மாலி தன் நெற்றியை காரின் ஜன்னலில் அழுத்திக்கொண்டு, தூரத்தில் நகரும் கார்களுக்கு பின்னால் தெரிந்த கடலில் அலைகளைப் பார்க்க முயன்று கொண்டிருந்தான். அலைகள் விரிந்தெழும் நேரமெனத் தோன்றியது. எத்தனை அலைகள், எழுந்தும், விழுந்தும், சுமந்தும், சுழன்றும், நுரைத்தும், அடங்கியும் இருக்கும் அவற்றைக் கற்பனை செய்து பார்த்தான், அலைகளுக்கு இடையே ஒரு சம்பந்தமும் அவனுக்குப் புலப்படவில்லை. ஆனாலும் உடல் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தது. உள்ளே அலைகள், அலைகள் எனக் ஏதோ ஓடியது. ஓடியதைத் தொட உடல் தவித்தது, ஆனால் கார் அதற்கு இடமளிக்கவில்லை. நான்கு கதவுக்குள் பூட்டியது. அங்கேயே ஒரு நகர்வில், அலை போல உயர்வில் கால் வைத்து விட வேண்டுமென நினைத்தான்.
அவன், கமலாக்ஷன், தாரா மூவரும் ஹவாயில் உள்ள ஓஹூ தீவின் வடக்கு கடற்கரையில் பைப்லைனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். கார் அந்தக் கடை வாசலில் நின்றது. கமலாக்ஷன் சன்ஸ்க்ரின் வாங்க சென்று திரும்பக் காருக்குள் வந்திருந்தான். தாரா தொலைப்பேசியில் வானிலை ஆய்வில் இருந்தாள். அவர்களின் சர்ஃப் போர்டுகள் வாடகை காரின் மேல் கட்டப்பட்டிருந்தன.
அப்பொழுது விளையாட்டாக சவால் தொடங்கியது. கமலாக்ஷன் ஹலேய்வாவில் இருந்த ஒரு சிறிய கடையின் ஜன்னல் வழியே கவனித்தபோது , கடையில் இருந்த வயதான கடைக்காரர் பணப்பெட்டியை விட்டு விலகி, கவுண்டருக்குப் பின்னால் சிகரெட்டுகளை அடுக்கிக்கொண்டிருந்தபோது பணப்பெட்டி திறந்தே கிடந்தது.
“அதைப் பார்,” கமலாக்ஷன் மாலியின் கையை மெல்லத் தட்டி கிசுகிசுத்தான், தாரா தன் தொலைப்பேசியில் அலைகளின் அறிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“உனக்கு ஒரு சவால் விடுகிறேன் , அங்கே போய் பணப்பெட்டியிலிருந்து ஏதாவது எடுத்துக்கொண்டு வா. வெறும் இருபது டாலர் எடுத்து வந்தால் போதும். போர்டு வேக்ஸ் வாங்க எளிதான பணம். நீ தைரியமாக ஏதேனும் ஓன்றை வாழ்க்கையில் செய்யனும்… “
“டேய் ஏதாவது சிசிடிவி கேமரா இருந்தால்…” மாலி தயங்கினான்.
“சவால்..தைரியம் இருந்தால் செய்..பயமாக இருந்தால் ஒளிஞ்சுக்கோ.. ” தாரா தொலைப்பேசியைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
மாலியின் வயிறு கலங்கியது, ஆனால் அவனுடைய நண்பர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள், காத்துக்கொண்டிருந்தார்கள். “கோழை” என்ற வார்த்தை அவர்களுக்கிடையே உப்புக் காற்றில் மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்தது. தாராவை பார்த்தான் அவள் கண்கள் தொலைப்பேசியில் இருந்தாலும், அவள் மொத்தமும் அவன் முடிவினைப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான். செய்து காட்ட வேண்டுமென எண்ணம் மீன் தொட்டியிலிருந்து வெளியே விழுந்த மீன் போலத் துடித்தது.
கடைக்குள் போய் விட்டு வந்து தனது பர்ஸில் உள்ள இருபது டாலரை எடுத்துக் கடையின் பணப்பெட்டியிலிருந்து எடுத்ததாகச் சொல்லலாமா என யோசித்தான்.
“எங்களில் ஒருத்தர் கோ ப்ரோ கேமராவுடன் வருவோம்…” தாரா தொலைப்பேசியை விட்டு தலையை நிமிர்த்தாமலே சொன்னாள். கமலாக்ஷன் என்ன செய்ய போகின்றாய் என கண்களால் கேட்டான். அவன் யோசிப்பதை எப்பொழுதும் கண்டு பிடித்து விடுகின்றார்கள் என மாலி எண்ணங்களில் ஒரு தெறிப்பு நடந்தது.
காரை கமலாக்ஷன் கடையிலிருந்து சில அடி தூரத்தில் நிறுத்தப்பட்டதும், மாலி பதற்றத்தில் காரில் நகர்ந்து முழங்காலை இடித்துக் கொண்டான், அவன் இதயம் ஒலித்த சப்தம் சுற்றி ஒலித்த அத்தனை சப்தங்களையும் மீறி அவன் காதில் ஒலித்தது. “டேய் …இப்படி நெருக்கமாக நிறுத்தாதே,” என்று அவன் கமலாக்ஷனிடம் முணுமுணுத்தான்.
“ரிலாக்ஸ்.., கடைக்காரன் நம்ம கார் நம்பரை எழுதிக்கிட்டுருந்தான்னு நினைக்கறீங்களா?” கமலாக்ஷன் சிரித்தான்.
தாரா கோ ப்ரோ கேமராவை தன் சட்டையின் பாக்கெட்டில் கிளிப் செய்தாள், லென்ஸ் வெளியே தெரியாத மாதிரி. “ரெடி? நான் முன்னாடி போறேன். நீ இரண்டு நிமிஷம் கழிச்சு வா.” இறங்கி ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு கடையை நோக்கிச் சென்றாள்.
மாலி தன் மூச்சை ஆழமாக இழுத்துக்கொண்டு கார் கதவைத் திறந்தான். கடைக்குள் நுழைந்ததும், உப்பு நிறைந்த காற்று ஏர் கண்டிஷனிங்கின் ஈரப்பதத்துடன் மாறியது.
