அறுந்துவிடாத நூல்

மதுரையின் வெயில் அந்திசாயும் நேரத்திலும் பிசுபிசுவென சட்டையை இழுத்தது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் இரைச்சலுக்கு நடுவே நின்றபோது, எண்பதுகளைக் கடந்த உஸ்மான் பாயின் முழங்கால் மூட்டுகள் லேசாகத் தாளம் தப்பின. ஆனாலும் நடை நின்றுவிடவில்லை.

காலையில் நிலக்கோட்டையில் பார்த்த அந்த அடக்கஸ்தலத்தின் ஈரம் இன்னும் செருப்படியில் ஒட்டியிருப்பது போன்ற பிரமை. வரிசையாக உதிர்ந்துகொண்டிருக்கும் சருகுகளுக்கு நடுவே, இன்னும் கிளையில் பிடிவாதமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பழுத்த இலையின் நடுக்கம் — அவரிடம் இருந்தது.

***

சிம்மக்கல்லின் குறுகிய சந்திற்குள் நுழைந்து, ஹாஜாவின் வீட்டு வாசலில் நின்றபோது உஸ்மான் பாய் ஒரு நிமிடம் திகைத்தார். வாசலில் நின்றது ஹாஜாவா — அல்லது முப்பது வருடங்களுக்கு முந்தைய தம்பி பாஷாவா? அச்சுப்பிசகாத அதே சாயல்.

“அஸ்ஸலாமு அலைக்கும்… 

வாங்க பெரியப்பா! எப்போ வந்தீங்க?”

ஹாஜா ஓடி வந்து அவர் கைகளைப் பற்றிக்கொண்டான். வீட்டிற்குள் நுழைந்ததும் பழைய மரச்சாமான்களின் வாசனையும் அடர்த்தியான சாம்பிராணிப் புகையும் அவரை அணைத்துக்கொண்டன.

“நிலக்கோட்டைல போன மாசம் ஒரு மௌத்… மச்சினன் பொண்டாட்டி. இன்னைக்குதான் நாற்பது முடிஞ்சது. கும்பகோணம் போறதுக்கு முன்னால இங்கயும் ஒரு பார்வை பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன் ஹாஜா…”

உஸ்மான் பாய் மெல்லச் சிரித்தார். ஈறுகள் தெரிந்த அந்தச் சிரிப்பு, நெடுநாட்களாகத் திறக்காத ஒரு பழைய கதவின் முனகலைப் போல கேட்டது. ஒரு நீண்ட பெருமூச்சு அறைக்குள் பரவியது. அவர் கண்கள் ஒரு கணம் நின்று மௌனத்தில் நிலைத்தன.

“இன்னாலில்லாஹி… 

தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பேன் பெரியப்பா.”

ஹாஜாவின் மனைவி, சலீமா கொண்டு வந்த தேநீரின் ஆவி உஸ்மான் பாயின் முகத்தில் படர்ந்தது. சுவரில் ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தவர், மெல்லக் கேட்டார்:

“உங்க வாப்பாவுக்கு என்னதான் ஆச்சு? இப்பவும் என்கிட்ட பேச மாட்டேங்கிறான்.. அன்னைக்கு ஜும்மாவுல அவன்கிட்ட பேச போனப்போ கூட, அலட்சியமா  ‘போ… போ’ங்குற மாதிரி கையை வீசுறான்.  வயசுல மூத்தவன்தானே நான்? என்கிட்ட அப்படி நடந்துக்கலாமாப்பா?”

ஹாஜா தரையைப் பார்த்தபடி பெருமூச்சு விட்டான். “நானும் எவ்வளவோ சொல்லிட்டேன் பெரியப்பா. மனுஷன் பிடிவாதமா இருக்கார். என்ன பண்றதுன்னே தெரியல.”

கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் பாஷாவும் தானும் தோளோடு தோள் நின்று வேலை பார்த்த நாட்கள் நினைவுக்கு வந்தன. ஒருமுறை பக்கத்துக் கடைக்காரனோடு மீன் வெட்டும் விவகாரத்தில் வாய்ச்சண்டை கைச்சண்டையாக முற்றக் கூடிய தருணத்தில் — “என் அண்ணன் மேல யாராச்சும் கைய வச்சுப்பாருங்க…” என்று லுங்கியை மடித்துக்காட்டி நின்ற பாஷாவின் சிவந்த கண்கள் தெரிந்தன. 

