தோல்பாவைக்கூத்து

Inside the Drama House – Rama Stories and Shadow puppets in South India

கம்பனின் வரிகளைக் கொண்ட தோல்பாவைக் கூத்து

நிகழ்த்துக் கலை பற்றிய ஆர்வம் நாட்டார் மரபிலிருந்து தோன்றிய ஒன்றாக இருக்கிறது. கதை கூறல் எனும் மரபு அதற்கு முந்தைய வடிவமாக இருந்திருக்கலாம். பல ஊர்களுக்குச் சென்று பாணினிகளும், பாணர்களும் பாணர்களும் கூறிய கதைகள் நம் புராணங்களில் மட்டுமல்லாது, பல தொல்குடி நாகரிகங்களிலும் இருந்து வந்துள்ளதை நாம் படிக்கிறோம். கதையைப் பகிரும் ஆர்வம் என்பதைத் தாண்டி, தனது ஊரின் எல்லையைத் தாண்டி மனிதர்களும் உலகமும் எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் மனித மனதுக்கு உள்ள தனித்துவமான குணாதிசயம் என நினைக்கத் தோன்றுகிறது. இந்த கதை கூறல் மரபினோடு செவ்வியல் இலக்கியக் கதைகளும் சேர்ந்து புதுவகை நிகழ்த்துக் கலைகளை சாத்தியமாக்கி இருக்கிறது. எங்கோ நடந்த கதையாக அல்லாது அன்று அப்போது அந்த நொடியில் நடக்கும் கதை எனப் பார்ப்பவர் கண் முன்னே காட்சிகளாக விரியும் கலையாக கூத்து, கதகளி, தோல்பாவைக்கூத்து உருவாகியது. அதற்குத் தேவையான அலங்காரங்கள், உடை, முகப்பூச்சுகள் பங்கு எடுப்போர் மட்டுமல்லாது பார்வையாளர்களையும் தயார் படுத்தியது. கதையாகக் கேட்பது மட்டும் மனிதனுக்கு போதாமல் ஆவது தான் பல விதமான நிகழ்த்துக்கலைகளின் தொடக்கமாக இருந்துள்ளது. கூடவே, கலை ரசனை பரிணாமம் அடையும்போது மிக நுண்ணிய விவரணைகள், அசைவுகள் மூலம் நம் முன்னே கதை நிகழ்த்தப்படுவதை ரசிக்கும் மனோபாவமும் பார்வையாளர்களுக்கு உருவானது. நாட்டாரியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி நிகழ்த்துக்கலைஞர்களுக்கு ஈடாக பார்வையாளர்களின் ரசனையும் கலை வளர்ச்சிக்கு உதவியதை பதிவு செய்துள்ளனர். ஹிரணியனின் சிறு கண் அசைவு, இந்திரஜித்தின் மரணத்தை முன்கணிக்கும் மந்திரி கூட்டத்தில் ஒரு கணம் ராவணின் முகத்தில் வந்து மறையும் வலி, போன்ற நுண்ணிய அசைவுகள் என்றோ நடந்த கதையை பார்வையாளர் முன்னே உயிர்ப்பாகக் காட்டியது. நிகழ்த்துக்கலைஞர்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்கு முன் அவர்களது நடிப்புத் திறன் செவிவழிச் செய்தியாகச் சென்று சேர்ந்து பார்வையாளர்களைத் தயார்படுத்திவிடும் என ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

1970களில் ஆறு மாத கால பயிற்சிக்காக தமிழகம் மற்றும் கேரளாவிற்கு வந்தவர் ஆய்வாளர் ஸ்டுவர்ட் ப்ளாக்பெர்ன். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்திய ஆய்வாளராக அவர் அறியப்பட்டிருந்தாலும், 1970களில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேல் அவர் செய்த ஆய்வுகள் அவரை தமிழ் மற்றும் கேரள பண்பாட்டு ஆய்வாளராக உருவாக்கியது. 70கள் புதுயுக நாட்டாறியல் மற்றும் மொழியியல் ஆய்வாளர்கள் அலை வீசத்தொடங்கிய காலகட்டம் எனலாம். டெவிட் ஷுல்மான், கெளசல்யா ஹர்ட், கிரின் நாராயணன், ஸ்டுவர்ட் ப்ளாக்பேர்ன் போன்றவர்கள் ஆய்வுகளை செய்த காலகட்டம். இவர்களின் பங்களிப்பு பற்றி தனி கட்டுரை எழுத வேண்டும் என்றாலும் ஸ்டுவர்ட் ப்ளாக்பேர்ன் எழுதிய Inside the Drama House எனும் ஆய்வு நூலுக்குப் பின்னால் இவர்கள் அனைவரின் தொடர் பங்களிப்பு இருந்துள்ளது.

