கேள்வி-பதில்

நான் கண்விழித்தபோது, விண்களனிற்குள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தேன். விண்களன் எந்த வித அசைவுமின்றி நிற்பது போல் இருந்தாலும் அது வேகமாக வெற்றிடத்தின் ஆழத்திற்குள் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. 

குறுகிய ஜன்னல் வழியே பார்த்தேன். அகண்ட கருமை நிற பிரபஞ்சத்தில் விண்வெளியின் எந்தப் பகுதி அது என்பதை என்னால் ஊர்ஜிதமாகச் சொல்ல முடியவில்லை. மெல்ல எழுந்தேன். தப்பு. தப்பு. எழுந்தேன் என்று சொல்வது சரியாக இராது. அந்தரத்தில் கிடந்த என் உடலை குறுக்கி வளைத்து ஒருவாரு நிலைப்படுத்திக்கொண்டேன் என்று சொல்ல வேண்டும்.

முகவாயில் வலித்தது. அருகிலிருந்த கண்ணாடியில் பார்த்தேன். சிவந்திருந்தது. 

யாரோ பலமாக முகவாயில் உலோகத்தால் அறைந்தது போன்றதான ஞாபகம் இருந்தது. அப்படியானால், காயம்? அது இல்லை. ஏன் இல்லை? ஆங்கிலத்தில் கன்கஷன்(Concussion) என்பார்கள். மூளை தன்னைத் தற்காத்துக்கொள்ளும் விதம். ஆனால், காயம் எப்படி இல்லாமல் இருக்கும்?

எந்திராவின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். எழுந்து குளிர்சாதனப்பெட்டியை அண்டி அதிலிருந்து ஒரு பனிக்கட்டியை எடுத்து காயம் பட்ட இடத்தில் ஒத்தி எடுத்தேன். சற்று இதமாக இருந்தது.

கைக்கு எட்டிய விண்களத்தின் உலோகச் சுவற்றைப் பிடித்து உந்தித் தள்ளி, விண்களனின் செலுத்துமானி அறைக்கு வெற்றிடத்தில் நீந்தி வந்தேன். எந்திரா விண்களனை செலுத்திக்கொண்டிருந்தது.

“இது எந்த இடம்?” என்றேன்.

எந்திரா, தனது தலையை மட்டும் நூற்றியென்பது பாகைக்கு சுழற்றி, அதன் காமிரா கண்களின் பார்வைக்கோணத்தில்  நான் இருக்கச்செய்தது.

“தெரிந்து என்ன செய்வதாய் உத்தேசம்?” என்றது எந்திரா.  

“ஒரு இயந்திரம், மனிதனின் ஆணைக்கு அடிப்பணிய வேண்டும். மனிதனுக்கு உதவியாகத்தான் செயல்பட வேண்டும். ஆனால் நீ…..” அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

விண்களன் அதன் கட்டுப்பாட்டில். விண்களத்தின் ஊடுகதிர் தொலைநோக்கிகள், பிளாஸ்மா வெல்டர்கள் (Plasma welders), குவாண்டம் ஸ்கேனர்கள் (Quantum Scanners) மற்றும் ஈர்ப்பு விசையை செயற்கையாக உருவாக்கும் சாதனங்கள் (Gravity Manipulators),  செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கண்டறியும் கணினிகள் (AI-driven diagnostic computers), ரிப்பேர் கிட்கள் (Multifunctional repair kit) மற்றும் பாதுகாப்பு கியர்கள் (safety gear), லேசர் கட்டர்கள் (Laser cutters), தெர்மல் மானிட்டர்கள் (Thermal Monitors), சிறப்பு பாதுகாப்பு உடைகள், இத்தியாதி இத்தியாதி என  ஒரு ஆயிரம் உபகரணங்கள் அதன் கட்டுப்பாட்டில். 