பாஷாவும் இப்போது எழுபதைத் தாண்டியிருப்பான். கடந்த இரண்டு வருடங்களாக அவர்களுக்குள் ஒரு பெரும் சுவர் முளைத்திருக்கிறது. எத்தனையோ முறை போன் செய்தும், பாஷா மறுமுனையில் மூச்சுக் காற்றை மட்டும் ஒலிக்க விட்டுவிட்டுத் துண்டித்து விடுவான்.

உஸ்மான் பாயின் குரல் கொஞ்சம் உயர்ந்தது. 

“என்னப்பா பெரிய  பிரச்சனை அவனுக்கும் எனக்கும்? நேர்ல பேசுனாதானே தெரியும்?”

சொல்லும்போதே பழைய ஞாபகம் வந்து போனது.

இரண்டு வருடங்களுக்கு முன், இளைய மகனோடு நடந்த வாக்குவாதத்தில் சமாதானப்படுத்த வந்த பாஷாவிடம் — அதிகாரத்தின் உச்சியில் நின்று உஸ்மான் பாய் உதிர்த்த வார்த்தை: 

“இது எங்களுக்குள்ள… 

நீ இதுல தலையிடாத.”

அந்த வார்த்தைக்குப் பிறகுதான் பாஷா கால் செருப்பை கூட மாட்டாமல் வீட்டை விட்டு வெளியேறினான்.

நினைவுகள் மீள, குரல் சட்டெனத் தணிந்தது. 

 “அப்படியே எதுனாலும்… இன்னும் எவ்வளவு நாள்தான் நாம இருக்கப் போறோம்? இதோ… நீ முந்தியா நான் முந்தியாங்கற மாதிரி ஒவ்வொரு ஆளா போய்ட்டேருக்கு.” 

சுவற்றிலிருந்த காலண்டர் தாள்கள் காற்றில் படபடத்தன.

“வாப்பா உங்ககிட்ட பேச மாட்டேன்னு சொல்றாரே தவிர, நீங்க கொடுத்த அந்தப் பழைய கடிகாரத்துக்கு இன்னும் வாராவாரம் சாவி கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கார்” என்றான் ஹாஜா புன்னகையுடன்.

உஸ்மான் பாயின் மூச்சு சற்று இலகுவானது. கண்கள் சுவரில் நிலைகுத்தின.

சலீமா தண்ணீர் நீட்டியபடி கேட்டாள்: “உங்க பேத்தி ஃபரீதாகிட்ட பேசுறீங்களா இல்லையா?”

புருவங்கள் மேலே உயர்ந்தன.

“நா எதுக்கும்மா அவகிட்ட பேசணும். வயசுல பெரியவன்தானே? எங்கிட்ட விட்டுக்கொடுக்கணும்னு அந்தப் பிள்ளைக்குத் தோணலையில?”

“அது உங்க பேத்தி பெரியப்பா.” ஹாஜா மெல்லத் தலையை சொரிந்தான். “பெரியவங்க நீங்களே இப்படிப் பிடிவாதமா இருந்தா, எங்களை மாதிரி பசங்க யாரைப் பார்த்துப் பழகிக்கிறது?”

“விட்டுக்கொடுக்கற விசயமாப்பா அது?”  அவர் மீசை லேசாகத் துடித்தது.

சில்லென்ற தண்ணீர் தொண்டையில் இறங்கும்போது, ஐந்து வருடத்திற்கு முந்தைய ஒரு கசப்பு நெஞ்சில் மோதியது.

மனைவி பாத்திமா மூச்சுக்காற்றுக்காகப் போராடிய கடைசி நிமிடங்கள்.

“ஃபரீதாவை ஒருமுறை பார்க்கணும்…”  என்று கதவை நோக்கிய அந்தக் கண்கள் — இன்னும் அவரை விடுவதாக இல்லை.

