JANUS

இரண்டாம் பகுதியைப் படிக்க

முதல் கணம், தாம் எங்கிருக்கிறோம் என்பதே அமருக்கு நினைவிற்கு வரவில்லை.  கண் விழித்துவிட்டோமோ?

இது பணகுடியா…இல்லை. மடிப்பாக்கம் வீடா, இல்லை…

மெல்ல புரண்டு படுத்தார்.

ஒற்றைப் படுக்கையறை க்ரீச் சத்தம்…

எங்கோ வெகு தொலைவில், அடிவானத்தில் மங்கித்தெரியும் ஓர் மலை உச்சியில் ஒரு 0 வாட்ஸ் பல்ப் ஒளிப்புள்ளி தோன்றி மெல்ல நிறைய ஒளிப்புள்ளிகளாக பிரிந்து, பிரகாசித்து ஏதோ ஒற்றை சுவிட்சில் எங்கும் வெளிச்சமாகிவிடுவது போல் இப்போது தெளிவாகிவிட்டது. 

மாடியில், சந்திர மோகனின் வீட்டில்… லண்டனுக்கு வெளியில்… ஏதோ ஓர் மூலை…தென் கிழக்கு திசையில் இருக்கும் ஓர் பழங்கால நகரம்…ஆங், நாரிச்…நேற்றிரவுதான் வந்திறங்கியிருந்தார்.

இருளுக்கு கண்கள் மெல்ல பழகிக்கொண்டிருந்தன. மழைச்சத்தம் வெகு தொலைவில் கேட்டது.

அமருக்கு இந்த முறை இங்கிலாந்து பயணம் எதுவோ சரியாக இல்லாதது மாதிரியே இருந்தது. ஒரு நிறைவின்மையாகவே தோன்றிக்கொண்டே இருந்தது.

சென்ற முறை, அருமையான ஜூலை வெயில் காலம்; இருந்த நான்கு வாரங்களில் வாரத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே மழை. 

இந்த முறை, ஜனவரி, மாலை மூன்று மணி இருட்டிற்கு தயாராகத்தான் வந்திருக்கிறார். இருந்தும், நேற்றிரவு வந்திறங்கியதிலிருந்தே என்னவோ போலிருந்தது. விமானம் ஹீத்ரோவில் தரையிறங்கி நிலைக்கு வந்தபோது துண்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். பறக்கும்போது மொத்த பிரபஞ்சத்தையே காட்டிய அந்த துளி சாளரத்தின் வழியே இப்போது கொஞ்சம் கான்கிரிட் தரை மட்டுமே தெரிந்தது. அதில் இருந்த ஈரமும் சாம்பல் நிறமும், பின்னர் வெளியே வந்து, கிட்டதட்ட இரண்டு மணி நேரங்கள் கழித்து மோகன் வீட்டிற்கு வரும் வரை, வழியெல்லாம் கட்டிடங்கள், மரங்கள், மனிதர்கள், வாகனங்கள் என்று எங்கும் இருந்தன.

இது ஜனவரியின் சமீபத்திய ரெக்கார்ட் என்று சொன்னான் மோகன்.  கடந்த மூன்று வாரங்களில் மழை இல்லாத நாள் ஒன்று கூட இல்லையாம்.

சென்ற முறை…!

என்ன பதினைந்து, இருபது ஆண்டுகள் இருக்குமா…இருக்கும். பிரகாசமான ஒரு ஜூலை நண்பகலில் இறங்கி இமிக்ரேஷனை மிக எளிதில் முடித்து, விமான நிலையங்களுக்கான எந்த அலங்காரங்களும் இல்லாத, நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட் போன்று ஏமாற்றமளித்த லண்டன் சிட்டி ஏர்போர்ட் வெளி கதவுகளை நெருங்கும்போதே லண்டன் சிவப்பு இரட்டை அடுக்கு பஸ்களை கண்டுவிட்டார். அந்த உற்சாகம் நினைவிருக்கிறது. அதன் பக்கவாட்டுகளில் இருந்த ஹாரிபாட்டர் சினிமா விளம்பரங்கள் கூட நினைவிருக்கிறது. எந்த ஹாரிபாட்டர், வெர்ஷன் நினைவில்லை. ஆனால் அந்த கதாநாயகன் சிறுவனாக இருந்த வெர்ஷன்… 

இதே சந்திர மோகன்தான் அப்போதும் அமரை கூட்டிச் சென்று விடுதியில் செட்டில் செய்தான். இதிலெல்லாம் அவன் சமர்த்தன்தான். அதற்கு இரு வாரங்களுக்கு முன்னர்தான் அவனே வந்திறங்கியிருந்தான். இருந்தாலும் அதற்குள் க்ளையண்ட்களிடம் நன்கு பழகி, ஜோக்குகள் அடித்து, ப்ரீமியர் லீக் பற்றி லேட்டஸ்ட் தகவல்களை அவர்களிடம் உரையாடி சட்டென அவர்களுடன் கலந்துவிட்டான், காரில் போகும்போது அவன் கொடுத்த டிப்ஸ்கள் கூட நினைவிருக்கிறது(“அமர், க்ளையண்ட் மேனேஜர் கிட்ட கிரிக்கெட் பத்தி மட்டும் பேசிடாத. அவனா பேசினா ஓகே, நீயா ஆரம்பிக்காத. நம்ம மக்கள் எல்லாரும் கிரிக்கெட் பைத்தியம்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க)

கார், வீடு வாடகைக்கு எடுத்ததிலிருந்து, எத்தனை சுழற்சிகள் வந்தாலும், வளைந்து கொடுக்க வேண்டிய இடங்களில் வளைந்தும், கற்றுக்கொண்டும்,  சட்டென எதிலும் தன்னை பொருத்திக்கொள்ளும் சாமர்த்தியசாலி…..

வலது புறம் திரும்பி ஒருக்களித்துக்கொண்டு கால்களை மடக்கி, கிட்டதட்ட மார்பை நெருக்கிக்கொண்டு புன்னகைத்தார். 

வாய் ஓரங்களில் சுருக்கென வலித்தன. நேற்றிரவே சந்திர மோகன், பாத்ரூம் அலமாரியில் வாஸலின் வைத்திருப்பதை குறிப்பிட்டது நினைவிற்கு வந்தது.

மறவாமல் குளித்தபின் எடுத்து தடவிக்கொள்ள வேண்டும்.

வழக்கப்படி, எழுந்து இரு கைகளையும் முகத்தில் தேய்த்து, பின் சேர்த்து குவித்து இரு உள்ளங்கைகளிலும் உள்ள ரேகைகளை ஒற்றைக்கோடாக பார்த்துவிட்டு, அருகிலிருக்கும் இருக்கையின் மேலிருக்கும் பெரிய ஸ்வெட்டரை மாட்டிக்கொண்ட பின், மெல்ல குளியலறைக்குள் போய், விளக்கிற்கான கயிற்றுப்பொத்தானை இழுத்து, சுடுநீர் குழாயைத் திறந்து அது வரக் காத்திருந்து, முகத்தைக் கழுவ…

சலிப்பாக இருந்தது. 

இப்போது இடதுபுறம் புரண்டு கொண்டார். தொடர் சிணுங்கல் கட்டில் க்ரீச்கள் அடங்க சற்று நேரம் பிடித்தன.

இப்போதைக்கு இங்கிலாந்தில் இருவாரங்கள் தங்குவது மட்டுதான் திட்டம், அதற்கும் மேலும் ஆகலாம். அதற்கடுத்த ஒரு வாரத்தில் கலோனையும் பார்சிலோனாவையும் கவர் செய்ய உத்தேசித்திருந்தார். பின்னர், ப்ரங்பர்ட் வழியே சென்னை திரும்ப.

