மானஸா- லஷ்மி பாலகிருஷ்ணன்

This entry is part 66 of 72 in the series நூறு நூல்கள்

சமீபத்திய ரஷ்யா உக்ரைன் போரில், உக்ரைன் படைவீரர்கள் 200000 மேலானோர் இறந்துவிட்டார்கள். ஓர் இனமே அழிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சமும், அவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் மரபணுக்களை எப்படிக் காப்பாற்றுவது என்ற கவலையும் மக்களை ஆட்கொண்டது.

அரசின் உதவியால் இலவசமாகப் பல விந்து வங்கிகள் (sperm bank) செயல்படுகின்றன.  இலவசமாகப் போர் வீரர்களின் விந்துவை சேகரித்து உறைய வைக்கின்றன. அவர்கள் மனைவி அல்லது காதலி அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். வீரமிக்க  குழந்தைகளைப் பெற்று வளர்த்து தங்கள் சந்ததியைக் காப்பாற்ற நினைக்கிறார்கள்.

நிறையப் போர்வீரர்கள் யுத்தகளத்திற்குச் செல்லும் முன் விந்து வங்கிக்குச் சென்று தங்கள் உயிரணுக்களைத் தந்துவிட்டுச் செல்கிறார்கள். இதனால் அவர்கள் இறந்தாலும் அவர்கள் நினைவாக வாரிசு ஒன்று வளரும் என்ற நினைப்போடு. அப்படி இருந்தால் மட்டும் பரவாயில்லை, ஆனால், அப்படிப் பிறக்கும் ஒவ்வொரு உக்ரைன் குடிமகனும் ரஷ்யாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்க வேண்டும் என்ற நினைப்போடு அல்லவா செல்கிறார்கள்?

இந்த தகவல் ரஷ்யாவிற்கு ஒரு வகையில் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ரஷ்யாவும் தன் வீரர்களுக்கு இந்த இலவசச் சேவையை வழங்குகிறது.

எந்த அறிவியல் வல்லமையும் பல தொழில்நுட்பங்களையும் உடைய ஆயுதங்களைத் தயாரித்து, அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உயிர்ச்சேதத்திற்குக் காரணமாக இருந்ததோ அதே அறிவியல் இன்னொரு புறம் ஒரு சந்ததியின் மரபணுக் கூட்டம் அழியாமல் இருக்கவும், பகை உணர்வு நிலைத்து நிற்கவும் உதவுகிறது.

பிறக்கும் போதே அல்லது கருவுற்றிருக்கும் காலத்திலேயே ரஷ்யாவிற்கு எதிரான மனப்போக்கில் வளரும் குழந்தைகள், பழி வாங்க வேண்டும் என்றே பிறப்பிக்கப்படும் குழந்தைகள் என்று எப்போதுதான் இந்த வன்முறையும் போரும் ஓயும்? இதற்காக இன்னும் பல உயிர்களைக் காவு கொடுக்க வேண்டுமா?

இதே போலத்தான் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னும் இராமர் கோவில் கட்டியதன் பின்னும் பழிதீர்க்கும் சினம் வளர்ந்து கொண்டே போகிறது அல்லது அரசியல்வாதிகள்  அந்த பழி நெருப்பு அணையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். என்னதான் முப்பது கோடி முகமுடையாள் எனினும் மொய்ம்புறம் ஒன்றுடையாள் அவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் சிந்தையில் ஒன்றுடையாள் என்று சொல்லிக்கொண்டாலும் பழி உணர்வு, நீறு பூத்த நெருப்பாக அடியில் கனன்று கொண்டே இருக்கிறது.

இது எல்லா நாடுகளுக்கும் குடிகளுக்கும் பொருந்தும். இந்தச் சக்கரங்கள் சுழல்வதை யார் தடுத்து நிறுத்துவார்கள்? மஹாபாரதமே பலவித பழிவாங்கல்களை உள்ளடக்கியதுதான். அம்பைக்கு பீஷ்மர் மீதான கோபம், துரியோதனனுக்கு பாண்டவர் மீது, கர்ணனுக்கு அர்ச்சுனன் மீது, துரோணருக்கு தன் நண்பன் மீது, சகுனிக்கு குருகுலத்தின் மீது, தக்‌ஷனுக்கு அருச்சுனன் மீது எனப் பல பழிதீர்க்கும் சம்பவங்கள் உண்டு. அதில் பகைவனுக்குப் பகைவன் நண்பன் எனக் கூட்டுச் சேர்ந்தவர்களும் உண்டு.

எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன், தன் மானசா என்ற புதினத்தில் ,  மக்கள்  எப்படிச் சேர்ந்துகொள்கிறார்கள் என்பதைத் தன் பணிப்பெண்ணுக்கு விளக்குகிறார். “பொதுவாக ஆரியரோ, திராவிடரோ மனிதரோ நாகரோ எவராயினும் மனிதர்கள் அடிப்படையில் மிகவும் தனிமையானவர்கள். சுயநலம் மிக்கவர்கள். அன்பர்கள் என்றும் குடும்பம் என்றும் குலம் என்றும் குடும்பம் என்றும் தேசம் என்றும் சேர்ந்து கொள்வதெல்லாம் மேல் மனத்தில்தான். எல்லாரும் எதிராளியிடம் தென்படும் வேற்றுமையைத்தான் முதலில் பார்ப்பர். மயிரளவு வேறுபாடு தெரிந்தாலும் அதைத் தொட்டெடுத்துப் பெருக்கி அதைக் கொண்டே எதிரியை வரையறை செய்து கொள்வார்கள். சேர்ந்திருந்தால் லாபமென்றால். நாம் ஒரே இனத்தவரல்லவா ஒரே நாட்டவரல்லவா என்று சொல்லிக்கொள்ளும் அதே நேரம், சிறு பிளவு வந்தாலும் சிறு குறைகளைச் சொல்லிக்காட்டாதிருக்க மாட்டார்கள்”

அப்படிப்பட்ட நாகர் குல பழி வாங்கும் படலக் கதை ஒன்றின் நாயகி  மானசா,  எப்படித் தன் சுய அறிவால் அந்த சக்கரத்தைத் தன் மைந்தன் மூலமாகத் தடுத்து நிறுத்தி அதே நேரம் தன் குல அழிவையும் தடுத்து நிறுத்துகிறாள் என்பதைத்தான்  இந்த புதினம் பேசுகிறது. வெஞ்சினமும், தங்களது சுய மரியாதையும் குலப்பெருமையும் முக்கியம் என நினைக்கும் ஆண்கள் முன், ஒரு பெண்ணால் மட்டுமே வரும் தலைமுறையின் நலம் குறித்தும் சிந்திக்க முடிகிறது  என்பதைக்  கோடிட்டுக் காட்டுகிறார்.

கதைக்குள் கதையாகத் துருவனின் அன்னைக்கும் சித்திக்கும் இடையே நடக்கும் துரோகச் செயல்கள், தன் உரிமையை நிலைநாட்டாமல்,  தன்  முன்வினைப்பயன் என துருவனின் அன்னை ஒதுங்கிச் சொல்வது, உழைப்போ தன் முயற்சியோ இன்றி அனைத்தும் முன்வினைப்பயன் என அமைதியாக இருக்கும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களைக் குறிக்கிறது. இரத்தம் சிந்திக் கல்லாய் மாறி காலை இடரினும் சிறகை விரித்து துருவன் புறப்படுகிறான் அப்படிச்  செல்பவர்களுக்குத் துணை நிற்கவே அறமும் இறைவனும் வருவான்.

ஆனால், சுயமரியாதையுடன் தன் இலக்கை தேடி, தவம் செய்யப் புறப்படும் துருவன், புகழ் மிக்க இடத்தை அடைகிறான். தேடுகிற போதும் முயல்கிற போதும் ஓவ்வோர் அடியாக எடுத்து வைக்கிற போதும் தோல்வி அடைந்தாலும் வெற்றியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நாம் செல்லத்தொடங்குகிறோம்.