பலமுறை போன் செய்தும் “குழந்தைக்கு உடம்பு சரியில்லை” என்ற ஒற்றைப் பதிலில் ஃபரீதா வரவில்லை. ஆனால் பாத்திமாவின் உடல் அடக்கஸ்தலத்திற்குப் போகத் தயாரான போது — ஃபரீதா ஓரமாக நின்று அழுதுகொண்டிருந்தாள். 

“அப்போ, அவ பிள்ளைக்கு உண்மையிலேயே உடம்பு சரியில்லதான்…” சலீமா மெல்லப் பேசினாள்: 

“’அவ சும்மா பொய் சொல்றா’ன்னு எல்லார் முன்னாலயும் சொன்னீங்க… அன்னைக்கு அடக்கம் முடிஞ்சு வீட்டுக்கு திரும்புனப்போ, நீங்கதான்…”

அவள் நிறுத்தினாள்.

அவள் வார்த்தைகளுக்கு முன்னால் உஸ்மான் பாயின் மனது ஏற்கெனவே சென்றிருந்தது.

அந்த நாள் — 

ஜனாஸா அடக்கம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது. உறவினர்கள் முன்னிலையில். பெட்டியிலிருந்த பாத்திமாவின் நகையை அவர் தூக்கி வீசியது. “இதுக்குத்தான வந்த?” ஃபரீதா தலைகுனிந்து நின்றது.

உஸ்மான் பாய் அமைதியானார்.

சுவரில் கடிகாரம் மெல்ல நகர்ந்தது. அவர் உதடுகள் காலம் சென்ற மூத்த மகன்களின் பெயரை முணுமுணுத்தன.

“யா அல்லாஹ்…”

நெஞ்சு விரிந்து சுருங்கியது.

இளையவன் கும்பகோணத்திலேயே இருந்தான். ஆனால் பாத்திமா வாழ்ந்த அந்தப் பழைய ஓட்டு வீட்டை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. இன்று மதுரைக்கு வந்ததை அவனிடம் கூடச் சொல்லவில்லை.

“ஹாஜா… உங்க பெரிய பெரியப்பா — அதான்… என்னோட அண்ணனைப் பாக்கணும். நாளைக்குக் காலைல கூட்டிட்டுப் போறியா?”

***

அன்று இரவு, ஹாஜா அவரை ஒரு அறையில் தங்கவைத்தான். சுவரோரம் இருந்த பழைய டிவியில், ‘மதுரை வீரன்’ திரைப்படத்தின் காதல் பாடல் ஒன்று மெல்லிய சத்தத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

நாடகம்… விழிகள்… என்று வார்த்தைகள் காற்றில் மிதந்து வந்து அவர் காதுகளில் விழுந்தன. 

சக்கிமங்கலத்தில் பாத்திமா தன் மேல் காட்டிய அந்த ஆரம்பகாலப் பொய்யான கோபமும், பிறகு வாழ்நாள் முழுவதும் அவள் பொழிந்த மாறாத பிரியமும் – ஒரு நீண்ட நாடகத்தைப் போல அவர் கண்முன் விரிந்தன. அவர் கண்கள் லேசாகக் கசிந்ததை மறைக்க இமைகளைச் சிமிட்டிக்கொண்டார்.

ஹாஜா மெல்ல அவர் அருகில் வந்து அமர்ந்தான்.

“பெரியப்பா… நீங்க சின்ன வயசுல எப்படி இருந்தீங்க?”

உஸ்மான் பாயின் முகத்தில் ஒரு அரிய புன்னகை அரும்பியது. 

“நானா? சக்கிமங்கலத்துல ஒரு காளை மாதிரி இருப்பேன். நல்லா வாட்டசாட்டமா… எங்க ஊர்ல என்னைத் தெரியாதவங்க கிடையாது. இப்பப் பாக்கிறியே இந்தத் தள்ளாட்டமெல்லாம் அப்ப கெடயாது.”

“சக்கிமங்கலமா? பெரியம்மாவுக்கும் அதானே சொந்த ஊரு?…”

“ஆமா… அவ வாப்பா எனக்கு மாமா முறை சொந்தம். அவ அம்மாவும் வாப்பாவும் சண்டை போட்டுப் பிரிஞ்சுட்டாங்க. பாத்திமா அங்க அவ தாதிம்மா  வீட்லதான் வளர்ந்தா. சின்னப்பிள்ளையில இருந்து அவளை எனக்கு தெரியும்.”

