நிறமாலை

This entry is part 5 of 72 in the series நூறு நூல்கள்

திருமணத்திற்கு பின் பெண்களின் வாழ்க்கை முற்றிலும் அவள் கணவனைப் பொறுத்து வடிவம் கொள்கிறது என்பது ஒருவித மூடநம்பிக்கைதான். குடும்பத் தலைவன் ஆண் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டாலும் அந்த ஆணை இயக்குவது பெண்தான். தாயின் குணங்களை தனயன் கொண்டிருக்கலாம். ஆனால் அவன் வாழ்வை அது மாற்றுவதில்லை. ஆனால் திருமணத்திற்கு பின் ஆணின் வாழ்க்கை முறையை செயல்பாட்டை அவனின் மனையாளின் குணம்தான் தீர்மானிக்கிறது. பெருமளவில் இல்லாவிட்டாலும் சிறிதளவாவது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. வெளியில் தெரியாமல் இருக்கக்கூடும், ஆனால் மாற்றம் நிச்சயமாக இருந்தே தீரும்.

“வாழ்க வளமுடன்”, “திருச்சிற்றம்பலம்”, “கடவுள் செய்த குற்றமடி” என்ற மூன்று பகுதிகளாக உள்ள எம். கோபாலகிருஷ்ணனின் “மனைமாட்சி” நாவல் வெவ்வேறு விதமான பெண்களின் குணங்களால் ஆண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விரிவான காட்சிகளுடன் விவரிக்கிறது. நீரின் குணமாக தண்மை, எங்கும் நிறையும் தன்மை, இலகுவானது என்று நம்பப்பட்டாலும் அதன் தன் வழி தானே தேறலின் உறுதியும், தன் குணத்திலிருந்து ஒருபோதும் வழுவாத திறனும் முதன்மையானது. பெண்கள் முழுக்கவே நீரை ஒத்தவர்கள்.

திருமணத்திற்கு முன் ஆண் கூறுவதையெல்லாம் சிறு தலையசைவில் ஏற்றுக் கொள்பவள், திருமணத்திற்கு பின் கணவனை, அவளின் தலையாட்டலை எதிர்பார்க்கவும் இறைஞ்சவும் வைத்துவிடுகிறாள். இந்த மாற்றம் ஏற்படும் புள்ளி அவள் அவன்மேல் எடுத்துக்கொள்ளும் உரிமை. உரிமை இத்தனை எடையுடன் அழுத்தும் என்பதை ஆண் எதிர்பாக்காததால் ஒருகணம் திகைக்கிறான். மறுகணமே இதிலிருந்து விலகவே முடியாதென்பதை உணர்கிறான்.

மனைமாட்சி நாவலின் முதல் பகுதியான “வாழ்க வளமுடன்” பகுதியில் இடம்பெற்றுள்ள சாந்தி, தியாகு தம்பதியரின் வாழ்வில் நிகழ்வது இதுதான். காதலிக்கும் போது எத்தனை இனிமையானவளாய் இலகுவானவளாய் சாந்தி இருந்தாள். மணந்தபின் தான் எண்ணுவதை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு கொள்ளும் உறுதி அவளுள்தான் இருந்ததா என்பதை தியாகுவால் நம்பமுடியவில்லை. ஆனால் இனி மீள வழியில்லை. எனவே, அவனுடைய வாழ்க்கை முறை முழுதாகவே மாறுகிறது. எதைச் செய்வதாயிருந்தாலும் அவளின் போக்கினை எண்ணியே முடிவு செய்யவேண்டிய நிலை. உடல் வலியோடும் மனத்துயருடனும் தொடர வேண்டியதாக உள்ள வாழ்வை மனதை இறுக்கிக் கொண்டு பொறுத்துக் கொள்கிறான் பிள்ளைகளுக்காக.

சாந்தியின் பாத்திரப் படைப்பு முழுமையானதாக உள்ளது. அவளின் இளவயதில் நிகழ்ந்தவைகளின் தொடர்ச்சியாக திருமணத்தின் பின்னும் நிகழ்வதை அவளும் திகைத்துதான் பார்க்கிறாள். ஆனால் அக்கணங்களில் அவற்றை அவள் நிகழ்த்துவதை அவளாலேயே தடுக்க முடிவதில்லை. அதற்காக அவள் தனிமையில் வருந்தினாலும் வெளிவர முடியவில்லை. தியாகுவை விட சாந்தியின் மீதுதான் அதிகமான பரிதாபம் எழுகிறது.

