குருதிப் பலி

ஆர்ப்பரித்தபடி அதைச் சுற்றிலும் இளம்பெண்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் தங்கள் கருவுற்ற வயிற்றில் ஒரு கையை அவ்வப்போது வைத்து ஏதோ சொல்லிக் கொள்கிறார்கள். பீடத்தில் இருந்த குழிவில் தலை வைத்து அசைவற்றுக் கிடக்கிறேன் நான். கூட்டத்தின் ஓசை உச்சமாகிறது. முள்முடி தரித்த நீண்ட அங்கியணிந்த ஒருவர் ஒரு பெரிய வாளேந்தி அப்பீடத்தில் ஏறுகிறார். கூட்டத்தில் அவரை வாழ்த்திப் பேரொலி எழுகிறது. எனக்கும் திரும்பி அவரை ஒருமுறையேனும் பார்த்து விடவேண்டும் என்று இருக்கிறது. களிப்பின் உச்சத்தில் சில பெண்கள் தங்கள் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு இரத்தத்தைப் பீச்சியடித்து ஆடுகிறார்கள்.

ஏழாவது மலர்

இளம்பருவத்தில் ஒரு கன்று குட்டியின் மீதேறி சவாரி செய்த கதையைச் சொன்ன போது அவள் சிரிப்பில் குலுங்கினாள். வெளிநாட்டில் வேலை தேடிய போது அடைந்த துயரங்களைச் சொன்ன போது அவள் கண்கள் கலங்கின.தன் பத்திரிக்கை துறை அலுவலகத்திலுள்ள நீண்ட கூந்தலை உடைய இளம்பெண்ணின் மீதான காதலைச் சொன்ன போது கீழுதட்டைக் உதட்டை கடித்துக் கொண்டாள்.லேசாக இரத்தம் வந்தது.

அன்னம்

அழுகை இல்லை.. பத்து பன்னிரண்டு வருடம் முன்னால் விட்டுவிட்டுப் போன கணவனை இப்போது துக்கித்து அழ என்ன இருக்கிறது? அவர் விட்டுவிட்டுப் போன அன்றே அழுகை வரவில்லை அவளுக்கு. அவளே தன் கணவனையிட்டு எரிச்சல் ஆகியிருந்தாள். கணவன் என்று இல்லை. வாழவே பேரலுப்பு வந்திருந்தது அவளுக்கு. யாரையுமே எதையுமே பிடிக்கவில்லை. வலிகளூடே ஒரு வாழ்க்கைப் பயணம்.

மூத்துத்தி மாமி

ரேழியின் வலதுபக்க அறை. அது தான் சமையல் அறையும், பூஜை அறையும். அதோடு ஒட்டிய மற்றொரு அறையில் படுக்கை, அலமாரி இத்யாதிகள். உத்திரத்திற்கு மேலே கொடுக்கப்பட்டிருந்த மர சட்டங்களுக்கு இடையே, வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த கண்ணாடி சதுரத்தின் வழி, சூரிய ஒளி, பல துகள்களின் கலவையாய், நீண்ட வெளிர்மஞ்சள் நிறப்பின்னல் போல, தரைவரை நீண்டது. அந்த வெளிச்சத்தில், மின்னிய இருபுற மூக்குத்திகளோடு மதுரா மாமி, வெண்டைக்காயைத் தரையில் உட்கார்ந்து திருத்திக்கொண்டிருந்தாள். மண்ணெண்ணெய் அடுப்பில், உலை கொதித்தது. மத்தியான சாப்பாடு மாமாவிற்கு எப்போதும் ஆத்தில் தான்.

பாற்கடல் 

கோத்தாஸ் காப்பியைத் தவிர ரகு வேறு எதையும் தொட மாட்டான். ‘காலங்காத்தால அதிலே கிடைக்கிற கிக் மாக்டவெல் விஸ்கி கூடக் கொடுக்காது’ என்பான். அந்த விஸ்கியும் ஒரு சிநேகிதனின் பிறந்த நாள் பார்ட்டியில் அல்லது ஆபீசில் யாராவது ரிட்டையராகிப் போனால் நடக்கும் பிரிவு உபசார விருந்தில் கிடைப்பதுதான். என்னமோ தினம் தினம் மாலையில் கைக்காசு செலவழித்து குடித்து வருபவனைப் போலப் பேசுவான். இந்தப் பேச்சு மட்டும் இல்லா விட்டால் உன்னை ஒருத்தன் கூட மதிக்க மாட்டான் என்று அவள் நினைத்துக் கொள்வாள்

சிலுவைப் பாதை

இங்க இருக்கறதுதான் பிடிச்சிருக்கு. அங்க ரொம்ப அமைதியா இருக்கும். சின்ன சத்தம் கேட்டாக்கூட பயமா இருக்கும்.எந்த சிஸ்ட்டருக்காவது ஒடம்பு சரியிருக்காது. யாராச்சும் செத்து போவாங்க. எல்லாரும் ரொம்ப வயசானவங்க. ரொம்ப கஸ்ட்டப்படுவாங்க..பாவமா இருக்கும். அழுகையா வரும். இங்க மாதிரி ஜாலியா இருக்க முடியாது.”

