அதிர்ஷ்டம் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் 1. காண இயலாதது 2. நல் வாய்ப்பு 3. நல்லூழ் 4 ஆகூழ் என்பன. அதிருஷ்ட போக்கியம் என்றால் மறுமை, வினை, துய்த்தல் என்பன பொருளாம். அதிருஷ்ட யத்தினம் என்றால் பயன் – முயற்சி, பயன் தரு முயற்சி. யத்தினம் எனும் சொல்லையே நாமின்று யத்தனம் என்கிறோம். பிரயத்தனம் எனும் சொல்லும் அறிவோம். அதிருஷ்டானுகூலம் என்றால் ஆகூழ், நற்காலப் பயன், அதிருஷ்டத்தால் கிடைக்கும் அனுகூலம் என்பன பொருள்.
ஆசிரியர்: நாஞ்சில் நாடன்
அல்லல் என் செயும் அருவினை என் செயும்?
ஊடகத்தார் படும் இன்னல்
உரைக்க ஒண்ணாது
அல்லில்லை பகலில்லை அலுப்பொன்றில்லை
பெற்றோர் மனையாள் தம்மக்கள்
தறுகண் நினைப்பில்லை
அவனன்றி ஓரணுவும் அசையாது
என்பது போல் எவ்விடத்தும்
நீக்கமற நிறைந்திருக்கும் பணி
நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி
“கோவப்படாத அம்பலண்ணே! மயினி இருக்காளான்னுதான் பாத்தேன். இந்த நேரம் பாக்க வந்ததுக்கும் காரியம் உண்டு. இப்பம் நான் பேசப்பட்ட விசயம் ஒரு குருவி அறியப்பிடாது, கேட்டயா? நீ மட்டும் மனசோட வச்சுக்கிடணும்…” “அப்பிடி என்னடே அந்தரங்கம்? எங்கயாம் கூட்டத்திலே தற்கொலைப் படை தாக்குதல் நடத்த அச்சாரம் வாங்கீருக்கியா? நீ குண்டு கூட வைக்காண்டாம்… கூட்டத்திலே நிண்ணு குசு விட்டாப் போதும்… பத்துப் பேரு தலை சுத்தி விழுவான்… தேரை இழுத்துத் தெருவுலே விட்டிராதடே கொள்ளையிலே போவான்…”
காசில் கொற்றம்
நமது தேட்டம் காசு என்ற சொல்லில். ‘காசில்லாதவனுக்கு வராகன் பேச்சென்ன?’ என்றோர் பழஞ்சொல் இருப்பது தெரியும். எல்லாத் தமிழ்ச் சொல்லும் வராகன் மதிப்புடையது என்பதும் அறிவோம். ஆனால் இன்றைய தமிழர்களின் சொற் பயன்பாட்டு நிலை ‘காசுக் கூண்டு கரிக் கூண்டாய்ப் போச்சு’ என்றே கூறிவிடலாம். ஆனால் காசு எனும் சொல்லுக்கு சமூகத்தில் இன்றிருக்கும் மதிப்பு என்ன?
வானத்து அமரரே!
உலகின் முதன் மொழி எமது
பல்லாயிரம் ஆண்டு தொன்மையானது!
ஆலகாலம் உண்ட சிவன் அருளினான்
நாமகள் உவந்து நாவில் எழுதினாள்
எமக்கென்ன
பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி
மகிமைத் தேர்தல்!
ஆளும் ஆசை அற்றுப் போகுமோ?
நாட்டுப் பற்று
சினிமா சேவைக்கு எவரெலாம் வாங்கினர்
மாண்பமை பல்கலை மதிப்புறு முனைவர்?
பத்ம கலைமணி போர்த்தப் பெறாத
தாரகை உண்டா நம் தேயத்து?
செருப்பிடைச் சிறுபரல்!
பாதுகம் என்றாலும், பாதுகை என்றாலும் ஐயம் திரிபற செருப்பேதான். தேவர்களும் தேவகுமாரர்களும் அணிந்தால் பாதரட்சை, பாதுகை, பாதுகம்; சாமான்யரான நாமணிந்தால் செருப்பு என்றும் பொருள் கொண்டால் அது மொழியின் குறைபாடு அல்ல. சொற்களை மேநிலையாக்கும் மானுடப் பண்பு. நிலக்கிழார் அணிந்தால் உத்தரீயம், அங்கவஸ்திரம், நேரியல்; சாமான்யன் போட்டிருந்தால் துண்டு, துவர்த்து என்பதைப்போலவே அதுவும்.
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
இப்படித்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இலக்கியங்கள் மூலமாகவும் இன்று சான்றுரைக்கின்றன. காழ்ப்பற்ற, வஞ்சமும் சூதுமற்ற, வெளிப்படையான, தமிழ்ப்புலவன் வழி நெடு வரலாற்றை, மரபை, புராணங்களை விதைத்துச் செல்கிறான். அவனது அனுபவமும், ஞானமும், தெளிவும், படைப்பு ஆற்றலும் புரிதலும் வியப்பேற்படுத்துகின்றன.