பாரதரதபுழா ஆற்றின் கரையில் அமைந்திருந்த பல்லடம் எனும் ஊருக்குப் பதினைந்தாம் ஆண்டு தென் தமிழ்நாட்டிலிருந்து சென்று செட்டியார்கள் தங்களுடன் தரி நெய்யும் கலையை மட்டும் கொண்டு செல்லவில்லை. அவர்களுடன் அன்று பிரபலமாக இருந்த கம்பனின் ராமாவதாரம் நிகழ்த்துக்கலைப் பாடல்களையும் எடுத்துச் சென்றனர். மலையாளிகளின் பகவதி கோவில்களுக்கு இடையே தங்களுக்கு என தமிழ் அடையாளத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியத்துக்காக இதைச் செய்திருக்கலாம். இயல்பாகவே நிகழ்த்துக்கலையான கதகளி, சதிர் ஆட்டம் போன்றவை பிரபலமாக இருந்த மலையாள நிலத்தில், தங்களுடைய இளமைக்கால நாட்டார் கதைகளின் தொடர்ச்சியை உருவாக்க எண்ணி இருக்கலாம். எது எப்படியாயினும், பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து ராமாயணக்கதையை தோல்பாவைக் கூத்தாக நிகழ்த்தி வருகின்றனர். அவர்களில் பலரும் பகலில தரி நெய்பவர்களாக வேலை செய்பவர்கள். தோல்பாவைக் கூத்து இரவு நிகழ்த்திக்காட்டும் கலையாகத் தன் இருப்பை நிலை நாட்டத் தொடங்கியது. ஸ்டுவர்ட் பிளாக்பெர்ன் 1986 முதல் அடுத்த பத்தாண்டுகள் தொடர்ந்து இதைப் பதிவு செய்திருக்கிறார். முதலில் இதை ஒரு கிராமிய நிகழ்வு என்பதால் மட்டுமே சென்றதாகக் குறிப்பிடும் அவர், தோல்பாவைக்கூத்து என்பது எப்படிப் பல நாட்டாரியக் கதைகளிலிருந்தும், ராமனின் அவதாரக் கதைகளிலிருந்தும், ஸ்கந்த புராணம், பத்ம புராணம் எனும் பல கதை மடிப்புகளிலிருந்தும் சேர்ந்து ஒரு பெரிய கதைப்பரப்பாக வளர்ந்து வந்திருக்கிறது என்பதை இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

1) தோல்பாவைக் கூத்து என்பது ஐந்து முதல் எட்டு நிகழ்த்துக்கலை நிபுணர்களால் நடத்தப்படுகிறது. அதில் பல வருட அனுபவத்தோடு பாடுபவரை புலவர் என்று அழைக்கின்றனர்.

2) கிராமத்தின் முக்கியமான சில குடும்பங்கள் தோல்பாவைக்கூத்து நிகழ்த்துவதற்குத் தேவையான அரங்கத்தையும், உணவு, பணம் எனும் மரியாதையையும் அளிக்கின்றனர்.

3) பதினைந்து முதல் பதினெட்டு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வு தினமும் இரவு பதினோறு மணிக்கு மேல் மெல்ல தொடங்கி அதிகாலை வரை நீளூம்.

4) கூத்து தொடங்கும் போது வரும் டுகளுக்க ஊர் மக்கள், சில மணி நேரங்களிலேயே தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிவிடுவார்கள். அதற்குப் பின்னர் இது பார்வையாளர்களற்ளர்களற்ற நிகழ்வாகத் தொடரும்.

5) தோல்பாவைக்கூத்துக்குக் கிட்டத்தட்ட ஆயிரம் கம்பராமாயணம் பாடல்கள் பாடப்படும். அதற்கு மூலமாக அமைந்த பாடல்களை கூத்துக் கலைஞர்கள் அனைவரும் மனப்பாடம் செய்திருப்பார்கள்.

