பெர்லினும் தமிழ் இலக்கியத்துக்குள் வந்தாச்சு

தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு. எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது. இது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்துதான்.

சிதம்பர ரகசியம் – பூர்ணசந்திர தேஜஸ்வி

தேஜஸ்வியின் கத்தி மிகக் கூர்மையானது. சாதி சமயம் பார்க்காமல் அது அனைவரையும் கண்டதுண்டமாக்குகிறது. மூடத்தனம், பேராசை, மடமை போன்ற நற்குணங்கள் உலகளாவியவை. தன் சாதியின் வசதிகளையும் சமயப் பிரிவினைகளையும் பயன்படுத்திக் கொண்டு லம்பாடி பெண்களைச் சுகிக்க விரும்பும் வேசையாக இருக்கும் பிராமணன்; அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு சட்டத்துக்குப் புறம்பாக காட்டு மரங்களை வெட்டும் இசுலாமியனான சுலைமான் பேரி, பணித்திறமையற்ற கல்லூரி முதலாளி; ஒரு நாவலாசிரியனிடம் மர்மக்கதை எழுதச் சொல்லி கொலைக் குற்றவாளியைத் துப்பறியும் அபத்த உளவாளி அங்காடி; திருடும் லம்பாடிகள்; சாதி அமைப்பைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தலித்துகள் – தேஜஸ்வி யாரையும் விட்டுவைப்பதில்லை.

தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்

தி இடியட் நாவலில் தாஸ்தயெவ்ஸ்கி தன் கிறித்தவ லட்சியவாதக் கற்பிதங்கள் அனைத்தையும் அவற்றின் நேர்மறைப் பொருளில் மிஷ்கின் என்ற துயர உருவத்தைக் கொண்டு உருவகிக்க முயற்சிக்கிறார். தன் வாழ்வின் நிகழ்வுகள் பலவற்றை உள்ளடக்கி, அவர் எழுதியவற்றில் மிக அதிக அளவில் சுயசரிதத் தன்மை கொண்ட நாவல் இது,,,,,இவ்வுலகில் ஆதார நியதியின்படி ஆளுமையை எப்போதும் … அகங்காரம் இடைமறித்து” நின்று கொண்டிருப்பதால் “இயேசு சொன்னவாறு தன்னைப் போல் பிறரை நேசிப்பது” என்பது அசாத்தியமாகவே இருக்கிறது.

கண்மணி குணசேகரனின் “வந்தாரங்குடி“

தொழில் மயமாக்கலும், தாராளமயமாக்கலும் தொடர்ந்து நிலங்களின், பண்பாட்டின், மனிதர்களின் தனிப்பட்ட அடையாளங்களை அழித்து பொதுவான அடையாளமொன்றை நிறுவும் முனைப்புடனே நம் முன் விரிகின்றன. பெயரில் இருந்த தனித்துவங்களை இழந்து வெகு காலமாயிற்று. இப்போது நாம் நமது மொழி, உணவு முறை, மருத்துவ முறை, உடைகள், கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என்று ஒவ்வொரு அம்சத்திலும் உள்ள தனிப்பட்ட அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோம்.

புத்தகங்களும் புனிதங்களும் – ரே பிராட்பரியின் ஃபாரன்ஹீட் 451

புத்தகங்களில் உள்ள விஷயங்களைக் கண்டு நாம் கொதிப்படைகிறோம் என்பது, அதில் உள்ள விஷயங்களின் நம்பகத்தன்மைக்கும் அப்பால், புத்தக வடிவில் வரும் காரணத்தால் மட்டுமே அதன் உள்ளடக்கத்துக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்துவிடுகிறது என்பதை நாம் அறிந்திருப்பதை உணர்த்துகிறது. பொய்களை எவரும் புறக்கணித்துவிட முடியும். ஆனால், அவை உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் இருக்கும்போதுதான் அந்தப் பொய்கள் ஏற்றுக்கொள்ளக் கடினமாகவும், உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இருக்கின்றன.

ஒற்றன்

மனிதர்களையும் அவர்களது குணாதிசயங்களையும் நுணுக்கமாக பின்தொடர்கிறது அவருடைய மனம். சிறு சிறு சங்கடங்களையும் கவனிக்கிறது. வரிசையில் நிற்கும் பெண்ணின் காலத்தால் பிந்திய புகைப்படம் அவளுக்கு எழுப்பும் சங்கடத்தை உணர்த்துகிறார். ‘எனக்கு மனிதர்கள் பிரச்சனையாக இருக்கவில்லை. நிறையவே மனிதர்கள். கருப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணை பறிக்கும் வெள்ளை, ஆங்கிலம், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்ப படித்தவர்கள், படித்தவர்கள் போலப் பாவனை செய்பவர்கள். ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது எல்லாரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள்.’

ராகவேந்திர பாடீலின் "தேரு"

நம்பிக்கை, சடங்குகள், தொன்மம் முதலான கேள்விகளுடன் கிராமம் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகளையும் நாவலினூடே விவரிக்கிறார் பாட்டில். இவற்றுக்குள் மிக ஆழச் செல்லும் தேவையைத் தவிர்த்து மிக புத்திசாலித்தனமாக அவர் இந்த பிரச்சினைகளை கவனப்படுத்துகிறார். சோமப்பாவின் பாத்திரத்தைக் கொண்டு கிராம வாழ்வின் பன்முகத் தன்மையையும் எப்போதுமிருக்கும் சமய வேறுபாடுகளையும் இந்நாவலில் விவரித்திருக்கிறார். சோமப்பா ஒரு ஜைனராக இருந்தாலும்கூட அவர் விட்டலனை நம்புகிறார், தேரோட்டம் துவங்கும்போது விழாக் கொண்டாட்டங்களில் எப்போதும் அவர் முன்னிற்கிறார்.

கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை'

இக்கதையில் வரும் பெண்களில் ஒருத்திகூட பலவீனமானவள் அல்ல. கணவன் இறந்த பின் ஒற்றை ஆளாய் கூலிக்கு உழைத்து தன் மூன்று பெண்களுக்குத் திருமணம் செய்து மகனையும் ஐ.டி ஐ வரை படிக்க வைக்கும் பாக்கியம். அஞ்சலை படும் பாட்டால் மனமொடிந்து போன நிலையிலும் மாட்டை கார்குடலிலிருந்து மணக்கொல்லை வரை ஓட்டி வந்து அஞ்சலை கன்னுக்குட்டியைத் திருடவில்லை என நிரூபிக்கிறாள். பெரிய அக்கா கல்யாணி, வெளிப்படையாய் கொழுந்தனுடன் உறவு வைத்துக்கொள்வது மட்டுமில்லாமல் ஊர்வாயை அடக்கவும் தெரிந்தவளாய் இருக்கிறாள். அவர்கள் இவளை ஒதுக்குவது பற்றி இவளுக்குக் கவலை இல்லை. சின்ன அக்கா தங்கமணி தன் அன்பாலும், நல்ல குணத்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களிடையே ஒரு பாலமாய் இருக்கிறாள். அஞ்சலையை ஊர்வாய் சீண்டிகொண்டே இருப்பதில் அவள் அடிபட்டாலும், அது அவளை ஒடுங்கச்செய்வதில்லை.

வம்ச விருக்ஷா – எஸ் எல் பைரப்பா

சிந்தனைகளின் மோதல்’ என்றுகூட இப்புத்தகத்துக்கு தலைப்பு வைத்திருக்கலாம். ஸ்ரீனிவாச ஷ்ரோதிரி, சதாசிவ ராவ், காத்யாயனி என்ற மூன்று மையப் பாத்திரங்களைக் கொண்டு இந்த மோதலை நாவல் உருவாக்குகிறது. ஸ்ரீனிவாச ஷ்ரோத்ரி பீஷ்ம பிதாமகர் போன்ற ஒரு பாத்திரம். தன்னைச் சுற்றிலும் துன்பகரமான நிகழ்வுகள் அரங்கேறக் கண்டும் கலங்காமல் சமநிலை காக்கும் மனத்தெளிவு அடைந்த ஆதர்ச பாத்திரம் இவர். சாஸ்திரங்கள் பயின்ற, மிகவும் மதிக்கப்படும் சம்ஸ்கிருத பண்டிதர், இந்து மரபில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர். சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டு வாழப்பட வேண்டியதே வாழ்க்கை என்று அவர் நம்புகிறார்.

என்றுதானே சொன்னார்கள் – கவிதைத் தொகுப்பு

இப்போதும் பசியும் வறுமை சார்ந்த அவலங்களும் இருக்கின்றன, ஆனால், மொத்த சமூகமே மிகச் சிக்கலானதொரு வலைப்பின்னலுக்குள் வந்துவிட்டிருக்கிறது. தற்காலத்தின் மிகப் பெரிய அவலமே, இப்புதிய யதார்த்தத்தை உணர்ந்துகொள்வதற்கான அவகாசத்தையோ அவசியத்தையோ அளிக்காத பிழைப்புச் சூழல்.இன்று எத்தனைக் கவிஞர்களால் புல்வெளிகளைப் பற்றியோ நதிகளைப் பற்றியோ மலைகளைப் பற்றியோ எழுத முடியும்?

தாலிபான் பின்புலத்தில் இரண்டு ஆஃப்கன் நாவல்கள்

செப்டம்பர் 11-க்கு முன் மத்தியக் கிழக்கு நாடுகளின் இலக்கியங்கள் மிகக் குறைவாகவே ஆங்கிலத்தில் மாற்றப்பட்டன. ஆனால் அபுனைவுகள் அதிகமாக எழுதப்பட்டன. முக்கியமானவையாக அகமத் ரஷீதின் ‘தாலிபான்’. பெர்னார்ட் லூயிஸ், எட்வர்ட் சயீத் போன்றோரின் புத்தகங்களும் உண்டு. ஆனால் பொது மக்களிடம் இத்தகைய புத்தகங்களைத் தேடிச்சென்று படிக்கும் பழக்கம் செப்-11-க்குப் பிறகு அதிகரித்தது. ஒரு கட்டுரையின்படி 1997-ல் 793 மத்தியக்கிழக்கு சம்பந்தமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்தன என்றால் 2004-ல் 1304 புத்தகங்களாக உயர்ந்தன. லியொன் வைஸெல்டியெர் (Leon Wieseltier) கூறியபடி, ’செப். 10 2001 வரை மேற்குலகமக்களுக்கு இஸ்லாம் என்றால் அவ்வளவாகத் தெரியாது. செப்.12 2001 அன்று அதே மக்களுக்கு இஸ்லாம் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது’.

