கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்

This entry is part 52 of 72 in the series நூறு நூல்கள்

சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தும் கணவனிடமிருந்து கைக்குழந்தையுடன் பிரியும் சங்கீதா (ஒளிந்து கொள்ளும் பூதங்கள்), பின் அரசு வேலையில் சேர்ந்து, மறுமணம் செய்து கர்ப்பமாக இருக்கிறாள். முதல் திருமணம் பற்றி அலுவலகத்தில் யாரிடமும் அவள் சொன்னதில்லை. வேலைக்கு விண்ணப்பிக்கும் போது  அதை மறைத்து விட்டாள் என்ற மொட்டை கடிதம் வர, அவள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. அன்றிரவே அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். வயிற்றிலுள்ள சிசுவை தனியே எடுத்து தகனம் செய்கிறார்கள். கதையின் ஆரம்பத்திலிருந்தே, தன் முதல் திருமணம் குறித்து சங்கீதாவிற்கு உள்ள ஒவ்வாமையான உணர்வுகள் சொல்லப்படுகிறது, எனவே அவள் தன் முதல் திருமணம் குறித்து அலுவலகத்தில் வெளிப்படுத்தாமல் இருந்ததையும் (அது அலுவல் சட்டங்களுக்கு புறம்பான ஒன்றா என்பது உறுதியாக சொல்ல முடியவில்லை), புரிந்து கொள்ள முடிகிறது. மறுமணம் செய்து கொண்ட பெண்களை சமூகம் பார்க்கும் விதத்தினால் அதை அவள் முற்றிலும் தன் நினைவிலிருந்து அழிக்க முயன்றாளா, விண்ணப்பத்தில் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்பது தெரியாததால் செய்யவில்லையா அல்லது அந்தத் திருமணம் இனி எங்குமே சொல்லக் கூடாது என்ற எண்ணமா? மொட்டை கடிதம் எழுதியது யார்? முதல் கணவன், அல்லது அலுவலகத்தில் இந்த விஷயம் தெரிந்த யாராவது? இதன் மூலம் அவர்கள் அடைந்ததென்ன? அவர்களே கூட சங்கீதா இந்த முடிவை எடுப்பாள் என்று நினைத்திருக்க மாட்டார்கள், இனி தாங்கள் செய்ததை அவர்கள் எப்படி வாழ்நாள் முழுதும் சுமக்கக் போகிறார்கள்? முதல் திருமணம் மூலம் பிரிந்த முதல் குழந்தையின்  நிலை என்ன? இரு கணவர்களும் அதை வளர்க்க மறுக்கிறார்கள். கதை இங்கு முடிவதில்லை. சங்கீதாவின் குடும்ப நண்பர், இஸ்லாமியர், அதை வளர்க்க முடிவு செய்கிறார். ஆசிரியர் குழந்தையின் நிலையை அப்படியே விட்டிருக்கலாமோ? அதை வளர்ப்பவர் ஏன் இஸ்லாமியர்?. இது  இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு சம்பவம், பாத்திர வார்ப்பு  என்று சொல்லலாம், அந்த நண்பர் பற்றி கதையின் போக்கில் சில முறை குறிப்பிடப்படுவதால், திடிரென்று திணிக்கப்பட்ட ஒன்றும்  அல்ல ஆனால் இந்தக் கதையில் அதன் இடம் என்ன என்ற கேள்வி இருந்து கொண்டேதான் இருக்கிறது. 