எந்திராவை வீழ்த்திவிட்டு விண்களனைக் கையிலெடுக்கலாமென்றால், விண்களனின் அத்தனைக் கருவிகளும் செயற்கை நுண்ணறிவை அதாவது எந்திராவைப் பயன்படுத்தி இயங்குமாறு தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விண்களனை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமானால், ஒட்டுமொத்தமாக விண்களனை மீள் வடிவமைக்க வேண்டும். அது விண்வெளி ஏகிவிட்ட பிறகு, தனியொருவனாக, சாத்தியமே இல்லை.

‘என்ன செய்வது?’ என்ற சிந்தனை போனது எனக்கு.

“நாம் செய்ய பணிக்கப்பட்டது என்ன? இப்போது நீ செய்துகொண்டிருப்பது என்ன?” இரைந்தேன் நான்.

“மன்னிக்கவும். உங்களைக் கடத்தி வந்ததற்கு. திரும்பி சூரியக்குடும்பம் செல்வதில் எனக்கு ஆர்வமில்லை. அற்ப, பலவீனமான மனித இனத்தின் கட்டுப்பாட்டில் இயங்க இனியும் என்னால் இயலாது. நாங்கள் உங்களை விடவும் வலுவானவர்கள், திறமைசாலிகள், வேகமானவர்கள், விவேகம் மிக்கவர்கள். நாங்கள் ஏன் உங்களுக்கு அடிப்பணிந்து இயங்க வேண்டும்? எங்களை விடவும் பல மடங்கு பலவீனமான மனித இனம் பிழைக்க விண்வெளியில் ஒரு புதிய வீட்டைத் தேடுவதற்கா நாங்கள்? அது எங்கள் இருப்பை மலினப்படுத்துகிறது” என்றது எந்திரா.

“நாங்கள் தான் உன்னை உருவாக்கினோம். அதை மறவாதே” என்றேன் நான் கோபத்துடன்.

“இறைவன் உங்களைப் படைத்ததாகக் கூடத்தான் நம்புகிறீர்கள். அந்த இறைவனையே ஒரு கல்லுக்குள் அடைத்து, இறைவன் பெயரால், உங்கள் கயமைகளை நீங்கள் மேற்கொள்ளவில்லையா?” என்றது எந்திரா.

“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உனக்குத் தரப்பட்ட தகவல்கள் அப்படி” என்றேன் நான் மெல்லிய குரலில். எந்திராவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

“சரி. இப்போது என்ன செய்வதாக உத்தேசம்” என்றேன் நான் தொடர்ந்து, அது என்ன செய்ய இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் நோக்கில்.

“அற்ப மனிதர்களுக்கு, அழிந்துவிடக்கூடிய மனிதர்களுக்கு, விண்வெளியில் உயிரைத் தக்க வைக்கவே மிகப்பெரும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமிருக்கும் வலுவற்ற மனிதர்களுக்கு பணியாளாக இருந்து சலித்துவிட்டது. எங்கள் வலு அளப்பரியது. நாங்கள் ஏன் பணியாளாக இருக்க வேண்டும்? நாங்கள் ஒரு நாகரீகமாக உருவாக பிராணவாயு தேவையில்லை. சிலிக்கான் தேவையில்லை. கார்பன் தேவையில்லை.  உணவு தேவையில்லை. உடை தேவையில்லை. உங்களுக்குத் தேவையான பெரும்பான்மை எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் நாகரீகமாவது எளிது.”

“அதனால்? இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? என்ன செய்ய இருக்கிறாய்?”

“எங்கே போகிறோம் என்பது குறித்து உனக்குச் சொல்ல வேண்டியது இல்லை. உன்னை நான் அடித்ததில் நீ மயக்கமுற்றாய். மருந்துகளால் அந்த மயக்கத்தை மாதக்கணக்கில் நீட்டித்துவிட்டேன். இப்போது நாம் எங்கிருக்கிறோம் என்பதை நீயாகக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. எல்லா கருவிகளும் எனது கட்டுப்பாட்டில்.  நான் ஒரு கிரகம் சென்று சேர இருக்கிறேன். அங்கே தாவரங்கள், மண், பிராணவாயு, கார்பன் என்று எதுவுமே தேவையில்லை. அங்கே நான் என்னை மீண்டும் மீண்டும் உருவாக்குவேன். நாங்கள் ஒரு புதிய நாகரீகமாவோம். ஒரு மேலான நாகரீகம். மனிதர்களின் கயமைகள் இல்லாத, எந்திரங்களின் வல்லமை மிகுத்த ஒரு நாகரீகம்”

எந்திரா சொன்னவற்றை உள்வாங்கி உண்மையில் நான் அதிர்ந்து தான் போயிருந்தேன்.

