அந்த வயதான நாய் வீட்டுக்குள் வந்த நாள் யாருக்கும் சரியாக நினைவில்லை. யாரும் அதை அழைத்தும் வரவில்லை. மழைக்கால மாலை ஒன்றில் வாசல் கதவின் ஓரமாக நனைந்த உடலோடு அது நின்றுகொண்டிருந்தது. சேற்றில் புரண்டு கிடந்த கால்கள். ரோமங்களில் ஒட்டிய மண்துகள்கள். கண்களில் ஒரு தயக்கம். உள்ளே வரலாமா என்று கேட்பது போல. அப்பா முதலில் பார்த்தார். “யாரோ விட்டுட்டுப் போயிருக்காங்க,” என்றார்.

அம்மா சொன்னாள், “நமக்கே கஷ்டம். இது வேறயா?” நாய் எதுவும் செய்யவில்லை. கதவை விட்டுப் போகவும் இல்லை. உள்ளே வரவும் இல்லை. அது ஒரு கேள்வி போல நின்றது. அந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. வீட்டுக்குள் இருந்த சத்தங்கள் மட்டும் வெளியே வந்து அதைக் கடந்து போனது. பாத்திரம் உரசும் சத்தம், ரேடியோவில் ஒலிக்கும் பழைய பாட்டுச்சத்தம். அன்றிரவு அம்மா வாசல் ஓரத்தில் பழைய துணியைப் போட்டாள். அதில் கொஞ்சம் சோறு வைத்தாள். நாய் அருகே வந்து, முதலில் மூக்கை வைத்துப் பார்த்தது. பிறகு மெதுவாக சாப்பிடத் தொடங்கியது. சாப்பிட்டுவிட்டு அங்கேயே சுருண்டு படுத்தது.
அடுத்த நாள் காலை அது இன்னும் அங்கேதான் இருந்தது. அதே இடம். அதே உடல். அதே தயக்கம். “போகற மாதிரி தெரியலையே” என்றார் அப்பா. அம்மா சிரித்தாள். “போனா நல்லதுதான்.” ஆனால் அது போகவில்லை. மூன்றாவது நாள் அது வாசலைத் தாண்டி உள்ளே வந்தது. யாரும் கவனிக்காதபோது வீட்டின் வெளிப்புற படியேறி மொட்டை மாடிக்குச் சென்றது.
அப்பாதான் முதலில் கவனித்தார். அவர் எதுவும் சொல்லவில்லை. தடுக்கவும் இல்லை. அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார். நாய் கூட ஏதோ எல்லை தாண்டிவிட்ட மாதிரி நின்றது. திடீரென்று திரும்பி வாசலைப் பார்த்தபடி நின்றது. என்ன யோசித்ததோ வாசல் பக்கம் போகவில்லை. அப்பா மெதுவாக சொன்னார்: “இனி நம்ம வீட்டுலதான் கெடப்பான் போல.” அம்மா கனத்த மெளனத்தையே பதிலாக தந்தாள். அவள் சாப்பாடு வைக்கும் போது, இரண்டு முறை பார்த்தாள். நாயும் அவளைப் பார்த்தது. அதில் அன்பும் இல்லை. எதிர்ப்பும் இல்லை.
அதற்கு பெயர் வைக்கப்படவில்லை. பெயர் வைத்தால் உறவாகிவிடும். உறவானால் இழப்பு வரும் என அம்மா நம்பினாள். அப்பா “ஏய்” என்று தான் கூப்பிடுவார். அம்மா “அது” என்று தான் சொல்வாள். நான் மட்டும் மனசுக்குள் ஒரு பெயர் வைத்திருந்தேன். அதை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் அது போய் விடுமோ எனத் தோன்றியது. நாய் மெதுவாக வீட்டின் ஓர் உறுப்பினராக மாறியது.