லீலாதேவி

அன்று காவேரியைப் பார்த்த போது கங்கையைத்தான் நினைத்துக்கொண்டேன். கங்கையோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறியது ஆனால் நீர்தானல்லவா ? பாரத தேசத்தில் ஓடும் நீரெல்லாம் கங்கைதானே. நீர் அமைதியாய் நடப்பது- கங்கை காவேரி எதுவாகட்டும் – மனம் குளிர்ந்து நிறைந்துவிடுகிறது. ஆனால் ஆச்சர்யம், எப்படி கங்கையில் எங்களுக்கு இருந்த அதே வரவேற்பு இங்கு காவேரியிலும். எனக்கு தமிழ்நாட்டை நினைத்தாலே நினைவில் முகங்கள்தான் எழுகின்றன. அவ்வளவு முகங்கள். மணிக்கணக்காகக் காத்திருந்து, குழுமி, தொட முயன்று ஆசீர்வதிக்கச் சொல்லி எத்தனை முகங்கள். மனித வெள்ளம்தான் மனதில் எழுகிறது காவேரியை மீறி தமிழ்நாட்டை நினைத்தாலே.

விதைக்குள்ளும் இருப்பது

கொஞ்சம் ஆழமாக யோசித்துப்பார்த்தால் அந்த பத்து வயதிற்குள்ளிருக்கும் காட்சனுடன் நேற்றிரவு செய்ததை நான் துளியும் விரும்பவில்லை என்பதும் அவன் உந்துதலும் நம்பிக்கையும் அதற்கு தூண்டுதலாக இருந்ததையும் உணரமுடிகிறது. அதிகாலை மூன்று மணிக்கு நிலவற்ற , இருள் கருமேகங்கள் சூழ்ந்து கிடக்கும் இந்த நீண்ட நெடிய வானை ஜன்னல் வழி பார்த்தபடி கட்டிலில் எழுந்து அமர்ந்திருக்கிறேன். தெருவிளக்கின் ஒளி ஜன்னல் கம்பியின் நிழலாக என்னை துண்டு துண்டாக பிரித்திருந்தது.

செகண்ட் இன்னிங்ஸ்

பாஸ்கரனுக்கு கிரிக்கெட் பாட் இருந்தாலும் அவனுக்கு ‘பௌலிங்’ போடப் பிடித்திருந்தது. அது கோமதிக்கு மகிழ்ச்சி யளித்தது. தடதடவென்று ஓடி வந்து வேகமாய்க் கையைச் சுழற்றினால் பந்து புயலைப்போல வந்தது. விளையாட சிரமமாய்த்தான் இருந்தது.எப்படி அவனுக்கு இத்தனை வேகமாய்ப் பந்தை எறிய முடிகிறது என்று கோமதிக்கு ஆச்சர்யம். இமைக்கும் நேரத்தில் பந்து அவனைக் கடந்து சென்றது. அதிலும் ஒன்றிரண்டு பந்துகளை கோமதி தொட்டுவிட்டாலே பந்து கதறிக்கொண்டு வாத மரத்தைத் தாண்டிப் பாய்ந்தது. ஃபோர்.

கொழும்பு டீ

மலர் இப்படித்தான், எந்த நேரம் என்று இல்லாமல் அலைபேசியில் அழைப்பது, இன்னும் சற்று நேரத்தில் திருப்ப அழைக்காவிட்டால் அவ்ளோ பிஸி ஆவா இருக்க என்று வீட்டுக்கே கிளம்பி வந்து கோவித்துக்கொள்வது, அவனது அணைத்து அலுப்புகளையும் என் காதுகளுக்கு மடை மாற்றி விடுவது, நான் கோவப்பட்டால் ” நீ தான் என் பஞ்சிங் பேக்” என்று என் மூக்கை செல்லமாக திருகுவது என்று என்னால் வெறுக்க முடியாத ஓரு சித்திரம்.

பயம் தொலைத்த பயணம்

இல்லை, இங்கை கனடாவிலிருந்த மாமாதான் எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தினவர். எங்கடை கலியாணம் இந்தியாவிலைதான் நடந்தது. மூண்டு கிழமை லீவிலை வந்து இவர் என்னோடை இந்தியாவிலை நிண்டவர். அதுக்குள்ளை எனக்கு பிள்ளையும் தங்கியிட்டுது. பிறகு பிள்ளைக்கு ஒண்டரை வயசானப் பிறகுதான் நான் இங்கை வந்தனான். வந்தகையோடை அடுத்த பிள்ளையும் தரிச்சிட்டுது. இப்ப திரும்பவும் நான் கர்ப்பமாயிருக்கிறன்”

இரவின் மடியில்

‘இனி கிளம்பி எங்க போறது. மணி அஞ்சாகப் போகுது. இனி கிளம்பி போய்ட்டு வரதுக்குள்ள ரொம்ப லேட் ஆயிரும். அதுவும் இந்த சென்னை டிராபிக்கில, இப்ப கிளம்புன விடிஞ்சிரும். இப்ப தாண்டி பையனா பொறந்திருக்கணும் தோணுது. இந்த டைம் லிமிட்டே இருந்திருக்காது.’