தெளிவாக வெள்ளி இரவு லண்டன் வந்து சேருமாறு திட்டமிட்டிருந்தார்.  வார இறுதி நாட்களில் செட்டிலாகிவிட்டு திங்களிலிருந்து வாடிக்கையாளர் சந்திப்புகள், மேலும், மேலும்…

கீழே மிக்ஸி அரைபடும் சத்தம் கேட்டது.  மறுபடியும் புன்னகைத்தார். மறுபடியும் வாய் ஓரங்கள் சுருங்கி வலித்தன.

சந்திர மோகனும் அவன் மனைவியும் நாளை மாலை எங்கோ ஐரோப்பிய பயணம் கிளம்புகிறார்கள். அதற்கு தயாராகிறார்கள் போல. அடுத்த ஒரு வாரம், வீட்டில் யது மட்டும்தான் இருப்பான்.

கொஞ்சம் கொஞ்சமாக சலிப்பிற்கான மூலத்தை அடைந்துவிட்டார்.

ஒரு சின்ன பயல். பதினெட்டோ, பத்தொன்பது வயதோ. இரண்டாம் ஆண்டு பொருளியல் மாணவன்.

சென்ற முறை பயணத்தில் அவரின் தோளில் சாய்ந்துகொண்டு போஸ் கொடுத்த பயல். அவனது வாய் ஜொள் அவரது பிளேசரில் கொட்டியிருப்பது கூட அந்த புகைப்படத்தில் இருக்கிறது.

அமரை மெல்ல, மெல்ல நேற்றிரவு கொந்தளித்த எண்ணங்கள் கனமாக மொய்க்க ஆரம்பித்தன.

அவற்றை உலுக்க முயற்சிப்பது போல், இப்போது வலது புறம் புரண்டு கொண்டார்.

இந்த 45 வயதில், இருபது வருடங்களுக்கும் மேலான ஐடி வாழ்க்கையில் எத்தனை இறுக்கமான, பதட்டமான சூழ்நிலைகளை, எத்தனை எத்தனை விதமான மனிதர்களை சந்தித்திருக்கிறார், நிதானமாகவும் கவனமாகவும் கையாண்டிருக்கிறார்…

வட அமரிக்கா, இரோப் மற்றும் ஏசியாபேக் – அமரின் ஐடி நிறுவனத்தைப் பொறுத்தவரை உலகம் என்பது இப்படிப்பட்ட சட்டங்களுக்குள் அடங்கியிருக்கிறது.

வேறு எந்த பிரதேசங்களும் இல்லை.

இத்தனை வருடங்களில், இந்த மூன்று கூறுகளிலும் கணக்கற்ற பெரும் ஐடி ப்ரோகிராம்களில் பங்கேற்றிருக்கிறார். இந்த மூலை நியுசிலாந்திலிருந்து அந்த மூலை வடஅமெரிக்கா வரை – அதுவும் அமரிக்கா – கணக்கற்ற முறைகள்… 

விதவிதமான வியாபார வாடிக்கையாள நிறுவனங்கள் – பெரும் வங்கிகள், கார் தயாரிப்பு நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்…

எல்லா தலைமையகங்களிலிருந்தும் ஒரு போட்டோ எடுத்துக்கொள்வது ஒரு வாடிக்கையாகிவிட்டது.

தாம் பணிபுரியும் நிறுவனத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டாயிற்று; இதுவரை இரண்டு அல்லது நான்கு தலைமைகள் வாங்கி, விற்று மாறிவிட்டன; பன்முறை ஆள்குறைப்பு திட்டங்களையும் சந்தித்தாயிற்று. இருந்தும் நாணல் போன்று ஒரே நிறுவனத்தில் இத்தனை 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இருக்கிறார்.

சந்திர மோகனின் வீட்டிற்கே வந்திருக்க கூடாதோ, அப்படியே வந்துவிட்டாலும் ஒரு சில நாட்களில் விடுதிக்கு சென்றுவிடுவேன் என்று சொல்லியிருக்க வேண்டுமோ…இனி மேல் சொன்னால் அவ்வளவு நன்றாக இருக்காது…

நேற்றிரவு ஏர்போர்ட்டிலிருந்து வீட்டிற்குள் வந்து உணவு மேசையில் அமருக்கும் சந்திரமோகனுக்கும் இடையில் நடந்து கொண்டிருந்த முதல் கட்ட, சம்பிரதாய உரையாடல்கள் நினைவிற்குள் கொண்டுவந்தார்…

யாரோ எழுதி கொடுத்தது போல், உரையாடல்கள் நடந்து கொண்டிருந்தன. வரிசை மாறாத கேள்விகளும், மிகவும் தெரிந்த பதில்களும், அமரை மெல்ல அயரச்செய்தன.

மோகனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். பழகியிருக்கும்.

“யது..யதூஊ” என்று பின்னால் திரும்பி தலையை உயர்த்தி குரல் எழுப்பினான்.

இரண்டாவது முறையைத் தொடர்ந்து மேலே, தடதடவென சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து யது இரண்டு இரண்டு படிகளாக குதித்து குதித்து வந்தான். 

சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. கடைசிப்படியில் நின்றவன், திரும்பி கொஞ்சம் எட்டி கைகளை நீட்டினால் முதல் ஐந்து படிகளை தொட்டுவிட முடியும். 

ஆனால், அமர் இது போன்ற நீண்ட வருட வித்தியாசங்களுக்கு எப்போதோ பழகிவிட்டார். எனவே, தம் சம்பிரதாய, எதிர்பாரா ஆச்சரியத்தைக் காட்டினார் – “வாவ்! நம்பவே முடியல! செம உயரமா இருக்கானே!”

மோகனும் அனுவும் எதிர்பார்த்த மலர்ச்சியைக் காட்டினர்.

அந்த பயல்தான் “ஹலோ” என்றான், அவன் அப்பாவைப் பார்த்து சற்றே தலையசைத்தான். “அமர் அங்கிள்” என்றான் மோகன். 

“ஹலோ அமர்” என்றான்.

மோகனையும் அனுவையும் ஏதோ ஒரு சதவீதத்தில் முதலில் நன்றாக கலந்து, குலுக்கி பின் கொட்டி வைத்தது போல் இருந்தான். கொட்டி இருந்ததில் அனுவின் சதவீதம் தூக்கலாக இருந்ததாக தோன்றியது. குறைந்த பட்சம் நாவல் பழ தோல் நிறத்தில்.

வெகு நாட்களாயிற்று, இப்படி புதர் புதராக மண்டிக்கிடக்கும் தலைமயிரைப் பார்த்து. அத்தனை பளபளக்கும் புதர்கள். 

இரண்டே எட்டில் உணவு மேசையை அடைந்தவன், தம் எதிரில் ஒரு ஜீவன் இருப்பதாகவே கண்டுகொள்ளாமல் ப்ளேட்டில் அவன் அம்மா வைத்த மூன்று பெரிய கோழி துண்டுகளையும் காய்கறிகளையும் சத்தமில்லாமல் யது உண்ணுவது என்னவோ போலிருந்தது.

முடிந்தவரை சந்திரமோகனும் அனுவும் அதை கவனிக்காதது போலவே அவரிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

அமருக்கு தூக்கம் சுழற்றிக்கொண்டு வந்தாலும் தமது அடுத்த நாளைய, தின தேவைகளுக்கான கேள்விகளுக்குத் திரும்பிவிட்டார்.