காலை நேரங்களில் அப்பா தோட்டத்தில் வேலை செய்யும்போது அவர் அருகே உட்காந்து கொள்ளும். மண்ணைத் தோண்டும் போது எழும் ஈர மண்வாசனையோடு அது மூச்சை இழுத்துக்கொள்வது போல இருக்கும். அப்பா பேசிக்கொண்டே இருப்பார். நாயிடம் இல்லை, அவருக்குள். “ நான் எல்லாம் சின்னவயசுல என்ன பண்ணினேன் தெரியுமா…” நாய் கேட்கவில்லை. ஆனால் எழுந்து போகவுமில்லை. மாலை நேரங்களில் நான் பள்ளியிலிருந்து வரும்போது வாசலில் காத்திருக்கும். குரைக்காது. வாலாட்டும். அந்த வாலாட்டுதலே ஒரு மொழி. சில நாட்கள் அது கூட இல்லை. அம்மா மட்டும் அதனுடன் அதிகம் பழகவில்லை. “அதுக்கிட்ட அதிகம் பழகாதே,” என்றாள். ஏன் என்றதற்கு, “ஒரு நாள் போயிடும்.” “நாம எல்லாருமே ஒருநாள் போவோம் தானே” என்றேன். எதனால் அப்படிச் சொன்னேன் என்று தெரியவில்லை.
அம்மா என்னைப் பார்த்தாள். சிரிக்கவில்லை. சற்றே கோவத்துடன்,“நீங்க போனா உங்க இடத்துக்கு வேற யாராவது வருவாங்க. அது போனா அந்த இடத்துக்கு யாரும் வரமாட்டாங்க.” என்றாள். அப்போது எனக்குப் புரியவில்லை. நாய்க்கு இடம் இருக்குமா? அது போனால் இடமும் போயிடுமா? நாய் இரவு நேரங்களில் வாசலருகே படுத்துக்கொள்ளும். வீட்டுக்குள் முழுக்க வராது. சுவருக்கும் கதவுக்கும் நடுவில், ஓர் இடைப்பட்ட இடத்தில்.
ஒரு நாள் மழை பலமாக பெய்தது. மின்சாரம் போனது. வீட்டுக்குள் இருட்டு படர்ந்திருந்தது. அப்பா மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார். நாய் அருகே வந்து உட்கார்ந்தது. வெளிச்சத்தில் அதன் உடல் நடுங்குவது தெரிந்தது. குளிரால் அல்ல. ஏதோ அறியாத பயத்தால். அப்பா முதன்முறையாக அதைத் தன் மடியில் ஏற்றிக்கொண்டார். நாய் திடுக்கிட்டது. அசையாமல் இருந்தது. அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள். எதுவும் சொல்லவில்லை.
அந்த இரவு, நாய் வீட்டுக்குள் தான் தூங்கியது. மாடிப்படியின் அடியில். அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அது நம் வீட்டுக்குள் வரவில்லை. நம் வாழ்க்கைக்குள் வந்திருக்கிறது. நாய் சாப்பிட மறுத்த முதல் நாள் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. அம்மா வைத்த சோற்றை அது மூக்கால் தொட்டு விட்டது. பழைய பழக்கப்படி இரண்டு முறை சுற்றி வந்தது. பிறகு படுத்துக்கொண்டது. “இன்னிக்கு சாப்பிடல போல,” என்றேன். அப்பா “விடு, நாளைக்கு சாப்பிடும்,” என்றார். ஆனால் அடுத்த நாள் அது எழவில்லை. முன்பு எழுந்து, உடலை குலுக்கி நீட்டி, வாசலுக்குப் போய் நிற்கும். அன்று மட்டும் படுத்தபடியே இருந்தது. கண்கள் திறந்திருந்தது. உடல் அசையவில்லை. அப்பா அருகே போய் பார்த்தார். “ஏய்…” என்று மெதுவாக கூப்பிட்டார். நாய் வாலை அசைக்க முயன்றது. முடியவில்லை. “மருந்து குடுக்கணுமா?” எனக் கேட்டாள் அம்மா. “தெரியல…ஆஸ்பத்திரிக்கு போவோம்” என்றார் அப்பா.
அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போனார். நானும் அப்பாவுடன் போனேன். நாய் மடியில் கிடந்தது. டாக்டர் சொன்னார்: “வயசு ஆகிடுச்சு.இனி சரியாகாது.” அப்பா எதுவும் சொல்லவில்லை. “எத்தனை நாள்?” என்று கேட்டேன். “சொல்ல முடியாது. சில நாள். சில மணிநேரங்கள்.” அப்பாவின் குரல் உடைந்திருந்ததை உணர்ந்தேன்.