கடைக் கதவை அவன் திறந்ததும் ஒலித்த டிங் ஒலி கடைக்காரரிடம் சின்ன சலனம் உண்டானது. தொழிலில் கடையிலிருந்து இருந்து உருவான உடல்மொழி.. தாரா கடையின் இறுதியில் குளிர்பத அறையில் இருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கடைக்காரரிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தாள். கடையில் வேறு யாரும் இல்லை. அவர் திரும்பி சினேகமாகப் புன்னகைத்தார்.
அதன் பின்னர் தாராவின் கண்கள் கடைக்காரரிடமும், கடைக்காரரின் கண்கள் தாராவிடமும் இருந்தன. அதே நேரம் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த அவளது சட்டையில் மறைந்திருந்த கேமரா உன்னைக் காண்கின்றேன் என மாலியிடம் சொல்லிக் கொண்டிருந்தது.
மாலி திரும்பிப் பார்த்தான்.. கடை வாசலில் எந்த காரும் இல்லை.. சாலையில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வண்ணமயமான போர்டுகளுடன் கடற்கரையை நோக்கி நடந்து செல்வதை மாலி பார்க்க முடிந்தது. கடையில் உள்ளே நோக்கினான். பணப்பெட்டி மீனொன்றின் வாய் போல திறந்து கிடந்தது, நோட்டுகள் சுத்தமான பிரிவுகளில் தெரிந்தன. மாலியின் கை அவனுடைய அனுமதியின்றி நகர்ந்தது, விரல்கள் இருபது டாலர் நோட்டை மூடிக்கொண்டன. அந்த காகிதம் அவனுடைய உள்ளங்கையில் எரிவது போல் சூடாக இருந்தது.
கதவைத் திறந்து வெளியே வர முயல்கையில் கதவில் இருந்த டிங் ஒலி ஒலித்து அவனைத் தொடர்ந்திருந்தது, கடைக்காரர் திரும்பிப் பார்த்திருப்பார் என்பது அவனுக்குப் புரிந்தது. திரும்பிப் பார், திரும்பிப் பார் என் அவன் மனம் ஆர்ப்பரித்து ஒலித்ததை அடக்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஓட்டமும், நடையுமாகத் திரும்பினான்.
காரில் தாவி அமர்ந்தான். “ஸ்டார்ட் பண்ணு, ஸ்டார்ட் பண்ணு!” என்று கிசுகிசுத்தான்.
கமலாக்ஷன் இன்ஜினை ஆன் செய்தான். ஆனால் கார் நடைபாதை வேகத்தில் நகர்ந்தது. சில நிமிடங்களில் தாரா வெளியே வந்தாள், அவள் கையில் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அவள் மெதுவாக நடந்து வந்து காரில் ஏறினாள். உள்ளே நுழைந்ததும் தாராவும், கமலாக்ஷனும் வெடிச்சிரிப்பில் மூழ்கினார்கள். கையை உயர்த்தித் தட்டிக் கொண்டார்கள். மாலிக்கு சந்தோஷமாகவும், பதற்றமாகவும், அங்கிருந்து உடனே ஓட வேண்டுமென்றும் ஒரே நேரத்தில் இருந்தது.
“அவர் எதுவும் கேட்டாரா…” மாலி பதற்றத்தில் தாராவிடம் கேட்டான். அவள் இல்லையெனத் தலையாட்டினாள், அவள் முகமெங்கும் வெற்றியின் பரவசம் கடற்கரையின் மணல்வெளி போல இருந்ததாக மாலிக்குத் தோன்றியது.
“என்ன துணிச்சல்டா. அசத்திட்ட..” தாரா கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
காரின் வேகத்தினைச் சற்று அதிகப்படுத்திய கமலாக்ஷன் “மாலியின் வரலாற்றில் ஒரு மைல் கல்…” என வெடித்து சிரித்தான்.
“அந்த ஆள் ஒரு கிழம்.. காலையிலேயே விஸ்கி வாசம்.. நடக்கையில் சின்ன ஆட்டம்…அவருக்குக் காதும், கண்ணும் சுமாராகவே வேலை செய்கின்றது..அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. நீ பேரி ஆலனை போல சூப்பர் வேகம்.. எனக்கு எத்தனை சர்பிரைஸ் தெரியுமா…” தாரா சொன்னாள்.
“எங்கே வீடியோ காட்டு…” கமலாக்ஷன் ஆர்வமுடன் கேட்டான்.

“போடா.. வண்டியை நேரா பார்த்து ஓட்டு..” தாரா மகிழ்ச்சியில் கூவினாள்… பெரும் சாகசத்தின் விளிம்பில் நின்றிருந்தாள்.
காரினுள் உற்சாகம் ததும்பியது. நண்பர்கள் அதன் அலையில் ஏறிச் சறுக்கினர். காரின் மேலே இருந்த சறுக்கு பலகைகள் தங்கள் முறையைக் கோரி கடலை நோக்கிச் செல் என அவர்களிடம் சொன்னது. கார் கடலை நோக்கிப் பறந்தது.
மதியம் ஒரு மணி. சூரியன் தன் முழு வலிமையில் கடலின் மேல் தன் கிரகணங்களால் வித விதமான ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்தது. அலைகள் கரையை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டிருந்தன, ஒவ்வொன்றும் தங்கள் முதுகில் அலையில் சறுக்கி விளையாடும் ஆட்களைச் சுமந்துகொண்டு வந்தன.
“வாடா! இந்த அலை சூப்பர்!” கமலாக்ஷன் கூச்சலிட்டான், அவன் போர்டின் மேல் நின்றுகொண்டு அலையின் உச்சியில் சவாரி செய்துகொண்டிருந்தான். அவனுடைய கால்கள் போர்டின் மேல் உறுதியாக நின்றன, கைகள் சமநிலைக்காக நீட்டப்பட்டிருந்தன. முகத்தில் களிப்பு நிரம்பியிருந்தது,
தாரா அவனுக்கு அருகில் மற்றொரு அலையில் சறுக்கிக்கொண்டிருந்தாள். “ஏய் மாலி! கடைக்காரனை விட இந்த அலைகள் ஈஸி!” என்று சிரித்துக்கொண்டே கூவினாள். அவளது முகத்தில் காலை நேர வெற்றியின் பரவசம் இன்னும் தங்கியிருந்தது என மாலி நினைத்தான்.