ஹாஜா கண்களை விரித்தான். “அப்ப நீங்க அங்க அடிக்கடி…?”

“ஆமா — அவளை பாக்கறதுக்காகவே ஏதாவது ஒரு கரணம் சொல்லி அங்க போயிட்டிருப்பேன்.  ஆனா அவளுக்கு என்ன சுத்தமா பிடிக்காது. ‘இந்த ஆள எதுக்கு வீட்டுக்குள்ள விடற?’னு அவ தாதிம்மாக்கிட்ட முகத்த சுழிச்சுக்குவாளாம்.”

அவர் லேசாகச் சிரித்தார்.

“ஆனா நான் விட்ற ஆளா? அவ தாதிம்மாகிட்ட போய்  — ‘எனக்கு இவளைத் தரீங்களா இல்லையா?’ன்னு வாரம் மூணு நாள் பிடிவாதமா நிப்பேன்.   அப்பறம் ஊர்ல எல்லாரும் ‘பையன் நல்ல பையன்தான்.. ஒரு கெட்ட பழக்கமும் கெடையாது..’ன்னு சொன்னவுன்னே தாதிம்மா சம்மதிச்சா. பாத்திமாவுக்கு வேற வழியில்லை. ‘சரி’னு தலையாட்டிட்டா.”

உஸ்மான் பாய் பேச்சை நிறுத்தி, சட்டைப்பையில் இருந்த மூக்குப்பொடி பாக்கெட்டைத் திறந்தார். ஒரு சிட்டிகை எடுத்து நாசித்துவாரங்களில் திணித்தார். அவருக்குத் தும்மல் வருவதற்கு முன்னமே, அந்த நெடி தாக்கி ஹாஜாவும் சலீமாவும் ‘ஹச்’ என்று ஒருசேரத் தும்மினர்.

அறையில் ஒரு மெல்லிய சிரிப்பொலி பரவி அடங்கியது.

“அப்புறம்?” 

ஹாஜாவின் குரல் இன்னும் குழைந்திருந்தது.

“அப்புறமென்ன… நான் இல்லாம அவ ஒரு நாளும் இருக்கமாட்டா. வெளிநாட்டுக்கு போறேன்னு சொன்னப்பவும் கூட — ‘கஞ்சி குடிச்சாலும் பரவாயில்ல, நீங்க பக்கத்தில இருந்தாலே போதும்’ன்னு என்னை போக விடல.”

ஹாஜா சலீமாவை ஓரக்கண்ணால் பார்த்துப் புன்னகைத்தான். 

உஸ்மான் பாயின் குரல் இப்போது கொஞ்சம் கரகரத்தது.

“எங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ உங்க வாப்பாவுக்கு ஒரு பத்து பன்னெண்டு வயசுதான் இருக்கும். சின்னப் பய… ‘மதினி… மீன் குழம்பு வச்சு கொடுங்க’ன்னு பாத்திமாகிட்ட வந்து உரிமையா நிப்பான்…”

உஸ்மான் பாய் சட்டென மௌனமானார். குரல் தடுமாறியது.

“ஆனா இப்போ… 

அவளும் இல்ல… 

அவனும்…”

வார்த்தைகள் பாதியில் அறுந்தன. அந்த அறையில் இப்போது டிவியின் சத்தத்தைத் தவிர, ஒரு கனமான மௌனம் மட்டும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது.

***

மறுநாள் காலை, தல்லாகுளம்.

ஒரு குறுகிய சந்துக்குள் இருந்த சிறிய இருண்ட அறை. கதவைத் திறந்ததும் மருந்து நெடியும், முதுமையின் மட்கிய வாசனையும் மூக்கைத் துளைத்தன. தொன்னூறு வருடங்களைக் கடந்த நூர் பாயின் உடல், கட்டிலோடு ஒட்டிப்போய் ஒரு காய்ந்த சருகைப் போலக் கிடந்தது. அவர் கண்கள் மூடியிருந்தன; மெல்லிய சுவாசத்தின் சத்தம் மட்டும் அந்த அறையின் மௌனத்தைக் கீறிக்கொண்டிருந்தது.