இதே போல அதீத அவாவினால் வரும் வெகுளி, அதைத் தொடர்ந்து வரும் வெகுளி, சாபம் ஆகியவற்றால் தன் குழந்தைகளையே இன்னலுக்கு ஆளாக்கும் அன்னையர் என செல்லிடத்துக் காக்கின் சினம் காக்க என்ற வரிகளின் பொருளையும் சினம் சேர்ந்தவர்களின் உறவையே அழிக்க வல்லது என்பதையும்  கத்ருவின்  வாயிலாகத் தெரியத் தருகிறார்.

பொறுமை இல்லாததும் பொறாமை கூடியதாலும் தன் முதல் மகனான அருணனை வினதை இழந்த கதை எனப் பல சின்னச் சின்ன கதைகள் ஆங்காங்கே  பாயசத்தில்  முந்திரியாகத் தூவி இருக்கிறார். அவையும் கதையின் வேகத்தைக் குறைக்காமலே செல்கின்றன.

முக்கியமான கதை ஒன்று நம் எல்லாருக்கும் தெரிந்த காண்டவ பிரஸ்தம் தீயில் எரிந்தது. பார்த்தனும் கிருஷணனும் இந்திரபிரஸ்தம் உருவாக்கும் முன் அங்கே இருந்த நாகக் கூட்டங்களை அழிக்க கிளப்பிய தீ, எப்படி யானைகளையும் நாகங்களையும் எரித்தது அதுவே பின்னர் மிக முக்கிய பழிவாங்கும் காரணமாக நாகர்கள் காத்துக்கிடக்கிறார்கள். அதற்காகவே கர்ணனிடம்  அஸ்வசேனன்  நாகாஸ்திரமாக  வந்து பார்த்தனை கொல்ல வருவதாகக் கதை. படிக்கின்ற போது, யானைகளும் முதியோர்களும் தப்பித்துச் செல்ல எழுதியிருக்கும் காட்சிகள், சிரியா, உக்ரைன் போரில் தப்பித்து வரும் அகதிகள் நிலையைக் கண் முன் கொண்டுவரும்.

இதற்குள் துரியோதனனுக்கும் தக்‌ஷனுக்கும் இடையே உள்ள நட்புறவை  விளக்க  கிருஷ்ணன் சொல்லும் இன்னொரு சுவாரஸ்யமான சின்ன சம்பவம் வாயிலாக, ஆண் பெண் உறவின் சிறப்பை லஷ்மி அழகாக விளக்குகிறார்.

‘ ஆண் பெண் உறவென்பது துல்லியமான நியாய அநியாயங்களுக்குள் அடங்குவதில்லை. இன்னொருவரின் உணர்வுகளையே நம்மால் சரியாக மதிப்பிடுவது என்பது இயலாத பொது  அவர்கள் உறவுகளைப் பற்றி நாம் தீர்மானிப்பது மடமை என்கிறார். இது நெருக்கமான உறவுகளால் வரும் வன்முறை பற்றி பேசும் போது பலரும் எனக்கு அந்தக் கணவன் நண்பன், அல்லது மனைவி தோழி என்றெல்லாம் சொல்லும் போது அவரை ஒரு கணவனாகவோ அல்லது மனைவியாகவோ நாம் அறிய மாட்டோம் என்பதை வசதியாக மறந்துவிட்டு அளவிடுகிறார்கள்.

மானசாவின் கணவன், ஜரத்காரு முனிவர் தனக்கு வாரிசு உருவாக்கித் தர எந்த உயிரினமேனும் ஒரு பெண்ணைத்தாருங்கள் எனக் கேட்டுவிட்டு, ஒரு நாகினி எனக்கு மனைவியா என அவள் கருவுற்ற போது விலகுவது அறிவீனம்.