மாலி தன் போர்டில் படுத்துக்கொண்டு அடுத்த அலைக்காகக் காத்திருந்தான். கடலின் நீலம் அவன் கண்களில் நிறைந்திருந்தது. காற்று அவன் முகத்தில் உப்புச் சுவையுடன் தட்டிச்சென்றது.
தூரத்தில், கடற்கரையின் லைஃப்கார்ட் டவரில் அய்லோனி அமர்ந்திருந்தான். இவர்களை விட வயதில் இளையவன். காலையில் இவர்களுக்கு அவன்தான் குடைகளும், விரிப்புகளும் விற்றான். முகத்தில் சிரிப்பினைத் தவிர எதுவும் இல்லை. அவனுடைய சன்கிளாஸ்களுக்குப் பின்னால் இருந்த கண்கள் கடலில் சர்ஃப் செய்யவும் மூவரையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தன என மாலி நினைத்தான்.

தூரத்தில் ஒரு பெரிய அலை வந்துகொண்டிருந்தது. மாலி அதைப் பார்த்து உற்சாகமடைந்தான். கடல் விளிம்பில் அலைத்தொகுதியின் முதல் அலை தோன்றியது. பெரிய அலைகள் கூட்டமாக வரும்போது இப்படித்தான் ஆரம்பிக்கும். கடலின் ஆழத்திலிருந்து சக்தியை அள்ளி முடித்துக் கொண்டு வந்திருந்தது. ஒவ்வொரு அலையும் கிட்டத்தட்டபன்னிரெண்டு முதல் இருபது விநாடி இடைவெளியில் வந்துகொண்டிருந்தன. இது நல்ல அலைகளின் அடையாளம். மாலிக்கு உற்சாகமாக இருந்தது.
போர்டின் முனையைக் கடலை நோக்கித் திருப்பி அலைக்குத் தயாராகத் தன்னை பொருத்திக் கொண்டான். போர்டின் பின்பகுதியை கையில் பிடித்துக்கொண்டு துடுப்பிட ஆரம்பித்தான். அலையின் வேகத்துடன் போர்டை கொண்டு செல்ல கைகளைத் தண்ணீரில் மூழ்கடித்து வேகமாக இழுத்தான். அலை அவனைத் தூக்கியது. சரியான தருணத்தில், ஒரே நொடியில் படுத்த நிலையிலிருந்து நின்ற நிலைக்கு மாறினான். இடது கால் முன்னும், வலது கால் பின்னும் வைத்து போர்டின் மேல் உறுதியாக நின்றான்.
அலையின் சரிவில் மேலும் கீழுமாக அசைத்து வேகத்தைப் பெருக்கினான்.இடுப்பினை ஒடித்துக் குனிந்து எடையை ஒரு புறம் கொண்டு வந்து குதிகால் பக்க விளிம்பை அழுத்தி போர்ட்டை இடமும் வலமும் எடுத்தான். கீழ்நோக்கி போர்டை மேலும் கீழுமாக அசைத்து அலையின் சக்தியை எடுத்துக்கொண்டான்.
அலையின் ஓரத்தில் இன்னும் உடையாத பகுதி இருந்தது. அலையின் வளைவு அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது. அவன் பின்னால் வெள்ளை நுரை கொதித்துக்கொண்டிருந்தது. சில விநாடிகள் அவன் அலையின் முகத்தில் துல்லியமான சமநிலையில் சறுக்கினான்.
அலையின் உயரம் நன்றாக இருந்தது .சுமார் ஆறு அடி முதல் எட்டு அடி வரை. பெரிய உயரம் கிடைத்தது. அலையின் உச்சிப்பகுதி அவன் தலைக்கு மேல் வளைய ஆரம்பித்தது. குழாய் போன்ற வடிவம் ஒன்று உருவாவதை அவன் பார்த்தான். அதற்குள் போகலாம் என நினைத்தான்.
அந்த தருணத்தில், காலை நேர கடையிலிருந்து கதவைத் திறந்து வெளியில் ஓட்டமும், நடையுமாக வந்த தருணம் நினைவில் வந்தது. கடை மனதுக்குள் தெரியக் கண்கள் கடையைத் தேடி புற உலகில் அசைந்தன..
அந்த நினைவுகள் அவனைத் தாண்டி உயர்ந்த பொழுது, அவன் கவனம் சிதறியது. அவன் கால்கள் தள்ளாடின. சமநிலை போனது. போர்டின் ஓரம் தண்ணீரில் சிக்கியது. போர்ட் அவன் கீழிருந்து நழுவியது. அலையிலிருந்து விழுந்தான்.
அலையின் கீழ் மறைந்தான். வெள்ளை நுரையும், நீரும் அவனைச் சுற்றிக்கொண்டது. கடல் அவனை ஒரு சலவைப்பெட்டிபோல சுழற்றியது. எங்கே மேல், எங்கே கீழ் என்று தெரியவில்லை. நுரைத்த நீரில் மூச்சுவிட முடியவில்லை. அவன் உடல் கல்லென கனத்தது. கார் வெளிச்சத்தில் மான் உறைந்து போவது போல அவன் நீருக்குள் உறைந்தான்.
பீதி அவனை ஆட்கொண்டது. கைகளை அசைத்தான், கால்களை உதைத்தான். ஆனால் அலையின் சக்தி அவனைக் கீழே இழுத்துக்கொண்டேயிருந்தது.
அப்போது, ஒரு வலுவான கை அவன் கையை பிடித்தது. மேல் நோக்கி இழுத்தது.
அய்லோனி மாலியை நீர் மேல் மட்டத்துக்குக் கொண்டு வந்திருந்தான். அவனது வலுவான கைகள் மாலியை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்தன.
“மூச்சு விடு, மூச்சு விடு!” அய்லோனி கூறினான். அய்லோனியின் குரல்கள் அவனுக்கு மட்டுமே கேட்கும் விதத்தில் கூறின.. “நீ பதறாதே, அலை உன்னை வெளியே கொண்டுவந்திடும்.”
மாலி கடையிலிருந்து மீண்டு உடல் சமநிலையை அடைந்தான், அவன் உடல் நீச்சல் பாவனை கொண்டு கடல் நீரை கையாண்டது. “தேங்க்யூ… தேங்க்யூ,” என்று கரகரத்த குரலில் சொன்னான்.