ராஜாராமனின் தாத்தா வளர்த்த நாய் முனியன் (முனியன்) அந்தக் குடும்பத்துடன் எந்தளவிற்கு அணுக்கமாக, குறிப்பாக தாத்தாவிடம்  உள்ளது என்று சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் அதற்கு வெறி பிடிக்க, கொல்ல முயல்கிறார்கள். பிடிபடவில்லை. ஊர் நாய்களின் ராஜாவாக திரியும் முனியன் வெறி பிடித்து, எச்சில் ஒழுகி அலைவது பரிதாபமான காட்சி. பின் தாத்தாவை கொண்டு அதை அழைத்து வர சொல்கிறார்கள், முதலில் மறுப்பவர், பின் இணங்குகிறார். முனியன் கொல்லப்படுகிறார் (கதையில் முனியன் விகுதியுடன் தான் சுட்டப்படுகிறார்). பின் தாத்தாவும் மனப் பிழற்விற்கு ஆட்பட்டு, அதே இடத்தில் தூக்கில் தொங்குகிறார். தன்னுடைய சொத்து அனைத்தையும்  தான் வளர்த்த  நாய்க்கோ அல்லது வேறேதேனும் செல்லப் பிராணிக்கோ  எழுதி வைப்பதைப் பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப் படுகிறோம் தான். திறந்த விழிகளுடன் இறந்த முனியனைப் பார்த்து தாத்தா மனம் பேதலிப்பதையும் அவர்களுக்கிடையேயான உறவின் ஆழத்தால் ஏற்பட்ட ஒன்றாக  பார்க்கலாம்.  ஆனால் தாத்தா தூக்கில் தொங்குவது வாசகனை  நெகிழ வைக்கும் யுத்தியாக தோன்றுகிறது.

லட்சுமி, கௌரிக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்கிறாள் (கௌரிக்கு வளைகாப்பு). கெளரி அவள் வளர்க்கும் மாடு. இரண்டு முறை கர்ப்பம் தரிக்கும் லட்சுமிக்கு, வளைகாப்பு தேதிக்கு முன்பே, குழந்தை பிறந்து விடுவதால், அந்த சடங்கு நடத்தப்படுவதில்லை. எனவே தன் மாட்டிற்கு அதை நடத்த முடிவு செய்கிறாள். அவள் பெற்றோர், சகோதரன் ஒப்புக் கொள்கிறார்கள். மிக சுவாரஸ்யமாகவும், எப்படி முடியப் போகிறது என்ற எதிர்பார்ப்போடும் நகரும் கதை, கௌரியும் வளைகாப்பிற்கு முன்பே கன்றை ஈன்றுவதுடன் முடிகிறது. மாட்டிற்கு வளைகாப்பு, அதற்கான காரணம் இவற்றை உளவியல் ரீதியாக சிறப்பாக சுட்டும் கதை, நேர்மறை/எதிர்மறை என்ற இரு கோணத்திலும் எண்ண வைக்கும் முடிவைக் கொண்டிருந்தாலும்  அங்கு மட்டும் அதற்கு முந்தைய உயரத்திலிருந்து சற்று இறங்கி விடுகிறதோ? 

இறுதியில் எதிர்பாராத திருப்பம், திறப்பு, தரிசனம், வாசகனை யோசிக்க வைத்தல், எல்லாம் ஒரு புனைவின் முடிவைப் பற்றிப் பேசும் போது பொதுவாக புழங்கும் சொற்கள். இவற்றில், ஆசுவாசம் அளிக்கும் நேர்மறையான முடிவுகளை சட்டென்று ஏன் ஏற்க முடிவதில்லை? Cynical மனநிலை, அல்லது இலக்கிய snobbery இந்தக் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு காரணமா? இலக்கியத்தில் நெகிழ்ச்சி இருக்கக் கூடாதா? இந்தத் தொகுப்பிலுள்ள வேறு சில கதைகளைப் பார்ப்போம்.

தான் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில் முருங்கை மரம் வளர்க்க வேண்டும்  என்று கணேசனுக்கு மிகுந்த ஆசை (பாட்டி மரம்). அவன் பாட்டி வளர்த்த முருங்கை மரத்தையொட்டிய நுண் தகவல்கள், நினைவுகளின் வழி,  அந்த ஆசைக்கான காரணம் அழுத்தமாக வெளிப்படுகிறது. பல இடங்களில் தேடுகிறான். இறுதியில் உறவினர் ஒருத்தியின் வீட்டில், அவன் பாட்டி வளர்த்த மரத்திலிருந்து – கொண்டு வந்து நடப்பட்ட மரம் இருக்க, அதிலிருந்து ஒரு கிளையை ஒடித்து தன் வீட்டில் நட்டு வளர்த்து வருகிறான். அதில் சில இலைகள் துளிர்த்த அன்று அவனுக்கு தன் பாட்டியே வீட்டிற்கு வந்தது போல் தோன்ற, கதை முடிகிறது. இங்கும் நேர்மறையான உணர்வுடன் தான் கதை முடிந்தாலும், கணேசனின் மனநிலையை உண்மையான ஒன்றாக உணர்கிறோம். எனில், வாசகனை எந்தளவிற்கு ஒரு புனைவின் உணர்வு நிலையுடன் ஒன்ற வைக்க முடிகிறதோ, எந்தளவிற்கு அதன் உணர்வுகளை நேர்மையான ஒன்றாக எண்ண வைக்க முடிகிறதோ, அந்தளவிற்கு அந்த முடிவு வாசகனுக்கு வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ தெரிகிறது.