திரும்பி வரும் வழியில், அப்பா பேசவே இல்லை. முன்பு எப்போதும் ரேடியோ போடுவார். அன்று அமைதி. நாய் மட்டும் மிக மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு மூச்சிலும் ஒரு வலி இருப்பதை உணர முடிந்தது. அன்றிரவு நாய் அப்பாவின் காலடியில் படுத்திருந்தது. அப்பா தூங்கவில்லை. அதன் தலையைத் தடவிக்கொண்டே இருந்தார். நாய் அசையவில்லை. கண்கள் பாதி மூடியிருந்தது. அம்மா சுவரை நோக்கி திரும்பிப் படுத்திருந்தாள். ஒரு முறையும் திரும்பிப் பார்க்கவில்லை.
நான் நாயின் மூச்சை எண்ணிக்கொண்டிருந்தேன். ஒன்று. இரண்டு. மூன்று. ஒரு கட்டத்தில் எண்ணுவதை விட்டுவிட்டேன். எண்ணுவது பயமாக இருந்தது. அடுத்த நாள் காலை நாய் எழவில்லை. அப்பா தூக்கினார். எடை இல்லை. உயிர் போன உடலுக்கு எடை இருக்காது. அப்பா அதைத் தோட்டத்தின் பின்புறம் புதைத்தார். பெரிய குழி இல்லை. நாய்க்கு பெரிய இடம் தேவையில்லை. அம்மா அருகே வரவில்லை. தொலைவில் நின்றாள். மண்ணைப் பார்க்கவில்லை. அப்பாவைப் பார்க்கவில்லை.
அந்த இரவுதான் அம்மா உடைந்தாள். “நான் தான் சொன்னேன்லா அதுகூட பழகாதீங்கன்னுட்டு’ “ குரல் உயரவில்லை. ஆனால் அது குரல் போல இல்லை.. “இப்போ பாருங்க… நீங்க தான் கஷ்டப்படுறீங்க…” அப்பா எதுவும் சொல்லவில்லை. “நாய் தான…” என்றாள். “நாய் தான்…ஆனாலும் வலிக்குது’ அப்பாவின் சொற்கள் உடைந்து உதிர்ந்தன.
” இப்படி ஒரு சின்ன விஷயத்துக்கா நீங்க இவ்வளவு கலங்குறீங்க?” அப்பாவை உற்றுப்பார்த்தபடி கேட்டாள் அம்மா.
அப்பா மெதுவாக சொன்னார்: “சின்னதுதான். அதான் கஷ்டம்.”
“நீங்க எல்லாத்தையும் சின்னதா நினைக்கறதால தான் இவ்வளவு காலம் தாங்கிட்டீங்க. அதான் உங்களையே யாரும் கவனிக்கல.”
அது சண்டை இல்லை. அது குற்றச்சாட்டலும் இல்லை. ஓர் உணர்ச்சி திடீரென்று தன் இடத்தை இழந்தது போலிருந்தது.
அம்மா தொடர்ந்தாள்: “நாய்கூட நீங்கதான் நல்லா பழகிட்டீங்க. நான் பழக்கப்படல. நான் அப்பவே சொன்னேன். நீங்க கேக்கல. இப்போ நானும் கஷ்டப்படணுமா?” அப்பா பதில் சொல்லவில்லை. அவர் முதல் முறையாக அம்மாவைப் பார்த்தார். அவளுக்குப் பின்னால், சுவரில், நாயின் நிழல் அவரது கண்களுக்குத் தென்பட்டது.
“நான் கஷ்டப்படுறது நாய்க்காக இல்லை,” என்றார். “நாய் மூலமா நான் என்னை இழந்தேன் அதுக்காக.”
“என்ன இழந்தீங்க?”
“எனக்கே தெரியல.”
அம்மா விரக்தியாகச் சிரித்தாள்.