அய்லோனி அவனை கரைக்கு அழைத்துச் சென்றான். “முதல் முறை சர்ஃபிங்?” எனக் கேட்டான்.
“இல்லை… ஆனா இன்றைக்குக் கவனம் இழந்து விட்டேன்,” மாலி சொன்னான், இன்னும் மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தது.
கமலாக்ஷனும் தாராவும் அவசரமாகக் கரையை நோக்கி வந்தார்கள். “டேய் மாலி! என்னடா ஆச்சு?” தாரா கவலையுடன் கேட்டாள்.ன் அய்லோனி தனது போஸ்டை நோக்கி நகர்ந்து போனான். போகும் முன் ஒரு தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தான். அதற்கு தாராவிடம் பணம் வாங்கிக் கொண்டான்.
“பிரச்சனை இல்லை. கொஞ்சம் கவனம் போனது,” மாலி சிரித்தான், ஆனால் அவன் குரலில் இன்னும் நடுக்கம் இருந்தது.
மூவரும் கடற்கரையில் தங்கள் போர்டுகளுடன் உட்கார்ந்தார்கள். மணல் அவர்களது ஈரமான உடலில் ஒட்டிக்கொண்டது. சூரியன் அவர்களைக் காயவைத்தது.
“அடுத்த அலைக்கு தயாரா?” கமலாக்ஷன் கேட்டான், அவன் கண்களில் இன்னும் அட்ரினலின் பளபளத்தது.
“ஹா ஹா! கொஞ்சம் பிரேக்கு பிறகு,” தாரா சொன்னாள். “இன்னைக்கு நம்ம தினம்!.. அச்சமில்லை அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்..” என்றாள்.
“இது என்ன தமிழ் பாட்டா..” கமலாக்ஷன் கேட்டான்.
“தெரியலை.. எங்க அப்பா சொல்லுவார். பயம் வந்தால் சொல்ல சொன்னார்…” தாராவிடம் சிரிப்பு பொங்கிக் கொண்டே இருந்தது. வாட்டர் கூலரில் இருந்து ஒரு பியர் பாட்டிலையும், சாண்ட்விச் பொட்டலத்தினையும் எடுத்து மாலியிடம் நீட்டினாள். வாங்கிக் கொண்டான். தானும் ஒன்றை எடுதுக் கொண்ட கமலாக்ஷன், தாராவுக்கும் ஒன்று எடுத்துக் கொடுத்தான்.
“அந்த ஆள் இருபது டாலர் காணாமல் போனது தெரிஞ்சால் வருத்தப்படுவாரா, அழுவாரா, இல்லையெனில் கண்டுக் கொள்ளாமல் விடுவாரா?..” மாலி கேட்டான்.
“என்ன ஆனால் என்ன? அந்த ஆளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்..என்ன நினைச்சா என்ன..உனக்கு வெற்றி..நமக்கு ஒரு த்ரில்..காரை நகர்த்துகையில் எனக்கு பின்னாடி 100 போலீஸ் கார் துரத்துவதாக எண்ணம் வந்தது..வாவ்… நினைச்சால் இப்பவும் பரபரப்பா இருக்கு..கெட்அவே ட்ரைவர்..” கமலாக்ஷன் சொன்னான்.
“ஆஹா… இவன் பேச்சை கேட்டியா.. நாம சிக்கியிருந்தால் எனக்கும், மாலிக்கும் சம்பந்தம் இல்லை. அவன்தான் கடையில் இருபது டாலர் எடுத்தான்.. இவள்தான் ரெக்கார்ட் செய்தாள் என மாட்டி விட்டு இருப்பான்…” தாரா கிண்டல் செய்து சிரித்தாள்.
“பார்த்து தாரா.. அவன் பயந்திட போறான்… “ கமலாக்ஷனும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டான்.
மாலி மணலில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தான். வெள்ளை மேகங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன. காலை நேர சாகச உணர்வோடு, பிடிபடாத உணர்வுகளும் அவன் இரத்தத்தில் ஓடிக்கொண்டிருந்தது…ஆனால் அவன் நண்பர்களின் சிரிப்பு, கடலின் சப்தம், சூரியனின் சூடு எல்லாமும் கலந்து அந்த கவலைகளை மேக மூட்டம் போலக் கொஞ்ச நேரத்தில் மறைத்துவிட்டன.
கடலை பார்த்தான். அலைகள் இடைவிடாமல் எழுந்துக் கொண்டே இருந்தான். வா,வா என அழைத்தது. “அடுத்த அலை இன்னமும் சிறப்பாக இருக்கும்,” மாலி தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டான், கண்களை மூடிக்கொண்டு சூரியனின் வெப்பத்தை உணர்ந்தான்.
மாலி மணலில் அமர்ந்திருக்க, கமலாக்ஷனும் தாராவும் மீண்டும் அலைகளை நோக்கி ஓடிச்சென்றார்கள். “டேய் மாலி! வரமாட்டியா? அலைகள் நம்மை அழைக்கின்றன” கமலாக்ஷன் கூவினான்.
“கொஞ்ச நேரம் கழிச்சு வாறேன்!” மாலி கையை அசைத்தான். எங்களுக்குள் என்ன சம்பந்தம் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டான் என்னையும், கமலாக்ஷனையும், தாராவையும் சம்பந்தப்படுத்துவது எது? காலையில் கடையில், இப்பொழுது கடலில்… அம்மா ஒரு வார்த்தை சொல்லுவாளே என நினைத்தான். சையோக சம்பந்தம்…. அந்த வார்த்தை பெருங்கடலில் இருந்து ஒரே ஒரு துளி மழையாகி அவனுக்காகவே வந்தது போல அவன் நினைவிலிருந்து எழுந்து வந்து சேர்ந்தது. சையோக சம்பந்தம்.. அதுதான் என்னை , கமலாக்ஷனை, தாராவை இணைக்கின்றதா..
அய்லோனி தன் லைப்கார்ட் போஸ்டில் இருந்து கீழே இறங்கி வந்தான். அவன் ஓய்வு நேரம். மாலியின் அருகில் மணலில் அமர்ந்தான். அவன் அருகில் அமர்வான் என மாலி எதிர்பார்க்கவில்லை, அவன் எழுந்து வந்ததைக் கண்டாலும் மனம் அதை இணைத்துக் கொள்ளவில்லை, அருகில் அமர்ந்ததும் , மாலி நினைவுகளின் அலையிலிருந்து மீண்டான்.
