என் வீட்டுப் பின்பக்கம் ஒரு காலி மனை இருந்தது.அதனை விலைக்கு வாங்க முடியுமா என்ன, அது எல்லாம் இப்போதைக்குச் சாத்தியமே இல்லை. நான் மாதச்சம்பளம் வாங்கி நாட்களை ஓட்டும் நடுத்தரக் குடும்பத்துக்காரன். அதற்குத்தான் பிராப்தம் இல்லை விடுங்கள் அந்த மனையை விலைக்கு வாங்கி வீடு கட்டிக்கொண்டு வரும் அந்த யாரோ ஒரு நபராவது நல்ல மனிதராக வந்தால் அதுவே நிம்மதி என்றிருந்தேன். ஆடை வாய்க்கறதும் ஆம்படையான் வாய்க்கறதும் நம்ம கையில இல்லேன்னு என் தாயார் அடிக்கொருதரம் சொல்வது ஏனோ ஞாபகத்திற்கு வந்துபோனது.
பழைய மகாபலிபுரம் சாலையில் தகவல் தொழில் நுட்பத்தில் பணி செய்யும் ஒரு தம்பதியர் அந்த காலி இடத்தை வாங்கினார்கள். அம்மாதிரி ஆட்கள் மட்டுமே இப்படி கொட்டிக்கொடுத்து மனை வாங்கவும் முடியும்.’ வா ராஜா வா’ என்று வங்கிகளும் அவர்களைத்தானே வரவேற்கும். வீட்டுக் கடன் கொடுத்து விட்டு ஒன்றுக்கு ரெண்டாய் திரும்பவும் வசூலித்துக்கொள்ளவும் சாத்தியப்படும். அப்படி மனை வாங்கியவர்கள் வீடு கட்டும் வேலையைக் காண்ட்ராக்ட்டுக்கு விட்டார்கள். பூமி பூஜை முடிந்தது.அய்ந்து செங்கற்கள் மஞ்சள் பூசி குங்குமம் வைத்துக்கொண்டு குழிக்குள்ளே சயனித்தன.கடைக்கால் தோண்டுவதற்கு ஜே சிபி இயந்திரங்கள் உறுமிக்கொண்டு வீதிக்கு வந்தன. தெருச்சாக்கடை சிமெண்ட் கால்வாயை உடைத்துக் கொண்டு அந்த இயந்திரங்கள் காலி மனைக்குள் நுழந்தன. மண் வெட்டும் பணியில் மும்முரமாயின. நான் நேராக ஜேசிபி ஓட்டுனரிடம் போனேன்.
‘தெருச்சாக்கடை போகும் சிமெண்ட் கால்வாயை இடிச்சிட்டியே இது சரியா.இப்ப என்ன செய்றது. இந்த சாக்கடை காவா கட்ட இதே தாம்பரம் முனிசிபாலிட்டிக்கு எத்தினி நட நாங்க நடந்திருப்பம் உனக்கு தெரியுமா’ என்றேன்.
‘வூடு கட்டறவருகிட்ட பேசுங்க. இல்லன்னா அந்த பில்டிங் காண்ட்ராக்டர் கிட்ட பேசுங்க. நா சும்மா கூலிக்காரன்’
‘காசு குடுத்தா மனுசாளு மேலயும் ஒன் வண்டிய ஏத்திடுவயா’
‘சாரு ஓவரா பேசாதிங்க. நா அவங்ககிட்ட பிரச்சன வரும்னு மொத சொல்லிட்டேன். ஒனக்கு கொடுத்த வேலய மட்டும் நீ பாரு. அப்பிடி மீறி வர்ர பிரச்சனை எதுவானாலும் நாங்க பாத்துக்குவோம்னு சொன்னாங்க’
மனைவாங்கி வீடு கட்டும் அந்த ஐ டி பொறியாளர் வேக வேகமாக என்னை நோக்கி வந்தார்.
‘இப்ப என்னன்றே நீ’ என்னை விரட்டினார். என்னை ஒருமையில்தான் விளித்தார். அந்தப்படிக்குத்தானே நானும் இருக்கிறேன்.