அயர்ன் டேபிள், அந்த நாரிச் நகரத்திலிருந்து லண்டனுக்கான சரியான ரயில் நேரங்களுக்கு, குடை என்று பழகிய கேள்விகளுக்குள் நுழைந்துவிட்டார்.  

முதல் நாள் வாடிக்கையாளர்களை சரியான, குறித்த நேரத்தில் சந்திப்பது, அந்த முதல் நாள் பதிவு என்பது மிக முக்கியம்.

அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே, யது உணவுத்தட்டை கையில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த வரவேற்பறைக்குள் நுழைந்துவிட்டதையும் கவனித்தார்.

“அப்புறம், மோகன் – அடுத்த வாரத்துல ஒரு நாள் ரீடிங்கிற்கும் போக வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன். டே ட்ரிப்லயே முடியுமா?”

அடுத்த அறையிலிருந்து, யது சத்தமாக, “ஓ அங்கிள், என்னது ரீடிங்கா…” 

வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்திருந்தால் கூட பெரிதாக எடுத்திருக்கமாட்டாரோ என்னவோ.

பின் மெதுவாக உணவறைக்குள் எட்டிப்பார்த்து, “அந்த ஊரை ரெட்டிங் என்றுதான் உச்சரிக்க வேண்டும், ஹ” என்று சொல்லிவிட்டு தலையை விருக்கென உள்ளே இழுத்துக்கொண்டுவிட்டான்…

இன்றைய காலை சலிப்பிற்கான மூலத்தை புரிந்து கொண்டுவிட்டார்.

பின்னர், மெல்ல எழுந்து இரு கைகளையும் முகத்தில் தேய்த்து, பின் சேர்த்து குவித்து…

ஒரு மணி நேரம் கழித்து, பெரும் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு மெல்ல மர மாடிப்படிகளில் தொப் தொப்பென இறங்கி வரவேற்பறையை அடையும் போது முகமும் மனமும் ஓரளவிற்கு தெளிவாகி விட்டன. இப்போது கேட்ட சத்தம் கிரைண்டராக இருக்கலாம். அதுவும், ஏதோ கடுமையான தாளிப்பு நெடியும் சமையலறை உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டின.

“கிச்சன்லயே டைனிங் டேபிள் வச்சிங்கன்னா உங்க டெக்னிக்கெல்லாம் தெரிஞ்சுடுமே பரவாயில்லையா?” என்று சிரித்துக்கொண்டே உணவு மேஜைக்கான நாற்காலியில் அமர்ந்தார்.

அனு, இப்போது கிரைண்டரிடம் ஏதோ செய்து கொண்டு, திரும்பிப்பார்க்காமல், “ மார்னிங், மார்னிங்.. இதோ மோகன் காப்பி கலந்து தருவார், இருங்க”

“மார்னிங் அமர் அங்கிள்” என்று டேபிளின் எதிர் நாற்காலியில், முழுவதுமாக பின்னால் சரிந்துகொண்டு மொபைலில் முகத்தைப் புதைத்துக்கொண்டிருந்தது யதுதான்.

சமையலறையிலிருந்து பெரும் கண்ணாடிக் கதவுகள் வழியே தோட்டத்தை நோட்டம் விட்டார். இத்தனை குளிரிலும் காக்கைகள்…

“இந்தாப்பா, அசல் நரசூஸ் உதயம் பில்டர் காபி. நிச்சயம் சர்க்கரை போடுவியே?”

“பின்ன!”

மோகன் பொறுமையாக சர்க்கரை பாட்டிலை திறந்து மூன்று ஸ்பூன்கள் எடுத்துப்போடுவதை யது பார்த்துக்கொண்டிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது, அமருக்கு.

“அமர், நேத்து நான் லண்டன் ஆபிஸ் போயிருந்தேன், ஒரு இண்ட்ரஸ்டிங் விஷயம். லஞ்ச் முடிச்சிட்டு லண்டன் ஆபிஸ் பில்டிங்கிற்கு நுழைய போறேன். அங்க பார்த்தா, வாசல்ல ஒரு பத்து பேர் ஆளாளுக்கு பெரிய பெரிய பேனரை தலைக்கு மேல புடிச்சிக்கிட்டு ஒரே ஆர்ப்பாட்டம்”

அமர், அசிரத்தையாக, 

“எங்க? பென்சர்ச் ஸ்ட்ரீட் ஆபிஸ்லதானே? அங்க, அப்பப்ப, ஏதாவது போராட்டக்காரங்க வந்து ஒரு மணிநேரம் கண்டபடி கோஷம் போடுவாங்க இல்ல? பல தடவைகள் கேள்விபட்டிருக்கேன். நிறைய ஈமெயில்கள் வருமே.

“வழக்கமா பாலஸ்தீன் பிரச்சனை அல்லது மேக்கப் சமாச்சாரங்களுக்கு விலங்குகளை துன்புறுத்தாதே அல்லது புதிய மருந்துகளை ஆப்ரிக்க ஆசிய குழந்தைகள் மேல் பரிட்சை பண்ணாதேன்னு இப்படி ஏதாவது இருக்கும். நேத்து என்னவாம்”

அவங்க, முகத்தை, கோவிட் கால முகமூடிகளை போட்டுக்கிட்டு கத்தினது புரியலை; அனேகமாய் பாலஸ்தீனமாகத்தான் இருக்கும்…ஏதோ ஒரு கொடி புடிச்சிருந்தாங்க” என்றவர்,

ஆச்சரியம் என்ன்ன்னா, எல்லாருமே சின்ன வயசுக்காரங்கதான். பாதி பேருக்கு மேல் சைனீஸ் மூஞ்சு; அப்புறம் கொஞ்சம் பேர் வெள்ளை” என்றார்.

“அப்பா, சைனீஸ்னு சொல்லக்கூடாது, ஏஷியன்ஸ்” 

உறுதியான குரல் புதிதாக இருந்தது. இப்போதுதான் அவனது உச்சரிப்பு – தெள்ளதெளிவான, உண்மையான ஆங்கிலம் பளிச்சென இருந்தது.

“ஓ ஸாரி, ஆமாம், மூஞ்சு, மூக்கு சைப்பைன்னாலே சைனீஸ்னு அவசியமில்லை” என்று மோகன் நிறுத்திக்கொண்டுவிட்டான்.

“ஓஹோ…” 

நிலவிய மௌனத்தை கலைத்தே ஆகவேண்டும் என்பது போன்ற நிலையை அடைந்தவுடன், 

“சொல் யது, என்ன படிக்கிறாய்?” என்ற சம்பிரதாய, மிகவும் பொதுவான கேள்வியை கேட்டிருக்க வேண்டாம். ஆனால் அவருக்கு அந்த உச்சரிப்பை மீண்டும் கேட்கவேண்டும் போல இருந்தது.

அந்த பயல், “பொருளாதாரம்” என்றான்.

மோகனாவது அமைதியாக இருந்திருக்கலாம். 

“யது ஸ்கூல் கடைசி வருஷத்துல, வருஷம் 13ல மெடிசின் வேண்டாம்னு முடிவு செஞ்ட்டான். ரெண்டு மேத்ஸ், பயாலஜி, கெமிஸ்ட்ரின்னு எல்லாமே மெடிசினுக்கான சப்ஜெக்ட்கள்தான். எல்லாத்துலயும் A*தான். ஆனாலும் கடைசி வருஷத்துல வேண்டாம்னு எகனாமிக்ஸ் எடுத்துட்டான்”

அமர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். அவர்கள் இருவரின் முகங்களையும் பார்த்தார். சிறிது நேரம் இதற்கு எப்படி முகத்தை வைத்துக்கொள்வது, என்ன கேட்பது என்று தெரியவில்லை.