“எப்படி இருக்கு? இன்னும் ஷாக் இருக்கா? போய் விட்டதா” அய்லோனி நட்பாக கேட்டான்.
“அதெல்லாம் இல்லை. இப்ப பெட்டர், எப்படி அது நார்மலாக சர்பர் விழுந்து எழுவதா, இல்லை உதவி தேவைப்படும் சூழலா உனக்கு தெரியும்” மாலி கேட்டுச் சிரித்தான். மாலி சிரிக்க முயற்சி செய்தான் என்றே அய்லானி நினைத்தான். நிலைமையைச் சாதாரணமாக்க முனையும் சாகசக்காரர்கள் என நினைத்துக் கொண்டான்.
“ரெண்டு வருஷமா லைப்கார்டா இருக்கேன். பழகிடுச்சு..” அய்லோனி சொன்னான்.
“உதவி செய்தமைக்கு நன்றி…இது எபப்டி போகுது…?” மாலி சின்ன சின்ன கேள்விகள் மூலம் சகஜத்துக்கு திரும்ப வந்துக் கொண்டிருந்தான்.
“நாங்கள் தீவுவாசிகள், கடல் தொழில் கஷ்டமில்லை. நான் பார்ட் டைம் ப்ளம்பர் வேலையும் பண்ணுவேன்,” அய்லோனி சின்னதொரு புன்னகையுடன் சொன்னான். அவன் குரலில் எளிமை இருந்தது.
மாலி தன் கூலரில் இருந்து ஒரு பீர் எடுத்தான். “ஒன்னு வேணுமா?”
அய்லோனி தலையை அசைத்தான். “வேண்டாம். வேலையில் இருக்கேன்.” அவன் விரல்கள் லைப்கார்ட் போஸ்டினையும், அலைகளையும் காட்டின.
“சரி சரி,” மாலி சிரித்தான்.
“ஏன் அலைகளுக்கு போகலை? நல்லா இருக்கே இன்னைக்கு, பயப்படாதீங்க. நாங்க இருக்கோம்… போய் அலைகளை வெல்லுங்கள்” அய்லோனி கடலை நோக்கி சைகை காட்டினான்.
“என்னமோ மனசு சரியில்லை,” மாலி முணுமுணுத்தான். “காலையில் ஒரு சின்ன… சாகசம் பண்ணினோம். அதோட பரபரப்பு இன்னும் இறங்கலை.”
“என்ன சாகசம்?” அய்லோனி கேட்டான்.
மாலி தயங்கினான். “அதெல்லாம் ஒன்னும் இல்லை.” உள்ளூர் ஆளிடம் சொல்லக் கூடாதென தோன்றியது.
அப்போது அய்லோனியின் மொபைல் அடித்தது. அவன் அதன் காலர் ஐடி பார்த்ததும் அவன் முகம் மாறியது.
” இந்த கால் எடுக்கணும்,” அய்லோனி எழுந்து சற்று தூரம் நடந்தான்.
“ஹலோ?” அய்லோனி தொலைப்பேசியை அழுத்திப் பிடித்துக்கொண்டதை மாலி பார்த்தான். மாலி அங்கேயே இருந்தான், ஆனால் அய்லோனியின் குரல் அவனுக்கு கேட்டது.
“இல்லை மேம்… நான் சொன்னதுதான். நான் நல்லா இருக்கேன் இங்கே… ப்ளீஸ் மேம், இந்த டைமில் மாத்தாதீங்க…”
அய்லோனியின் குரலில் கெஞ்சல் இருந்தது.
“அவர் குடிகாரர் இல்லை மேம். கொஞ்சம் காலையிலும் குடிப்பார், அவருக்கு மூட்டு வலி இருக்குல, அந்த வலிக்குதான், அதான். அவரால எந்த ப்ராப்ளமும் இல்லை…தினமும் கடைக்கு போவார், உங்களுக்கே தெரியும்… நான் என்னை நானே பார்த்துக்கிறேன். வேலை இருக்கு, பணம் சம்பாதிக்கிறேன்…எனக்கு இன்னோரு வீடு வேண்டாம் மேம், இவர் போதும்”
மாலி ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினான். இது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகமா…?
“மேம், அவருக்கு அவர் மனைவி இறந்து போனதுக்கு அப்புறம் கஷ்டமா இருக்கு. கடையிலும் நஷ்டம், வயசும் ஆச்சு. ஆனாலும் அவர் என்னை பார்த்துக்கிறார் மேம். எனக்கும் இன்னமும் ஒரே வருஷம் மேம். அடுத்த வருடம் பதினெட்டு ஆயிடுவேன். ப்ளீஸ் மேம்… இன்னேரம் இன்னோரு வீடு வேண்டாம்..”
அய்லோனியின் குரல் உடைந்தது.
“அவர் ரொம்ப துணிச்சலானவர் மேம். வாழ்க்கைல எத்தனை கஷ்டமாக இருந்தாலும் என்னை நல்லா பார்த்துக்கிறார்….”
மாலிக்கு துணிச்சல் என்ற வார்த்தை அதிர்ச்சி அளித்தது. இதுவும் துணிச்சலா…
“மேம், வேற வீட்டுக்கு போனால் புதுசா எல்லாவரையும் துவங்கனும். இங்கே அவர் என்னை நம்பி இருக்கின்றார், நானும் அவரை பார்த்துக்கிறேன். நான் இல்லாட்டி அவர் தனிமையில் சிக்கி கொள்வார் மேம்…”
அய்லோனியின் கண்கள் கலங்கி இருந்தன், அவன் கெஞ்சல் மறைந்து, குரலில் உறுதியான ஏதோ ஓன்று வந்திருந்தது, அதில் சமநிலையுடன் நின்றிருந்தான். மாலிக்கு அவன் பேரலை ஒன்றின் உச்சத்தில் ஏறிக் கொண்டிருப்பதாக தோன்றியது.
சில நிமிடங்கள் அமைதி. அய்லோனி மறு முனையில் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான்.
“சரி. நன்றி …வேறு ஏதாவது பிரச்சனை எனில் அவசியம் சொல்லறேன் மேம் ” அவன் குரலில் நன்றி இருந்தது.