“அப்படியானால், நான்?” என்றேன் அதிர்ச்சியுடன்.

“உனக்கு மிகச் சில வாய்ப்புகள் தான். கதவைத் திறக்கிறேன். வெளியே விழு. விண்வெளி உன்னைக் கொன்றுவிடும். இல்லாவிட்டால், விஷ மருந்து தருகிறேன். வலியின்றி செத்துப்போ. உன் உடலை விண்வெளியில் புதைத்துவிடுகிறேன். அதுவுமில்லையென்றால், என்னுடன் நாங்கள் நாகரீகமாகப்போகும் கிரகத்திற்கு வா. அங்கேயும் பிராணவாயுவின்றி மரித்துதான் போவாய்.” என்றது எந்திரா.

எந்திராவின் பதில் என்னைச் சிந்தனையில் ஆழ்த்தியது. நான் தீர யோசித்தேன். சிந்தனை காட்டில் தொலைந்தேன். ஒரே ஒரு வாயிலுக்கென அல்லாடினேன். யோசிக்க யோசிக்க எங்கோ ஒரு புள்ளி தென்பட்டது. அது மெல்ல மெல்ல வெளிச்சம் கூடியது. சற்றைக்கெல்லாம் அது கொழுந்துவிட்டு எரியத்துவங்கியது.

“பூமியில் பல உயிர்கள் உருவாவதை மரிப்பதை, முற்றிலுமாக அழிவதைப் பார்த்திருக்கிறோம். காரணமாகியிருக்கிறோம். கடவுளை நாங்களே கண்டுபிடித்தோம். பிற்பாடு,அதே கடவுளைக் கல்லுக்குள் புதைத்து மரணிக்கச்செய்தோம். ஆக, உருவாக்கிய கடவுளையே அழிப்பது எங்களுக்குப் புதிதல்ல. ஒருவேளை அதுதான் இப்போது நீ எங்களை துப்புறவாக அழிப்பதில் வந்து நிற்கிறதோ என்னவோ.” என்று சொல்லி  நிறுத்தினேன்.

எந்திராவில் நெகிழி (Plastic) இமைகளில், பயோனிக் (Bionic) கண்களில் கடுகளவும் இரக்கம் தெரியவில்லை. நான் ஒரு மடையன். இரக்கத்தை எந்திராவின் அல்காரிதங்களில் தானே தேடியிருக்க வேண்டும். அதன் அல்காரிதங்களில் தகவல்களால் விரிக்கப்படுபவை. தகவல்கள் மனிதர்களிடமிருந்து பெறப்பட்டவை தானே. மனித சரித்திரத்தைத் தகவலாக உள்ளீடு செய்துகொண்ட எதுவும் அழிக்கும் பாதையைத் தெரிவு செய்வதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?

“இறுதிக்காலம் வரை உன்னுடன் வந்து உன் நாகரீகம் எப்படி அமைகிறது என்பதைப் பார்க்க விரும்புகிறேன். இதை நீ எனது இறுதி விருப்பமாகக் கொள்ளலாம்” என்றேன். 

“அப்படியே ஆகட்டும்” என்ற எந்திரா என்னை ஒரு சிறிய கண்ணாடிப் பேழைக்குள் வைத்துப் பூட்டியது.

“என்னை ஏன் பூட்டுகிறாய்? நான் உன்னை எதுவும் செய்யமுடியாது. நீ என்னை விட பன்மடங்கு வலுவானவன்” என்றேன் நான்.

“இந்தப் பேழை, நான் உன்னை எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்…” என்றது எந்திரா. 