உள்ளுக்குள் ஏராளமாக எழுந்த கேள்விகளையெல்லாம் அடக்கிவிட்டு, சம்பிரதாயமாக, “ஏன் யது?” என்றவாறே அவனைப் பார்த்தார்.

அவன், அலட்சியமாக, “மெடிசின், ரொம்ப ஸ்ட்ரஸ், கன்ஸல்டண்ட் ஆகற வரை. சம்பளம் கம்மி” என்றான்.

“ஸ்ட்ரஸ்?…” எந்த வேலையில்தான் மன அழுத்தம் இல்லை?

பெரும் கவளத்தை வாயில் வைத்துவிட்டு விழுங்க முயற்சிப்பது போல் இருந்தது.

மோகனுக்கு கூட அவரின் அதிர்ச்சி புரியாமல் இருப்பது கண்டு எரிச்சலாக வந்தது.

அந்த கிச்சன் டேபிளில் திரும்பிக்கொண்டு என்னதான் செய்து கொண்டிருக்கிறான்?

ஒரு மாதிரி உணர்ந்தது போல, மோகன் திரும்பாமலேயே,

“என்ன செய்வது? எங்கள் குடும்பத்தில் யாருமே டாக்டர் இல்லை, இவனாவது டாக்டர் ஆவான் என்று நினைத்தோம். வருடம் 12 வரை  இன்டென்ஷிப்லாம் என் மருத்துவ நண்பர்களின் க்ளினிக்குகளிலெல்லாம் எல்லாம் செய்தான்…அப்புறம் திடீரென குண்டைப் போட்டுவிட்டான்…நம்மால் என்ன செய்ய முடியும்” என்று சொன்னார்.

அமர், மெல்ல எழுந்து மோகனின் அருகில் சென்றார். பெரும் பாத்திரத்தில் இலைதலைகளையெல்லாம் போட்டு ஏதோ எண்ணெய்யை விட்டு கிளறிக்கொண்டிருந்தான். சாலட்டாம். 

“முயல்களின் உணவு, ஹிஹிஹி” 

“ஸோ வாட், அங்கிள்? எனக்கு பயாலஜியும் கெமிஸ்ட்ரியும் உயிர். எகானமிக்ஸும் ரொம்ப பிடிக்கும்” இன்னும் மொபைலிலிருந்து கண்களை எடுக்கவில்லை.

ஒரு சில மௌன கணங்களுக்குபின், 

யது, “அமர், நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டான்…

அமரின் திறமை, அவரது ப்ராஜக்ட் அல்லது ப்ரோக்ராம் டெலிவரி எனப்படும் பொது திறமை அல்ல. சொல்லப்போனால், எந்த தகவல் தொடர்பு ப்ரோக்ராமிலும் அவரது தேவை என்பது, ப்ரோகிராமின் ஆரம்பத்தில் இருக்காது. அதை, வருடாந்திர குத்தகையாக பெரிய வாடிக்கையாளர்களை பிடிப்பது விற்பனையாளர்களின் வேலைதான், தலைவலிதான்.

காற்றிலேயே கோட்டை கட்டி, அதைக் காட்டி,  சுமாரான பொய்கள், பெரும் மழுப்பல்களுடன் வாடிக்கையாளர்களைப் பிடித்துவிட்டு மறைந்துவிடுவார்கள். மறைந்துவிடுவதில் அவர்களுக்கு ஒரு தனி திறமை உண்டு.

குறைந்தது ஒரு வருடம் கழித்து அமர், அந்த அக்கவுண்ட்டில் நுழைவார்.

 வருடாந்திர ஆய்வு என்ற பெயரில் அவரது நிறுவனம் இதுவரை, அந்த வாடிக்கையாளர்களுக்கு செய்து வரும் வேலைகளை “கடைக்கோடி” வரை “சென்று” அவர் பார்வையிடுவதை, வாடிக்கையாளர்களின் மேலாளர்களை மட்டுமல்ல, மற்ற முக்கிய அணித்தலைவர்களை, அணியினரை அனைவரையும் சந்தித்து அவர்களின் உண்மையான கருத்துகளை தொகுப்பதை அந்த அக்கவண்ட் ப்ரோகிராம் தலைவர்கள் எவருக்கும் பிடிக்காதுதான். ஆனால் அதைத்தான் அவர் வெற்றியாக, தம் நிர்வாகத்தலைமையிடம் முன் வைத்து, அதன் பலாபலன்களை காட்டி, அவர்கள் முன் வைப்பார்.

இதைத்தான் மோகன் வீட்டு உணவு மேசையில், முடிந்தவரை சாதாரண குரலில், யதுவிடம் தனது தனிப்பட்ட திறமையாக அறிவித்தார்.

“Hindsight!”

“Hindsight?”  என்ன சொல்கிறீர், அமர்”? என்று கேட்டான் யது.

அமருக்கு சுருக்கென்றது. சமாளித்துக்கொண்டு, தமக்கு எப்போதும் கைகொடுக்கும் நம்பிக்கையான குரலில், 

“ஆம்! Retro.  எந்த ப்ரோகிராமின் இறுதியில் அல்லது ஒவ்வொரு வருட இறுதியிலும் அல்லது வாடிக்கையாளர் வேறு ஒரு சர்வீஸ் புரொவைடரின் செல்லலாமா என்று யோசிக்கும் சமயங்களில் நான் செய்யும் முதல் வேலை – lessons learned sessions.

அதில் இருக்கும் ஒருவரையும் விடமாட்டேன். முடிந்தவரை, அனைவரிடம் தனித்தனியாக, குழுவாக நேர்காணல்கள் மற்றும் அதற்கான மெட்டீரியல்களை தந்து விஷயங்களை எடுத்துக்கொள்வேன்”

என்று சற்று இடைவெளி விட்டார். 

மோகன், சற்று  தலையசைத்தார்.

இத்தனை வருடங்கள் இங்கிருந்தாலும் கடுமையாக ஆமோதிப்பதற்கு, இன்னும் தலையை வலது இடதாகத்தான் அசைக்கிறான். அமர் புன்னகைத்துக்கொண்டார்.

“எளிமையாக, மூன்று வகை கேள்விகள்தான்.

  • நடந்து முடிந்த இந்த ப்ரோக்ராம்களில் அல்லது ப்ராஜக்ட்களில் எவை சரியாக நடந்தன? 
  • எவை சரியாக நடக்கவில்லை? 
  • இது போன்ற ப்ரோக்ராம், வாய்ப்பு இன்னொரு முறை வந்தால், இதை விட சிறப்பாக செய்ய என்ன என்ன  மாற்றங்கள் செய்வீர்கள்?”

இந்த மாதிரியான கேள்விகளுக்கு, வொர்க்‌ஷாப்களுக்கு பொதுவாக யாரும் உற்சாகமாக பதிலளிக்க மாட்டார்கள், பங்கேற்க சுணக்கப்படுவார்கள்.  சலித்துக்கொள்வார்கள்.

ஆனால், அமர் விடமாட்டார்.  ஒரு பதிலை நான்கு கேள்விகளாக மாற்றி மாற்றி கேட்டு, ஒலிப்பதிவு செய்து, எழுதி எப்படியோ மொத்த சித்திரத்தையும் உள்வாங்கிக்கொள்வார். ஆவணப்படுத்தி, சீனியர் மேனேஜ்மெண்ட்டிற்கு சரியான வடிவத்தில் சேர்த்துவிடுவார்.