வாராதே இனி வார்தா

என்ன தான் வெளிநாட்டு வாழ்க்கை சுகமாக இருந்தாலும், பெற்றவர்களைத் தனியே தவிக்கவிட்டு போகும் இந்த வாழ்க்கை உயர்வில் முழு நிம்மதி என்றும் இல்லை.
வயதான முதியவர்கள், என்ன உடல் நிலை இருந்தாலும், காலம் கருதி எல்லாருடனும் முகமலர்ச்சியோடு பேசவேண்டியிருக்கிறது.

சரியான வெகுமதி

ஆனால், கல்வித்தகுதி மற்றும் சான்றிதழ்கள் உள்ள ஒரு பணியாளருக்கு லக்ஸ் அதிகம் ஊதியம் தர வேண்டும். என் போன்ற கல்வித்தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் அற்ற ஒருவருக்கு அடிப்படை ஊதியம் தந்தால் போதும். அங்கே தான் அவருக்கான லாபம் இருக்கிறது. இது செவ்வாயில் அமையப்பெற்ற அரசாங்கத்தை அவர் ஏமாற்றும் விதம்.

வீடு

கலர் டிவியே பார்த்திராத எனது தாத்தா ஐ ஃபோனில் PUBG ஆடிக்கொண்டிருப்பார். அவரை பார்த்தே இராத என் குழந்தைகள் அவரோடு ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருப்பர். இக்கால அண்டை வீட்டு பென் எங்கள் புழக்கடை வாவியில் தண்ணி இறைத்துக்கொண்டிருப்பார். இது போல.

அனாயாசம்

அம்மா மௌனமாக யோசித்தாள். ஒரு பெருமூச்சுக்குப் பின் பேச ஆரம்பித்தாள். ‘’மனுஷாள் எல்லாருமே சாவைக் கண்டு பயப்படறா. ஏன்னா சொந்த பந்தங்களோட இருக்கறதயும் லௌகிக சந்தோஷங்கள்ல மூழ்கியிருக்கறதலயும் மட்டுமே வாழ்க்கைன்னு நம்பறா. அப்படிப் பட்டவாளுக்கு சாவுன்னு சொன்னா பயம் வந்துடுது. சாவுக்கு அப்பறம் நாம என்ன ஆவோம்னு தெரியலயேங்கற பயம். அடுத்த ஜென்மம் பத்தி பயம்.

கல் மதில் வேலி

“அவனுக்குப் பைத்தியமே? அந்த பூவரசம் இலைகளை பிடிங்கி அவன் சின்ன வயசிலை பிப்பீ ஊதினதை அவன் மறந்திட்டானே. அந்த மரங்களை வெட்ட சொல்லுறானே?”

“தான் பிப்பீ ஊதியது அவனுக்கு தெரியும் , அவன் சொல்றான் அடிக்கடி அந்த வேலி கதியால்களையும் கிடுகையும் மாற்ற வேண்டி வரும். அது வீண் செலவாம்.”

தண்ணிப்பாம்பு

கோலப்பன் பேசுவதற்கென்று எதும் இருக்கவில்லை. உடல் தளர்ந்து மனம் ஆற்றலற்று பிழிந்து போட்ட கரும்பு சக்கையாக கிடந்தது. “யம்மா, மானமா ஒரு வேலைக்கி போறேன். பொங்கதுக்கு வழியிருக்கும். இந்த கட யாவாரம்லா வேண்டாம்மா. எனக்கு முடியல்ல.”
“சீ…வாயமூடுல..அறுதப்பயல…நல்ல அப்பனுக்குத்தான் பொறந்தியா. ஆம்பளையா பொறந்தா மட்டும் காணாது கேட்டியா,” என்று வேகமாக அவனிடம் வந்தவள் “கடைக்கு போயி யாவாரத்த பாரு. பிள்ளன்னு பொறந்துருக்கு பாரு சவம்…சவம்….

காகம்

திவாகர் கூட்டையும் பொறியலையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அம்மா அவர் இலையில் மேலும் ஒரு கரண்டி வைக்க முயன்றாள். 