“வாழ்க வளமுடன்” பகுதியில் சாந்தி- தியாகு கதையுடன் ராஜம்- வைத்தியநாதன் இணையரின் கதை காட்டப்படுகிறது. சாந்தியின் மிகத் தீவிரத் தன்மை ராஜத்தின் பொறுமையினால் சமன்படுத்தப்படுகிறது. தியாகுவின் அளவிற்கு பெரும் பாடுகள் இல்லையாயினும் மனைவிகள் இருவரிடம் ஊசலாடும் வைத்தியின் பாடும் குறைவானதில்லை. இக்கதையிலும் ஆணின் தவிப்புதான் பிரதானமாக எனக்குப் படுகிறது. பெண்கள் தங்கள் இயல்புடன் உள்ளார்கள். ஆண்தான் அல்லாடுகிறான். பெண்களின் எதையும் ஏற்கும் குணத்தினால் வைத்தி தப்பிக்கிறார். இந்த முதல் பகுதியில் வாசகனுக்கு பெரும் அதிர்வை அளிக்கும் ஒன்று தியாகுவின் இளைய மகள் மீனா, தாய் சாந்தியின் குணத்துடன் நடந்துகொள்வது. தியாகுவைப் போல மீனாவை மணக்க இருப்பவனின் நிலையும் மனதில் தோன்றி திடுக்கிடவைக்கிறது.

இரண்டாவது பகுதியான “திருச்சிற்றம்பலம்” மதுமதி மற்றும் மங்கை என்ற இரு பெண்களிடம் அலைக்கழியும் மகாதேவனின் பாடுகளை விவரிக்கிறது. இந்தப் பகுதி மட்டுமல்லாமல் முழு நாவலிலுமே பெண்கள் வெவ்வேறு குணாதிசயங்களுடன் படைக்கப்பட்டிருந்தாலும் அந்தக் குணங்கள் எப்படி வந்திருக்கக் கூடும் என்பதற்கு அப்பெண்களின் இளவயது அனுபவங்களை முன் வைக்கிறார் ஆசிரியர் எம். கோபாலகிருஷ்ணன். அது மிகவும் நம்பகமானதாக உள்ளதாலேயே நாவலில் தொடர்ந்து வாசகன் தன்னை தக்கவைத்துக் கொள்ளமுடிகிறது..

தன்னை காத்திருக்க வைத்துவிட்டு தனியே சென்று உண்டதற்காக, மணந்தவனை ஒருத்தி பிரிவாளா. பிரிகிறாள். அவன் அப்படி உண்டதற்கான காரணத்தையும், அப்படி பிரிவதற்கு அவளை தூண்டியது எது என்பதற்கும் நாவலில் தேவையான எல்லா நியாயங்களும் உள்ளன. மதுமதி எப்போதும் குழப்பமான மனநிலையிலேயே உள்ளாள். மகாதேவன் எப்போதும் பரிதவிப்பவனாகவே காட்டப்படுகிறான். இவர்கள் இருவரின் குணங்களை சமநிலைப்படுத்தும் விதமாக எதையும் நிதானமாக அணுகும் மங்கையின் பாத்திரம் உள்ளது. இறுதி முடிவு என்னவாயிருக்கும் என்று யூகித்தபின்னும் காட்சிகளின் சுவாரசியத்தால் பார்வையாளனை கட்டிப்போடும் திரைப்படத்தை போல நாவலின் இந்தப்பகுதியின் முடிவை உணர்ந்தபிறகும் வாசகனை தன் கூறல்முறையால் ஈர்க்கிறது இப்பகுதி.

சட்சட்டென மாறும் மனநிலைக்கேற்ப செயல்படும் மதுமதியும் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டு அதை நோக்கி நகரும் மங்கையும் ஈரெதிர் துருவ குணங்களுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எப்போதுமே உணவைப் பற்றி சிந்திக்கும் மகாதேவனை மங்கை புரிந்து கொள்வதும் தனக்கு என்ன தேவையென்பதை உணராமலேயே அனைவரையும் திணறடிக்கும் மதுமதியும் யாரும் காணுகின்ற பாத்திரங்கள்தான். அவர்களின் குணங்கள் அப்படித்தான் உள்ளது என்று கூறிச்செல்லாமல் அவை எவ்வாறு திரண்டு, உருவாகி வருகிறது என்பதை எந்த மிகைப்படுத்தலுமின்றி சித்தரிப்பதில் ஆசிரியர் எம். கோபாலகிருஷ்ணனின் ஆற்றல் தெரிகிறது.

முதலில் வாசித்தபோது மங்கையின் குணம் உருவாகும் அந்த இரவு சம்பவத்தை அதீதமாக சித்தரித்துள்ளதாக தோன்றியது. ஆனால் இப்போது யோசிக்கும்போது அந்தக்காட்சிதான் மங்கை பாத்திரம் எப்படி அடுத்தவரின் துயரை உணர்கிறது என்றெழும் வினாவிற்கான சரியான விளக்கமாக உள்ளது என்பது புரிகிறது. அதேபோல மதுமதியின் செயல்கள்மீது வாசகன் முதலில் மெல்லிய ஓவ்வாமையை அடைந்தாலும் அவள் அப்படி நடந்துகொள்வதற்கு எல்லா நியாயங்களும் உள்ளது என்பதை பிறகு உணர்ந்து கொள்வான்.