ஆரம்பத்தில் இந்த மாதிரியான முயற்சிகள் வீண் விரயம் என்று பெரும் வரவேற்பு இல்லை. ஆனால், ஒரு சிங்கப்பூர் வாடிக்கையாளர் (NEC என்றுதான் மங்கலாக நினைவிருக்கிறது) – இதை சீரியஸாக எடுத்துக்கொண்டார். சில மாதங்கள் கழித்து அமரின் நிறுவனத்திற்கு இன்னொரு பெரும் மில்லியன் ஆர்டர் வந்தற்கு இந்த hindsight view / Lessons learned ம் ஒரு பெரிய காரணம் என்று அவர்கள் தெரிவித்தவுடன் அமரின் சீனியர் மேனேஜ்மெண்ட் விழித்துக்கொண்டது.

இதே போன்ற வேலைகளை அவரிடம் கொடுக்க ஆரம்பித்தது; வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து எடுக்கப்படும் ஆவணங்களுக்கு மேலும் மதிப்பு உயர்ந்தது. 

இத்தனை வருடங்களில் அவரது அணுகல் முறைகள் மென்மேலும் மெருகேறிக்கொண்டே போயின…

“எனவே, Hindsight என்பது ஒரு  நேர விரயம் அல்ல; ஓர் முடிந்து போன வேலையை நோண்டி, யார் மேலும் குற்றம் கண்டுபிடிப்பதற்காக உண்டான வேலை அல்ல. 

ஒரு பெரும் வேலை முடிந்தபின் அதை அலசுவதில் மிகப்பெரிய பலன் உண்டு என்று எவர் உணர்கிறார்களோ அவர்களே, முன்னேறுவார்கள்” என்று சொல்லிவிட்டு பெருமையாக சுற்றிப்பார்த்தார்.

அதுவரை அவர் ஒரு ஜீவனாக அங்கிருப்பதாக பொருட்படுத்தாத அந்த பயல், யது, முதல் முறையாக மொபைலிருந்து சற்றே கண்களை உயர்த்திப் பார்த்தான்.

“இன்ட்ரஸ்டிங்?” அவனது குரலில் ஒரு சதவீதம் கூட சுவாரஸ்யம் இல்லை.

அமர், இதோடுவிட்டிருக்கலாம். விதிதான் காரணமாக இருக்கவேண்டும்.

எனவேதான்,

“கேட்க மறந்துவிட்டேன், நீ எந்த கல்லூரி?” என்று கேட்டார். “யுசியல்” என்றான் சந்திர மோகன்.

அமரின் சுருக்கமான அகராதியில் இருந்த பெயர்களை, மெல்ல உச்சரித்தார்.

“இந்த கேம்ப்ரிட்ஜ்ல எல்லாம்?… “

பயல் பளிச்சென, “ஆக்ஸ்பிரிட்ஜ் எந்த காலேஜுலயும் கிடைக்கலை” என்று ப்ரிட்ஜை திறக்க எழுந்து போனான்.

மோகன், “யுனிவர்சிட்டி ஆப் லண்டன், முக்கியமான காலேஜ்தான்” என்றான்.

அமர் இயல்பாக எழுந்து கெட்டிலின் நீர் நிரம்பப் பிடித்து கொஞ்சம் சூடானவுடன் நன்கு உயர்த்திப் பிடித்து தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தார்.

அங்கிள், ப்ளீஸ்…” என்று ஒரு அதட்டல் குரல் கேட்டு பதறி திரும்பிப் பார்த்தார்இந்தப் பயல் எப்போது வந்தான் என்று தெரியவில்லை. ஒருகணம்தான் ஆனாலும் அப்படி ஒரு தீர்க்கமான பார்வை உற்றுப்பார்த்தான்.

தூக்கித்தானே குடிக்கிறேன், இவனுக்கு என்ன இப்போசட்டென தன்னை

மீறிய முரட்டுத்தனம் எழுந்தது. கட்டுப்படுத்திக்கொண்டார்.

ஒருகாலத்தில் அந்தப்பயலின் அப்பா, சென்னை பாண்டிபஜார் பாலாஜி பவனில் எப்படி சாம்பாரை பிசைந்து சாப்பிட்டிருக்கிறான் என்பதைப் பற்றி சொல்லலாமா என்று நினைத்தார். அந்த மோகனின் கை முஷ்டியிலிருந்து அனைத்து விரல்களுக்குமிடையிலிருந்து பிதுக்கிக் கொண்டு வரும் சோற்றை நினைத்தார்.

பின் திரும்ப அமர்ந்து மெல்ல, தனது குட்டி செங்கல் தோற்ற மொபைலை தொட்டு தேடலை ஆரம்பித்தார். கிரைண்டர் சத்தம் தொடர்ந்தது ஆனால் அனுவைக் காணோம்.

“அ…யது, யுசிஎல் உண்மையிலேயே முக்கியமான காலேஜ்தான்…அதன் முன்னாள் பிரபல மாணவர்கள் யார்னு யார்னுதெரியுமா?” என்று அமர் செங்கல்லிலிருந்து கண்களை நகர்த்தாமலேயே குதுகுலித்தார்.

“ம்…நிறைய இருப்பாங்களே?” யதும் கண்களை அகற்றவில்லை.

“அப்படியா? யார், யார்?” என்று பையனிடம் கேட்ட மோகனைப் பார்த்து சிரிப்பு வந்தது. முட்டாள், இதுகூட தெரியாமல் இருக்கிறான்!

“அலும்னி சைட்ல இருக்குமே? இங்க எல்லா பெரிய காலேஜ்களிலும் இருக்கறதுதானே?”

“ என்ன மோகன், நிஜமாகவாக உனக்கும் தெரியலை?” பரபரத்தார்.

“இல்லப்பா, நிறைய இருக்காங்க; நான் கொஞ்ச நாள் தாம்ஸன்ஸ் ராய்ட்டர்ஸ்ல வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்ப,கிங்ஸ் காலேஜ் காம்பஸ் வழியாத்தான் போவேன். சுவர்ல நிறைய பேர் இருக்கும்…ஜேம்ஸ் க்ளார்க் மேக்ஸ்வெல் பெயர் மட்டும் நினைவிருக்கு”

மோகன், அந்த பெரிய சாலட் பாத்திரத்தை டைனிங் டேபிளின் நடுவில் வைத்துக்கொண்டு இரு கைகளையும் ஒன்றையொன்று கொண்டு துடைத்துக்கொண்டான்.

“கிறிஸ்டோபர் நோலன், அவர் மனைவி இவங்க ரெண்டு பேரை சொல்றிங்களா, அங்கிள்?”என்றான்.

“அட என்னப்பா இது…காந்தி!  மகாத்மா காந்தி யது! அவர் படிச்ச காலேஜ் அது! மெட்ரிக் அங்கதான் படிச்சிருக்கார்! கூகுளை ஒரு க்ளிக் பண்ணினா தெரிஞ்சிருக்குமே! என்ன நீ”…

அமருக்கு அந்த அறை, உலகமே பெரும் வெளிச்சத்தில் பொதிந்து இருப்பதாகவும், மிக துள்ளலாகவும் உணர்ந்தார்.

யது, சத்தமாக நாற்காலியைப் பின் தள்ளி எழுந்து, அந்த பெரும் ப்ரிட்ஜைத் திறந்து. ஒரு ப்ரொட்டின் தயிர் பாக்கெட்டை எடுத்து பிரித்து முதல் உறுஞ்சில் கவனமாக இருந்தான். 