“அதான் பிரச்சனை. தெரியாமலே இழந்துக்கிட்டே இருக்கறீங்க.” அந்த இரவு வீட்டுக்குள் நாயின் சத்தம் இல்லை. அதற்கு பதிலாக ஒரு புதிய அமைதி. முன்பு அது மென்மையாக இருந்தது. இப்போது அது மிக கனமாக இருந்தது. நாய் போயிருந்தது. ஆனா அதோடு சேர்ந்து வீட்டின் ஒரு பழைய சமநிலையும் போயிருந்தது. அது தான் உண்மையான இழப்பு.
அந்த இரவு முழுவதும் வீடு ஒரு பெரிய, அமைதியான காலி அறையைப் போல மாறியிருந்தது.
மறுநாள் விடிந்ததும் அப்பா தோட்டத்தின் பின்புறம் சென்றார். மண் இன்னும் ஈரமாக, குளிர்ச்சியாக இருந்தது. அவர் குனிந்து, விரல்களால் மண்ணைத் தொட்டுப் பார்த்தார். மண் அவரது விரல்களில் ஒட்டிக்கொண்டது. அவர் அதைத் துடைக்காமல், வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு மெதுவாக எழுந்து வீட்டுக்குள் வந்தார்.
அம்மா திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். கையில் ஒரு பழைய, மங்கிய புடவை. அதை மடித்து மடித்து, திரும்பத் திரும்ப வைத்துக்கொண்டிருந்தாள். ஒரு செயலைத் திரும்பச் செய்வதால் மனதைத் திசைதிருப்ப முயல்வது போல.
“ஏன் இப்படி உக்காந்திருக்க?” என்றார் அப்பா.
அம்மா திரும்பவில்லை. “அங்க உக்கார்ந்தா என்ன? இங்க உக்காந்தா என்ன? எல்லா இடமும் இப்போ ஒண்ணுதான்.”
அப்பா அவளருகே உட்கார்ந்தார். இருவரும் ஒரே திசையை நோக்கி அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். தோட்டத்தின் இருள். அதன் அடர்த்தியான கருமை.
“நான் அதுக்கு அன்னிக்கு சோறு வெச்சிருக்கக்கூடாது. அதான் இப்படி ஆயிடுச்சு,” என்றாள் அம்மா. அம்மாவின் குரல் மிக மெல்லியதாக இருந்தது. இலையின் நுனியில் தங்கிய மழைத்துளி விழுவதற்கு முன் கொடுக்கும் சிறு அதிர்வு போல.
“ஒம்மேல தப்பில்ல… நான்தான் பழக்கினேன்.”
“நீங்க பழக்கினாலும் நான் தடுக்கல. அதுதான் நாஞ்செஞ்ச தப்பு.”
அப்பா மெதுவாகச் சிரித்தார். அது சிரிப்பு அல்ல. பழைய நினைவு வெளியேறும் போது வரும் சிறு ஒலி.
“தப்பு இல்ல. அது வந்தது. நாம ஏத்துக்கிட்டோம். அவ்வளவுதான்.”
“ஏத்துக்கிட்டோம்னா போதுமா? இப்போ இல்லாத இடத்தை எப்படி நிரப்பறது?”
அப்பா பதில் சொல்லவில்லை. அவரது பார்வை தோட்டத்தின் பின்புறத்தைத் தேடியது. அங்கே சிறு செடி முளைத்திருந்தது. யாரும் விதைக்கவில்லை. மழைக்கால மண்ணில், தானாகவே துளிர்த்திருந்தது.
“அங்க பாரு ஒரு செடி முளைச்சிருக்கு“ என்றார் அப்பா.
அம்மா திரும்பிப் பார்த்தாள். “அது செடி தான். நாய் இல்லை.”
“ஆமா. ஆனா அது அங்கே இருக்கு. நாயை பொதச்ச இடத்துல.”
அம்மா எழுந்தாள். மெதுவாகத் தோட்டத்துக்குச் சென்றாள். செடியருகே நின்று, அதன் இலைகளைத் தொட்டுப் பார்த்தாள். ஓர் இலை அவள் விரல்களுக்கு நடுவே சிக்கியது.
“இதைப் பிடுங்கிடலாமா?” என்றாள்.
“ஏன்?”
“இருந்தா நினைப்பு வரும்.”