இரு ஓவியர்களின் உரையாடல்கள்

ஓவியர்கள் அல்லவா? அழகு பற்றி, அலங்காரங்கள் பற்றி பேசுகிறார்கள். அலங்காரங்கள் அழகுக்காகவும் தான். ஓவியமும் சிற்பமும் அழகானவை தான். அலங்காரங்கள் ஏதுமற்ற புத்தர் சிலையும் நடராஜரும் அழகானவை மட்டுமல்ல. அதை மீறி படைப்பாகவும் உயர்வு பெறுகின்றன. படைப்பு எது. அலங்காரம் எது? அழகு எது? எப்போது அழகு படைப்பாக ஒரு சிருஷ்டியாக உயர்கிறது என்றும் சர்சிக்கிறார்கள். எதுவும் ஒரு பொருள் பற்றி என்று திட்டமிட்டுப் பேசுவதில்லை. பேச்சு அன்றாட வாழ்க்கையின் எது பற்றியும் பேசத் தொடங்கினால், சூழல் அடைந்து வரும் சீரழிவு பற்றிப் பேச்சு செல்வது நிர்ப்பந்தமாகிறது. அச்சூழல் ஒவியர்களாக அவர்களைப் பாதிக்கும் சூழல் அது.

6174 – நாவல் விமர்சனம்

சுஜாதா முன்னேற்றமும், குழப்பமும் நிறைந்த அறிவியல் சூழலில் மனிதனின் இடத்தை பிரபஞ்சத்தில் தேடும் கதைகள் என்று வகைப்படுத்துகிறார் (விஞ்ஞானச் சிறுகதைகள், ஜீனோ). ஜெயமோகன் மானுட ஆழ்மனமும் அறிவியலும் சந்திக்கும் புள்ளி அறிவியல் புனைகதை என்கிறார்.

அந்தரங்கச் சுரங்கம்: ஸாங்க்டம்-டெனீஸ் மைனாவின் நாவல்

நாவலின் இறுதி முக்கிய முடிச்சு அவிழும் இடத்திற்கான முன்னெடுப்புக்களை(lead) இயல்பானதாக உருவாக்க மினா முயன்றாலும், சற்று அள்ளித்தெளித்த அவசர கோலம் போல் தோன்றுகிறது. ஆனால் நாவலை மொத்தமாக பலவீனமாக ஆக்கி இருக்கக்கூடிய சூழலை மினா மீட்டு விடுகிறார். அந்த முக்கிய வெளிப்பாடு (revelation) நடந்த பின், நாவல் இப்படித்தான் பயணிக்கும்/பயணிக்கமுடியும் என நாம் நினைத்தால் அதற்கு மாறாக செல்கிறார் மினா.

ஜாய்லேண்ட் – ஸ்டீஃபன் கிங்

கிங்கின் வெற்றி நாஸ்டால்ஜியாவின் வெற்றி. அவரது கதையின் வெற்றி இன்பங்களை, கதாநாயகனின் இன்பங்களை மட்டுமல்ல, பிளாட், சஸ்பென்ஸ், த்ரில், க்ளைமாக்ஸ் போன்ற வாசக இன்பங்களையும் தள்ளிப்போடுவதில் கிடைக்கும் வெற்றி – பாதி கதைவரை நம்மால் இது பேய்க் கதையா, காதல் கதையா, குற்றப் புனைவா என்று எதுவும் தீர்மானிக்க முடிவதில்லை, நினைவுகளைத் தாண்டி கதை எங்கும் செல்வதில்லை.

ராக் தர்பாரி

வைத்யஜி தன் குடும்பத்தினரை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்கிறவர் என்று நாம் அவரைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது, அவர் தன் விசுவாசிகளின் நலனிலும் அக்கறை கொண்டவர். அரசியலில் தலைவருக்கு விசுவாசமாக இருப்பதைப் போன்ற பணம் கொழிக்கும் தகுதி வேறு எதுவும் இல்லை, விசுவாசத்தை மட்டும் வெளிப்படுத்தத் தெரிந்தால் போதும், வேறெந்த திறமையும் தேவையில்லை. விசுவாசம் என்று சொன்னால், கட்சி, கொள்கை என்று குழப்பிக் கொள்ளக்கூடாது – தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் மட்டும் போதும். வைத்யஜியின் வீட்டில் இப்படிப்பட்ட ஒரு விசுவாசமான வேலைக்காரன் இருக்கிறான்.

நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ராபர்ட்டோ பொலானோ

ராபர்ட்டோ பொலானோவைப் பொறுத்தவரை கவிஞர்களது உலகம் என்பது ஒரு உயிருள்ள மிருகம் போன்றது. ஆயிரம் கைகளும், பல்லாயிரம் சிந்தனைகளும் ஒன்றாக இயங்கி ஒரே இலக்கை நோக்கி பயணம் செய்யும் இயந்திரம். கவிதையின் உள்ளடக்கமும் உருவமும் அதில் மட்டும் முடிவதில்லை. கவிஞனின் உலகத்துள்ளும் ரசனையின் மிச்சங்கள் அடங்கியுள்ளன.