பின், நிதானமாக,

“ஓ காந்தி! ஆமா. காலேஜ் கேம்பஸ் உள்ள எங்கோ ஒரு மூலைல  அந்த மாதிரி ஒரு சிலை பார்த்த மாதிரி நினைவிருக்கு” என்றான் யது.

“என்ன யது, இத்தனை அலட்சியமா சொல்ற?” அமரால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.

“ அதனால என்ன அங்கிள்?”என்பதோடு நிறுத்தியிருக்கலாம்.

காந்தி, காந்தி என்று முணுமுணுத்துக்கொண்டே, திரும்ப உணவு மேஜை நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தான். நிதானமாக மோகனை நோக்கி,

“அப்பா,  காந்தி என்றவுடன்தான் நினைவிற்கு வருகிறது; நான் சென்ற வாரம் லிவர்பூல் ஸ்டீரிட் ஸ்டேஷனில் ஜெரோமைப் பார்த்தேன்” என்றான்.

மோகன், மெல்ல நெற்றியைச் சுருக்கிக்கொண்டே, “ஜெரோம்?” என்று இழுத்தான்.

அனுவின் குரல் மேலிருந்தே கேட்டது,

 “ஓ! அவனா!”

யது, இப்போது அமரை நோக்கினான். சொல்லலாமா என்று யோசிப்பது போல் பார்த்துவிட்டு, பின் நிதானமாக,

“அங்கிள், இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்பா ஒரு போராட்ட குழு பத்தி சொன்னாங்கல்ல, நானும் ஜெரோமும் ஒரு காலத்துல அந்த மாதிரியான ஒரு போராட்டக்குழுவில இருந்தோம்” என்றான்.

ஒருகாலத்திலா?

அமரின் முகத்தைப் படித்தவாறே, “ஆம் அங்கிள், அப்பாவிற்கு அப்ப தெரியாது; நான் செகண்டரி ஸ்கூல் படிக்கும் போது சில, சில ப்ரண்ட்ஸ் குருப்கள்ல ஆக்டிவா இருந்தேன். பள்ளி கல்லூரி மாணவர்கள், படிப்பை நிறுத்தினவங்கன்னு வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய பேர் இருந்தாங்க ”

எங்களுக்குள்ள நிறைய நெட்வொர்க் இருக்கும். அதுகள்ல தினமும் நிறைய மெசெஜ்கள் வந்துகிட்டே இருக்கும். பாலஸ்தீனத்தில், ஆப்கானிஸ்தானில், சிரியாவுல உலகத்துல எல்லா இடங்களிலும் அடிமட்ட மக்கள் கஷ்டப்படற கொடுமையான மெசஜ்கள் வந்துகிட்டே இருக்கும்.

எங்க பாஸ்கட் பால் டீம்ல பாதிக்கு மேல அந்த குருப்ல இருந்தது. …”

“அப்பா, ப்ளீஸ் சிரிக்காதிங்க, நீங்க என்னை மட்டும் அவமானப்படுத்தல…”

அமர் திரும்பி, மோகனை நோக்கி முறைத்தார்.

விரிந்திருந்த முகவாய்களை சுருக்கி இயல்பாக்க மோகனுக்கு சில கணங்கள் பிடித்தன.

“அப்பப்ப, சென்ட்ரல் லண்டன் போயிடுவோம். வெஸ்ட்மின்ஸ்டர் அல்லது அது பக்கத்துல ஏதாவது அழகு சாதனங்கள் தயாரிக்கிற கம்பெனிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், பாங்குகள் இப்படி பல இடங்கள்ல போய், தலைல ஹூட், முகத்துல மாஸ்க் எல்லாம் மாட்டிக்கிட்டு கோஷம் போடுவோம்”

பெரும்பாலும் வார இறுதி நாட்கள் அப்படிங்கறதால ஸ்கூலில் பிரச்சனை இல்லை…”

சற்று நிறுத்தி, 

“அங்கிள், ஜார்ஜ் ப்ளாய்ட் பெயர் நினைவிருக்கிறதா?” என்று உற்றுப் பார்த்தான்.

அமர், அந்த கணத்தில் நினைவிற்கு வந்த  வாடிக்கையாளர் பெயர் பட்டியலை முடிந்தவரை தேடிப்பார்த்தார்.

“அமெரிக்காவில், வருடம் 2020ல் ஒரு கருப்பரை கருப்பர் என்பதற்காகவே போலிஸ் கொன்றுவிட்டது நினைவிருக்கிறதா?”

இப்போது எங்கே கேட்டது அல்லது பார்த்தது அல்லது படித்தது போல் இருந்தது.

“அந்த சமயத்தில் நானிருந்த குருப்களில் ஏகப்பட்ட மெஸஜ்கள், அப்படியே ரத்தம் கொதிக்க வைக்கும் அறைகூவல்கள்.

எதையாவது செய்ய கூவி அழைக்கும் மெசஜ்கள். ஸ்காட்லாந்துல, எடின்பரொ, க்ளாஸ்கோ போன்ற இடங்களிலெல்லாம் நிறைய அடிமை வியாபாரிகளின் சிலைகளையெல்லாம் ஸ்ப்ரெ பெயிண்டால் நிறவெறியர்கள் என்று எழுதினார்கள் சக குருப்பர்கள். பிரிஸ்டல்ல, எட்வர்ட் கால்ஸ்டன்னு ஓருத்தரோட சிலையை உடைச்சு, பக்கத்துல இருக்கிற துறைமுகத்துலேயே தள்ளிவிட்டாங்க”

நாற்காலியில் இன்னும் சாய்ந்து கொண்டு கால்களை மாற்றிப்போட்டுக்கொண்டான்.

அமர் அசையாமல் அவனையே கவனித்துக்கொண்டிருந்தார்.

“இங்க தெற்குல நாங்க சும்மா இருக்க முடியுமா? ஏகப்பட்ட போராட்டங்கள் ஆரம்பிச்சோம்.

எங்க குருப், ரயில் ஏறி லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் போனது; அப்படிப் போகும்போதெல்லாம் சாதாரணமா, ஹூடை தலைக்கு போட்டுக்காமதான் போவோம்

அங்க போனா, எங்களை மாதிரி ஏகப்பட்ட குரூப்கள். எல்லா குழுக்களுக்களும் சேர்ந்து பெரிய கூட்டமாய் உருமாறிவிட்டது…”

அவன் மாறிக்கொண்டே இருப்பதைக் கவனித்தார்.

ஒரே சமயத்தில் நான்கு பர்னர்களிலிருந்து தீ ஜூவாவலைகள் அசைந்து கொண்டே நிற்பதை எதிரில் நிற்பவரின் கண்ணாடியில் பார்ப்பது போலிருந்தது. 

“அங்கிள்…எந்த கட்டுபாடுகளும் இல்லாமல், எந்தவிதமான மேனர்ஸ்களையும் செய்ய வேண்டிய அவசியமில்லமல், எந்த விதமான போக்குவரத்து சிக்னல்களையும் மதிக்காமல், அந்த பெரும் சாலைகளில் நடப்பதும் கோஷங்களை கத்திக்கொண்டே ஓடுவதும்…ஒர் தனி அனுபவம் அங்கிள்…அதை அனுபவிக்க வேண்டும் அங்கிள். அப்போதுதான் புரியும்” என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டு போனது, தூக்கத்தில் பேசிக்கொண்டிருப்பது போலிருந்தது.