சித்திரையில் பிறக்கும் புத்தாண்டின் வரிசையில் அறுபதனுள், நந்தன என்பது இருபத்தி ஆறாவது. நந்தனன் என்றால் குமரன் என்று பொருள் தருகிறது சூடாமணி நிகண்டு.
நேர்பு
என்ன அற்புதமான அறம் சார்ந்த பொருள்கள் தருகிற சொல்லாக இருக்கிறது நேர்மை! செம்மை, உண்மை, நீதி, அறம், நுண்மை, திருத்தம், சமம், இசைவு, நன்னிலை… ஒன்பான் பொருள்களும் மேன்மையானவை. பாவநாசம் சிவன் எழுதிய கல்யாணி ராகப் பாடலில் ஒரு வரி ‘நீயே மீனாட்சி, காமாட்சி, நீலாயதாட்சி’ என்று வளரும். நேர்மை எனும் சொல்லை நினைக்கையில் சங்கரன் நம்பூதிரியின் குரலில் அந்த வரி காதில் நிறைக்கிறது. அச்சொல்மீது நமக்குக் கொதி ஏற்படுகிறது… அதேபோன்றே நேர்மையைத் தேடினாலும் நேர்மையில்லாதவர் என்போர் எவராயினும் அவர் அரக்கரே! அரக்கர் என்போர் கம்பராமாயணம் கூறும் இலங்கைக் குடிமக்கள் மட்டுமல்ல. உலகெங்கும் நிறைந்துள்ளனர். அடையாளம் கண்டாலும் நாம் காணாதவர் போல் நடிக்கிறோம். நேர்மை என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் என்று மாற்றி எழுதி விடலாம்.
எதிர்ப்பை
பேரகராதியிலும் வேறு சிலவற்றினுள்ளும் தேடியபோது என் பார்வையில் ‘எதிரும் புதிரும்’ எனும் சொற்றொடர் தட்டுப்படவில்லை. எதிர் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. புதிர் எனும் சொல்லுக்கும் அதுவேயாம். புதிர் என்றால் புதிது, புதிய கதிர், விடுகதை என்று பொருள் சொல்கிறார்கள். பிதிர் எனும் சொல்லின் திரிபாகவும் புதிர் கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக…
நல்ல காலம், கெட்ட காலம் என்று வீடுகளிலும் தெருக்களிலும் செவிமடுக்கின்ற காலமாக இருந்தது. ‘ஆம் காலத்தே அவையவை ஆகும், போம் காலத்தே பொருள் புகழ் போகும்’ என்ற கண்ணதாசனின் கவிதை வரி அறிமுகமாயிற்று வாலிப வயதில். ஆம்காலம் என்றால் ஆகும் காலம், போம் காலம் எனில் போகும் காலம்.
ஓசை பெற்று உயர் பாற்கடல்
வயதேற ஏற, தெலுங்குக் கீர்த்தனைகள், சமஸ்கிருத, கன்னட, மலையாள இசைப் பாடல்கள், மராத்தி மொழியின் அபங், வங்காளத்தின் இரவீந்திர சங்கீதம், உருது மொழிக் கவாலி, கஸல் போன்றவற்றைக் கேட்டு இன்புற்றாலும் தமிழ்ப் பாடல்களைக் கேட்க நேர்கையில் மனமும் மெய்யும் பரவசம் கொள்கிறது. பெற்ற அம்மையை அம்மை எனச் சொல்லக் கூசுகிறவர்களின்பால் இரக்கமே ஏற்படுகிறது.
திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!
காரைக்கால் அம்மையாரின் காலம் கி.பி. 4-ம் நூற்றாண்டு அல்லது 5-ம் நூற்றாண்டு என்கிறார்கள். திருஞான சம்பந்தருக்கும் மூத்தவர். அம்மையாரின் பதிக அமைப்பும், சொல்லாட்சிச் சிறப்பும் அவரது காலம் தொன்மையானது என்று உரைக்கும். திருவாலங்காட்டுப் பதிகத்தின் பதினோராவது பாடலில் – “காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவாரே!” என்பார். மூத்த திருப்பதிகத்தின் பதினோராவது பாடலில் – “காரைக்கால் பேய் தன் பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே!” என்பார்.
வயாகரா
வயான் எனில் வயவன் எனும் பறவை, அது காரிப்புள் என்றும் அழைக்கப்படும் என்று இயம்புகிறது பிங்கல நிகண்டு. காரிப்புள் என்றால் king crow என்கிறது பேரகராதி. வயானம் எனும் சொல்லுக்கு, வெறுமனே பறவை என்று மாத்திரம் பொருள் சொல்கிறது சூடாமணி நிகண்டு.