It Happened in Boston? – புத்தக விமரிசனம்

நாவலின் முதல் வாக்கியத்திலிருந்தே ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. இது அதி புனைவா, மர்ம நாவலா, திகில் நாவலா, கலைஞர்கள், கலை உலகம், அதில் நடக்கும் மோசடிகள் பற்றியதா, அல்லது ஒரு சிதைந்து கொண்டிருக்கும் மனதின் நாட்குறிப்பா என்று இறுதி வரை எந்த முடிவுக்கும் வரமுடியாமல், நாவலின் பெயரிடப்படாத கதைசொல்லியை, அவன் மனதை நாம் பின்தொடகிறோம். ஒரு கதையை நேர்கோட்டில் நடக்கும் சம்பவங்களாக எழுதி, பக்கங்களை முன் பின்னாக மாற்றிப் பிரசுரித்தால் எப்படிஇருக்குமோ அப்படி உள்ளது இது.

இந்திய வரலாற்று பெருமிதங்கள்

கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் சில பகுதிகள் வரத்தொடங்கியதிலிருந்து கதை தொடங்குகிறது. இந்தியாவின் வரலாறு என்பது முகமதியர்களின் படையெடுப்பிலிருந்தே அறியப்பட்டிருந்தது. அதற்கு முன் இந்தப் பிராந்தியத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. அலெக்ஸாண்டர், 326 BCயில் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தார் என்ற ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது. அதற்கு முன்பும் ஒன்றும் தெரியாது, பின்னும் ஒன்றும் தெரியாது. ஆனால், இந்தியாவில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் சிலர், இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டினர்.

பால் ஆஸ்டரின் தி ந்யூ யார்க் ட்ரிலொஜி

மனிதனின் சுயம்/அடையாளம் (identity) பற்றிய கேள்விகள் நேரடியாகவும், குறியீடுகளாகவும் மூன்று கதைகளில் முழுதும் உள்ளன. பெயர் மட்டுமா ஒரு மனிதனின்/பொருளின்/இடத்தின் அடையாளம் என்ற கேள்வியும், பெயர் மாற்றினால் அந்த அடையாளமும் மாறி விடுமா என்ற கேள்வியும் மூன்று கதைகளிலும் எழுப்பப்படுகின்றன.

வாடிவாசல் – அதிகாரம் எனும் பகடைக்காய்

மிருகமும் மனிதனும் ஒருவரையொருவர் நிரப்பிக்கொள்ளும் தருணம் தான் வாடிவாசல்.அங்கு ஒரு கணமேனும் மனிதன் மிருகமாகிறான், மிருகம் மனிதனாகிறது. பிச்சிக்கு, அக்காரியின் கொம்புகளில் தன் தந்தையின் ரத்தம் இன்னும் சிவப்பாக இருப்பது போல தோன்றும் போது, அக்காளைக்கும் அவனது கண்களில் அவன் தந்தைக்காக வந்திருக்கும் வஞ்சம் தெரிந்திருக்கலாம். அச்சமயம், தான் ஒரு மனிதனுக்கு முன் நிற்பது போலவே பிச்சி உணர்கிறான்.

கண் விழித்த கானகம்- பொய்களும் சுயமயக்கங்களும்

‘கண் விழித்த கானக’த்தின் இலக்கியத் தகுதியைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் அத்தனை அலட்சியம் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், இன்று ஜார்கண்ட் மாநிலமாக அறியப்படும் பகுதியில் பழங்குடியினத் தலைவர் ஒருவர், சென்ற நூற்றாண்டின் துவக்கங்களில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நிகழ்த்திய ஆயுதப் போராட்டத்தை விவரிக்கும் நாவல் இது. இன்று இந்தியப் பாராளுமன்றத்தில் உள்ள ஒரே ஆதிவாசித் தலைவரின் உருவப்படம், 1870 முதல் 1900 வரை முப்பதாண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த பிர்ஸா முண்டாவின் படம்தான்.

வீழ்த்தப்பட்ட வரலாறு: தமிழ்மகனின் வெட்டுப்புலி

ஒரு நேர்மையான, மேலான இலக்கியப் படைப்பின் பணி என்பது காலங்காலமாக முன்வைக்கப்படுகிற வரலாற்றின் உள் அடுக்குகளில் மறைந்து கிடக்கும் உண்மைகளைக் குறித்த தேடல்தான். இதுவரையில் அறியப்படாத உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே அதன் இலக்காக இருக்கும். ‘வெட்டுப்புலி‘ கதையின் வேர்களை நோக்கி மிக வலுவாக நகரும் ஒரு சரடு உண்மைக்கு மிக அருகில் சென்றுள்ளது என்பதை முன்னுரையில் வாசக சுதந்திரத்திற்கு விடப்பட்டுள்ள பகுதியிலிருந்து நம்மால் உத்தேசிக்க முடிகிறது.

