மோட்சமெனும் தப்பிச்செல்லல்

This entry is part 64 of 72 in the series நூறு நூல்கள்

விஜய்குமார் சம்மங்கரையின் ‘மிருக மோட்சம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து

ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு அத்தொகுப்பின் உணர்வுத் தளத்தை பிரதிபலிப்பது அரிதாகவே நிகழும். நாமாக ஒரு உணர்வுத் தளத்தை கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் தன்னளவில் ஒரு தொகுப்பு அப்படி இருக்க முடியாது. ஏனெனில் எழுதத் தொடங்கும்போது வெவ்வேறு வகையான ஆர்வங்களும் அதற்கேற்ற சொல்முறைகளும் எழுத்தாளரின் அகத்தை அலைகழித்துக் கொண்டிருக்கும். ஒரே மாதிரியான கதைகள் எழுதக் கூடாது என்ற கவனமும் காண்பதை கேட்பதை எல்லாம் எழுத்தாக்க வேண்டும் என்ற ஆர்வமும் எழுத்தாளரை தாவித்தாவி செல்ல வைக்கும். ஆனால் முன்னோடிகளை வாசிக்கும்போது அவர்களுடைய கதைகள் வெவ்வேறு களங்களில் பயணித்து இருந்தாலும்  நாட்கள் செல்லச் செல்ல அனுபவ முதிர்ச்சி கதை விவரிப்பில் பலமாக வெளிப்பட்டிருந்தாலும் அவர்களுடைய அடிப்படையான கேள்விகள் என சிலவே எஞ்சி இருப்பதைக் காண முடியும். அவர்களுடைய தொடக்க கால கதைகளில் கூட அந்த அடிப்படைக் கேள்விகளின் இயல்பு வெளிப்பட்டிருப்பதை முழுமையாக வாசிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிகிறது. அத்தகைய கேள்விகளில் இருந்து முன்னோக்கிச் செல்லும் படைப்பாளிகளே இலக்கியச்சூழலில் வலுவாக தடம் பதிக்கின்றனர்.

‘மிருக மோட்சம்’ என்கிற விஜய்குமார் சம்மங்கரையின் முதல் தொகுப்பில் அத்தகைய அடிப்படையான கேள்விகள் மீதான அக்கறை அதிகமும் வெளிப்படுவது இதனை கவனிக்கத்தக்க தொகுப்பாக மாற்றுகிறது. தொகுப்பின் தலைப்பில் உள்ள ‘மோட்சம்’ என்ற சொல்லைச் சுற்றியே தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நிகழ்கின்றன. மோட்சம் என்ற சொல் சட்டென ‘நவீனத்துக்கு எதிரான’ மனநிலையை வெளிப்படுவதாகத் தோன்றுகிறது அல்லவா! ஆனால் விஜய்குமாரின் இக்கதைகள் அனைத்தும் நவீனமானவை. எளிமையான ஆற்றொழுக்கான நேரடி நடையைக் கொண்டிருக்கும் இக்கதைகளின் வாயிலாக தான் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மிகத் தெளிவாக விஜய்குமார் முன்வைக்கிறார்.

ஒன் மொமெண்ட் ப்ளீஸ், 1992 என்ற இரு கதைகள் மட்டுமே ஒன்பது கதைகள் கொண்ட இத்தொகுப்பில் மோட்சம் என்ற விஷயத்தை விட்டு வெளியே போயிருக்கின்றன. ஒன் மொமெண்ட் ப்ளீஸ் கதையில் கதைசொல்லி அமெரிக்காவிற்கு ஒரு பயிற்றுநராக வருகிறான். அவன் எதிர்வீட்டில் வசிக்கும் ஆப்கானியப் பெண்ணின் வீட்டு வாசலில் தினமும் அவள் பெயர் எழுதிய ஒரு ஆணுறை பாக்கெட் கிடக்கிறது. அங்கிருந்து கதைசொல்லிக்கும் ஆப்கன் பெண்ணுக்குமான உரையாடலாக நகரும் கதை பல கலாச்சார உரசல்களை தொட்டு நகர்ந்து முடிகிறது.

1992 என்ற கதை அப்பாவுக்கும் மகனுக்குமான உரசலைப் பேசுகிறது. ஒரு குறிப்பிட்ட சிக்கலை எடுத்துக் கொண்டு அதை மேலும் மேலும் ஆழமாக்கிக் கொண்டே போகும் தன்மை விஜய்குமாரின் பல கதைகளிலும் வெளிப்படுகிறது. இக்கதையில் அந்தத் தன்மையை வெற்றிகரமாக பயன்படுத்தி இருக்கிறார். தண்ணீர் வராத நிலத்தில் ‘போர்’ இறக்கி லட்சக்கணக்கில் செலவழிக்கும் அப்பாவுக்கும் அதை எதிர்க்கும் மகனுக்கும் நிகழும் மோதலே கதைக்களம். இறுதியில் அந்த மோதலில் அப்பாவின் ஈகோ வெளிப்படுவதையும் மகனின் கையறு நிலையையும் கோபத்தையும் விஜய்குமார் நுட்பமாக எழுதி இருக்கிறார்.