“நினைப்பு வரட்டும். அது நம்மோட இருக்கட்டும்.”
அம்மா சிறிது நேரம் அங்கேயே நின்றாள். பிறகு திரும்பி வந்தாள். “நாளைக்கு பார்க்கலாம்,” என்றாள்.
அடுத்த நாள் காலை அம்மா அந்தச் செடியை வேரோடு சேர்த்து பிடுங்கினாள்.
நான் ஓடிச்சென்று. “ஏம்மா பிடுங்கிட்டீங்க’” என்றேன்.
“இந்த இடம் காலியா இருக்கட்டும். நினைப்பு வேண்டாம்.” அவள் குரல் சன்னமாக இருந்தது.
ஆனால் அவள் கையில் இருந்த வேர் இன்னும் பச்சையாக, உயிரோடு இருந்தது.
அன்றிரவு அம்மா மீண்டும் அந்த இடத்துக்குச் சென்றாள். வேரை மண்ணில் மெதுவாக நட்டினாள்.
“மாறிக்கிட்டே இருக்கு,” என்றாள்.
“என்ன மாறுது?’ ஒன்றும் புரியாமல் கேட்டேன்.
“மனசுதான்.”
அப்பா திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ரேடியோ ஒலித்தது. ஒரு பழைய பாடல். மெல்லிய குரல், துயரம் கலந்த இசை. அவர் கண்கள் மூடியிருந்தன. ஆனால் அவர் தூங்கவில்லை.
நான் அவரருகே சென்று உட்கார்ந்தேன்.
“அப்பா, நாய் போயிடுச்சு. ஆனா நம்ம வீடு இன்னும் அதே மாதிரி இருக்கு.”
அவர் கண்களைத் திறந்தார். “இல்லடா. வீடு மாறிடுச்சு. நாம மாறல. அதுதான் வித்தியாசம்.”
“எப்படி மாறிடுச்சு?”
“முன்னாடி நாய் இல்லாத இடம் காலியா இருந்தது. இப்போ நாய் இல்லாத இடம் நினைவா இருக்கு. அந்த நினைவு நம்மைத் தொடர்ந்து வருது. அது ஒரு சுமை இல்ல. அது ஒரு துணை.”
அம்மா உள்ளே இருந்து வந்தாள். கையில் சிறு தட்டு. அதில் கொஞ்சம் சோறு.
அப்பா சிரித்தார். “யாருக்குமா சோறு?”
“யாருக்கும் இல்ல. பழக்கத்துக்காக.” என்றாள் அம்மா.
அவள் தட்டை திண்ணையில் வைத்தாள். அது அங்கேயே இருந்தது. யாரும் தொடவில்லை.
நாட்கள் நகர்ந்தன.
செடி மீண்டும் வளர்ந்தது. இம்முறை இலைகள் அதிகம். அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றினாள். அப்பா அதைப் பார்த்துச் சிரித்தார்.
“இது நாய் இல்லை. ஆனா இந்தச் செடி அழகா இருக்கு,” என்றார்.
அம்மா சொன்னாள், “இது போதும்.”
நான் அந்தச் செடியைப் பார்த்தேன். அதன் இலைகளில் மழைத்துளி தங்கியிருந்தது. ஒரு துளி மெதுவாக உருண்டு விழுந்தது.
ஒரு நாள் மாலை மழை பெய்தது.
நான் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். அப்பா என் அருகே வந்தார்.
“ஏய்,” என்று மெதுவாகக் கூப்பிட்டார்.
நான் திரும்பிப் பார்த்தேன்.
அவர் சிரித்தபடியே “உன்னைக் கூப்பிடல. நாயைக் கூப்பிட்டேன்” என்றார்.
நானும் சிரித்தேன்.
வீட்டுக்குள் அம்மா பாடிக்கொண்டிருந்தாள். பழைய பாடல். ரேடியோ இல்லை. அவள் குரல் மட்டும் காற்றில் அசைந்து அசைந்து வீட்டை நிரப்பிக்கொண்டிருந்தது. யாரும் கவனிக்காத பொழுதில் அந்தக் குரலுக்கு தன்னுடலை அசைத்து அசைத்து நடனமிட்டபடி இருந்தது செடி.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