பிஞ்ஞகன்
இச்சொற்களை எழுதிவரும்போது எமக்கொன்று தெளிவாகிறது. மக்கள் நாவில் சில சந்தர்ப்பங்களில் ந, ஞ மயக்கம் உண்டு என்று. எவ்வாறாயினும் மக்கள் புழங்கும் ஒலிக்குறிப்புகள்தாமே சொல்லாக உருவெடுக்கிறது! எமக்கு அறிமுகமில்லாத சொற்கள் யாவும் வட்டார வழக்கென்றோ, மக்கள் கொச்சை என்றோ வரையறுக்கவோ, ஒதுக்கி நிறுத்தவோ இயலுமா?
வெங்காயக் கண்ணீர்
இன்று பாரத மணித் திருநாட்டின் பெருந்துன்பம் என்பது மரணம் ஏற்படுத்தும் டெங்கு முதலாய நோய்கள் அல்ல, ஓராண்டில் இரயில்வே லெவல் கிராசிங்குகளில் எண்ணூறு பேர் செத்துப் போனதல்ல. பல லட்சம் கோடிப் பணம் அரசு வங்கிகளில் வாராக்கடனாக இழந்து நிற்பதல்ல. கொலை, கொள்ளை, கள்ளநோட்டு, ஆள் கடத்தல், வன்புணர்வுத் தீனங்கள் அல்ல. காசு வாங்கி வாக்களிப்பதல்ல. சாதி அரசியல் அல்ல. …..அவற்றைவிட எல்லாம் பெரிய இனமானச் சிக்கல் – வெங்காய விலை உயர்வு.
பொன்னின் பெருந்தக்க யாவுள !
பிட்டுக்கு மண் சுமந்த மதுரைச் சொக்கேசன் மீது, அரிமர்த்தன பாண்டியன் வீசிய பொற்பிரம்பும் அறிந்திருக்கலாம். பொற்பிரம்பின் வீச்சையும் வலியையும் அனுபவிக்க எமதாசான் புதுமைப்பித்தனின் ‘ அன்று இரவு’ வாசிக்க வேண்டும். வாசிக்க நேர்ந்தவர் நற்பேற்றாளர். புதுமைப்பித்தனிலும் சாதி தேடிய மார்க்சீய, அம்பேத்காரிய, பெரியாரிய ‘அறிஞர்’ கூட்டம் உண்டு. ‘அரிசிப் புழு தின்னாதவனும் இல்லை, அவுசாரி கையில் உண்ணாதவனும் இல்லை’ என்பது சொல்வடை.
சக்கடா
அக்கடா, துக்கடா, பக்கடா, கச்சடா, சக்கடா என்று டாவில் முடியும் சொற்கள் பற்றிய சிந்தனை. மொழிக்குள் இது போன்ற பல சொற்கள் வந்து புகுந்து, நெடுங்காலம் புழங்கப் பெற்று, இன்று தமிழே போல ஆகி விட்டன.
‘மலயம்.. என்பது பொதிய மாமலை!’
இமயம் எவ்விதம் இமய மலையைக் குறித்த சொல்லோ, அவ்விதமே மலயம் என்பது பொதிய மலையைக் குறித்த சொல்லாகும். பொதிய மலையை, அதாவது மலயத்தை, அதுவும் ஒரு மலை என்பதால் மலையம் என்று குறித்தால் தவறில்லை என்றாலும், மலயம் எனும் சொல் பொதிய மலையை மட்டுமே குறிக்கிறது, அல்லது செழுஞ் சீதச் சந்தனத்தை. மலயம் எனும் சொல்லின் இரண்டாவது பொருள் சாந்து, சாந்தம் அல்லது சந்தனம். மலையில் பிறந்த சந்தனம் என்பதால் மலைச் சந்தனம். ஆனால் மலயம் என்றாலே சந்தனம்.
வார்த்தை என்பது வசவு அல்ல!
என்ன விந்தை என்றால் பிருஷ்டம், புட்டம், buttocks எனும் சொற்களைப் புழங்க நமக்கு எந்த நாணமும் இல்லை. குண்டி என்று சொல்ல அவமானப்படுகிறோம். தமிழ் எழுத்தாளர்களே கூட, குண்டி எனும் சொல்லை சோப்புப் போட்டு, அலசி, காய வைத்து, மடித்து, ஆசனவாய், அடிப்பக்கம், பின் பக்கம் என்று மழுப்புகிறார்கள்.
‘வட திசை எல்லை இமயம் ஆக!’
கண்கொட்டுதல், இமையாடுதல் என்றோம். இமையாடாமல், கண் சிமிட்டாமல், கண் கொட்டாமல், கண்ணிமைக்காமல் பார்த்தான், அல்லது பார்த்தாள் என்கிறோம். இமைப்பொழுது என்றால் கணம் அல்லது குறுகிய கால அளவு. உறங்கிப் போதலை, இமை பொருந்துதல் என்றோம். கண் இதழ்கள் சேர்தலே இமை கொட்டுதல். இமைப்பளவு என்றாலும் கண்ணிமைப் பொழுதே! சீவக சிந்தாமணி, இமைப்பளவைக் குறிக்க, ‘இமைப்பு’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. இமைப்பு எனும் சொல்லுக்கு dazziling, brilliance, விளக்கம் ஆகிய அர்த்தங்களும் உண்டு.