சோறு என்ற கதையும் அப்பாவுக்கும் மகனுக்குமான உறவைச் சொல்லும் கதைதான். சர்க்கரை வியாதி வந்தவரான அப்பா சோற்றினை குறைவாக உண்ண மறுக்கிறார். மகன் அப்பாவை குறைவாக உண்ண வைக்கப் போராடுவதே கதையாக அமைகிறது. சோறு என்பது கதையில் வலுவான படிமமாக மாறிவிடுகிறது. ஆணவம் காமம் பலவீனம் என்று பலவற்றுடன் சோற்றினை இணைத்து யோசிக்க வைப்பதே இக்கதையின் வெற்றி. 

/பஞ்சத்துக்கு பொறந்த பரதேசி, இப்ப சோறு இல்லன்னா செத்தா போவ/ என்று மகன் கேட்கும் இடத்துக்கு கதையை நுட்பமாக விஜய்குமார் நகர்த்திக் கொண்டு வருகிறார். தந்தை மகன் உரசல் மேற்சொன்ன இரண்டு கதைகளிலும் பேசப்பட்டாலும் வறண்ட இறுக்கமான மொழியில் கதை சொல்லப்படவில்லை. குடும்ப உறுப்பினர்களிடையே இயல்பாக நிலவும் பிணைப்பும் விலக்கமும் கொண்ட மனநிலையை பிரதிபலிக்கும்படிதான் இக்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

வராகம், வானின் பிரஜை, மிருக மோட்சம், அப்பால் இருப்பவள் , பூத சரணம் ஆகியவற்றை மோட்சத்தைப் பற்றிப் பேசும் கதைகளாக வகைப்படுத்தலாம். இவற்றில் வராகம் கதை இலக்கற்று அலையும் தன்மையால் பலகீனமானதாகத் தெரிகிறது. மிருக மோட்சம் என்ற கதை இறப்பின் கணத்தில் நிகழ்வதாக அமைந்திருக்கிறது. நாய், பன்றி, குரங்கு, காகம், குருவி,நாகம், குதிரை என மிருகங்களுக்கு இடையேயான உரையாடலாகவே கதை நகர்கிறது. நாயின் அலைச்சல் இக்கதையில் மோட்சத்திற்கான அலைச்சலாக அமைகிறது. மனித மனதினை உணர்ந்துவிட்ட மிருகங்கள் மோட்சத்தைத் தேடி அலைவதாக கதை சொல்லப்பட்டாலும் ஒவ்வொரு மிருகமாக வாழ்ந்து நகர்வது மனிதன்தான் என்று தோன்றச் செய்வது இக்கதையை வெற்றிகரமானதாக மாற்றிவிடுகிறது.

மோட்சம் பற்றி பேசும் மற்றொரு கதை வானின் பிரஜை. என் மதிப்பீட்டில் இத்தொகுப்பின் சிறந்த கதை இதுதான். கதைசொல்லிக்கு கையில் ஏற்பட்ட ஒரு புண்ணில் புழு வைத்து விடுகிறது. அப்புழுவை மருத்துவர் எடுத்து வெளியே போடும் அபாரமான படிமத்துடன் இக்கதை தொடங்குகிறது. தன்னுள் நெளிந்து கொண்டிருந்த உயிராக அப்புழுக்களை அடையாளங்கண்டு கதைசொல்லி அருவருப்பு கொள்கிறான். அவனுடைய அப்பா தன் உடலை கொஞ்சம் கொஞ்சமாக அழுகவிட்டு இறந்தவர். அதுவே தன் மோட்சம் என கண்டு கொண்டவர். அந்த எண்ணமும் கதை சொல்லியை கடுமையாக அலைகழிக்கிறது. தன்னுடைய முடிவும் அப்படியாகவே அமையுமோ என்று எண்ணி அலைகழிகிறான். அந்த அலைகழிப்பிலிருந்து மீள அவன் தேர்வது லௌகீகத்தை. லௌகீகத்தை உண்மைத் தேடலில் ஒரு தளையாகவே நாம் கற்பனை செய்வோம். மாறாக மிருக மோட்சம், வானின் பிரஜை என்ற இரு கதைகளிலும் லௌகீகம் ஒரு வகையான ஆறுதலாக பதிலீடாக முன்னிறுத்தப்படுகிறது.