பாட்டையா பார்த்த மனிதர்கள்

‘ஜவஹர்லால் நேரு இவரு தோள்ல கைபோட்டாராம்லா! நல்லா கத விடுதாருவே, பாட்டையா’ என்றுதான் ‘நான் பார்த்த ரோஜாவின் ராஜா’ கட்டுரையைப் படித்தபோது நினைக்கத் தோன்றியது. ஆனால் பெரியவர் வெங்கட் சாமிநாதன் தன்னுடைய அணிந்துரையில்(அது அணிந்துரைதானே?) ‘ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹசீனாவாவது, மனுஷன் அளக்கிறார் என்று தோன்றலாம். இல்லை, அவர் சொன்னவற்றில் சொல்லாமல் விட்டதும் நிறைய உண்டு’ என்கிறார். உண்மைதான். பாட்டையா நேரில் சொன்ன, எழுத்தில் சொல்லாமல் விட்ட பல விஷயங்களை அறிவேன். அதையெல்லாம் அவர் எழுதினால், இணையத்தில் பாய்கிற 66A மாதிரி, வேறேதாவது A,Bயில் தொடங்கி Z வரை அவர் மீது பிரியமாகப் பாய்ந்துத் தழுவக்கூடும்.

ஒரு மாபெரும் தேடல்

இந்த நூல் பிரமிக்கத்தக்க புள்ளிவிவரங்கள் மற்றும் மேற்கோள்களின் தொகுப்பாக இருக்கிறது. பொதுவாகவே நம் அனைவருக்கும் கடந்துபோன பொற்காலத்தைக் குறித்த ஒரு மயக்கமும் நமக்குப் பின்னால் வருவது ஒரு பேரழிவே என்ற எண்ணமும் உண்டு. இந்த மனநிலையை மிகக் கறாரான புள்ளிவிவரங்களைக் கொண்டு நிராகரிக்கிறது இந்நூல். உதாரணமாக, 1776ல் ஆதாம் ஸ்மித், ஒரு சராசரி ஆங்கிலேயன் பண்ணைத் தொழிலாளி என்றும் அவனது வாழ்க்கைத் தரம் ஒரு ரோமானிய அடிமையின் வாழ்க்கைத் தரத்தைவிட உயர்ந்ததல்ல என்றும் குறிப்பிடுவது இந்நூலில் நினைவு கூரப்படுகிறது.

’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’ – காவேரி லக்ஷ்மி கண்ணனின் ‘ஆத்துக்குப் போகணும்’

வீடு என்னும் கருத்துநிலை சார்ந்து பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை இந்நாவல் முன் வைத்திருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. உலக வழக்கில் வீடு என்பது பாதுகாப்பும் அரவணைப்பும் தருவதாக, அமைதியும் ஓய்வும் அளித்து இளைப்பாறுவதற்குரிய இடமாகவே பொதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

எல்லைகளுக்கு அப்பால் – குல்திப் நய்யார் சுயசரிதை குறித்து

தற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரில் ஒரு பிரபல மருத்துவரின் மகனாகப் பிறந்த நய்யார் லாகூர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்து வெளிவந்தவுடன் இந்தியப் பிரிவினைக்கு ஒரு நேரடி சாட்சியாக இருக்க நேரிடுகிறது. தாமும் தம்குடும்பமுமே அகதிகளாக இந்தியாவுக்கு வந்து மற்ற எத்தனையோ எண்ணற்ற அகதிகளைப்போல் தம் வாழ்வையும் புதிதாக ஆரம்பிப்பதிலிருந்து துவங்குகிறது இந்தச் சுயசரிதை. சியால்கோட் நகரிலிருந்து டெல்லிக்கு வரும் வழியில் தங்களது அனைத்தையும்க ணப்பொழுதில் இழந்து பிச்சைக்காரர்களாகவும் நாடோடிகளாவும் மாற நேரிட்ட எண்ணற்ற மனிதர்களில் ஒருவராகிறார் குல்தீப் நய்யார்.

க.நா.சுப்ரமணியம் – தஞ்சை பிரகாஷ்

பணத்தட்டுப்பாட்டின் காய்ச்சலில் வதங்கிய இருவரும், சி.சு.செல்லப்பாவும், மணிக்கொடி எழுத்தாளர்களும் எப்படி உயர் இலக்கியம் என்ற கனவின் குளுமையில் இளைப்பாறினார்கள் என்பதை இங்கு படிக்கலாம். காலணா, அரையணாவெல்லாம் இவர்களுக்கு அத்தனை முக்கிய விஷயங்களாக இருந்தது தெரிந்து இவர்கள் எதற்காக அத்தனை போராடி ‘இலக்கியம்’ படைத்தார்கள் என்பது குறித்து நமக்கு வியப்புதான் எழும். ஏனெனில் இவர்கள் படைத்த இலக்கியத்தை வாங்கிப் படிக்க அப்படி ஒரு சமூகமே அங்கு இல்லை.

பொங்கும் புதுவெள்ளம் – க.நா.சு.வின் பொய்த்தேவு ஒரு பார்வை

இன்றைக்குப் பொய்த் தேவு நாவலை வாசிப்பவர்களுக்கு க.நா.சு தேர்ந்தெடுத்த உணர்ச்சியற்ற நடை வித்தியாசமாகத் தோன்றலாம். மிகவும் உணர்வு பூர்வமான வாழ்க்கை நிகழ்வுகளைப் போகிற போக்கில் சொல்லிச் சென்றிருக்கிறார். ஒட்டுமொத்த நாவலையும் படித்துப் பார்க்கும்போது வாழ்வின் சுழிப்புகளையும் ஜார்ஜ் எலியட் குறிப்பிடும் அன்றாட நிகழ்வுகளையும் மூன்றாம் மனிதரின் பார்வை போலக் குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு தருணத்தை உணர்ச்சிகரமாகப் படைத்துவிட்டு மற்ற கணங்களை மேலோட்டமாகக் குறிப்பிட்டால் அசாதாரண நிகழ்வுகள் வாழ்வை செழுமையாக்குகின்றன என்பது போன்ற தோற்றத்தைத் தந்துவிடும் அபாயம் உள்ளது.