மெய்ப்பொருள் காண்பது அறிவு
புறப்பொருள் வெண்பா மாலை, ஐயனார் இதனார் இயற்றிய எட்டாம் நூற்றாண்டு இலக்கண நூல், ‘கருந்தடங்கண்ணி கைம்மை கூறின்று’ என்கிறது. பத்தாவது பொதுவியல் படலம், தாபத நிலைத் துறை பாடலின் கொணு, கைம்மை பேசுகிறது. கருமையான பெரிய கண்களை மனைவி, கைம்மை நோன்பினை மேற்கொண்டாள் என்பது தகவல். தாபதம் எனும் சொல்லுக்கு, நோன்பிருத்தல் என்பது பொருள்.
உத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்!
சில பேராசிரியர்களிடம் கேட்ட போது, அவர்கள் திருவள்ளுவர் தூக்கம் எனும் சொல்லையும் கையாண்டிருக்கிறாரே என்றனர். அவர்கள் சொன்னது உண்மைதான். ‘வினைத் திட்பம்’ அதிகாரத்துக் குறள் பேசுகிறது,
‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்’
என்று. சரிதானே! பிறகென்ன வழக்கு, வியாச்சியம், உச்ச நீதிமன்றத் தலையீடு என்று நீங்கள் கேட்கலாம்! ஆனால் இங்கு தூங்காது என்ற சொல்லுக்கு தாமதிக்காது, கால நீட்டிப்பு செய்யாது, தொங்கிக் கொண்டு கிடக்காமல் எனும் பொருளே தரப்படுகிறது. மனக் கலக்கம் இல்லாமல், தளர்வடையாமல், கால தாமதம் செய்யாமல், வினையாற்றுவதே செம்மையானது என்று பொருள் தருகிறார்கள். …நாஞ்சில் நாட்டுக்காரனும், மலையாளியும் உறக்கம் என்று இன்றும் பயன்படுத்தும் சொல், பிற தமிழ்த் திருநாட்டுப் பகுதிகளில் தூக்கம் என்று பயன்படுத்தப்படுகிறது.
கம்பலை-பிற்சேர்க்கை
‘கம்பலை’ கட்டுரை சொல்வனம் வெளியிட்ட பிறகு வந்த திரு. தருணாதித்தன் குறிப்புகளை திரு.வ.ஸ்ரீநிவாசன் எனக்கு அறியத் தந்தார். அவற்றின் முக்கியத்துவம் கருதி இந்தப் பிற்சேர்க்கை.
தமிழ் பதித்த நல்வயிரம்
பொன்னால் செய்த பாவைகளையும், வயிரம் முதலிய மணிகள் உள்ளிட்ட பொருள்கள் அத்தனையும் (சேரலாதன், மாந்தை என்னும் தனது தலைநகரின் கண், தனது நல்ல அரண்மனை முற்றத்தில்) எங்கும் நிறையும்படிக் குவித்து, அக்காலத்தில் அவற்றை நிலம் தின்னும் படிக் கைவிட்டுப் போனான். அந்த நிதியம் ஆம்பல் எனும் பேரெண்ணை ஒத்திருந்தது. ஆம்பல் எனும் சொல், ஒரு பெரிய எண்ணைக் குறிப்பது. சங்கம், பதுமம் என்பது போல. அல்லது மிலியன், பிலியன், ட்ரில்லியன் (million, billion, Trillion) என்பது போல.
கம்பலை
‘துன்பமும் சந்த ஒலியும் கம்பலை’ என்கிறது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு. இராஜகோபாலனிடம் சொன்னேன், “எப்பிடிப் பார்த்தாலும் ஆயிரம் வருசமா நம்மள்ட்ட இந்தச் சொல் புழங்குகிறது,” என்று. பிங்கல முனிவரின் தந்தை அல்லது குரு எனக் கருதப்படுகிற திவாகர முனிவரின் திவாகர நிகண்டு, தமிழின் முதல் நிகண்டு. அதுவும் கம்பலை எனும் சொல்லுக்கு மேற்சொன்ன பொருள்தான் தருகிறது.
‘இலக்கியச் சொல்லகராதி’ என்று நம்மிடம் ஒன்றுண்டு. சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை (1855- 1922) தொகுத்தது. 2009 -ம் ஆண்டில் சந்தியா நடராஜனால் மீள்பதிப்பு செய்யப்பட்டது. அந்த அகராதி கம்பலை- துன்பம், ஒலி, நடுக்கம், பயம் என்கிறது.
வன்னி
எக்காரணம் பற்றியும் இஃதோர் ஆன்மீகப் பயணக்கட்டுரை அல்ல. நாம் இங்கு தீ பற்றிப் பேசப்போகிறோம். ஐம்பெரும் பூதங்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது தீ. ஆகவே தான் முக்கண்ணனின் மூன்றாவது கண்ணில் தீ என்றார் போலும். கிரேக்க இதிகாசங்களில் எவ்வினைக்கும் ஒரு கடவுள் உண்டு. எடுத்துக்காட்டுக்கு Morpheus. தமிழில் மார்ஃபியஸ் என்று எழுதுவோமா? இருபுறமும் இறகுடைய கடவுள். கனவுகளின் கடவுள். அப்பெயரில் ஒரு Blended Premium Brandy இருக்கிறதே என்று கேட்கலாம். அதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.