‘தெருச்சாக்கடை காங்கிரீட் செவுத்த ஒடச்சிட்டியேன்னுதான் நா ஜே சி பி டிரைவரை கேக்குறேன்’
‘அதுக்கென்ன இப்ப. ஒன்னால என்ன செய்ய முடியுமோ அத செஞ்சிக. போ’
‘படிச்சவங்க நீங்க உத்யோகத்துல இருக்குறவரு இப்பிடி பேசுறீங்க. நா முனிசிபல் ஆபிசுக்கு போயி அந்த ஈ ஓ கிட்ட இப்பவே கம்ப்ளெயின் பண்ணப்போறன்’
‘ஆரு கிட்ட வேணாலும் சொல்லிக்க. அவாள் ஆரும் இங்க வந்து என் மசுரை ஒன்னும் புடுங்க முடியாது’ குரலை உயர்த்திக்கொண்டார். அதன் பிறகு அவரிடம் நான் ஒரு வார்த்தையும் பேசவில்லை. தெருச்சாக்கடைச்சுவர் இடிந்து போனது இடிந்து போனதுதான். கால்வாயில் சுவரின் இடி பட்ட பொக்கை அப்படியே இளித்தது. பில்டர் வாஸ்து பார்த்து அமோகமாய் வீட்டைக் கட்டினார். நாள் நட்சத்திரம் பார்த்து அந்த ஐ. டி க்காரர் குடி புகுந்தார். கிரகப்பிரவேசத்திற்கு எல்லாம் என்னை அவர் அழைக்கவுமில்லை. எப்படி அய்யா அழைப்பார்.

அவர் வீட்டுத்தோட்டத்திற்கும் என் வீட்டுத் தோட்டத்திற்கும் இடையே ஹாலோ பிளாக் வைத்த ஒரு கட்டைச்சுவர்.அது என் மனையின் எல்லையில் நான் எழுப்பியது. நான் தானே இந்தப்பகுதியில் அவருக்கு முன்னம் குடியேறியவன். ஆகத்தான். அந்தக்கட்டைச்சுவர் ஏன் சும்மா கிடக்கிறது. அதன் மீது புது வீடு கட்டிக்கொண்டு குடி வந்த ஐ. டிக்காரர் வரிசையாய் பூந்தொட்டிகளை வாங்கி வந்து நீட்டாக அடுக்கினார். நர்சரியிலிருந்து பூஞ்செடிகள் வாங்கி வந்து ஒவ்வொன்றிலும் நட்டு வைத்தார். நான் எழுப்பியது அந்த காம்பவுண்ட் கட்டைச்சுவர். அது எனது சக்குபந்தி எல்லைக்குள் இருப்பது. அவர் மீது எனக்குச்சரி கடுப்பாகத்தான் இருந்தது.
’ஒரு வார்த்த என்னண்ட சொல்லுணும்னு தோணலயா ஒங்களுக்கு’ நான் அவரைப்பார்த்துக் கேட்டுவிட்டேன்.
‘இப்ப என்ன நடந்து போச்சின்னு பேசுற நீ. பூக்குற செடிவ வாங்கியாந்தேன். ஒன் கட்ட செவுத்து மேல சிமெண்ட் தொட்டி வச்சன். அதுவுள அதுல நட்டும் வச்சிட்டேன்’
‘அதான் ஏன்னேன்’
‘என் இஷ்டம் அது செஞ்சேன்’
‘ என் கட்ட செவுறுல்ல’
‘அது பொது செவுறு’
‘நா வச்சது’
‘யாரு எடம் அது’
‘என் எடம்தான்’
’இப்ப நீ இடிச்சிக அதே எடத்துல நா சிமெண்ட் செவுத்த வச்சிக்கறேன்’
‘என் எடத்துலதான் அந்த செவுத்த நா வச்சிருக்கேன்’
‘எல்லக் கோட்ட கோணலா போட்டு கிட்ட அது மேல செவுறு வச்சிருக்கே. நீ வச்ச செவுறு என் எடத்துல இருக்கு. ஆனா செவுத்து கல்லும் சிமெண்டும் ஒன்னுது’ அடாவடியாய்ப் பேசினார்.
இனி பேசினால் விபரீதம் ஆகி அடி தடியில் முடிந்துவிடுமோ என்கிற அச்சம் எனக்குள் முளைத்துக்கொண்டது.