நட்சத்திரம்

‘எப்படியாச்சு நல்லபடியா ஒரு வேலையோட வந்திரு தாயி. பொம்பள பிள்ளைக்கு என்ன நாடு வந்தாலும் ஊன்றி பிடிக்க வேலைன்னு ஒன்னு இருந்தா, நாலு எட்டு கூடுதலா விரசா வைக்கலாம்’ கல்லூரி விடுதியில் என்னை விட்டுவிட்டு திரும்பும் போது என் கையை பிடித்து வைத்துக் கொண்டு அம்மா சொன்னது. அது கேட்காமல் கேட்ட ஒரு சத்தியம் போல் இருந்தது.

அனல்

“நீ ஆ சோங் கடையிலத்தானே பசியாற வருவ? உன்ன அங்க வச்சி செருப்பால அடிக்கறன் பாரு,” என முடியை அவிழ்த்து விரித்துவிட்டு வீட்டின் முன்னே நின்று கத்துவாள். சாந்தியின் பேச்சுக்குப் பயந்தே எப்படியாவது வட்டியைக் கொடுத்துவிடுவார்கள்.

கீதப்ரியா, லதா, ஜோதி

அன்று உழவர் சந்தையிலிருந்து வெளியே வரும் போது, வாசலில் பூக்கார பாயிடம் மல்லிகை பூ எடை நிறுத்தும் போது தான் கவனித்தேன் வலது புற டீக்கடையில் நிற்பது ஜோதி மாதிரி இருக்கிறதே என்று. உழவர் சந்தைக்கு போனால் எப்படியும் ரெண்டு தெரிஞ்சவங்கள பார்த்துவிடுவேன். நின்னு நாலு பழமை பேசிவிட்டு “கீதப்ரியா, லதா, ஜோதி”

ஆயுதம்

தேவு காலேஜை முடித்து விட்டு ஆறு மாசம் வேலை கிடைக்காது தடுமாறிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் காமேச்வரனிடம் வந்து “அண்ணா, நான் உங்க பாக்டரிலே வேலைக்குச் சேந்துக்கறேன்” என்றான்.

காமேச்வரன் அவனை ஏற இறங்கப் பார்த்தான். பேண்ட் ஷர்ட் என்று காலேஜ் பையனின் உடை. பளீரென்று திருத்தமாக இருந்தான்.

“விளையாடறயாடா தேவு?” என்று சிரித்தான் காமேச்வரன். “பாஸ் மாதிரி டிரஸ் பண்ணிண்டு எனக்கு முன்னாலே நிக்கறே? என்னைப் பார்” என்று தலையிலிருந்து கால்வரை ஒரு கோட்டை இழுப்பது போல ஒரு கையை உயர்த்தித் தாழ்த்தினான்.

“அவ்வளவுதானே?” என்றபடி தேவு தனது கால்சட்டையையும் அரைக்கைச் சட்டையையும் கழற்றினான். இப்போது அவனும் அரை நிஜார் பனியனில்.

ஒரு நாள்

“எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வளக்கிறம், விரும்பின எல்லாத்தையும் வாங்கித்தாறம், நீ என்னடா எண்டால், களவெடுக்கிறியா, நாயே! பள்ளிக்கூடத்துக்கும் வரவேண்டாம் எண்டிட்டினம், இனி என்ன, களவெடுத்துத்தான் சீவிக்கப்போறியோ?” உச்சஸ்தாயில் கத்தினாள்.
அவன் அலற அலற, அவன் புயத்தில், முதுகில் என மாறி மாறி தன் கை வலிக்கும்வரை அடித்தாள். ஏதோ சொல்ல முயன்றவனை “வாயை மூடு நாயே” என அடக்கினாள். அங்குமிங்குமாக நடந்தபடி சத்தமிட்டு அழுதாள், அவனைப் பிடித்து உலுப்பினாள். ஏற்கனவே வாங்கிய அடிகளால் சிவந்துபோயிருந்த அவனின் கன்னத்தில் மீளவும் அறைந்தாள்.

இருள் 

அழகை ஆராதிப்பவனில்லை என்று சொல்லிக் கொண்டு வருபவனும் அவனது பெற்றோரும் வீடு வாசல் தாவர சொத்துக்களை மதிப்பிடும் அலுவலர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஜாதகத்தில் கொஞ்ச தோஷம் என்று கழிக்கப்பட்டாள். எரிச்சலுற்ற அவள் வருகிற வரன்களைக் கழித்துக் கட்ட ஆரம்பித்தாள்.காலம் அவளிடம் ஏற்படுத்திய வடுக்களின் வலி அவ்வப்போது வாய் வழியே வந்து சீறும்.