…
‘தீபரவட்டும் என்றொரு நூலுண்டு தமிழில். அறிஞர், பேறரிஞர், கவிஞர், பெருங்கவிஞர் எனும் பட்டங்கள் கோமாளிகள் அணியும் சட்டை போல் ஆகிவிட்டது. பெரியவர் என்றாலே அது பெரிய சொல். அதன் மேல் பல்லடுக்குகளாக மகா என்ற பட்டம் ஏற்றி கனம் கூட்டுகிறார்கள். அது போன்றே அமிர்தம் மகா-அமிர்தம் ஆகிறது. பிரசாதம் மகாபிரசாதம் ஆகிறது. தகுதியினால் கனம் சேர்ப்பதை துறந்துவிட்டு, சொற்களால் கனம் ஏற்றுகிறார்கள். தீயை மகாத்தீ என்று எதற்காக சொல்ல வேண்டும்?
தீப்பந்தம், தீச்சட்டி, தீநாக்கு, தீக்கொழுந்து, தீமிதி, தீக்கனல், தீப்பிழம்பு, தீக்கொள்ளி, தீவட்டி, தீக்காயம் என்று எத்தனை எத்தனை சொற்கள்? தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றார் பாரதி. சற்று விரல்விட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
தசம்
பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காரர் கூடலூர்க்கிழார் இயற்றியது. பத்து அதிகாரங்கள். ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறள் தாழிசைச் செய்யுள்கள். அதிகாரத் தலைப்புகள் சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல் கூர்ந்த பத்து, தண்டப் பத்து என்பன.
எளிய பத்தில் ஒரு பாடல்- ‘உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது!’
மிக்க உணவை விரும்புகிறவருக்கு மிகுந்த நோய் எளிதில் உண்டாகும் என்பதாம் பொருள். கொங்கு நாட்டில் ஒரு கல்யாண விருந்தில் உட்கார்ந்தால் நிறையப் பேர் நோயாளிகள் என்பது தெரியும். நல்கூர்ந்த அதிகாரப் பத்தில் ஒரு பாடல், ‘சொல் செல்லா வழிச் சொலவு நல்கூர்ந்தற்று’ என்கிறது.
தன் சொல் மதிக்கப்படாத இடத்தில் ஒன்றைச் சொல்லுதல் வறுமையுறும் என்பது பொருள். இந்தப் பாடலில் ‘சொலவு’ என்றொரு பழைய ஆனால் இன்று நமக்கு நூதனமாகத் தெரியும் புதிய சொல்லை அறிமுகம் ஆகிறோம். சொலவு என்றால் சொல்லுதல் என்று அறிந்து கொள்கிறோம். சொலவு எனும் சொல்லின் உடன் பிறப்புகளே சொலவம், சொலவடை என்று உணர முடியும்.
நவம்
செலாவணி ஆகிப் போன பண்டைத் தமிழ்ச் சொல் மவ்வல். இன்றைய தமிழ் சினிமாப் பாட்டில் செல்லுபடி ஆகிறது. அங்காடி தமிழ் சினிமாப் பெயராகிறது. பனுவல் புத்தகக் கடையின் பெயராகிறது. பழம் சொற்கள் பலவற்றையும் பரணில் போட்டு விட்டோம் என்பதனால் அவை உயிரற்றவை ஆகிவிடாது என்றும். நாவல் எனும் சொல்லுக்கு நவ்வல் என்பது மாற்றுச் சொல். நவ்வார் எனும் சொல்லுக்குப் பகைவர் என்று பொருள் உண்டு. பெண்மானைக் குறிக்க நவ்வி என்று சொன்னோம். நவ்வி என்றால் மரக்கலம் என்றும் பொருள். நாவாய் என்றாலும் மரக்கலம். நய்யா என்றால் இந்தியில் மரக்கலம். Navy எனும் சொல்லையும் நீங்கள் பரிசீலிக்கலாம். நவ்வு என்றால் முழுதாக நம்புதல் என்றும் பொருள். இந்தப் பின்புலத்தில் இந்தக் கட்டுரைக்கு நவம் என்று தலைப்பு வைத்தேன். உண்மையில் எண்கள் சார்ந்து இஃதென் ஒன்பதாவது கட்டுரை. நவம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் புதுமை. புதுமையை novel என்பர் ஆங்கிலத்தில். நாவல் என்பதோர் இலக்கிய வடிவம் என்பதும் அறிவோம். அதனால்தான் …
சொல்லாழி
வில்லாளிக்கு அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம் இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன். தச்சனோ, கொல்லனோ, குயவனோ, நாவிதனோ, உழவனோ எவராயினும் அது பொருந்தும். அரைகுறையாகக் கருவிகளைச் சுமந்து செல்கிறவன், துல்லியமற்ற, பொருத்தமற்ற கருவிகளைச் சுமந்து செல்கிறவன், திறம்படத் தொழில் “சொல்லாழி”
ஒருமை
ஒருமைப்பாடு என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். சொல் ஒருமைப்பாடாகவும், செயல் தனிமைப்பாடாகவும் இருக்கிறது. ஒருமை என்றாலே போதும். union, unity எனும் பொருள் வந்துவிடும். வார்த்தைதான் வார்த்தைப் பாடு. கடமைதான் கடப்பாடு, பண்புதான் பண்பாடு, மேன்மைதான் மேம்மாடு. ஒருமைதான் ஒருமைப்பாடு. தேசீய ஒருமைப்பாட்டைக் கட்டிச் செறிவாக்க என்றே, நடுவண் அரசு சில நவீன கல்விக் கொள்கைகளை, மாநிலத்துக்கு ஒரு கொள்கை என மறு சீரமிப்புச் செய்து, தேசத்தைப் பன்மைப்பாடு செய்யும் சிதைப்பாட்டுக்கு முயன்று வருகிறது. விதி வலியது. பிடர் பிடித்து உந்த நின்றது.