அப்பால் இருப்பவள் கதை சமகாலத்தில் குடும்பங்களின் நிகழும் ஒரு குரூரத்தை மிகுந்த நிதானத்துடன் சித்தரிக்கிறது. வேலைக்குச் செல்லும் மகளை திருமணம் செய்து வைத்தால் வருமானம் போய்விடும் என்று அஞ்சி அவள் திருமணத்தை பெற்றோர் தாமதப்படுத்துகின்றனர். இன்று இந்த விஷயம் ஓரளவு பரவலாகப் பேசப்படுகிறது. விஜய்குமார் அப்படி திருமணத்திற்கு தாமதமாகும் ஒரு பெண்ணின் உளநிலையில் இருந்து இக்கதையை அணுகுகிறார். அவள் வேலைக்குச் செல்வதால் அவள் வீடு புத்தம் புதியதாக மாறுகிறது. ஆனால் அவளுடைய உடலும் மனமும் சிதைந்து கொண்டே போகிறது. இந்தச் சுழலில் இருக்கும் ஒரு பிறழ்வை விஜய்குமார் மிகச் சரியாகத் தொடுகிறார். இக்கதையை விவரித்துச் செல்லும் சாரதா ஒரு சராசரியான வாழ்க்கை அமைந்தவள். அவளுடைய தங்கையான தேவிக்கு அதுவும் அமையவில்லை. அவள் தொலைந்து போய் ஏதோவெரு தருணத்தில் சாரதாவை ஆற்றின் எதிரே இருக்கும் கரையில் காண்பதாக கதை முடிகிறது. மோட்சம் என்பது இக்கதையில் ஒருவித பகடியுடனும் விலகலுடனும் பேசப்படுகிறது. பூத சரணம் என்ற கதையும் மோட்சத்தை ஒரு தப்பித்தலாக மட்டுமே முன்வைக்கிறது.

வாழ்க்கை குறித்தும் மரணம் குறித்தும் மோட்சம் குறித்தும் முதல் தொகுப்பிலேயே தீவிரமான விசாரணை மேற்கொள்ள முயன்றிருப்பது இத்தொகுப்பின் வெற்றி. விஜய்குமாரை ஒரு கவனிக்கத்தகுந்த சிறுகதை ஆசிரியராக அவருடைய மொழியும் அக்கறைகளும் நிறுவுகின்றன. ஆனால் விஜய்குமாரின் அக்கறை கதைக்கருவாக தீவிரமானதாக இருந்தாலும் வெளிப்பாட்டு முறை பலகீனமானதாக உள்ளது. அன்றாடப் பிரச்சினைகளில் இருந்து மேலெழுந்து நிரந்தரமானவற்றைப் பேச வேண்டும் என்ற விஜய்குமாரின் எத்தனம் பாராட்டுக்குரியது. ஆனால் அதற்கு ஏற்றபடி அவர் களங்களை வலுவாகக் கட்டமைக்கவில்லை. பல இடங்களில் அவருடைய கூறுமுறை ஒரு வகையான குழூஉக்குறி தன்மையை கொண்டு விடுகிறது. மண்ணில் கால் பாவாத அத்தகைய தன்மை கதைகளை அந்நியப்படுத்தி விடுகின்றன. கதாப்பாத்திரங்களின் தன்மையில் எழுத்தாளரின் பிரக்ஞையின் தடம் வெளிப்படுவது எவ்வகையிலும் தவறென்று நான் நினைக்கவில்லை. ஆனால் அப்பிரக்ஞை நெகிழ்வற்றதாக உள்ளது. ஆகவே மொத்த கதைக்களமும் ஆசிரியரின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே உள்ளதான தோற்றத்தை தந்துவிடுகிறது. நாயிற்கடையேன் என்ற கதை இந்த பலகீனத்தின் சாட்சி போலவே எழுதப்பட்டுள்ளது. 

சமகாலத் தொகுப்புகளில் வெளிப்படும் ஒரு வகையான விட்டேத்தித்தனமும் அலட்சியமும் விஜய்குமாரிடம் வெளிப்படவில்லை. கதைக்கருக்களை தேர்வு செய்யும் தீவிரத்தை கூறுமுறையிலும் வெளிப்படுத்தினால் விஜய்குமாரால் மேலும் சிறப்பான கதைகளை எழுத முடியும். இத்தொகுப்பு வாசிக்கப்படுவதற்கான தூண்டுதலாக இக்கட்டுரை அமையுமெனில் மகிழ்வேன்.

Series Navigation<< சீர்மையின் நுதல் விழி – சித்ரனின் சிறுகதைகள் முன்வைத்துமூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.