குல தெய்வம்

கோவிலின் பீடத்திலிருந்து எழுந்த சாமியாடி சுடுகாடு நோக்கி கடிவாளமற்ற காட்டு குதிரையென மயான கொள்ளை சடங்கிற்கு இருளில் பறந்தோடும் மின்மினியென ஓட ஆரம்பித்தான். அடக்குவார் யாருமில்லாத அவனை பின் தொடர்ந்து ஓடிய கூட்டத்தில் தானில்லை என்பது சோகமான மனநிலையை சுந்தரத்திற்கு கொடுத்தது. அம்மையின் காதுகளில் மெல்ல பூச்சையைப்போல நக்கி “அம்மா , நானும் போறம்மா , பயக்க எல்லாவனும் என்ன பயந்தோணி பக்கடா பண்ணிப்பீய நக்குடான்னு சொல்லுவானுங்க நாளைக்கி. இன்னைக்கு ஒரு நாள் மட்டும்மா. கூட்டத்தோட போயிட்டு கூட்டாத்தோட வந்துருவேம்மா” என்று அவளை மேலும் நெருங்கி அணைத்துகொண்டான்.

அகோரம்

ஏழாவது நாள், லீ மயக்கத்திலிருந்து மீண்ட சில மணி நேரத்திற்குப் பின்னர் மனைவியைப் பற்றிக் கேட்டபோது, டாக்டர் ஈஸ்வரின் அணி நிலைகுலைந்து போனது. தடுமாற்றத்தில் அவரின் மனைவி யாரென்றுத் தெரியாமல் திகைத்தனர். உடனே கம்ப்யூட்டரில் தேடிப் பார்த்து, ஒரே முகவரியிலிருந்து, அவரின் மனைவி யாரென்பதைக் கண்டுப் பிடித்தபோது, எமியின் மரணம் அவர்களுக்கு என்றோ மறந்து போயிருந்தது. உடனே டாக்டர், ஒரு ஃபைலைப் பார்க்கும் பாவனையில் அருகிலிருந்த தாதியிடம் ‘எமி நலமுடன் இருப்பதாக’ எழுதிக் காட்டச் சொல்லி முணுமுணுத்தார். அந்தத் தாதி, ஒரு வெள்ளைத்தாளில்,‘Dia sihat. Dah balik rumah..’ (அவர் நலமாக இருக்கிறார். வீட்டிற்கு போய்விட்டார்) என்று மலாய் மொழியில் எழுதிக் காட்டினாள்.

ரயிலில் ஏறிய ரங்கன்

அம்மா சொல்வது மிகச் சரி என்றுதான் என் மனதுக்கு சொன்னது. அந்த ரயில்ல வர்ற அத்தன பெட்டிக்காரவுகளும் எனக்கு ஃப்ரென்ட்ஸ்…..அவுகளப் பிடிச்சி என்னைக்காச்சும் ஒரு வாட்ச்மேன் வேலையாச்சும் வாங்கிப்புட மாட்டேன்? அட…கூட்டிப் பெருக்கி, தண்ணி எடுத்து வைக்கிற வேலையாச்சும் கிடைக்காமயா போய்டும்…? அஞ்சாங் க்ளாஸ்வரைக்கும் படிச்சவன்தான நான்…பெறவுதான போதுண்டான்னுட்டாக வீட்ல…எட்டு க்ளாஸ் படிக்கணுமாமுல்ல…பியூனாகுறதுக்கு….வாட்ச்மேன் ஆகி அப்புறம் உயருமாமுல்ல…அதுல பியூன் ஆகலாம்னு ஒருத்தர் சொன்னாரு….அந்த அய்யா கூட கலெக்டர் ஆபீஸ்ல தாசில்தாரா இருக்காருன்னு சொன்னாங்க

வேணி

வசுமதி தான் வேணியைப் பற்றி விதவிதமாக எங்களுக்கு தகவல் தருவாள். ரசம் சாப்பாட்டை நிறைய நேரம் பிசைவது வேணிக்கு பிடிக்காது, படுக்கை விரிப்பு ஓரத்தில் சுருங்கி இருந்தால் கூட சரி செய்து தான் படுப்பாள், இரவு தூங்கும் முன் பாதத்தை சோப்புப்போட்டு கழுவிட்டு தான் கட்டில் மேல் கால் வைப்பாள், அதிக சத்தம் கேட்டால் காதுகளை பொத்திக்கொள்வாள்  என்று நிறைய  சொல்லுவாள்.

மனிதர்களின் தரிசனம்

அம்மா நிறைய நேரங்களில் அப்படி தான் பேசுவாள். முகத்தை பார்க்கமாட்டாள். பொதுவாக முன்வெளியை பார்த்தபடி பேசுவாள். ஒரு வரியை வெளியே சொல்லிவிட்டு, தொடர்ச்சி வரிகளை மனதிற்குள் சொல்லிக் கொள்வாள்.