நாவலின் மூன்றாவது பகுதியாக “கடவுள் செய்த குற்றமடி” உள்ளது. தொடக்கத்திலேயே விபத்தொன்றில் கணவனை இழக்கும் வினோதினி தன் அடுத்தகட்ட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அணுக்கமாக காட்டுகிறார் ஆசிரியர் எம். கோபாலகிருஷ்ணன். இதற்கு இணையாகவே திருமணம் ஆன பிறகு தன் காதலனுடன் செல்லப்போகிறேன் என அவளை மணந்த கண்ணனிடம் கூறும் கலைவாணியின் கதை வருகிறது.

கணவனை இழந்த வினோதினியின் தவிப்பையும் அவளை சுற்றியிருப்பவர்கள் அவள் வாழ்வைப் பற்றி தீர்மானிக்க முயல்வதையும் விரிவாக காட்டும் ஆசிரியர் வினோதினியின் உள்ளத்தில் இருப்பதை இன்னும் கூடுதலாக காட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. அண்ணனின் மறைவுக்குப் பிறகு சிவகுமார் அண்ணி என்றழைக்காமல் பெயரை செல்லமாக அழைப்பது, சிவகுமாரின் மனைவியும் மாமியாரும் அவனை பாடுபடுத்துவது, வினோதினியின் தம்பி சங்கர் அக்காவிற்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க தவிப்பது, திருமணத்திற்கு முன்னேயே காதலித்த லோகு தனக்குள்ளேயே மறுகுவது என ஆண்களின் பல்வேறு பரிமானங்கள் இப்பகுதியில் சிறப்பாக துலங்கி வருகிறது.

இணையாக வரும் கண்ணன், கலைவாணி மற்றும் சசியின் கதை சற்று செயற்கைதனமாகத் தோன்றுகிறது. மூன்று பாத்திரங்களுமே இயல்புக்கு மாறாகவே செயல்படுகிறார்கள். அதற்கான வலுவான பின்புலக் காரணங்களும் கூறப்படவில்லை. ஆனால், இப்படியான மனிதர்கள் இருக்கவே முடியாது என்று அறுதியாக கூறிடவும் யாராலும் இயலாது என்பதையும் குறிப்பிடவேண்டும். ஆயினும், இப்பகுதியில் வரும் அப்பு மற்றும் அவன் நாய் டைகர் இரு பாத்திரங்களும் சிறிதே கூறப்பட்டாலும் மனதில் பெரும் பாரத்தை ஏற்படுத்துவது ஆசிரியரின் கைவண்ணத்தால்தான். மிகத் துல்லியமாக இவை சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்நாவலில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய மிக முக்கியமான ஒன்று இதன் கூறு முறைதான். ஆசிரியரின் குரல் என்ற ஒன்று எங்குமே இல்லை. மிக அடங்கிய நுண்மையான மொழியில், காட்சிகளை வாசகரை காணவைக்கிறார். இது எம்.கோபாலகிருஷ்ணனின் சிறப்புகளில் ஒன்று. ஆசிரியர் குரலென இல்லையென்றாலும் இவர் கூற தேர்ந்தெடுத்த பெண்களின் வாழ்க்கைகளிலிருந்து இவரின் பார்வையை அறிய முயற்சிக்கலாம் எனத் தோன்றுகிறது. பெண்கள் தங்கள் குணங்களினால் நடத்தைகளினால் ஆண்களின் வாழ்வில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் பாடுகளையும்தான் இவர் கூறுகிறார் என எனக்குத் தோன்றுகிறது.

இலக்கிய உலகில் பெரும்பாலான கதைகள் ஆண்களின் வாழ்க்கையையே சித்தரிக்கின்றன. அதற்கு மாற்றாக பெண்களின் எண்ணங்கள் செயல்கள் மூலம் மனித வாழ்வை அணுகிப் பார்க்கும் இவரது கோணம் சிறப்பாக உள்ளது. இப்படி இருக்கிறது, நான் காட்டுகிறேன் என ஒதுங்கி நின்று காட்டும் திறனும், யதார்த்தம்தான் என நம்பவைக்கும் காட்சிப்படுத்தலும் மேலும் சுவை கூட்டுகிறது. பல்வேறு வணணங்கள் கொண்ட நிறமாலையைப்போல வெவ்வேறு குணங்கள் கொண்ட பெண்களைக் காட்டும் இந்நாவலை வாசிப்பவர்கள் வாழ்க்கையை பெண்களின் நோக்கிலிருந்தும் பார்க்கத் தொடங்குவார்கள் என நம்பலாம். இது மனைமாட்சி நாவலுக்கும் ஆசிரியர் எம். கோபாலகிருஷ்ணனுக்கும் கிடைக்கும் வெற்றிதான்.

நூல்: மனைமாட்சி (நாவல்)

ஆசிரியர்: எம். கோபாலகிருஷ்ணன்

பதிப்பகம்: தமிழினி

Series Navigation<< ஒற்றன் – அசோகமித்திரன்ரா. கிரிதரனின் “ராக மாலிகை” >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.