இருமை
அட்டம், சப்தம், அறுமுகம், பஞ்சம், சதுரம், மும்மை எனும் எண்கள் பற்றிய கட்டுரைத் தொடரின் ஏழாவது கட்டுரை இதுவென்பதால், இருமை என்ற சொல்லை இரண்டு என்ற பொருளில் இங்கு ஆள்கிறேனேயன்றி, அருமைக்கு எதிர்ப்பதமாகவோ, இருண்மை எனும் பொருளிலோ நான் ஆளவில்லை. இருமை எனும் சொல்லுக்கு பெருமை, கருமை என்றும் பொருள் இருப்பது உண்மைதான். சீவக சிந்தாமணி, பதுமையார் இலம்பகப் பாடல் ஒன்றில் ‘இரு மலர்க் குவளை உன் கண்’ என்கிறது. இங்கு இரு எனில் கருமை. கருமை நிறமுடைய குவளை மலரின் நிறத்தை உண்ட கண் என்பது பொருள். இன்னொரு பொருள், குவளை மலரின் நிறத்தை உண்ட இரு கண்கள் என்பது.
மும்மை
கம்பனின் சொல்லாட்சியில் இருந்து ‘மும்மை’ எனும் சொல்லை இந்தக் கட்டுரையின் தலைப்பாக எடுத்துக் கொள்கிறேன். மும்மை எனில் காலை, பகல், மாலை என்றும் பொருள் கொள்ளலாம். கம்பன் திரு அவதாரப் படலத்தில் ‘முழங்கு அழல் மும்மையும் முடுகி’ என்கிறான். ‘மும்மையும் முழங்கு அழல் முடுகி’ என்று வாசிக்கலாம். ஓசையுடன் ஒலித்து எழுகின்ற, முழங்குகின்ற வேள்வித் தீ மூன்று காலங்களிலும் விரைந்து எழுந்ததாம்….
‘மும்மை சால் உலகு’ என்பதற்கு, இப்பிறவி, முற்பிறவி, எதிர்வரும் பிறவி என்று மூன்று பிறவிகளுக்கும் இடமான உலகு என்றும் பொருள் கொள்ளலாம்.
சதுரம்
சில ஆண்டுகளுக்கு முன்பு, எண்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களைப் பற்றி, அட்டம், சப்தம், அறுமுகம், பஞ்சம் என நான்கு கட்டுரைகள் எழுதினேன். ‘தமிழினி’ மாத இதழ் அவற்றை வெளியிட்டது. விஜயா பதிப்பக வெளியீடான ‘சிதம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பில் அவற்றைக் காணலாம். அந்தக் கட்டுரைகளின் தொடர்ச்சிதான் ‘சதுரம்’ எனும் இந்தக் கட்டுரையும்.
இந்தக் கட்டுரைகள் சொல் தேடல், தகவல் தேடல் அன்றி வேறல்ல. கோட்பாட்டுச் சிக்கல்கள், சம்பவ முரண்கள் என்று எதுவுமே இங்கு காணக் கிடைக்காது. இவற்றுள் எதுவும் ஆய்வுகளோ, கண்டு பிடிப்புகளோ அல்ல. பெரும்பாலும் பேரகராதி, நிகண்டுகள் என்பனவற்றுக்குக் கடமைப்பட்டுள்ளேன்.
நாஞ்சில் நாடன் கவிதைகள்
கல்லூரி போய் வர
பொடி நடையும் நகரப் பேருந்தும் –
வழித்தடம் 33
பதினெட்டு ஆண்டுகள்
பம்பாயில் மின் தொடர் வண்டி
சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே !
போர் அறியாக் கோழை கைக்கருவி போல,
குக்கல் உருட்டும் நெற்றுத் தேங்காய் போல,
பாழாய்க் கிடக்குடா !