பொய்த்தேவு: சி.சு.செல்லப்பாவின் விமரிசனத்திலிருந்து சில குறிப்புகள்

பொய்த்தேவு நாவல் தனித்தன்மை கொண்டது. முக்கியமான நாவல். இப்படிச் சொல்வதற்கான காரணங்களையும் க.நா.சுப்ரமண்யம் அவர்களின் படைப்புக் கோட்பாட்டையும் எழுத்து 85, ஜனவரி 1965 இதழில், “பொய்த்தேவு (விமர்சன ஆய்வு)” என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்ட சி.சு.செல்லப்பாவின் விமரிசனம் விரிவாகப் பேசுகிறது. அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் இங்கே.

துருவ நட்சத்திரம் – பழநி சுப்ரமணிய பிள்ளை – மதிப்புரை

பழநி சுப்ரமண்யத்தின் இடதுகை பழக்கத்தில் தொடங்குகிறது நூலின் தனி ஆவர்தனக் கச்சேரி. கற்பனைச் சித்தரிப்பாய் சென்ற நூற்றாண்டின் முப்பது நாற்பதுகளில் கோலோச்சியிருந்த செம்பை வைத்தியநாத பாகவதருக்கும், உடன் வாசித்துவந்த வயலின் வித்வான் மைசூர் சௌடய்யாவிற்கும், இடது கை மிருதங்க வித்வானான சுப்ரமண்யத்தை மேடையேற்றுவதில் இருந்த கருத்து வேறுபாடுகளையும் (மிருதங்கம் நன்கு ஒலிக்க மேடையில் இடம்மாற்றி உட்கார வேண்டும்), செம்பையின் ஆதரவையும், சௌடய்யாவின் மனமாற்றத்தையும், வரலாற்று சம்பவத்தை சிறுகதை வடிவில் அருமையாய் விவரிக்கிறது.

ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்

முத்துலிங்கத்திடமிருந்து ஏதும் ஆவேசமும் உக்கிரமும் நிறைந்த உரத்த குரல் எதிர்ப்போ கண்டனமோ எழவதில்லை. சுபாவத்தில் மிகவும் அடங்கிய குரல்காரர். அவர் உரத்துப் பேசி யாரும் கேட்டிருக்க முடியாது. உரத்த வாய்விட்ட சிரிப்பு கூட அவரிடமிருந்து எழுவதில்லை. எதிலும் அமைதி. கொண்டாட்டமானாலும், கண்டனமானாலும் சரி. அறுபதுகளிலிருந்து எழுதி வருகிறார். இடையில் சில காலம் எழுதாதிருந்திருக்கிறார். எழுதத் தொடங்கியபோதும், இடைவெளி விட்டுப் பின் தொடர்ந்த போதும், அவர் எழுத்தும் அவரும் குணம் மாறவில்லை. இவ்வளவு நீண்ட காலமாக ஒரே குரலில் சன்னமான, ஒரு மெல்லிய புன்னகை உதிரக் காணும் குரல் கொண்ட சிறுகதைகளும் கட்டுரைகளும். ஆனாலும் எங்கும் எதிர்பாராத இடத்தில், இழப்பின் சோகத்தின் தாக்கத்தை நாம் பயங்கரமாக உணர்வோம்.

ஜனனி

“கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின் மேல் நம் கண் முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும், அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிக்கும் சோகச் சாயையையும் நாம் அதனுள்ளிருந்து கொண்டே பார்க்க முடியும்”. இதுதான் உண்மையின் தன்மை என்கிறார் லாசரா.

வெட்டுப்புலி

வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை வரலாற்று சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.

கலங்கிய நதியும், திரும்பிய விமானமும்

இந்நாவல் இரண்டு அடுக்குகளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று ரமேஷ் சொல்லும் கதை. இன்னொன்று அதைத் தொகுக்கும் ரமேஷின் மனைவி சுகன்யாவின் பார்வை. சில இடங்களில் நான் இது சரியாக வரவில்லையே என்று நினைத்ததையெல்லாம் சுகன்யா விமர்சித்துவிடுகிறாள். ஆனால் இந்த உத்தி வெறும் பின்னவீனத்துவ விளையாட்டாக வலிந்து செய்யப்படாமல், நாவலின் இறுதிக்கட்டத்தில் இரண்டு அடுக்குகளும் அர்த்தபூர்வமாக ஒன்று சேர்ந்துவிடுகின்றன.

சுகாவின் ’தாயார் சன்னதி’ – ஒரு பண்பாட்டுச் சூழலை முன் வைத்து…

“தாயார் சன்னதி” படிக்கும்போது, பல இடங்களில் ஹாஸ்யம் வெடிக்கிறது. கண்கள் பனிக்கின்றன. மூட நம்பிக்கைகளை போகிற போக்கில் கிண்டல் செய்கிறார். சினிமா என்ற கலவை சராசரி மனிதனின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளதைக் காட்டுகிறார். திருநெல்வேலிப் பண்பாட்டினை நயம்பட கூறுகிறார். பால்ய கால காதல்களை ரசனையோடு சொல்கிறார்.