தீரா விஷம்

இருபது பிடிகளின் கூட்டத்தில் கடைசியாக கூட்டத்திலிருந்து தனித்துவிடப்பட்டு வந்தது ஓர் போதகம். அதன் அன்னை தன்னை நோக்கி முட்டி முட்டி வந்த போதகத்தை துதிக்கையால் தூக்கி மறுபக்கமாக எறிந்தது. இளம் மூங்கில் குருத்தின் துதிக்கை நெளித்து முன்னால் செல்லும் அன்னையை , கூட்டத்தினை அழைத்தபடி புழுதியால் கண்திறக்க முடியாமல் பாதங்களை தேய்த்து தேய்த்து அது நடந்தது. ஒரு நொடி நின்று வானைப்பார்த்தது “ஏன்” என்றது. மேகங்களற்ற வானம் கையறுநிலையில் எதிர் நோக்க, காலம் சீக்கிரம் நகராதா என்ற ஏக்கத்தில் அதன் இதயம் படபடத்தது.

பிரதி ஜெராக்ஸ்

“கடவுளே எங்க கடைக்கு நேர்ல வந்து ஒரு வரம் கொடுத்திருக்காரு!” என ஏதோ ஒரு பெரிய ரகசியத்தை சொல்துபோல அவனிடம் அவள்மேல் ஆணையாக யாரிடமும் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிவிட்டு கண்களை அகல விரித்துக்கொண்டு ஆச்சரியமாக அதை சொன்னாள்.

ஹேர்கட்

முடிவெட்டுபவள் அவன் தலையைக் கீழே தள்ளி உச்சந்தலையில் வெட்டத் துவங்கினாள். ஒருமுறை கல்லூரி விடுமுறைக்குச் சென்னை சென்றிருந்தபோது காய்கறிக் கடையில் பெயரற்ற சலூனின் முதலாளியைத் தற்செயலாகச் சந்தித்தான். முகத்தில் வயதான சுருக்கங்கள். அவரின் வெள்ளைப் பஞ்சு சட்டை நைந்திருந்தது. ஒருவாறு புன்னகைத்து, “பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு தம்பி… எப்படி இருக்கீங்க? முடி வெட்டணுமா?” என்றார். என்ன சொல்வதெனத் தெரியாமல் அமர் விழித்தான்.

கிறுக்கு

“அது வளரும் யானதண்டிக்கு. இதொண்ண மட்டும் உங்க தாத்த வெட்ட விடல. மத்தத எல்லாம் வெட்டி வெட்டி செரியான ஒசரத்துல வச்சிருப்போம் பொதரு மாதிரி. இதொண்ணு மட்டும் அம்பது அடிக்கு வளந்து நிக்குது. கெளம்பி போக நேரத்துல அத இந்த மேட்டுலருந்து நிண்ணு கண்ணடைக்காம அவரு பாக்கத நான் பாத்துருக்கேன். கடைசியா உனக்க அப்பாக்கிட்ட எஸ்டேட்ட கொடுத்துட்டு போகும்போ அத மட்டும் எதும் செய்யக்கூடாதுண்ணு சத்தம் போட்டாரு….

அபியும் அம்மாவும்

அப்பா என்னிடம் “அபி, உனக்கு அவனைப் பிடிச்சிருக்கு. அவனுக்கும் உன்னை. ஆனால் நீ மத்த விஷயங்களைப் பத்தி யோசிச்சியா?

“மத்த விஷயங்கள்னா? ஜாதியைப் பத்தியா?

அப்பா என்னைப் பாத்து “அவ்வளவு முட்டாளாகவா நான் உனக்குத் தெரிகிறேன்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். அவர் குரலின் அமைதியும் ஆழமும் என்னை ஒரு வினாடி தாக்கி விட்டது.

கிஞ்சுகம்

வசிஷ்டர் … .. நிதானமானகுரலில் பேசத்தொடங்கி இறுதியாக, “தசரதன் தன் வேள்வியால் தன்னை எரித்து உண்டாக்கிய பெருந்தீ ராமன். இன்று இளையராணி தொடங்கியிருக்கும் நீண்ட பெருமழையால் அந்த பெரும்வேள்வித்தீ அணையாதிருக்க சீதை உடனிருக்க வேண்டும். சூரியனை அடிவயிற்றில் காக்கும் புவியளித்த வெம்மை சமித்து சீதை. காக்க வேண்டியது அரசகடமை இளவரசே,” என்கிறார்.

பெருக்கு

” மாராப்ப நல்லா இழுத்து வுட்டுக்கிட்டு பாலக்குடு. இப்படி தொறந்து போட்டா பாக்குறவங்களுக்கு பக்குன்னு இருக்கும்,” ரம்யாவை அதட்டிக் கொண்டேயிருந்தாள். பால் சுரக்கும் மார்பகங்கள் கையில் கரண்டியோடு நிற்கும் அன்னபூரணிகள். அதிலும் இவளது அமுதசுரபி. சுரந்து கொண்டேயிருந்தது. சாமியறையில் ஒரு சிறு பித்தளைத் தாம்பாளத்தில் அம்மா அன்னபூரணியை அமர்த்தியிருந்தாள். பித்தளை அன்னபூரணி. தீபச்சுடருக்கு தங்கம் போல ஜொலித்து கையில் கரண்டியோடு புன்னகைத்தபடி அமர்ந்திருக்கும் அன்னபூரணி.
எதிரே ஒரு சின்னஞ்சிறு வெள்ளிப்படியில் அரிசி. அமுதிடுவதே அவள் வேலை.