வல் விருந்து
கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார் என்றும் உரை எழுத முடியாது. மற்ற நாட்களில் உருக்குத் தேங்காய் நெய். உண்மையில் எள்+நெய் தானே எண்ணெய்? எனவே வாரந்தோறும், சனிக்கிழமையில், எள் நெய் தேய்த்துக் குளியல். தவசிப் பிள்ளை, வாராது வந்த கனகமாமணி என்று கும்பமுனியைப் போற்றுவது காரணமாக இருக்கலாம். தாங்க ஆளுண்டு என்றால் தளர்ச்சியும் உண்டுதானே!
ஔவியம் பேசேல்
எடுத்துக்காட்டுக்கு பங்கஜம் பங்கயம் ஆவதும், ஸர்ப்பம் சர்ப்பமாவதும். இலக்கணத்துக்கு அடங்கி, தமிழுக்குள் வேற்றுமொழிச் சொற்கள் பிரிவேசிப்பதன் தன்மை இதுதான். நான் சொல்ல வருவது, பல அரபுச் சொற்களும் வட சொற்களும் தமிழ்ச் சொல்லாக உருமாற்றம் பெறுவதற்கு ஔ எனும் இவ்வெழுத்து உதவி இருக்கிறது. அது மொழிக்குப் பெரிய தொண்டு என்று கருதலாம். ஆனால், ‘அப்ப அந்த மூதி மொழிக்குள்ளே என்னத்துக்கு? தூக்கிக் குப்பையிலே கடாசு’ என்றும் தனித்தமிழ்வாதி எவரும் உரைக்கக் கூடும்.
அஃகம் சுருக்கேல்
அஃகம் என்று அழைக்கப்படும் ஃ ஆய்த எழுத்து எனப்படும். முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ஆயுத எழுத்து என்பது சரியல்ல, ஆய்த எழுத்து என்பதே நேர். அறியாமைக் காரணமாக நானே ஆயுத எழுத்து என்று பயன்படுத்தியதை எண்ணி, இன்று வெட்கப்படுகிறேன்.
பள்ளி நாட்களில் இந்த எழுத்தை நாங்கள் அடுப்பாங்கட்டி எழுத்து என்போம், அதன் வடிவம் கருதி.
சிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 2
சீர்காழி கோவிந்தராஜன் குரலில், அறுபது ஆண்டுகளாக நான் கேட்டுவரும் எடுப்பான பாடல் ஒன்று. அது இந்த நூலின் பாடல் என்று இந்தக் கணம் வரை எனக்குத் தெரியாது. மார்கழி மாதத்தின் அதிகாலைக் குளிரில், ஆண்டாள் திருப்பாவையின் ஐந்தாம் பாடலான ‘மாயனை, மன்னு வடமதுரை மைந்தனைத், தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை. ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத், தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைப்’ பரவும் நாளில் இந்தப் பாடலை எழுதும்போது, அதன் ஓசை நயம் எனக்கு சிலிர்ப்பு ஏற்படுத்துகிறது.
சிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 1
‘பனுவல் போற்றுதும்’ தொடரில் பழந்தமிழ் இலக்கிய வகைகளை பற்றி அறிமுகம் செய்யும் நாஞ்சில் நாடன், இம்முறை சிற்றிலக்கிய வகையான ‘மாலை’ வகை இலக்கியங்களை பற்றி பேசுகிறார் : “சிற்றிலக்கிய வகையினதாகப் பேசப்படும் 96 பிரபந்தங்களுக்குள் மாலை என்று முடியும் நூல்கள் 28 வகைகள் ஆகும். அங்க மாலை, அநுராக மாலை, இரட்டைமணி மாலை, இணைமணி மாலை, நவமணி மாலை, நான்மணி மாலை, நாம மாலை, பலசந்த மாலை, கலம்பக மாலை, மணி மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, வருத்த மாலை, மெய்கீர்த்தி மாலை, காப்பு மாலை, வேனில் மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவ மாலை, தானை மாலை, மும்மணி மாலை, தண்டக மாலை, வீர வெட்சி மாலை, காஞ்சி மாலை, நொச்சி மாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகை மாலை என்பன அவை”.
பனுவல் போற்றுதும் – குறம்
திருவைகுண்டத்தில் வேளாளர் மரபில் சைவ சமயக் குடும்பத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் குமரகுருபரர். பிறந்து ஐந்து வயது வரை வாய்பேசாது வளர்ந்தார். பெற்றோர் அவரையும் கூட்டிக் கொண்டு போய், திருச்செந்தூர் முருகன் மீது கசிந்துருகி வேண்டியபோது குழந்தை ‘அம்மா’ என்றழைத்து ‘கந்தர் கலிவெண்பா’ எனும் நூலைப் பாடினார் என்பர். மதுரையைத் திருமலை நாயக்கர் ஆண்ட காலத்து, அவர் முன்னிலையில், அங்கயற்கண்ணி சந்நிதியில் ‘மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்’ பாடினார்.