6) பிரதானமாக கம்பராமாயணப் பாடல்கள் என்றாலும், பல நாட்டுப்புறக் கதைகளைக் கூறுவதைக் கொண்டு கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் கூர்மை பெறும்.

7) விஷ்ணு புராணம், கந்தபுராணம் போன்றவற்றிலிருந்து எடுத்துச் சொல்லப்படும் கிளைக்கதைகள் கதையை மிக ஆழமான பிரதியாக மாற்றிவிடும்.

8) சில நூற்றாண்டுகளாகச் செய்யப்படும் நிகழ்த்துக்கலை என்பதால், மூல ராமாயணத்திலிருந்து பிரிந்து பிற ராமாயணக் கதைகள் கூட இதில் சேர்ந்து வந்திருக்கிறது. நாட்டாரிய கதைகளிலின் வழியாக இவை உருவானவை என்றாலும், கூத்துக்கலைஞர்கள் பல ஊர்களில் நிகழ்த்தும்போது கேள்விப்பட்ட பிற சரடுகளையும் பொதுப் பிரதியில் சேர்த்துவிடுகிறார்கள் என எண்ண இடமிருக்கிறது.

9) குடைக்காரன், விதூஷகன் எனப் புது பாத்திரங்கள் கதைக்குள் ஊடாடுவதன் மூலம் புராணக்கதைக்கு ஒரு நவீனத்துவப் பார்வையை தோல்பாவைக்கூத்து அளிக்கிறது. இந்திரஜித்துடன் சேர்ந்து போர்க் காட்சியைப் பார்க்கும் குடைக்காரன் முன்வைக்கும் பார்வை வீரம், போர், காதல் போன்ற கற்பிதங்களை கேலி செய்து தலைகீழாக்கம் செய்கிறது. தோல்பாவைக்கூத்து சமகால மனிதர்களுடன் உரையாடுதற்கு இது மிகச் சிறந்த யுத்தியாக பிரதியில் கையாளப்பட்டுள்ளது.

10) சிறு பாத்திரங்கள் கூட மிக ஆழமான கேள்விகளை எழுப்பிக்கொள்வதன் மூலம் கதாபாத்திரங்களிடையே இருந்த அற இடைவெளி குறைகிறது. இந்த நிகழ்த்துக்கலையின் மிக முக்கியமான அம்சமாக நாம் இதைப் பார்க்க முடியும். குறிப்பாக, இன்று போய் நாளை வா எனப் போருக்கு இடைவெளி இருக்கும் தருணத்தில், ஜாம்பவான் அங்கதனுக்குச் சொல்லும் அறிவுறைகள் கதையின் அபத்தத்தை கேள்வி கேட்கிறது. போர் என்பது எப்படி பெரிய அதிகார அரசியலுக்காக சிறு உயிர்களை பணயம் வைக்கும் விளையாட்டாக இருக்கிறது என அங்கதனுக்கு ஜாம்பவான் கூறுகிறார். நீ இறந்தால் உனக்காக ராமன் கண்ணீர் சிந்துவாரா? அவர் எப்படியும் போரில் ஜெயிக்கப்போவதில்லை, நீ திரும்ப உன் நாட்டுக்குச் செல் என அங்கதனிடம் கேள்வி கேட்கிறார். இவற்றுக்கு எதுவும் பதில்கள் இல்லை. கதையின் முடிவு அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என்றாலும், எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் ராம ராவண காவியம் அறம் என உயரிய கொள்கையில் சற்றே சமநிலை இழக்கிறது. பார்வையாளர்கள் மனதில் கதை விரியும் சாத்தியத்தை இப்படிப்பட்ட இடை பிரிதிகள் அளிக்கின்றன.