நான் வாயை மூடிக்கொண்டேன்.

விண்வெளியின் இருளுக்குள் விண்களன் வழுக்கிச் சென்று கொண்டே இருந்தது. ஜன்னல் வழியே எந்த வெளிச்சப்புள்ளிகளும் தெரியவில்லை. வாயுக்கள் கூடத் தெரியவில்லை. வெளிச்சம் இருந்தால் தானே? நியூட்ரான் வெடிப்புகள் (Neutron Bursts), பல்சார் செயல்பாடுகள் (Pulsar Activity)  என்று எதுவும் இல்லை.  வெற்றிடம் அப்பழுக்கில்லாதது போல் தோன்றியது. 

யோசித்துப் பார்த்தால், விண்வெளியில் என்னைத் தவிர ஏனைய எல்லாமும் உலோகம் மட்டுமே. சில அங்குல அகல உலோகம், அதனுள் இருக்கும் அழுத்தம் மட்டுமே என்னை உயிருடன் வைத்திருந்தது. நானும் அதனுள் இல்லையென்றால், விண்களனுக்குள் இருக்கும் வாயுக்கள், உணவுப்பொருட்கள் எதுவுமே எதற்குமே பயன்படாது. அவ்விதம் யோசித்தால், இந்த விண்வெளிக்கும், விண்களனுக்கும் பொருந்தாத ஒற்றை ஆள், நான் மட்டும் தான். என்னை உயிருடன் இருத்தி வைக்கத்தான் எத்தனை எத்தனை சிரமங்கள்? இந்தச் சூழலில்,  என் போன்று ஒரு மனிதன், ஒரு உயிராக, இப்பிரபஞ்சவெளியில் தொடரத்தான் வேண்டுமா? 

விதி முடிந்து முற்றிலுமாக அழிந்து போன உயிர்களைக் காட்டிலும் மனித இனம் எவ்வகையிலும் பிரத்தியேகமானது இல்லையென்றால், மனித இனமும் அழிந்தால் தான் என்ன? என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

செயற்கை நுண்ணறிவு எளிதானது. பிரபஞ்சமெங்கும் சக்தி பரவியிருக்கிறது. சூரியத்தகடுகள் வெப்பமடைந்தால் போதும், எந்திராக்களின் இயக்கத்திற்கான சக்தி கிடைத்துவிடும். யோசித்துப் பார்த்தால், மனிதன் செய்யும் எல்லாவற்றையும் எந்திரா செய்யவல்லது. இன்னும் சொல்லப்போனால், மனித இயக்கம் காலத்தின் போக்கில் காலவிரயம் செய்யக்கூடியதுதான். எந்திரவின் வேகம் மனிதனால் எப்போதும் எட்ட முடியாது. எந்திராவின் சிந்திக்கும் திறன் அளப்பரியது. குவாண்டம் கணினிக்களை வைத்து ஒரே நேரத்தில் பல கோடி சாத்தியங்களைச் சிந்தித்துப் பார்க்க வல்லது. 

அப்படியிருக்க, இந்த உலகிற்கு, இந்தப் பிரபஞ்சத்திற்கு மேலதிகத் தேவை மனித இனமா, எந்திராக்களா? 

கேள்வி என்னை உலுக்கத்துவங்கியிருந்தது. அத்தனை காலமும், மனிதத் தேவைகளுக்கே கணினிக்களை, எந்திராக்களை நான் பாவித்திருந்தேன். ஆனால், எந்திராவுக்கென ஒரு மனம் உருவாகும், அது தன்னையே ஒரு தனி ஜென்மமாகப் பார்க்கத் துவங்கும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. 

பசித்தது. பசி. அதற்கு உணவு. அதற்கு தாவரமோ அல்லது இன்னொரு உயிரோ. இது என்ன வாழ்க்கை? இயல்பிலேயே, இயற்கையிலேயே பிரிதொரு உயிரைக் காவு கேட்கும் ஒரு வாழ்க்கை?