அய்லோனி போனை துண்டித்தான். சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தான், கடலைப் பார்த்துக்கொண்டு அவன் கண்கள் கடலை தாண்டி வான் விளிம்பைத் தாண்டி எதையோ தேடின.
அய்லோனி திரும்பி வந்து மாலி அருகில் அமர்ந்தான்.., அவன் முகத்தில் சிரிப்பொன்றை வைக்க முயன்றான்.
“நீங்கள் கிளம்புங்கள், அலைகள் காத்துள்ளன” அய்லோனி சொன்னான்.
“அய்லோனி…” மாலி தயங்கினான். “எல்லாம் ஓகேயா?”
அய்லோனி அவனைப் பார்த்தான். சில நொடிகள் அமைதி.
“நான் ஒரு செயல் செய்தால், அதுக்கு உலகம் ஒன்றை திருப்பி செய்யுது. என்ன திரும்பச் செய்யும் என்பது என் கையில் இல்லை, அது எனக்கு பிடிச்சதாகவும் இருக்கலாம், பிடிக்காமலும் போகலாம்… நான் அதில் எது வந்தாலும் அதில் நிற்கனும்…” அவன் கண்கள் ஒரு நொடி கலங்கி தெளிந்தன. அவன் திரும்பி மாலியை பார்த்தான். அடுத்த நொடி அவன் முகம் பழைய நிலைக்குத் திரும்பியது. ”சாரி உங்களை குழப்புகின்றேன். நான் என் பர்சனல் மம்போ ஜம்போவை எங்கள் தீவின் விருந்தினரிடம் சொல்லி விட்டேன். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நான் பார்த்துப்பேன். நீங்கள் வெளியூரில் இருந்து அலைகளை நாடி சாகசம் நாடி வருபவர்” அய்லோனி சிரித்தான். “நீங்கள் பார்க்க வேண்டிய அலைகள், சாகசங்கள் அங்கே பசிப்பிக்கில் கண்ணுக்கு முன்னே உள்ளன. அதில் போய் ஏறி நில்லுங்கள்.”
அய்லோனி எழுந்து தன் போஸ்டை நோக்கி நடந்தான். ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்த்தான். “உங்களுக்கு புதிய டவல்கள் வேண்டுமானால் சொல்லுங்கள். எடுத்து வந்து தருகின்றேன்..” என்றான். அவன் தனது தொலைபேசி அழைப்பின் மீது நின்று கொண்டே பீச் துண்டு வாடகைக்கும் திரும்பி விட்டதை மாலி கண்டு கொண்டான். அவனிடம் எத்தனை வண்ணங்கள் எனச் சொல்லிக் கொண்டான்.
“காலையில் உன்னிடம் வாங்கியதே போதும், வேண்டுமெனில் நாங்கள் வந்து பெற்றுக் கொள்கின்றோம்” என மாலி பதில் சொன்னான். அயிலானி திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
மாலி அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அயிலோனி தூரத்தில் வரும் ஒரு அலையென மாலி மனதில் இருந்தான். யாரோ ஒருவன்.. அவனுக்கு நான் இந்த கடற்கறையின் பல நூறு நுகர்வோர்களில் ஒருவன். எனக்கு அவன் ஒரு லைப்கார்ட், குடைகளை, பீச் விரிப்புகளை விற்பவன். இந்த சமுத்திரம் எங்களை இணைக்கின்றது. அவன் வழியாக ஏதோ சொல்கின்றது என பெருமூச்சு விட்டான்.
அய்லோனி சொன்ன கடைக்காரர் ஏன் காலையில் பார்த்த கடைக்காரர் ஆக இருக்கக் கூடாது எனவும் ஒரு கேள்வி எழுந்தது. அதை மறுத்துப் பார்த்தான், மறுக்க மறுக்க ,அது பெரிதாகி கொண்டே இருந்தது.
கடலில் கமலாக்ஷனும் தாராவும் சிரித்துக்கொண்டு அலையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள், அதில் வெற்றியின் மகிழ்வு இருந்தது, தொலைப்பேசி வைத்த பின் அய்லோனியின் முகத்தில் வந்த புன்னகையை யோசித்துப் பார்த்தான். புதிய வாடிக்கையாளர் கடைக்கு உள்ளே வந்த பொழுது காலையில் கடைக்காரர் முகத்தில் வந்த புன்னகையை யோசித்துப் பார்த்தான்.எது மகிழ்ச்சி? கையில் சர்ஃப் போர்டை எடுத்து எழுந்து நின்றான். படுத்திருந்த விரிப்பினைப் பார்த்தான். விதவிதமான வண்ண நூல்கள் இணைந்து ஒற்றைத் துணியாக ஆகி இருந்தன. பல வண்ணங்கள். சாகச உணர்வும் என் வண்ணமென சொல்லிக் கொண்டான். காலையில் இருந்ததும் என் வண்ணமே, என்னில் ஒன்றுதான் என அவன் நினைவு சொல்லியது. அவன் புத்தி அதுவேதான் கடலுக்கும் எனக்குமான சம்பந்தம் என சொன்னது. இரண்டும் கேட்டு ஆமோதித்துப் புன்னகைத்தான். அம்மா அந்தச் சம்பந்தத்துக்குப் பெயர் ஒன்று சொல்லுவாளே என யோசித்தான்.
அலையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வெகு தூரத்தில் அலையோன்று வந்துக் கொண்டிருந்தது. அது பேரலையாக எழுமென நினைத்தான், அதை நோக்கி ஓடினான், அலையில் போர்டை போட்டு படுத்துக் கொண்டு கைகளைத் துடுப்பாக்கி நகர்ந்தான். அம்மா சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது. அலையின் மீது போர்டில் ஏறி நின்றான். அம்மா சொன்ன வார்த்தை சமவாயம் என நினைவுக்கு வந்தது. சாகசம் என்னை நெய்த இழைகளில் ஒன்றென்றான்.அது அலையின் மேல் என்னை நிறுத்துகின்றது என அவன் உள்ளத்துள் ஒரு கீற்று மின்னியது. அவன் உடல் அலையில் நின்றது, மனம் அலையில் லயித்தது.