தேர்தல் நேர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிதம்பரம் (சாவடி),  தன் கல்லூரி நண்பன் ராஜனை பல ஆண்டுகளுக்கு பின் சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது சிதம்பரத்திற்கு ரேவதி மேல் காதல், ஆனால் சொன்னதில்லை. ராஜனும் சங்கீதாவும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாண்டின் போது தனக்கு உதவுமாறு ராஜனிடம் சிதம்பரம் கேட்கிறார். ரேவதிக்கு தன் மீதே ஈர்ப்பு உண்டு என்று ராஜன் சொல்ல, அவனுடனான உறவு முறிகிறது. அதன் பின் அவனுடன் சிதம்பரம் பேசவேயில்லை, இப்போது தான் சந்திக்கிறார்கள். தான்  சங்கீதாவை திருமணம் செய்யவில்லை போன்ற விஷயங்களை பேசி விட்டு ராஜன் கிளம்புகிறான். அவனை சந்தித்ததை ரேவதியிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணியபடி சிதம்பரமும் தன் வீட்டிற்கு செல்கிறார். ராஜன், சங்கீதா காதல் கை கூடாத நிலையில், கல்லூரி காலத்தில் தன் காதலை வெளிப்படுத்தாத ராஜனின் சிதம்பரத்தின் காதல் வெற்றி பெற்றது, ஓ.ஹென்றி பாணியிலானது என்று தோன்றக் கூடும், ஆனால் அதைத் தவிரவும் இதில் வாசகன் யோசிக்க, அதைத் தொடர்ந்து  பின் யூகிக்க விஷயங்கள் உள்ளன. ராஜன் ரேவதியை பற்றி எதுவும் விசாரிக்கவில்லை என்பது சிதம்பரத்திற்கு வருத்தமாக உள்ளது, தான் நினைத்ததை அடைந்து விட்டோம்  என்பதை சொல்ல வாய்ப்பு கிட்டவில்லை என்ற வருத்தமா? தனக்கு கிட்டியதை ராஜனின் தோல்வியின் மேல் வைத்துப் பார்க்கும் போது சிதம்பரத்தின் பார்வையில் அதற்கு இன்னும் மதிப்பு கூடுகிறதோ? சிதம்பரம் எப்படி ரேவதியை மணந்தார்? கல்லூரி காலத்திற்குப் பின் அவர்கள் எங்கு எப்படி சந்தித்திருப்பார்கள்? அல்லது பெற்றோர் பார்த்து வைத்து எத்தேச்சையாக அமைந்த திருமணமா?  இறுதியாக ஒரு கேள்வி. ரேவதிக்கு தன்னிடம் ஈர்ப்பு என்று ராஜன் சொன்னதை இப்போதும் சிதம்பரம் நினைவில் வைத்திருப்பாரா? அவன் பொய் கூறினான் என்று அதை அவர் பொருட்டாக கருதாமல் இருந்திருக்கலாமோ? சுற்றி வளைத்தேனும் அவனைப் பற்றிய பேச்சை எழுப்பி மனைவியின் மனதை அறிய அவர் முயன்றதில்லையா? இன்று என்ன செய்யப் போகிறார்? பல எண்ணங்களை உருவாக்குகிறது இந்த முடிவு.
கதை சொல்லி தங்கரஜை ஒரு திருமண நிகழ்வில் சந்திக்கிறார் (வேதாளம்). இதுவும் இரு கல்லூரி நண்பர்களுக்கிடையேயான பல ஆண்டுகளுக்குப் பின்னான சந்திப்பு. அவர்களின் உரையாடலுக்கிடையே, கல்லூரி விடுதி, அவர்கள் தினமும் சென்று பொழுதை கழிக்கும் சலூன் என்று ஒரு சிறு நகர கல்லூரி விடுதி வாழ்க்கை விரிகிறது.  அத்துடன் அவர்களுடைய தோழன் சிவாவைப் பற்றியும் தெரிய வருகிறது. எல்லோரிடமும் சகஜமாக பழகும் சிவா, இறுதியாண்டில் விலகிச் செல்ல ஆரம்பிக்கிறான். காதல் தோல்வியா என்று நண்பர்கள் கேட்பதற்கு, வெற்றி என்று தான் கூறுகிறான். ஒரு முறை தற்கொலைக்கு முயன்று இவர்களால் காப்பாற்றப்படுபவன், அதன் பின் ஒரு நாள் ரயில் தண்டவாளம் அருகில் இறந்து கிடக்கிறான். தற்கொலை என்று சொல்கிறர்கள். ஆனால் அதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. அதன் பின் யாருக்கும் அந்த விடுதியில் தங்கவே பிடிக்கவில்லை, இறுதி தேர்வு முடிந்த அன்றே அனைவரும் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். இப்போதும் கதைசொல்லிக்கும், தங்கராஜுக்கும் சிவாவிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. பேசி முடித்த பின், இருவரும் அவரவர் வழி செல்வதுடன், கதை முடிகிறது. அது எழுப்பும் எண்ணங்களும், கேள்விகளும் தொடர்ந்து வருகின்றன. சிவாவின் மரணம் தற்கொலை தானா, ஆணவக் கொலையாக இருக்கலாம் என்று புரிந்து கொள்ள சில பூடகமான இடங்கள் -காதலில் வெற்றி என்று அவன் சொல்வது – கதையில் உள்ளன. கூடப் படித்தவனின் மரணம், விடுதியையே எப்படி மாற்றுகிறது, ஒவ்வொருவரும் எப்படி மனதளவில் மற்றவர்களிடமிருந்து விலகுகிறார்கள் என்பதை வாசகன் அசை போடலாம். கதைசொல்லி மேல் அமர்ந்திருக்கும் வேதாளமாக சிவா மாறிவிட்டான், வாசகனுக்கும் தான். வாழ்வில் பதில் தெரியாத பல கேள்விகளுள் ஒன்றாக சிவாவின் மரணம் உள்ளது மிகச் கச்சிதமான முடிவு.