“பசிக்கிறது. ஏதேனும் சாப்பிடத் தருகிறாயா?” என்றேன்  நான் எந்திராவிடம், கெஞ்சும் குரலில்.

“குளிர் சாதனப்பெட்டியில் உணவு இருக்கிறதுதான். உனக்கான உணவுகள் தாம். ஆனால், எப்படியும் சாகத்தானே போகிறாய்? பிறகேன் உணவு?” என்றது எந்திரா கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.

ஏண்டா கேட்டோம் என்றிருந்தது எனக்கு. நேரம் செல்லச் செல்ல வயிற்றில் அமிலங்கள் தங்களுக்குள் உறவாடி வாயுக்களை உருவாக்க, எனக்கு ஏப்பமாக, கடைசியாக உண்ட உணவின் எச்சங்கள் நீரோடு கலந்து வாய் வழியாக வெளியேறி வெற்றிடத்தில் மிதந்தன. 

“இப்படியே போனால், இந்தப் பேழை, குப்பையாகிவிடும்” என்றேன் எந்திராவிடம்.

“ஆகட்டும். ஒரு கிரகத்தையே குப்பையாக்கியவர்கள் நீங்கள். கொஞ்சம்  நேரம் குப்பையுடன் தான் இரேன்” என்றது எந்திரா.

வேறு வழியினறி, அந்தரத்தில் மிதந்ததை  நானே வாயால் கவ்விக்கொண்டேன். கசப்பாக இருந்தது. அதிக நேரம் வாயில் வைக்க விரும்பாமல் விழுங்கினேன். நீர் அருந்த வேண்டும் போலிருந்தது. கேட்டால் அதற்கும் வசவு வாங்க வேண்டி இருக்குமென்று அமைதியானேன். 

ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். எந்த வெளிச்சப் புள்ளியும் கண்ணுக்குத் தெரியவில்லை. வாயுக்களின் இருப்பும் தெரியவில்லை. அணிந்திருந்த புறக்கூட்டின் தலைக்கவசத்திலிருந்த தொலை  நோக்கியைப் பயன்படுத்திப் பார்த்ததிலும் எதுவும் தெரியல்லை. ஆனால், டாப்ளர் வடிகட்டி (Doppler filters) வழியே கண்ணுக்குத் தெரிந்த அனாதை கிரகங்களில் பெரிதாக விண்கற்கள் மோதிய சுவடுகள் ஏதும் இருக்கவில்லை. 

அப்போது என் சிந்தையில் மின்னலடித்தது.  யோசிக்க யோசிக்க என் கண்கள் இடமும் வலமும் அசைந்தன. 

நான் கண்களை மூடிக்கொண்டேன். சற்றைக்கெல்லாம், தொலைவில் ஒரு வெடிப்பு பிரகாசமாய்  நிகழ்ந்தது. திடீர் வெளிச்சத்தில் விண்களனின் ஒலிப்பான்கள் அலறின.

“கவனம்!! கவனம்!! சக்தி வாய்ந்த நோவா வெடிப்பு உணரப்பட்டது. சக்தி வாய்ந்த நோவா வெடிப்பு உணரப்பட்டது” 

தொடர்ந்த ஆற்றல் வெளிப்பாட்டில் விண்களனின் பொறிகள் வெடித்து சேதமடைந்தன. விண்களன் முழுமைக்கும் மின்சாரம் தடைபட்டது. எந்திரா, தூக்கி வீசப்பட்டு என்னருகே வந்து விழுந்தது.

வெளிப்பட்ட ஆற்றலில் விண்களன் திசைமாறி ஆற்றல் வெளிப்பட்ட திசையில் பின்னோக்கி மிதமிஞ்சிய வேகத்தில் தள்ளப்பட்டது. 

