுவார். நா ஒனக்கு முழுசா கேரண்டி சித்த நீதான் எனக்கு தயவு பண்ணணும் கொழந்தே’ சன்னக் குரலில் பேசினார்.
‘மாமா நா சொல்றத கேளுங்கோ. எனக்கு சம்பளம் இன்னிக்கி வரல. இது மொத மாச சம்பளம். கடலூர் ஹெட் ஆபிசிலேந்து சம்பள மணிஆர்டர் போடறவா. என் பேர எழுதி , முதுகுன்றம்னு ஊர் பேர போடாம திருக்கோவிலூர்னு தப்பா போட்டுட்டா. அது திருக்கோவிலூர்க்கு போயிட்டுது. அது திரும்பி முதுகுன்றத்துக்கு வரணும். கடலூர் ஆபிஸ் போயிட்டுதான் வருமாம். வந்துடும். இப்ப என் கைல காசு எதுவும் இல்ல மாமா.’ எப்படியோ நான் இதனைச் சொல்லிவிட்டேன்.’ எனக்குக்கூட இப்படி எல்லாம் பொய்பேசத்தெரியுமா என்ன மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
‘என்னடா கல்ல தூக்கி தலையில போடற’
‘இதுதான் மாமா உண்மை.’‘ பொய்தான் சொன்னேன்.
முதுகுன்றம் ஓட்டல்காரர் திண்ணையிலிருந்து வேகமாய் எழுந்து நாங்கள் நிற்குமிடம் வந்தார். ‘ நீங்க பேசுனது எல்லாம் என் காதுல கேட்டுது.’
குருக்கள் மாமா அவரிடம் கையை விரித்தார். உதட்டைப்பிதுக்கினார். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தேன்.
‘தனபாலு போஸ்ட்மேன் என் கஸ்டமரு. என் ஓட்டல்ல வாடிக்கையா சாப்ட வர்ரவரு. ஒங்களுக்கு சம்பளம் வந்துருக்குன்னு அவுரு சொன்னாரே. அப்பறம்தானே நானே கெளம்புனேன்.’ முணுமுணுதார் ஆகாயம் பார்த்தார் ஓட்டல்காரர்.
‘அப்ப நா பொய்யி சொல்லுறனா’ குரல் உயர்த்தினேன். குருக்கள் மாமா திரு திரு என்று விழித்தார். பதனமாக நகர்ந்து கொண்டார்.
அந்த நேரம் பார்த்து என் அப்பா சைக்கிளில் வந்திறங்கினார்.’ நா கத்தாழ கிராமம் ஒரு காரியமா போயிட்டு வர்ரேன். வெள்ளாழத்தெருவழியா வந்தேன். கடகத்து புள்ள என்ன நிப்பாட்டுனாரு. நா எழுதிக்குடுத்த முந்நூறு ரூபா ப்ராமிசரி நோட்ட என்னண்ட திருப்பிக்குடுத்து வீட்டுக்கு எடுத்துட்டு போங்க. எனக்கு பூரா பணமும் வந்து போச்சி. சின்னய்யா குடுத்துட்டாரு. வட்டி கிட்டி எதுவும் வேண்டாம்னு சொன்னாரு.ரெவின்யூ ஸ்டாம்பு கிழிச்ச அந்த முந்நூறு ரூபாய் ப்ராமிசரி நோட்டு தோ பாருடா’.
குருக்களய்யா ‘நாம ரெண்டுபேரும் பேசிகிட்டு இருந்தப்ப இந்த சிமெண்ட் கட்டத்திண்ணையில ஒரு ஆசாமி கால நீட்டிகிட்டு இருந்துதே அது யாரு’
‘கடகத்து புள்ள. அவுரே தான்’
’ நாம என்ன பேசிக்கறம்னு கேட்டு இருக்காரு. உடனே கிளம்பி போயி தம்பிய ரோட்டுலயே அச மடக்கி. இந்த நல்ல காரியத்த பாத்துருக்காரு’ என்றார் ஓட்டல்காரர்.
குருக்களும் ஓட்டல் உரிமையாளரும் என்னைத்திட்டிக்கொண்டே போனார்கள். ‘ ஒரு மூணு காசி மொத மொத சம்பாரிக்கறான். ரவ பய. அவனுக்கு இம்மாம் கிருது ஆவாது’
‘ஆமாங்கறன்’ என்றார் சாமா குருக்கள். என் அம்மா வீட்டின் உள்ளிருந்து அங்கு வருவதைப்பார்த்து அந்த இருவரும் இன்னும் வேக வேகமாய் நகர்ந்து போனார்கள்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