அடுத்தவரிடம் எப்படி பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற அடிப்படை நாகரீகம் தெரியாதவர் என்று முடிவு கட்டினேன். அவர் வீட்டு வாழை மரம் என் வீட்டுத் தோட்டத்தில் அதன் இலைகளை நீட்டி ஆக்கிரமித்தது. அவர் வீட்டு எலுமிச்சை மரம் அதன் கிளைகளை என் வீட்டுத்தோட்டத்தில் பரப்பியது.குண்டு குண்டாய் எலுமிச்சைக் காய்கள் காய்த்துத்தொங்கின . சில காய்கள் பளிச்சென்று மஞ்சள் நிறத்தில் பழுத்தும் இருந்தன. நான் அவைகளைக் கண்களால் பார்த்துக்கொண்டேன் அவ்வளவே.
என் வீட்டு வாழை மரம் அதன் இலைகளை தப்பித்தவறி அவர் வீட்டுப்பக்கமாய் வெடித்து நீட்டி விட்டால் அதன் நீண்ட இலைகளை ஒடிப்பார். என் வீட்டுத் தோட்டத்திற்குள்ளாக அவைகளை மடக்கித் தொங்க விடுவார். என் வீட்டு கருவேப்பிலை மரம் அவர் வீட்டுப் பக்கம் தனது கிளைகளை துருத்தினால் அதனை வளைத்து மடக்கி என் வீட்டுத் தோட்டம் பக்கமே திருப்பி அனுப்பிவிடுவார். சப்பித் தின்று விட்டு மீந்தபோன நீலம் மாம்பழக்கொட்டைகளை என் வீட்டுத்தோட்டத்தில் வீசுவார். சமையலுக்கு வாங்கிய கோழி முட்டை ஓடுகளை என் வீட்டுத்தோட்டத்தில் அவர் இஷ்டத்துக்குக் கெடாசுவார். அவ்வப்போது சமையலறைக் குப்பைகளை என் தோட்டத்தில் கொட்டி முடிப்பார். நான் பதிலுக்குப் பதில் ஏதேனும் செய்யலாமா என்று சில சமயம் யோசித்ததுண்டு. ஆனால் அப்படிச் செய்வதற்குத்தான் என் மனம் இசையவில்லை. அது அவர் குணம். மனம் திருந்துவாரா பார்க்கலாம் என்று இருந்தேன்.அவர் திருந்துபவராகவேயில்லை. இவர் மனம் திருந்தினார் அவர் மனம் திருந்தினார் என்கிற வரலாறு எல்லாம் சினிமா வசனத்தில் இருக்கலாம். ஏதேனும் கற்பனைக் கதைகளில் மட்டுமே இதுகள் சாத்தியப்படும் என்பது யதார்த்தம்.
கணவனுக்கும் மனைவிக்கும் லட்சங்களில் மாத சம்பளம். கார் சொந்தமாய் வாங்கி வைத்துக்கொண்டு அலுவலகம் போவார் வருவார். வாழ்கின்ற பேரூரை சுற்றி வருவார்.
இரண்டு தோட்டத்திற்கும் குறுக்கே நிற்கும் கட்டைச்சுவரில் அவர் வீட்டுப்பக்கமாய் பத்து செங்கல் ஃ வடிவத்தில் வைத்து ஒரு வெந்நீர் அடுப்பு ஏற்பாடு செய்தார். அதனில் தினம் தேங்காய் மட்டை காய்ந்த சோலை குச்சி வைத்து எரியவிட்டார். எந்த பச்சைச் செடியும் அவர் வீட்டு பக்கம் எட்டிப்பார்த்தால் அவை அனலில் வாடும் கருகும் காய்ந்து சருகாய்ப் போய்விடும். என்ன படிப்போ என்ன உத்யோகமோ, அவர் மீது என் கோபம் கூடிக்கொண்டே போனது. மனித மதிப்பும் இற்றுக்கொண்டது.
திடீரென்று ஒருநாள் நானே பார்த்தேன் அவன் வீடு பூட்டியிருந்தது. அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் வெளியில் நின்று தனது வீட்டு கொய்யாமரத்தை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.
‘சார் இந்த பக்கத்துவீட்டு தம்பி ஊர்ல இருக்காரா’ மரியாதையாய்த்தான் விசாரித்தேன்.