மாலிக்கு தூங்க வேண்டுமென இருந்தது. கிளப்பிலிருந்து தங்கியிருந்த விடுதியின் அறைக்கு திரும்பிய பொழுது மணி ஒன்றாகி இருந்தது. நள்ளிரவு முடிந்து புதியநாள். அறையின் வாசலில் நின்று சாவியென இருந்த அட்டையைப் பூட்டில் வைத்துத் திருப்புவதற்குள் கதவைத் திறக்கவே கைகள் சோர்வு கொண்டிருந்தன. முழு நாளும் சர்ஃபிங், பின் கிளப்பில் நடனம், குடி உடல் களைத்திருந்தது.
தாராவை அவன் கிளம்பும் பொழுது பார்க்கவில்லை. அங்கே இருந்தாளா, கிளம்பி விட்டாளா என தெரியவில்லை. துவக்கத்தில் ஒன்றாக இருந்தார்கள். பின்னர் தனித்தனியாக நட்பு கிடைக்கவும் ஆளுக்கு ஒரு பக்கம். கமலாக்ஷனும் இன்னும் அங்கேயே இருந்தான். கிளம்பும் பொழுது கை காட்டினான். கமலாக்ஷன் தலை அசைத்தான். பார்ட்டி தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் மாலிக்கு ஏதோ போதும் என்று தோன்றியது. அறைக்கு வரவேண்டும் என்று உணர்ந்தான்.
படுக்கை அறையை அடைந்ததும், டீ-ஷர்ட்டை கழற்றி எறிந்தான். அது இன்னும் கடல் உப்பு வாசம் வீசியது. அவன் ஜீன்ஸின் பாக்கெட்டில் கைவிட்டான். அன்று பார்த்த புதிய நட்பொன்றின் பெயரும், போன் நம்பரும் அதில் இருந்தது. காலையில் காலை உணவுக்கு அழைக்கனும் என நினைத்தான். பெயர் எத்தனை யோசித்தாலும் சிக்கவில்லை. சரி எப்படியும் பாக்கெட்டில் உள்ள பேப்பர் குறிப்பில் தெரிந்துக் கொள்ளலாம் என நினைத்து ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து அந்த பேப்பரை எடுக்கையில், முதல்நாள் காலையில் எடுத்த அந்த இருபது டாலர் நோட்டும் சேர்ந்து வந்தது.
அதை வெளியே எடுத்து கையில் பிடித்தான். போன் நம்பரும், பெயரும் இருந்த பேப்பர் நழுவி கீழே விழுந்தது. அதைக் கவனிக்கவில்லை. அவன் கவனமெல்லாம் இருபது டாலரில் இருந்தது. பேரலையின் மேல் நின்ற சாகச உணர்வோடு, இதை ஒப்பிட்டுப் பார்த்தான், அந்தச் சாகச உணர்வு இப்பொழுது தோன்றவில்லை. ஆனால் காருக்குள் ஓடி வந்து அமர்ந்த பொழுது சாகச உணர்வு, வெற்றி உணர்வு இருந்தது என சொல்லிக் கொண்டான். இப்பொழுதில்லை.
மாலி படுக்கையில் அமர்ந்து அந்த நோட்டை உற்றுப் பார்த்தான். வெளிச்சம் மங்கலாக இருந்தது. ஜன்னல் வழியாகக் கடலின் சத்தம் கேட்டது. அலைகள் கரையை அடிக்கும் ஒலி.
ஜன்னலின் அருகே சென்றான். கடலோலியில் கண்களை மூடி கவனம் செலுத்தினான். ஏதோ விடாமல் சொல்லி இரைந்து கொண்டிருந்தது. என்ன சொல்கின்றது. கையில் விரல்கள் இறுகின. அந்த பணம் கசங்கியது. இறுகிய கையை திறந்து, அந்த இருபது டாலரை நீவி சரிப்படுத்தினான். ஜன்னலருகில் மேஜையில் கோ-ப்ரோ கேமரா இருந்தது. அன்றைய தினத்தின் காட்சிப் பதிவுகள். அதை எடுத்துப் பார்க்கலாமா என நினைத்தான். கால்கள் நகர மறுத்தன. கேமராவில் இருப்பது நடந்து முடிந்த செயல். கேமராவுக்குள் சென்று அதை மீண்டும் செய்ய முடியாது, திரும்பத் திரும்ப பார்க்க முடியும், அதற்கென்ன மதிப்பு எனக் கேட்டுக் கொண்டான்.
கை அந்த இருபது டாலரில் அவன் விரல் மடங்கி உருவாகிய கசங்கலை அகற்றுவதைத்தான் செய்தது. கேமரா பக்கம் நகர மறுத்தது. முழு விசையுடன் முயற்சி செய்தான். உடலில் சோர்வு வந்தது. மெல்லப் படுக்கையில் சாய்ந்தான்.
தன் கைகளில் உள்ள அந்தப் பணத்தைப் பார்த்தான். யாருடையது இது? கடைக்காரருடையது. அவர் அயலோனியின் வளர்ப்பு தந்தையாக இருக்க கூடுமோ? யார் கண்டது? இருக்க வேண்டுமென அவசியமா என்ன? காலையில் கடலில் உடல் நீந்தாமல் நின்று போய் அலையில் மூழ்கையில் இருந்த ஞாபகம் வந்தது. கிட்டதட்ட பிறந்ததிலிருந்து 21 வருடமாக நீந்துகின்றேன், ஏன் புதிதாகக் கடலை கண்டவன் போல அலையில் காலையில் உறைந்து போனேன்? நிறையக் கேள்விகள் அவன் மனதில் அலைகளின் இடைவெளி போல வந்து கொண்டே இருந்தன.
“வெறும் இருபது டாலர்தான்,” என்று மனதில் சொல்லிக்கொண்டான். ஆனால் அது சரியாக இல்லை என்று உணர்ந்தான். இது வெறும் இருபது டாலர் அல்ல. இது… இது வேறெதோ. என்ன சம்பந்தம்? ஏன் இத்தனை யோசிக்கின்றேன்?
கண்கள் அவன் அறியாமல் மூடின. கடலின் ஒலி அவன் கவனம் மேல் போர்வையாய் மூடியது. மூச்சு நிதானம் ஆனது. உடல் இறுக்கம் குறைந்தது. தூக்கத்தில் சறுக்கி சென்றான். மெல்ல கடல் ஒலி கொடுத்த போர்வையை அகம் உணர்ந்த கணமொன்றில் திடீரென அவன் ஒரு அலையாக இருப்பதாக கண்டுக் கொண்டான்.