ஒரு முடிவிலாக் குறிப்பு

நல்ல நிறுவனத்தில், நல்ல பதவி, நல்ல சம்பளத்தோடு வேறு வேலை உடனே கிடைத்தது. என் திறமையின் காரணமாக எனக்கு கிடைத்த வேலை என்பதான என் நம்பிக்கையை – “பெருந்தொற்றுக் காலத்தில் வேலை கிடைப்பதே கடினம் ; நீ அதிர்ஷ்டக் காரன்” என்று கூறி – லேசாகக் கீறினார்கள் சில நண்பர்கள். வாயு வெளியேறியது. பெருந்தொற்றுக் காலத்தில் நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமை காரணத்தால் வேலையை இழந்த சில நண்பர்கள் வாயிலிருந்தும் வேறு சில துவாரங்களிலிருந்தும் உஷ்ணப்புகை.

கரவுப் பழி

வானம் நீல நிறத்திலிருந்து   கருமையாக மாற ஆரம்பித்த மாலை நேரத்தில் மூன்று பெண்களும் வேணியம்மை கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். இரு புறமும் வேலிக்கிலுவைகளும் கழியந்தட்டையும் வளர்ந்து எல்லையமைக்க, நீண்டு சென்ற  ஒழுங்கையில் ஊருணியைக் கடந்து நடந்தார்கள்.   ஊருணிக் கரையிலிருந்த ஆலமரத்தில் சாக்குகளில் கட்டப்பட்டிருந்த ஈன்ற “கரவுப் பழி”

புண்ணியம்

ஆனா, பள்ளிக்கூட வேலை போனபிறகு ரெண்டு மாசம் ரொம்ப கஷ்டப்பட்டேன். எந்த ஸ்கூலிலும் பணிநியமனம் என்பதே கிடையாது. இருக்கும் வாத்தியார்களுக்கே அரை சம்பளம்; சில ஸ்கூல்களில் அந்த அரை சம்பளம்கூட ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை. அப்படி இருக்கச்சே, புதுசா வாத்தியார்களை ஏன் நியமிக்கப்போறா? அஞ்சுபேரு — அம்மா, ஆம்படையா, ரெண்டு குழந்தைகள், நான் — ரெண்டு வேளையாவது சாப்பிடணும் இல்லையா?’

வசூல்

ஆட்டை கொடுத்து விடலாம் என முடிவு செய்த அருணகிரி “இதுவரை என்னோட கண்ணான புள்ளைங்களுக்கு ஒரு நாளாவது, ஒரு நூறு மில்லி பால் வாங்கிக் கொடுத்ததில்ல. ஒரு பொறந்த ஆட்டுக்குட்டியின் மேல இருக்கற ஐயகூட அதோட தாய் ஆடு சரியாக நக்கிறாத நிலையிலதான் இந்த ஆடு என்னோட வீட்டுக்கு “வசூல்”

தையல்

“சொல்லத் தெரியாம இல்ல லோகு…நம்ம செல்லம் முருங்கமரக்கிளையாட்டம். ஒருமுறியில் ஒடிச்சு நம்மப்பக்கம் வச்சிக்கலாம்…அப்பிடி செஞ்சுட்டு எங்குலசாமி முன்னாடி எப்பிடி போய் நிப்பேன்…”
“குலசாமி எது?”
“பெருமா மல அடிவாரத்து பிச்சாயி…”
“பச்சப்பிள்ளைய கையில வச்சுக்கிட்டு இருக்கறவளா…அதான் நீ இப்படி இருக்குற. எங்கமாறி மருதவீரனா இருக்கனும். குதிரையில தூக்கிப்போட்டுட்டு பறக்கற ஆளு…”என்று சிரித்தாள்.

பௌர்ணமி

“சொல்லப்போனா நாங்க ரயில்வே கேட்டுக்கே வரலாம்னு தான் பாத்தோம். அம்மா தான் லேட்டாக்கீட்டா”
“அதுலாம் ஒன்னும் வேணாம்.நானே வந்துருவேன்”
“இத்தன வருஷம் நீங்க வந்தது தெரியாதா? கேட்டா இந்த கருப்பந்துறையக் கடந்து வர பயமா இருக்குறதுனாலதான் குடிக்கேன்னு சொல்லுவீங்க. ஏதோ இன்னைக்கு தான் மொத தடவையா அந்த கழுத மூத்திரத்த குடிக்காம வந்துருக்கீங்க”
“அதான் இனிமே குடிக்க மாட்டேன்னு சொல்றம்லா”

மழையில் நனையும் அலைகள்

அப்பா “நான் இல்லாட்டா என்ன செய்வீங்க” என்றார். அவர் முகம் பட்டினியால் வெளுத்ததை போலிருந்தது.