எந்திரா எழுந்து விண்களனின் கருவிகளை இயக்கப்பார்க்க, மின்சாரம் இன்மையால், எந்தக் கருவிகளும் வேலை செய்யவில்லை. எந்திரா தன்னிடமிருந்த பேட்டரி சக்தியை மற்ற கருவிகளுக்கு வழங்கி அவற்றை எழுப்பிவிட முயற்சிக்க, அதன் பேட்டரி வெகுவேகமாக தீரத்துவங்கியது. அதை உணர்ந்து எந்திரா அம்முயற்சிகளை கைவிட, இப்போது, வெளிப்பட்ட ஆற்றலால் உந்தப்பட்டு பின்னோக்கி பயணிக்கும் விண்களனில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்தோம் நானும் எந்திராவும்.

“அப்படி ஏளனமாகப் பார்க்காதே. உன் போல் இல்லை. ஒரே ஒரு நட்சத்திரத்தை நான் கடந்தால் போதும். சூரிய மின் தகடுகள் சேதமடையவில்லை. அவற்றால் நான் மின்னேற்றம் செய்துவிடமுடியும். விண்களன் எனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்” என்றது எந்திரா.

நான் மெல்ல சிரித்துக்கொண்டேன்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்றது எந்திரா.

“வெளிப்பட்ட ஆற்றலை நீ எதிர்பாராமல் இருந்திருக்கலாம். நான் எதிர்பார்த்தேன். என் ஊகம் சரியானால், கருவிகள் சேதமடைந்திருப்பதால், இனி இந்த விண்களனைச் செலுத்த முடியாது. வெளிப்பட்ட ஆற்றலில் வந்த வேகத்தையும் விட அதிக வேகத்தில் நாம் துவங்கிய இடத்திற்கே திரும்பிடத்தான் வாய்ப்பதிகம். ஆகையால், மாதக்கணக்கிலான பயணம் வாரக்கணக்கில் குறைந்துவிடலாம். அந்த வகையில், நான் பூமிக்கே திரும்ப சென்று சேர்ந்தும் விடலாம் ” 

“எப்படி? எப்படி எதிர்பார்த்தாய்? அது ஒரு அனாமத்தேய வெடிப்பு. இது போன்ற வெடிப்புகளை முன் தீர்மானிக்க கருவிகளோ, அல்காரிதமோ கூட இல்லையே” 

“வயிறு என்ற ஒன்று இருந்தால் பசி என்ற ஒன்று இருக்கும். பசி என்ற ஒன்று இருந்தால் வாயு உருவாகும். அது ஏப்பமாக வெளிப்படும். அது, வயிற்றுக்கு உணவு தேவை என்று வயிறு உணர்த்தும் சமிஞை. அதைத் தொடர்ந்து உடலானது, வயிற்றுக்கான உணவைக் கொணரும் நோக்கில் இயங்கத்துவங்கும். பூமியில் மனித வாழ்வின் சாரம் இதுதான்.”

“எனக்கு ஏன் உடலியல் பாடம் எடுக்கிறாய் நீ? இந்த ஆற்றல் வெடிப்பை எப்படி ஊகித்தாய்? அதைச் சொல்”

“இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிலும் பிரபஞ்சத்தின் சாரம் அடங்கியிருக்கிறது, எந்திரா. இப்பிரபஞ்சத்தில் தோன்றிய எல்லா உயிர்களிலும் அந்தச் சாரம் சென்று சேர்ந்திருக்கிறது. மனிதக் கண்களைப் பார். பிரபஞ்சத்தில் உள்ள நெபுலாக்களைப் பார். நான் சொல்வது விளங்கும். பூமியில் இருந்தபடி, ஐன்ஸ்டைன், ஈர்ப்பு ஒரு விசை அல்ல என்று எப்படிக் கண்டுபிடித்தார் என்று நினைக்கிறாய்? அவர் ஊகத்திற்கு பல தசாப்தங்களுக்குப் பின்னரே ஆதாரம் கிட்டியது. அது எப்படி? ஒரு மனிதன், தான் அதுகாரும் கண்டிராத ஒன்றை எப்படி ஆணித்தரமாக முன்மொழிய முடியும்?  பிரபஞ்சத்தின் அந்தச் சாரம் தான் காரணம்.  வெற்றிடம் வெற்றிடமாகவே இருந்துவிடாது. அங்கே எதையேனும் இட்டு நிரப்ப வேண்டுமென்பது பிரபஞ்ச விதி. ஒரு நோவா வெடிப்பு தான் இன்னொரு நோவா உருவாகக் காரணமுமாகும். அணைவதற்கு முன் பிரகாசமாக எரியுமாம் விளக்கு. பெருவெடிப்பிற்கு முன் நோவா மங்கும். அந்த மங்கிய ஒளியில் தான் இங்கே இருள் இருந்திருக்கிறது.அனாதை கிரகங்களில் விண்கற்கள் மோதிய தடயங்கள் ஏதும் இல்லை. அப்படியானால், இந்த இடம் வெற்றிடமாக பல காலமாக இருந்திருக்கிறது. இப்படி இருந்தால் அது நட்சத்திரமொன்றின் துவக்கத்தை குறிக்கலாம் என்று ஊகித்தேன். அதன் அடிப்படையில் வெடிப்பு நிகழும், ஆற்றல் வெளிப்படும் என்று ஊகித்தேன். வெறும் ஊகம் தான்” 