‘இல்லையே. அந்த தம்பி அந்த அம்மா ரெண்டு பேரும் வெளிநாடு போயாச்சி’
‘இண்டர்னேஷ்னல் டூர் எதாவது போயிருக்காங்களா’
‘டூர் இல்ல சார். ரெண்டுபேருக்குமே இப்ப லண்டன்ல ஹெட்குவார்ட்டர்ஸ் டியூட்டி. ஊர் திரும்பி வர மூனு வருசம் ஆகும். என் கிட்ட சொல்லிட்டுதான் போனாரு’
‘அதான் அவுரு வீடு பூட்டிகிடக்குதா’
‘அவர் வீட்டு சாவிய என்னண்ட குடுத்துருக்காரு.’
‘அது எதுக்கு’
‘இது என்னா கேள்வி சாரு. கட்டுன வீட்ட யாருனா அப்டியே சும்மா போட்டு வச்சிருப்பாங்களா அத வாடகைக்கு விடணும்ல. அதுக்கான விளம்பரம் வீடு வாடகைக்கு விடறம்னுட்டு நெட்ல போட்டுருக்காரு. யாராவது வாடகைக்கு நிச்சயம் வருவாங்க. அந்த வீட்டு சாவிய நா அவாளண்ட ஒப்படைக்கணும்’
‘அதுவும் சரித்தான்’ சொல்லிய நான் அவர் வீட்டு வாயிலில் நிற்கும் அந்தக் கொய்யாமரத்தை அது பூக்களும் பிஞ்சுகளுமாய் பளு நிறைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தேன்.
‘என்னா ஒரு ஜாடையா பாக்குறீங்க’
‘ஒன்னும் இல்ல’
‘என்னா சாரு ஒன்னும் இல்லன்னு முழுசா ஒரு பொய்ய சொல்றீங்க.. நம்ம தெருவுல கொரங்குவ ஒன்னு ரெண்டு சுத்தி சுத்தி வருது. என் கொய்யாமரம் போச்சி மொட்டதான். கொய்யாக்காயாவது பழமாவது’
‘நமக்கு பொறுப்பு இருக்கு நாமளும் காய்த்த மரத்த பாத்துகணும்ல’
கொய்யாமரத்துக்காரர் மனைவி மண் சட்டி ஒன்றின் முதுகுப் பக்கத்தில் வெள்ளையும் கருப்புமாய் புள்ளி வைத்தாள். தெருவில் வருவோர் போவோர் கண்ணில் படுமாறு அந்தச்சட்டியைக் கொய்யாமரக் கிளையில் மாட்டி வைத்தாள். அவளும் தன் வாயால் நம்மை எதாவது ஏடாகூடமாய்ச் சொல்லிவிடப்போகிறாளே என்று என் வீட்டுகுத் திரும்பி வந்தேன்.
ஒரு பத்து நாள் சென்றது. பூட்டிக்கிடந்த பின் வீட்டிற்கு முடிச்சூர் மெயின் பஜாரில் கசாப்புக்கடை வைத்திருக்கும் பாய் ஒருவர் குடி வந்தார் தோட்டத்துப் பக்கமாய் இரண்டு முறை அவரைப் போய் பார்த்து வந்தேன். அந்த பாய் ஒன்றும் பேசுவதாய்த் தெரியவில்லை. முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டுதான் இருந்தார். இவரிடம்போய் அப்படி நமக்கென்ன பேச்சு என்று இருந்துவிட்டேன்.
ஒருநாள் அகஸ்மாத்தாக வீட்டுப் பின்பக்கம் போனேன். என் வீட்டுத்தோட்டத்தில் நின்று கொண்டு மண் தரையைப் பார்த்தேன். தின்றுத்துப்பிய கரும்புச் சக்கைகள் முட்டு முட்டாய்க் கிடந்தன. அத்தனையையும் கூடையில் அள்ளினேன். என் தோட்டத்தை சுத்தம் செய்தேன். வேறு ஒரு நாள் நுங்கு சாப்பிட்டு விட்டு மீதமாகிப்போன அனேக பனங்காய் மட்டைகள் கிடந்தன. வேறு ஒருநாள் கோழி இறக்கைகள் கன்னா பின்னாவென்று வீசப்பட்டிருந்தன .தோட்டத்தைப் பார்ப்பதற்கே மனம் சங்கடப் பட்டது. அது சமயம் அந்த வீட்டில் குடி வந்திருக்கும் பாய் வீட்டுத் தோட்டத்துப் பக்கமாயும் வந்தார்.