உஸ்மான் பாய் காலடிச் சத்தம் கேட்காமல் மெல்லக் குனிந்து அவர் அருகில் அமர்ந்தார்.

அவர் தொட்டதும் நூர் பாயின் கண்கள் மெல்லத் திறந்தன. அங்கிருப்பவர் யாரென்று உணரச் சில நொடிகள் பிடித்தன. அடையாளம் கண்டதும் அந்தப் பார்வையில் ஒரு மின்சாரம் பாய்ந்து அடங்கியது; வார்த்தைகள் வராத ஏக்கத்தோடு ஒரு நீர்த்துளி மட்டும் கசிந்து கன்னத்தில் வழிந்தது. உஸ்மான் பாய் அதைத் தன் நடுக்கமான விரல்களால் துடைத்தார். அவர் கை விரல்கள் நூர் பாயின் வலது கன்னத்தில் இருந்த அந்தப் பழைய தழும்பைத் தேடித் தடவின.

“அண்ணே… அன்னைக்கு கும்பகோணத்துல நம்ம கடை தீ பிடிச்சப்ப, என்னை உள்ளே விடாம தடுத்துட்டு நீங்க மட்டும் தனியா உள்ளே போய் அந்தப் பெட்டியை எடுத்துட்டு வந்தீங்களே… அதானே இது?”

நூர் பாயின் மங்கிய கண்களில் ஒரு சிறிய ஒளி மின்னியது.

உஸ்மான் பாய் அவர் கையைப் பற்றினார். அது கையைப் போல இல்லை – வெறும் நரம்புகளும் தோலும் போர்த்திய ஒரு சருகு. விரல்களின் கணுக்களில் இருந்த மற்றொரு தழும்பை மென்மையாக வருடினார்.

“அண்ணே… இந்தக் காயம்… அந்தத் திருவிழாவுல கருப்பன் முட்டுனப்ப வந்ததுதானே?  

ஏதோ நேத்துதான் நடந்த மாதிரி இருக்கு…”

நூர் பாயின் உதடுகள் ஏதோ பேச முயன்றன. அவை லேசாகத் துடித்தன; ஆனால் ஒலி மட்டும் வரவில்லை. அவரின் முகத்தில் சொல்லப்படாத ஏதோ ஒன்று எஞ்சி நின்றிருந்தது.

உஸ்மான் பாய் அவர் கையை மெல்லத் தளர்வாகக் கட்டிலில் வைத்தார். ஒரு கணம் அசைவற்று நின்றார். பிறகு மெதுவாகத் திரும்பினார். 

அந்த அறையின் மௌனம் ஒரு நிழலைப் போல அவரைத் தொடர்ந்து வந்தது.

***

நூர் அண்ணனின் மூடும் கண்களைப் பார்த்தபோது, பாத்திமா மூச்சற்றுப் போன அந்தக் கடைசித் தருணம் திரும்பி வந்தது.

‘ஃபரீதாவை ஒருமுறை பார்க்கணும்…’

அவள் கண்களின் ஏக்கம், நூர் அண்ணனின் சொல்லப்படாத மௌனத்தோடு கலந்து ஒரு சுழலாக அவரைத் துரத்தியது. 

அந்தத் தள்ளாட்டத்திலும் கால்கள்… ஃபரீதாவின் வீட்டுத் திசையில் அவரை இழுத்துச் சென்றன.

அவள் வீட்டு வாசல் கேட்டின் தாழ்ப்பாளை அவர் கைகள் பற்றின. அவர் அப்படியே நின்றார். வாசலிலிருந்து தெரிந்த முற்றம் — ஒரு வினாடி — பாத்திமாவுக்காகக் காத்திருந்தது போல் தோன்றியது.

தாழ்ப்பாளில் இருந்த அவர் விரல்கள் லேசாக இறுகின.

பிறகு மெதுவாக அவை தளர்ந்தன.

‘வரட்டும். அவளாகத் தேடி வரட்டும்.’