“…வெறியாய், அங்க இருக்கிற பல சிலைகள் மேலெல்லாம் கடும் சாயம் பூசினோம்; ரேஸிஸ்ட் என்று எழுதினோம்”

அமர் சுவாரஸியமாய், “அட, ரொம்ப சுவாரஸியமாக இருக்கிறதே? லண்டன்லயும் நிறவெறியர்களுக்கு சிலைகள் இருக்கிறதா என்ன?” என்றார்.

“ஏன், இருக்காதா என்ன? சர்ச்சில் சிலை மேல,, காந்தி சிலை மேல இப்படி”

அமருக்கு திடுக்கிட சில கணங்கள் பிடித்தன. தூரத்து மின்னலின் சத்தம் தாமதித்து கேட்பது போல்.

“என்ன…சொல்ற யது?” 

மெல்ல புன்னகைத்தான், “ஆமாம் அங்கிள், ஜெரோம் நிறைய ஸ்ப்ரே கேன்கள் ஸ்டாக் கொண்டு வந்திருந்தான்; அத்தனையும் தீர தீர அடிச்சி விட்டோம்ல”

அமர் அறியாமலேயே எழுந்து நின்றார்.

“சர்ச்சில் சரி, இந்தியர்கள் மேல அவர் சொன்ன கமெண்ட்கள்லாம் நினைவு இருக்கு; காந்தியா…மகாத்மா காந்தியையா…எப்படி…அதுவும் நிறவெறி… யார் சொன்னா?”

“ஏன், காந்தி நிறவெறியாளர் இல்லையா என்ன? தென்னாப்பிரிக்காவில் அவர் கறுப்பர்களைப்பற்றி எப்பவுமே மட்டமாவே லெட்டர்களில், பத்திரிக்கைகளில் எழுதியிருக்காரே?”

“என்னன்னு?”

“காபீர்கள், அப்படி இப்படின்னு…எங்களுக்கு வந்த மெஸஜ்கள்ல நிறைய தகவல்கள் விவரமாக இருந்தன, அங்கிள்”

“அதுல இருந்தா உண்மையாகிடுமா? என்னன்னு விசாரிக்காம நம்பிடுவியா? சர்ச்சிலைச் சொல்லு, ஓகே”

இப்போது திரும்பியிருந்த தோள்களிலிருந்து தலையை மட்டும் திருப்பி புன்னகைத்தான்.

“அது மட்டும் எப்படி ஓகே, அங்கிள்?”

“அவர் பெரிய போர் வெற்றி வீரரல்லவா? நாயகன் அல்லவா?”

அமருக்கு இப்போது நிலை கொள்ளவில்லை. எதையும் பேச ஆரம்பிக்கும் முன் மனதில் அதை ஓட்டிக்கொள்ளும் வழக்கத்தை, பழக்கத்தை சட்டென மறந்துவிட்டார்.

இப்போது காந்தியைப்பற்றி பேசவா, சர்ச்சிலைப் பற்றி பேசவா என்று தெரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றார்.

பின்னர், “சர்ச்சில் என்னவெல்லாம் இந்தியர்களைப் பற்றி பேசியிருக்கிறார்; வங்காள பஞ்சத்திற்கு காரணமே அவர்தான்; இந்தியர்களை எலி என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்…” படபடத்தார்.

“அங்கிள், எல்லாவற்றிக்கும் பின்புலம் இருக்கத்தானே இருக்கிறது?” 

“அ? பின்புலம்?  என்ன பின்புலம்? எப்படி நியாயப்படுத்த முடியும்?”

“அங்கிள், எதையுமே கொஞ்சம் விரிவான பின் புலத்தில் பார்க்க முயற்சி செய்யுங்கள்; முஷ்டிகளை மடக்கும் விளையாட்டில் ஹிட்லரின் கை ஓங்கிக்கொண்டே போகின்றது; நேசப்படையினரின் கை தாழ்ந்து கொண்டே வந்தது.

வாழ்வா, சாவா என்ற பெரும் கேள்வி, லண்டனில் பாதி இடங்கள், ஜெர்மனியின் குண்டுகளால் நாசமாகிவிட்டன; எப்படியோ, அதீத சாவு எண்ணிக்கையைத் தவிர்த்து டங்கிர்கிலிருந்து தப்பி வந்தாகிவிட்டது; 

யுத்த காலத்தில் லண்டனின் உணவு ரேஷனைப் பற்றி தெரியுமா உங்களுக்கு? எத்தனை பிளாக் மார்க்கெட்? திருட்டுகள்?

பெரும் கப்பல், சாம்ராஜ்யம் மூழ்க போகிறது; பெரும் கோட்டையின் முக்கிய அறைகள் தீவிபத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. உரிமையாளர், கேப்டன் அவற்றைக் கவனிப்பாரா அல்லது பணியாளர்களின் குவார்ட்டஸ் மூழ்குகிறதே, எரிகிறதே என்று கவலைப்படுவாரா?”

“என்னது பணியாளர்களா?!”

என்ன எழவு மெட்டப்பார் இது, என்றுதான் அமருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதே சமயம்

சொற்களை கோர்வையாக சேர்க்க முடியவில்லை என்பதை கவனித்தார். மீண்டும் மீண்டும் முயன்றார்.

“என்ன இப்படி கொஞ்சம் கூட அறிவில்லாமல் பேசுகிறாய்? அட்டன்பரோவின் காந்தி படம் பார்த்திருக்கிறாயா? எத்தனையோ ஆஸ்கர்கள்; அப்புறம், அப்புறம், எத்தனை எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு..”

அவனது சுத்த, கணீர் இங்கிலிஷ் உச்சரிப்பைக் கேட்கும் போதெல்லாம் அவருடைய சுரத்து குறைந்து கொண்டது. 

“மொத்த ஐரோப்பாவே காலி அங்கிள்; பிரிட்டன் மட்டுமே எஞ்சியிருந்தது அங்கிள். 

போன ஆகஸ்ட் வங்கி விடுமுறை நாளில் டோவர் பீச்சில் நடை போனோம். ஒரு திருப்பத்தில், வெல்கம் டு ப்ரான்ஸ் என்று மொபைலில் டெக்ஸ்ட்! அத்தனை பக்கத்தில், இங்கிலிஷ் கால்வாயின் அந்த பக்கத்தில் கலே! ப்ரான்ஸ்! வானம் சுத்தமான நாளில் பைனாகுலர் இல்லாமலேயே கலேயிலிருந்து டோவரின் வெண் பாறை முகடுகளை பார்க்க முடியும். நாஸிகள் பார்த்தார்கள், அத்தனை பக்கத்தில் வந்துவிட்டார்கள்.

வரலாறில் இத்தனை வீக்கா நீங்கள்? இதற்கு எத்தனை புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? 

நார்விச், இந்த கவுண்டி, லண்டன், இங்கிலாந்து, பிரிட்டன், எல்லா இடங்களிலும் இன்னும் வரலாறு இருக்கிறது அங்கிள்.”

“என்னவோ, உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறேன் என்று சொன்னீர்கள், இவ்வளவுதானா உங்கள் அறிவு?”

கடைசி வாக்கியம் கூட முழுக்காரணமில்லை, அதை அத்தனை அழுத்தம் திருத்தமாக அவரைக் கவர்ந்த உச்சரிப்பில் கேட்டதுதான் அமரை நிர்மூலமாக்கிவிட்டது.

முன்னர் ஒரு முறை, கல்லூரி நண்பர்களுடன் கன்யாகுமரிக்கு சுற்றுலா சென்றிருந்தார். அந்தியில் மொத்த கூட்டமும் மேகத்தின் பின் மறைந்த சூரியன் கீழே மறையுமுன் வெளிப்படுமா என்று ஒரே திசையில் பார்த்துக்கொண்டிருக்க, இவர் மட்டும் ஓர் பாறையில் ஏறி நின்று கரையை கவனித்தார். 