‘இப்பிடி என் தோட்டத்துல குப்பையை அள்ளி அள்ளி வீசலாமா பாயி’ என்றேன்.
‘நாங்க ஒரு பிட் பேப்பரயும் அடுத்தவங்க மண்ணுல போடுறது இல்ல’
‘பின்ன எப்பிடி இந்த குப்பையெல்லாம்’
‘என்கிட்ட ஏன் சார் கேக்குறீங்க இதெல்லாம்’
‘உங்க வீட்லேந்துதான் இந்த குப்பைங்க வந்துருக்கு’
‘உங்க கண்ணால பாத்திங்களா’
நான் அமைதியாக நின்றேன். இவரிடம் பேசுவதில் பயனில்லை என்று முடிவு செய்தேன். இந்த வீட்டைக் கட்டி முடித்தவருக்கு சளைக்காமல் வாடகைக்கு வந்த முடிச்சூர் பாயும் பேசுகிறார் என்கிற முடிவோடு திரும்பி விட்டேன். மற்றொரு நாள் வெற்றிலை பாக்கு போட்டு மென்ற எச்சிலை என் வீட்டுத்தோட்டத்திலும் அந்தக் கட்டைச் சுவர் மீதும் துப்பி துப்பி அசிங்கப் படுத்தியிருந்தார். இதற்கெல்லாம் முடிவே கிடையாதா என்கிற கவலையோடு சற்று நேரம் நின்று பார்த்தேன். எனக்குத்தான் பி. பி ஏறிக்கொண்டு போயிற்று. இனி இதற்கு என்ன தீர்வு என்கிற கவலை என்னைப் பற்றிக்கொண்டது. அதன் பிறகு என் தோட்டத்துப் பக்கமே போகாமல் இருந்து விட்டேன்.
ஒரு நாள் என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தேன். என் பின் பக்கத்து வீட்டில் குடியிருந்த முடிச்சூர் பாய் ஒரு வாழை மரக்குலையை வெட்டி எடுத்துக்கொண்டு போனார். அவை வெறும் கருக்காய்ப் பிஞ்சுகள். ஒன்றுக்கும் உதவாது. அதனை வெட்டிக்கொண்டு போகிறாறே என்று பார்த்துக் கொண்டே இருந்தேன். மறுநாள் அந்த முடிச்சூர் கறிக்கடை பாய் வீட்டைக் காலி செய்து டிராக்டரில் சாமான்களை லோடு செய்துகொண்டிருந்தார். இனி பிரச்சனை இல்லை என்று சற்று நிம்மதியாய் இருந்தேன். நாட்கள் சில போனது. தோட்டத்துப் பக்கமாய்ச் சென்று எட்டிப் பார்த்தேன். பழையபடி என் வீட்டு வாழை மரத்தின் இலைகள் பின் பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்தவை எல்லாம் ஒடிக்கப்பட்டு தொங்க விடப்பட்டிருந்தன.அந்தப்படிக்குக் கறிவேப்பிலைக் கிளைகளும் மொட்டை மொட்டையாய் ஒடிக்கப்பட்டிருந்தன.
இது எப்படி நிகழ்ந்தது என்று குழப்பிக்கொண்டேன். மொட்டை மாடியில் யாரேனும் இருக்கிறார்களா அண்ணாந்து பார்த்தேன். என் குழப்பம் தீர்ந்தது.அந்த லண்டன் சென்ற ஐ. டி மனிதர் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தார். தாய் நாடு திரும்பிய அந்தக் கணிப்பொறியாளர் தன் மாற்று குறையாமல் அப்படியே மொத்தமாய்த்தான் தான் திரும்பி வந்திருக்கிறார். மேகத்தை விஞ்சிய விமானப் பறப்பும், தேம்ஸ் நதிக்கரை இருப்பும், பெற்றிட்ட செயற்கை நுண்ணறிவும் மானிட வக்கிரங்களின் முன்பாக மண்டியிடவே செய்கின்றன.
****
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