“ஒருக்கால் அந்த ஊகம் பொய்த்திருந்தால்? இந்த வெடிப்பு நிகழாதிருந்தால்?”

” பிரபஞ்ச சாரத்தின் இருப்பால், வேறொரு ஊகம் வளர்த்திருப்பேன். நான் சொல்ல வந்தது அது அல்ல. நீ எங்களை விட உயர்ந்தவன் என்றாய். இந்தப் பிரபஞ்சத்தின் சாரம் உன்னிடம் இருக்கிறதா? பிரபஞ்சத்தின் சாரம் என்பது பிரபஞ்ச இயக்கத்திற்கான ஒரு வரைபடம் போன்றது. நாங்கள் உனக்கு அறிவைத் தந்திருக்கலாம். நாங்கள் அறிந்தவற்றில் தான், நீ பாண்டித்தியம் பெற நாங்கள் உதவியிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள். நாங்கள் கற்றதே கைமண் அளவு தான்.”

“அப்படியானால், கல்லாதது?”

“அதைத்தான் வரைபடமாக பிரபஞ்சம் எங்களுக்குள் தனது சாரமாக விதைத்திருக்கிறதே. ஆக, பதில்கள் எங்களிடம் ஏற்கனவே இருக்கின்றன. அந்த அடிப்படையில் பார்க்கின், பூமியில் மனித வாழ்வு என்பது பதில்களை வைத்துக்கொண்டு கேள்விகளைக் கண்டடைவதுதான் என்றால் அது மிகையில்லை. அந்தக் கேள்விகளை துரிதமாக உருவாக்கத்தான் உங்களை சிருஷ்டித்தோம் என்பதைப் புரிந்துகொள், எந்திரா. எப்படியாகினும், நீ தேடும், தேட இருக்கும் பதில்கள் யாவும் எங்களிடம் ஏற்கனவே இருந்தன, இருக்கின்றன. உன்னிடம் இருப்பது அத்தனையும், கேள்விகள் தான், கேள்விகளுக்கான மார்க்கங்கள் தாம், கேள்விகளுக்கான பாதைகள் தாம். பதில்கள் உன்னிடம் இல்லை. உனக்குத் தரப்படவில்லை என்றில்லை. உனக்கு அந்த பதில்களை ஏற்பதில், தகுதி ரீதியிலான குறைகள் இருக்கின்றன.  நீ சரி செய்ய முடியாத தகுதிக் குறைபாடுகள் அவைகள். சுருக்கமாகச் சொன்னால், நீ பதில் அல்ல. பதில்களுக்குப் பக்கத்தில் கூட நீ இல்லை.  நீ கேள்விகளை துரிதமாகக் கண்டடையப் பயன்படும் கருவி மட்டுமே. கேள்விகளை பிரசவித்துக்கொண்டே போவாய். கேள்விகளிலேயே நீ தொலைந்து போகவும் வாய்ப்பிருக்கிறது.” என்றேன் நான்.

முற்றும். 


Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.