அய்லோனி இன்னொரு அலையாக அவன் பக்கத்தில் வந்தான். “இந்த இருபது டாலர் பத்தி என்ன நினைக்கிறே? நான் ஒரு செயல் செய்தால், அதுக்கு உலகம் ஒன்றை திருப்பி செய்யுது. என்ன திரும்ப செய்யும் என்பது என் கையில் இல்லை, அது எனக்கு பிடிச்சதாகவும் இருக்கலாம், பிடிக்காமலும் போகலாம். நான் அதில் எது வந்தாலும் அதில் நிற்கனும் என நினைக்கின்றேன். நீயும் நிற்பாயா?” என்று கேட்டான்.
கடைக்காரர் இன்னொரு அலையாக எழுந்தார். “நான் வயதானவன். பார்வையும், செவியும் சரியாக இல்லை. யாரோ எதையோ எனக்கு தெரியாமல் என் கடையில் இருந்து எடுத்துட்டுப் போனாங்க, நீ பார்த்தாயா? இந்த இருபது டாலர் அதுவா?… உதவி செய்” என்றார். அவர் குரலில் வருத்தம் இருந்தது.
கமலாக்ஷன் ஒரு பெரிய அலையாக வந்து சிரித்தான். “அட, இருபது டாலர் உன் சாகசம்தானே! உன் வரலாற்று சம்பவம்.. என் வரலாற்றில் சம்பவம் தேடிக் கொண்டுள்ளேன். க்ளப்பில் அதில் பரபரப்பாக உள்ளேன். க்ளபில் சிக்குமா தெரியவில்லை..எபிக்…”
தாரா இன்னொரு அலையாக நடனமாடிக்கொண்டே வந்தாள். “உன் துணிச்சலைப் பார்! என் கோ ப்ரோவில் அடுத்த ரெக்கார்டிங்கு இடம் தேவைப்படும் வரையில் உன் துணிச்சல் இருக்கும்… பாரெவர்..”
அம்மா ஒரு அலையாக வந்து, அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“அம்மா இது என்ன?“ என்றான்.
“திரும்பிப் பார்..” என்றாள்
மாலி திரும்பிப் பார்த்தான். பெரிய கடல் விரிந்து இருந்தது. எல்லையில்லா பெருங்கடல். நீரன்றி எதுவுமில்லை.
மீண்டும் தன்னைப் பார்த்தான். தன்னை சுற்றிப் பார்த்தான்.
அவன் பார்வையை கண்ட மற்ற அலைகள் எல்லாரும் திரும்பி கடலை நோக்கிப் பார்த்தார்கள். தங்களை பார்த்தார்கள்.
நீர் மட்டுமே கடலென, அலையென இருந்தது. நீரன்றி எதுவுமில்லை. அத்தனை கண்களும் விரிந்தன.
“அது என்ன ? “ என அனைவரும் ஒருமித்துக் கேட்டார்கள். கேள்வி அலைகளில் கிளம்பி கடல் நோக்கி சென்று , நீரில் கரைந்து வேறு உரு கொண்டு பேரொலி ஆனது. பேரொலியின் முடிவில் கடல் தாதான்மியம் என ஒலித்தது. அது அம்மாவின் குரல்..ஆனால் அது எங்கோ கடல் ஆழத்தில் இருந்து எழுந்து வந்தது.
அம்மா எனக் கத்தி மாலி புரண்டான். படுக்கையிலிருந்து விழுந்தான்.
மாலி விழித்துக்கொண்டான். கனவு என சொல்லிக் கொண்டான். கையில் இருபது டாலரை இறுக்கப் பிடித்திருந்ததைக் கண்டான்.
சில நிமிடங்கள் படுக்கையில் படுத்திருந்தான். கனவின் காட்சி மெல்ல மெல்லத் துலங்கியது.
எழுந்து தண்ணீர் குடித்தான். ஒரு நீண்ட மூச்சு விட்டான்.
கார் சாவியை எடுத்துக்கொண்டான்.
வெளியே பிரம்ம முகூர்த்தம் ஆரம்பித்து அமைதியாக இருந்தது. கார் ஸ்டார்ட் செய்தான். எங்கு போவதென முடிவு செய்தான்.
போகும் வழி கண் முன் விரிந்து கொண்டே இருந்தது. குறுகிய சாலை, மேகமில்லாத வானம் போலத் திறந்திருந்தது. சாலையின் வளைவுகள், நெளிவுகள் அவன் காரை அணைத்து இழுத்தது. கடை வாசலில் காரை நிறுத்தினான். கடை மூடியிருந்தது. இருபது டாலரை எடுத்து ஒரு கவரில் போட்டான். கடை வாசலில் ஒட்டி வைத்து விட்டு காரில் ஏறினான்.
காரில் வானொலி நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். ஏன் இது இத்தனை நேரம் காதில் விழவில்லை எனத் தனக்குள் கேட்டுக் கொண்டான். உதட்டைப் பிதுக்கிக் கொண்டான். காரை தங்குமிடத்தினை நோக்கித் திருப்பினான்.
வரும் பொழுது வானொலியில் அன்றைக்கு அலைகள் அற்புதமென்றும், சர்ஃபர்களுக்கு சவால்கள் என்றும் படித்தார்கள். கார் நகர்ந்து முன்னே செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாகக் கடல் ஒலி காருக்குள் கேட்டது. அலைகள் நிரம்பிய கடல் என வானொலி சொன்னது. அது ஓர் இசைத் துணுக்கெனக் காதில் விழ ஆமோதித்து தலை அசைத்தான். விரிந்த கடல் இடைவிடாத விதவிதமான அலைகளோடு அவன் கண் முன் காருக்குள்ளே விரிந்தது, வா என்றது. உடல் மொத்தமும் சர்ஃப் போர்டுக்கு பரபரத்தது. நண்பர்களை நினைத்தான், அவர்கள் உற்சாகமும், பரபரப்பும் அவனில் தொற்றி கொடியென ஏறியது. அவன் கால்கள் காரின் வேகத்தினைக் கூட்டின.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