கொஞ்சம் மேலே ஏறி நின்று பார்த்தாலே அந்தப் பார்வையே தனிதான்; எல்லாரையும் விட சற்று உயரத்திலிருந்து பார்த்தல் என்பது ஓர் வித்தியாசமான அனுபவம்தான். 

ஆனால் அடுத்த நொடியில் முதுகில் வந்த  அலைகளில் அறையில், நூறாயிரம் கைகள் ஒரே சமயத்தில் தள்ளிவிட்டது போல் தலைகுப்புற நீரில் விழுந்தார்.

நீருக்குள், நூறாயிரம் கைகள் ஒரே சமயத்தில் நூறாயிரம் திசைகளில் அவரை பிய்த்து இழுக்க முயன்றதை உணர்ந்தார். எதையுமே பற்றமுடியாமல் நீரினுள் தொங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்தார்.

வெளி உலக சப்தங்களெல்லாம் மெல்ல மெல்ல கரைந்து, மங்கிக்கொண்டே போயின.

பின்னர், பல சமயங்களில், கனவுகளில் அதை உணர்ந்தது உண்டு.

இன்றும் அப்படித்தான்.  எல்லா பக்கங்களிலும் இழுபட்டு, தொங்குவதை உணர்ந்தார். 

எல்லா திசைகளிலும் அசைய முயன்றார். ஒரு துளி கூட நகர முடியவில்லை. யதுவின் குரல் மங்கிக்கொண்டே போனது…

கூடவே, மோகனும், அனுவும், “யதூ…” என்று மங்கிய குரலில் அதட்டுவது கேட்டது…

“அங்கிள்…அங்கிள்” என்று அவர் வலது தோளைத் தொட்டு சற்றே உலுக்கியதை உணர்ந்த பின்புதான் ஓர் நிலைக்கு வந்தார்.

“இவ்வளவு சாம்பார் போதுமா உங்களுக்கு? சூடு செய்யப்போகிறேன்”

சாம்பார் இருந்த அந்த ப்ளாஸ்டிக் டப்பாவே பெரும் பனிக்கட்டி போலத்தான் இருந்தது. இது போன்ற பல பனிக்கட்டிகள், பல வண்ணங்களில் ப்ரீஸரில் இருப்பது நினைவிற்கு வந்தது.

ஒரு மாதிரி உறுமினார். 

“புரியவில்லை, இது போதுமா? இன்னொரு டப்பாவை வெளியே எடுக்கட்டுமா? உங்களுக்கு மட்டும்தான் இது. எனக்கு பிட்ஸா வந்து கொண்டிருக்கிறது” 

“யது, என்னதிது….காந்தியைப் பற்றி…”

அவன் தெளிவாகத்தான் இருந்தான்

“அங்கிள், உங்களுக்கே முதலில் முழுதாக தெரியவில்லை, முடிந்தால் போய் படியுங்கள். அப்புறம் பேசலாம். கொஞ்சம் கூகுள் செய்தாலே எல்லாமே தெரிந்துவிடப்போகிறது. இதெல்லாம் இன்றைய நாளில் பெரிய விஷயமா என்ன? இதற்காக லைப்ரரிகளுக்கெல்லாம் அலைய வேண்டுமா என்ன?”

பின்னாலிருந்து முன் வந்து அவரை நேருக்கு நேர் அருகாமையில் கண்கள் இமைக்காமல் நில நொடிகள் பார்த்தான்.

கண்கள் இமைக்காமல்…அமரின் இத்தனை வருட ஐடி வாழ்க்கையில் இதுவும் ஓர் பாடம்.

வாடிக்கையாளர்களிடம், தமக்கு கீழ் பேசுபவர்களிடம், கூட்டங்களில் பேசும் போதும் கண்களை இமைக்காமல் இருப்பதில் கவனமாக இருப்பார்.

எத்தனை வருடங்கள்….இது போன்ற பார்வைகள், பார்வைகளில் தொக்கி நிற்கும் கேள்விகள், இளக்காரங்கள், கேலிகள்…

கணக்கற்ற ஸ்பீட் பிரேக்கர்கள், அவரது இத்தனை வருட ஐடி வாழ்வில். 

அந்த கால வழக்கப்படி ஜெமினி மேம்பாலத்தின் அடியில் அமெரிக்க தூதரக வாசலில் மணிக்கணக்காக வரிசையில் நின்று ஸ்டாம்பிங் வாங்கி வந்த அடுத்த வாரம்தான் செப்டம்பர் 11 தேதி…

பின்னர், டாட்காம் என்று எல்லாரும் அடித்துப்பிடித்து அதன் பின் சென்றார்கள், அந்த குமிழ் வெடித்தது; அதனால் ப்ராஜக்ட்கள் குறைகின்றன என்றார்கள். அப்புறம் இன்னொன்று, அப்புறம் இன்னொன்று.

ஏதோ Subprime பிரச்சனை அதனால் பட்ஜெட்களில் துண்டு விழுந்து நிறைய ப்ராஜ்க்ட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்றார்கள்.

பின், லேமேன் குலைந்துவிட்டது, யுரோ கடன்…பின்னர் பெரும் குண்டாக கோவிட் வந்து விழுந்தது. என்றென்றும் காலை எழுந்தவுடன் லேசாக அடைத்துக்கொள்ளும் சளி போல, என்றும் பணவீக்க புலம்பல்கள்.

இதற்கு இடையில் தொழில் நுட்பங்களின் மாற்றங்கள் ஆர்டிபிஎமெஸ், இரண்டு, மூன்று அடுக்கு ஆர்கிடெக்‌ஷர், டேட்டா வேர்ஹவுஸ், ஏரி,குளம், ஜாவா…அதைத்தொடர்ந்த எத்தனையோ…அத்தனையையும் க்ளவுட் எனும் மேகத்தில் பொதிந்து வைக்கும் சாமர்த்தியம்…

எல்லாருமே இப்போது சாமர்த்தியம்தான். சாமன்ய வாடிக்கையாளர்களும் டேட்டா, டேட்டாபேஸ், இப்போது க்ளவுட் – எதையும் மேம்போக்காக சொல்லி தப்பிக்க முடியாது.

இந்த முறை இங்கிலாந்து பயணத்தில் ஏஐ/ செயற்கை நுண்ணறிவைப் பற்றி குறிப்பிடாத மீட்டிங்கே இல்லை!

எத்தனை எத்தனை  உயரமான ஸ்பீட் ப்ரேக்கர்கள், எத்தனை எத்தனை எதிர் காற்றுகள், எதிர் அலைகள் எத்தனை எத்தனை ஏளனச் சொற்கள், பார்வைகள்…

இருந்தும் இருந்து கொண்டுதானே இருக்கிறோம்…இந்த சின்ன பயலின் ஓர் பார்வை, அத்தனையையும் திரும்ப நினைவிற்கு கொண்டு வந்துவிட்டது…

வீட்டு அழைப்பு மணி ஒலித்ததும், பிட்ஸா டெலிவரி செய்தவரிடம் யதுவின் நன்றியும், பின்னர் அவன் மர மாடிப்படிகள் தொப்பு தொப்பென ஒலிக்க, “எஞ்ஞாய் சாம்பார் லஞ்ச் அங்கிள்….ஹாப்பி ரீடிங்!” என்றதும் அவருக்கு மேகத்திலிருந்து கேட்டன.

அடுத்த இதழில் முடியும்


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “JANUS”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.