தாந்திரிகம்- யோகம், போகம், அர்த்தநாரீஸ்வரம்

பெண்களுக்கு எதிரான, பெண்மையை அடிமைப்படுத்தும் சமூக அமைப்பாக மேற்கத்திய அமைப்பு இருக்கிறது, அது பெண்ணை ஒரு குழந்தைத்தனமான சார்நிலையில் வைத்திருக்கிறது- மாறாக இந்திய மரபு ஆண் பெண் பேதங்களைக் கடக்க உதவுவதாக இருக்கிறது: இங்கு பெண்ணியம் என்பது ஆண்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒன்றல்ல- தாந்திரிக மரபில் எவரும் முழுமையான ஆண்களாகவும் பெண்களாகவும் இருப்பதாகக் கருதப்படுவதில்லை.

தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை

சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன்.

செந்தாமரைப் புரட்சி

பிரிட்டிஷ் அரசாங்காத்திற்கு எதிராக 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டம் குறித்த நூல் “Operation Red Lotus”. இந்தப் போரில் ஈடுபட்ட வீரர்கள் ஒரு சிவப்பு தாமரையுடன் இந்தப் போரில் பங்கேற்றனர். அதனால் தான் புத்தகத்திற்கு இந்தப் பெயர். இந்தப் புத்தகத்தின் ஆசிரிய பராக் டோபே, இந்தப் போரில் முக்கிய பங்காற்றிய தாத்தியா டோபே-வின்(Tatya Tope) வம்சாவளியில் பிறந்தவர். தன் குடும்பத் தலைவரான் பிரபாகர் தாபேரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் இதுவரை வெளியாகாத மற்றும் மறக்கப்பட்ட பல்வேறு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டும் இந்த நூலை எழுதியுள்ளார்.

ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு

ஸிந்துஜாவை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன். போன நூற்றாண்டின் எழுபதுகளின் முற்பாதியில் பத்திரிக்கைப் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். குறிப்பாக இலக்கியச் சிறுபத்திரிக்கைளின் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்கு, “டாகூர் சுடலைமாடன் தெருவுக்கு வருகிறார்” என்றோ, இல்லை ”சுடலை மாடன் தெருவில் டாகூர்” என்றோ திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் வசிக்கும் கலாப்ரியா தாகூர் கவிதைகள் சிலவற்றைத் தழுவி தன் பெயரில் வெளியிட்டதைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரை ஸிந்துஜாவின் ஆளுமையைப் பற்றியும் சொன்னது. பெரும் பரபரப்பைக் கிளப்பிய எழுத்து அது.

தஞ்சம் புகுதலின் சுமை

ரத்தம் தோய்ந்த பஞ்சாபி மற்றும் வங்காளப் பிரிவினை பற்றி ஏராளமான ஆய்வுகள் மற்றும் புதினங்கள் எழுதப்பட்டுவிட்ட நிலையில், அமைதியாக, எந்த வன்முறையும் இல்லாமல் நிகழ்ந்த சிந்திக்களின் குடிபெயர்வு குறித்து இந்திய வரலாற்றில் ஒரு வெற்றிடம் இருக்கிறது என்ற குறையைப் போக்கும் வகையில் தன் புத்தகத்தை முன்வைக்கிறார் ரிடா கோதாரி.

பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு புத்தகங்கள்

தான் முன்னரே தீர்மானித்துக்கொண்ட தமிழ் இனத்தின், சரித்திரத்தின், கலாச்சாரத்தின் உன்னதங்களைத் திரும்பச் சொல்லும் சந்தர்ப்பங்களை அடுக்கிச் சொல்வதும் அல்ல. ஒரு சிந்திக்கும் மனது தன் பார்வையில் பட்டதையெல்லாம் பற்றி தீவிரமாக சிந்திக்கிறது. வெளித்தோற்றத்தில் முரண்பட்ட மேற்கத்திய கலாச்சார அம்சங்களும் கீழைத் தேய கலாச்சார பண்புகளும் உடன் வாழ்வதன் அடியில் என்ன தான் இருக்கிறது இந்த அந்நிய மண்ணின் சமூக, கலாச்சார சூழலில். என்று ஒரு சிந்தனை அடிக்கடி தோன்றுகிறது. இந்தப் பயண வரலாறு முழுதுமே தி. ஜானகிராமனின் மனதில் நிகழும் ஒரு மௌன சம்பாஷணை.

இருளும் காமம், நிலங்களின் வழியே

ஓவ்வொரு நகரமும் தன்னுள் மிகப்பெரிய கதையை கொண்டுள்ளன. மனிதர்களை போலவே அவைகளது வாழ்க்கையும்(சரித்திரமும்) அளவிட முடியாத நிரந்தரமற்ற தன்மையையும், ஏதோ மாயத்தேவதைகளின், யட்சிகளின் ஆளுகைக்குட்பட்டது போலவும் வளர்ந்தும், வீழ்ந்தும் காற்றில் உரு மாறியும் உருக்கொள்கின்றன. நம்மோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த நகரங்களின் கதைகள் வெறும் வருடக் குறிப்புகள் மட்டுமல்ல. ஆனால் எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகள் அப்படியான பிம்பத்தை தான் தருகின்றன.