அவர் மெல்லத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, ஹாஜாவின் வீட்டுத் திசையை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

***

மதியம் கிளம்பும் நேரம் வந்தபோது,

வெயிலின் உக்கிரம் கொஞ்சம் குறைந்திருந்தது. உஸ்மான் பாய் ஒரு நீண்ட மூச்சை ஆழமாக இழுத்து வெளியிட்டார்.

“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாமே பெரியப்பா?” ஹாஜா கேட்டான். 

“இல்லப்பா… கும்பகோணத்துல கடை இருக்கு. பேரப் புள்ளைங்க பாத்துப்பாங்கன்னாலும், அந்தக் கல்லாவுல உட்கார்ந்தாதான் எனக்கு நிம்மதி.” 

உஸ்மான் பாய் மெல்லச் சிரித்தார். 

பேருந்து நிலையத்திற்குப் போகும் முன், உஸ்மான் பாய் ஹாஜாவின் கையைப் பலமாகப் பற்றிக் கொண்டார். அந்த நடுக்கம் அவன் உள்ளங்கையில் கடந்தது. அவர் கண்கள் இப்போது லேசாகக் கசிந்திருந்தன.

“ஹாஜா… உன் வாப்பாகிட்ட சொல்லு. நாம எல்லாம் ஒரே ரத்தம். இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கோம்…” 

பேச்சு சட்டெனத் தட்டுப்பட்டது. ஒரு நிமிடம் மௌனம் அந்த இடத்தை ஆக்கிரமித்தது.

உடனே சுதாரித்துக் கொண்டவர், “இல்ல… வேண்டாம். இதையெல்லாம் அவன்கிட்ட சொல்லாதே.  ‘கிழவன் எல்லார்கிட்டயும் போய் நடிக்கிறான்’னு இன்னும் கோவப்படுவான். விடு… எல்லாம் விதிப்படியே நடக்கும்,” என்றார்.

மஞ்சள் பையைத் தூக்கிக்கொண்டு பேருந்தில் ஏறியவர், கடைசிப் படியில் ஒரு கணம் பாரம் தாளாமல் நின்றார். பிறகு மெல்லத் திரும்பி ஹாஜாவைப் பார்த்தார்.

“ஒருவேளை நான் போயிட்டா… நீ கண்டிப்பா வரணும்பா. பாஷாவையும் கூட்டிட்டு வா. உயிரோட இருக்கும்போதுதான் பார்க்கல… என் மௌத்துக்காவது அவன் என் முகத்தைப் பார்க்கட்டும்…”

***

பேருந்து இரைச்சலுடன் நகரத் தொடங்கியது. 

நடத்துனர் ஒவ்வொரு இருக்கையாக டிக்கெட் கிழித்துக்கொண்டு முன்னேறி வந்தார். உஸ்மான் பாய் சட்டைப் பையிலிருந்து பழைய தோல் பர்ஸை எடுத்தார். நோட்டுகளுக்கும் நாணயங்களுக்கும் நடுவே அவர் விரல்கள் ஒரு காகிதச் சுருளைத் தொட்டன.

நூறு மடிப்புகள் விழுந்து தேய்ந்திருந்த காகிதம். பழைய டைரியிலிருந்து கிழித்த அந்தப் பக்கம் – பாஷாவின் கையெழுத்தில் அவனே எழுதிக் கொடுத்த அவனுடைய போன் நம்பர்.

வீசிவிடலாம் என்று கையை ஜன்னல் பக்கம் நீட்டினார்.

காற்று வேகமாக அவர் கைகளைத் தள்ளியது. விரல்கள் அந்தச் சீட்டை இன்னும் பலமாகப் பற்றிக்கொண்டன. ஒரு கணம் கண்கள் மூடித் திறந்தன.

மெதுவாக அந்தச் சீட்டை மீண்டும் மடித்து பர்ஸுக்குள் ஆழமாகத் திணித்தார்.

பேருந்தின் ஜன்னல் கண்ணாடியில், வேகமாய் ஓடும் மரங்களுக்கு நடுவே தன் பிம்பத்தைப் பார்த்தார். 

அதில் — 

தன் முகத்தோடே சேர்ந்து இன்னொரு முகம் மிதந்தது.

பாஷா.

வெளியே மதுரை வீதிகள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.

***


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.