  • சாவடி | Cāvaṭi
  • கவிப்பித்தன்
  • ₹180
  • 199 pages
  • ASIN ‏ : ‎ B091C4VW6M
  • Publisher ‏ : ‎ நூல் வனம் / vanam pathippagam (1 January 2020)
  • Language ‏ : ‎ Tamil
  • Category: சிறுகதைகள்
  •  வடஆர்க்காடு மாவட்டத்திலிருந்து தொடர்ந்து எழுதிவரும் கவிப்பித்தன், நம்பிக்கை தரும் படைப்பாளியாக இருக்கிறார். ‘மடவளி’ நாவல் வழியாகக் கவனம் ஈர்த்த கவிப்பித்தனின் புதிய சிறுகதைத் தொகுப்புதான் ‘சாவடி’. இந்தத் தொகுப்பின் 12 சிறுகதைகளும் வடஆர்க்காடு மக்களின் மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது தனிச் சிறப்பு. அடுத்து, இந்தப் புனைவுகளில் விரவிக் கிடக்கும் உவமைகள். இவை ஒவ்வொன்றும் அந்த மண்ணிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவை. மேலும், இவை வெறும் உவமையாக மட்டும் தேங்கிவிடாமல், கதாபாத்திரங்களின் அகத்தைச் சொற்களில் ஏந்தும் படிமமாகவும் நிலைபெறுகின்றன.
Series Navigation<< மெய் பதுங்கும் மெய்யற்ற வெளியின் உள்ளும் வெளியும்முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.