தி ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’

தி. ஜானகிராமனின் பலமே சம்பாஷணைகளாலேயே கதை சொல்லும் அவர் சிறப்புத் தான். அவரது எல்லா எழுத்துக்களிலும் போல இந்த நாவலிலும் அவர் சம்பாஷணைகளில்தான் அவர் உலகமே விரிகிறது. இன்றைய எந்த தமிழ் எழுத்திலும் இதற்கு இணையான ஒரு சிருஷ்டிகரத்தை காணமுடியாது. கதை சொல்லல் வெகு சரளமாக, எளிமையாக, அதே சமயம் கொள்ளை அழகுடன் ஆற்றின் புது வெள்ளம் போலச் ஓடுவது அறியாது செல்கிறது. ஒரு குதூகலத்தின் துள்ளல், ஆரவாரம். எப்படிச் சொன்னாலும் அது அப்படியாகத் தான் தோன்றும்.

சிலிக்கான் கடவுள் – அறிவியல் எழுத்துக்கான திறவுகோல்

அறிவியல் முறைமையும் எளிமையான விவரணைகளும் இரு தண்டவாளங்கள் போன்றவை; ஒன்றாகப் பயணம் செய்ய முடியாதவை எனும் கோட்பாட்டை சர்வ சாதாரணமாக ராமன் ராஜா தாண்டியுள்ளார். அறிவுசார் முறைமைகளை விளக்கும்போது அத்துறை சார்த்த மொழிக் களஞ்சியம் கைகூட வேண்டும். மேலும் மிகவும் தட்டையான பாடப் புஸ்தக நடையில் இல்லாமல், நம் சிந்தனைக்குச் சவால் விடும் விதத்தில் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். இவை இரண்டும் இக்கட்டுரைகளில் மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன.

மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்

ஊட்டியில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் நிர்மால்யா மொழிபெயர்த்த உமர் என்ற நாவல் இந்த வருடத்திய சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. நிர்மால்யா அவர்களுக்கும், புத்தகத்தை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்துக்கும் சொல்வனத்தின் வாழ்த்துகள். இச்சமயத்தில் நிர்மால்யா மொழிபெயர்த்த வேறொரு புத்தகத்தின் விமர்சனத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

மில் – ஒரு பார்வை

முற்போக்கு என்கிற பெயரில் எழுதப்படுகிற நாவலில் அறிவுக்கொலைகள் சர்வ சாதாரணம். மற்ற பக்கத்தின் மீதான அறிவின்மை, சகபுரிதல், ஒட்டுமொத்த புரிதலின்மை போன்றவற்றால் எழும் வெற்றிடத்தை மனித நேயக்குரல், மார்க்கீசியம் என்கிற வெறும் ஓலி அலைகளால் நிரப்புதலே முற்போக்கு இலக்கியம் என்கிற காலகட்டத்தை பின் தள்ளி எழுத்துக்கள் நகர்தல் அவசியம்.

சிங்கப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்

ஜெயந்தி சங்கரின் கதைகளில் சிங்கப்பூரின் மாறி வரும் சமூக மதிப்புகளையும், வாழ்க்கையின் சலனங்களையும் பார்க்கிறோம். பல சிங்கப்பூரில் வாழ்வதால் தமிழர் எதிர்கொள்ள வேண்டி வருபவை. பல் தமிழகத்திலும் நடக்கக்கூடும் என்றாலும், அவற்றின் ரூபமும் தீவிரமும் சிங்கப்பூரின் சமூக மாற்றத்தால் விளைபவை.

வெட்டுப்புலி

பலநாட்கள் தயாரித்த, ஆய்வுசெய்த அறிக்கைகளை அன்று மக்கள் முன்பு கொள்கைவிளக்கமாகக் கூட்டங்களில் பேசுவார்கள். மக்களைக் கூட்டம்சேர்க்கும் கழைக்கூத்தாடி டமடமவென்று தொடக்க மேளச்சத்தம் எழுப்புவதுபோல, கலைநிகழ்ச்சி போர்வையில் அரிதாரம் பூசியவர்கள் பின்னர் அரங்கேறலாயினர். நாளடைவில் இவர்கள் இருந்தால்தான் கொள்கையே பேசமுடியும் என்கிற அளவுக்கு மேடைகள் தலைகீழாயின.

மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் ஒரு விலாங்கு மீன்

இந்திரா பார்த்தசாரதிக்குள்ளிருக்கும் மார்க்ஸ் என்ன ஆனார்? அவரும் மிக பத்திரமாக எவ்வித கஷ்டமும் இன்றி இருந்து கொண்டிருக்கிறார் தான். விலாங்கு மீன் எங்காவது யார் கையிலாவது சுலபத்தில் சிக்கி விடுமா? நழுவிக்கொண்டேயிருப்பது தானே அதன் குணம்? God That Failed எழுதிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் ஒரு காலத்தில் மார்க்ஸிஸத்தை நம்பி பின் அனுபவித்த மனவேதனைகளும் மனசாட்சி உறுத்தல்களும் நம்பிக்கைகள் கைவிட்ட ஏமாற்றமும் நாம் சர்ச்சித்துக் கொண்டிருக்கும் மார்க்ஸிஸ்டின் கிட்டக் கூட நெருங்கவில்லை.