அதுவும் அவள் தனக்குத் தன் கடமையை நினைவூட்டுவதா என்ற சினம், எந்த நாளாயினும், மனைவியின் அறிவுரை தனது மரியாதைக்கும் அறிவுக்கும் இழுக்கு என்றே கணவர்கள் நினைக்கிறார்கள். பரஸ்பர மகிழ்ச்சிக்காக உறவு கொள்வதைக்கூட கர்ப்பதானம் செய்வதாகவும், மனைவி வாரிசு தர வேண்டிய கடமையைச் செய்வதாகவும் நினைக்கிறார்கள். அது ஒன்றே அவள் கடமை என்று கருதுகிறார்கள். கணவன் வனம் செல்லும் போது கூட, உடன் சென்று அங்கும் அவன் தேவைகளைக் கவனிப்பதே அவள் கடமையாக இருந்திருக்கிறது.  சுயமாக சிந்தித்தல்,  பெண்ணுக்கான ஆசை, விருப்பம் என்ற ஒன்று எதுவுமே தேவையில்லை. ஆணோ  பெண்ணோ மானுட உள்ளத்தில் எழும் கேள்விகளுக்கு விடையைக் கண்டறிய ஒவ்வொருவருக்கும் ஒரு வழிமுறை இருந்தாக வேண்டும். அவரவருக்கான விடைகள் அந்த தேடலில் கிடைக்கும்.

மானசாவின் மூலம், பல காரணங்களைச் சொல்லி கருவிற்குக் காரணமான தந்தையர், அன்னையரைத் தவிக்க விட்டு குழந்தைகளை வளர்க்கும்  பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் தந்தையரையும் சாடுகிறார் லஷ்மி. பெண்களுக்கான வழி எது என்ன என்பதையும் அந்த பெண்களே எழுதிக்கொள்ளட்டும் என்பதையும் சொல்லாமல் சொல்வதாகத் தோன்றுகிறது!

பல சின்னச் சின்னக் கதைகளை உள்ளடக்கிய மானசா, சுவாரஸ்யம் குறையாத இன்னொரு புனைவு! லக்‌ஷ்மியின் ஆனந்தவல்லி தந்த தாக்கம், மானசாவில் இல்லை, ஏன் என்று சிந்தித்த போது, எனக்கான பதிலும் கிடைத்தே விட்டது. சிறுமிகள் கடத்தலும் பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்தப்படுதலும் நாம் செய்திகள் மூலம் கேள்விப்படுகிற விடயங்கள் ஆனால் அதிகம் அதனால் நேரிடையாக பாதிப்படையாதவர்கள், அதனால், ஆனந்தவல்லியின் கதையின் நாயகன் தன் மனைவியைத் தேடிச் செல்லும் போது நம்மால் அந்த காதலை எண்ணி மறுக முடிந்தது. 

இங்கே மானசாவைப் போல தனியாக காரணங்கள் ஏதுமின்றி குழந்தைகளோடு தனித்துவிடப்படும் அன்னையர் பலரை தினம் தினம் சந்திக்கிறோம். பெண்களுக்கு எது தேவை எது தேவையில்லை எனத் தீர்மானிக்கும் ஆண்களையும்தான். 

தனக்கு குழந்தைகளை வளர்ப்பதைவிட, கணவனுக்குப் பணிவிடை செய்வதைவிட குடும்பத்தைக் காப்பதைவிட வேறு என்ன தேடல் இருந்துவிடப்போகிறது எனப் பல பெண்களே வாழ்கின்ற சூழல். எனவேதான், மரத்துப்போன உணர்வுகளோடு இதுதான் இயல்பென்று ஏற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். பழிவாங்குவது கூட இங்கே ஒரு சமுதாய அங்கீகாரம் பெற்ற வீரத்திற்கு அடையாளமான செயல்தான். பழிவாங்காமல், ஒற்றுமை பேணத்தான், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என வள்ளுவர் சொன்னது போல, மன்னிக்கத்தான் அதிக வீரம் தேவை என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாத சமூகம். மானசாவைப் படிக்கிற போது, அவள் செய்த காரியத்தின் வீரியம் புலப்படும். அதனால்தான் இங்கே மானசாக்களுக்குத் தேவை அதிகமாக இருக்கின்றது. லஷ்மி பாலகிருஷ்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!

இது பாரதி புத்தகாலய வெளியீடு.

Series Navigation<< மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல்பேச்சினும் எழுத்து ஆகச்சிறந்தது >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.