மும்மணிக்கோவை – இறுதிப் பகுதி
இருபத்தியோரு வயது இளைஞனின் வாக்குமூலம் இது. எனதாச்சரியம், ஒரு வாக்கியத்தில் அவர் கையாளும் கால்புள்ளிகள், அரைப்புள்ளிகள். இன்று அரைப்புள்ளி பயன்படுத்தி எவரும் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. இலட்சத்துக்கும் பக்கம் ஊதியம் வாங்கும் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் எவரும் இன்று தொல்காப்பியத்தின் எழுத்து-சொல்-பொருள் அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து பத்து சூத்திரங்கள் மனப்பாடமாகச் சொல்வாரா?
பனுவல் போற்றுதும் – மும்மணிக்கோவை
நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி கொப்பளிக்கும் இவ்வகை இலக்கண வரையறைகளுக்குள் இயங்க. நாம் எம்பாடு? நமக்கு விதித்தது சந்தம் இல்லாத, இலக்கணம் இல்லாத , எதுகை மோனை இல்லாத, இசைக் கணக்குகள் இல்லாத, தொடைகள் இல்லாத, சீர்தளை இல்லாத, எழுத்து எண்ணி பாப்புனையும் இறுக்கம் இல்லாத புதுக்கவிதை. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால், தம்பி சண்டப் பிரசண்டன்.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி
திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது.
[…]
‘பனுவல் போற்றுதும்’ தலைப்பில் வேறு வகையான கட்டுரைகளை நான் தொடர்ந்து எழுதுவேன். படைப்பு இலக்கியமும் கை பற்றி இழுக்கின்றது. உங்கள் ஆதரவுடன் எல்லாம் சாத்தியமாகும். தமிழ் எமக்கு வாழ்நாளும் உடல்நலமும் வசதியும் தரும்!
– நாஞ்சில் நாடன்
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி – 16
ஏதோ ஒரு உந்துதலில் ‘செந்தமிழ் காப்பியங்கள்’ என்றொரு கட்டுரை எழுதி, சிறு காப்பியங்களை விட்டு வைப்பானேன் என்று, ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ எழுதி, அதுபோல் சிற்றிலக்கியங்கள் பற்றியும் எழுதத் துணிய, அது நாஞ்சில் பிடித்த புலிவால் ஆயிற்று. வாலை விட்டு விட்டால், புலி அடித்துத் தின்றுவிடும் என்பதால், வாலை விடாமல், அது இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஓடிக் கொண்டிருந்தேன். அல்லது ஆங்கிலத்தில் சொல்வது போல, bear hug. அதற்காக ஆயுளுக்கும் வாலைப் பிடித்துக் கறங்கிக் கொண்டிருக்க முடியுமா?
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15
வாழை இலை, புன்னை இலை, புரசு இலை, குருக்கத்தி இலை, மாவிலை, பலா இலை, தென்னை இலை, பன்னீர் இலை ஆகியவற்றில் உணவு உண்ணலாம் என்கிறார் புலவர். புன்னை மரம் சூழ்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் நான். அதில் எங்கள் பக்கம் எவரும் உண்டதில்லை இன்றுவரை. மாவிலை, பலா இலை தொன்னை பிடித்துக் கஞ்சி குடித்ததுண்டு. குருக்கத்தி மரம் என்னால் இனங்காண முடியவில்லை. கேட்டதோடு சரி.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 14
இறைவனைத் துதிக்க, நாட்டு வரலாற்றினை வளமையை எடுத்துரைக்க, நீதி அறிவிக்க சதக இலக்கியம் பயன்பட்டுள்ளது. தமிழில் சிருங்கார சதகங்கள் எழுதப்பட்டுள்ளனவா, கிடைத்துள்ளனவா என்பதெல்லாம் நானறியேன். குருநாத சதகம் , கோகுல சதகம், கோவிந்த சதகம் போன்றவற்றுள் 102 பாடல்களும் தண்டலையாச் சதகம் 104 பாடல்களையும் கொண்டுள்ளன என்கிறார்கள்.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 13
தமிழில் சதகம் எனும் இலக்கிய வகை எழுவதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னரே, வடமொழியில் சதகம் எனும் இலக்கிய வகை தோன்றி இருந்தது. ‘வடமொழியில் உள்ள சதகங்கள் தர்மம், காமம், மோட்சம் ஆகிய பொருட்களை விலக்கி, நூறு சுலோகங்களால் தனித்தனியே அமைக்கப்பட்டவை. தர்மத்தைக் கோரும் சதகங்கள் நீதி சதகங்கள் என்றும் காமத்தைக் கூறும் சதகங்கள் சிருங்கார சதகங்கள் என்றும் மோட்சத்தைக் கூறும் சதகங்கள் வைராக்கிய சதகங்கள் என்றும் பெயர் பெற்று விளங்குகின்றன. பெருங்கவிஞன் பர்த்ருஹரி எழுதிய நீதி சதகமும் சிருங்கார சதகமும் வைராக்கிய சதகமும் கி.பி. ஆறாம் நூற்றாண்டாகும்.