“அம்மா , அக்கா இருக்காங்கல்ல” என்றவன் சிரித்தது அப்பாவிற்கு நிம்மதியைக்கொடுத்ததா என அவனால் புரிந்துகொள்ளமுடியாமல் “நான் அழுவேன்” என்றான்.

“அம்மா , அக்கா என்னப்பத்தி என்ன சொல்றாங்க ?”

“அம்மாக்கு உன்ன புடிக்கல. அக்கா உன்னப்பத்தி பேசுனதேயில்லயே”

உச்சி

” இந்தா பாரும்மா, உனக்கு அந்த certificate கிடைக்காது. வீணா அலையாதே. கேட்டியா?” என்றார் பாஸ்கரன்.
தலையாரியின் கண்கள் கலங்கின.
வேதி எப்போதும் அது கிடைக்கும் என் நம்பியதில்லை. தலையாரி வலிந்து உதவியதால் மட்டுமே விண்ணப்பித்திருந்தாள். வேதி வெறித்த கண்களுடன் அலுவலரை பார்த்துக்கொண்டிருந்தாள். எதுவும் பேசவில்லை.
தலையாரி “ஐயா இது மகா பாவமுங்க” என்றார்.
பாஸ்கரன் “எனக்கு பாவ புண்ணியம் லாம் கணக்கில்ல பாத்துக்க?, என் கையெழுத்து இல்லாம ஒன்னும் முடியாது” என்றார்.

நடிகன்

அந்தக் கிளப்பில் விளையாடும் ஒரே விளையாட்டு சீட்டாட்டம்தான். அலுவலக நாள்களில் மட்டுமே மாலையில் நடக்கும் கிளப்பில் …. பல்வேறு விற்பனை வரிக் கிளை அலுவகங்களில் வேலை பார்த்தவர்கள்தாம் விளையாட அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் இடது கையிலும், மேஜைக்கு அடியிலுமாக வருவதை வீட்டுக்கு கொண்டு செல்லும் விருப்பம் இல்லாதவர்களாக அலுவலக வளாகத்துக்குள்ளேயே அதைத் தொலைத்து விட வேண்டும் என்று கிளப்புக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

தோண்டிக்கு செல்லும் பெருந்து

எனக்கு தமிழ் மீது தீராத காதல் உண்டு. அதனால்தானோ என்னவோ நான் எப்பொழுதும் கொம்புகளாலும் கால்களாலும் தமிழை துவைத்துவிடுவேன். என் புலமை கே.ஜி. வகுப்பில் என்னை சேர்த்தபோதே துவங்கிவிட்டது. விஜயதசமியன்று பள்ளியில் சேர்த்து ஒன்றரை மாதத்தில் அரையாண்டுத் தேர்வு. தமிழ் எழுத்துகள் டிக்டேஷனில் அனைத்து எழுத்துகளுக்கும் o o “தோண்டிக்கு செல்லும் பெருந்து”

விலக்கம்

பிறந்தநாளன்று சாயுங்காலம் விடுதியின் தொலைபேசியிலிருந்து அவள் பேசும்போது அண்ணன், “ஆஃபீஸ்ல சர்ட் நல்லாருக்குன்னு சொன்னாங்க…எங்கடா வாங்கின,” என்றான்.
“ஏழு கடல்தாண்டி….ஏழுமலைத்தாண்டி…ஒரு கிளிக்கிட்ட இருந்து,” என்றாள். அவன் வேகமாகச் சிரித்தான்.

விலைக்குமேல் விலை

This entry is part 16 of 16 in the series 20xx கதைகள்

அப்படி மூன்று மாதம் செய்ததின் முடிவு, வாங்குகிறவர்களின் கையோங்கி இருந்ததால் அதன் மதிப்புக்கு பதினைந்து இருபது சதம் குறைவாகத்தான் வீடு விலைபோகும். எதற்கு நஷ்டப்பட வேண்டும்? வெளிப்புறத்தில் புல்வெட்டவும் இலை வாரவும் ஒரு பணியாளன். வீட்டிற்குள் அவள் புழங்கும் இடத்தை அவளால் சுத்தமாக வைக்க முடியும்.
“வேலைக்குப் போற வரைக்கும் இங்கியே தனியா இருந்துடறேன்.”

நீக்(ங்)குதல்

தியாகராஜன் அவர் கைபேசியை அணைத்து வைத்திருந்தார். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை அவருக்கு. என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? என்றிருந்தது. வேண்டாத அழைப்புகள் நிறைய வருகின்றன என்று எரிச்சல்பட்டு  அணைத்து வைக்க ஆரம்பித்தவர் இப்பொழுது வேணும் அழைப்புகளும் தேவையில்லை என்று தோன்ற அது அணைந்தே கிடந்தது. உலகமே அதை அணைத்துக்கொண்டு “நீக்(ங்)குதல்”