இந்திரஜித்தின் மரணம்

ஒவ்வொரு மொழியிலும் சொல்லப்படும் ராம காவியம் வெவ்வேறு முடிவைக்கொண்டிருக்கும். வால்மீகி ராமயணம் உத்தர காண்டத்திலும், கம்பரின் ராமாவதாரம் ராமனின் பட்டாபிஷேகத்திலும் நிறைவுறும். ஆனால் மகாபாரதம் போல் அல்லாது ராமாயணத்தில் உச்ச நிகழ்வுகளும் கிளைக்கதைகளும் குறைவு. ராமாயணத்தின் முடிவு ராவணனின் இறப்பில் இருந்தாலும், உண்மையில் இந்திரஜித்தின் இறப்பில் யுத்த காண்டம் உச்சம் கொள்வதை நாம் கவனிக்க முடியும். இந்திரஜித் உயிர்; ராவணன் உடல் எனக் கூறும்படியாக லட்சுமணன் இந்திரஜித் யுத்தம் மிக விரிவாக ராமாவதாரத்தில் சொல்லப்பட்டிருக்கும். தோல்பாவைக்கூத்திலும் இந்திரஜித்தின் மரணம் கிட்டத்தட்ட மூன்று இரவுகள் நிகழ்த்தப்படும்.

1) இந்திரஜித் மற்றும் கும்பகரணனின் மரணங்கள் மிக விரிவாக நிகழ்த்தப்படும்

2) விதூஷகன், விபீஷனன் போன்ற பாத்திரங்க்களோடு நவீன கதாபாத்திரங்களும் தோல்பாவைக்கூத்தில் இடம்பெறும். நவீன கதாபாத்திரங்கள் காவியத்தின் அற விழ்ச்சி, இன்றைய காலகட்டத்தின் விழுமியங்கள் மீதான விமர்சனங்கள் போன்றவற்றை முன்வைக்கும். பெரும்பான்மையான நேரங்க்களில் இவை அங்கதமாக வெளிப்படும்.

3) இந்திரஜித்துக்கு அமைந்திருந்த ஐந்து பெயர்களின் பின்னணியை ம்ட்டுமே ஒரு முழு இரவு நிகழ்த்துவார்கள். அக்கதைகளின் சாராம்சத்தைத் தொகுத்து இந்திரஜித்தின் வாழ்க்கை விளக்கப்படும். ராவணனின் உண்மையான ஆன்மா என சொல்லும்படியாக இந்த விவரணைகள் இருக்கும். பிற தோல்பாவைக்கூத்துப் பகுதிகளைப் போல, கம்பரின் பாடலக்ள் மட்டும் அல்லாது பல நாட்டுப்புற கதைகளும் இவற்றில் சேர்ந்திருக்கும் என ஸ்டூவர்ட் குறிப்பிடுகிறார்.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக ஆய்வு செய்து Inside The Drama House புத்தகத்தை எழுதியுள்ளார் ஸ்டூவர்ட் ப்ளாக்பெர்ன். லண்டனில் உள்ள தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாட்டாரியல் ஆய்வுப்பள்ளியில் ஆய்வாளராக வேலை செய்தார். அப்போது தெற்காசியா நாட்டின் பொம்மலாட்ட கலைகளை ஆய்வு செய்து வந்தவர் ஜாவா, பாலி, இந்தியா எனப்பல நாட்டாரியல் கலைகளை தொகுத்து வந்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்தின் பிரைட்டன் எனும் ஊரில் நிரந்தரமாகத் தங்கியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா, குறிப்பாக தமிழ் நிலத்தை மையப்படுத்தி புனைவு நாவல்கள் எழுதி வருகிறார். செங்க்கோட்டையிலிருந்து ஒரு சிறுவன் என வாஞ்சிநாதன் கதாபாத்திரத்தைக் கொண்டு ஒரு நாவலை வெளியிட்டுள்ளார். இவருடைய பிற புத்தகங்கள்:

Fiction Novels

  1. All the way to the Sea
  2. Into the Hidden Valley
  3. Murder in Melur
  4. The Boy from Shenkottai

Non Fiction Books

  1. Himalayan Tribal Tales: Oral Tradition and Culture in the Apatani Valley
  2. Moral fictions: Tamil folktales from oral tradition
  3. The Sun Rises: A Shaman’s Chant, Ritual Exchange and Fertility in the Apatani Valley (Brill’s Tibetan Studies Library, 16-3)
  4. India’s Literary History: Essays in the Nineteenth Century
  5. Print, Folklore, and Nationalism in Colonial India
  6. Through the Eye of Time: Photographs of Arunachal Pradesh, 1859-2006

புத்தகம் – Inside the Drama House –  Rama Stories and Shadow puppets in South India

University of California Press


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.